JUNE 10th - JULY 10th
விரல்கள் - சிறுகதை
____________________________
ஒண்ணு ரெண்டு மூணு நாலு ....
பிளாட்பாரதில் கேசவனுடன் நின்றுகொண்டிருந்த அனு எதிர்சாரியில் தட தட சத்தத்தோடு வேகமாகக் கடந்து சென்ற ரயிலை பார்த்துக்கொண்டே மனதுக்குள் விரல் விட்டு எண்ணத் தொடங்கினாள்.
கேசவனோ கைபேசியில் யாரிடமோ
பேசிக்கொண்டிருந்தான். வீடு திரும்பியதும் அனு தமயந்தியிடம் சொன்னாள் ; அப்பாவோட பிரண்ட் வீட்டுப் பங்ஷன்ல நான் சிக்கன் பிரியாணி சாப்பிட்டேம்மா ...
செம டேஸ்ட்மா ...அந்த மாதிரியே எனக்கு இன்னைக்கே செஞ்சு குடும்மா ...
அனு சாப்பாட்டில் காட்டும் ஆர்வத்தில் சரிபாதியளவு கூட விளையாட்டில் காட்டுவதில்லை. அனுவை, மற்ற குழந்தைகள் திம்மக்கா ... திம்மக்கா என்று பளிப்பு காட்டும்போது, அனுவின் சிறிய கண்கள் சட்டெனத் திரண்டுவிடும். தெருவின் ஓரமாய்
நின்று அழத்தொடங்குவாள்.
தமயந்தி தெருவுக்கு வரும்போது
மற்ற பிள்ளைகள் சிதறி ஓடிவிடுவார்கள்.
அனுவுக்கு எட்டு வயது. அறிவு பெரிதாக எட்டாத வயது. அதிலும் மந்தமான சிறு பெண். அம்மா அப்பாவைத் தவிர மற்றவர்களை அணுகுவதில் அவளிடம் ஒரு தயக்கம் இருந்தது. புதிய நபர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். கட்டை விரலை சூப்பியபடி மிரண்டுபோவாள்.
மூன்று வயதிலிருந்தே அனு இப்படித்தான் இருக்கிறாள். ஓரிடத்தில் அமரவைத்துவிட்டுப் போனால் எத்தனை நேரமானாலும் அப்படியேதான் அமர்ந்திருப்பாள்.
அதேசமயம், எட்டு வயது வரை
கை சூப்பும் பழக்கத்தையும் அவளால் விட்டொழிக்க முடியவில்லை.
கேசவன் சில ஞாயிற்றுக்கிழமைகளில் அவளோடு விளையாட முயற்சிப்பான். அட்டைப்பெட்டிகளை அடுக்கி கலைந்து விழச்செய்வான். ஆனால் அனுவோ அசைவு காட்டாமல் அமர்ந்திருப்பாள். அப்போதெல்லாம் அனுவுக்கு காது கேட்கவில்லையோ என்று கூட அவனுக்கு சந்தேகம் எழும். ஆனால் சமையலறையில் பாத்திரங்கள் தவறி விழும்போதோ,
நீர் மோட்டாரை இயக்கும்போதோ அனு சட்டென்று திரும்பிப் பார்ப்பாள். அப்படி செய்யும் போது மயிர்க்கற்றைகள் முகத்தில் சரிந்து விழுந்து, அவளின் முகம் வெளிப்படுத்தும் பாவனைகளை மறைந்துவிடும்.
கொடிசுத்திப் பிள்ளை பிறந்தாலோ
தாமதமாய் பிள்ளைப் பெற்றுக்கொண்டாலோ அல்லது மஞ்சள் காமாலை வந்தாலோ இந்தவகையான மந்தத்தன்மையும் மூளைக்குறைபாடும் உண்டாகும்
என மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள். ஆனால் மேற்சொன்ன எந்த வரையறைக்குள் இருந்தும் பிறக்காத அனு, ஏன் இப்படி இருக்கிறாள்....?
