கதை சொல்லி தேவதை

சிறார் இலக்கியம்
4.8 out of 5 (4 )

மீனு குட்டிக்கு சில நாட்களாக இரவில் தூக்கம் வருவதில்லை. அவள் இப்போது
தனியாக உறங்குகிறாள். ஏழு கழுதை வயசாயிற்று இனிமேல் எங்களுடன் படுக்க
கூடாது என்று அம்மா கண்டிப்பாக சொல்லி விட்டாள். ஏழு கழுதை வயசெல்லாம்
இல்லை, ஆறு வயது தான் ஆகிறது என்று மீனு எதிர்வாதம் செய்வாள்.
முன்பு இரவு எட்டு மணிக்கெல்லாம் மீனு படுக்கைக்கு வருவாள். அப்பா வந்து கதை
சொல்வார். கதை சொல்லும் போது மீனுவின் கற்பனை விரியும். கதையின் உலகத்துக்கு
சென்று விடுவாள். கதை முடியும் தருவாயில் மீனுவிற்கு தூக்கம் வந்து விடும். எப்போதும்
கதையின் முடிவு என்னவென்று மீனுவிற்கு தெரியாது. அதற்கு முன்பே கண் அசந்து
விடுவாள். இது மீனு பிறந்ததிலிருந்து நடக்கும் சம்பிரதாயம். இப்போது எல்லாம் மாறி
விட்டது.
சொல்லப் போனால் மீனு இரவுகளில் ஏங்குவது தாய் தந்தையின் அணைப்பை விட,
கதைகளைத்தான். ஒவ்வொரு இரவும் அக்கதைகளே அவளை உறக்கத்திற்கு அழைத்துச்
சென்றது.
சில சமயம் மீனு நடு இரவில் அவள் பெற்றோர் அறைக்குச் சென்று அவர்கள் நடுவே
படுத்து கொள்வாள். அடுத்த நாள் அவள் செய்த தவறிற்கு அம்மா கடிந்து தண்டனை
கொடுப்பாள்.
ஒரு நாள் மீனுவின் தந்தைக்கு அவள் பள்ளியிலிருந்து அழைப்பு வந்தது. உடனே
பள்ளிக்கு வருமாறு தலைமை ஆசிரியர் சொன்னார். அப்பா என்னவோ ஏதோவென
பயந்து பள்ளிக்கு செல்ல, தலைமை ஆசிரியர் சிடு சிடுவென கடிந்தார்.
"மீனு இப்போது பள்ளியில் கவனமாக இருப்பதில்லை. கடைசி பெஞ்சில் அமர்ந்து தூங்கி
விடுகிறாள். வீட்டில் என்ன தான் நடக்கிறது. அவளுக்கு இரவில் சரியான உறக்கம்
இருக்கிறதா."
"அவளை இப்போது தனியாக படுக்க வைத்திருக்கிறோம். அவள் உறங்குகிறாளா என்று
தெரியாது."
"நல்ல பெற்றோர் நீங்கள். பிள்ளையை முதன் முறையாக தனியாக படுக்க
பழக்கப்படுத்துகிறீர்கள். அவளுக்கு சரியான உறக்கம் இருக்கிறதா என்று கூடவா உறுதி
செய்ய மாட்டீர்கள்."
"சாரி மேடம். இனிமேல் இந்த தவறு வராது."

