வாரணாசி

கற்பனை
4.2 out of 5 (5 )

மணிகர்னிகா படித்துறையில் அமர்ந்திருந்தார் தீனதயாளன். பல நூறு சடலங்கள் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. பிடிச் சாம்பலை செம்பிலான கலயத்தில் பெற்றுச் செல்வதற்காக உறவுகள் காத்திருந்தனர். கங்கா லாப் பவனில் தங்களுக்கான மரணத்தை எதிர்பார்த்தபடி ஆண்களும் பெண்களுமாகக் காத்துக் கொண்டிருந்தார்கள். எல்லாமே தீனதயாளனுக்குப் பழக்கப்பட்டுவிட்ட ஒன்றாகி விட்டது. அவற்றிலெல்லாம் கவனத்தைக் குவிக்காமல், சுழித்துக் கொண்டு விரையும் கங்கை நதியையே வெறித்துக் கொண்டிருந்தார். அவர் மனமும் பல்வேறு நினைவுகளிலும் சிந்தனைகளிலும் அந்த நதியைப் போலவே பிரவாகித்துக் கிடந்தது.

காசி நகருக்கு வந்து ஒன்பது மாதங்கள் கடந்து விட்டன. இன்னும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மரணம் வாய்க்காமலிருப்பதில் தீனதயாளனுக்கு மனமடிவு ஏற்பட்டுவிட்டது. ஏழு வருடங்களுக்கு முன்பு கோமதியின் அஸ்தியை எடுத்துக் கொண்டு, குமரேசனுடன் முதல் தடவையாக காசிக்கு அவர் வந்த போது, ஏற்பட்ட பிரமிப்பு இப்போது இல்லை. மரணத்தை ஒரு திருவிழா போலவும் வசந்த காலம் போலவும் பெரும் பண்டிகை போலவும் கொண்டாடித் தீர்க்கும் காசி நகரம் அவருக்கு அதிசயமாகத் தெரிந்தது. குமரேசனை அன்றே பெங்களூருவுக்கு அனுப்பிவிட்டு, மேலும் ஒரு வாரம் காசியில் தங்கி, அந்த நகரை, மரணத்தை விரும்பி, சுவைக்க வந்துக் குவியும் முதியவர்களை, அதற்கான சடங்குகளை அவதானிக்க ஆரம்பித்தார். அன்னப்பூரணி கோவிலையும் விஸ்வநாதர் ஆலயத்தையும் கங்கை நதியையும் சுற்றிச் சுற்றி வந்தார். ஆலயத்தைச் சுற்றியுள்ள எண்ணற்ற குடில்களில் மரணத்துக்காக காத்திருக்கும் முதியவர்கள் குறித்து பேராச்சரியமாக இருந்தது. கங்கா லாப் பவன் நிர்வாகிகளிடம் பேச்சுக் கொடுத்த போது, தங்களுடைய மரணத்துக்காக இருபதாயிரம் பேர் முன்பதிவு செய்துக் கொண்டு, காசிக்கு வருவதற்காகக் காத்திருப்பதும் தெரியவந்தது. கோமதி, அந்திமக் காலத்தில் காசிக்குப் போய்விடலாம் என்பதை ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்ததன் முக்கியத்துவம் தீனதயாளனுக்கு இப்போது புரிய ஆரம்பித்தது. பாதகத்தி, அதற்கும் கொடுப்பினை இல்லாமல், உடம்பும் மனதும் ஆரோக்கியமாக இருக்கும் போதே, சட்டென போய் சேர்ந்து விட்டாள். அவளுக்கு இப்படி சாவு வருமென்று கொஞ்சமும் எதிர்பாக்கவில்லை. அவள் ஆசைப்பட்டதுதான் நடக்கவில்லை... அஸ்தியையாவது கரைப்போம் என்று காசிக்கு வந்த வருக்கு நகரை ரொம்பவும் பிடித்து விட்டது. தனது அந்திமக் காலத்தை இங்குதான் கழிப்பதென முடிவு செய்து விட்டுத்தான் அந்நகரைவிட்டு பெங்களூருவுக்கு போனார்.

