JUNE 10th - JULY 10th
"அகத்தின் அழகு"
"கலியுகத் தெய்வமே
கந்தனுக்கு மூத்தோனே.
மூஷிக வாகனனே
மூலப் பொருளோனே.
ஸ்கந்தகுரு கவசத்தை
கலிதோஷம் நீங்கிடவே
திருவடியின் திருவருளால்
செப்புகிறேன் காத்தருள்வாய்"
என்று முழுமுதற் கடவுளான விநாயகர் வாழ்த்து பாடி விட்டுத் தன் எதிரே சட்டத்தினுள் இருந்த எல்லா கடவுளையும் கண் மூடி வணங்கினார், அவ்வீட்டின் தலைவி வடிவாம்பாள்.
சாமி கும்பிட்டு விட்டு பூஜை அறையில் இருந்து வெளியே வந்தவர், அடுக்களைக்குள் நுழைந்தார். அடுத்த நிமிடம் மடமடவென்று பால் காய்ச்சி, அதில் பில்டர் காபி கலந்து எடுத்துக் கொண்டு வெளியே வந்தவர், வீட்டு வாசலில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து அன்றைய நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்த கணவர் தேவேந்திரனிடம், “என்னங்க காபி…” என்றபடி கப்பை அவர் முன் நீட்டினார்.
நாளிதழை மடக்கி எதிரே இருந்த டீபாயின் மீது வைத்து விட்டு மனைவியின் கையில் இருந்ததை வாங்கிக் கொண்டார்.
ஒரு வாய் அருந்தியவர், “வடிவு! இன்னைக்கு என்ன நாள்ன்னு ஞாபகம் இருக்குல்ல? இப்பவே அவன்கிட்ட பொண்ணு போட்டோ காமிச்சிடு! போன தடவை போட்டோ பார்க்காம பொண்ணு பார்க்க வந்துட்டு, இது குறை அது குறைன்னு அந்தப் பொண்ணு மூஞ்சிக்கு நேரா சொல்லி, வேணாம்ன்னு சொன்னானே.. அந்த மாதிரி இப்பவும் லூசுத்தனமா ஏதாவது பண்ணான்.. புள்ளைன்னு கூடப் பார்க்க மாட்டேன்..!!" என்றவர் காபியை குடிக்க,
“சரிங்க, நான் பார்த்துக்கிறேன்.…” என்று பெருமூச்சை வெளியேற்றிய வடிவாம்பாள், மீண்டும் அடுக்களைக்குள் நுழைந்து இன்னொரு காபி கப்போடு வெளியே வந்து மாடியேறினார்.
மாடிக்கு வந்த வடிவு அங்கிருந்த ஒரு அறை கதவை திறந்து உள்ளே சென்றார்.
அங்கே அவரது மகன் உடற்பயிற்சியை முடித்துக் கொண்டு டவலால் வியர்வை வழிந்த தனது உடலை துடைத்துக் கொண்டிருந்தான்.
அவன் அசோக்! மிகப் பெரிய ஐ.டி கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருக்கிறான். ஐந்து லகரங்களில் சம்பளம். ஆளும் பார்க்க சினிமா நடிகன் போல் வாட்ட சாட்டமாக அசத்தலாக இருப்பான். அது போல் தனக்கு வாழ்க்கைத்துணையாக வருபவள் கூட அவனது அழகுக்கும், பதவிக்கும் நிகராக இருக்க வேண்டும் என எண்ணி, தனக்கு வரும் வரன்களை எல்லாம் அலசி ஆராய்ந்து, ஏதாவது ஒரு குறை சொல்லித் தட்டிக் கழித்து விடுவான்.
ஏன்?? அவனுடன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் தர்ஷினி என்ற பெண், அவன் அழகிலும், கம்பீரத்திலும் கவர்ந்து அசோக்கிடம் தன் மனதில் உள்ள காதலைக் கூற, அவனோ சிறிதும் யோசிக்காமல், "வாட்?? நீ என்னை லவ் பண்றியா? என்னை லவ் பண்ண உனக்கு என்ன தகுதி இருக்கு? என் அழகென்ன உன் அழகென்ன..?? இந்த ஆபிஸ் பியூன் கூட உன்னைத் திரும்பிப் பார்க்க மாட்டான்!" பெண் என்றும் பாராமல் திட்டி விட்டான். அவன் மனதில் தான் ஒரு ஆணழகன் என்ற ஆணவம் எப்பொழுதும் அதிமாக இருக்கும்.
