மாற்றம் ஒன்றே மாறாதது!!

உண்மைக் கதைகள்
4.9 out of 5 (51 )

மாற்றம் ஒன்றே மாறாதது.


"ஏய் நகருங்க.. வழி விடுங்க வழியில யாரும் நிற்க கூடாது. எம்எல்ஏ வந்துகிட்டு இருக்காரு தெரியல.. "சத்தமாக ஒருவன் சொன்னபடியே கூட்டத்தை விலக்கியபடி வழியை ஏற்படுத்திக் கொண்டு வந்தான்.


சாய்பாபா கோயில் அப்போதுதான் அங்கே உதயமாகி இருந்தது. காவி உடை , கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து இருந்த பெண் அங்கே கண்கள் மூடி அமர்ந்திருந்தார்.


"அந்த அர்ச்சனை தட்டை கொடு.. அங்க இருக்கிற மாலையை சீக்கிரமா எடுத்துட்டு வா" என்று எம்எல்ஏ ஏகாம்பரம் குரல் கொடுத்தார்.


"இதோண்ணா.. "என்றபடி அவனுடைய சகாக்கள் வேகமாக நகர்ந்தனர்.


பாபாவின் சிலை அருகே கண்களை மூடி தியானத்தில் இருந்த அந்த பெண் மெல்ல கண் திறந்து பார்த்தார்.


கண்களில் கருணை பொங்கி வழிந்தது அவருக்கு.. அங்கிருந்த அனைவரையும் சுற்றிப் பார்த்தவர் மெல்ல எழுந்து நின்றார்.


"என்னை ஆசீர்வாதம் பண்ணு மா.." என்று சொன்னபடி சற்றும் யோசிக்காமல் அவரின் காலில் விழுந்தார் ஏகாம்பரம்.


ஒரு நிமிடம் சற்று பின் நகர்ந்தவர்.. "நல்லா இருங்க நல்லா இருங்க கடவுளுக்கு முன்னாடி என் கால்ல விழறீங்களே.. சாமி பாதத்தில் விழுங்க.."


"என்ன தாயி இப்படி சொல்லிட்ட இந்த ஊருக்கே நீ தான் சாமின்னு பேசுறாங்க.. நீ என்ன சொன்னாலும் அப்படியே பலிக்கிறதாம்.. உன் வாக்கு தெய்வவாக்காம்.. அப்படித்தான் இந்த ஊருக்குள்ள சொல்லிக்கிட்டு இருக்காங்க. நானும் அதனாலதான் உன்னை பார்க்க வந்தேன்."


"பாபா கிட்ட கோரிக்கையை வையுங்கள் அவர் நிறைவேற்றி வைப்பாரு.."


கொண்டு வந்திருந்த பூ,பழம் அனைத்தையும் பாபாவின் பாதத்தில் வைத்தவர்.. "இந்த எலக்சனுக்கு நான்தான் எம்எல்ஏவுக்குக்காக தொகுதி சார்பில் நிக்கிறேன்.. நான் ஜெய்க்கணும்னு நல்ல வார்த்தை சொல்லணும் அதுக்காக தான் உங்கள தேடி வந்திருக்கிறேன் ம்மா.."


"நீங்க மக்களுக்கு நல்லது செஞ்சா நல்லதே நடக்கும் இதுதான் என்னோட வாக்கு" என்று சொல்ல காலில் விழுந்து எழுந்தவர் தன்னுடைய அடிப்பொடிகளோடு வெளியேறினார்.


கோவிலை விட்டு அனைவரும் சென்று இருக்க இறைவனை மனதில் எண்ணியபடியே அருகில் இருந்த தன்னுடைய வீட்டிற்கு புறப்பட்டார்.


வாசலில் வந்து அமரவும் வேகமாக உள்ளிருந்து 15 வயது நிறைந்த பெண் குடிப்பதற்கு நீர் கொண்டுவந்து கொடுத்தாள்.


"அம்மா இன்றைக்கு கோயிலுக்கு எம்எல்ஏ வந்தாங்களாம்.. இப்பதான் சொல்லிட்டு போனாங்க "என்று சொல்ல,"ஆமாம் வந்தாங்க" என்று சொன்னபடி சற்றே சலிப்பாக அமர்ந்தார்.


