அந்த ஒரு நொடி

உண்மைக் கதைகள்
5 out of 5 (11 )

எப்போதும் நடப்பது தான். குமார் அலுவலகம் விட்டு வரும்போதே நிறைய நாட்கள் குடித்து விட்டு கையிலும் ஒரு பாட்டிலோடு வருவதோ, வீட்டில் உருட்டி புரட்டி ரகளை செய்வதோ மேகலாவுக்கும் கதிருக்கும் ஒன்றும் புதிதல்ல. இருந்தாலும் சில நாட்களில் அவன் செய்யும் கலாட்டா அவர்களால் தாங்க முடியாமல் போய்விடுகிறது.

மேகலாவும் குமாரைப் போலவே ஒரு தமிழ்நாடு அரசு அலுவலகத்தில் தான் வேலை பார்க்கிறாள். குமார் வருவாய்ப் பிரிவில் குமாஸ்தாவாக வேலை பார்க்கிறான். மேகலா வேளாண்மைப் பிரிவில் தட்டச்சராக வேலை செய்கிறாள். வீடு சொந்த வீடு. வீட்டு வசதிவாரியப் பிரிவில் அவர்களுக்கு குலுக்கல் முறையில் இருவது வருடங்களுக்கு முன் கிடைத்தது. வீட்டில் எந்த சௌகரியங்களுக்கும் குறைவில்லை. ஆனால் வாழ்க்கை அப்படியே நதி ஓட்டமாக ஓடி விடுமா? ஏதாவது குறை இருக்க வேண்டுமே?

சின்ன வயதிலிருந்தே குடி, சிகரெட் என்று கெட்ட பழக்கங்களை பழக்கி வைத்துக் கொண்டிருந்த குமார் எதை சாக்கு வைத்து குடித்து விட்டு வந்து வீட்டில் ரகளை செய்வான் என்றெல்லாம் சொல்ல முடியாது. இத்தனை வருட மணவாழ்வில் மேகலா தெரிந்து கொண்டது அவனைப் பற்றி எதுவுமே யாராலும் கணிக்க முடியாது. அன்போடும் மிகுந்த பாசத்தோடும் நடந்து கொள்ளும் குமார் எப்போது மாறுவான், அவனுக்கு எதற்குக் கோபம் வரும் என்றெல்லாம் புரிந்து கொள்ளவே முடியாது. ஆனால் அவனுக்கு தன் சின்ன வயதுக் கோபமே நிறைய இருந்தது. தன் பெற்றோர் மேல் கோபம், தன் சிறு வயதிலேயே மறைந்து விட்ட பெற்றோருக்குப் பின் தன்னை வளர்த்து ஆளாக்கிய பெரியப்பா மேல் கோபம் என்று வரிசையாக அவனைச் சேர்ந்தவர்கள் எல்லோர் மேலும் கோபம். தன்னை சரியாகப் படிக்க வைக்க வில்லை. தனக்கு பெரியப்பா பிள்ளைகள் போல் வங்கியில் வேலையில்லை. சாதா அரசாங்க அலுவல குமாஸ்தா என்று ஒரு பெரிய குறைகள் பட்டியலே இருக்கும் கோபப்படுவதற்கு.

மேகலா கூடப் பிறந்தவர்கள் எல்லோரும் நன்றாகப் படித்து விட்டு நல்ல வேலையில் இருப்பவர்கள். அதனாலேயே மேகலாவைச் சேர்ந்தவர்கள் யாரையும் பிடிக்காது. சாதாரணமாக இருந்து சாதாரணமாக நாட்கள் ஓடும்போது ஒன்றும் பிரச்சினையில்லை. எல்லோரிடமும் நன்றாகச் சிரித்துப் பேசிப் பழகுவான். குடித்து விட்டு வரும் நாட்களில் தன் குடும்பத்தில் உள்ளவர்கள், மேகலா குடும்பத்தினர் எல்லோரையும் குறிப்பிட்டு அநாகரிகமாகப் பேசி, கத்தி ரகளை செய்வான். கைக்குக் கிடைத்ததையெல்லாம் வீசி எறிந்து உடைப்பான். குமாருக்கு கூடப் பிறந்தவர்கள் யாருமில்லை. அப்படி ஏதாவது உறவு இருந்தாலாவது அவர்களிடம் சென்று அவனைப் பற்றி முறையிடலாம் என்று நினைத்துக் கொள்வாள் மேகலா.