பாவம்! அழகு முகத்தில் அல்ல அகத்தில் இருக்கிறது என்று அவனுக்குத் தெரியவில்லை போலும்..
மகனின் அருகில் சென்ற வடிவு, அவனிடம் காபியை கொடுத்து விட்டு, எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்தவருக்கு ஒரு வழி கிடைக்க, “அசோக்! என்னனு தெரியல.. எனக்குத் திடீர்னு பேர புள்ளைங்களைக் கொஞ்ச ஆசையா இருக்குப்பா” என்றார்.
தாயைப் புரியாமல் பார்த்த அசோக், "நான் வேணா அக்காங்க ரெண்டு பேரையும் வரச் சொல்லவா? கூடவே நாலு வாலுங்களும் வந்துரும். ஆசை தீர கொஞ்சுங்க!" என்றபடி காபியை ஒரு வாய் அருந்தினான்.
அவரோ, “அது எனக்குத் தெரியாதா?? நான் சொல்றது உன் பிள்ளைகளைடா.." என்று அவர் கூற,
"அதுக்கு இப்ப நான் எங்கே போக? மொதல்ல எனக்குப் பிடிச்ச பொண்ணு கிடைக்கட்டும். அப்புறம் பேர பிள்ளைகளைப் பார்க்கலாம்.." என்றுவிட்டு காபி கப்பை தாயின் கையில் கொடுத்தான்.
'ம்ம்ம்! உனக்கு இனி செவ்வாய் கிரகத்தில தான் போய் தேடணும்..' என்று தனக்குள் சலித்துக் கொண்டவர்,
"அதான் அசோக்.. நானும் உன் அப்பாவும் உனக்கு ஒரு அழகான பொண்ணு பார்த்து இருக்கோம். நீ எதிர்பார்க்கிற அத்தனை அம்சமும் பொருந்திய பொண்ணு. நிச்சயம் உனக்குப் பிடிக்கும். இதோ போட்டோ!" என்று ஒரு கவரை அவன் கையில் கொடுத்து விட்டு,
"இன்னைக்கு சாயங்காலம் போய் பொண்ணைப் பார்த்துப் பேசி முடிச்சுட்டு வரலாம்டா” என்று வடிவாம்பாள் கூறவும், போட்டோவை கூடப் பார்க்காமல்,
"என்னது இன்னைக்கு பொண்ணு பார்க்கப் போறோமா? அதுவும் இல்லாம இன்னைக்கே பேசி முடிக்கப் போறீங்களா? என்னமா சொல்றிங்க..??" அதிர்ந்து கேட்டான் அசோக்.
"ஆமாடா.." என்று அவர் கூற,
"யாரை கேட்டு முடிவு பண்ணிங்க..?" என்று கோபத்தில் எகிறினான் அசோக்.
"யாரை கேட்கணும்..?" என்று வடிவாம்பாள் கேட்க,
"என்னைக் கேட்கணும்மா.." என்றான் கோபத்துடன்.
"உன்னைக் கேட்டு எல்லாம் பண்ணினா உனக்கு அறுபதாம் கல்யாணம் கூட நடக்காதுடா!" என்று வடிவாம்பாளும் கோபத்தில் பேச,
"ம்மா!!" என்று பல்லைக் கடித்தான் அசோக்.