இதோ, ஏழு வருடங்களுக்குப் பிறகு காசி நகருக்கு வந்து ஒன்பது மாதங்களும் கடந்தாகி விட்டது. மரணத்துக்கு ஆசைப்பட்டு இரண்டாவது தடவை காசி நகரில் கால் வைத்த போது. இருந்த மனக் கொண்டாட்டம் முற்றிலுமாக அவருக்குள்ளிருந்து அகன்றுவிட்டது. மாறாக, வருத்தமும் சோகமும் அவருக்குள்ளாக சூழ் கொள்ள ஆரம்பித்தது. அதிகபட்சமாக, மூன்று, நான்கு மாதங்களுக்குள் தனக்கு மரணம் நேர்ந்துவிடும் என்று எதிர் பார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இடையில் இரண்டு தடவை குமரேசனும் வந்துப் பார்த்துவிட்டு போய்விட்டான். “அப்பாவுக்கு எப்போ முக்தி கிடைக்குதோ... அதுவரை அவரை எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கங்க” என்று ஒப்பந்தக்காரரிடம் கூறி விட்டு, அடுத்த மூன்று மாதங்களுக்கான பணத்தையும் கொடுத்துவிட்டான்.

இத்தனை மாதங்களில் காசியும் நகரத்தில் உள்ள ஆயிரத்து எண்ணூறு ஆலயங்களும் கங்கா நதியில் தினமும் எத்தனை பிணங்கள் மிதந்துச் செல்கின்றன என்பது வரை அவருக்கு அத்து படியாகி இருந்தது. பழக்கமற்ற மொழி கூட இப்போது வசப்பட்டிருந்தது. வந்தப் புதிதில் மலைப்பாகத் தோன்றிய ஊர், இப்போது மலைப்பாம்பாக தனக்குள் நெளிவது போலும் உணர்ந்தார். “ஆசையே அத்தனை துன்பத்துக்குத் காரணம்” என்று போதித்த புத்தர் அவதரித்த தேசத்தில், மரணத்துக்கு ஆசைப்படுகிற பெருங் கூட்டத்தில் ஒருவனாக, தானும் இருப்பது ஆரம்பத்தில் நகை முரணாக தீனதயாளனுக்குத் தோனிற்று. நாள்கள் மாதங்களாகியது. மாதங்கள் ஒன்பது ஆகியது. இன்னும் தனக்கான மரணம் நிகழாதவொன்றாக இருப்பதில் சோர்வுற்றார். வாழ்நாளெல்லாம் உழைத்து காத்திரமாக இருக்கும் தனது உடம்பு மரணத்துகேதுவாக கனியவில்லையோ...? தரிசாகக் கிடக்கிறதோ... மலட்டு நிலம் போல் தன் உடலும் மாறிவிட்டதோ...? கரிசல் மண்ணாக உருக்கொண்டுவிட்டதோ...? கங்கையை வெறித்தபடி சிந்தித்த தீனதயாளனுக்கு சட்டென்று பூர்வீக ஊரில் கிடக்கும் கரிசல் நிலம் நினைவுக்கு வந்தது. காசிக்கு வருவதற்கு முன்புதான் தன் பெயரிலும் மனைவியின் பெயரிலும் வாங்கியிருந்ததான வீடுகள், பலசாரக்குக் கடை உள்ளிட்ட சொத்துக்களை குமரேசனுக்கும் இரண்டு மகள்களுக்கும் பாகம் பிரித்துக் கொடுத்திருந்தார். கோவில்பட்டி அருகில் உள்ள கிராமத்தில் உள்ள ஒரு ஏக்கர் கரிசல் பூமியை மட்டும் சொல்லி வைத்தார் போல், பிள்ளைகள் தங்களுக்கு வேண்டாம் என்று மறுத்து விட்டார்கள். அதன் மூலப்பத்திரத்தை கையோடு எடுத்துவந்துவிட்டார். காசியில் வைத்து அந்த நிலத்தைக் குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்பது அவரது எண்ணமாக இருந்தது. வந்த இரண்டாவது மாதத்திலேயே காசி விசுவநாதருக்கு எழுதலாமா.. அன்னப்பூரணிக்கு கொடுத்துவிடலாமா என்ற குழப்பம் வந்தது. கடைசியில், ஊரில் ஆரம்பசுகாதார நிலையக் கட்டுவதற்கு அரசு அனுமதி அளித்திருப்பதாகவும், அதற்கு இடம் கொடுத்தால் உடனடியாக கட்டிடம் எழும்பிவிடும் என்றும் ஊர்காரர்கள் போன் செய்து சொன்னதாக குமரேசன் சொன்னதைக் கேட்டு, அந்தக் கரிசல் நிலத்தை மருத்துவமனை கட்டுவதற்காக எழுதி கொடுத்துவிட்டார். தான் இறந்த பிறகு அந்தப் பத்திரத்தை ஊர்த் தலைவரிடம் கொடுத்துவிடும் படி கூறியிருந்தார்.

