எனக்குப்புரிகிறது. உங்களுக்கு...?

பயண இலக்கியம்
4.7 out of 5 (6 )

எனக்குப்புரிந்தது. உங்களுக்கு……?


”எத்தனை வேகன்ஸி இருக்கு?”

தீனதயாளன் எம் டி, எரிவாயு கார்ப்பரேஷன், எச் ஆரின் ஜி எம் அரவிந்தைக்கேட்டர்.

“ஆறோ ஏழோ?”

“நீதானெ எச் ஆர்? சரியாச்சொல்லேன்!”

“ஓபன் காட்டிகரில மூணு, எஸ் சி எஸ் டில நாலு!”

“எவ்வளவு அப்ளிகேஷன்?”

“ஓபனுக்கு பன்னண்டு, எஸ் சி எஸ்டிக்கு ரெண்டு!”

“அப்ப நாளைக்கு பதினாலு பேரை இண்டர்வ்யூ பண்ணனுமா?”

“ஆமா சார்”

”மினிஸ்ட்ரிலேர்ந்து யார் வராங்க?”

“ராமசேஷன், அடிஷனல் செக்ரடரி!”

”சரி. அரேஞ்ச்மெண்டெல்லாம் கரெக்டா பண்ணிடுய்யா!”

“சார்! அப்புறம்..!.”

“என்ன, இழுக்கற?”

“பவர் செக்ரட்ரியோட அக்கா பொண்ணு நாளைக்கு வரா. கொஞ்சம் பாத்து பண்ணச்சொன்னார்!”

“சரி சரி. தகுதி இருந்தா கெடச்சுட்டுப்போறது!”

“நம்ம ப்ரபோசல் ஒண்ணு அங்க மினிஸ்ட்ரியில பெண்டிங்...!”

“வேல குடுத்தா, அது க்ளியர் ஆகுமா?”

“அப்படின்னு இல்ல...!”

“நீ இந்த தரகர் வேலயெல்லாம் பண்ணாத. எனக்கு தெரியும், நா பாத்துக்கறேன்!”

அடுத்த நாள் காலை.

“அரவிந்த்! ராமசேஷன் வந்தாச்சா?”

“வந்தாச்சு சார்! ஆல்ரெடி போர்ட் ரூமுல உட்கார்ந்திருக்கார்!”

”ஓகே! இதோ நான் போறேன்!”

”வெல்கம் சார்!”

“ஹல்லோ தீனதயாளன்! எப்படி இருக்கீங்க?”

“வெரி வெல் சார்! பாத்து மூணு வருஷம் இருக்குமா?”

“2017, தமிழ்நாடு ஹவுஸ், டெல்லி”

“ஆமாம். பவர் கான்ஃபெரென்ஸ்! பிஎம் இனாகுரேட் பண்ணீனார்!”

“ராகவாச்சாரி உங்களை விஜாரிச்சார்!”

“ஓ! எப்போ பாத்தீங்க? சென்னை வந்திருக்காரா?”

”என்ன சொல்றீங்க தீனா! சென்னைக்கு வந்து உங்களப்பாக்காம அவர் போவாரா?

”ஹி வாஸ் ய க்ரேட் மேன்!”

“நரசிம்மன் சொல்லுவார், தீனா தான் அவருக்கு முதல் மகன். நான் கூட இரண்டாவது தான் என்று!”

“எனக்கு அவர் கடவுள்!”. நரசிம்மன் எங்கே இருக்காரு இப்போ?”

“வாஷிங்டன்! எக்ஸ்டர்னல் அஃபேர்ஸுல மனுஷன அடிச்சுக்க ஆள் இல்லேன்னு பர்ஃபார்ம் பண்றாரு!”

”ராகசாச்சாரி ஸன்னுன்னா சும்மாவா, ராம்சேஷன்!”

“இந்த பப்ளிக் செக்டாருல ராகவாச்சாரிதான் உங்கள ரெக்ரூட் பண்ணினாருன்னு சொல்லியிருக்கீங்க!”

“அவர் இல்லேன்ன எனக்கு வேலையே கெடச்சிருக்காது. அது ஒரு அனுபவம் ராம்சேஷன்!”

”என்ன ஆச்சு, மஸ்ட் பி இண்டெரெஸ்டிங்! சொல்லுங்களேன்!”