"சும்மா சும்மா அம்மான்னு கத்தாதடா. இதுவரை பன்னிரெண்டு பொண்ணு பார்த்து இருக்கோம். ஒவ்வொரு பொண்ணையும் போய் பார்த்துட்டு, ஏதாவது ஒரு குறை சொல்லித் தட்டிக் கழிச்சிட்டே இருக்கே. சரி, உனக்கு யாரையாவது பிடிச்சு இருக்கா, லவ் பண்றியா சொல்லு! அந்தப் பெண்ணையே கல்யாணம் பண்ணி வைக்கிறோம்னு சொல்லிட்டோம். அதுவும் இல்லன்னு சொல்றே. எங்களை என்ன தான்டா பண்ணச் சொல்றே? ஏதோ உன் அக்காங்களுக்கு நல்ல வரன் அமைஞ்சி அவங்க வாழ்க்கையை அழகா வாழ்றாங்க. உன்னை மாதிரி யாராவது இப்படிக் குறை சொல்லிட்டு இருந்து இருந்தா, அவளுங்களுக்கு இப்போதைக்குக் கல்யாணமே நடந்து இருக்காது! நான் என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சிக்கோ! நீயும் குழந்தை குட்டின்னு செட்டில் ஆகிட்டா எங்களுக்கு நிம்மதியா இருக்கும். நாங்களும் காசி, ராமேஸ்வரம்னு கோவில் குளம்னு போய்ட்டு வருவோம்.." என்று நீளமாகப் பேசி முடித்தார் வடிவாம்பாள்.
அவனோ, "இப்ப என்ன உங்களுக்கு ஜோடியா ஊர் சுத்தணும், அவ்வளவு தானே? நான் ஏற்பாடு பண்றேன், போய்ட்டு வாங்க.. அதை விட்டுட்டு என்கிட்ட கேட்காம கல்யாண ஏற்பாடு பண்ற வேலையெல்லாம் வச்சிக்காதீங்க! எனக்குக் கெட்ட கோபம் வரும்!!" என்று தாயிடம் கடுகடுத்து விட்டுக் குளிக்கச் சென்று விட்டான் அசோக்.
"இவ்வளவு எடுத்துச் சொல்லியும் திருந்த மாட்டேன்.." என்பவனை என்ன செய்வது என்று புரியாமல் நின்றார் அந்த தாய்.
ஒருவாரம் கடந்திருக்க, அசோக்கின் அலுவலகத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தாள் ஒரு பெண். பெயர் மேனகா.. அழகு என்றால் பெயருக்கு ஏற்றார் போன்று அப்படி ஒரு அழகு! சுண்டினால் ரத்தம் வரும் பொன் மேனி. ஜீன்ஸ் டீசர்ட் அணிந்து ஹைஹீல்ஸில் அவள் நடந்து வரும் அழகை காண கண் கோடி வேண்டும்..!! அலுவலகத்தில் அந்தப் பெண்ணை பற்றியும், அவளின் அழகைப் பற்றியும் பேசாத ஆட்களே இல்லை.
அசோக் வேலை விஷயமாக மும்பை சென்று விட்டு, ஒருவாரம் கழித்து இன்று தான் அலுவலகத்திற்கு வந்தான். அவன் காதுக்கும் மேனகா பற்றிய செய்தி வர, அவனுள் சிறு ஆர்வம் உண்டானது. உடனே ஜி.எம் என்ற முறையில் அவளைத் தனது கேபினுக்கு அழைத்தான்.
உள்ளே வந்தவளைப் பார்த்துப் பிரமித்துத்தான் போனான்! அவனால் கண்களைத் தட்டி முழிக்க முடியவில்லை. முதல் பார்வையிலேயே மேனகாவின் அழகில் குப்புற விழுந்தான் அசோக்.
அவளிடம் மெதுவாகப் பேச்சு கொடுத்து அவளைப் பற்றிய விபரங்களைச் சேகரித்துக் கொண்டான். அவளும் அவன் எண்ணம் புரியாமல் கலகலப்பாகப் பேச ஆரம்பித்தாள்.
அதன்பிறகு வந்த நாட்களில் இருவரும் நட்பாகப் பழக ஆரம்பித்தனர். நட்பு அவனுள் காதலாக மாறியது. அதே நேரம் அலுவலகத்தில் மற்ற ஆண்களின் பார்வை மேனகா மீது படிவதைக் கண்டவன், இதற்கு மேலும் முடியாது என்று தனது காதலை அவளிடம் அவன் கூற முடிவு செய்து இருந்தான்.