அந்த மருத்துவமனையின் உள்ளே நுழையும்போதே, அதன் அதி நவீன
உள் கட்டமைப்பு கேசவனின்
நடையை தயங்கச் செய்தது. தரையெல்லாம் சதுர சலவைக் கற்கள் பொதியப்பட்ட அந்த மருத்துவமனையின் நீல நிறச்
சுவரில், சட்டமிடப்பட்டு தொங்கிய விலையுயர்ந்த சித்திர புத்தர் கூட அவனைப் பார்த்து சிரிப்பதாய் தோன்றியது.
அந்த உயர்தர மருத்துவமனையில் அனுவின் பழைய மருத்துவ குறிப்பேடுகளிலிருந்து புதிய மருத்துவர்கள் ஆராய்ந்துவிட்டு ஆஸ்பெர்ஜர் சிண்ட்ரோம், அட்டென்ஷன் டெபசிட் , ஸ்பெக்ட்ரம் டிஸ் - ஆர்டர் என்றெல்லாம் ஏதேதோ சொன்னார்கள். உடனே அனுவை அவர்களின் மருத்துவமனையில் அனுமதித்து விடுவது நல்லது என்றும்
அதற்காக செலுத்தவேண்டிய முன்தொகையையும் சொன்னார்கள்.
மயக்கம் வராத குறைதான். முன்தொகையே இவ்வளவு என்றால் ..
இரண்டொரு ஆண்டுகளுக்கு
முன் அனுவுக்கு ஆட்டிஸ்டிக்ஸ் இருக்கிறதென்று தோராயமாக உறுதிசெய்யப்பட்ட நாளில்,
அரசு மருத்துவமனையிலிருந்து
வீடு திரும்பும் வழி நெடுக தமயந்தி அழுதாள். வீட்டிற்கு வந்தும்
அன்றைய நாள் முழுக்க அழுதாள்.
தங்கள் குழந்தைக்கு இப்படியொரு நோய் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்வது எந்தவொரு பெற்றோருக்கும் கடினமான விசயம்தானே ....
அதிலும் முழுமையாகக்
குணப்படுத்த முடியாத நோய்
என்று வேறு சொல்லிவிட்டார்கள். ஸ்பீச் தெரபி, பிசியோதெரபி என்று மருத்துவர்கள் பரிந்துரைத்த நீண்ட சிகிச்சைப் பட்டியலை நினைத்து தமயந்தி குலைந்து போனாள். மற்ற குழந்தைகளைப் போல, அனுவிற்கும் விரைவில் எல்லாம் சரியாகிவிடும் என்று அந்தத் தாய்க்கு நம்பிக்கையளிப்பதைத் தவிர, அப்போதைக்கு கேசவனால் வேறொன்றும் செய்யமுடியவில்லை.
அதேநேரம் தமயந்தியோ ஓய்வில்லாமல் இருந்தாள். ஒரு தனியார் பள்ளியில் போதித்துவிட்டு தட்டுமுட்டு சாமான்களைக் கழுவி கவிழ்த்துவிட்டு படுக்கையில்
கவிழும் வரை எந்நேரமும் வேலைதான் என்பதான விட்டேத்தியான மத்திய தரக் குடும்ப வாழ்வில் அவளும் ஓர் அங்கம். தனித்துவமாய் கவனமெடுத்து அனுவை கவனித்துக்கொள்ள முடியாத கையறு நிலைமை.
மாதாந்திர பொருளாதாரத் தேவைகளையே அவளாலும், இளங்கலை படித்துவிட்டு இரும்பு உருக்காலை ஒன்றில்
தினசரி உருகிக்கொண்டிருக்கும் கேசவனாலும் சமாளிக்க முடியாதபோது, ஆட்டிஸ்டிக்ஸ் குழந்தையை வேறு எப்படி அவர்களால் கையாள முடியும்.
அனுவிற்கு இருந்த
மன இறுக்கத்தைப் போக்க
வழி தேடி இருவரும் உழன்று கொண்டிருந்தார்கள். ஆனாலும்
அனுவின் மனம் அன்றாடங்களிலிருந்து
பெரும்பாலும் விலகியே இருந்தது.
