JUNE 10th - JULY 10th
'என்னெதிரே இரு இரயில்கள் நின்றுக் கொண்டிருந்தன. எத்தனை பெட்டிகள் என்று எண்ணிவிடலாம். ஆனால் நான் நின்ற இடத்திலிருந்து அது முடிவிலியாய் தெரிந்தது. அந்த நீண்ட பச்சை மரவட்டைகளுக்காக வருத்தப்படுவதா அல்லது கோவப்படுவதா என்று தெரியவில்லை. யாருக்காகவும், எதற்காகவும் கவலைப்படாமல் சாவிக் கொடுத்தால் கிளம்பிக் கொண்டே இருக்கிறது. தூரத்தில் ஓடிவரும் பயணிகளுக்காக இரயில்கள் எப்போதும் காத்திருந்ததில்லை. அது தன் பயணங்களில் சுற்றியிருக்கும் இயற்கைக் காட்சிகளை நின்று நிதானித்து இரசித்ததாய் நான் கவனித்ததில்லை. அதற்கென்று சுய விருப்புவெறுப்பு இல்லை. ஓட்டுநர் அதை இயக்குவதற்கு முடிவு செய்துவிட்டால் அது ஓடியே ஆக வேண்டும். அதனுடைய இயந்திர வாழ்க்கையில் யாரைப் பற்றியும் அது தனித்து கவலைப்பட்டதில்லை. அதனுடைய உணர்வுகளைப் பற்றியும் அதில் தினமும் பயணிப்பவர்களும் கண்டுக் கொண்டதில்லை. நேரத்திற்கு வந்தாலும், காலதாமதமானாலும் வசைகள் கிடைக்காமல் போனதில்லை. சரியான நேரத்திற்கு வந்தாலும், நேரத்திற்கு போய் சேர்ந்தாலும் அதற்கான பிறப்பின் கடமையாக அதை ஒதுக்கித் தள்ளிவிட்டனர். ஒரு கட்டத்தில் நானும் அந்த இரயில்களை போல மாறிவிடுவேனோ அல்லது ஏற்கனவே மாறிவிட்டேனோ?
அது தன் வாழ்வில் யாரையும் காப்பாற்றியதில்லை.தன்னில் அடிப்பட்டு இறந்த மனிதர்களையும்தான்.'
~~~
அவர்கள் பரனூர் இரயில்நிலையத்தை வாயிலை அடைந்தபோது கடைசி இரயில் அதன் தடத்தில் நின்று கொண்டிருந்தது. அவர்கள் நடையின் வேகத்தைக் கூட்டி ஓட ஆரம்பிக்க, இரயிலும் மெதுவாக தன் இயக்கத்தை துவக்கியது. இரயிலை பிடிப்பதற்கான இந்த ஓட்டம் அவர்களுக்கு பழக்கமான ஒன்றாகவே ஆகிவிட்டது. வேகவேகமாக நடைமேம்பால படிக்கட்டுகளில் இறங்கி எப்படியோ கடைசிப்பெட்டியில் தாவிக்கொண்டனர். அந்த பெட்டியில் ஏற்கனவே இருவர் மட்டுமே இருந்தனர். ஏறிய அனைவரும் ஆளுக்கொரு ஜன்னல் இருக்கைகளைப் பிடித்து ஹெட்செட்டுகளை மாட்டிக்கொண்டனர். சிலர் பிடித்தமான பாடல்களைக் கேட்டனர். சிலர் தான் பாதியிலேயே நிறுத்தியிருந்த படங்களைத் தொடர்ந்தனர். சிலர் தூங்கினர். ஹெட்செட்டில் பாடல்கள் கேட்டுக் கொண்டியிருந்த பாலா ஜன்னலுக்கு வெளியே இருளில் எதையோ தேடிக்கொண்டிருந்தான். நள்ளிரவு இருட்டு. இரண்டாம் ஷிப்ட் பணிமுடித்து இந்த ரயிலை பிடிப்பது மட்டும் கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் ஆகியும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த கடைசி 23.17 மணி இரயிலை விட்டுவிட்டால் பின்பு வீடு போய் சேர்வதற்கு அதிகாலை நான்கு மணி கூட ஆகலாம். அதனாலேயே இந்த இரயிலை பிடித்தே ஆக வேண்டும் என்று ஓடுவான். தூரத்தில் தெரிந்த விளக்குகளை ஏதோ யோசனையில் தொலைந்தவாறு பார்த்துக் கொண்டிருந்தான். ஓடியதில் அவன் இதயம் துடிப்பது இன்னும் கேட்டுக் கொண்டிருந்தது. முகத்தில் வீசிய சில்லென்ற காற்று அவன் கண்களை சொருகவைத்தது. அந்த காற்றிற்கு தன்னை ஒப்புக் கொடுத்தான்.