முடிவு எடுத்த பிறகு அதைத் தள்ளிப் போட மனம் இல்லாமல், உடனே அவளைத் தன் கேபினுக்கு அழைத்து, தனது மனதில் உள்ளதைக் கூற எண்ணி மொபைலை எடுக்கவும்,
"அசோக்! நீங்க இன்னைக்கு ஈவினிங் பிரீயா? கஃபேக்கு போலாமா?" என்று கேட்டபடி உள்ளே வந்தாள் மேனகா.
இதுதான் பழம் நழுவி பாலில் விழுவது என்று சொல்வார்களோ என்று தனக்குள் சொல்லிக் கொண்ட அசோக், "கண்டிப்பா மீனு! ஈவினிங் மீட் பண்ணலாம்.." என்றான், உள்ளம் துள்ள..
அன்று மாலை தன் காதலைச் சொல்லி விட வேண்டும் என்ற எண்ணத்துடன் சந்தோசமாக அவள் சொன்ன இடத்திற்குச் சென்றான் அசோக். ஆனால் அங்கே மேனகாவுடன் ஒரு ஆடவன் அமர்ந்து இருப்பதைக் கண்டு முகம் சுளித்தான் அவன்.
ஏனெனில் கருப்பு என்றால் அப்படி ஒரு கருப்பு அந்த ஆடவன்! 'என்ன இவன் இப்படி இருக்கிறான், தார் பூசின மாதிரி!' என்று அவன் கேலியாக நினைத்துக் கொண்டிருக்கும் போது,
அதற்குள் அவனைக் கண்டுவிட்ட மேனகா, "ஹாய் அசோக்! நான் இங்க இருக்கேன்" என அவனுக்குக் கைக்காட்டியவள், அசோக் தன் எதிரில் வந்து அமர்ந்ததும், தன் அருகில் இருந்தவனிடம்,
"விஷ்வா! இது அசோக், என் கூட ஆபிஸ்ல வொர்க் பண்றார்.." என்றவள் அசோக்கிடம்,
"இது விஷ்வா" என்று அசோக்கிற்கும் அறிமுகம் செய்து வைத்தவள்,
"விஷ்வா! நீ போய் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வாயேன்.." என்று கூற, மறுபேச்சு பேசாமல் அங்கிருந்து சென்றான் அந்த ஆடவன்.
அதன் பிறகு தான் அசோக் இலகுவாக ஆனான். பின்னே? அவன் காதலைச் சொல்ல எண்ணி இங்கு வந்திருக்க, அதற்கு இடைஞ்சலாக ஒருவன் நந்தி போல் இருந்தால் அவனுக்கு கோபம் வரும் தானே?!
அவன் மனநிலையை அறியாமல், "ஹான் அசோக், விஷ்வா யார் தெரியுமா? என் சின்ன வயசு பிரெண்ட். பக்கத்து வீடு தான்! சோ ஒண்ணாவே வளர்ந்தோம்.." என்று கூறினாள்.
அசோக்கோ, "இதைச் சொல்லத்தான் என்னை வரச் சொன்னியா?" என்று வேண்டாவெறுப்பாகக் கேட்டான்.
"இரு, சொல்றேன்" என்றவள், ஒருமுறை திரும்பி விஷ்வாவைப் பார்த்தவள்,
"உன்னை இங்க எதுக்கு வரச் சொன்னேன் தெரியுமா? இப்ப இங்க நான் ஒருத்தருக்கு லவ் பிரப்போஸ் பண்ணப் போறேன்" என்றவள், "ஐ லவ்.." என்றுவிட்டு வெட்கத்தில் பேச்சை நிறுத்தினாள்.
அவனோ, 'ஐ லவ் அசோக்!' என்று சொல்ல போகிறாள் என்று ஆர்வமாகக் காத்திருக்க,
மேனகாவோ, "ஐ லவ் விஷ்வா.." என்றாளே பார்க்கலாம்..!!
அதைக் கேட்டு அசோக்கின் இதயம் வெடித்துச் சில்லு சில்லாக உடைந்து போனது.
