சுருளி.

உண்மைக் கதைகள்
5 out of 5 (3 )

நாகரீகத்தின் சுவடுகள் தெரியாமல் இருக்கின்ற பல கிராமங்களை இன்றும் நம்மால் பார்க்க முடியும். அப்படிப்பட்ட ஊர்தான் பாறைக்குன்று. பெயருக்கு ஏற்ற மாதிரியே பார்க்கின்ற இடமெல்லாம் சிறியதும் பெரியதுமாக பாறைகளை தாங்கிக் கொண்டு நின்றது அந்த கிராமம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பனை மரங்களும், கருவேல மரங்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தெரிந்தது. அங்கு வசித்த மக்கள் மலைவாசி சமுதாயத்தை சேர்ந்தவர்கள், ஒருகாலத்தில் ஏகப்பட்ட குடும்பங்கள் வசித்தது, தோண்டிப்பாறை பக்கத்துல பெரிய வேப்பமரமும் அதன் கிழே துலுக்கானத்தம்மன் கோவில் இருந்தது, அந்த கோயில் திருவிழாவிற்க்கு மக்கள் கூட்டம் கூட்டமாய் அக்கம் பக்கத்து ஊருலிருந்து வருவார்கள். என் அக்கா சொக்கி மேல ஆத்தா இறங்கி குறி சொல்வா, அவ வாக்கு பொய்ச்சதே கெடயாது, என்று செங்கோடன் தாத்தா அடிக்கடி சொல்வார்.

நானும் சின்ன வயசுல பார்த்துருக்கேன். சொக்கி பாட்டிமேல சாமி வந்தா அவ்வளவு ஆக்ரோசமா இருக்கும், மயானத்துல பிணத்தை பொதச்ச இடத்துல நின்னுகிட்டு அருள்வாக்கு சொல்லும்போது பாக்கவே பயமா இருக்கும், நான் பயத்துல கண்ண மூடிக்கிவேன். ஆனால் என்கூட படிச்ச சுருளிக்கு கொஞ்சம் கூட பயமே இல்லாம சிரிப்பான். பாறைக்குன்று ஊருல இருந்து படிக்க வந்தவங்க மூனு பேரு மட்டும்தான். ஒரு பொண்ணு பேரு வடிவு, சுருளியோட மாமன் பையன் காத்தமுத்து. அதுவும் ஏழாம் வகுப்பு வரைக்குந்தான் ரெண்டு பேரும் வந்தாங்க, சுருளி மட்டும் எட்டாம் வகுப்பு முழு பரீட்சைக்கு முன்னால அவனோட அப்பா தவறிட்டார்னு நின்னுட்டான். வீட்டுக்கு ஒரே பையன் அவனோட அம்மா கொளஞ்சிக்கு கூடமாட வேலை செய்யவும் மலைத்தேன் எடுக்கவும் போய்ட்டான், முழு பரீட்சை மட்டுமாவது எழுத சொல்லி பள்ளிக்கூடதுல சொல்லியும் நான் போய் கூப்பிட்டேன், ஆனால் அவன் வரவே இல்லை. நானும் எட்டாம் வகுப்பு முடிஞ்சதும், எங்கப்பாவுக்கு தேனி பக்கத்துல வேலை கிடைச்சதால அங்க குடி போய்ட்டோம். நான் இப்போ ரெவின்யூ டிபார்ட்மென்ட்ல தாசில்தாரா இருக்கேன். நானும் எவ்வளவோ முறை பாறைகுன்றுக்கு போகணும், சுருளிய பாக்கனும் அப்படி யோசிப்பேன். அதுக்கு இப்போதான் அந்த சந்தர்ப்பம் கிடைச்சது. காரணம் பாறைக்குன்று இருக்குற தாலுக்காவுக்கு எனக்கு டிரான்ஸ்பர் வந்தது, சொல்லப்போனால் என்னோட ஆசைன்னு கூட வச்சிக்கலாம். இப்போ சுருளிய பாக்கறதுக்குதான் போய்ட்டு இருக்கேன், என்று பழைய நினைவுகளை அசை போட்டவாறு தனது பைக்கினை விரட்டிக் கொண்டிருந்தான் மாதவன்..