அனுவின் மூளையிலிருக்கும்
வேதித் தனிமங்களின் எண்ணிக்கை குறைபாட்டை சரிசெய்து எப்படியேனும் அவளை மீட்டாக வேண்டும். அதற்கு முன் அவள்
அளவுக்கதிகமாய் சிக்கன் சாப்பிடுவதை நிறுத்தியாக
வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.
ஆமாம். சமீப நாட்களாய் அனு,
சிக்கன் வகையறாக்களை விரும்பி சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.
அதுவும் அவளின் வயதுக்கான அளவை விட அதீதமாக. இது நீடித்தால் இன்னும் இரண்டொரு ஆண்டுகளிலேயே அனு பூப்பெய்திவிடுவாள் போல.
அப்படி விரைவாய் அவள் பூப்பெய்திவிட்டால் இன்னும் பாடுதான்.
சராசரி சிறுமிகளே சீக்கிரம் பருவமடைந்துவிடுகிறபோது,
அந்தப் புதிய பருவ நாட்களின் சங்கடங்களோடு இயைந்துபோக
அக்குழந்தைகளுக்கு நாட்கள் எடுக்கின்றன. அனு போன்ற
மனம் வளராத குழந்தை அவைகளையெல்லாம் எப்படி எதிர்கொள்ளப்போகிறாள் என்பதை நினைக்கும்போதே தமயந்திக்கு கிறுகிறுத்தது.
நல்லவேளையாக
அனுவிற்கு ஐந்து வயது வரை வந்துகொண்டிருந்த வலிப்பு இப்போதெல்லாம் வருவதில்லை என்பது மட்டுமே அவர்களுக்கு தற்காலிக ஆறுதலாக இருந்துகொண்டிருந்தது. ஆனால் அப்படியான வலிப்பு
வந்தபோதெல்லாம், பாவம் ! அந்தச்
சின்னக்குழந்தை என்ன பாடுபட்டு போனாள்.
அனு ... அனு ... அனுக்குட்டி ...
கேசவன் மூன்றாவது முறையாக கூப்பிட்டபோதுதான் அனு லேசாகத் திரும்பிப் பார்த்தாள். அவள் கையிலிருந்த எலக்ட்ரிக்
கீ போர்டின் ஒலிப்புக்கட்டைகளை தாறுமாறாக அழுத்திக்கொண்டே திரும்பினாள். அவள் கண்களில் திரண்டிருந்த மிரட்சியும்,
கடைவாயில் ஒழுகிய எச்சிலும் கேசவனை கலவரப்படுத்தியது.
கீ போர்டு எழுப்பிய ஒழுங்கற்ற
டொய்ங் ஒலியூனூடே அவள் கழுத்தை வெட்டியவாறே கைகளை
இழுக்கத் தொடங்கினாள். கேசவன் அனுவை அடைவதற்குள் தரை சாய்ந்து கைகளை இன்னும் வேகமாய் இழுக்க, அனுவை அப்படியே அள்ளி மடியிலிட்டு, நெற்றியில் விழுந்த மயிர்க்கற்றைகளை விரல்களால் ஒதுக்கிவிட்டு, அனுவின் மோவாயைப் பிடித்து அனு ... அனு ...
என்று அரற்றினான். மனைவி வீட்டிலில்லாத நேரம் அது. ஓடிச்சென்று தண்ணீரை எடுத்துவந்து அனுவின் முகத்தில் தெளித்து துடைத்துவிட்டான். ஆனாலும் அனுவின் சொடுக்கல் நிற்கவில்லை.
இப்போது கடைவாயிலிருந்து ஒழுகிய எச்சில் நுரையாக மாறிக்கொண்டிருந்தது.