தங்களுக்கு எழுதித் தருவதாக இருந்த சொத்தை, ஊர் மக்களுக்காக எழுதிக் கொடுத்து விட்ட தன் மீது காசி விசுவநாதருக்கும் அன்னப்பூரணிக்கும் கோபம் வந்துவிட்டதோ? அதனால்தான் மரணம் தனக்கு இன்னும் வராமல் இருக்கிறதோ? மறுபடியும் அந்தப் பத்திரத்தை வாங்கி விசுவநாதருக்கும் அன்னபூரணிக்கும் பகிர்ந்து எழுதிக் கொடுத்து விடலாமா...? என்றெல்லாம் தீனதயாளன் யோசித்தார். இரண்டு சாமிகளுமே ஏகப்பட்ட சொத்துக்கள் வைத்திருக்கும் கோடீஸ்வர கடவுள்கள். அவைகளுக்கு எங்கேயோ கரிசல் காட்டில் பயனற்றுக் கிடக்கும் மலட்டு நிலத்தினால் ஒரு பயனும் இல்லை. உள்ளூர் மக்களின் பல வருட கோரிக்கைக்கு அரசு இப்போதுதான் செவி சாய்த்து, நிலம் கொடுத்தால் மருத்துவமனை கட்டித் தரப்படும் என்று இறங்கி வந்திருக்கிறது. போதிய மருத்துவ வசதி இல்லாமல் போனதால், விரியன் கடித்தவர்களும் நிறை கர்ப்பிணிகளும் கோவில்பட்டிக்குக் கொண்டு போகிற வழியிலேயே மரணித்துப் போனதை தீனதயாளன் சிறுவயது முதலே பார்த்திருக்கிறார். முப்பது வயதில் பஞ்சம் என்று பிழைக்க குடும்பத்தோடு பெங்களூருவுக்கு வந்தபோது ஊரையும் மண்ணையும் மறந்தே போனார். நாற்பது வருடங்கள் நான்கே தினங்கள் போல கடந்த பிறகும், ஊருக்குள் அவலச் சாவுகள் தொடர்ந்த படி இருந்த சேதி அவருக்கு தாங்க முடியாத துக்கமாகவே மனதுக்குள் கவிழ்ந்திருந்தது. எழுபது வயதில் கூட ஊருக்குப் போகவும், தனது கரிசல் நிலத்தைப் பார்க்கவும் தோன்றவும் இல்லை. அதற்கு நேரமும் இல்லை. இத்தனைக்கும் பெங்களூருவுக்குப் புறப்படவும், அங்கு பலசரக்குக் கடை வைக்கவும் பொருளீட்டுத் தந்ததே அந்தக் கரிசல் நிலம்தான். அதை அடமானம் வைத்து வந்தப் பணம்தான் அவருக்கு ‘பிழைத்து விடலாம்’ என்ற பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது. அதை மீட்கும் காலம் வந்தபோது, கூட கோவில்பட்டிக்குத்தான் போய் வந்தாரே தவிர, கிராமத்துக்குப் போகவில்லை. நிலத்தையும் மக்களையும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் துளிர்க்க வில்லை. அந்த அளவுக்கு பொருளீட்டும் வெறி ஓய்வு ஒழிச்சலின்றி அவரை ஓட வைத்துக் கொண்டே இருந்தது. இப்போது சொந்த கிராமத்துக்குப் போகும் அந்த ஆசை அவருக்குள்ளாக துளிர்விட்டது.

