மழையில் கண்ணீர்

கற்பனை
5 out of 5 (13 )

மழையில் கண்ணீர்.

ஏதாவது சாப்பிடு கண்ணு என முப்பத்திரண்டு வயதான கனகா தனது பதினொரு வயது மகனான வாசனிடம் கிட்டத்தட்ட கெஞ்சினாள்.. கனகாவிற்கு வயதிற்கு ஏற்ற தோற்றம் கிடையாது.

ஐம்பது வயதை காட்டும் படியான தோற்றம்..

யாரோ உடுத்தி கழித்துப்போட்ட பழைய சேலையை அதன் விற்பனை இடத்தில் இருந்து வாங்கி கட்டியிருக்கிறாள்…

சில காலமாகவே அவளுக்கும் அவளுடைய மகனுக்கும் பழைய துணிகளை விற்பனை செய்யும் கடை தான் அவர்களின் புத்தாடை கனவை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது…

மிக ஒல்லியான தேகம் எண்ணெயை பார்த்து பல நாட்கள் ஆகிவிட்ட கூந்தல்… பாதம் முழுவதும் வெடிப்புகளாலும் செம்மண்களாலும் நிறம் மாறிப் போய் இருக்கிறது .

கைகளோ காப்பு காய்க்கப்பட்டு கறுத்து கிடந்தது…அக்கைகளால் தரையில் பாய் விரித்து படுத்திருந்த மகனின் தலையை பாசமாக நீவியபடி கேட்டுக்கொண்டிருக்கிறாள் அந்த ஏழைத்தாய்.

வாய்க்கு ஏதுவுமே பிடிக்கலம்மா…சாப்ட ஏதாவது வாங்கித்தாயேன் எனக்கேட்கும் மகனிடம் எப்படி சொல்வாள்.

கடந்த ஒரு வாரமாக விடாத பெய்த கனமழையால் அவள் வேலை செய்யும் கட்டிட வேலை நடைபெறாமல் இருக்கிறது… வேலையும் இல்லாமல் வருமானமும் இல்லாமல் காய்ச்சல் வந்த மகனுடன் அல்லாடி கொண்டிருக்கிறாள்.

முன் தினம் வாசனை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வந்தவளால் மகனுக்கு வாய்க்கு ரூசியாக சமைத்து கொடுக்க கூட கையில் காசு கிடையாது.

கணவனும் கட்டிட வேலை செய்தவன் தான். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு கட்டிடம் கட்டுவதற்காக சாரம் கட்டும் பொழுது காலிடடி கீழே விழுந்தவன் எழவே இல்லை..

இடுப்பில் பலமாக அடி…அளவுக்கு அதிகமான ரத்த இழப்பு…ஏழை என்ற ஒரே காரணத்தால் உடனடியாக கிடைக்காத மருத்துவ உதவி என பல காரணங்கள் அவனின் உயிர் துடிதுடித்து பிரிந்தது.

இழப்பிடு என கட்டுமான நிறுவனம் எதையும் கொடுக்கவில்லை அதற்கு பதிலாக கனகாவிற்கு சித்தாள் வேலையை பரிந்துரைத்தது.

அதுவரை வீட்டில் இருந்து மகனை பொறுப்பாக கவனித்துக் கொண்டிருந்த கனகா கணவனின் மறைவிற்குப் பிறகு கணவனின் கட்டிடத் தொழிலில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டாள்.

பெண் என்பதால் சொற்ப வருமானம் மட்டுமே கொடுக்கப் பட்டது.. ஆனால் வேலையை மட்டும் ஆண்களுக்கு நிகராக வாங்கிக் கொண்டார்கள்…அருகில் இருக்கும் அரசு பள்ளியில் மகனை அனுப்பிவிட்டு கட்டிடவேலையை செய்து வந்தவளுக்கு கடந்த ஒரு வாரமாக வேலையும் இல்லை.

சொந்த பந்தம் யாருடைய உதவியும் இல்லாமல் கணவனின் ஆதரவும் இல்லாமல் தனி ஒருத்தியாக மகனையும் வளர்த்துக் கொண்டு வீட்டுச் செலவுகளையும் கவனித்துக் கொண்டு போராடிக் கொண்டிருப்பவளால் மகனிடம் வெளிப்படையாக கூற முடியவில்லை.