ஒரே பையன் கதிர் பி.காம். முடித்து விட்டு மேலே எம்.பீ.ஏ சேர முயற்சி செய்து கொண்டிருக்கிறான். பெரிய படிப்பாளி என்று சொல்ல முடியாவிட்டாலும், ஓரளவுக்கு நல்ல மார்க் என்று சொல்லும்படி தான் எடுத்திருக்கிறான். தாங்கள் இருவரும் வேலை பார்ப்பதால் மேகலா அவன் என்ன படிக்கணும்னு நினைக்கிறானோ அதைப் படிக்கட்டும் என்று தான் தன் பாட்டுக்கு தன் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தாள். ஆனால் அது தான் வீட்டில் இப்போது பற்றி எரியும் 'ஹாட் டாபிக்'. எந்த வேலைக்கும் போகாமல் உதவாக்கரையாக வீட்டிலேயே உட்கார்ந்திருக்கிறான் என்று கதிருடன் தினமும் சண்டை, சச்சரவு.

"நானே எத்தினி நாள்டா சம்பாரிச்சு ஒனக்கு சோறு போடறது? உனக்கு எதுக்குடா மேல் படிப்பு? அதுக்கு வேற நா துட்டு செலவு செய்யணுமா? ஊர்ல எல்லாரும் ஒரே டிகிரி முடிச்சிட்டு வேலைக்குப் போகலியா? நானெல்லாம் உன்னை விட சின்ன வயசில வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டேன். தெரியுமில்ல? நீ பெரிய தொரையோ? நீ என்னிக்கு வேலைக்குப் போய் நாலு காசு சம்பாரிக்கப் போறே?" என்பான்.

இதில் மேகலாவும் வேலைக்குப் போவதோ சம்பாதிப்பதோ வீட்டில் யாருக்காவது கவனம் இருக்குமா என்றே தெரியாது. அதைப் பத்தி குமாருக்கு நினைவிருக்குமா என்றும் தெரியாது. தப்பித் தவறி தானும் சம்பாதிப்பதை குறிப்பிட்டு அவள் ஏதாவது பேசப் போனால் அவளுக்கு அதற்கே விசேஷமாக அடி உதை கிடைக்கும். அநேகமாக அவளுக்கே அந்த விஷயம் மறந்து விட்டது போல நடந்து கொள்ள அவள் பழகி விட்டிருந்தாள்.
"சம்பாரிக்க துப்பில்லாத பயலே!" என்பான் கதிரைப் பார்த்ததும். இதை சாதாரணமாகக் கேட்க மாட்டான். கதிர் சோஃபாவில் உட்கார்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்தால் அவனை காலைத் தூக்கி ஒரு உதை உதைத்து விட்டுக் கேட்பான். மேகலா பதைத்துப் போய் கதிருக்கு ஜாடை காட்டுவாள். 'பதில் சொல்லி இதைப் பெரிசு பண்ணாதடா! நைசாக வெளியே போய் விடு' என்று. அந்த சூழ்நிலையிலிருந்து எப்படி தப்பிக்கலாம் என்று மட்டும் தான் அந்த நேரத்தில் யோசிக்க முடியும். கதிரும் அம்மா சொல்வதை ஏற்றுக் கொண்டு வெளியே போய் விடுவான். ஆனால் அவனுக்கும் சமயங்களில் கோபம் வரும்.

