பொய்

Gokul Paramanandhan
உண்மைக் கதைகள்
4.8 out of 5 (16 )

அந்தகாரத்தின் ஆட்சியில் அடிபணிந்த அறை. இருள் என்ற இறைவனுக்கு அழகு சேர்க்க நீல நிற எல்யீடி விளக்கின் ஒளி மட்டும் வீசிக்கொண்டிருக்கின்றது. அந்த அறையில் தன்னந்தனியே ஒரு சிவப்பு நிற எல்.ஜி குளிர்சாதன பெட்டி தன்னந்தனியே நின்று கொண்டிருக்கின்றது. அவ்வப்போது கிர்ர்.... என்ற சத்தம் மட்டும் எழுப்பிக் கொண்டிருக்கின்றது அந்த குளிர்சாதன பெட்டி. மனிதன் படுத்து தூங்கும்போது குறட்டை எழுப்புவது போல அந்த குளிர்சாதன பெட்டியும் இரவு நேரத்தில் தூங்குவதால் இப்படி கிர்...கிர்.... என்று குறட்டை விடுகின்றதோ என்னவோ!. புல்லுக்கு ஒப்பானது மனித வாழ்க்கை என்று சொல்லுவார்கள் ஆனால், நவீனமயமாக்கப்பட்ட இந்த காலகட்டத்தில் இயந்திரத்திற்க்கு ஒப்பானது மனித வாழ்க்கை என்று தான் சொல்ல வேண்டும். இயந்திரத்தின் ஆயுள் போல தான் மனிதனின் ஆயுளும். மனிதன் ஒரு உயிரியல் இயந்திரம். பிறப்பு, படிப்பு, வேலை, காதல்,கல்யாணம், குழந்தை, சொத்து சேர்த்தல், இறுதியில் மரணம், இது போதாதென்று அவர்கள் பெற்ற குழந்தையையும் அதையே செய்ய வற்புறுத்துகின்றார்கள். நான் பெற்ற இன்பத்தை இவ்வையகம் பெற வேண்டும் என்பதெல்லாம் சுத்தப்பொய் நான் பெற்ற துன்பத்தை இவ்வையகம் பெற வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தான் இந்த உயிரியல் இயந்திரமான மனிதனது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த அர்த்தமில்லாத வாழ்க்கையில் அன்பிற்க்காக ஏங்கி அர்த்தம் தேடி அலையும் அனாதைக்கூட்டம் தான் இந்த மனித சமுதாயம்.

இந்த மனித சமுதாயத்தை சேர்ந்த ஒரு குழந்தையின் கால் அப்படியே வெள்ளை நிற டைல்ஸ் பதிக்கப்பட்ட தரையில் படுகிறது. பிங்க் நிற ஸ்லிப்பர் அணிந்த ஒரு 4 வயதான சிறுமியின் கால்கள். அந்த பிங்க் நிற ஸ்லிப்பரில் குட்டியாக முயல் குட்டிகளின் முகம் பதிக்கப்பட்டிருக்கின்றது. முயல்குட்டி ஸ்லிப்பரை போட்டுக்கொண்டு பூனைக்குட்டி போல் அந்த கால்கள் சத்தம் வராமல் அடியெடுத்து நடக்க ஆரம்பித்தது. ஆத்மாவில் பூவை வைத்து வருடுவது போல் அந்த சிறிய கால்கள் அந்த வெள்ளை நிற டைல்ஸ்-ல் எட்டு வைத்து போய்க்கொண்டிருக்கின்றது. அந்த குட்டி கால் அப்படியே நின்றது. ஒரு வெள்ளை நிற குட்டி கெளவுன் போட்டுக்கொண்டு அந்த சிறுமி அந்த குளிர்சாதன பெட்டியை பார்த்தவாறே நின்று கொண்டிருக்கின்றாள். டோரா கட்டிங் போட்ட தலை. மிகவும் அழகான கருத்த முடி அவளது தலைக்கு குடை போல் அழகாக இருந்தது. ஆராய்ச்சியாளர்கள் அணுவை எப்படி இரண்டாக பிளக்கலாம் என்று ஆராய்வது போல அந்த சிறுமி அந்த குளிர்சாதன பெட்டியை பார்த்துக்கொண்டிருந்தாள். மெல்ல தனது குட்டி தங்க வளையல் அணிந்த வலது கையால் அதன் கருப்பு‌ நிறம் மற்றும் சில்வர் கலந்திருந்த பெரிய கைப்பிடியை பிடித்தாள்.