“இதேமாதிரி அன்னிக்கு நானும் இண்டர்வ்யூவுக்கு வந்திருந்தேன். கூட வந்தவங்க அத்தனை பேருலயும் நான் ஒருத்தந்தான் பேக்வர்ட் க்ளாஸ். மார்க்கும் எல்லாரையும் விட குறைவு!”

பேச்சு தடைபட்டது.

அரவிந்த் உள்ளே நுழைந்து, “சார்! காண்டிடேட்ஸ் எல்லாரும் வந்தாச்சு. வரச்சொல்லட்டுமா?”

”ராம்சேஷன்! இண்டர்வ்யூ முடிஞ்சப்புறம் என் கதையச்சொல்றேனே!”

“கேட்காம போகமாட்டேன், தீனா!”

”ஷ்யூர் ராம்சேஷன்!”

முதல் காண்டிடேட்டை வரச்சொல்லலாமா?”

உயரமான ஹை ஹீல் அணிந்து உயர்தர சுடிதார்ருடன் அர்மாணீ பெர்ஃப்யூம் மணத்துடன் இடது கையால் தலை முடியைக்கோதி விட்டுக்கொள்ளும் பெண் நுழைந்தது.

ராம்சேஷன் கேள்விகள் கெட்டார்.

”நீ ஏன் எலெக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் எடுத்தாய்?”

”வெல், அதுதான் கெடச்சுது!”

“வாழ்க்கையில உனக்கு என்ன குறிக்கோள்?”

“நத்திங். ஜஸ்ட் பி ஹேப்பி!”

தீனதயாளனுக்கு லேசாகத்தலை வலிக்க ஆரம்பித்தது.

“இன்னும் மூணு வருஷத்தில் இந்தக்கம்பெனியில் என்னவாக வர விரும்புகிறாய்?”

”டிபெண்ட்ஸ் ஆன் மை ஹஸ்பண்ட்’ஸ் லொகேஷன்!”

“தீனா! நீங்க ஏதானும் கேட்க விரும்புகிறீர்களா?’

“நோ. யூ மே கோ!”

அந்தப்பெண், முகத்தில் பெரிய விடுதலையோடு, “தாங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு பேப்பர்களைக்கவர்ந்து கொண்டு ஸ்டைல் அடித்துக்கொண்டே போனது.

தீனதயாளன் ஒருவித வேதனையுடன், “எப்படி இப்படி..?” என, ராம்சேஷன், “இன்றய இளைய பாரதம்” என்றார்.

“அரவிந்த்! இவள் வேண்டாம்!”

“அய்யோ சார்! எஸ் சி /எஸ் டி காடிகரி. ஏற்கனவே நாம பேக்லாக். எடுத்தாகணும் சார்”!

“தீனா! டென்ஷனாகாதீங்க! ஓகே, அரவிந்த்! பாஸ் மார்க் போட்டுக்கோ!”

அடுத்து வந்த சின்னப்பையன் கிராமத்தில் மாடுகளுக்கு நடுவில் வாழ்ந்து படித்த சூடிகையானவன். தீனா சந்தோஷமாக செலெக்ட் செய்தார்.

“சார்! இனி ஓபன் காடிகரி”

முதலில் வந்த மூன்று பேருமே மிக நன்றாக பதில் அளித்தனர். மற்றவர்களும் நிச்சயம் மோசமில்லை. எல்லோரும் எட்டுக்கு மேல் ஜிபிஏ. அதைத்தவிர கிரிக்கெட், பேஸ்கெட்பால், கல்சுரல்ஸ் என்று விரிந்த பர்சனாலிடியாக இருந்தனர்.

கடைசியாக வந்தவந்தான் தீனதயாளனை தாக்கினான். ராம்சேஷனே கூட சுதாரித்துக்கொண்டு விட்டார். ஆனால் தீனதயாளன்..?

இருவருமே பதிமூணு பேருடன் பேசின ஆயாசத்தில் இருந்தனர். உள்ளே நுழைந்தவன் குள்ளமாக இருந்தான். கசங்கின சட்டை. பொருத்தமில்லாத பாண்ட். காரெமூரேவென்று என்று கட்டின டை. அசவுகரியமாக ஷூ. முகத்தில் அடிபட்ட பார்வை.

ஆரம்பத்திலிருந்தே முதல் ராங்க். சாதாரண கார்ப்பரேஷன் ஸ்கூல்தான்.

“என்ன ப்ராஜெக்ட்!”

வயசுக்கும் அனுபவத்துக்கும் மீறின ஒரு ப்ராஜக்ட் சொன்னான்.