"என் வீட்ல நா உட்காரக்கூட முடியாம நா ஏம்மா வெளியே போகணும்? குடிச்சிட்டு வந்தா அவர வீட்டுக்கு வர வேணாம்னு சொல்லிடு. அவர் பண்ற கூத்துக்கு நீயும் நானும் ஏன் வெளியே போகணும்?" என்பான் கோபமாக. மேகலாவுமே வீட்டில் ரகளை தாங்க முடியாமலிருந்தால் குமார் கண்ணில் படாமல் மொட்டை மாடிக்குச் சென்று ஒரு இருட்டு மூலையில் உட்கார்ந்து கொள்வாள். கீழே சப்தமெல்லாம் அடங்கி விட்டதா என்று அவ்வப்போது எட்டிப் பார்ப்பாள். போதை தாங்காமல் கீழே விழுந்தால் சில சமயங்களில் மணிக்கணக்கில் எழுந்திருக்க மாட்டான் குமார். அப்படியே கிடக்கும் இடத்திலேயே கிடப்பான். அப்போது நைஸாக உள்ளே வந்து சப்தம் செய்யாமல் அம்மாவும் பிள்ளையும் சாப்பிட்டுத் தூங்கச் செல்வார்கள்.

கதிருக்குக் கோபம், கோபமாக வரும். "ஒரு டீவி ப்ரோக்ராம் பார்க்க முடியாது. ஒரு ஃப்ரெண்டை கூட வீட்டுக்குக் கூப்பிட முடியாது. இது என்ன வீடா, சுடுகாடா?" என்று மேகலாவிடம் ஆத்திரத்தோடு கத்துவான்.

மேகலா அவனை பலவாறாக சமாதானம் செய்ய முயற்சி செய்வாள். "ஃப்ரெண்ட் வர முடியலேன்னா என்னடா, நீ வேணா அவங்க வீட்டுக்கு போய் பேசிட்டு வாயேன்!" என்பாள்.

கதிருக்கு கோபம் தலைக்கேறி விடும்.

"என்னம்மா? என்னைப் பைத்தியக்காரன்னு நெனச்சியா? அப்பா குடிச்சிட்டு வந்தார்னா பரீட்சைக்கு வீட்டில படிக்க முடியலேன்னு ஃப்ரெண்ட் வீட்டுக்குப் போய் படீன்னு சொல்வே. அப்படியே படிச்சு படிச்சு டிகிரியும் முடிச்சாச்சு. எப்போ தான் இவரு மாறுவாரு? எப்பப் பார்த்தாலும் ஃப்ரெண்ட்ஸ் வீட்ல போய் நிக்க முடியுமா?" என்பான் ஆக்ரோஷமாக.

"உனக்காகத்தான், நீ சொல்றியேன்னு தான் பொறுமையா இருக்கேன். குடிச்சிட்டு வந்து அவுரு என்னை உதைச்சா இனிமா நா சும்மா விடமாட்டேம்மா. நானும் ரெண்டு உதை உதைக்கப் போறேன்." என்பான். மேகலாவுக்கு இவனும் சேர்ந்து ரகளை செய்ய ஆரம்பித்தால் வீடு என்ன கதியாகும் என்று ஒரே கவலையாக இருக்கும்.

ஒரு நாள் வீடு திரும்பும்போது, பைக்கில் ஒரு திருப்பத்தில் கீழே விழுந்து முழங்காலில் பலமாக அடிபட்டு ஒரு நாலு நாட்கள் போல குமார் வேலைக்குப் போக முடியாமல் வீட்டில் தான் இருந்தான். மேகலாவும் அவனை கவனித்துக் கொள்வதற்காக அலுவலகம் செல்லவில்லை. ஓய்வாகப் படுத்திருந்த அவனிடம் மேகலா பக்குவமாகப் பேசிப் பார்த்தாள்.