வழியில் விசாரித்துக்கொண்டு பாறைகுன்று வந்து சேர்ந்தான் மாதவன். தற்போதைய நிலைமை முற்றிலும் மாறுபட்டு இருந்ததைக் காணமுடிகிறது. சில வருடங்களுக்கு முன்புவரையிலும் மலையின் மேலும் அதனை சுற்றியும் நிறைய மரங்களும் பூக்களும் இருந்ததால் மலையைச் சுற்றிலும் பெரிய பெரிய தேன் கூடுகளை காண முடியும். அந்த கிராமத்து மக்களின் முக்கிய தொழில் தேனெடுப்பதுதான். அந்த ஊரு தேனுக்கென்று சுற்று வட்டாரத்தில் நல்ல கிராக்கி இருந்தது. ஆனால் இப்போதோ பாறைக்குன்று கிராமம் தனது பழைய கலையை இழந்து சோம்பி கிடந்தது. முன்பு பார்த்த போது இருந்த பல வீடுகளை காண முடியவில்லை. சில இடங்களில் குடிசைகள் இருந்ததிற்கான அடயாலமாய் இடிந்து கிடந்த மொட்டை சுவர்களைக் காண முடிந்தது. சுருளியின் வீடு அந்த கரடுக்கு பக்கத்துலதான் இருந்தது, என்ற நினைவு வரவே ஒற்றைப் பாறையைக் குறி வைத்தவாறு நடக்கத் தொடங்கினான் மாதவன்.


கரடுக்குப் பக்கத்தில் ஆங்காங்கே இடிந்த நிலையில் இருந்த குடிசை வீட்டினை பார்த்தவன் சுருளி உள்ள இருக்கியா நான் மாதவன் வந்திருக்கேன் என்று கூப்பிட்டும், பதில் வராமல் போகவே இது சுருளி வீடுதானா என்ற சந்தேகம் தோன்ற எதற்கும் உள்ளே சென்று பார்த்துவிடலாம் என்று எண்ணத்துடன் தட்டியை விலக்கியவாறு உள்ளே சென்று பார்க்க தொடங்கினான். உள்ளே குப்பென்று ஒருவிதமான நாற்றம் வரவே சமாளித்திக்கொண்டு பார்த்தவனுக்கு அடி வயிறு என்னமோ செய்தது. பல இடங்களில் குண்டும் குழியுமாகவும், மேற்கூரையில் ஆங்காங்கே ஓட்டை விழுந்து அந்த இடங்களில் பாலீத்தீன் பேப்பர் மூலம் அடைத்து வைத்திருந்தது தெரிந்தது. சில பாத்திரங்கள் ஓட்டை உடைசலாய் போய் கிடந்தது. பாதி எரிந்த விறகு கட்டைகளும், அடுப்பின் சாம்பலில் நாய் குட்டி ஒன்றும் படுத்துக் கிடந்தது. அந்த குட்டி பிறந்து சில நாட்களே ஆகியிருக்க வேண்டும். அந்த குட்டியின் அம்மா எங்கேயாவது பக்கத்தில் இருக்க வேண்டும். நம்மை பார்த்தால் கடிக்கவும் செய்யலாம் என்ற எண்ணம் தோன்ற நோட்டமிட்டவன் கண்களில் சுவரில் பாதி அழிந்தும் அழியாத நிலையில் காணப்பட்ட போட்டோ ஒன்று கவனத்தை ஈர்க்கவே அதை எடுத்து பாத்தவன் முகம் பிரகாசமாய் தோன்றியது.. அவன் நினைவுகள் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஓடியது.