பெங்களூருவுக்குப் போய், குமரேசன் வசமிருக்கும் பத்திரத்தை வாங்கிக் கொண்டு, ஒரு எட்டு கிராமத்துக்குப் போய் வரலாம் என்று தோனிற்று. கரிசல் நிலத்தை கடைசியாக ஒரு தடவை பார்க்கவும் அதில் உருண்டு புரளவும் வேண்டும் போல இருந்தது. அப்போதே கிளம்புவதென முடிவெடுத்தார். கங்கையைப் பார்த்தவர், “கங்கா தாயே... ஒரு வாரம் கழித்து வருவேன். அப்போதாவது எனது அஸ்தி உன்னில் கரைக்கப்பட வேண்டும்” என்று மானசீகமாக சொல்லிவிட்டு எழுந்தார். விசுவநாதர் ஆலயத்துக்கும் அன்னபூரணி ஆலயத்துக்கும் சென்று “சாவை விரும்பி இங்கு வருகிறவர்களுக்கெல்லாம் அதை தந்து விடுகிற உங்களுக்கு என் விஷயத்தில் மட்டும் ஏன் இத்தனை காலதாமதம். என் மீது என்ன கோபம்? எனது ஊரை... எனது மக்களை... எனது நிலத்தை பார்க்காமல், விசாரிக்காமல் உங்களிடம் வந்தது தவறு என்று உணர்த்துகிறீர்களோ...? இதோ புறப்பட்டுவிட்டேன். திரும்பி வரும்போது மரணத்தை பரிசளித்து, எனக்கான முக்தி பேரு கிடைப்பதற்கு வழிவகை செய்யுங்கள். நீங்களும் அரசு அதிகாரிகளைப் போல அலட்சியம் காட்டி என்னை வதைக்காதீர்கள்” என்று வேண்டிக் கொண்டு பெங்களூருவுக்கு புறப்பட்டுப் போனார்.

மறுநாள் இரவு வீட்டுக்கு வந்த அப்பாவைப் பார்த்து குமரேசன் திகைத்தான்.

“என்னப்பா.. திடும்னு வந்து நிக்கிறீங்க...?” என்ற மகனிடம் எல்லாம் சொன்னார். அவன் அவர் சொல்வதையெல்லாம் கேட்ட படியே, அவரையும் அவதானித்தான். அப்பா காசிக்கு போவதற்கு முன்பாக இருந்த உடம்பு இப்போது இல்லை. ஆரோக்கியம் கூடி இருந்தது. தோலில் புதுப் பொலிவு மினுத்தது. கண்களில் தீர்க்கம் தெரிந்தது. அவனுக்குப் புரிந்தது விட்டது. ‘அப்பா நூறு வயது வரை வாழ்வார். காசிக்குப் போய் ஆயுள் நாள்களை, வயதை கூடுதலாக்கிக் கொண்டு வந்து விட்டார். நன்றி இறைவா’ என்று மனதுக்குள் நினைத்தான்.

“நாளைக்கு கிராமத்துக்குப் போய், நம்ம நிலத்தை பார்த்துட்டு, அப்படியே பத்திரத்தையும் ஊர் தலைவர்கிட்டே குடுத்துட்டு வந்துடறேன் குமரேசா.”

“நானும் வரேம்பா.”

“வேணாம்டா. நீ கடையைப் பார்த்துக்க.”

“ரெண்டு நாள்தானே... செல்வி பார்த்துக்குவா.”

“சொன்னா கேளுடா.”

“நீங்க ஊருக்குப் போய் நாற்பது வருடங்களுக்கு மேல ஆச்சுப்பா. எல்லாம் மாறிக் கிடக்கு. மனுஷாளுங்களும் புதுசு... புதுசா இருக்காங்க. நீங்க தடுமாறுவீங்கப்பா...

“வேண்டாம்டா.. குமரேசா. காசியிலேயே ஒன்பது மாதங்கள் காலம் தள்ளினவனுக்கு பொறந்த மண்ணை அடையாளம் கண்டுபிடிக்கிறதா கஷ்டம். என்னதான் மாறி இருந்தாலும் தெருக்களும் கோயில்களும் மாறாதுப்பா என்றவரிடம் அதற்கு மேல் பேச முடியாமல் அமைதியாகி விட்டான்.

அதிகாலை நான்கு மணிக்கே குளித்து, பயணத்துக்குத் தயாராகிவிட்ட அப்பாவைப் பார்த்து வியந்தான் குமரேசன். கடையை கவனித்துக் கொண்டிருந்த போது, வழக்கமாக மூன்று மணிக்கே எழுந்து, கொள்முதலுக்காக பெரிய மார்க்கெட்டுக்கு போய் வருகிறவர்தான் அப்பா. என்றாலும் அந்தப் பழக்கம் இப்போதும் அவரிடம் மாறாமல் இருப்பதில் குமரேசனுக்கு வியப்பு வந்ததில் வியப்பேதும் இல்லைதான். அவரை பேரூந்து நிலையத்துக்கு அழைத்துச் சென்று, மதுரை செல்லும் பேரூந்தில் ஏற்றிவிட்டான். பேரூந்து புறப்படும்போது, தீனதயாளன் மணி பார்த்தார். 4.20 என்பதாகக் காட்டியது. மனதுக்குள்ளாக கணக்கிட்டுப் பார்த்தார். ‘மதுரைக்கு மதியம் ஒரு மணிக்குப் போயிடலாம். அங்கிருந்து விருதுநகர் ஒரு மணி நேரம். அப்புறம், கோவில்பட்டி போயி, கிராமத்துக்குப் போக நாலு மணி ஆயிடும்’ என்று தனக்குள்ளாகப் பேசிக் கொண்டார். பயணம் முழுக்க கிராமத்து பால்ய நினைவுகளில் திளைத்திருந்தார். அதிலும் அந்தக் கரிசல் நிலம் குறித்த நினைவுகள் தீனதயாளனுக்கு குளிர்ந்த நீரூற்றுபோல பீறிட்டு எழுந்தது.