"அக்சுவலி இதை நான் அவன்கிட்ட தான் முதல்ல சொல்லி இருக்கணும். ஆனா கொஞ்சம் இல்ல நிறையவே கில்ட்டியா இருந்தது. ஏன் தெரியுமா? அவன் என்கிட்ட ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே லவ்வை சொல்லிட்டான். ஆனா நான் கொஞ்சமும் யோசிக்காம அவனோட நிறத்தைச் சுட்டிக்காட்டி ரிஜெக்ட் பண்ணிட்டேன். அப்போ கூட அவன் என்கிட்ட கோபப்படல தெரியுமா? எப்பவும் போலத்தான் பேசிட்டு இருந்தான். அதே சமயம் என்னை ரொம்பவே கேரிங்கா பார்த்துக்கிட்டான்.
தான் லவ் பண்ற பொண்ணு தன்னை லவ் பண்ணலன்னா, அவ அழகை சிதைக்க ஆசிட் ஊத்துற இந்தக் காலத்துல, விஷ்வா ஒரு ஜென்டில்மேனா தான் நடந்துக்கிட்டான்.
அவனோட அந்தக் கண்ணியம் எனக்கு ரொம்பப் பிடிச்சது. அப்புறம்தான் நிறம் எல்லாம் ஒரு குறையே கிடையாது. "அழகு முகத்தில் இல்ல அகத்தில் இருக்குன்னு" புரிஞ்சிக்கிட்டேன். இப்ப நானும் அவனை லவ் பண்றேன். ஆனா அதை அவன்கிட்ட சொல்லத்தான் பயமா இருக்கு. அதான் ஒரு சப்போர்ட்க்காக என் பிரெண்டான உன்னை இங்க வரச் சொன்னேன்..." என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது கையில் காபி ட்ரேயுடன் வந்த விஷ்வா,
"அசோக்! காபி எடுத்துக்கோங்க.." என்றவன், "மேனகா! இந்தா உனக்கு கோல்டு காபி.." என்று அவளிடம் கொடுத்தான்.
அவனின் குரலில் மெல்ல நிமிர்ந்து பார்த்தான் அசோக். அவனால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. 'தன்னைப் போல் அழகனும் கிடையாது, நிறமும் கருப்பு தான். இவனைப் போய் காதலிக்கிறேன் என்கிறாளே? தன்னிடம் இல்லாதது எது அவனிடம் இருக்கிறது?' என்று அசோக் யோசித்துக் கொண்டிருக்கையில்,
மேனகாவோ விஷ்வாவை ஆழ்ந்து பார்த்து, "விஷ்வா! எனக்காக நீ இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களைப் பார்த்து பார்த்துப் பண்ணும் போது, உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்குதுடா. உன்னை லவ் பண்ணிருவேனோன்னு தோணுது" என்று கண்ணடித்துக் கூறினாள்.
அவனோ, "ஹா ஹா! காபி வாங்கிக் கொடுத்தா லவ் பண்ணுவன்னு தெரிஞ்சா இதை முன்னமே செஞ்சி இருப்பேனே..??" என்று சிரித்தவன், "விளையாடாம காபி குடி.." என்றான் அமைதியாக.
"நிஜமா தான் சொல்றேன் விஷ்வா.. ஐ லவ் யு டா! உன் அளவுக்கு என்னால லவ் பண்ண முடியுமான்னு தெரியல. பட் கண்டிப்பா ட்ரை பண்ணுவேன். முன்ன நான் உன்கிட்ட அப்படிப் பேசினத்துக்கு சாரிடா.." என்று தனது காதலைச் சொல்லியவள், மன்னிப்பை வேண்டவும் தவறவில்லை.
மேனகா தன்னிடம் காதல் சொன்னதை நம்ப முடியாமல் விஷ்வா அமர்ந்து இருக்க, அங்கே வேண்டாத பொருள் போல் அமர்ந்து இருந்தான் அசோக்.
தான் காதலிக்கும் பெண் தன் கண்ணெதிரே இன்னொருவனிடம் காதலைச் சொல்கிறாள். அவனது ஆணவத்திற்குப் பெருத்த அடியாக இருந்தது அவனுக்கு.