"நமக்கு இருக்கிறது ஒத்தையில ஒரு புள்ளைங்க. அவன் எம்.பி.ஏ. படிக்கணும்னு ஆசைப்பட்டா அதை நெறைவேத்தி வைக்கிறது தானேங்க மொறை? எத்தனையோ பசங்க எப்படியெப்படியோ சீரழிஞ்சி போறாங்க. இவன் படிக்கணும்னு தாங்க சொல்றான். எம்.பி.ஏவும் முடிச்சா நிச்சயமா நல்ல வேலை கிடைக்குங்க!" என்று மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தாள். குமாரும், "நீ சொல்றது சரிதான் மேகலா!" என்று சொல்ல மேகலா அகமகிழ்ந்து போனாள். இவுருக்குக் கால்ல அடிபட்டதுல மனசு மாறியிருக்கு போல என்று நினைத்துக் கொண்டாள்.

ஆயிற்று. காலில் பட்ட காயம் குணமாகி அலுவலகத்திற்கு செல்ல ஆரம்பித்தாயிற்று. முதல் நாளே கையில் பாட்டிலுடன் வீட்டுக்கு வந்த குமார் கச்சேரியை ஆரம்பித்தான். மேகலா டீவியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"அம்மாவும் புள்ளையும் என்னடீ நெனச்சிட்டிருக்கீங்க? நா என்ன கேனப்பயலா? உதவாக்கரை புள்ளைக்கு சம்பாரிச்சுப் போட? போடீ! போய் அவனை ஏதாச்சும் வேலையை தேடிக்கச் சொல்லுடீ!" என்றான். மேகலாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

அப்போது தான் வெளியே போயிருந்த கதிர் உள்ளே நுழைந்தான்.

"வாங்க தொர! நல்லா அப்பன் சம்பாத்தியத்தில துண்ணுப்புட்டு ஊர் சுத்திட்டு வர்றீங்களோ?" என்றான் எகத்தாளமாக. கதிருக்கு கோபத்தில் முகமெல்லாம் ஜிவு ஜிவு என்று சிவந்தது.

"இதோ பாரு! அப்பான்னு ஒரு மரியாதையில நா ஒன்னை எதுவும் பேசறதில்ல. அதுக்காக எப்பவும் நீ என்னைய மட்டமா பேசறதை பொறுத்துக்கினு போவேன்னு மட்டும் நினைக்காதே?" என்றான் கோபத்துடன்.

"வாடா! என்ன பண்ணுவே? அடிச்சுருவியோ? வா! நீயா நானா பார்த்துறலாம்!" என்று முஷ்டியை மடக்கிக்கொண்டு மல்யுத்த வீரன் போல தயாரானான் குமார்.

"வேணாங்க!" என்று தடுக்க முயன்ற மேகலாவை ஒரே எத்து எத்த, அவள் ஹால் மூலையில் போய் விழுந்தாள்.

"அம்மா மேல கைய வச்சா ஒன்னைய சும்மா விடமாட்டேன்!" என்று ஆக்ரோஷமாக கதிர் குமார் பக்கம் பாய, மேகலாவுக்கு கதி கலங்கியது. எப்போதும் ஒரு கை ஓசையாக குமார் மட்டும் தான் ரகளை செய்வான். இப்போது இவனும் ஆரம்பித்திருக்கிறானே?

சட்டென்று குமார் சமையலறைக்கு ஓடிப்போய் அரிவாளைக் கையில் எடுக்க, கதிர் தாங்க முடியாத கோபத்தில் அரிவாள்மணையை எடுத்து வந்தான். இருவரும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க மல்யுத்த களத்தில் நிற்கும் வீரர்களைப் போல ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றனர்.

திடீரென்று "டேய்! உன்னை என்ன செய்கிறேன் பார்!" என்று கத்திக் கொண்டு குமார் அரிவாளை நீட்டிக் கொண்டு கதிர் மேல் பாய, கதிரும் ஆக்ரோஷத்தோடு தன் கையில் உள்ள அரிவாள் மணையை அப்பாவைப் பார்த்து ஓங்கினான். உடலெல்லாம் பதற நின்று கொண்டிருந்த மேகலாவுக்கு யாரை எப்படி தடுப்பது என்றே புரியவில்லை.