"ஏம்மா சலிப்பாக பேசற.."


"வேற என்ன சொல்லறது.. இன்னைக்கு கால்ல விழறவன் எல்லாம் ஒரு காலத்துல எப்படி கேவலமாக நடந்துகிட்டான் தெரியுமா.. அதெல்லாம் நெஞ்சுக்குள்ள அப்படியே இருக்குது" என்று சொன்னபடியே அங்கிருந்த சுவற்றில் சாய்ந்தவருக்கு ஞாபகம் மெல்ல பின்னோக்கி நகர்ந்தது.


மனதளவில் எந்த தவறும் செய்யாமல் நிராகரிக்கப்படுவது யார் என்று கேட்டால் இந்த பூமியில் பிறந்து ஆணும் இல்லாமல் பெண்ணும் இல்லாமல் நடுவில் அல்லாடுகின்ற திருநங்கைகள் மட்டுமே..


அதுபோல ஒரு பிறப்பெடுத்தவன் தான் மனோகர்.. பிறந்தது முதலே ஆணாக அறியப்பட்டவன் பருவ வயதை தொடும் போது அவனுக்குள் நடந்த மாற்றம் ..தான் ஒரு பெண் என்பதை உணர்த்தியது. பெண்களுக்கு உண்டான அனைத்து நளினங்களும் ஒன்றாக வந்து சேர முதலில் தன் பெற்றோர்களால் நிராகரிக்கப்பட்டான்..


பத்தாம் வகுப்பு படிப்போடு கல்வி முடிவுக்கு வர எங்கே செல்வது என தெரியாமல் அலைந்து பிறகு தன்னைப் போலவே நிராகரிக்கப்பட்ட திருநங்கைகளோடு இவனும் இணைந்து கொண்டான்.


அங்கே சென்ற பிறகுதான் அவர்களுக்குள் இருந்த உறவுமுறை இவனுக்கு புரிந்தது.


அங்கும் ஒரு தாய் இருந்தார் தன் குழுவில் இருந்த ஒவ்வொறு வரையும் தன்னுடைய மகனாக மகளாக ஏற்றுக் கொண்டார்.


அவர்களுக்குள்ளாகவே மகன்களை தத்து எடுத்துக் கொண்டனர் .அப்படி தத்து எடுத்துக் கொண்ட பிறகு அந்த குழந்தையின் முழுப்பொறுப்பும் ஏற்று கொண்டார்.


இவனை தத்தெடுத்தவர் இவனுக்கு மாயி என்று பெயர் சூட்டினார். பெரியதாக எந்த வேலையும் கொடுக்கவில்லை . கடை கேட்பதுதான் இவர்களுடைய தொழில்..


ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கின்ற கடைகளை இவர்களுக்காக ஒதுக்கியிருந்தனர். அந்த கடையில் குறிப்பிட்ட நாளில் ஒவ்வொரு கடையாக சென்று காசு கேட்பது தான் இவர்களுடைய வேலை ..


ஒரு கடைக்கு குறைந்தபட்சம் ஐந்து ரூபாய் கொடுத்தனர். சிலர் இரண்டு ரூபாய் சிலர் அது கூட கொடுப்பது இல்லை..


பலரும் கிண்டலாக பேசுவதை வாடிக்கையாக வைத்திருந்தனர். சிலர் ஏய் ஒன்பது இங்க வா.. என்று அழைத்தனர்.


இன்னும் சிலரோ கைகளை வித்தியாசமாக தட்டி ஹான் என்று காட்டினர்.. இன்னும் சிலர் வரியா என்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் அழைத்தனர்.


