கிடைத்தும் தொலைந்தவள்!

பதின்பருவக் கதைகள்
4.9 out of 5 (7 )

அழகு!

அழகென்று நான் முதலில் நினைத்த முகம்! பதின்பருவம், முதல் காதல். நினைக்கதானே தோன்றும். இன்றோ கண்ணை மூடி தேடினால் சரியாக நினைவில் கூட வரவில்லை. அவள் சிரிப்பு சத்தம் மட்டும் ஏதோ நினைவிருக்கிறது, அவள் குரல் ஏதோ சொல்ல வகுப்பறையின் சத்தத்தில் லேசாக கேட்கிறது.


எரும மாடு!


ஒரே வகுப்பறையில் நான், எனக்கு முன் வரிசையில் அவள். திரும்பி திட்டுகிறாள் என்னை. நான் என்ன செய்திருப்பேன்? கண்டிப்பாக திட்டு வாங்குவதற்காகவே ஏதாவது செய்திருப்பேன். ஆம்! Pen இருக்கா? அடுத்த வகுப்பு என்ன? உங்க அப்பா கடையில ஏன் ஆளே இல்ல? உன் முடி மட்டும் எப்படி இவ்ளோ பெருசா இருக்கு? உனக்கு கண்ணாடி கழட்டுனா கண்ணு தெரியுமா?


இது மட்டுமா, நான் என் நண்பர்களுடன் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது தெரு முனையில் இருக்கும் தாத்தா கடையில் தேன் முட்டாய் வாங்கி சாப்பிட போறேன் அதுக்கு 2 ரூபா குடு.


நீ சாப்பிட நான் ஏன்டா தரணும்! என்றாள் அவள்.


குடு அதுலாம் வரதட்சனையில் கழிச்சுக்கலாம், என்றேன் நான்.


பின்ன வேற என்ன செய்வது, முதலில் நல்ல நண்பர்களாக பேசி பழகி வந்தோம். சிரிப்பிற்க்கு பஞ்சம் இல்லை, பிறகு தானே பிடித்தது கிறுக்கு. அதற்கு அவள் என் மேல் தெரியா தனமாக காட்டிய அக்கறையும் ஒரு காரனம். கூட இருந்த நண்பர்கள் ஏத்தி விட்டதோ அல்லது உள்ளிறுந்து தானாக வந்ததோ தெரியாது ஆனால் இவளை நான் காதலிக்கிறேன் என்று நானே எனக்குள் ஒப்புக்கொண்டுவிட்டேன். எனக்கு தெரிந்து முதலும் கடைசியுமாக என்னை நானே ஏமாற்றிக்கொள்ள என்னை தயாரித்த ஒரு உணர்வு அது. என்னை கவிஞன் ஆக்கியது, வீரன் ஆக்கியது, அழகானவனாய் ஆக்கியது, மிகவும் முக்கியமாக என்னை மகிழ்ச்சியானவனாய் ஆக்கியது. இதுவரை அந்த சில வருடங்களில் பல நாட்களில் நான் இருந்ததை போல் மகிழ்ச்சியாய் என்னால் இன்று வரை இருக்க முடியவில்லை.

இன்று அந்த நினைவுகள் தூசி அடைந்திருந்தாலும், அந்த நாட்கள் இன்றும் என் வாழ்நாளில் பொற்காலம்தான். அதை எனக்குள் நான் வலிக்காமல் அசைப்போட்டுக் கொள்ளவே பல இரவுகள் சில வருடங்கள் ஆகி விட்டது. தலை முடி நிறைக்காதது ஒன்று தான் குறை மத்தப்படி உள்ளிருந்த குழந்தையின் தேம்பலை நிறுத்த ஆறுதல் தேடி அலைந்ததில் அத்தனையும் பற்றற்று அறுபதை தாண்டி துறவறத்திற்க்கு முன் எங்கேயோ நிற்கிறது மனம். தனிமை ஒருவொருவருக்கும் தனிப்பட்டது அதில் ஒருவரின் தலையீடு வன்முறையாகும், அப்படி என்றால் என் வாழ்வின் பல வருடங்களில் வன்முறை செய்த கலவரக்காரி அவள். நானும் செய்திருக்கிறேன் கலவரம், பல சிரிப்பில் முடிந்தது, கோவத்தில் சில, கண்ணீரிலும் சில!