“நீ மட்டுமேவா பண்ணீனே?

“எஸ் சார்!”

கொஞ்சம் விவரிக்க முடியுமா?”

”கழிவுச்சாக்கடையிலிருந்து வரும் வாயுவில் பவர் உருவாக முடியும் என்கிற சித்தாந்தத்தை அடித்தளமாக வைத்து ஒரு சின்ன ப்ரொடோடைப் செய்ய முயன்றிருக்கிறேன். பண உதவி கிடைத்தால் இன்னும் பெரிய அளவில் முயன்று பார்க்க முடியும் என்னால்!”

கொஞ்சம் ஆங்கிலம் தடுமாறினாலும் அழகாக விவரித்தான். அந்த சப்ஜெக்ட் அவனுக்கு பிடித்திருந்தது. அவனுடைய அதீத ஆர்வம் பரவலாக வெளிப்பட்டது.

ஆனால் ராம்சேஷனுக்குத்தான் அதிர்ச்சி.

எரிவாயுக்கமிஷனில் சமீபத்தில் மூன்று கோடி கொடுத்து பெங்களூர் எல்லஹன்காவில் இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் யுனீக் எனர்ஜி என்கிற கம்பெனியில் அதே சப்ஜெக்டில் ஒரு ப்ரோடோடைப் ஆரம்பித்தார்கள். இந்திய அரசின் விஞ்ஞான் பவனில் இதற்கு உதவி செய்கிறார்கள். இந்தப்பையன் என்னவென்றால்அதே விஷயத்தில் ப்ராஜக்ட் செய்து ஒரு பாஸிடிவ் ரிசல்ட் சொல்கிறான்.

ராமசேஷன் பரபரப்பானார்.

“நீ கொஞ்சம் வெளியே இருப்பா. மறுபடி கூப்பிடுகிறோம்!”

அவன் போனவுடன், “அரவிந்த்!எடுத்தே ஆகணும் இவனை” என்றார் தீனதயாளன்.

“முடியாது சார்!”

“வாட் தெ…….சாரி! ஏன்?”

”சார்! பையன் பேர் பாத்தீங்க இல்ல? சேஷாத்ரி. அப்பா பேர் ராமானுஜம் அய்யங்கார்!. பார்த்தசாரதி கோவில் மடப்பள்ளில இருக்கார்!”

“ஸோ வாட்?”

”ஒபன்ல வேகன்ஸி கிடையாது சார்! முதல்ல பாத்த ரெண்டு பேரும் போன வருஷம் பாஸ்.இந்த வருஷ ஃப்ரெஷெர்ஸ் இல்ல. ஒரு வருஷம் ஒர்க் எக்ஸ்பீரியன்ஸ். அவங்களை ரிஜக்ட் செய்ய முடியாது!”

“மூணு வேகன்ஸி இருக்கே! அந்த மூணாவது இவனுக்குக்கொடுக்கலாம்”

”சார்! ப்ளீஸ்! பவர் செக்ரடரியோட பொண்னு, நாந்தான் முதல்லேயே சொன்னேனே. மூணாவது அவளுக்குதான்!”

“அவ இண்டர்வ்யூவுகே வரல! என்ன அநியாயம்யா இது? இந்தப்பையன் ப்ரில்லியண்ட். இவன மாதிரி சப்ஜெக்ட்ல ஆர்வம் இருக்கறவங்க ரொம்ப குறைவுப்பா!”

”ராம்சேஷன்! நீங்க என்ன சொல்றீங்க?”

“தீனா! முழுசா ஒத்துக்கறேன். இவனுக்குத்தான் முதலிடம் கொடுக்கணும். ஆனால், நா வெறும் விசிட்டிங் ஆசாமிதான். நீங்கதான் எல்லோருடைய கேள்விக்கெல்லாம் பதில் சொல்லணும்!”

சார்! ப்ளீஸ்! என்று அரவிந்த் குறுக்கிட்டான்.

ராம்சேஷன் பரபரத்தார்.

”அரவிந்தா! என்னோட அல்லவன்ஸை குடுத்துடறியா? நான் கெளம்பணும். நல்லிக்கு போய் மாமி சொன்ன ரெண்டு கலர்லயும் புடவ வாங்கலைன்னா ஃப்ளைட்டே ஏற முடியாது! ராத்திரி டில்லி குளிரில வெளில நிக்க வெச்சுடுவோ!”