அன்று சுதந்திர தினக் கொண்டாட்டம் என்பதால் தாமரைக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் விழாக்கோலம் பூண்டிருந்தது. மாணவர்கள் பலரும் தங்களுடைய புத்தம் புது ஆடைகளை அணிந்த வண்ணம் மற்றவர்களுக்கு காட்டி ஒருவருக்கொருவர் சந்தோஷத்தின் மிகுதியால் அங்கும் இங்குமாய் ஓடிக் கொண்டிருந்தனர். மாதவனும் அவருடைய பிறந்த நாளன்று எடுத்த புதிய உடையை உடுத்திக் கொண்டு வந்திருந்தான். அவன் கண்கள் மாணவர்களின் கூட்டத்தில் சுருளியைத் தேடி அலைந்தது. ஆனால் சுருளியை எங்கும் காண முடியவில்லை. அவர்கள் அடிக்கடி விளையாடும் நாவல்பழ மரத்தின்கீழ் சுருளி உட்கார்ந்து கொண்டு இருப்பதை பார்த்தவன், டேய் சுருளி பள்ளிக்கூடத்துல இன்னும் கொஞ்ச நேரத்துல கலை நிகழ்ச்சி எல்லாம் நடக்கப்போகுது. நாமளும் நாடகத்தில் நடிக்கறோம் மறந்துடுச்சா உனக்கு, வாத்தியார் உன்னை எங்கன்னு கேட்டுக்கிட்டே இருக்காரு. வாடா போகலாம் என்றான் மாதவன்.


மாதவா நீங்க எல்லாரும் புதுத்துணி போட்டுக்கிட்டு வந்துகிறிங்க. என்ன பாரு பழைய துணி அதுவும் டவுசர்ல ஓட்ட வேற. இந்தத் துணியை போட்டுகினு நாடக நடிச்சா எல்லாரும் என்ன பார்த்து கேலி பண்ணி சிரிப்பாங்க. நான் வரல நீ போடா என்றான் சுருளி. இதுக்குத்தான் நீங்க வந்து தனியா உட்கார்ந்துகிட்டு இருக்கியா, என் பிறந்தநாளுக்கு துணி எடுக்கிறப்பவே, உனக்கும் சேர்த்துதான் எங்கப்பா எடுத்து வச்சாரு, நான்தான் நாடகம் நடிகிறப்போ கொடுக்கலாம்னு வெச்சிருந்தேன், இந்தாடா என்றான் மாதவன். அப்படியா இந்த புது துணி எனக்கா, எங்க குடு பாக்கலாம் என்று ஆசையோடு வாங்கிக் கொண்டவன், அங்கேயேதான் உடுத்தி இருந்த பழைய உடையை கழற்றி எறிந்துவிட்டு புதிய உடையை அணிந்து கொண்டவாறு ரொம்ப நல்லா இருக்குடா மாதவா. நெஜமாலுமே இந்த புது துணி எனக்குதானா என்றதும், ஆமாண்டா சுருளி உனக்குத்தான் என்றவனை கையைப் பிடித்துக் கொண்டு வாடா பள்ளிக்கூடத்துக்குப் போகலாம். இப்போ என்னை யாரும் பார்த்து கிண்டல் பண்ண மாட்டாங்க என்று ஓட்டமும் நடையுமாக சென்றார்கள். நாடகத்தில் சுருளிக்கு ஜமீன்தார் வேடம், அதில் மீசையை முறுக்கி நடிக்கும் போது ஒட்டப்பட்ட பொய் மீசை அடிக்கடி விழுந்ததை எடுத்து ஒட்டிக்கிட்டு நடித்ததும், ஒருமுறை தலைகீழாக ஒட்டிக்கொண்டதும் நாடகம் பார்த்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்ததும், அதனை கண்டு சுருளி தன் நடிப்பை பார்த்து ரசித்து சிரிக்கிறார்கள் என எண்ணிக்கொண்டு மேலும் மீசையை முறுக்கிக் கொண்டது நினைவுக்கு வந்தது. நாடகம் முடிந்ததும் மாணவர்கள் அனைவரும் ஒன்றாக போட்டோ எடுத்துக் கொண்டனர். மாதவனும் சுருளியும் தோள் மேல் கையை போட்டு எடுத்துக்கொண்ட ஞாபகம் வரவும் மாதவன் கண்களில் அவனையும் அறியாமல் கண்ணீர் துளிகள் வழிந்தது.