அப்படியே பின்னே திரும்பி பார்த்தாள். அந்த சிறுமியின் கண்கள் மட்டும் இருளோடு கலவி கொண்டிருந்த நீல நிற வெளிச்சத்தில் ஒரு பதட்டத்தை காண்பித்தது. மெல்ல அந்த குளிர்சாதன பெட்டியை அந்த சிறுமி சத்தம் வராதவாறு திறந்தாள்.மஞ்சள் நிற ஒளி படாரென்று வீசியது. நார்த்திகன் இறந்த பின் சொர்க்கம் செல்ல நேர்ந்தால் எப்படி சொர்க்கத்தை வியந்து பார்ப்பானோ அப்படி அந்த சிறுமி அந்த மஞ்சள்‌ நிற ஒளி வீசிக்கொண்டிருந்த குளிர்சாதனப்பெட்டிக்குள் இருந்தவற்றை இரசித்து பார்த்துக்கொண்டிருந்தாள். அவளது மெல்லிய ஆத்மாவினை சற்று குளிர் ஊடுருவிச் சென்றது.சிறிய, சிறிய ப்ளாஸ்டிக் டப்பாக்களுக்குள் ஏதோ,ஏதோ பொருட்கள் அது என்னவென்று தெரிந்து கொள்ள அந்த சிறுமிக்கு ஆர்வம் இல்லை. சில்வர் பாத்திரங்களில் இருப்பதை பார்க்கவும் அந்த சிறுமிக்கு ஆசை இல்லை. வலது பக்க கதவில் இருந்த முட்டைகளை பார்ப்பதற்க்கும் ஆர்வம் இல்லை, பழங்கள், காய்கறிகள் எதை பார்க்கவும் அவளுக்கு தோனவில்லை. அவளது குட்டி கண்கள் இரண்டும் கூர்ந்து குறிக்கோளாய் குளிர்சாதனப்பெட்டியின் ஐஸ் கட்டிகள் வைக்கும் இடத்தையே பார்த்துக்கொண்டிருந்தது. நமது குறிக்கோளை அடைய வேண்டும் என்ற உறுதியான எண்ணம் வேறு எதன் மீதும் கவனச்சிதறல் ஏற்பட விடாது. மெல்ல தனது குட்டி கைகளால் அந்த ஐஸ் கட்டிகள் வைக்கும் இடத்தின் அவளைப்போலவே அழகாகவும், குட்டியாகவும் இருக்கும் கதவை திறந்தாள். அதனுள் மெல்ல தனது குட்டி கைகளை நுழைத்தாள். அதில் இருந்த பனிக்கட்டிகள் அவளது பிஞ்சு கைகளில் பட்டு அவளது புனிதமான ஆத்மாவை ஆனந்தப்படுத்தியது. அவளது குட்டி ரோஜா இதழ்களில் அவளையும் அறியாமல் ஒரு புன்னகை பூத்தது. புத்தரின் போதனைகள் அவளது புன்னகையில் தெரிகின்றது. அவளது குட்டிகைகளில் பெரிய அருண் ஐஸ்கிரீம் ஃபேமிலி பேக் இருந்தது. அப்படியே வெளியே எடுத்தாள்.

பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் ஃபேமிலி பேக் அந்த பாக்ஸை மெல்ல எடுத்து அதன் மூடியை திறந்து தனது சூடான குட்டி விரலை அந்த குளிர்ந்த ஐஸ்கிரீமில் தடவி அப்படியே தனது குட்டி இதழ்களுக்கு நடுவே வைத்து மெல்ல சுவைந்து சொர்க்கலோகம் அடைந்தாள். தனது குட்டி விரலாலே ஐஸ்கிரீம்-ஐ சாப்பிட்டாள். அவளது குட்டி கன்னங்களில் ஐஸ்கிரீம் படர்ந்திருந்தது. தனது குட்டி வயிறு நிறையும் வரை சாப்பிட்டு விட்டு மெல்ல அந்த மூடியை மாட்டி டப்பாவை உள்ளே வைத்து ஃபீரிசரை பூட்டிவிட்டு மெல்ல குளிர்சாதன பெட்டியின் கதவை மெல்ல சாத்தினாள். படாரென்று டீயூப் லைட் விளக்கின் ஒளி வீசத்தெடங்கியது. அந்த இடம் முழுவதும் வெளிச்சம் பரவியது அவளது குட்டி உள்ளத்தில் பயம் பரவியது. மெல்ல தனது குட்டி காலால் திரும்பினாள். சுவிட்ச்சின் அருகே ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். தேவதைகளுக்கு பிடித்த நிறமாகிய வெள்ளை நிறத்தில் ஒரு நைட் ட்ரெஸ் போட்டுக்கொண்டு தனது கையை கட்டியவாறு நின்று அந்த சிறுமியையே பார்த்துக்கொண்டிருந்தாள். இருவருக்கும் ஒரே முகச்சாயல். தாயும்,சேயும் என்று பார்த்தவுடனே தெரிந்து கொண்டது.