பார்த்தசாரதி கோவில் மடப்பள்ளி ராமானுஜம் அய்யங்காரின் மகன் சேஷாத்ரிக்கு அந்த பப்ளிக் செக்டார் நிறுவனத்தில் வேலை கிடைக்க வில்லை

தீனதயாளனுக்கும் ஆத்திரம் வந்தது. தன் கையாலாகாத்தனம் புரிந்து ராமசேஷனிடம் புலம்பினார்.

“இதேமாதிரிதான், நான் முப்பத்தஞ்சு வருஷங்களுக்கு முன்னால இண்டர்வ்யூ வந்தபோது இங்கே எம்டியாக இருந்த ராகவாச்சாரி அத்தனை எதிர்ப்பையும் மீறி எனக்கு வேலை கொடுத்தார்! என்ன சொன்னார் தெரியுமா? இன்னிக்கும் எனக்கு புல்லரிக்குது ராமசேஷன்!”

“இந்தப்பையன் காஞ்சீபுரத்தில் மிக ஏழ்மையான குடும்பம். பல நூறு ஆண்டுகளாக நம் போன்றவர்களால் ஒதுக்கியும் அடிமைப்பட்டு வைக்கப்பட்ட குலம். இதைச்சரி செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு. நான் விடப்போவதில்லை. அனுப்பு இவனுக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர். என் டிபார்ட்மெண்டிலேயே இவன் டிரைனியாகச்சேரட்டும்!”

”இஸ் இட்?”

”ஆமாம் ராம்சேஷன்! எவ்வளவு எதிர்ப்பு தெரியுமா? அலட்சியமா ஹேண்டில் பண்ணினார்! என்னை தன்னோட டிபார்ட்மெண்ட்லயெ வெச்சுண்டார். இஞ்ச் இஞ்சா என்னை செதுக்கினார்!”

“மை காட்! ராகவாச்சாரி இஸ் ய நோபிள் மேன்! அவர் மீதான உங்களின் மரியாதை எனக்கு இப்போதுதான் நன்றாகப்புரிகிறது!”

”சொன்னேனே, அவர் எனக்கு கடவுள்!ஆனால் எனக்கு இப்போ என்னை நினச்சாலே கேவலமா இருக்கு. இந்த சேஷாத்ரிக்கு என்னால ஒண்ணும் பண்ண முடியலையேன்னு!”

”தீனா! இன்னும் ரெண்டு வருஷம்தானே இருக்கு உங்களுக்கு, இப்ப போய் எதுக்கு காண்ட்ரவர்ஸி?. விடுங்க, இந்த தேசத்துல எவ்வளவொ அநீதிகள். அதுல இதும் ஒண்ணுன்னு விட்டுட்டுப்போயிண்டே இருக்க வெண்டியதுதான்!”

ராமசேஷன் டிராவல் அல்லவன்சைக்கவர்ந்து கொண்டு புறப்பட்டுப்போனார். தீனதயாளன் தன் அறைக்கு கிளம்பினார். அரவிந்த் அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர்கள் அனுப்ப தன் உதவியாளர்களை விளித்தான்.

வாசகரே! கதை இன்னும் முடியவில்லை.

கோபம் வருகிறதா? என்ன தேசம்யா இது என்று அலுத்துக்கொள்ளத் தோன்றுகிறதா? உடனேயே பரபரவென்று லேப்டாப்பைத்திறந்து தி ஹிண்டுவுக்கு ஈமெயிலில் கடிதம் எழுதத்தோன்றுகிறதா?

எனக்கும், அதாவது இந்தக்கதை எழுதும் எனக்கும் அப்படித்தான் இருந்தது, போன வாரம் ராமசேஷனிடம் பேசும் வரை.

பங்களூர் வந்திருந்தார். கேட்டபோது யுனீக் எனர்ஜி கார்ப்பொரேஷனின் போர்ட் மீட்டிங் என்றார்.

யுனீக் எனர்ஜியின் தற்போதைய எம்டி தீனதயாளனாம். அவரின் எக்ஸிக்யூடிவ் அஸிஸ்டண்ட் சேஷாத்ரி ராமனுஜம் என்றார்.

பாரதி பழகச்சொன்ன ரௌத்திரம் என்பது வெறும் கோபம் நிறைந்த சொற்பொழிவில்லை. அநீதியை வெல்லக்கூடிய, வார்த்தைகளில்லாத உன்னத செயலாகக்கூட இருக்கலாம்.

எனக்குப்புரிந்தது. உங்களுக்கு……?

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...