"டேய்... டேய் தம்பி" தன்னை யாரோ குலுக்கிறார்கள். அதிர்ந்து எழுந்தான். இறங்க வேண்டிய கடைசி இரயில் நிலையமான கடற்கரை இரயில்நிலையம் வந்துவிட்டது. அவரவர் தம் பைகளை மாட்டிக்கொண்டு இறங்கினர். அவன் ஹெட்செட்டை பைக்குள் திணித்து இறங்கி நடக்க ஆரம்பித்தான். நேரம் நள்ளிரவு 12.50. இதற்கு மேல் அதிகாலையில் தான் இந்த இரயில் புறப்படும். அவன் கண்கள் இன்னும் மயக்கத்திலேயே இருந்தன. அடுத்த அடியை கவனமாக எடுத்து வைத்தான். நடைமேடையிலிருந்து இரயில் ஐன்னலின் வழியே உள்ளேப் பார்த்தான். தூய்மைப் பணியாளர்கள் வேர்க்கடலை, சுண்டல் பொட்டலங்களையும் இதர குப்பைகளையும் பெருக்கிக் கொண்டிருந்தனர். அந்த இருக்கைகளில் அப்படியே கண்களை மூட வேண்டும் என்றிருந்தது. ஆனால் வெளியே ஷேர் ஆட்டோ அவனுக்காகக் காத்திருக்காது. இந்த கடைசி இரயிலின் பயணிகளுக்காக சில ஷேர் ஆட்டோக்கள் காத்திருக்கும். எவ்வளவு பயணிகளை நிரப்ப முடியுமோ நிரப்பி அத்தோடு தன் கடைசிப் பயணத்தை முடித்துக்கொள்ளும். இதைத் தவறவிட்டால் வேறொரு ஷேர்ஆட்டோ பிடிப்பதற்கு நீண்டநேரம் காத்திருக்க வேண்டும்.
அவன் முன்னால் சென்றுக் கொண்டிருந்த கூட்டம் ஓரிடத்தில் தண்டவாளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவன் அந்த கூட்டத்தை விலக்கிப் பார்த்தான். மனித உடலொன்று தண்டவாளத்தின் குறுக்காக கிடந்தது. அதன் காலில் இரயில் ஏறியிருந்தது. ஒவ்வொருவரும் தங்கள் பங்கிற்கு பார்த்துவிட்டு மெதுவாக நகர்ந்தனர். அவனும் நகர்ந்தபோது பின்னால் ஒரு குரல் அவசரமாய் கத்தியது.
"மூச்சு இருக்கு…. நெஞ்சு எழும்புது"
மற்றவர்களுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து கொண்டுதான் இருந்தது. அவனும் நடப்பதை நிறுத்தவில்லை, ஆனால் தயக்கம் இருந்தது, எண்ணங்களில் தடுமாறினான். அவனுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்றிருந்தது. ஆனால் அவனுக்காக வெளியே இருக்கும் ஷேர் ஆட்டோ காத்திராது. சற்று தொலைவு வந்து விட்டு திரும்பிப்பார்த்தான். இறுதியில் மூன்று பேர் மட்டும் இருந்தனர். அதில் அவனுடைய தொழிற்சாலையை சேர்ந்த ஒருவனும் இருந்தான். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். ஆட்டோவில் ஏறி வீடு சேரும்வரை தனக்குத்தானே கற்பித்துக்கொண்ட நியாயத்தை வெறுத்தான்.