ஒரு நாள் தனியாக சிலரிடம் சிக்கி இருந்தாள் மாயி.. "வா எங்களோட" என்று தர தர என கையைப் பிடித்து இழுக்க இவளுக்குள் பயங்கர பயம்.. "அண்ணா ப்ளீஸ் என்னை விட்டுடுங்க அண்ணா.. நீங்க நினைக்கிற மாதிரியான ஆளு நான் இல்ல.. தயவு செய்து என்னை விட்டுடுங்க "என்று அழ.. "ரொம்ப பேசாத அரை மணி நேரம் எங்களுக்கு கம்பெனி தரமாட்டியா வாடி "என்று இழுக்க.. அதே நேரத்தில் இவளோடு தங்கியிருந்த சிலர் இதை கவனித்து ஓடி வந்து இவளை காப்பாற்றி விட்டனர் .


"அவ நீ நினைக்கிற மாதிரியான ஆளு கிடையாது.. போவியா அதுதான் உங்களை மாதிரி ஆளுங்களுக்குன்னு சிலர் இருக்கறாங்களே அவங்க கிட்ட போக வேண்டியது தானே.. புதுசா இப்படி எல்லாம் வந்து டார்ச்சர் பண்ணற" என்று அவர்களை விரட்டினர்.


ஆரம்பத்தில் பயத்தில் நிறைய நாள் இவள் அழுது இருக்கிறாள்.. இவளை தன்னுடைய மகளாக தத்து எடுத்துக் கொண்ட பெண் இவளிடம் பேசினார்.


"உலகம் இதுதான் மாயி இப்படித்தான் இருப்பாங்க.. இவனுங்களுக்கு ஆம்பள பொம்பளைங்கற வித்தியாசம் கிடையாது.. யாராவது ஒருத்தர் அந்த நேரத்துக்கு வேணும் வக்கிரம் பிடிச்சவங்க..இவங்க யாரையும் மாற விட மாட்டாங்க. நம்மளும் சக மனிதர்கள் தான் அப்படிங்கறத என்னைக்கும் புரிஞ்சுக்க போறது கிடையாது.,


நாம தான் துணிச்சலா இவங்களுக்கு மத்தியில வாழ்ந்து காட்டணும்.. என்னாலும் உன் கூட துணைக்கு வர முடியாது நீ தான் உன்னோட வாழ்க்கையை வாழப்பழகிக்கணும்.


யார் யாரோ எப்படி எப்படியோ வாழறாங்க அது நமக்கு வேணாம்.. நீ நீயா இரு உன் மனசுக்கு என்ன தோணுதோ அது மாதிரி வாழ பழகு..ஒரு நாள் எல்லாமே மாறும்"


நாட்கள் செல்ல செல்ல எல்லாமே பழகி விட்டது. ஒரு மாதிரியாக வாழ பழகிக் கொண்டாள் மாயி..


நிறைய கடவுள் பக்தி இருந்தது தன்னை கடவுளின் பிள்ளையாகவே நினைத்துக் கொண்டாள்.


எல்லாமே இறைவனின் செயல் இந்தப் பிறவியில் தனக்கு விதிக்கப்பட்டது இதுதான் என்றால் இதை மாற்றவா முடியும் இப்படியாக நினைத்து வாழ பழகிக் கொண்டாள்.


அந்த நேரத்தில் தான் ஏகாம்பரத்தை பார்த்தது. சாதாரண கவுன்சிலராக இருந்தவனின் பார்வை மாயியின் மேல் விழுந்தது.


ஒருநாள் அவள் இருக்கின்ற வீட்டுக்குச் சென்றவன் தன்னுடைய மனதில் உள்ள வக்கிரத்தை கூறினான்..


"நீ எதுக்கு இப்போ ஒவ்வொரு கடையா போய் அஞ்சும் பத்துமா பிச்ச கேக்குற.. எனக்கு ஒரு சான்ஸ் கொடு.. உன்னை ராணி மாதிரி பார்த்துக்கறேன்.. என்ன சொல்ற.."


"நீ கேக்குறது எனக்கு புரியல என்ன சொல்ல வர்ற..ராணியா வச்சுக்கறேன்னா நீ என்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறியா.."


"சே..சே.. உன்னை யாராவது கல்யாணம் பண்ணிக்குவாங்களா.. உன்னை போய் கல்யாணம் பண்ணினா என்னை காரி துப்ப மாட்டார்களா.. எனக்கு நீ வப்பாட்டியா வந்துடறையா.. என் கூட மட்டும் இருந்தா போதும்.. வெளில யாருக்கும் தெரியாது" இப்படி கேட்க அருவருத்து போனது என்னவோ மாயி தான்.