திடீரென்று 'மியாவ்' என்று குரல் கொடுத்துக் கொண்டே அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி அவர்கள் வைக்கும் பாலைக் குடிக்க வரும் பூனைக்குட்டி கதிரின் காலருகே வர, கதிரின் கவனம் தந்தையின் மீதிருந்து ஒரு நொடி விலகியது. சட்டென்று அந்த இடத்திலிருந்து சற்றே நகர்ந்து பூனைக்குட்டி செல்ல வழி விட்டான். கதிர் நகர்ந்ததால், குமார் தான் பாய்ந்த வேகத்தில் நிலைகுலைந்து சோஃபாவின் முனையில் மண்டை பெருத்த சப்தத்தோடு இடிபட அப்படியே கீழே விழுந்தான். தலையிலிருந்து ரத்தம் வழிந்து தரையில் ஓட ஆரம்பித்தது.

அரிவாள்மணையை தூக்கிப் போட்டு விட்டு கதிர் ஓடி வந்து அப்பாவின் தலையைத் தூக்கி மடியில் வைத்துக் கொள்ள, மேகலா சட்டென்று ஒரு துண்டை கிழித்து தலையிலிருந்து வழிந்த ரத்தத்தை துடைக்க ஆரம்பித்தாள். துணியில் ஐஸ் கட்டியை வைத்து தலையில் ஒத்தடம் கொடுக்க ரத்தம் வழிவது குறைய ஆரம்பித்த்து. சற்று நேரம் அங்கே நிசப்தம் நிலவியது. அந்த நிசப்தத்தில் டீவி செய்தி உரக்கக் கேட்டது.

"குடித்து விட்டு போதை தலைக்கேறி வீட்டுக்கு வந்த கணவன் ஆத்திர மிகுதியில் மகனை சண்டைக்கு இழுத்து அவனுக்கும் ஆத்திரத்தை கிளப்பியதையும், இருவரும் வெறியில் கைக்குக் கிடைத்ததை வைத்து ஒருவரையொருவர் அடித்துக் கொண்டதையும் பார்த்த அக்கம் பக்கத்தவர்கள் போலீசுக்குத் தகவல் சொன்னார்கள். ரத்த வெள்ளத்தில் அப்பாவும் பிள்ளையும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது போலீசுக்குத் தகவல் போய் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கே சிகிச்சை பலனளிக்காது இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்."

தன் கணவன், மகன் இருவரையும் ஒரே ஒரு நொடியில் பறிகொடுத்து விட்டு அந்த வீட்டுப் பெண்மணி, பொலம்பிப் பொலம்பி புரண்டு புரண்டு அழுவதை தொலைக்காட்சியில் செய்தியாகப் பார்த்தபோதே மேகலாவுக்கு உடம்பெல்லாம் நடுங்கியது.

"இங்கே இப்போ மட்டும் நடக்கக் கூடாதது நடந்திருந்தா நாமும் இதே மாதிரி டீவி தலைப்பு செய்தில வந்திருப்போம்டா கதிர்! போதையில இருப்பவங்களுக்கு பொறுமை இருக்காதுடா. கூட இருக்கிறவங்க தாண்டா பொறுமையா இருக்கணும்!"

மேகலாவுக்கு ஒரு நொடி குலை நடுங்கியது. கதிருக்கும் உடல் வெடவெடவென்று நடுங்கிக் கொண்டிருந்தது. தன் அருகில் ஓடி வந்த பூனைக் குட்டியை தன்னோடு சேர்த்து இழுத்துக் கட்டிக் கொண்டாள் மேகலா, "என் கண்ணே! எங்களை காப்பாத்தினியே ராசா!" என்று கண்ணீர் வழியும் கண்களோடு.

താങ്കൾ ഇഷ്ടപ്പെടുന്ന കഥകൾ

X
Please Wait ...