JUNE 10th - JULY 10th
அன்றிரவு மட்டும் அவன் தாமதமாக வந்திராவிட்டால்..
அன்றிரவு மட்டும் அந்த கும்பல் அந்த ஊர் வழியே வந்திராவிட்டால்...
என்று நினைத்துக்கொண்டே நடந்தான் பொன்வண்ணன்.
ஹஹ் ....எப்படி பெருமூச்சுக்குள் சோகங்களை அடைத்து வைக்கிறது இவ்வுடல்..?!!
அடிக்கடி பெருமூச்சு வந்து கொண்டிருந்தது.... சோகமும் வெளிப்பட்டுக் கொண்டு வந்தது.
அவன் நடைபாதையில் தன்னுணர்வோடு நடந்து கொண்டிருக்கவில்லை.
கால்கள் தானாக நடந்தன. கண்கள் தானாக கலங்கிக் கொண்டிருந்தன.
கண்களின் கண்ணீர் வேறு.....பாதையை மறைத்து மறைத்து கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்த படியால்....
நடந்தான் நடந்தான்..... நடந்து கொண்டே இருந்தான். எங்கு போகிறோம் என்றே தெரியாமல்.
வெக்காளி அம்மன் அவ்வூரை காவல் காத்துக் கொண்டிருந்தாள்.
அந்த காவலை மீறி ஒரு கொள்ளை கூட்டம் வந்து விட முடியுமா ...என்கிற இறுமாப்பு அந்த கிராமத்தில் இருக்கும் அனைவருக்கும் உண்டு.
அந்த இறுமாப்பை உடைத்து,...
சிலையையும் தான் உடைத்துப் போனது அந்த கொள்ளைக்கார கும்பல்.
வெக்காளி அம்மன் கோவிலின் முனையில் இருக்கும் அரச மரம், கொஞ்சம் தள்ளியிருந்த வேப்ப மரத்தை அணைக்க வருவது போல் கிளைகளை நீட்டிக் கொண்டிருந்தது.
பொன்வண்ணன் அந்த மரங்களின் அடியில் சுயம்புவாய் தோன்றியிருந்த திண்ணைத் திட்டில் அமர்ந்து கொண்டான்.
சாரல் போல வந்து கொண்டிருந்த அழுகை, அதற்கு மேல் அருவியாய்ப் பொங்க ஆரம்பிற்று....
குமுறி குமுறி அழுதான்... நெஞ்சு 'விண் விண்' என்று வலித்தது. தொண்டை அடைத்து நெஞ்சு பாரம் முற்றியது.
இவன் இங்கு அழுது கொண்டிருக்கும் வேளையில் ...மரத்தின் பின்னால் இரு கால்கள் மறைந்து நின்றன. இரு கண்கள் இமை கொட்டாது அவனை மேய்ந்து கொண்டிருந்தன.
இவனிடம் 'கொள்ளையடிப்பதற்கு ஏதும் இருக்கா' என கும்மிருட்டில் கூட கூர்மையாய் ஆராய்ந்தன. 'கழுகுப் பார்வை'!!!!!....
ஆம் .. அது போலத்தான் கழுகு போன்ற கண்களால் கொத்தி தின்னக் காத்திருந்தான்.
'கழுத்துல சங்கிலி... இடுப்புல அரணாக்கொடி கட்டியிருக்கு... வேட்டியை மடித்துக் கட்டி கொண்டிருந்தாலும் அரை ஞாண் கொடியில் மாட்டியிருக்கும் வெள்ளிக் காசு நிலவொளியில் 'தடுக் தடுக்' என்கிறது. கையில் ஐம்பொன் காப்பு இருக்கு. கொஞ்சம் என்ன... நெறயவே தேறும்.. இப்போ பாயலாமா வேண்டாமா .. இன்னும் கொஞ்சம் நேரம் காத்திருந்தால் அவன் அழுவதை நிறுத்தி விடலாம் ... அல்லது உஷாராகி விடலாம். இப்பொழுதே கைவரிசையை காண்பித்து விடுவது நல்லது. கருக்கல் கை கொடுக்கும் போதே சூட்டோடு சூட்டாக வேலையை முடித்து விட்டு கிளம்பிடணும்.'
ஒவ்வொரு நொடியும் அவனது காது மடல் முறுக்கி முறுக்கி ..பின் கூர்மையாகி நிமிர்ந்தது.