~~~
வெறுமனே எதுவும் செய்யாமல் பாயில் உட்கார்ந்திருந்தான். என்னென்னவோ எண்ணங்கள் அவனுக்குள் ஓடிக்கொண்டிருந்தன. எதிலுமே நிலையாக நிற்காமல் மனம் தாவிக்கொண்டேயிருந்தது. அவன் வேலைக்குக் கிளம்ப வேண்டும். ஆனால் அசையாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான். தலையைத் தூக்கி நேரத்தைப் பார்த்தான். வினாடி முள் ஓய்வில்லாமல் அதே வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது. அதை சிறிதுநேரம் பார்த்துக் கொண்டேயிருந்தவன் அப்படியே பாயில் கவிழ்ந்தான். கண்களை மூடிக்கொண்டான். ஆத்மசுகமாய் இருந்தது. தூக்குத்தண்டனை கைதியின் கடைசி ஆசை நிறைவேறுவதைப் போல உணர்ந்தான். அப்படியே இருந்துவிட விரும்பினான். அவன் தூங்கவில்லை. கண்களை மூடிக்கொண்டு அந்த இடத்தில் இல்லாமல் இருக்க முயன்றான். எந்த அவசரமும் இல்லை. அந்தவினாடி முள் யாருக்கும் தெரியாமல் ஓடுவதை நிறுத்தியது. அவன் கண்களை திறந்து அதன் ஓய்வைக் கெடுக்க விரும்பவில்லை. எங்கும் போய் சேர வேண்டிய அவசரம் அவர்கள் இருவருக்குமே இல்லை. அவன் லேசாக ஆரம்பித்தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் காற்றில்கூட மிதப்பான். ஆனால்,
"என்ன பாலாம்மா, புது ப்ரிட்ஜ் வாங்கிட்டீங்க போல?"
அவன் வீட்டு வாசலுக்கு வெளியே அவர்கள் பேசிக் கொண்டிருந்தது தெள்ளத் தெளிவாய் அவன் காதருகில் கேட்டது.
"ஆமா, ஆத்ர அவசரத்துக்கு வச்சிக்க, கொள்ள ஒரு ப்ரிட்ஜ் இல்லாம எத்தன நாள் இருக்குறது?"
"அதுவும் சரிதான்."
"ரெண்டு டோர் வைச்சது. கரெண்டு கம்மியா பிடிக்குமாமே. வா... வந்துபார்"
பெருமிதமாய் சொல்லிக்கொண்டிருந்த அவன் அம்மாவின் முகம் கண்முன்னால் தெரிந்தது.
"இல்லே இருக்கட்டும் பாலாம்மா. பையன் வேலைக்கு போக ஆரம்பிச்ச உடனே ஒவ்வொரு கஷ்டமா போகுது போல. நல்லது. நீங்களும் எத்தனை வருஷம்தான் தனியாளா கஷ்டப்படுவீங்க"
"கடவுள் இப்போதான் கண்ண தொறக்க ஆரம்பிச்சிருக்கான். மாசாமாசம் ஆயிரம் பிடிப்பாங்களாம். அவன் சம்பாதிக்கிறதுனால முடியுது. என் சம்பாத்யத்துல இதுலாம் முடியுமா?."
"ஓ…. இ.எம்.ஐ. ஆஹ்!... அதுவும் சரிதான்"
எழுந்து கொண்டான். சோம்பல் எல்லாம் நீங்கிவிட்டது. வேகவேகமாய் பாத்ரூமிற்கு சென்று ப்ரெஷ்ஷில் பேஸ்டை வைத்து துலக்க ஆரம்பித்தான். எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு அவன் பாத்ரூமிலிருந்து வெளியே வந்தபோது வினாடிமுள் முன்பை விட வேகமாய் சுற்றுவது போல் தோன்றியது.
~~~
தினசரி ஆறு மணிநேரத்திற்கும் குறையாமல் பயணம் செய்கிறான். இந்த வாரம் அவனுக்கு முதல் ஷிப்ட் அளிக்கப்பட்டிருந்தது. காலை 3.55க்கு முதல் இரயிலைப் பிடித்து அதற்கான தூக்கத்தை இப்போது வீடு திரும்பும் வேளையில் சமன் செய்து கொண்டிருந்தான். ஜன்னல் கம்பிகளில் தலையை சாய்த்து கண்களை மூடினான். இரயில் குலுங்குவதில் அவன் தலை மேலெழும்பி மீண்டும் கம்பிகளின் மேல் விழுந்தது. வலுக்கட்டாயமாக கண்களை மூடியபடியே தலையை முட்டுக்கொடுத்தான். இந்த குலுங்களுக்கெல்லாம் கண்களைத் திறந்து அவன் எதிரே இருக்கும் காதல் ஜோடியின் கொஞ்சல்களை பார்க்க அவன் விரும்பவில்லை. இறங்கும் வரை கண்களைத் திறக்கக் கூடாது என்ற முடிவில் இருந்தான். இதுதான் நேரம் என்று அவன் கைப்பேசி சிணுங்கியது. அவன் கல்லூரி நண்பன் அழைத்துக் கொண்டிருந்தான்.