முப்பாட்டன்கள் காலத்தில் முப்போகம் விளைவித்த நன்செய் நிலங்கள் விருதுபட்டி தாலுகாவைச் சுற்றியும் இருந்தன. தாத்தன்கள் காலத்தில் ஒரு போகமாக மாறி, அப்பன்கள் காலத்தில், கரிசல்களாக நிறமும் குணமும் மாறி, வெயிலை அருந்தி முனிவன் போல தவமிருக்கத் தொடங்கிவிட்டன. அப்படியும் சில ஊர்களில் ஒரு போகம் கொடுத்த நிலங்கள் இருக்கத்தான் செய்தது. அப்படியான ஒன்றுதான் தீனதயாளனின் நன் செய்நிலம். அவரது பால்யவயதில் அப்பாவுடன் வயலுக்குப் போய் விடுவது வழக்கம். மடை திறப்பதும், நீர் பாய்ச்சுவதுமாக இருப்பார். கூடமாட அவருக்கு உதவியாக இருப்பதோ, தொல்லையாக இருப்பதோ சிறுவன் தீனதயாளனுக்குப் பிடித்தமான ஒன்றாக இருந்தது. நான்கு வயதிலிருந்து ஏழு வயது வரை அப்பாவும் வயலும்தான் அவனது உலகமாக இருந்தது. ஏழுவயதில் பள்ளியில் சேர்த்தபோது அழுதுப் புரண்டான். “பள்ளியோடம் வேணாம்” என்று மூர்க்கம் காட்டினான். அவனுக்கு அப்பாவின் அருகாமையும் வயலின் ஈரமும் பிடித்திருந்தது. தன்னைப் போலவே மிரட்சிக் காட்டியபடி இருக்கும் பள்ளி மாணவர்களை அவனுக்குப் பிடிக்க வில்லை. முதல் நாள் என்பதால், தீனாவின் அப்பாவும் அவனுடனே மதியம் வரை பள்ளியில் அவன் அருகிலேயே அமர்ந்திருந்தார். அழுகையைத்தான் தீனா நிறுத்தியிருந்தான். “யப்போவ், வயக்காட்டுக்குப் போலாம்ப்பா” என்று ஓயாமல் நச்சரிப்பதை அவன் நிறுத்தவில்லை. அந்த வயதில் அவன் கண்ட முதல் ஆச்சரியம். ‘அப்பா எப்படி வயலுக்குப் போகாம நம்ம கூடயே உட்கார்ந்திருக்கார்’ என்பதுதான். அதுபோல், அவன் போட்ட முதல் தப்புக் கணக்கு, தினமும் அப்பா தன்னோடு பள்ளியோடம் வந்து, பக்கத்துலேயே உட்கார்ந்திருப்பார் என்பது.