தாய்க்கு வேலை இல்லை அதனால் வருமானமும் இல்லை உன்னுடைய சிகிச்சைக்கு கூட என்னால் பணம் எடுத்து வைக்க முடியவில்லை இப்படி இருக்கும் பொழுது ஏதாவது வாங்கிக் கொடு என்று கேட்டால் என்ன செய்வது..

கடந்த மாதம் வாங்கிய ரேஷன் பொருட்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டது இருப்பது கொஞ்சமாய் அரிசி மட்டுமே… அதை வைத்து இன்று கஞ்சி வைத்தாயிற்று இனியும் வேலையில்லை என்றால் மகனும் தானும் வயிற்றில் ஈரத்துணியை தானே போட்டு உறங்க வேண்டும் என்று பலவாறு கவலை கொண்டாள்.

வெளியே மழையும் விட்ட பாடு இல்லை அவளைப் போல கட்டிட வேலை செய்பவர்கள் எல்லாம் ஒன்றிணைத்து ஒரு காலி இடத்தை வாடகைக்கு எடுத்து சிறு சிறு குடிசைகளாக போட்டிருக்கும் அந்த குடிசைப் பகுதிக்குள்ளும் இப்பொழுது நீர் வர ஆரம்பித்துவிட்டது.

இன்னும் ஒரு நாள் இதே போல் மழை பெய்து கொண்டிருந்தால் இவர்களுக்கு தங்குவதற்கும் இடமும் இல்லை… எங்கு போவது என்ன செய்வது என்று புரியாமல் காய்ச்சலில் கிடக்கும் மகனை கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அப்பொழுது பக்கத்து குடிசையில் வசிக்கும் பாக்யா வந்து கனகாவை அழைக்கவும் என்னக்கா என கேட்டபடியே குடிசை வாசலில் தலை இடிக்காதவாறு குனிந்து வெளியே வந்தாள்.

என்ன கனகா பையனுக்கு காய்ச்சல் பரவாயில்லையா எனக் கேட்கவும்..

ம்ம் பரவால்லக்கா காய்ச்சல் கொஞ்சம் விட்ட மாதிரி இருக்கு ஆனா ரெண்டு நாளா புள்ள எதுவுமே சாப்பிடல ஏதாவது வாங்கி கொடுன்னு கேட்கிறான் வாய்க்கு ருசியா சமைச்சு போடவும் வீட்டுல ஒன்னும் இல்ல வாங்கி கொடுக்கவும் கையில காசு இல்ல கா என்ன செய்யறதுன்னு தெரியல ஏதாவது பணம் காசு இருந்தா உதவி பண்ணுங்க அக்கா…

மழை விட்டதும் வேலைக்கு போன முதல் வார சம்பளத்திலேயே உங்க காசை திருப்பி கொடுத்திடறேன்‌. என கண்களின் நீருடன் கேட்டாள்.

அவளை பார்த்து மனம் உருகிய பாக்கியாவோ என்ன கனகா என் நிலைமையும் உனக்கு தெரியும் தானே..

நாம எல்லாரும் ஒரே வேலை செஞ்சு பொழைக்கிறவங்க தானே… மழை வர்றதால எந்த கட்டிடத்திலும் வேலை நடக்கல எல்லாரும் உன்னை மாதிரி தான் இருக்கோம்…

என்கிட்ட தற்சமயம் பணம் இல்ல… ஆனா உனக்கு என்னால உதவி வேணா பண்ண முடியும்…

நம்ம என்ஜினியரோட சொந்தக்காரங்க வீட்டில ஏதோ ஃபங்ஷனாம்…அதனால அவங்க வீட்டை சுத்தம் பண்ண ஆள் கூப்பிட்டிருக்காங்க…

சின்ன வீடுதானாம் பெருசா வேலை இருக்காதுன்னு சொன்னாங்க…

வீட்டை சுத்தி கூட்டி.. தொடச்சி ..