அனுவுக்கு வலிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை உணரவே கேசவனுக்கு
நேரம் பிடித்தது. திரைப்படங்களில் கையாளப்படும் இரும்புச்சாவி உத்தியெல்லாம் அனுவின்
வலிப்பை மட்டுப்படுத்த உதவவில்லை. பிறகு நண்பனை துணைக்கு அழைத்துக்கொண்டு
அவசரமாய் அருகாமை மருத்துவமனைக்கு அனுவை தூக்கிச்சென்று அவளை இயல்புநிலைக்கு மீட்டான். அலைபேசியில் தமயந்திக்கு
தகவல் கொடுத்தான். பள்ளியிலிருந்து வியர்த்துப்போய் வந்துசேர்ந்த அவளை ஆற்றுப்படுத்துவதற்குள் கேசவன் திணறிப்போனான்.
அதன் பிறகு, அனுவை
அவர்கள் இன்னும் கவனத்துடனும் பொறுப்புடனும் கையாள
வேண்டியிருந்தது. அனுவின் நிமித்தம் இருவருமே அடிக்கடி விடுமுறை எடுக்கவும் நேர்ந்தது.
அனுவை நான்கு வயதில் முதன் முதலில் மழலையர் பள்ளிக்கு அனுப்புவதற்கு முன், அவளுக்கு பள்ளிக்கூடம் ஏன் தேவை என்பதையும், வீட்டில் இல்லாத
புதிய தோழிகளுடன் அங்கே விளையாடலாம் என்றும் சொல்லிக்கொடுக்க கேசவன் முயற்சித்தான். ஆனால் அவள் அவனுடன் உரையாடுவதில் ஆர்வம் காட்டவில்லை. சில நேரங்களில் கூப்பிட்டால் கூட கவனிப்பதில்லை.
பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்ட புதிதில், ஆங்கிலப்பள்ளியின் புதிய சூழலை அனுவால் கையாள முடியவில்லை என்பது ஒருபக்கமிருந்தாலும், பள்ளி வாகனத்தின் சன்னலின் வழியே பரிச்சயமில்லாத புதிய தெருக்களை
காணும்போது கூட அவளிடத்தில் உற்சாகமில்லை. முன்பை விட அமைதியாகவே இருந்தாள். சில நேரங்களில் அவளுடைய கண்கள் உணர்ச்சியால் நிறைந்திருப்பதைப் பார்க்கும்போது கேசவனுக்குள் அனுவை குறித்த கவலை இன்னும் அதிகமானது.
அதற்கேற்ப பள்ளிக்கூடத்திலும்
மற்ற எல்லா குழந்தைகளையும் போல
கற்றுக்கொள்வதில் அனு பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அவள் பத்திரமாக இருக்கிறாள் என்பதை அவளின் வகுப்பாசிரியை கைப்பேசி வழியாக அடிக்கடி கேசவனுக்குத் தெரிவித்துக்கொண்டிருந்தாள்.
என்றாலும் இந்த நிலைமை அதிக நாள் நீடிக்கவில்லை.
வகுப்பறையில் உம்மென்று அமர்ந்திருக்கும் அனுவை
சக மாணவர்கள் சீண்டத் தொடங்கினார்கள். பரபரப்பின்றி சடமாய் அமர்ந்திருக்கும் அனுவை கிள்ளி விளையாடும் அபாய நிலைக்கு அது வளர்ந்தபோது, அனுவை தற்காலிகமாக பள்ளியிலிருந்து நிறுத்தவேண்டியதாயிற்று.
அப்போதுதான் கேசவனுக்கு தன் அப்பாவை வரவழைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
ஊரிலிருந்து அப்பாவை
வரச்சொல்லி அவரின் உதவியோடு ஓரிரு மாதங்கள் அனுவை வீட்டில் வைத்து கவனித்துக்கொள்ள ஏற்பாடு செய்தான்.