எடுத்து "ஹலோ" என்றான்.
"மாமே! எப்பிடி இருக்கே?"
"நல்லாயிருக்கேன்டா… நீ எப்படி இருக்கே"
"வேலைக்குச் சேர்ந்தப்பறம் ஒரு கால் பண்ணியாடா மாமா…மறந்துட்ட பாத்தியா?"
"இல்லை மச்சி…அப்படிலா இல்ல…"
"சும்மா சொல்லாதே…காலேஜ் முடிஞ்சப்பறம் ஒரு கால் பண்ணிருப்பியா… இப்போகூட நான்தான் பண்றேன்"
"டேய் இங்கே காட்டு…என்ன மறைக்கிறே…இப்போ காட்றீயா இல்லையா? காட்டுடுடு..." அவள் கோவமாய் கொஞ்சினாள். அவன் கைப்பேசியை பிடுங்க முயன்றுக்கொண்டிருந்தாள். "ஹேய்…அதெல்லாம் ஒண்ணுமில்ல. என்ன நம்பமாட்டியா?" அவனும் கனத்த குரலில் கொஞ்ச முயல,"மாட்டேன்….காட்டு" என்றாள்.
காதலர்களின் பேச்சு அவனை மெல்லியதாய் வெறுப்பேற்ற, பாலா தன் கைப்பேசியை காதில் சரியாய் வைத்து கம்பிகளில் தலைசாய்த்து கண்களை மூடிக்கொண்டான்.
"இல்லடா வேலைக்கு போறதுக்கும், வரதுக்குமே டைம் சரியா இருக்கு. முடில...வேலைய விட்டுடலாம்னு தோணுது"
"அப்படிலாம் பண்ணிடாதே மச்சி… வேலை கிடைக்கிறது எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா?"
"ம்..கரெக்ட் தான்.ஆனா இவ்ளோ தூரம்" அவன் முடிப்பதற்குள்,
"என் வீட்லலாம் இன்னும் கொஞ்சம் நாள் போயிருந்தா, சோத்துல வெஷத்த வைச்சிருப்பாங்க" சொல்லி அவனே சிரித்தான்.
அவன் சிரிப்பது வெளியே கேட்கிறதா என்று கைப்பேசியை ஒருமுறை காதிலிருந்து எடுத்துப் பார்த்தான். யாரும் கவனிக்கவில்லை. காதல் ஜோடிகள் கைகளில் ஏதோ விளையாடிக் கொண்டிருந்தனர். பொழுது சாய வானத்தின் ஓரங்களில் ஆரஞ்சு வண்ணம் பீறிட்டது. சுற்றியுள்ள கட்டிடங்கள் முடிந்தவரை அதை மறைத்தன. அவன் கண்களை மூடி 'ம்' கொட்டினான்.
"பெரிய கம்பெனி வேலைக்காதுனு வீட்டு பக்கத்துல இருக்குற லேத்துல சேர்ந்துட்டேன்"
"ம்"
"மாசம் ஏழாயிரம். ரெண்டு ஷிப்ட் "
"ம்"
"இருந்தாலும்"
அவன் அப்படியே புலம்பிக் கொண்டிருக்க,அவன் 'ம்' சேர்த்துக் கொண்டிருந்தான் ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும்.