அடுத்த நொடி.... இரண்டு கையை ஒன்றாக்கி, ஓங்கியபடி பொன்வண்ணனின் பொடணியில் அடித்தான் ..
அழுது கொண்டிருந்த பொன்வண்ணன் குப்புறப் போய் வீழ்ந்தான்.
இமைக்கும் நேரத்தில் அவன் மீது பாய்ந்து, கைகளை பின்னால் இழுத்து, கையிலிருந்த காப்பை கழற்ற முயன்றான் கள்வன்.
அழகாய் நழுவிக் கொண்டு வந்தது. ஹ்ம்ம்ம் .. "நல்லது. வேலை மிச்சம்."
அடுத்து அரைஞாண் கொடியின் வெள்ளிக்காசு .. கத்தி உதவுமா. ரெண்டு மூணு சுற்று சுற்றியிருந்த வேட்டியை தாண்டி வெள்ளிக் காசை எடுப்பது கஷ்டம்..
வேட்டியை உருவி விட வேண்டியது தான்.
அவன் வேட்டியை உருவி இடுப்பில் கை வைப்பதற்குள் ....அவிழ்ந்த வேட்டி கொள்ளைக்காரனின் முகத்தில் அறைந்து அடித்தது.
கொள்ளைக்காரன் சுதாரிப்பதற்குள் பொன்வண்ணன் வீறு கொண்டு எழுந்து நின்றான்.
வேட்டியினால் அவன் கழுத்தை நெறித்தான்.
இதை எதிர்பாராத கள்வன் தன் பலம் கொண்ட மட்டும் தடுக்க முயன்றான்.
பொன்வண்ணனுக்கு இப்போது கோபம் தலைக்கேறியது.
"அடேய்... பாவி மக்கா ....." என்று கூவிக் கொண்டே இறுக்கின கழுத்தோடு முகத்தில் ஒரு குத்து விட்டான். கொள்ளைக்காரன் மல்லாந்து போய் மண்ணில் விழுந்தான்.
அடுத்து அவன் மீது கை வைக்க ஓங்கினால்....அவனது உடல் தர தர வென்று இழுக்கப்பட்டது.
ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றான் பொன்வண்ணன்.
அதெப்படி ...யாரும் கண்ணுக்கு தெரிந்த வகையில் அருகில் இல்லையே. யார் இந்த கள்வனை இழுப்பது!! இவன் என்ன நடிக்கிறானா?
இழுத்து செல்லப்பட்ட அவன் உடல் அந்த தெருவை தாண்டியும் போய்க் கொண்டேயிருந்தது ...
கண்டிப்பாக யாரோ இழுக்கிறார்கள்...
அவன் நடிக்கவில்லை.
"வெக்காளியம்மா ....தாயே .. காவல்காரி .. நீ தான் வந்தியா .. " என்று சொல்லி ஒரு கணம் மலைத்து நின்றவன் ...இழுத்து செல்லப்பட்டவனை பின் தொடர்ந்து ஓடினான்.
அடுத்த தெருவில் நின்று கொண்டிருந்த பனை மரத்தின் மீது இவன் உடலை கடாசியது மாய உருவம்.
அருகினில் இன்னும் மூன்று பேரின் உடல் ஏற்கனவே கிடத்தப்பட்டிருந்தது. அவர்கள் தலையிலும் இவன் தலையில் கட்டியிருப்பது போலவே முண்டாசு கட்டியிருந்தது.
ஆனால் உடலில் உயிர் இல்லை.
ஒவ்வொரு சிரத்திலும் கண்கள் திறந்து கிடந்தன.
கழுத்தில் கீறிய தடங்கள் தெரிந்தன.
அரை குறையாய் உடலெங்கும் கீறல்கள்.
கோணல் மாணலாய் கிடந்த அந்த கொள்ளைக்காரர்களின் உடலில் இருந்து கோணல் மாணலாய் இன்னும் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.
பொன்வண்ணனிடம் இருந்து இழுத்து செல்லப்பட்ட கொள்ளைக்காரன் இன்னும் முனங்கிக் கொண்டிருந்தான்.
பொன்வண்ணன் தாவிப் போய் அவனைப் பிடித்து ..
"இவங்க ஒன் கூட்டாளியா .. சொல்லுடா .. சொல்லு " இரைந்தான்....