வீட்டில் தன் தாத்தாவுடன் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்த அனு, அரிதாக சில நேரங்களில் அவருடன் விளையாடுவாள். அவரும் தன்னிடமுள்ள ராஜா கதைகளை சுவாரசியமாக அனுவுக்கு சொல்ல முயன்றுகொண்டிருந்தார். அவரின் கதைகளில் வரும் நம்பமுடியாத விசயங்கள் குறித்து கேள்வி எதுவும் எழுப்பாமலேயே அனு அசிரத்தையாய் கேட்டுக்கொண்டிருப்பாள். கதைக்கு வெளியே அவளது கண்கள் வேறெங்கோ பார்த்துக்கொண்டிருக்கும் அல்லது
ஏதாவதொரு பொம்மை வண்டியை அவளது விரல்கள் மெதுவாக நகர்த்திக்கொண்டிருக்கும். அப்போதெல்லாம் அனுவின் கண்களில் அளந்து சொல்லிவிடமுடியாத ஓர் உணர்ச்சிக் குழப்பம் அப்பிக்கிடக்கும்.
மீண்டும் அனுவை பள்ளிக்கு அனுப்பியபோது சின்ன சின்ன பிரச்சினைகள் இருக்கத்தான் செய்தன. ஆனால் விபரீதமாக எதுவும் நிகழ்ந்துவிடவில்லை என்றாலும் அனுவிடம் பெரிதாக எந்த மாறுதலும்
ஏற்பட்டுவிடவில்லை. பள்ளியிலும் சரி, தெருவிலும் சரி, அனு மற்ற குழந்தைகளிலிருந்து கொஞ்சம் விலகியே இருந்தாள். வீட்டுப்பாடங்களைக் கூட அவள் ஒழுங்காகச் செய்வதில்லை.
ஏங்க, ... எங்க ஹெச். எம்மோட பேத்திக்கும் இதே
கம்ப்ளைட்தானாம். ஆனா அவ
எல்லா பிள்ளைகளோடவும் நல்லா விளையாடுறாளாம். ஹோம் ஒர்க்லாம் கூட பண்றாளாம் என்று
தமயந்தி பேச்சை ஆரம்பித்தபோதே, அட சும்மா இரு ... நம்ம அனு சீக்கிரமே சரியாயிடுவா. நம்ம பொண்ணுக்கு நாம பயப்படுற மாதிரி எதுவும் இல்ல. அவளுக்கு கான்சியஸ்லாம் நல்லாவே இருக்கு. இப்போதைக்கு
நீ அவ சிக்கன் சாப்பிடறத மட்டும் கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணு போதும். மத்தத எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் என்றான்.
மரத்தின் இலையடுக்குகளும், மலரின் இதழடுக்குகளும், பிபனாச்சி
எண்கள் விதிப்படி ஒழுங்கமைந்த இடைவெளியில் இருப்பதைப் போல, அனுவும் இயற்கையாகவே
இன்னும் கொஞ்ச நாட்களில் ஓர்
மனஒழுங்குக்குத் திரும்பிவிடுவாள் என்று கேசவன் நிச்சயமாக நம்பிக்கொண்டிருந்தான். தவிர, திடீரென எந்த மாற்றத்தையும் அவளுக்குள் விதைக்க அவன் விரும்பவில்லை. மருத்துவர்களும் அப்படித்தான் சொல்லியிருந்தார்கள்.
எதேச்சையாக ஒருநாள் ஏதோவொரு காமிக்ஸ் புத்தகத்தைப்
புரட்டிக்கொண்டிருந்த அனுவை கொஞ்சநேரம் கவனித்துக்கொண்டிருந்த தமயந்தி, அனு அந்தப் புத்தகத்திலுள்ள படங்களில் இருக்கும் ஆற்று நீரில் தன் விரல்களை முக்கி நீந்துவதாக பாவனை செய்வதைப் பார்த்தாள். மரக்கிளையிலிருந்து தாவும் பறவை ஓவியத்தின் மீது தன் கையை வைத்து, சட்டென அவள் கை புத்தகத்துக்கு வெளியே பறந்தது. அப்படி பறந்தபோது அனுவின் முகத்தில் உயிர்த்த மகிழ்ச்சியின் ரேகைகளை தமயந்தி ஆச்சரியத்தோடு கவனித்தாள்.