அன்று மாலை வீட்டில் அம்மாவும் அப்பாவும் மீனுவைப் பற்றி விவாதித்தார்கள். முடிவில்
அப்பா மீனுவை உறங்க வைத்து, சென்று விடுவது என்று முடிவாயிற்று, அன்று இரவு
அப்பா மீனு அருகில் படுத்தார்.
"அப்பா நீங்கள் எனக்கு கதை சொல்லுங்கள் நான் உடனே உறங்கி விடுவேன். அதன்
பின் நீங்கள் போகலாம்"
"என்ன கதை. நீ சின்ன பெண்ணா, கதை சொல்வதற்கு. நம் வீட்டில் எத்தனை புத்தகங்கள்
இருக்கிறது. தினமும் ஒரு கதை படி. தூக்கம் தானாக வந்து விடும்."
மீனு ஒரு புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தாள். அப்பா படுக்கையை விட்டு எழுந்தார்
"ஆபீசில் நிறைய வேலை. எனக்கு டயர்டாக இருக்கிறது. நான் போகிறேன். நீ சமர்த்தாக
தூங்க வேண்டும் சரியா."
அப்பா விளக்கை அணைத்து சென்று விட்டார்.
பிறகு இரவின் நிசப்தம் சூழ்ந்தது. மீனு புரண்டு புரண்டு படுத்தும் உறக்கம் வரவில்லை.
திடீரென மீனுவிற்கு யாரோ முதுகை மெலிதாக வருடுவது போன்ற உணர்வு.
அம்மாவாகத் தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள். இத்தனை நாட்களாக
தன்னை பார்க்க வராத அம்மாவிற்கு இன்று என்ன திடீர் பாசம். தன் செல்ல கோபத்தைக்
காண்பிக்க வேண்டும் என்று அவள் பக்கம் திரும்பவில்லை. இத்தனை நேரம் அம்மா
பேசாமல் இருக்க மாட்டாள். மெல்ல திரும்பிப் பார்த்தாள். ஒரு அழகான பெண், தான்
புத்தகத்தில் பார்த்த தேவதை போன்றவள் அருகில் அமர்ந்திருந்தாள். மீனு பயத்தில் கத்த
நினைத்தாள். தேவதை மீனுவின் வாயை தன் கைகளால் பொத்தினாள்.
"நீ யார். எப்படி வீட்டிற்குள் நுழைந்தாய். என் அம்மாவை கூப்பிடுவேன். "
"பயப்படாதே மீனு. நான் ஒரு தேவதை. உனக்கு உதவ வந்திருக்கிறேன்.”
"தேவதைகள் எல்லாம் கதையில் தானே வருவார்கள். நிஜத்திலுமா?"
"ஆம்! நிஜத்திலும் தேவதை இருக்கிறார்கள். என்னிடம் சில சக்திகள் இருக்கின்றன. அந்த
சக்தியைக் கொண்டு மனிதர்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு உதவுவுதுதான் என்
பணி. என்னால், உறக்கமற்ற குழந்தைகளுக்கு சுகமான நித்திரை அளிக்க முடியும்."
"அது எப்படி'"
"என் இனத்திற்கு கதைசொல்லி என்று பெயர் உண்டு. தூக்கம் வராத குழந்தைகளுக்கு
கதை சொல்லி தூங்க வைக்கும் சக்தி எங்களுக்கு உண்டு."

"நீ எந்த கிரகத்திலிருந்து வருகிறாய் தேவதை."
"எங்களுக்கென்று தனியாக ஒரு உலகம் கிடையாது. இந்த பிரபஞ்சத்தில் எங்கெல்லாம்
குழந்தைகள் உள்ளதோ அங்கெல்லாம் நாங்கள் தோன்றுவோம்."
"கதை சொல்லும் கலையை நீங்கள் தான் உருவாக்கியதா."
"அது தெரியவில்லை. இந்த உலகமே ஒரு கதை தான். நீ, நான், நம் வாழ்வில் நடக்கும்
சம்பவங்கள் எதுவுமே உண்மையல்ல. நம்மை படைத்த இறைவனின் மூன்று வடிவங்கள்
ஒருவருக்கு ஒருவர் சொல்லும் கதையின் பாத்திரங்கள் மட்டுமே நாம். நம் வாழ்வில்
நடக்கும் சம்பவங்கள் அனைத்துமே அக்கதையின் நிகழ்வுகள் தான். இப்படி ஒரு
நம்பிக்கை எங்கள் இனத்தில் உண்டு."
"நீ நன்றாக கதையும் விடுகிறாய் தேவதை."
தேவதை நகைத்தது.
"என்ன விதமான கதைகள் நீ சொல்வாய்."
"மனிதர்களிடையே புழங்கும் எல்லா கதைகளும் நாங்கள் அளித்தது தான். மனிதனுக்கு
ஆதி காலம் முதல் கதைகள் சொல்லி வருகிறோம். உங்களிடையே புழங்கும் மகாபாரதம்
புராணங்கள் நாங்கள் உங்கள் முன்னோர்க்கு அளித்தது தான்.”