"ஆமா ம்லே ... எங் கூட்டாளிங்க தான் ... ஒன் வீட்ல ஒன் பொஞ்சாதியோட கழுத்தறுத்தேன். தாலியில இருந்த தங்கத்துக்காக .. புள்ளைய கொன்னேன் .. இடுப்புல இருந்த வெள்ளி அரணா கொடிக்காக ...
இப்போ பதிலுக்கு ....எங்கள கொன்னுப்புட்டாக"
"யாரு..? யாரு உங்கள கொன்னது ?!!!!"
"க் க்க் ஃக்க " கண்கள் இருண்டது கள்வனுக்கு ..
"தோ ... அவங்கிட்ட திருடுன பொருள் பூராவும் இருக்கு. ப்ப்ப்ப் .... பாத்து எடுத்துக்க"
பொன்வண்ணன் ஏனோ பொருள்களை தேட முயலாமல் ..
அருகே ஓடிக்கொண்டு இருந்த ஆற்று நீரை இவன் முகத்தில் வாரி இறைத்தான்.
பலனளிக்கவில்லை .
மூச்சிறைத்து அயர்ந்து இறந்து போனான்.
உடனே இன்னொரு கொள்ளைக்காரன் அருகே சென்று பொருள்களை தேடினான் பொன்வண்ணன்.
இடுப்பில் கட்டியிருந்த கருப்புத் துணியில் கொத்தாக சில பொருள்கள் இருந்தன.
ஏற்கனவே திருடப்பட்டவை ...
இன்று திருடப்பட்டவை ...
ரத்தக் கறை காய்ந்து போனவை ...
ரத்தக் கறை காயாமல் இருந்தவை ...
தன் மனைவி தங்கம்மாளின் கழுத்தில் இருந்த தாலிக் கொடியும் கிடந்தது ....ரத்தக்கறை காயாமல் ...
பையன் இடுப்பில் இருந்த அரைஞாண் கொடியைத் தான் காணவில்லை ..
அந்த கொள்ளைக்காரனின் உடலை குப்புறப் போட்டால் .... அரைஞாண் கொடி கொஞ்ச தூரம் தள்ளிக் கிடந்தது. வெள்ளியின் நிறம் மின்னியது ...
அரைஞாண் கொடி பூராவும் ரத்தம் விரவிக் கிடந்தது .
"ஹோஹ்ஹ் .. எம் புள்ளயே !!.. வீரா!!!!!!!!" கொடியை எடுத்து நெஞ்சில் வைத்து அழுதான் ....
சில நொடிகளில் அவன் கண் முன் காட்சி ஓடியது...
இந்த இரண்டு கொள்ளைக்காரர்களும் பதுங்கி பதுங்கி இவனது வீட்டுக்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி ..
மனைவி தங்கம்மாளின் கழுத்தை நெறித்து தாலியை கழற்றுவதும் ...
அருகே படுத்திருந்த பத்து வயதுப் பிள்ளை செல்வ வீரனின் இடுப்பில் இருந்த அரணாக்கொடியை கழற்ற முயற்சித்து ...அவன் கையை காலை உதைத்துக் கொண்டு அழுக ஆரம்பிக்கவும்,... வாயைப் பொத்தி கழற்றி விட்டு ...
பிள்ளையின் கழுத்தை சரேலென்று நெறித்து கொன்று விட்டு ...தப்பியோடினார்கள்.
காட்சியோடு கரைந்து போன பொன்வண்ணன் கண்ணீரைத் துடைக்கக் கூட மனமில்லாமல்....விடியும் வரை அப்படியே உட்கார்ந்திருந்தான்.
சூரியன் வருவதற்கு தயாராக மேகங்கள் சிவப்பு கம்பளத்தை மெல்ல விரித்துக் கொண்டிருக்கையில்...
எங்கோ இருந்து கூப்பாடு போட்டுக்கொண்டு ஓடி வந்த இவனது பக்கத்து வீட்டுக்காரர்கள் இவன் இங்கே இக்கோலத்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டு அரற்றினார்கள்.
"ஒம் புள்ளயவும் பொண்டாட்டியவும் கொன்னுப்புட்டாக டே பொன்வன்ணா .."