மறுநாள் அவன் எதிர்பார்ப்பு பொய்த்ததும் செய்த சண்டித்தனத்தால், ஆசிரியரிடம் இருந்த பிரம்பை வாங்கி அப்பா வெளுத்துவிட்டார். தாறுமாறாக விழுந்த அந்த அடியிலும் அழுகையிலும் தீனாவின் பிஞ்சு மனதுக்குள் எழுந்து நின்றக் கேள்வி. ‘அப்பா அடிப்பாரா?’ என்பதுதான். அன்று தனது குழந்தைமையைத் தொலைத்துவிட்டு, பயம் என்ற உணர்வுக்குள் விழுந்தான். ‘பள்ளியோடம் போகலேன்னா, அப்பா அடிப்பாரு’ என்ற சிந்தனை அவனுக்குள் மிக ஆழமாக வேறூன்றி விட்டது. ஆனால், சனி, ஞாயிறு வந்துவிட்டால், தீனா இல்லாமல் அப்பா வயலுக்குச் செல்வதில்லை. அவனுக்கு படிப்பை விட, நிலத்தோடும், வயல் வரப்புகளோடும், வேளாண் வேலைகளிலும் தன்னியல்பாகவே ஆர்வம் இருப்பதைப் புரிந்துக் கொண்டார். படிப்பிலும் அவன் மக்கு மாணவனாகவே இருக்கிறான் என்பதை ஆசிரியர் மூலம் அறிந்தார். எழுதப் படிக்கத் தெரிந்தாலே போதும் என்ற மன நிலைக்கு வந்து விட்டார். அப்பாவின் இந்தக் குறைந்த பட்ச ஆசையை ஓரளவு நிறைவேற்றிய தீனா எட்டாம் வகுப்போடு பள்ளிச் செல்வதை நிறுத்தியும் விட்டான். அவன் தலையெழுத்துஅவ்வளவுதான் என்று விட்டு விட்டார். அதன் பிறகு வயல்தான் அவனுக்கு எல்லாமே. இனி விவசாயம்தான் நமக்கு வாழ்க்கை என்று பதின்ம வயதில் அவன் முடிவெடுத்த போது, நிலம் நிறம் மாறத் தொடங்கியது. தனது உயிர் சக்தியை இழந்து மலடு தட்டத் தொடங்கியது. விவசாயம் பொய்த்தது. அந்தக் கவலையிலேயே அப்பா போய் சேர்ந்து விட, சில வருடங்களிலேயே அம்மாவும் காலமானார்.

என்ன செய்வதென திகைத்து நின்ற போதுதான் அத்தை தனது மகள் கோமதியை அவனுக்குத் திருமணம் செய்து வைத்தாள். சட்டென்று கடந்து போன வருடங்களில் மூன்று குழந்தைகளுக்குத் தகப்பனானான். சொந்த வீடும் விவசாயத்துக்காக அப்பா வாங்கிய கடனில் மூழ்கி, வங்கியாளர்கள் ஜப்தி செய்து விட்டுப் போனார்கள். பஞ்சம் விருதுபட்டியை மாத்திரம் இல்லாமல், ராமநாதபுரம் மாவட்டம் வரை பரவியிருந்தது. கொஞ்ச நாள்கள் அத்தை வீட்டில் குடும்பத்தோடு போய் தங்கியிருந்தான். கையறுந்த நிலை தலைக்கு மேல் போன போதுதான் பெங்களூருவுக்கு அந்த தாலுகா மக்கள் பஞ்சம் பிழைக்கச் சென்று தலையெடுத்து வருவதாகக் கேள்வி பட்டான். குடும்பத்தோடு அங்கு புலம் பெயர்வதுதான் புத்திசாலித்தனம் என்ற முடிவுக்கு அவன் வந்த போது, உதவி செய்ய யாருமில்லை. அப்போது அவனுக்குக் கை கொடுத்ததுதான் கரிசல் பூமி. கோவில்பட்டியில் இருந்த அப்பாவின் நண்பர் முன்னால் நிலப்பத்திரத்தோடு போய் நின்றான். அவனது நிலையறிந்த அவர், “எப்படியாச்சும் முண்டியடிச்சு மேல வந்துருடா தம்பி. போராடி சாகலாம். பஞ்சத்துல சாகக் கூடாதுடா” என்ற படியே, அடமானம் பெயரில் அவன் எதிர்பார்க்காதத் தொகையைத் தந்து வழியனுப்பி வைத்தார்.