வெளியில் வந்து அக்கம் பக்கம் யாராவது இருக்கின்றர்களா என்று பார்த்தவன், ஒருவேளை பிடாரியம்மன் கோவில் அருகில் யாராவது இருக்கலாம் என்று எண்ணியவாறு கரட்டினை தாண்டி மொட்டைப் பாறையை சுற்றிக்கொண்டு போனதும், எதிரே தெரிந்த ஒற்றையடி பாதையில் நடக்கத் தொடங்கினான். வழியிலே இருபக்கத்திலும் கள்ளி செடிகளும் காரை முள்ளும் முளைத்து, ஆங்காங்கு உடைந்த மது பாட்டில்களும், தண்ணீர் பாட்டில்களும் சிதறிக் கிடந்தது. அதனால் மிகவும் கவனமாக நடந்தவன் ஒற்றைப் பாறையின் பின்புறம் இருந்த பிடாரியம்மன் கோயிலை அடைந்தான். பிடாரியம்மன் கோவில் மிகவும் சிதிலமடைந்து இருந்தது. கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும் செடிகளும் கொடிகளும் முளைத்து, மேற்கூரை எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் இருந்தது. யாரோ வேண்டுதலுக்காக வைத்திருந்த மண் பொம்மைகள், கையும் காலும் இல்லாமல் பார்ப்பதற்கு ஒருவித அச்ச உணர்வை ஊட்டியது. செடி கொடிகளை விளக்கியவாறு உள்ளே சென்ற மாதவன் தலையில் எங்கிருந்தோ வந்த வவ்வால்கள் உரசியபடி சென்று மறைந்தது. கருவறையில் பிடாரியம்மன் சிலை உருக்குலைந்து சில இடங்களில் குளவி கூடுகள் கட்டி வைத்திருந்ததை கண்டவனுக்கு, ஒரு காலத்தில் எப்படி இருந்த கோயில், இப்படி பாழடைந்து கிடக்கிறது. ஏன் இந்த கோயிலும் ஊரும் இப்படி ஆகிவிட்டது. இங்கு வாழ்ந்த மக்கள் எங்கு போனார்கள். ஒன்றிரண்டு குடிசைகளை தவிர வேறு வேறு எதையும் காண முடியவில்லையே? இந்தக் கோயிலுக்கு யாரும் வருவதில்லை என்று தோன்றுகிறது.
முதலில் சுருளியை கண்டுபிடிக்க வேண்டும். அவனைக் கண்டுபிடித்தால் இந்தக் கோயிலும் ஊரும் இப்படி ஆனதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம். என்று எண்ணியவாறு கோயிலை விட்டு வெளியேறியவன் தன்னுடைய பைக் நிறுத்தி வைத்திருந்த இடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