தாயின் வெண்ணிற முகத்தில் கவலை சூழ்ந்தததின் வெளிப்பாடாக அவளது கண்களில் கருவளையம் சூழந்திருந்தது. சற்று அமுங்கிய மூக்கு, அளவான, அழகான பிங்க் நிற இதழ்கள். முகத்தில் அவளது நாடியின் நடுவே இவளை அழகாக படைத்துவிட்ட கடவுள் இறுதியாக இவளது அழகிய முகத்திற்க்கு முத்தமிட்டு முற்றுப்புள்ளி வைத்தது போல ஒரு மச்சம் வைத்துவிட்டான்.துக்கத்தில் தூங்காமல் இருந்த அவளது கண்கள் கூட பார்ப்பதற்கு கலைநயத்துடன் இருந்தது. அவளது வளைந்த காதுகளில் ஊசலாடும் தங்கத்தோடு போல அவளை பார்ப்பவனின் இருதயம் ஊசலாடும். சற்று பருமனான உடல் வாகு. இவளை பார்க்கும் பெண்களுக்கே இவளை ஒரு முறையாவது கட்டியணைக்க வேண்டும் என்று ஏங்க வைப்பாள். அந்த அளவுக்கு ஒரு மிருதுவான தேகம். 27 வயது மதிக்கத்தக்க ஒரு பெண். ஒரு காதலன், தனது காதலியின் கருவிழிகளை இரசிப்பது போல தனது குழந்தை செய்வது அனைத்துயும் இரசித்துவிட்டு ஒரு பொய்கோபத்துடன் அந்தத்தாய், தனது குழந்தையை பார்த்துக்கொண்டிருந்தாள். மெல்ல அந்த குழந்தையை நோக்கி நடந்து வந்தாள்.

தாய்: என்ன பண்ற ஆதினி?

என்று மெல்ல அந்த குழந்தையின் முன்பே ஒரு முட்டியை மடக்கியவாறு மண்டியிட்டாள்.

ஆதினி: அத்துவாஆ... அது...

என்று ஐஸ்கிரீம் விழுங்கிய அந்த குட்டி தொண்டைக்குள் வார்த்தைகளை பேச முடியாமல் முழுங்கிக்கொண்டிருந்தாள் ஆதினி.

தாய்: ஐஸ் கிரீம் சாப்ட்டியா?

என்று சற்று அதட்டும் தோரணையில் பார்த்தாள்.

ஆதினி: இல்ல மம்மி நான் சாப்தல.

என்றாள் தனது மழலைக்குரலில்.

தாய்: நீ என்கிட்டயே பொய் சொல்லுறே-ல என்கிட்ட பேசாத போ.

என்று அந்த தாய் தனது மென்மையான கைகளை தனது முகத்தில் வைத்து மறைத்துக் கொண்டாள். அழுவது போல் முகத்தை மூடியிருந்தாள். அதைப்பார்க்கவும் அவளையும் அறியாமல் ஆதினியின் குட்டிக்கண்களில் நீர் கோர்த்தது.

ஆதினி: மோனிக்கா செல்லோ அழுவாத இங்கப்பாரு அழுவ்வாத...

என்று மெல்ல தனது ஐஸ்கிரீம் படிந்த குட்டி கைகளால் மோனிக்காவின் கைகளை பிடித்தாள். முகத்தை மூடியிருந்த கைகளை‌ விளக்க முயற்ச்சித்தாள் ஆதினி. ஆனால், மோனிக்கா கையை எடுக்கவில்லை.

மோனிக்கா: குட்டி பாப்பா பொய் சொல்லிட்டா. அவ பேட் கேர்ள் ஆகிட்டா. அவகிட்ட பேசமாட்டேன். என்கிட்ட பேசாத போ.