உண்மையிலேயே அந்தப் பறவை
தன்னுடைய அறைக்குள் பறப்பதாக எண்ணிய அனுவின் உற்சாகத்தைக் கண்டும், ஓவியங்களில் அனுவுக்கு
இருந்த ஆர்வத்தைக் கண்டும், அதுநாள் வரை உடைந்து கொண்டிருந் தமயந்திக்குள்
ஓர் வெளிச்சம் உருக்கொண்டது.
ஏங்க...நம்ம அனுவுக்கு ஓவியம்னா
ரொம்ப இஷ்டம் போல. வெளியில போயி விளையாடறதை விட, காமிக்ஸ் புத்தகத்துல இருக்குற பூனை, குருவிங்களோடதான் எந்நேரமும் விளையாடுறா. இன்னைக்கு டூட்டி முடிஞ்சு வரும்போது புதுசா ஒரு அஞ்சாறு காமிக்ஸ் புத்தகம் வாங்கிட்டு வாங்க ...!
அப்படி கேசவன் வாங்கித் தந்த புத்தகங்களில் அனு, வரிக்குதிரையின் முதுகு வரிகளில் சிலநேரம் விரல் வைத்து நகர்த்திக்கொண்டிருப்பாள் அல்லது அதிலிருக்கும் பூனையின் மீசை மயிரை தடவிக்கொண்டிருப்பாள். எங்க வீட்ல நெறைய பால் இருக்கு. நீயும் எங்கூட சேந்து சாப்டுறியா ...
என்று பூனையிடம் மெதுவான குரலில் பேசிக்கொண்டிருப்பாள். அடர்ந்த வண்ணங்களை அசையாமல் பார்த்துக்கொண்டிருக்கும் அனு, சட்டென்று குனிந்து கருநீலக் குருவியின் அலகில் முத்தமிடுவாள்.
ஓவிய உயிரினங்களுடன் கொஞ்சிக்கிடந்த அனுவை, கேசவன் அடுத்தக் கட்டத்திற்கு மெதுவாக
நகர்த்திச்செல்ல யோசித்தான். எங்கிருந்தோ ஒரு பூனைக்குட்டியைப் பிடித்து வந்தான். மீசை முளைத்த கார்ட்டூன் பூனை, நிஜமாகவே தன்னிடத்தில் வந்து சேர்ந்ததில் அனுவுக்கு உள்ளபடியே மகிழ்ச்சிதான். அசைந்து நடக்கும் அதனுடன் தானும் தவழ்ந்து நகர்ந்து பாவனை காட்டினாள். தேநீர் நிறத்திலிருந்த அந்தப் பூனைக்குட்டியும் சீக்கிரமாகவே அனுவுடன் பழகிக்கொண்டுவிட்டது.
அனு அதற்கு ரேகா
என்று பெயரிட்டிருந்தாள்.
ரேகா ... இங்கே வா... இந்தா
இதைப் பிடி ... செல்லம்ல,
அக்கா மடியில படுத்துக்கோ ...
இப்படி மடியிலிட்டுக் கொஞ்சுவது,
கிச்சு கிச்சு மூட்டுவது, அதனுடன் பேசுவது என்று, அனு
பெரும்பாலான நேரங்களில் அந்தப் பூனைக்குட்டியுடனேயே இருந்தாள்.
இப்படி ஓவியங்களிடமும் பூனையிடமும் பேசத்தெரிந்த அனுவுக்கு தன் எண்ணங்களை அப்பாவிடமோ அம்மாவிடமோ அல்லது ஆசிரியர்களிடமோ சொல்ல சொற்களற்றவளாயிருந்தாள்.
ஏதோவொரு மன இறுக்கம் அனுவை தடுத்துக்கொண்டிருந்தது.
ஆனாலும் அனுவின் பொழுதுகளில்
சின்னஞ்சிறிய மாற்றத்தை, அந்தப் பூனைக்குட்டி கொண்டுவந்திருந்ததில் கேசவனுக்கு நிறைவுதான்.