அப்போது அவனுக்கு எதிரில் ஒரு முதியவர் விறகு கட்டைகளை சுமந்தவாறு நடந்து செல்வது தெரிந்ததும், அவரிடம் விசாரித்தால் ஏதாவது தகவல்கள் தெரியக்கூடும் என்று எண்ணியவன், அந்த முதியவரை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்றான். அந்த முதியவருக்கு வயது எண்பது இருக்கலாம் என்று தோன்றியது. ஒல்லியான தேகம் அதேசமயம் முறுக்கேறிய உடலுடன் காணப்பட்ட அந்த முதியவரிடம், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு இந்த ஊரில் வாழ்ந்தவர்கள் எல்லாரும் எங்கு போனார்கள். இப்படி ஆனதற்கு என்ன காரணம் என்று கேட்டது, அந்த முதியவரின் காதுகளில் அரைகுறையாக விழுந்திருக்க வேண்டும் என்பதை அவரின் முகத்தின் போக்கிலேயே அறிந்து கொண்ட மாதவன், இன்னும் சத்தமாக சொல்லத் தொடங்கினான். முக்கியமாக சுருளியை பற்றியும், அவன் அம்மா கொளஞ்சியைப் பற்றியும் விசாரித்தபோது அந்த முதியவரின் முகத்தில் கவலை படர்ந்ததை அறிந்து கொண்டான். நிச்சயம் இவருக்கு சுருளியை பற்றியும், சுருளின் அம்மா கொளஞ்சி பற்றியும் தெரிந்திருக்க வேண்டும் என்பதை இவரது முகமே சொல்கிறது, என்று எண்ணிக் கொண்டவன் அந்த முதியவர் என்ன சொல்லப் போகிறார் என்று ஆர்வமாக கேட்கத் தொடங்கினான். முதியவர் நீண்ட பெருமூச்சு ஒன்றை இழுத்தவாறு, அதை ஏன் கண்ணு கேட்கற, ஒரு காலத்துல எப்படி இருந்த ஊரு தெரியுமா? யாரு கண்ணு பட்டுச்சோ தெரியல. இப்படி சுடுகாடா மாறிப்போச்சு. கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி அடிச்சு சூரகாத்துல, இங்கிருந்த குடிசையெல்லாம் பிஞ்சி போச்சு, போதாக்குறைக்கு மொத்தமா வெள்ளக்காடா மாறி அடிச்சுகிட்டு போயிடுச்சு. அதுக்கப்புறம் கொஞ்ச பேரு குடும்பமா வேலை தேடி அக்கம் பக்கத்து ஊருக்கு போயிட்டாங்க. சொக்கியம்மா போனதுக்கு அப்புறம் பிடாரியம்மன் கோயிலுக்கு ஜனங்க வரது நின்னு போச்சு, ரெண்டு மூனு குடும்பம் மட்டும் இந்த ஊர்ல ஒண்டிகினு இருக்கிறோம், முன்ன மாதிரி தொழிலும் கெடையாது, சோறு தண்ணி கெடயாது, கெட ஆடுகளை மேச்சிட்டு, இந்த மாதிரி வெறகு பொறுக்கி வித்து வாழ்க்கையை தள்ளுறோம், முன்னாடி செங்கல் அறுக்குற வேலைக்கும், ரைஸ்மில்லு தொட்டி போடுற வேலைக்கும் போவோம், வயசாயி போச்சி பார்வை மங்கி போச்சு, வேலை செஞ்சி வயித்த கழுவுற அளவுக்கு உடம்புல தெம்பும் இல்லை. இந்த கட்டை எப்போ விழும்னு தெரியல. அந்த சுருளி பயலும் வேலை வெட்டிக்கு போகாம குடியே கதின்னு கெடக்கான், கொளஞ்சிய நெனச்சாதான் மனசு தாங்கல என்று சொல்லி நிறுத்தியதும் அந்த முதியவர் கண்களில் ஏக்கமும் வறுமையின் கொடுமையும் தெரிந்து.


அந்த முதியவருக்கு தான் வாங்கி வந்திருந்த பலகாரத்தை எடுத்து கொடுத்ததும், ஆர்வமாக வாங்கி அவசரம் அவசரமாக தின்னத் தொடங்கினார். அதிலிருந்து அந்த முதியவரின் பசியின் தீவிரத்தை உணர்ந்துகொள்ள முடிந்தது. சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தவன், அந்த முதியவரை கைத்தாங்லாக அழைத்துச் சென்று வேப்ப மரத்தின் அடியில் அமர வைத்தான். அந்த முதியவரும் பசி களைப்பு தீர சாவகாசமாக பேசத் தொடங்கினார்.

தம்பி நான் கொளஞ்சியோட அண்ணன் சோனையன் என்றதும், அய்யா என்ன நெனவிருக்கா என்னோட பேரு மாதவன். எங்க அப்பா சதாசிவம் பி டி ஓ ஆபீஸ்ல கிளர்க் வேலை செஞ்சாரே அவரு பையன், நான் தாமரைகுளம் பள்ளிக்கூடத்துல சுருளி கூடத்தான் படிச்சேன். நான் அடிக்கடி உங்க வீட்டுக்கு வந்துருக்கேன் என்றவனை, ஏற இறங்க பார்த்த சோனயன் சதாசிவம் மவனா தம்பி நீங்க உங்க அப்பாரு எப்படி இருக்குறாரா? நல்ல மனுஷன் குணத்துல அவ்ளோ தங்கம் என்றார். அப்பா இப்போ இல்லை நாலு வருசத்துக்கு முன்னால காலமாகிட்டாரு என்றதும், அடடா அப்படிபட்ட மனுஷங்கள எங்க இப்போ பாக்க முடியுது என்றவாறு எங்கேயோ பார்வையை செலுத்த தொடங்கினார். அவருக்குள் எதோ நினைவுகள் ஓடதொடங்கியதை அவரின் முகக்குறி சொல்லாமல் சொல்லியது. அய்யா என்ற மாதவனின் குரலால் சுய நினைவு வந்தவராய், தம்பி உங்களுக்கு கண்ணாலமாயிடுச்சா பொண்டாட்டி புள்ளைங்க சௌக்கியமா என்றதும், மாதவன் முகம் ஏனோ வாடிப்போனது.