அவள் 'சுண்டல்' என்று குரல் கொடுப்பதற்கு முன்பே அதன் மணம் எல்லோர் முன்னேயும் கமகமத்தது. அவன் கண்களை திறந்தபோது முழுவதுமாக இருட்டியிருந்தது. மழைக்கால மேகமூட்டங்கள் வானை சூழ்ந்திருந்தன. கிட்டத்தட்ட அனைவரும் வேலைகளை முடித்து பைகளை மடியிலோ மேல்தட்டுகளிலோ வைத்துக்கொண்டு எப்போது வீடு சேருவோம் என்று கைப்பேசிகளில் மூழ்கியபடி காத்திருந்தனர். சுண்டலிருந்த அன்னக்கூடை அவனருகில் வந்தது. காதல் ஜோடியின் நீள்இருக்கையின் ஆரம்பத்தில் உட்கார்ந்திருந்த நபர் இறங்குவதற்கு எழுந்திரிக்க அந்த இடத்தை கூடை பிடித்துக்கொண்டது. வேகவைத்த பட்டாணியில் மசாலா, துருவிய கேரட், வெட்டிய மாங்காய் துண்டுகள் கலந்து கொத்துமல்லி தூவிய சுண்டல், அழகாய் பழைய செய்தித்தாளில் கூம்பாய் மடிக்கப்பட்டிருந்தது. இன்னொருபுறம் வேகவைத்த வேர்க்கடலையில் தாளித்த கடுகு, கருவேப்பிலை போட்டும் மற்றும் சிவப்பரிசி புட்டும், முழு சிவப்பரிசியை வேகவைத்து அதில் தேங்காய் துருவி சர்க்கரை கலந்திருந்தது. கேட்போர் எல்லார்க்கும் எடுத்துக் கொடுத்து பொட்டலம் பத்து ரூபாய் என்ற வீதம் வாங்கினாள்.
"அக்கா ரெண்டு சுண்டல் கொடுங்க" என்று அந்த காதலன் கேட்டான்.
அவனுக்கு சுண்டல் பொட்டலங்களை எடுத்துக் கொடுக்க, பாலாவிற்கும் சுண்டல் வாங்க வேண்டும் என்று ஆசையாய் இருந்தது. அவனின் பலவீனமான வயிறு அதற்கு இடம் கொடுக்கவில்லை. பலமுறைபட்ட அவஸ்தைகளினால் பயணங்களில் வாங்கிச் சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்த்தான். ஆனால் அவன் களைப்பும், நாக்கில் உண்டான நப்பாசையும் தினமும் பார்க்கும் சுண்டலின் மேல் சேராக் காதலை உண்டாக்கியிருந்ததது. கிண்டி இரயில்நிலையம் வந்தவுடனே சுண்டல் விற்பவள் இறங்கி அடுத்த பெட்டிக்குள் ஏறுவதை ஐன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்தான். இரயில் 'ப்யூங்ங்ங்' என்று, கிளம்புவதற்கான முதல் சமிக்ஞையை தர இரயிலை பிடிப்பதற்காக முதிய தம்பதிகள் படிக்கட்டின் கூட்டநெரிசலில் அவசர அவசரமாய் தங்களால் கூடிய வேகத்தில் இறங்கினர். இரண்டாவது முறை சமிக்ஞை எழுப்பிவிட்டு மெதுவாக கிளம்பியது. அந்த ஆரம்பவேகத்தில் இளையோர் கண்டிப்பாக ஏறியிருப்பர் ஆனால் அவர்கள் இருவரும் மூச்சிறைக்க, கைகளை கோர்த்தபடி இரயில் கிளம்புவதைப் பார்த்து ஒருவருக்கொருவர் அசட்டுத்தனமாய் சிரித்துக் கொண்டனர். இரயில் அவர்களுக்கு கருணைப் பார்க்கவில்லை. தன்னுடைய கடமையில் அது அனாவசியமாய்பட்டது. அவனுடைய நண்பனுக்கு 'ம்' கொட்டியபடியே நடந்ததையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தான்.