பள்ளி முடித்து வீடு திரும்பும்பொழுது வீட்டுக்குச் செல்ல சாலை வெறும் பத்து நிமிடம் தான் அதில் மொத்தமாய் நாங்கள்

கடந்திருப்போம் சில நூறு மணித்துளிகளை, பல நாட்கள் என்னை தான்டி செல்லும் போது ஒரு நொடி பார்வை பார்த்தால் வண்டி ஓட்டும் அவள் அப்பாவிற்கு தெரியாமல். சிரித்துக்கொண்டேன்! இதைப் பார்த்த என்னோடு வரும் என் நண்பர்கள் ஒரு வேலை நான் காதலை சொல்லி அவள் ஒரு வழியாக ஒப்புக்கொண்டுவிட்டால் போல என்று நினைத்து என்னை விட ஆர்வமாகி விடுவார்கள்.


மிச்ச நேரங்களில் எங்களுக்கு முன்னாடி அவள் தோழிகள் கூட்டம் சென்றால் என் பார்வையில் அவள் இன்று இன்னும் சில நொடிகள் இருக்கிறாள் என்றும் எங்களுக்கு பின்னாடி வந்தால் என்னைத்தான் பார்துக் கொண்டே வருகிறாள் என்றும் அர்தமின்றி மகிழ்சியில் மிதந்தேன்.


காதலின் சுவையே நாம் நமக்குள் உணர்வது தானே, அதை விளக்கிக் கூறினால் அது அர்தப்படுமோ? காலை முதல் நள்ளிரவு வரை முகநூலில் முகம் காட்டாமல் முழு நேரமாக பேசிக்கொண்டிருந்தால் அதில் என்ன அர்த்தம் இருந்து விட போகிறது, ஆனால் இதை சிரித்து சிரித்து வலித்த கண்னத்தின் சதைகள் ஒப்புக்கொள்ளுமா? ஆம்! அவ்வளவு கதை பேசியிறுக்கிறோம், பிடித்த நிறம் முதல் அவள் பாட்டி போடும் மாத்திரை வரை, ஆனால் உன்னை ரொம்ப பிடிக்கும், உன்னை காதலிக்கிறேன் என்று சொல்ல மட்டும் அவ்வளவு தயக்கம்.


மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் அவ்வளவு போராட்டம் எனக்குள், உண்மையிலேயே சுகமாய் வலித்தது. ஒருவரையொருவர் திட்டிக்கொள்வோம் சில நேரம் அடித்துக்கொள்வோம், ஒரு முறை வகுப்பறையின் கடைசி வரை துறத்தி வந்து என்னை பளார் என்று ஒரு அறை அறைந்தால் இன்றும் நினைவிருக்கிறது! அடித்துவிட்டு வேகமாய் தான் அடித்துவிட்டோம் என உணர்ந்து என்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டே சிரித்தால், வகுப்பில் அனைவரும் எங்களை பார்த்து சிரிக்க வெட்கத்தில் அவள் முகம் சிவந்தது அந்த அழகில் மயங்கி அங்கேயே காதலை சொல்லிவிடலாம் போல இருந்தது எனக்கு, என்ன செய்வது சிரித்துக் கொண்டே போய் அவளுக்கு பின் வரிசையில் அமர்ந்தேன். வகுப்பறையில் சிரிப்பு சத்தம் அடங்கியது நடந்த சம்பவத்தை யாரும் பெரிதாக பொருட்படுத்தகூட இல்லை, அதுக்கு காரணம் நாங்கள் எங்களுக்குள் சொல்லிக்கொள்ளவில்லை என்றாலும் எங்களுக்குள் இருக்கும் ஈர்ப்பு அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.