அய்யா எனக்கு கல்யாணமாகிடுச்சு, குழந்தைங்க இல்லை சம்சாரத்துக்கு வயித்துல நீர்க்கட்டி இருக்காம், அதான் குழந்தை நிக்காம தள்ளிப் போயிட்டே இருக்கு என்றான் மாதவன். தம்பி மனசு ஒடைஞ்சி போகாதீங்க, நல்ல மனுசங்களுக்கு எந்த கொறையும் வராது. எதோ உட்ட கொற தொட்ட கொறையா இருக்கும். பிடாரி ஆத்தாளுக்கு மண் பொம்மை வைக்கிறதா வேண்டிக்கிங்க சீக்கிரம் புள்ள பொறக்கும் என்றவரை அப்படியே செய்யறேன் அய்யா. சுருளி எங்க இருக்கான் என்ன பண்ணுறான், அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சா? குழந்தைங்க இருக்கா, கொளஞ்சியம்மா எப்படி இருக்காங்க? என்று இடைவிடாமல் கேட்டவணை வியப்போடு பார்த்தவர், சாமி நீங்க பெரிய மனுஷன் புள்ளைங்கரத காட்டிடீங்க , உங்க அப்பாரு கொணம் உங்ககிட்டயும்
அப்படியே இருக்கு என்று சொல்லத் தொடங்கினார்.


சுருளிக்கு என் தம்பி பொண்ணதான் கண்ணாலம் கட்டி குடுத்தோம், கேடு கெட்டவங்க சகவாசத்தால குடியே கதின்னு அலையரான். என் தம்பி மவளும் எவ்ளோ போராடி பார்த்தா, பாவி மவன் திருந்துறத மாதிரி இல்லை. அவளும் ஆறு வருசத்திக்கு முன்னால வலிப்பு நோவு வந்து போய் சேந்துட்டா, ஒரு பொண்ணு இருக்கு, அவளும் இப்பவோ அப்பவோ சடங்காவுற வயசாச்சி, ஆனா இது பத்தி எல்லாம் அவனுக்கு கவலையில்ல, எப்பவாச்சும் செங்கல் சூல வேலைக்கு போவான். சம்பாதிக்கிற துட்டு மொத்தம் கழியற வரைக்கும், கூட்டு சேர்ந்துட்டு குடிப்பான். அவன் அம்மா கொளஞ்சி எவ்ளோ சொல்லியும் கேக்காம துட்டு கேட்டு தள்ளாதவள போட்டு அடிப்பான். கொளஞ்சி புள்ளயோட அங்க இருக்குற கொள்ளயில தொடப்பம் அரிஞ்சிட்டு இருக்கா, வா தம்பி காட்டுறேன் என்று கூட்டிக் கொண்டு போனார் சோனயன்.


கொளஞ்சி வெளுத்த தலையோடு ஒடுங்கிய கண்களும், மெலிந்த உடலும் கொண்டவளாக காணப்பட்டாள். அந்த மூதாட்டியின் தலை எண்ணை கண்டு பல வருடங்களாகியிருக்க வேண்டும். அழுக்கேறிய உடை அதுவும் ஆங்காங்கே கிழிசலாய் இருந்தது. தலையில் முண்டாசு போல ஏதோ ஒரு பழைய துணியை கட்டிக் கொண்டிருந்தாள் அந்த மூதாட்டி. அவளுக்குப் பக்கத்தில் துடைப்ப கதிர்களை அறுத்து வரிசையாக காய வைத்து இருந்தது. சுருளி மகளான அபரஞ்சி துடைப்ப கதிர்களை கட்டுலாக கட்டி முடித்திருந்தாள். அவளுக்கு வயது பண்ணிரண்டை கடந்திருந்தது. அபரஞ்சிக்கு அவள் உடுத்திருந்த உடையை யாரோ கொடுத்திருக்க வேண்டும், தொளதொளவென்று பொருத்தம் இல்லாமல் இருந்தது. நீண்ட பாவாடையை மடித்துத் சுற்றி அழுக்கேறிய ரிப்பன் துணியால் முடிந்து வைத்திருந்தாள். வியர்வையில் நனைந்திருந்த அவளது முகம் பளிச்சென்றும் கண்களில் குறுகுறுப்பும் தெரிந்தது. ஒற்றை ஜடையில் செவ்வரளி பூவினை சொருகி வைத்திருந்தாள்.