"இல்லத்தே .. அவுக சாகல .. சாகல "
"ஏம் தா இப்புடி சொல்லுத ... ஒனக்கு கிறுக்கு ஏதும் புடிச்சிருச்சா லே. வா வந்து ஈமக்கிரிய செய்யி.. ஆக வேண்டிய காரியத்த பாருலே .. வா லே "
பொன்வண்ணன் எதிர் திசையையே பார்த்துக் கொண்டிருந்தான்.
இவ்வளவு நேரம் மாய உருவமாய் அருகிலிருந்த தங்கம்மாள், தன் பிள்ளை வீரனின் கை விரலை பிடித்து நடக்க ஆரம்பித்தாள்.
பொன்வண்ணன் அந்த திக்கிலே பார்வை பதித்தபடி சிலையாக உட்கார்ந்திருந்தான், அவள் மீண்டும் திரும்புவாளோ என...
அது நடக்காமல் போகவே...வீடு திரும்பினான்.
ஈமக்கிரியை முடிந்து , காரியம் முடிந்த பதினாறாம் நாளில் அந்த கொள்ளைக்காரர்கள் வீழ்ந்து கிடந்த அதே இடத்தில் அடிக்கல்லை நாட்டினான் பொன்வண்ணன்.
மூன்று மாதத்தில் அங்கே சின்னதொரு கோவில் எழுப்பப்பட்டது.
அக்கோவிலின் வாயிலில் சூலம் வைத்து , அதன் மீது வெள்ளி அரை ஞாண் கொடி சுற்றப்பட்டு அதற்கு பூஜை செய்யப்பட்டது.
வெக்காளியம்மனுடன் தங்கம்மாளும்,... தங்கம்மாளுடன் வீரனும் கை கோர்த்து,.... அவ்வூருக்கு காவலாய் நின்றார்கள்.
பொன்வண்ணன் அக்கோவிலின் பூசாரியானான்.
சில நாட்கள் கழித்து ...
கிராமத்துப் பண்ணையாரின் வீட்டில் தங்கக் கட்டிகள் இருப்பதை அறிந்த ஒருவன்.. அவற்றைத் திருடும் நோக்கில் ஊருக்கு வந்திறங்கினான்.
இறங்கி இயற்கை காற்றை பெரு(ம்)மூச்சு கொண்டு சுவாசித்தவுடன் அதிலே அலுப்பு தட்டியவனாய் .... பீடித் துண்டை எடுத்து பற்ற வைத்துக்கொண்டான்.
ஊரை ஒரு நோட்டம் விட்டு ... பின் ஊருக்குள் சென்றான்.
கழுத்துச் சங்கிலியை கையால் நேர்படுத்திக் கொண்டான்.
சட்டைக் காலரை பின்னுக்குத் தள்ளி விட்டான்.
புகைத்துக் கொண்டிருந்த பீடித் துண்டை காலில் போட்டு மிதித்தான் ..
அது சரியாய் நசுங்காமல் புகைந்தது ...
சில நொடிகள் கழித்து ....
சூலத்தில் மாட்டப்பட்டிருந்த அரைஞாண் கொடி காணாமல் போயிற்று...
நடுநிசி தாண்டியதும் அங்கே மீண்டும் தோன்றிற்று.
மறுநாள் காலை, அத்திருடனின் உடல்... ஆற்றுப்படுகையின் அருகே இருந்த தென்னை மரத்தின் கீழ் கண்டெடுக்கப்பட்டது.
அன்னாள் முதல் இந்நாள் வரை அவ்வூரில் கொள்ளை நடந்தாலோ, கலகம் நேர்ந்தாலோ.... வெள்ளி அரை ஞாண் கொடி காணாமல் போயிற்று.
அது காணாமல் போவதை பொன்வண்ணன் மட்டுமே அறிவான்.
-முற்றும்.
#752
55,100
100
: 55,000
2
5 (2 )
sathishhkrishna
மிகவும் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்... சிறந்த கதை... என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... தங்களுக்கு 5 star and like கொடுத்துள்ளேன். எனது கதை " அடுத்த நொடி ஆச்சரியம் " முதல் 20 இடத்திற்குள் இருக்கிறது. தாங்கள் தயவு செய்து எனது கதையை படித்து... பெருந்தன்மையோடு... ஒரு சக எழுத்தாளராக... ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்... மிக்க நன்றி...
Pavalamani Pragasam
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50