சாணி போட்டு மொழுகி விட்டா ஐநூறு ரூபாய் சம்பளம் தரேன்னு சொன்னாங்க….இப்போ போனா மதியத்துக்குள்ள வந்திடலாம்னு சொன்னாங்க…அதுக்கு தான் இப்போ போய்கிட்டு இருக்கேன் வேணும்னா ஒன்னு பண்ணு அந்த வேலையை வேணா நீ போய் செஞ்சு காசு வாங்கிட்டு வா நீ வேலை முடிஞ்சு வர்ற வரைக்கும் உன் பையனை நான் பாத்துக்கறேன்…

கைல காசை வாங்கிட்டு உன் பையனுக்கு வேணுங்குறதையும் வாங்கிட்டு சீக்கிரமா வா… இதைத் தான் இப்போதைக்கு என்னால பண்ண முடியும் என்று சொல்லவும்…

சந்தோஷமாக கையெடுத்து கும்பிட்ட கனகா அக்கா ரொம்ப நன்றி இதை என்னைக்கும் மறக்கமாட்டேன் விலாசம் தாங்ககா நான் இப்போவே போய் பாக்கறேன் என்று விலாசத்தை பெற்றுக்கொண்டவள்…புடவையை மீண்டும் சரியாகக் கட்டி கலைத்திருந்த கூந்தலை எல்லாம் ஒன்றாக சேர்த்து உச்சி கொண்டை போட்டுவிட்டு முகத்தை கழுவி அழுத்தி துடைத்தவள் கண்ணாடி பார்க்காமலே நெற்றியில் ஒரு ஸ்டிக்கர் பொட்டையும் வைத்துக்கொண்டு கிளம்ப தயாரானாள்.

கீழே படுத்திருந்த வாசன் தாய் கிளம்புவதை பார்த்து விட்டு அம்மா எங்கம்மா போற என மெல்லிய குரலில் கேட்டான் .

தம்பி அம்மா உனக்கு கடைக்கு போயி சாப்பிடறதுக்கு ஏதாவது வாங்கிட்டு வரேன்.. கிண்ணத்துல கஞ்சி எடுத்து உன் தலைக்கு பக்கத்துல வச்சிட்டு போறேன் சொம்புல தண்ணியும் வச்சிருக்கேன்.. அப்படியே மெதுவா எழுந்திரிச்சு குடிச்சிட்டு படுத்து தூங்கு ராசா…என்றவளின் கைகளைப் பிடித்த வாசன் ம்மா எங்கேயும் போகாதமா என் கூடவே இரும்மா ..எனக்கு எதுவும் சாப்பிட வேணாம் என குரல் கமர கூறினான்.

கண்ணு ஒரு ரெண்டு மணி நேரம் தான் சாமி…ஒரு பக்கம் வேலைக்கு போறேன்…போகும் போது தடுக்காத ராசா…வேலை முடிஞ்சதும் ஓடியே வந்துடறேன்…உனக்கு வரும்போது சாப்பிட பழம் வாங்கிட்டு வரேன்.

வேலைக்காம்மா…சரி போங்க…வரும் போது காரமா சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வாங்கம்மா…

ராசா…சொன்னதும் புரிஞ்சிகிட்டியே…என்னை பெத்தவன்டா நீ ‌..என கண்கலங்கியவள்…அவனது கேசத்தை வருடியபடி… வரும் போது மிச்சரும் காரசேவும் சேர்த்து வாங்கிட்டு வரேன்… தூங்குய்யா…நீ முழிக்கறதுக்குள்ள அம்மா வந்துடறேன் என்று கூறியபடி தூறும் மழையையும் பொருட்படுத்தாமல் பாக்யா கொடுத்த விலாசத்தை கையில் பிடித்தபடி அந்த வீட்டை நோக்கி சென்றாள்.

சொன்ன விலாசத்தை அரை மணி நேரத்திற்குள்ளாகவே கண்டுபிடித்து வாசலில் சென்று நிற்றவள் வீட்டை பார்த்து பிரமித்து விட்டாள்.

அது ஒன்றும் சின்ன வீடு எல்லாம் இல்லை மிகப்பெரிய பங்களா இந்த வீட்டு எப்படி இரண்டு மணி நேரத்தில் வேலையை முடிப்பது என்ற கவலையும் கூடவே வந்தது.

ஆனாலும் மகனுக்காக ஏதாவது ஒன்றை செய்ய வேண்டுமே…அதனால் பணியைப் பற்றி கவலை படாமல் கேட்டிற்கு வெளியே கால் மணி நேரத்திற்கு மேலாக நின்று வாட்ச்மேனிடம் அனுமதி பெற்று அதன் பிறகு உரிமையாளரை சந்தித்து வேலையை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாகி விட்டது.