தமயந்தியும் தன் விடுமுறை நாட்களில், அனுவின் விரல் பிடித்து தன்னளவில் ஓவியம் வரையக் கற்றுத்தர மெனக்கிட்டாள். பறவைகளின் றெக்கைகளுக்கு வண்ணம் தீட்டும்போது அனுவின் முகம் சிவந்திருக்கும். இரவில் தூங்கும்போது தனக்கு வரையக் கற்றுத்தரும் அம்மாவின் சுட்டுவிரலைப் பற்றியபடியே
தூங்க ஆரம்பித்தாள்.
வின்சென்ட் வான்கா எனும் ஓர்
அதீத ஓவியன், தன் வலிகளை துயரங்களை மகிழ்ச்சியை எல்லாம் தான் வரையும் ஓவியங்களின் வண்ணங்களில் பிரதிபலித்தானாம். அதுபோல அனுவும் அவள் அவதானித்த ஓவிய வண்ணங்களில் தன் எண்ணங்கள் இழைந்துகொண்டிருப்பதாக நினைத்தாளோ என்னவோ ?
திடீரென கேசவன் ஒருநாள், வீட்டின் பின்பக்கம் புழங்காமல் கிடந்த சில நூறு சதுர அடிகளை ஆள் வைத்து சுத்தம் செய்து தோட்டமொன்றை உருவாக்கும் வேளையில் மும்முரமானான். குரோட்டான்களையும்,
ரோஜாச்செடிகளையும் வாங்கிவந்து நட்டான். கார்ட்டூன் ஓவியங்களில் பார்த்த மஞ்சளாய் பூக்கும் செடியை வாங்கி வரும்படி அனு ஒருநாள் கேட்டாள் ;
அப்பா, ப்ளீஸ்ப்பா ....
செடிகொடிகளுக்குத் தண்ணீர் விடும்போது தண்ணீரை அனுவின் மீது தெளித்து விளையாட்டு காட்டினான். அப்போது அவள் தன் உடம்பை சிலிர்த்து ஆனந்தம் காட்டினாள். அந்த சிலிர்ப்பு, அனு தன் உள்ளுக்குள்ளிருக்கும் இறுக்கத்தையெல்லாம் சிதறடிப்பதாக கேசவனுக்குத் தோன்றியது.
சில நாட்களிலேயே அனுவுக்கான
தோட்டம் பச்சைவெளியாய் திரண்டுகொண்டிருந்தது. அதனூடே மஞ்சள் பூக்களும் பூக்கத் தொடங்கின. தோட்டத்தின்
ஏகாந்த மாலைப்பொழுதுகள் அனுவுக்குள் மரகதமான ஏதோவொன்றை
பிறப்பித்துக்கொண்டிருந்தது. அஸ்தமன வானம் வேறு, நாளொரு
நிறம் காட்டி அனுவை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது.
கடந்த வாரத்தில் கேசவன்
கொண்டுவந்து விட்டிருந்த இரண்டு
மூன்று புறாக்கள் தோட்டத்தில்
" க்ராக் க்ராக் " என்று எந்நேரமும் ஒலியெழுப்பிக்கொண்டிருந்தன.
தத்தித் தத்தி நடந்துகொண்டிருக்கும் அந்தப் புறாக்களின் அழகைப் பார்த்தபடியே அனு அமர்ந்திருப்பாள். கேசவன் அவைகளுக்காகக் கூண்டு செய்த நாளில், எங்கும் நகராமல் குத்துக்காலிட்டு அமர்ந்தபடி பார்த்துக்கொண்டிருந்த அனு,
அப்பா, ரேகாவுக்குப் பேர் வச்ச மாதிரி புறாக்கும் நான் பேரு வைக்கட்டுமா ?
சரிடா செல்லம் !
இது கேசவன் ...
ம்...இது தமேந்தி...
இது அனுக்குட்டி... !
புத்தகத்தில் அசையாமல் நின்ற பறவைகள் இப்போது அனுவின் தோட்டத்தில் உண்மையிலேயே அசைந்து நடந்துகொண்டிருந்தன. புறாக்களுக்கு தானியங்கள் இறைப்பதும், பாத்திரத்தில்
தண்ணீர் வைப்பதும், அவைகளோடு விளையாடுவதுமாய் அனுவின் பொழுதுகள் மெல்ல
மாறிக்கொண்டிருந்தன.