தன்னுடைய தாத்தாவுடன் யாரோ ஒரு மனிதர் வருவதைக் கண்ட அபரஞ்சியும், கொளஞ்சியும் வருபவர் யாராக இருக்கக் கூடும் என்ற எண்ணத்தில் வியப்போடு பார்க்கத் தொடங்கினர். பல வருடங்களுக்கு பிறகு பார்த்த கொளஞ்சியையும் சுருளியின் மகள் அபரஞ்சியையும் கண்டு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் மாதவன். வந்திருப்பவர் இன்னார் என்று அறிந்து கொண்டதும், கொளஞ்சி சந்தோஷத்தில் மாதவனை கட்டிக்கொண்டு அழத் தொடங்கினாள். அபரஞ்சியோ நடப்பது என்னவென்று தெரியாமல் மாதவன் கொண்டுவந்திருந்த பலகாரங்களை சுவைத்துக் கொண்டிருந்தாள்.


காலங்கள் வேகமாக ஓடியிருந்தது. மாநில அளவில் ஐஏஎஸ் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக பாராட்டு விழா நடந்து கொண்டிருந்தது. கல்லூரி முதல்வர் அனைவரையும் வரவேற்று மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவியைப் பாராட்டிப் பேசியதும் ஆளுநர் கையால் மாணவிக்கு பரிசும் பாராட்டுகளும் அளித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். வெற்றிக்கான காரணத்தை கல்லூரி மாணவர்களுக்கு பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டதும் மாணவி பேசத் தொடங்கினாள்.


நான் பெற்ற இந்த வெற்றிக்கு முழு காரணம், என்னுடைய தந்தையும் தாயும்தான், இருளர் சமுதாயத்தில் பிறந்த என்னை தான் பெற்ற மகளை போல அன்பு காட்டி வளர்த்து, நான் கேட்பதற்கு முன்னால் எனது தேவைகளை அறிந்து வாங்கிக் கொடுத்து இந்த அளவில் படிக்கவைத்து உங்கள் முன்னால் நான் தலை நிமிர்ந்து நிற்பதற்கு காரணம் அவர்கள்தான். அவர்கள் மட்டும் என்னை தத்தெடுத்து வளர்க்காமல் போயிருந்தால், எனது வாழ்வு குப்பையாக போயிருக்கும். என்னை கோபுரத்தில் வைத்து அழகு பார்த்த அந்த அன்புள்ளங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்பது தெரியவில்லை. ஐஏஎஸ் படிக்க வேண்டுமென்பது எனது கனவும் எனது பெற்றோர் ஆசையும் கனவும் அதுதான். என்னைப்போன்ற எத்தனையோ அபரஞ்சிகள் கல் உடைத்துக் கொண்டும், காகிதக் குப்பை பொறுக்கி கொண்டும் சமுதாயத்தில் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்க்கையை உயர்த்துவதே எனது வாழ்வின் லட்சியம். எனது இறுதி மூச்சு இருக்கும்வரை அதற்காகவே தொடர்ந்து பாடுபடுவேன். உங்கள் அனுமதியோடு இந்தப் பரிசினை பெற்றோரின் கைகளால் பெற வேண்டும் என்பதே எனது ஆசை என்றதும், மாதவனும் கல்யாணியும் மேடைக்கு வரவும், அவர்களின் கையினால் பரிசினைப் பெற்றுக் கொண்டு கண்ணீர் விட்டு கதற தொடங்கினாள் அபரஞ்சி. தனது கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தவாறு கதவோரம் பார்த்தான் மாதவன். அங்கே நன்றியோடு கண்ணீருடன் கையெடுத்துக் கும்பிட்டவாறு விழா அரங்கை விட்டு வெளியேறி நடந்து கொண்டிருந்தான் சுருளி..



तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...