அதன் பிறகு வேகவேகமாக அவர் சொல்லும் வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்… பாக்யா சொல்லி அனுப்பியது என்னமோ வீட்டைச் சுற்றிலும் கூட்டி சாணம் போட்டு விடுவது மட்டும்தான்…

ஆனால் அந்த வீட்டின் பெண்மணியோ வீடு முழுவதும் ஒட்டடை அடிக்க வைத்து… எல்லா அறையையும் சுத்தம் செய்ய வைத்து வைத்து ஒரு வழியாக மாலை ஐந்து மணிக்கு மேல் தான் வேலையை முடிக்க வைத்தார்.

மதியம் பேச்சுக்கு கூட சாப்பிடுகிறாயா என அந்த பெண்மணி கேட்கவும் இல்லை… இவளும் பசிக்கிறது ஏதாவது சாப்பிட தாருங்கள் எனக் கேட்கவில்லை.

இடையில் வீட்டின் பின்புறம் இருந்த குழாயில் தண்ணீரைப் பிடித்துக்குடித்து பசியாற்றிக் கொண்டாள்.

நினைவு முழுவதும் மகனைப் பற்றி மட்டுமே இருந்தது… எப்பொழுது வேலை முடியும்.

இன்றைய நாளின் கூலியை கொடுப்பார்கள் அதை எடுத்துச் சென்று மகனுக்கு ஆசைப்பட்டதை வாங்கி கொடுக்கலாமே என ஒவ்வொரு நிமிடத்தையும் வேலைக்கு நடுவே மிகவும் கடினப் பட்டு கடத்தினாள்.

ஒரு வழியாக அவர் கொடுத்த அத்தனை வேலையையும் செய்து முடித்தவள் கடைசியாக குழாயை திருகி,கை,கால்கள் அலம்பிவிட்டு முகத்தை கழுவி சேலை முந்தானையால் துடைத்தபடியே வாசலில் வந்து நின்றாள்.

நடுத்தர வயது பெண்மணியும் வாசலுக்கு வந்து சொன்ன வேலையெல்லாம் முடிச்சிட்டியா என கேட்கவும்…

முடிஞ்சுதுங்கம்மா…நேரமாச்சி வீட்டுக்கு போகணும் கூலி கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும் என்று தயங்கியபடி கேட்கவும்…

ம்ம்…இரு வரேன் என முகத்தை வெட்டியபடி உள்ளே சென்றார் .

திரும்பி வரும் பொழுது இரண்டு இருநூறு ரூபாய்

நோட்டுக்களை கனகாவின் கையில் கொடுக்க அதை பார்த்துவிட்டு அம்மா ஐநூறு ரூபாய்னு பாக்கியாக்கா சொன்னாங்க‌..

நீங்க நானூறு ரூபாய் தான் தர்றீங்க எனக்கேட்கவும்…

நீ செஞ்ச வேலைக்கு இதுவே ஜாஸ்தி…என்ன வேலை செஞ்சுட்டனு வாய் கூசாம ஐநூறு ரூபாய் சம்பளம் கேட்கற…

காலையிலிருந்து ஒரு வேலையும் நடக்கல… வீட்டை சுத்தி பத்து நேரம் நடந்திருக்க அவ்வளவுதான் வேற என்ன செஞ்ச என கேட்கவும்.

அதிர்ச்சி அடைந்தவள் வீட்டைச் சுற்றிலும் கண்களை ஓடவிட்டாள்.. அவ்வளவு சுத்தமாக வேலையை செய்திருந்தாள்….அவள் போட்டுவிட்ட சாணம் அடைமழையில் கூட ஒருவாரம் வரை தாக்கு பிடிக்கும் அவ்வளவு நேர்த்தியாக வேலையை முடித்திருக்கிறாள்..

இருந்தும் வேலை சரியில்லை என அவர் சொல்லவும் அந்த மலைத்தூரலையை மிஞ்சி அவளது கண்களில் நீர் துளித்தது…

கண்களில் நீருடனே ம்மா கொஞ்சம் பாத்து போட்டு குடுங்கம்மா…ரெண்டு மணி நேரத்துல வேலை முடியும்ன்னு வந்தேன்…ஆனா நேரம் பொழுதாயிடுச்சி… அவ்வளவு வேலை செஞ்சிருக்கேன்… கூலியை குறைக்காம குடுங்கம்மா என கிட்டத்தட்ட கெஞ்சும் குரலில் கேட்கவும் ..