ஆலையிலிருந்து திரும்பியதும் தினமும் மாலையில் அப்பாவின் விரல் பிடித்து அனு தோட்டம்
முழுக்க உற்சாகமாக நடந்துகொண்டிருந்தாள்.
சிலநேரங்களில் தனியாகவே தோட்டத்தில் விளையாடத் தொடங்கினாள். தெருவிலிறங்கி
சக தோழிகளுடன் விளையாடத் தயங்கியவளுக்குத் தோட்டமே தோழியாகிக்கொண்டிருந்தது.
இப்போதெல்லாம் நெற்றியின் வழியாக முகத்தில் வந்து விழும் மயிர்க்கற்றைகளை அனு தன் விரல்களால் தானே லாவகமாக ஒதுக்கி விட்டுக்கொண்டாள். விரல் சூப்புவதையும் கூட சமீப நாட்களாக விட்டிருந்தாள். தனக்குப் பிடித்தமான விஷயங்களை தன் பாட நோட்டில் வரிசையாக எழுதிக்கொண்டிருந்தாள். அப்படி எழுதும்போது தன் விரல்களைத் தானே தொட்டுப்பார்த்துக்கொண்டாள்.
தன் அப்பாவின் விரலிலும்,
வரையக் கற்றுத் தந்த தன் அம்மாவின் விரலிலும் ஒரே மாதிரியான பிடிமானத்தை
அனுவின் விரல்கள் உணர்ந்தபோது, அவளின் தோட்ட வெளியிலிருந்து
பெயர் தெரியாத பறவைகள் றெக்கைகள் சடசடக்க பறந்துபோனது. தவிரவும் ஏதாவது ஒரு விரலைப் பிடித்துக்கொள்வது என்பது அனுவை மேலும் லேசாக உணர வைத்தது. அவளது மனம்
இளக இளக ....அவளின்
தோட்டத்தில் பறவைகள் றெக்கை விரித்துக்கொண்டேயிருந்தன.
அவளின் செல்லப் பூனைக்குட்டியும் தோட்டத்தில் குறுக்கும் நெடுக்குமாக ஓடி பூச்சிகளைத் துரத்திக்கொண்டிருந்தது.
ரேகா ... ஏய் ...ஓடாத ... நில்லு ! என்று தன் பூனைக்குட்டியை தாவிப்பிடித்த அனு , அதன் முன்னங்கால் விரல்களைப் பிடித்தபடி, கொஞ்சம் கற்பனையோடு சொன்னாள் ;
ரேகா, .... ஏன் இப்படி ஓடிக்கிட்டே இருக்க. அக்கா ஒரு கதை
சொல்றேன் கேளு ....
அன்னைக்கு நான்
அப்பா கூட ஊருக்குப் போனேன்ல. அங்க பிளாட்பாரத்துல வேகமாப் போன ரயில்ல 13 சன்னல் திறந்திருந்திச்சு. அதுல உன்ன மாதிரியே ஒரு குட்டிப்பூனை சன்னல் வழியா எட்டிப் பாத்துச்சு தெரியுமா ...!
விரல்களைப் பற்றிக்கொள்ளத் தெரிந்துகொண்டிருக்கும் அனுவிற்கு,
புத்தர் சித்திரம் மாட்டிய அதி நவீன மருத்துவமனைகள் இனி
ஒருபோதும் தேவைப்படாது என்று கேசவன் மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.
●
ச.மோகன்
முகவரி :
_____________
5/352 - செல்லியம்மன் நகர்,
கிருஷ்ணாபுரம் ( Post ),
பெரம்பலூர் ( District ),
தமிழ்நாடு - ( South India ),
Pin Code : 621116.
Contact : 70948 56420
Email : smohansmohan369@gmail.com
*
#526
30,430
430
: 30,000
9
4.8 (9 )
kalainathank
துவக்கம் லேசாக முடிவு நம்பிக்கையாக குழந்தைகள் குழந்தைகள்தான்
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
sureshvishnu1505
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50