அந்த நேரம் ஓர் உண்மை உறைத்தது அவனுக்கு! இப்படித்தானே தான் ஒவ்வொரு பெண்ணையும் ஏதாவது குறை கூறி வேண்டாம் என்று சொல்லும் போது அவர்களுக்கு இருந்து இருக்கும் என்று எண்ணியவன், அதற்கு மேல் அங்கு இருக்கப் பிடிக்காமல் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி இருந்தான்.
மறுநாள் அலுவலகத்தில் அசோக் காலடி எடுத்து வைத்த பொழுது, "கேட்டியா சேதி? நம்ம ஆபிஸ் ஸ்டாப் மேனகாவுக்கு நாளைக்கு நிச்சயதார்த்தமாம். மாப்பிள்ளை அவங்க அழகுக்கு நிகர் இல்லைன்னாலும் குணத்துல சொக்க தங்கமாம். மேனகாவும் அவரை லவ் பண்றாங்க போல…" என்றவர்கள், அசோக்கை ஓரக் கண்ணால் பார்த்தபடி,
"நான் கூட மேனகா அசோக் கூட சகஜமா பேசுறதைப் பார்த்து என்னென்னவோ நினைச்சேன். இதுக்குத்தான் தான் அழகா இருக்கோம்னு ஓவரா ஆட கூடாதுன்னு சொல்றது.. இப்ப போச்சா..??" என்று அவன் காதுபட சிலர் பேச, அவனுக்கோ அவமானமாக இருந்தது.
யாரையும் நிமிர்ந்து பாராமல் தனது கேபினுக்குள் சென்று விட்டான். சிறிது நேரம் கழித்து, "மே ஐ கமின் சார்?" என்று கேட்டு விட்டு உள்ளே வந்த தர்ஷினி,
"சார்.." என்று அழைத்தாள்.
அசோக்கோ இவள் எதற்காக இங்கு வந்திருக்கிறாள்? இவளும் என்னைக் கிண்டல் செய்ய போகிறாளா என்று தான் நினைத்தான்.
ஆனால் தர்ஷினியோ, "சார், விஷயம் கேள்விப்பட்டேன். ரொம்பவே கஷ்டமா போச்சு. உங்க கண்ணுல மேனகாவுக்கான காதலைப் பார்த்திருக்கேன். உங்க ஜோடிப் பொருத்தம் பார்த்துச் சந்தோசப்பட்டும் இருக்கேன். ஆனா இப்படி ஆகும்னு நினைச்சு கூடப் பார்க்கல. என் கண்ணே பட்டிருச்சு போல சார்.." எனக் கூறி வருந்தியவள்,
"நீங்க கவலைப்படாதீங்க சார்! உங்களைக் காதலிக்க, கல்யாணம் பண்ண மேனகாவுக்கு கொடுத்து வைக்கல. உங்களுக்கான துணை நீங்க நினைக்கிற மாதிரி சீக்கிரமே கிடைப்பாங்க.." என்று கூறி விட்டு அவள் வெளியே செல்ல, அசோக்கோ தர்ஷினியை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒருவரை நாம் உதாசீனம் செய்யும் போது அவர்கள் மனதில் ஏற்படும் வலி நமக்குத் தெரியாது! அதுவே நம்மிடம் ஒருவர் அப்படி நடந்து கொள்ளும் போது எப்படி வலிக்கும் என்று நன்றாக உணர்ந்து கொண்டான் அசோக்.
மேலும், "அழகு என்பது முகத்தில் இல்லை அகத்தில் இருக்குன்னு புரிஞ்சிக்கிட்டேன்.." என்ற மேனகாவின் குரல் அசோக்கின் காதில் ஒலித்தது.
அவன் இதழோ, "எஸ்! நானும் உண்மை காதல் எதுன்னு புரிஞ்சிக்கிட்டேன்.." என்றவனின் பார்வை இப்பொழுது தர்ஷினியை உரிமையுடன் தழுவியது.
*******
#20
63,930
23,930
: 40,000
480
5 (480 )
laxman98
sibhilraj95
rani
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50