சற்று கோபம் தோன்றியிருந்தாலும் அதை வெளிக்காட்டாமல்.. "நீ நினைக்கிற மாதிரி இது சாதாரணம் எல்லாம் கிடையாது.


இங்க நான் தனியாள் கிடையாது நான்னா.. நான் மட்டும் இல்ல என் கூட இன்னும் பத்துப்பேர் இருக்கிறாங்க . என்னோட குடும்பம் பெருசு.


அத்தனை பேருக்கும் உன்னால சோறு போட்டு சமாளிக்க முடியுமா.. உன்னால முடியாது.. நான் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து கிட்டு இருக்கிறேன்.


அவங்களோட படிப்பு செலவு அவர்களுடைய எதிர்காலம் எல்லாமே என்னோட கைல தான் இருக்குது .


அதனால நீங்க ஆசைப்படுற மாதிரி என்னால இருக்க முடியாது. நீங்க எதிர்பார்க்கிற ஆள் நான் இல்ல தயவு செய்து என்னை தொந்தரவு பண்ணாதீங்க "என்று கையெடுத்துக் கும்பிட்டு அனுப்பி வைத்தாள்.


அன்றைக்கு அத்தனை கஷ்டமாக இருந்தது மனதிற்கு ..அவளை தத்தெடுத்த தாயார் தான் அவளுக்கு சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார் .


"விடு மாயி மனுஷங்க இப்படித்தான் இது மாதிரியான கேவலமானவங்களும் இந்த பூமியில தான் இருக்கறாங்க.. நீ எதுக்கு அவனை நினைச்சு அழற…


காலம் எல்லாத்தையும் மாத்தும்..ஒரு நாள் இப்படி கேட்டவன் உன் காலில் வந்து விழுவான் பாரு "இப்படி சொல்லி இருந்தார் உண்மையில் அது தெய்வ வாக்குத்தானோ..


சிறு வயதிலிருந்தே தெய்வ பக்தி அதிகம் அதுவும் பாபாவின் மேல் உயிரையே வைத்திருந்தாள் அதன் பயனாக சிறிது காலத்திலேயே காவி உடையை தரிக்க ஆரம்பித்து இருந்தால் மாயி.


தனக்கு வருகின்ற பணத்தை எல்லாம் தனியாக எடுத்து வைத்து கோயில் கட்ட வேண்டும் என்பது அவருடைய ஆசை..


அந்த ஆசையையும் இவளது ஐம்பதாவது வயதில் நிறைவேறி இருந்தது. கோவிலில் முழுக்க முழுக்க பக்தி மார்க்கமாக பணி செய்ய ஆரம்பித்து இருந்தாள் .


மனிதர்கள் எல்லோருமே ஒன்று போல இல்லை அங்கேயும் சிலர் வேறு மாதிரி இருந்தனர். மும்பையில் இருந்து இங்கே குடி பெயர்ந்த நார்த் இந்தியன்ஸ் பலருமே திருநங்கைகளை தெய்வமாக நினைத்தனர்.


தங்களுடைய கடை திறப்பு விழாவிற்கு மட்டுமல்ல தங்கள் வீட்டில் நடக்கின்ற எல்லா விசேஷங்களுக்கும் இவர்களை அழைத்து சென்றனர் . இவர்களுக்கு செய்கின்ற மரியாதை அந்த சிவனுக்கு செய்யும் மரியாதையாக பார்த்தனர்..அது போன்ற ஒவ்வொரு விழாக்களுக்கும் மாயி சென்று வந்தார்.


ஒரு பக்கம் இவரை இப்படி படைத்திருந்தாளும் கைராசியில் தேர்ந்தவராக இருந்தார் .இவர் தொட்ட காரியம் துளங்கும் என்கின்ற பெயர் சீக்கிரமே பரவ ஆரம்பித்தது.