நீ செஞ்ச வேலைக்கு சம்பளத்தை சேர்த்து குடுன்னு என்கிட்டயே திமிரா கேட்கிறாயா? உன்ன மாதிரி ஆளுகளை எல்லாம் என் வீட்டுக்குள்ள விட்டதே பெருசு… ஆனா நான் உன்னை உள்ள விட்டு வேலையே செய்ய சொல்லி இருக்கேன்…

பின்வாசல் வழியா வந்துட்டு போற உன்னை எல்லாம் முன் வாசல் வழியா வீட்டுக்குள்ள விட்டேன் இல்லையா அதனாலதான் இவ்வளவு திமிரா நீ என்கிட்ட பேசிட்டு இருக்க…இப்போ குடுத்ததை வாங்கிட்டு வெளியே போறியா இல்ல…கையில இருக்கறதை பிடிங்கிட்டு வாட்ச்மேனை விட்டு வெளியே தள்ளவா என அந்த பெண்மணி கேட்கவும்.

பயந்த கனகா அவர் கொடுத்த நானூறு ரூபாயை உள்ளங்கைக்குள் அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு தெரியாமல் பேசிட்டேன்மா என்னை மன்னிச்சிடுங்க… நான் போயிட்டு வரேன் வேற ஏதாவது வேலை இருந்தாலும் சொல்லி அனுப்புங்கம்மா நானே வந்து செஞ்சு கொடுக்கறேன் என கலங்கிய கண்களை புடவை முந்தானையால் துடைத்தபடியே வேகவேகமாக அங்கிருந்து வெளியேறினாள்.

வெளியே வரும் வரை மட்டும்தான் நூறு ரூபாய் ஏமாற்றி விட்டாரே என்ற கலக்கம் இருந்தது…

அதன் பிறகு கையில் இருந்த நானூறு ரூபாய் அவளுக்கு மிகப்பெரிய தொகையாக தெரிந்தது…வீட்டில் இருந்திருந்தால் இது கூட அவளுக்கு கிடைத்திருக்காதே…பாக்யாவிற்கு மனதார நன்றி கூறிவிட்டு மகனுக்கு தின்பண்டம் வாங்குவதற்காக கடையை தேடியபடி ரோட்டில் ஓரமாக நடந்தாள்.

தூறல் மலை அப்படியே தான் இருந்தது ஆனால் அது எதையும் பொருட்படுத்தாமல் தள்ளுவண்டி வியாபாரிகள் அவர்களின் வியாபாரத்தை செய்து கொண்டிருந்தார்கள்.. அதில் பழக்கடையும் அடக்கம்.

பழ வண்டியின் முன்பு நின்றவள் அங்கிருந்த பழங்களை ஆசையாக கண்களில் வருடினாள்… அங்கிருக்கும் பழவகைகள் அனைத்தையும் அவளால் வாங்க முடியாது ஆனால் சிறிதளவு கண்டிப்பாக வாங்க முடியும்.

அண்ணே பழத்தோட விலை எப்படி என்று கேட்கவும்…

அவளது தோற்றத்தை கவனித்தவர்…விலை எல்லாம் சொன்னா அப்படியே கிலோ கணக்குல வாங்கிட போறியா இல்லல்ல உனக்கு என்ன வேணும் அதை சொல்லு என்று கேட்கவும் .

ஏன் அண்ணே கோவிச்சிக்கறீங்க…எங்களை மாதிரி ஆளுங்க‌.. உங்களை மாதிரி ஆளு கிட்ட தானே வந்து வெளிப்படையா விலை கேட்டு வாங்க முடியும் என கேட்டபடியே அங்கிருந்த பழங்களில் மகன் ஆசையாக உண்பதை தெரிந்து ஒவ்வொன்றாக பொறுக்கினாள்.