ஆதினியின் கண்களில் இருந்து கண்ணீர் வடிய ஆரம்பித்தது. அது அப்படியை அவளது குட்டி வெண்ணிற கன்னங்களில் வடிந்து கன்னங்களில் ஒட்டியிருந்த ஐஸ்கிரீம் -ல் கலந்தது.

ஆதினி: ப்ளீச்ச்... என்கித்த பேசு மம்மி. என் மோனிக்கா செல்லோ-ல. குத்தி பாப்பா பொய்ச்சொல்லமாத்தேன். பேசு செல்லோ...

என்று மோனிக்காவின் கையை பிடித்துக்கொண்டு கத்தி அழ ஆரம்பித்தாள்.

மோனிக்கா: சரி, எனக்கு ப்ராமிஸ் பண்ணு. இனிமேல் குட்டிபாப்பா என்கிட்ட பொய் பேச மாட்டிங்கன்னு. அப்போதான் கைய எடுப்பேன்.

என்றாள் சிரித்துக்கொண்டே.

ஆதினி: குத்திப்பாப்பா பொய்ச்சொல்ல மாத்தேன் பாமிஸா. ப்ளீச் பேசு.

மோனிக்கா மெல்ல கையை எடுத்தாள். ஆதினி அப்படியே மோனிக்காவை கட்டியணைத்துக்கொண்டாள்.

மோனிக்கா: பொய் சொன்னா நீ பேட் கேர்ள் ஆகிடுவ. பொய் சொல்லுறவங்க எல்லாரும் ரொம்ப கெட்டவங்க. பொய் சொன்னா அவங்கள சாமி கண்ண குத்திடும். அப்புறம் அவங்கள பேய் வந்து சாப்பிட்டுட்டு போயிடும். பொய் சொல்லுறவங்களா ரொம்ப கேவலமானவங்க. பொய் பேசுறது மிகப்பெரிய தப்பு டா செல்லம். இனிமேல் குட்டி பாப்பா பொய் பேசக்கூடாது.

திடீரென்று காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.

மோனிக்கா: சரி, குட்டி பாப்பா பேஸ் வாஷ் பண்ணிட்டு, சமத்துக்குட்டியா படுத்து தூங்குவாங்களாம்.

ஆதினி அப்படியே நடந்து சென்றாள். மோனிக்கா நடந்து சென்று ப்ரெவுன் நிற பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்த மரக்கதவை திறந்தாள். திறந்தவுடனே குபீரென்ற சாராய வாசனை அவளை முகம் சுழிக்க வைத்தது. ஒரு வான் நீல நிறத்தில் சட்டை, கருப்பு நிற பேண்ட் அணிந்து அரைகுறையாக டக்இன் செய்தவாறு ஒரு 30 -35 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் மது போதையில் நின்று கொண்டிருந்தார். கண்கள் இரண்டும் போதையில் சிவந்து போய் இருந்தது. நல்ல சதுர வடிவ முகம்‌. கிளீன் செய்த முகம் சாரய போதைக்கு அடிமையாகி ஒருமாதிரி சோர்ந்து போன முகம். அதிகமான கருப்பும், குறைவான வெள்ளையும் கலந்த தலைமுடி. கையில் ஒரு பார்சலுடன் நிற்க்க முடியாமல் நின்று கொண்டிருந்தார்.

மோனிக்கா: குடுச்சுருக்கிங்களா?

என்று கோபத்துடன் அந்த நபரை பார்த்து கேட்டாள்.

அவர்: எதுனாலு உள்ளப்போய் பேசிக்கலாம்.

என்று அவளை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றார். அப்படியே தனது ஷூ-வை கழட்டினார். மோனிக்கா கதவை வேகமாக சாத்தினாள்.

அவர்: பேபி, டாடி உனக்கு என்ன வாங்கிட்டு வந்துருக்கேன் பாரு. உனக்கு பிடுச்ச ஐஸ்கிரீம்.

என்று கத்திக்கொண்டிருந்தார்.

மோனிக்கா: பிரகாஷ் நீங்க பண்ணுறது கொஞ்சம் கூட நல்லா இல்ல பிரகாஷ். ஆதினி தூங்கிட்டு இருக்கா எதுக்கு இப்போ டிஸ்டர்ப் பண்ணுறிங்க.

என்று பிரகாஷ்-ன் வான்நீல நிற சட்டையை பிடித்தாள் மோனிக்கா.

பிரகாஷ்: கைய விடு. என் குழந்தைய எப்பவேணா நான் கொஞ்சுவேன் அத கேட்க்க நீ யாருடி.