பெங்களூருவுக்கு வந்து புறநகர் பகுதியில் வீடும் நகரில் பலசரக்குக் கடையும் வாடகைக்குப் பிடித்த போது, நம்பிக்கை லேசாகக் துளிர்த்தது, என்றாலும் அந்தப் பெரு நகரத்து மக்களும் மொழியும் சற்று பதட்டத்தையும் பயத்தையும் தந்தது. அதையெல்லாம் கடந்து கால் ஊன்றி நின்றபோது, வாழ்க்கை வசப்பட்டிருந்தது. மூன்று பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைக்க முடிந்தது. மகள்களுக்கு திருமணம் நடத்தி வைக்க முடிந்தது. அடுத்த சில வருடங்களிலேயே குமரேசனுக்கும் பெங்களூருவிலேயே பெண் பார்த்து விமர்சையாக திருமணம் நடத்திக் காட்ட முடிந்தது. சொந்த வீடு, கடை என்று வளர்ந்து விட்டாலும் விருதுநகராக மாறிவிட்ட மாவட்டத்திலோ, கிராமத்திலோ இடம் வாங்கத் தோன்றவில்லை. அடமானத்திலிருந்த நிலத்தை மீட்பதற்கு கோவில்பட்டிக்கு போய் வந்தார். அப்பாவின் நண்பர் இறந்து பல வருடங்களாகி விட்ட சேதி தீனதயாளனை துக்கமடையச் செய்து விட்டதால், கிராமத்துக்குப் போகாமலேயே பெங்களூருவுக்குத் திரும்பிவிட்டார். கோமதி இறந்த போது, தனக்கான காலமும் நெருங்கிவிட்டதை உணர்ந்தார். உயிரோடு, சுயநினைவோடு இருக்கும் போதே சொத்துக்களை பிள்ளைகளுக்கு பிரித்துக் கொடுக்கும் கடமையையும் நிறைவேற்றிவிட்டார். ‘இனி இந்த மனிதப் பிறவியே வேண்டாம். மறு ஜென்மம் பிறப்பும் வேண்டாம். முக்தி தேடி உன்னிடம் வருகிறேன் என்னை எடுத்துக் கொள்’ என்று காசிக்கு ஆசையாக ஓடிவந்தார். பிணத்தை கரை ஒதுக்கும் கடலாக, தீனதயாளனின் ஆசையை கடந்த ஒன்பது மாதங்களாக ஒதுக்கிக் கொண்டே வருகிறது காசி. “எனது கரிசல் நிலத்தை ஊர் பொதுவுக்கு எழுதிக் கொடுக்கும் கர்மாவை நிறைவேற்றிய பிறகுதான் கங்கா நதியும் காசி நகரும் எனக்கான முக்திக்கான கருணையைக் காட்டும் போல”என்று உள்ளுணர்ந்து கிராமத்துக்குப் புறப்பட்டு விட்டார்.

அவர் நகரப் பேரூந்திலிருந்து கிராமத்துக்குச் செல்லும் விளக்குச்சாலையில் இறங்கிய போது, மணி பிற்பகல் மூன்றரை ஆகியிருந்தது. பிரதான சாலையிலிருந்து ஊர் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. மண்ணில் கால்பட்டதுமே காலணியைக் கழற்றிவிட்டு, வெறுங்காலுடன் நடக்கலாமா..? என்று யோசித்தார். ஆனால், அவரை வரவேற்ற வெயில் அதற்கு அனுமதிக்கவில்லை. சாலை தகித்தது. வெயில் அவர் முகத்தில் பட்டதுமே... ‘நம்மூரு வெயிலுக்கு உக்கிரம் கொஞ்சம் கூட குறையல’ என்று தனக்குள்ளாக சொல்லிக் கொண்டார். விலக்குச் சாலை முனையில் சில ஆட்டோக்கள் காத்திருந்தது. ‘அட நம்மூருக்கு ஆட்டோ வசதி எல்லாம் வந்துருச்சா?’ என்று யோசிக்கும் போதே “அய்யா... ஆட்டோ வேணுமா?” என்றபடியே ஆட்டோக்காரர் அவரை நெருங்கினார். தலையசைத்து மறுத்தார்.

“அய்யாவுக்கு எந்த ஊரு? யாரை பாக்க போறீக?” ஆட்டோக்காரரின் கேள்வி அவருக்கு உள் சிரிப்பைத் தந்தது. உள்ளூர்காரனைப் பார்த்து இப்படியொரு கேள்வி கேட்பதென்பது சற்றேறக்குறைய மரணத்துக்கு ஒப்பானதுதான். அறுத்துவிட்டது போல் நாற்பது வருடங்கள் ஊர் பக்கமே வராமல், ஊரில் நடக்கும் நல்லது கெட்டது எல்லாவற்றுக்கும் கோமதியையும் குமரேசனையும் அனுப்பி வைத்ததால், இப்படியான கேள்வி கேட்கும் புதிய தலைமுறையை எதிர் கொள்ளத்தான் வேண்டும் என்று தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டு “உள்ளூர்தான்ப்பா” என்று சொல்லிவிட்டு சாலையில் நடந்தார். போகிற வழியிலேயே கிழக்குப் பக்கமாக அவர் நிலம் கொஞ்சம் உள்ளடங்கி இருந்தது. முதலில் நிலத்தைப் பார்த்து விட்டு, ஊர்த்தலைவர் வீட்டுக்குப் போகலாம் என்று முடிவெடுத்தவராக நடந்தார்.