~~~
இன்னும் கொஞ்ச நேரத்தில் அவன் வேலைக்குச் செல்வதற்கு இறங்க வேண்டும். பகல்வேளையில் தூக்கம் துண்டுப்பட்டுவிட இரவுப் பணியை எப்படி சமாளிக்கப் போகிறான் என்று தெரியவில்லை. வெளியே தூறல். அவனுக்கு அப்படியே எதையாவது போர்த்திக்கொண்டு உடலைக் குறுக்கி தூங்க வேண்டும் போலிருந்தது. இறங்குவதற்கு முன் குட்டித்தூக்கம் போட கண்களை மூடினான்.அவன் போன வாரம் மேலதிகாரியிடமிருந்து வாங்கிய திட்டுகள் நியாபகம் வந்தன. வாரத்திற்கு ஒரு முறையாவது திட்டுகள் வாங்கிக்கொள்வது அவனுக்கு பழக்கமாகிவிட்டது. திட்டு வாங்குவதற்காகவே அவன் அரைகுறை தூக்கத்தோடு இரயில்களை பிடிப்பதாய் தோன்றியது. தோன்றிய எல்லா விரக்தியையும் அடக்கிக் கொண்டான். அவன் எழுந்து வாசலுக்கு செல்ல முடிவெடுத்தான். வாசலில் உட்கார்ந்திருந்த நபர் குளிருக்கு வினோதமாய் கைக்கால்களை அசைப்பது போல் தோன்ற அவன் அந்த வாசலை விட்டு வேறொன்றில் போய் நின்றான். சிறிது நேரத்தில் அந்த நபரை சுற்றி சலசலப்பு ஏற்பட்டது. வலிப்பு ஏற்பட்டு கைக்கால்களை வேகமாய் உதறிக்கொண்டிருந்தார். இரயில் பரனூர் இரயில்நிலையத்தில் நின்றது. அவன் திரும்பிப் பார்த்தான். சில திருநங்கைகள் அந்த நபருக்கு உதவ முயற்சித்துக் கொண்டிருந்தனர். பலர் அப்படியே உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர். 'அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்' என்று இறங்கினான். இந்த முறை அவன் வருத்தப்படவில்லை என்பது அவனுக்கு புரிந்தது.
~~~
அரைமணி நேரம் தூங்கிவிட்டு கிளம்பலாம் என்று நினைத்தது பெரும் தவறாகிப்போனது, அவன் இரவுப்பணி செல்வதற்கான இரயிலைப் பிடிப்பதற்கு ஓடிக் கொண்டிருந்தான். மழை நன்றாக பெய்து கொண்டிருந்தது. ஆங்காங்கே தேங்கிய மழைநீர் போக்குவரத்து நெரிசலை இன்னும் கடினமாக்கியது. தொடர்ந்து எழுப்பப்பட்ட ஹார்ன் சத்தங்கள், ஷேர் ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருந்த அவனை தலைவலிக்குள்ளாக்கியது. ஆட்டோ ஓட்டுநர் கிடைக்கும் சிறுசிறு இடைவெளிகளிலெல்லாம் புகுந்துச் செல்ல முயல, அப்போது அடிக்கப்படும் திடீர் ப்ரெக்கால் முன்புறம் வந்து விழுந்துக் கொண்டேயிருந்தான். அவன் இந்த ரயிலை விட்டுவிட்டால் பரனூர் இரயில்நிலையத்திலிருந்து தொழிற்சாலைக்கு அழைத்துச் செல்லும் தொழிற்சாலை சிற்றுந்தை பிடிக்க முடியாது. அதன்பிறகு தொழிற்சாலைக்கு செல்வது மிகவும் கடினம். எல்லாமே சேர்ந்து அவன் பாதையில் தடையாய் வருகிறது என்று எண்ணினான். தனக்கு மட்டும் ஏன் இப்பிடியெல்லாம் நடக்கிறது என்று நொந்துக் கொண்டான். இந்த அவசரகதி வாழ்க்கைத்தான் இனி வாழ்நாள் முழுவதுமா என்று பயந்தான். இந்த சுழலிலிருந்து வெளியே வரவே முடியாது என்று தோன்றியது. இன்னும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே இருந்தன இரயிலை பிடிக்க. ஷேர் ஆட்டோ கலெக்டர் அலுவலகத்தின் அருகே முன்னேறிச் செல்ல முயன்று கொண்டிருந்தது. இரயிலை பிடித்து விடலாம் என்று அவனுக்கு ஒரு சிறிய நம்பிக்கை ஏற்பட்டது. இனி ஆட்டோவை நம்பினால் பயனில்லை என்று அங்கேயே இறங்கினான். காசைக் கொடுப்பதற்கு பாக்கெட்டைத் துழாவினால் ரூபாய் நோட்டுகள் ஈரத்தில் துணியோடு