ஏய் எல்லாத்துலேயும் உன் கைய வைக்காத எது வேணும்னு சொல்லு நானே எடுத்து தரேன் என்று அவளை அதட்டவும் பயந்து பழத்திலிருந்து கைகளை எடுத்தவள் சரி அண்ணே நீங்களா பாத்து எல்லாத்தையும் ஒன்னு ரெண்டு வைங்க அப்படியே ஒரு சீட்டு வாழைப்பழமும் கொடுத்துடுங்க அண்ணே என்று கூறவும் வாய்க்குள் முணுமுணுத்தப்படியே ஆங்காங்கே சிறிது சிறிதாக அடிபட்டிருந்த பழங்களை எல்லாம் ஒரு கவரில் எடுத்துக்கட்டி அவளது கையில் திணித்து விட்டு இருநூறு ரூபாய் குடு எனக்கேட்டார்.

என்ன இருநூறு ரூபாயா என அதிர்ச்சியாக கேட்டாலும் அவர் கட்டிக் கொடுத்த பழங்களின் அளவைப் பார்த்து வாய் பேசாது கேட்ட பணத்தை கொடுத்தாள்…இனி நூறுகிராம் போல மிக்ஸரும் காரசேவும் அருகில் இருக்கும் அண்ணாச்சி கடையில் வாங்கிக்கொள்ளலாம் என மனதை தேற்றி கண்கொட்டாமல்.

மீதம் இருப்பது இன்னும் இருநூறு ரூபாய்… அந்தப் பணத்தில் இரண்டு கிலோ அரிசியையும் கொஞ்சம் பருப்பை வாங்கிக்கொண்டு வீடு சென்றால் ஒரு நான்கு நாட்களை ஓட்டி விடலாம்…

அதற்குள் மழையும் விட்டுவிடும் அதன்பிறகு வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டால் இயல்பான வாழ்க்கை வந்துவிடும் என நினைத்தபடியே எதிர் புறமாக இருந்த மளிகை கடையை நோக்கி அடி எடுத்து வைத்தாள்.

குண்டும் குழியுமாக இருந்த சாலையில் மழைநீர் தேங்கி கிடந்தது…எது பள்ளம் எது மேடு என்று கூட தெரியவில்லை…மேடு என்று நினைத்து தேங்கி கிடந்த தண்ணீரில் காலை தூக்கி வைக்க அந்த இடத்தில் இருந்ததோ பள்ளம்… இவள் கால் ‌வைத்த வேகத்தில் கால் மடிந்து கையில் இருந்த பழப்பையுடன் கீழே சரிந்தாள்.

பழங்கள் சேற்றில் விழுந்துவிடக் கூடாதே என்ற அனிச்சை செயலால் அதை பிடிப்பதாக எண்ணி நன்றாகவே சேற்றில் விழுந்தாள்…விழுந்த வேகத்தில் பழம் வைத்திருந்த கவர் அறுந்து பழங்கள் சாலை எங்கும் உருண்டோட தொடங்கியது .

ஐயோ என் பையனுக்கு வாங்கின பழம் வீணாப்போகுதே.. எனக் கதறிய படியே சாலையில் கிடந்தவள்… எழக்கூட திராணியில்லாமல் தவழ்ந்த படியே பழங்களை எல்லாம் பொறுக்கி புடவை முந்தானையில் சேகரிக்க ஆரம்பித்தாள்.

அப்போது ரோட்டில் வந்த நான்கு சக்கர வாகனம் இவள் தரையில் கிடந்து பழங்களைப் பொறுக்குவதை கவனித்து அதிர்ந்து வாகனத்தை நிறுத்தும் முன் ஒருபக்க சக்கரம் ஏறி இறக்கியது…

அம்மா எனக்கத்தியபடி டயருக்கடியில் மல்லாக்க விழுந்தவளின் மடியில் இருந்த பழங்கள் அவளின் ரத்தத்தில் குளிக்க ஆரம்பித்தது.

புடவை முந்தானையில் முடி போட்டு வைத்திருந்த இருநூறு ரூபாய் தண்ணீரில் ஊறியது .

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நடந்து முடிந்து விட்ட நிகழ்வால் அங்கிருந்த மக்கள் அனைவருமே சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர்.

வாகனத்தை ஒட்டி வந்தவரோ பயந்து அங்கிருந்து ஓட ஆரம்பித்தார்..

சிலர் அதை கவனித்து அவரை துரத்த ஆரம்பித்தனர்.சிலரோ அரசாங்கம் போட்ட சாலையின் லட்சணத்தைப் பாருங்கள் என புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்புவதற்க்கான ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஓரு சிலர் ஐயோ பாவம் இந்த மழை வந்தா எத்தனை பேர் இப்படி விழுந்து சாகுறாங்க என கூறியபடி கடந்து சென்றனர்.