அரை கிலோ மீட்டர் தூரம் கடந்ததும் இடது பக்கமாக பிரிந்த வண்டிப் பாதையில் நடந்தார். அவர் நிலத்தை கண்டுபிடிப்பதொன்றும் சிரமமாக இல்லை. நிலத்தின் அடையாளமாக ஒற்றைப் பனை ஒன்று நின்றிருந்தது. இப்போது அதன் தலை இல்லை. மழையற்ற கோடை வறட்டு இடி தாக்கி, பனை தனது தலையை இழந்திருந்தது. கரிசல்காட்டு சம்சாரிகளுக்கு மழையின்மை தீராத சாபம் எனில், பனைகளுக்கு வறண்ட இடிகள் சாபம் போலும் என்பதாக நினைத்தார்.

நிலத்தை நெருங்கும் போதே காலணிகளை கழற்றி விட்டார். பத்திரம் அடங்கிய பையையும் காலணியையும் வெடித்துக் கிடந்த நிலத்தின் வரப்பு மீது வைத்தார். நிலத்தைப் பார்த்தார். வெயிலை அருந்தி அருந்தி மண் பொறித்துப் போயிருந்தது. அவர் மனதுக்குள் நிலம் பசுமையாக இருந்த போது, அம்மணமாக இறங்கி விழுந்து புரண்டு, உழவுச் சகதி உடல் முழுக்கப் பூசிக் கொண்டது நினைவுக்கு வந்தது. அந்த நிலமெங்கும் ஓடி திரிந்து, விளையாடியதும் மின்னல் வெட்டுக் காட்சிப் பதிவுகளாக வந்து போனது.

“எந்தாயீ” என்று கதறியபடியே வயலில் இறங்கி மண்ணில் உட்கார்ந்தார். சிறு குழந்தைப் போல் விசும்பி விசும்பி அழுகைப் பொங்கிக் கொண்டு வந்தது. கையில் மண்ணை அள்ளி உள்ளங்கையில் தேய்த்தார். பவுடர் போல உதிர்ந்தது. “அய்யோ... அய்யோ” என்று தலையிலடித்துக் கொண்டு அழுதார். உடுத்தியிருந்த சட்டையையும் வேட்டியையும் உள்ளாடைகளையும் கழற்றி தூர எறிந்து விட்டு, அம்மணமாக நிலத்தில் விழுந்துப் புரண்டார். அவர் புரண்ட இடமெல்லாம் கரிசல் மண் அரைபட்டு நொறுங்கியது. கொஞ்சம் கூட ஒட்டவே இல்லை. வேதனையும் துக்கமும் பொங்க, மண்ணை அள்ளி உடலெங்கும் பூசிக் கொண்டார். அது மெழுகு போல உதிர்ந்ததே தவிர, உடலில் ஒரு துணுக்குக் கூட ஒட்டவில்லை. “தப்புதான் தாயீ... உன்னை விட்டு அறுத்துட்டுப் போனது தப்புதான் தாயீ... என்னை மன்னிச்சுடு” என்று அரற்றினார்... எழுந்து, நிலத்தைச் சுற்றி பைத்தியம் பிடித்தது போல் குறுக்கும் நெடுக்குமாக ஓடினார். மேல் மூச்சு முட்ட முட்ட, ஓடினார். வியர்வை முகத்தில் ஆரம்பித்து. கணுக்கால் வரை வழிந்தது. நிலத்தின் நடுவில் வந்து நின்றார். நிலத்தில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்துப் புரண்டார். இப்போது கரிசல் மண் அவர் உடல் முழுக்க ஒட்டிக் கொண்டது. அதைப் பார்த்த தீனதயாளன் மல்லாந்துப் படுத்து, சுட்டெரித்துக் கொண்டிருந்த சூரியனைப் பார்த்து பெரும் சத்தமிட்டு சிரித்தார். அந்தச் சிரிபொலி கரிசல் மண் வெளியெங்கும் எதிரொலித்தது. அதன் பிறகு, அவர் எழவே இல்லை.

தீனதயாளன் முக்தி அடைந்திருந்தார்.

-நிறைவு-

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...