ஒட்டிக் கொண்டு கையில் வருவதற்கு முரண்டுபிடித்தது . எப்படியோ எடுத்து நோட்டை ஓட்டுநர் கையில் திணித்துவிட்டு ஓட ஆரம்பித்தான். கால்கள் சருக்கின. காற்று அடிக்கும் போதெல்லாம் அவன் அதிகமாகவே நனைந்தான். கடற்கரை இரயில்நிலைய வாசலை அடைந்த போது அவன் பயணித்த ஆட்டோக்காரர் மற்ற பயணிகளை இறக்கி அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தான். எதையோ சபித்துக் கொண்டு உள்ளே ஓடினான். அவன் ஏற வேண்டிய இரயில் இரண்டாவது நடைமேடையில் நின்றுக் கொண்டிருந்தது. அதன் முகப்பில் இருந்து வந்த வெளிச்சம் மழைத்துளிகளால் சிதறின. இதோ பிடித்துவிட முயல, அவன் ஈரமான கால்களும் தரையின் டைல்ஸூம் அவன் வேகத்தை மட்டுப்படுத்தியது. இரயில் கிளம்புவதற்கான முதல் சமிக்ஞை எழுப்ப, அவன் என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று வேகத்தைக் கூட்டினான். டிக்கெட் கவுண்டர்களைத் தாண்டி ஓடும்போது ஒருவருடைய தோள்பட்டையில் இடித்ததில் அவர் தடுமாறிக் கீழே விழுந்துவிட்டார். சில அடிகள் தாண்டியிருந்த அவன் திரும்பி அவரைப் பார்த்தான். அவர் எழ முயலாமல் கீழே விழுந்த பொருட்களை தரையில் தடவித் தேடிக் கொண்டிருந்தார். இரண்டாவது சமிக்ஞை இரயிலில் இருந்து வந்தது. அவரையும் இரயிலையும் திரும்பி திரும்பிப் பார்த்தான். நொடிப் பொழுதில் எல்லாம் முடிந்தது. ஓடிப் போய் "சாரி சார்" என்று அவர் பொருட்களை எடுக்க ஆரம்பித்தான். இரயில் வழக்கம் போல தன் பயணத்தை துவங்கியது.
"அவசரத்துல, ஓடும்போது கவனிக்கல. சாரி" என்றான்.
"பரவாயில்ல சார், இருக்கட்டும், எனக்கும் கண் தெரியாது" என்று முகத்தில் முழுப்புன்னகையோடு சொன்னார். அவனுக்கு பலமாய் குத்தியது. அவரின் பொருட்களை பையில் வைத்து அவர் எழுவதற்கு உதவினான்.
"ரொம்ப தாங்க்ஸ் சார்".
"அய்யோ, தாங்க்ஸ்லாம் வேண்டாங்க. நீங்க எந்த டிரெய்ன் ஏறணும்?"
"நான் ஆவடி போகணும் சார்"
"வாங்க ஏத்திவிட்றேன்"
"இருக்கட்டும் சார். உங்களுக்கு ஏன் சிரமம்"
"பரவாயில்லை. வாங்க" அவரின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடந்தான். ஆவடி இரயில் மறு ஓரத்தில் இருந்த ஆறாவது நடைமேடையில் இருந்தது. அதற்கு நடுவில் எக்ஸ்ப்ரஸ் செல்வதற்காக உள்ள தண்டவாளங்களை கடக்க வேண்டும். அவன் இரண்டாவது நடைமேடையை தாண்டும் போது தூரத்தில் ஒளி அவனை விட்டு இன்னும் விலகிக் கொண்டிருந்தது. நான்காவது நடைமேடையில் சரிவில் இறங்கி தண்டவாளங்களைக் கடக்க ஆரம்பித்தான். அவர் குடையை திறந்து அவனுக்கும் சேர்த்துப் பிடித்தார். ஆறாவது நடைமேடையில் இரயில் கிளம்புவதற்கான முதல் சமிக்ஞை வந்தது. அவனால் அந்த கண்பார்வையற்றவரும் ரயிலை விடப்போகிறார். அவர் கைகளை இறுக்கப் பிடித்துக் கொண்டு, அவரை இழுத்தபடி வேகமாய் நடந்தான். இழுத்ததில் கால்களை சரியாய் வைக்க முடியாமல் தடுமாறிய அவர், "சார், சார் பொறுமையா… என்னால வேகமாக நடக்க முடியலை"
"டிரெய்ன் கிளம்பபோது கொஞ்சம் வேகமா நடந்தா புடிச்சிடலாம்"
"வேண்டாம் சார். இந்த டிரெய்ன் போனா போகட்டும். ஒரு டிரெய்ன் போனா இன்னொரு டிரெய்ன் கண்டிப்பா வரும் சார்" தவற விடுவோம் என்ற கவலை அவருக்கு இல்லை.