முன்பு இகழ்ச்சியாக பார்த்த பலரும் சற்றே கவுரவமாக பார்க்க ஆரம்பித்தனர் .மெல்ல மெல்ல தன்னை இறைவனுக்கு அர்ப்பணிக்க ஆரம்பித்து இருந்தாள்.


"ம்மா.. இந்த பங்ஷனுக்கு உங்களை வர சொல்லி த்திரிகையை கொடுத்துட்டு போனாங்கம்மா.. இந்த பத்திரிகை போன வாரமே கொடுத்தாச்சு .நீங்க மறந்துட்டீங்களா" என்று மகள் ஒரு பத்திரிக்கையை நீட்ட..பார்த்தவருக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது.


" அச்சச்சோ இது முக்கியமா போக வேண்டிய பங்க்ஷன் ஆச்சே.. எப்படி மறந்தேன்னு தெரியலை. டூவீலர் வேற ரிப்பேரா இருக்கு. இப்போ எப்படி போறது" என்று கேட்க," அம்மா என்னையும் இவங்க வர சொல்லி இருக்காங்கதானே.. நீங்களும் நானும் பஸ்ல இன்றைக்கு போகலாமா" என்று கேட்டாள்.


பஸ் என்றவுடனேயே பழைய ஞாபகம் ஏனோ நினைவுக்கு வந்தது கசப்பான அனுபவம் தான் அதனால் தானோ என்னவோ இன்னமும் மறக்கவில்லை .


"ஏற்கனவே கூட்டம் அலைமோதுது..இதுல இதுக வேற..இத பாரு.. பின்னாடி போய் நில்லு". எரிச்சலாக கண்டக்டர் கூறியது.


"என்னம்மா ரொம்ப தூரம் இல்லையா.. ஆட்டோக்குன்னா நிறைய செலவாகும் பஸ்லயே போய்க்கலாம்.. போகலாம் தானே.."


"ம்…சரி.." மகளோடு புறப்பட்டார். அவர்கள் ஏறிய பஸ்சில் கூட்டம் எதுவும் இல்லை.


மகள் முன் இருந்திருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள். இவரும் நடுப் பகுதியில் இருந்த இருக்கை அருகே நின்றிருந்தார்.


அனைத்து இருக்கைகளிலும் ஆட்கள் அமர்ந்திருந்தனர். இவர் நின்று கொண்டிருந்த இடத்தில் ஒரு இருக்கை காலியாக இருந்தது. ஆனால் அடுத்த இருக்கையில் ஒரு பெண் அமர்ந்திருந்தார்.


நிச்சயமாக அருகில் அமர்ந்தால் தேவையில்லாத பேச்சு கேட்க வேண்டியது வரும் என நினைத்தபடி கம்பிகளை பிடித்துக்கொண்டு நின்றிருந்தார் .


அப்போது அந்த இருக்கையில் இருந்த பெண் இவரை பார்த்து "அம்மா சீட்டு தான் காலியா இருக்குதே.. ஏன் நின்னுட்டு வரீங்க உட்காருங்க" என்று சொல்ல லேசாக கண்கள் கலங்கியே விட்டது மாயிக்கு..


"இல்லை நா உட்கார கூடாது மா..உட்கார்ந்தா தப்பா பேசுவாங்க"


"ஏன்..ஏன் உட்கார கூடாது..எதுக்காக தப்பா பேசணும்.. காலம் மாறிட்டு இருக்கு.. இதுக்கு நீங்க ஒன்னும் காரணம் இல்லையே நான் உங்களை சாரசரியான மனுஷங்களாதான் பார்க்கறேன் உட்காருங்க மா".


இத்தனை நாள் மனதில் உள்ள வலி மெல்ல மறைய ஆரம்பித்தது. உண்மையிலேயே உலகம் மாற ஆரம்பித்து விட்டதா!! மனதில் உள்ள கசப்பான வலி மறைய ஆரம்பித்தது.மெல்லிய புன்னகையோடு அருகில் அமர்ந்தார் மாயி.


மாற்றம் ஒன்றே மாறாதது!!


கவிசெளமி.

താങ്കൾ ഇഷ്ടപ്പെടുന്ന കഥകൾ

X
Please Wait ...