"உனக்கு மகாபாரதம் கதைகள் தெரியுமா. அப்பா எப்போதும் சயின்ஸ் பிக்ஷன் அல்லது
சாகசக் கதைகள் சொல்வார். அம்மா எப்போது இளவரசி கதைகள். நான் மகாபாரதக்
கதைகள் கேட்டால், அதெல்லாம் பாட்டி சொல்லும் கதைகள் என்று மறுத்து விடுவார்கள்.
எனக்கு தான் பாட்டியே இல்லையே, அதனால் ஒரு மகாபாரதக் கதை கூட எனக்கு
தெரியாது. நீ மகாபாரதக் கதை ஒன்று சொல்வாயா?"
"நிச்சயமாக. நான் உனக்கு இன்று அபிமன்யுவின் கதை சொல்கிறேன். கேள்."
தேவதை கதை சொல்லியது. முடிந்தவுடன் மீனுவின் நெற்றியில் முத்தமிட்டு மறைந்தது.
மீனு அன்று சுகமாக தூங்கினாள்.”
அடுத்தடுத்த நாட்கள் இரவில் தேவதை மீனுவிற்கு கதைகள் சொல்லியது. கர்ணன், வாலி,
அரவான் என்று புராணக் கதைகள் மீனுவிற்கு சொன்னாள். கதை கேட்ட ஒவ்வொரு
நாளும் மீனு நிம்மதியாக தூங்கினாள்.
ஓரிரவு மீனு தன் பள்ளி விஷயமாக ஒரு உதவியை தேவதையிடம் கோரினாள்.