"அடுத்த டிரெயின் எப்போ வரும்?" என்று கேட்டான்.
"வரும் சார். லேட் ஆகலாம். ஆனா வந்துரும். அதுவரைக்கும் நான் காத்திருப்பேன்" இரண்டாவது சமிக்ஞை எழுப்பி அந்த இரயில் கிளம்பியது. இரயில் பெட்டிகள் ஒவ்வொன்றாய் நடைமேடையை விட்டு வெளியேறின. அவர்கள் ஆறாவது நடைமேடையை ஏறிய போது மீதமிருந்த கடைசி இரண்டு பெட்டிகள் வெளியே செல்ல, அதில் கடைசி பெட்டியின் வாசல் அவருக்கு நேரெதிரே நின்றது.
"சார்… டிரெயின் நின்னுட்டுச்சு. ஏறுங்க" என்று அவன் ஆச்சரியத்தில் காலம் தாழ்த்தாமல் அவரை ஏற்றினான். உள்ளே ஏறிய பின் இரயில் பொறுமையாய் கிளம்பியது. அவர் அவனுக்கு எங்கேயோ கையசைத்து நன்றி கூறினார். அந்த இரயில் அவனுக்காகவே நின்றது என்று எண்ணிக்கொண்டான்.
அவன் திரும்ப இரண்டாம் நடைமேடைக்கு வந்து அங்கிருந்த நீள்இருக்கையில் அமர்ந்தான். மழை பலமாய் பெய்து கொண்டிருந்தது. அவன் செய்வதற்கு ஒன்றுமே இல்லாததை போல் உணர்ந்தான். வேகமாய் பெய்து கொண்டிருந்த மழையில் உலகமே பொறுமையாய் சுற்றியது. அவன் முன்னே ஒவ்வொரு இரயிலும் மனிதர்களை இறக்கிய படியும், மீண்டும் ஏற்றி சென்றபடியும் இருந்தது. வருத்தப்பட்டான். அவனைப் போல அதனால் இந்த மழையில் உட்கார்ந்து இரசிக்க முடியவில்லை. முக்கால்வாசி மனிதர்கள் நனைந்தபடி வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அவன் முன்னே ஒரு பொட்டலம் நீட்டப்பட்டது. நன்றாக வேகவைத்த பட்டாணியில் மசாலா, துருவிய கேரட், வெட்டிய மாங்காய் துண்டுகள் கலந்து கொத்துமல்லி தூவிய சுண்டல். அவன் நீட்டிய கைகளைப் பார்த்தான். 'எடுத்துக்கோ' என்பது போல அவள் சைகை செய்தாள். அவன் வாங்கிக் கொள்ள அடுத்து பக்கத்து இருக்கையில் இருந்த திருநங்கைகளிடம் ஒவ்வொன்றாய் கொடுத்தாள்.
"என்னக்கா.. இன்னிக்கு ஓவரா?" என்றனர்.
"ஆமா. இன்னிக்கு வியாவாரம் அவ்ளோதான் நாளைக்குப் பாத்துக்கலாம்" என்று அடுத்த இருக்கைக்கு நகர்ந்தாள். இறுதியாய் அவன் சுண்டலை எந்த அவசரமும் இல்லாமல் சாப்பிட ஆரம்பித்தான். தண்டவாளக் கற்களின் இடையே வழிதவறிய நத்தை ஒன்று தனக்கான பாதையை தேடிக் கொண்டிருந்தது.
#91
54,820
4,820
: 50,000
98
4.9 (98 )
Imrantheeagle
scvani55
nice story
saranyasham0
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50