இதையொட்டி என்ன காதலர்கள் மாதிரி விளையாடிட்டு இருக்கீங்க என்று அவளின் நெருங்கிய நண்பிகள் கேட்க அவளோ, இல்ல இல்ல அவன் எனக்கு நெருங்கிய நண்பன் மட்டும் தான் என்று கூறினால். இது எனக்கு தெரியவர குழப்பம் இன்னும் அதிகம் ஆனது. இந்தப் பக்கம் என் நன்பர்கள் என்னை அந்த கேள்வியை கேட்கவெல்லாம் தேவையே இல்லை, பின்ன தினமும் என் காதல் எண்ணங்களை சேகரிக்கும் நாட்குறிப்பு போல அதைத்தான கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். என் எண்ணங்களை பகிர்ந்துக்கொள்ள நண்பர்கள் இருந்ததின் அருமையை இன்று காகிதத்தில் கிறுக்கும்பொழுது தான் உணர்கிறேன், அந்த நாட்களிள் எப்போதும் என்னோடு தானே இருக்கப்போகிறார்கள் என்று சாதரனமாக இருந்துவிட்டேன். தினமும் பார்கும் முகங்கள் மறையும் பொழுது தான் பிரிவின் ஆழம் புரியும் போல.


அப்படித்தானோ என்னவோ பத்தாவது பரீட்சை முடிந்து விடுமுறையை வீட்டிலேயே கழித்த எனக்குள் கிளை விட்டு வளர்ந்தது அவளின் மேல் கொண்ட காதல். பரீட்சைகாக படித்த திருக்குறள் கூட எங்களுக்காகவே எழுதியது போல தோன்றியது, கிறுக்கு முத்திவிட்டது. காதலை கடிந்து கற்பனை என்று அழைப்போர் இருந்தாலும் சரி அவர்களிடம் சென்று அன்போடுரைப்பேன் நினைத்த நொடியெல்லாம் வாழ பிடிக்கும் காதல் கற்பனையென்றால், நான் நிஜத்தை மறக்க துணிந்துவிட்டேன் என்று. இந்த பதிலை தான் அவளிடமும் கூறினேன், அவள் அப்பாவின் மேல் கொண்ட மரியாதையின் மிகுதியால் என் காதலை புரிதல் அற்ற மோகம் என்று நிராகரித்தபோது. நேரில் எல்லாம் இல்லை மிகவும் மொக்கையாக முகநூலில் தான் குறுஞ்செய்தியாக அனுப்பினேன். இருந்தாலும் இவளுக்கு எப்படி புரிய வைப்பேன் இதுவரை நான் கொண்ட ஆழமான உணர்வு நீ! இந்த உணர்வின் அடர்த்தியை கவிதை எழுதி கூட குறைக்க முடியவில்லை, என்னால் முடிந்த வரை குறைத்த போதும் இழைத்த சந்தனமாய் அது என் நாட்களை மனக்கத்தான் செய்தது ஆனால் அதை இப்படி சருகென்று கடந்து செல்வது நியாயமா?


எதற்க்கும் அவளிடம் பதில் இல்லை ஆனால் தெளிவாக அவள் முடிவை மட்டும் என் முகத்தில் வீசிவிட்டால். நான் மிகவும் பயந்த அந்த நிமிடங்கள் என் வாழ்வில் தொடங்க தயாராக இருந்தது, அவள் இல்லாத என் வாழ்க்கை. போகிறாள் தூரமாக இதுவரை நான் பார்க்காத இடுப்போடு என் இளமையை முடிந்துக்கொண்டு என்று தென்னமரத்தடியில் மொட்டைமாடிப்படியில் உட்கார்ந்து கவிதை தான் சொல்லமுடிந்தது ஏன் என்றால் என் சிரிப்பும் சோகமும் அவளோடே சென்று விட்டது. நான் நினைத்துப்பார்க்காத ஆளுமையை என் மேல் அவள் பெற்றிருந்தால் என்பது அவள் இல்லை என்ற பின் காலியாக காட்சியளித்த என் வாழ்க்கையை பார்த்த பிறகு தான் புரிகிறது. இந்த நொடி வரை அவள் என்னுள் விட்டுச்சென்ற இடங்களை நிரப்பிக்கொண்டிருக்கிறேன் இன்னும் முடிந்த பாடில்லை.

பல நாள் கழித்து அவளை நினைவு கூர்ந்த மகிழ்ச்சியில் அவள் பெயரைக் கூட சொல்ல மறந்து விட்டேன் பாருங்கள்.


அவள் பெயர்….!


இப்படிக்கு

ஜெகதீஷ்.

താങ്കൾ ഇഷ്ടപ്പെടുന്ന കഥകൾ

X
Please Wait ...