"நான் இந்த வருடம் பரீட்சைகள் சரியாக எழுதவில்லை. அடுத்த வகுப்புக்கு தேர்வாவது
கடினம் என்று தான் நினைத்தேன். ஆனால் தலைமை ஆசிரியர் எனக்கு ஒரு வாய்ய்பு
தருவதாக கூறினார். தேசிய அளவில் குழதைகளுக்கு கதை எழுதும் போட்டி
வைக்கிறார்கள். இத்தனை வருடங்கள் எங்கள் பள்ளியிலிருந்து ஒருவர் கூட
தேர்வாகவில்லை. இந்த வருடம் யார் முதல் மூன்று இடங்களுக்குள் வருகிறார்களோ
அவர்கள் அடுத்த வகுப்பு சொல்வது உறுதி என்று கூறினார்கள். ஏற்கனவே உள்ள
புராண கதைகளாக இல்லாமல் புதுமையாக இருக்க வேண்டும் . நீ தான் அதற்கு உதவ
வேண்டும்."
"மீனு நான் உதவ முடியாது. உன்னிடம் ஒரு உண்மை நான் கூற வேண்டும்.
தேவதைகளாகிய நாங்கள் குழந்தைகளுக்கு கதை சொல்வது தூங்க வைப்பதற்கு
மட்டுமல்ல. முதல் இலட்சியம் எங்கள் இனத்தை பெருக்குவது. அதாவது எங்களை
போன்ற கதை சொல்லிகளை உருவாக்குவது. இத்தனை நாளாக உனக்கு கதை
சொல்லியது உனக்கு நடத்திய பயிற்சி மட்டுமே. பயிற்சி முடிவடைந்து விட்டது. உன்
பள்ளியில் நடக்கும் கதை எழுதும் போட்டி, உண்மையில் எங்களின் ஏற்பாடு தான்.
இத்தனை நாள் நடந்த பயிற்சியின் முடிவாக நாங்கள் உனக்கு நடத்தும் தேர்வு அது.
அதனால் கதை முற்றிலும் உன் சொந்த கற்பனையாக இருக்க வேண்டும். என்
வாழ்த்துக்கள் உனக்கு."
"தேவதை இனிமேல் நாம் சந்திப்போமா."
"இல்லை. இன்று தான் கடைசி நாள். போட்டியில் நீ வெற்றி பெற்றால், நான் உட்பட
யாரும் கதை சொல்லாமலே உனக்கு உறக்கம் வரும். இல்லையென்றால் வாழ்நாள்
முழுதும் உறக்கமற்ற இரவுகளினால் நீ வருந்துவாய்"
தேவதை மறைந்தாள். அவள் சென்ற பின் அன்று மீனு உறங்கவில்லை. தான் எழுதப்
போகும் கதையின் நினைவாகவே இருந்தாள்.
ஒரு வாரம் கழிந்தது. மீனுவின் தந்தைக்கு பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து அழைப்பு
வந்தது.
"வாழ்த்துக்கள். உங்கள் பெண் தேசிய அளவில் நடந்த கதை எழுதும் போட்டியில்
முதலாவதாக வந்திருக்கிறாள். கதையை நானும் படித்தேன். கதையின் தலைப்பு
கதைசொல்லி தேவதை. தூக்கமற்ற குழந்தைகளுக்கு ஒரு தேவதை கதை சொல்லி தூங்க
வைப்பதாக கதை அமைந்திருந்தது. அற்புதமான கற்பனை. பள்ளியில் எல்லோரும் உங்க
பெண்ணை கதை சொல்லி தேவதை என்று அழைக்க ஆரம்பித்திருக்கிரார்கள்
இப்படிப்பட்ட அதீத திறமைசாலிகளின் இயல்பு வித்தியாசமாக தான் இருக்கும். நாம்
தான் ஒரு கண்ணாடி பொருளை பாதுகாப்பது போல பேண வேண்டும்."
அன்றிரவு வழக்கம் போல அப்பா தூங்க வைப்பதற்கு வந்தார்.

"மீனு. நீ தனியாக படுப்பதற்கு மிகவும் சிரமப்பட்டிருப்பாய். எனக்கும் சில மாதங்களாக
உறக்கம் சரியாக இல்லை. அலுவலகத்தில் பல சிக்கல்கள். இரவு என்னென்னவோ
சிந்தனைகள் ஓடுகிறது. நாம் மூவரும் ஒன்றாக படுத்து கதைகள் சொல்லி தூங்கினோமே,
அந்த நாட்களை நினைத்து நான் ஏங்குகிறேன். நீயும் நன்றாக கதை எழுத ஆரம்பித்து
விட்டாய். எல்லாம் என் பயிற்சி தானே. இன்று நான் உனக்கு ஒரு கதை சொல்லிவிட்டு
போகிறேன். சரியா."
அப்பா கதை சொல்ல ஆரம்பிக்க, மீனு அவர் வாயை தன் கைகளால் மூடினாள்.
"அப்பா, இன்று நான் உங்களுக்கு கதை சொல்கிறேன். நீங்கள் உறங்க வேண்டும்."
மீனு கதை சொல்ல, அப்பா தூங்கி விட்டார். அப்பாவை காணாமல் தேடி வந்த அம்மா
விளக்கை அணைத்து விட்டு அவர்களுடனே படுத்து விட்டாள்.
மீனுவுக்கும் தூக்கம் வந்தது. கதவோரத்தில் தேவதை மீனுவைப் பார்த்து புன்னகைத்து,
கைகளை அசைத்து விடை பெற்றது.
சுகமான நித்திரை மீனுவின் கண்களை தடவியது.

താങ്കൾ ഇഷ്ടപ്പെടുന്ന കഥകൾ

X
Please Wait ...