அவளுக்கு சற்று முன்பு பழத்தை கட்டிக் கொடுத்தவருக்கு தான் மனமே கேட்கவில்லை…பழங்களை எடுக்கும் பொழுது அண்ணே அந்த பழத்துல ஒண்ணு ஜாஸ்தியா வைக்கிறேன்… என் பையனுக்கு அது ரொம்ப பிடிக்கும் என்று சொன்னாளே அந்த பழம் இப்பொழுது வாகனத்தின் சக்கரத்துக்கு அடியில் அல்லவா கிடக்கிறது என்று ஆதங்கப்பட்டார்.

எங்கிருந்தோ ஓரு குரல் யாராவது ஒருத்தர் நூத்தி எட்டுக்கு ஃபோன் பண்ணுங்கப்பா என்று கேட்டது.

ஓரு முதியவர் மனம் கேளாமல் நூற்றியெட்டுக்கு ஃகால் செய்தார்… அங்கு கஸ்டமர் கேரில் வேலை பார்ப்பவர்கள் கேட்ட கேள்விகளை கேட்டு பதில் சொல்ல முடியாமல் பயந்தவர் மொபைல் ஃபோனை அணைத்துவிட்டு அங்கிருந்து நைசாக கிளம்பினார் .

காருக்கடியில் கிடந்த கனகாவின் உதடுகளோ என் பையன் எனக்காக வீட்டுல காத்துக்கிட்டு இருப்பானே… யாராவது என்னை காப்பாத்துங்களேன்….இல்லன்னா இந்த பழங்களையாவது என் பையன் கிட்ட எடுத்துட்டு போய் குடுங்களேன்… பாவம் காய்ச்சல்ல கிடக்கறான்…ராசா அம்மா வந்திடுவேன் ராசா… அம்மா வந்துருவேன் ராசா…பயப்படாத என வாய்க்குள் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே வார்த்தைகள் தேய்ந்தது.

வார்த்தைகள் மட்டும் தேயவில்லை அவளின் ஆன்மாவும் தான் காற்றில் கரைந்தது.

வீட்டிலோ அவளது மகன் தாயார் வைத்துச் சென்ற கஞ்சினை குடித்துவிட்டு தாய் எப்பொழுது வருவாள் என ஈரத்தரையில் கிழிந்த பாயில் தாயின் புடவையைப் போத்தி படுத்தபடி ஏக்கமாக வாசலையே பார்த்துக்கொண்டிருந்தான்…அவனது மனக்கண்ணில் தாய் வாங்கிவரும் பழங்களும் கார வகைகளும் வந்துவந்து போயிற்றே தவிர தாய் திரும்பி வரப்போவதில்லை என்பது தோன்றவில்லை..

வெயிலோ,மழையோ, புயலோ எது வந்தாலும் ஏழைகளின் பாடு என்றும் தீரப் போவதே கிடையாது…இயற்கை பேரழிவு எது வந்தாலும் முதலில் பாதிக்கப்படுவது என்னவோ ஏழைகள் மட்டும் தான்…

நம்மிடையே பல கனகாக்கள் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள்… ஒவ்வொரு சாலை விபத்திலும் ஒரு வாசன் பாதிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறான்…

சாலையை கடப்பவர்களும்,வாகனத்தை ஓட்டுபவர்களும், மட்டும் உயிரிழப்புக்கு காரணம் இல்லை…விபத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு முதலுதவி செய்யாமல் இருப்பவர்களும் தான்…பொதுமக்களும் அரசாங்கமும் அவரவர் கடமைகளைச் சரியாக செய்தாலே…எந்த வாசனும் அனாதையாக மாட்டான்…

முக்கியமாக இந்த சுயநலமான உலகில் கடவுள் அவரின் கடமையை சரிவர செய்தாலே கனகாக்கள் போன்ற ஏழைகளின் வாழ்வு சற்று மேம்பட ஆரம்பிக்கும்.

நன்றி

அகிலா வைகுண்டம்.

താങ്കൾ ഇഷ്ടപ്പെടുന്ന കഥകൾ

X
Please Wait ...