அந்த வார்த்தை அவளது வட்டவடிவ கண்களில் இருந்து கண்ணீர் வரச்செய்தது.

மோனிக்கா: குடுச்சுட்டு வந்து ஏன் இப்படி டார்ச்சர் பண்ணுறிங்க.

என்று அழ ஆரம்பித்தாள்.

பிரகாஷ்: நான் எங்க குடுச்சுருக்கேன்.

என்று மெல்ல மோனிக்காவின் பக்கம் திரும்பி கோபமாக பார்த்தார்.

மோனிக்கா: ஏன், இப்படி இவ்வளவு கேவலமா பொய் சொல்லுறிங்க. வாய தொறந்தாளே பொய். எதுக்கெடுத்தாலும் பொய்.‌

என்று தன்‌ மண்டைக்குள் சண்டையிட்டுக்கொண்டிருந்த எண்ணங்களை வார்த்தைகளாக மாற்றினாள்.

பிரகாஷ்: நான் எங்க பொய் சொன்னேன்.

என்று தட்டுத்தடுமாறி மோனிக்காவை பார்த்தார்.

மோனிக்கா: அப்போ ஸ்வேதா யாரு?

என்று கண்களில் கண்ணீருடன் பிரகாஷ்-ஐ பார்த்து கேட்டாள்.

பிரகாஷ்: அவ கூடவேல பாக்குற பொண்ணு டி.

மோனிக்கா: கூட வேல பாக்குற‌ பொண்ணு தான் குட்‌ மார்னிங் செல்லம், குட் நைட் செல்லம், லவ் யூ-ன்னு மெசேஜ் பண்ணுறாளா? எனக்கு எதுவும் தெரியாதுன்னு‌ நினைக்காதிங்க. வாய தொறந்தாலே பொய் அருவருப்பா இருக்கு உங்க கிட்ட பேசவே.

என்று சொன்னவுடனே மோனிக்காவின் தலைமுடியை பிடித்தார் பிரகாஷ்.

பிரகாஷ்: இதுக்கு மேல ஒரு வார்த்த பேசுன‌ உன் மூஞ்சிய உடச்சுடுவேன்.

என்று அவளது கூந்தலில் இருந்து கை எடுத்தார்.

மோனிக்கா: ஏற்கனவே குடுச்சு, குடுச்சு ஹார்ட்‌ ப்ராப்ளம் வந்து இந்த வயசுலையே ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணிருக்கு. திரும்பவும் போய் குடுச்சுட்டு இருந்தா.‌ நீங்க பாட்டுக்கு செத்து போயிட்டா நானும், ஆதினி‌-யும் ரோட்டுல தான் நிக்கனும் . எங்கள நினச்சுப்பாத்தா நீ குடிப்பியா.

பிரகாஷ் நிற்க முடியாமல் ஹாலில் டொம்மென்று மட்டமல்லாக்காக விழுந்தார்.

மோனிக்கா: வயசு வித்யாசம் பாக்காம கல்யாணம்‌ பண்ணேன்-ல என்ன செருப்பால அடிக்கனும். ஆதினிக்காக தான்‌ பாத்துட்டு‌ இருக்கேன்.

என்று சொல்லிக்கொண்டே மோனிக்கா பெட்ரூமிற்க்கு கிளம்பினாள் கண்களில் கண்ணீர் வடிய.

பிரகாஷ்: நான் லவ் பண்ண‌ பொண்ண எனக்கு கட்டி வச்சுருந்தா நான்‌ ஏன்டி இப்படி‌ இருக்கப்போறேன்.

என்று முணுமுணுத்தார் தரையில் படுத்துக்கொண்டே. மோனிக்கா அழுதுகொண்டே கட்டிலில் படுத்தாள்‌. இதையெல்லாம் கேட்டுக்கொண்டே ஆதினி, மோனிக்காவின் அருகில் படுத்திருந்தாள்.‌அவளது குட்டிக்கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. மோனிக்கா, ஆதினியை இறுக கட்டிப்பிடித்துக்கொண்டு அழத்தொடங்கினாள்.ஆதினி மெல்ல கண்களை மூடினாள். அவளது குட்டி கண்களில் இருந்து வடிந்த கண்ணீர் அந்த வெள்ளை நிற டைல்ஸ்-ல் பட்டது. மோனிக்காவின் அழுகுரல் கேட்டுக்கொண்டே தூங்கிக்கொண்டிருந்தாள் ஆதினி. மெல்ல தனது கரடி பொம்மையை கட்டியணைத்துக்கொண்டாள். திடீரென்று, அவளது காதில் பலரின் அழுகுரல் கேட்க ஆரம்பித்தது. மிகவும் சத்தமாக பலரது அழுகுரல் அவளது காதில் கேட்டது. மெல்ல தனது குட்டி கண்களை திறந்தாள்.

தனது நீல நிற கரடி பொம்மையை இறுக கட்டியணைத்துக்கொண்டு மெல்ல அந்த கட்டிலில் இருந்து தனது குட்டி கால்களை கீழே வைத்தாள். அவள் அப்படியே ஹாலில் நுழைந்தாள். சற்று கூட்டமாக இருந்தது அந்த இடமே. அனைவரும் ஆதினியையே பார்த்துக்கொண்டிருந்தார்கள் கண்களில் கண்ணீருடன். ஆதினியின் குட்டி காதுகளில் விழுந்த வார்த்தைகள் " பாவம் இந்த பச்சப்பிள்ளைய விட்டுட்டு போயிட்டானே." " எப்படி அம்மாவும், மகளும் தனியா இருக்கப்போறங்க." " இந்த வயசுலையேவா சாகணும்". " செத்தவன் இனிமேல் திரும்ப வரமுடியுமா?". இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாமல் அப்படியே ஆதினி நடந்து வந்தாள்.

ஒரு பெரிய ஐஸ் பாக்ஸ்-ல் பிராகஷ் மூக்கில் பஞ்சு வைத்து தலையில் கட்டுப்போட்டு படுக்க வைத்திருந்தார்கள். அந்த ஐஸ் பாக்ஸின் அருகே மோனிக்கா அழுவதற்க்கு கண்களில் கண்ணீர் இல்லாமல் கண்கள் முழுவதும் கவலை பரவி உட்கார்ந்திருந்தாள்‌. மோனிக்காவின் பெற்றோர்களும், பிரகாஷ்-ன் பெற்றோர்களும் ஒரு புறம் அழுது கொண்டிருந்தார்கள். இருவரது சொந்தக்காரர்களும் மாறி, மாறி சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள். பிரகாஷ் நேத்து விழுந்த இடத்திலேயே பிணமாக படுத்திருக்கின்றார். மோனிக்கா-வை பார்த்தவுடன் ஆதினி வேகமாக ஓடி வந்து கட்டியணைத்து அழத்தொடங்கினாள். அங்கே கூடியிருந்த கல்நெஞ்சக்காரர்களுக்கு கூட இந்த காட்சி கண்களில் கண்ணீர் வரச்செய்தது. எண்ணற்ற கேள்விகளால், அந்த இடமே அங்கிருந்த மக்களை விட சூழ்ந்து இருந்தது. மோனிக்கா அழுதுகொண்டே ஆதினியின் குட்டி கண்களில் வடியும் கண்ணீரை துடைத்தாள்.

ஆதினி: டாடிக்கு என்னாச்சு மம்மி.

என்று அந்த குட்டி கண்களில் கண்ணீர் மழ்க கேட்டாள் ஆதினி.

மோனிக்கா: டாடி தூங்குறாரு டா செல்லம்.

ஆதினி: டா...டா.. டாடி இதந்துத்தாருன்னு சொல்லுதாங்க. இதந்தவங்க திதும்பி வதமாத்தாங்கன்னு நீதான செல்லோ சொல்லிருக்க. உன்னோத தத்தா ஃபோட்டோ-வ காமுச்சு.

மோனிக்காவிற்க்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை கண்களில் இருந்து வடிந்த வண்ணமே இருந்தது.

தூரத்தில் ஒருவர் பேசும் குரல் கேட்டது. " நைட் தண்ணிய போட்டு வந்து கீழ விழுந்திருக்கான். ஏற்கனவே பைபாஸ் சர்சஜரி பண்ணிருக்காங்க நெஞ்சுல நல்ல அடி பாவம் அந்த இடத்துலயே இறந்துட்டான்."

மோனிக்கா: இல்லமா டாடி தூங்குறாரு.

ஆதினி: நீ தான செல்லோ பொய் பேசக்கூடாதுன்னு சொல்லிருக்க. இப்போ நீயே ஏன் "பொய்" பேசுற.

- முற்றும்.

-கோகுல் பரமானந்தன்.

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...