கால முரணிலையின் ஆயுதங்கள் (Weapons of Time Paradox)

அறிவியல் புனைவு
4.9 out of 5 (66 )

25 ஜூன் 2036

நீல வானத்தில் இளஞ்சிவப்பு வண்ணத்தை பூசியபடியே சூரியன் மறைந்து கொண்டிருந்த அழகிய காட்சியை பார்த்தும் அதை ரசிக்கும் மனநிலையில் நானில்லை. காரணம் உலகப் போர். பேச்சு வார்த்தைகள் அனைத்தும் தோல்வியை தழுவிக் கொண்டே போக, இன்னும் ஒரு ஆண்டிற்குள் எப்போது வேண்டுமானாலும் போர் தொடங்கும் என்ற நிலையில் இருக்கிறோம். அதற்காகத் தான் இந்த அவசர கூட்டம் அழைத்திருந்தார் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துரையின் தலைவர் திரு. கார்த்திகேயன்.


கூற மறந்துவிட்டேனே. நான் சண்டிகா (எ) சாண்டி. முப்பத்து ஐந்து வயது பெண் அணு அறிவியலாளர். இந்த கூட்டத்தில் இருக்கும் அனைவரும் என்னை விட மூத்தவர்கள்- வயதிலும், பதவியிலும்.


"நமக்கு கிடைச்ச தகவல்படி நம்ம எதிரி நாடுகள் நமக்கு எதிரா உருவாக்கியிருக்க புதிய போர் விமானங்கள் மற்றும் நவீன ஏவுகணைகள் வச்சு நம்மள தாக்குனா குறைஞ்சது 200 வருஷத்துக்கு ஒரு புல் கூட முளைக்காது" என்றார் கார்த்திகேயன். "அவங்க ஆயுதத்தை முறியடிக்குற மாதிரி நாம அதிநவீன போர் கருவியை உருவாக்கணும்" என்றபடி என்னைப் பார்க்க, அனைவரின் பார்வையும் என் மேல் விழுந்தது.

"இது புதுசு இல்ல. நிகோலா டெஸ்லா ஏற்கனவே அறிமுகப்படுத்தியது தான்" என்று அவர் சொல்ல எனக்கு புரிந்தது.


"அந்த ஆயுதத்தோட ஒற்றை கதிர்வீச்சு போதும். ஒரே நேரத்துல 250 மைல் தூரத்துல இருக்கும் 10,000 எதிர்நாட்டு விமானப்படையும் சிதறிடும். அதன் பெயர் 'டெலி போர்ஸ்' (Teleforce).இன்னொரு பெயர்" என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் நான் குறுக்கிட்டேன் "டெத் ரே (Death ray)."

தொலைவிசை கதிர்கள் என்ற பெயரில் இந்த ஆராய்ச்சி செய்ய நான் இரண்டு வருடங்களாக விண்ணப்பித்திருந்தும் அனைத்தும் நிராகரிக்கப்பட்டது. இப்பொழுது அதற்கு அனுமதி வழங்கப்பட இருப்பதை எண்ணி மகிழ்ந்தேன். நான் அதற்கு கருவி எல்லாம் செய்து வைத்து விட்டேன். இருந்தாலும் கொஞ்சம் கால அவகாசம் கேட்கவேண்டும்.


"நேரம் குறைவா இருக்கே" என்று ஒருவர், என் எண்ணத்தை வாய் மொழியாக்கினார்.


"தெரியும். அதான் அந்த ஆயுதத்தை ஏற்கனவே செஞ்சு உபயோகப்படுத்துன காலத்துக்கு போய் அதைப் பத்தி கத்துட்டு வரணும். அதாவது காலப்பயணம் செய்யணும்" என்றார்.


எனக்கு கோபமும் குழப்பமும் மாறி மாறி வந்தது. என் அறிவையும், ஆற்றலையும், திறமையும் நம்பாமல் ஏதோ காலப்பயணம் என்கிறாரே?


"என்ன? காலப் பயணமா? நிக்கோலா டெஸ்லா காலத்துக்கு போகப் போறீங்களா?" என்றேன் கொஞ்சம் நக்கல் செய்யும் தொனியில். என் கோபம் புரியட்டும்.


"இல்ல. எதிர்காலத்துக்கு" என்றார் கார்த்திகேயன்.


“இது என்ன தலையை சுத்தி மூக்கை தொடுற வேலை? காலப் பயணம் எப்படி சாத்தியம்? போரை வச்சுட்டு இதென்ன விஷ பரீட்சை? எனக்கு வாய்ப்பு கொடுங்க. நான் செஞ்சு கொடுக்குறேன்" என்று சற்று கெஞ்சலாக கூறினேன்.


"எல்லாம் தெரியும். இதை பார்" என்று திடமாக சொல்லி என் முன் நிறைய ஆவணங்கள் நிறைந்த ஒரு பெரிய கோப்புறையை வைத்தார்.


'வார்ப் டிரைவ் திட்டம்’ (Project Warp Drive)' என்று கொட்டை எழுத்துக்களில் அந்த கோப்பின் மேல் பொறித்திருந்தது.


புரியாமல் நான் பார்க்க "இதைப் பத்தி இயற்பியலாளர் கைரா தெளிவா சொல்லுவாங்க" என்று கார்த்திகேயன் சொல்ல, கைரா பேச ஆரம்பித்தார்.


"இப்போ இருக்க காலகட்டத்துல நம்மால மனிதர்களை வைத்து காலப்பயணம் சாத்தியமாக்க முடியலைன்னாலும், கி.பி. 2250-ல் இருந்து 2034-க்கு கவசித் என்பவர் காலப் பயணம் செஞ்சு வந்து நம்ம கிட்ட பேசியிருக்கார். அவர் தான் வார்ப் டிரைவ் பத்தி நமக்கு விரிவாக சொன்னார்.

நம்மால இது வரைக்கும் ஏன் காலப் பயணம் பண்ண முடியலைன்னா எந்த ஒரு பொருளாலும் ஒளியின் வேகத்துக்கு போகமுடியாது. ஒளியணுவின் எடை, பொருண்மை (மாஸ்) இல்லாதது. ஆனா ஆற்றல் அதிகம். அதனால தான் ஒளி அதீத வேகத்துல பயணிக்குது. ஆனா ஒளியணு தவிர வேற எந்த ஒரு பொருள் வேகமாப் போகும்போது அந்த பொருளோட பொருண்மை அதிகரிக்கும். அப்போ அந்த பொருள் நகர இன்னும் அதிக ஆற்றல் தேவைப்படும். அதனால தான் எந்த ஒரு பொருளாலும் ஒளியின் வேகத்துக்கு போகமுடியாது.


ஆனா இந்த வார்ப் டிரைவ் படி நம்ம ஒளியின் வேகத்துக்கு போகாம இடத்தை வளைச்சு காலப் பயணம் பண்ணமுடியும். முதல்ல வார்ப் டிரைவ், இயந்திரத்தை சுத்தியுள்ள ஸ்பேஸ் (space)-இல் ஒரு குமிழி உருவாக்கி அப்புறம் முன்னால் இருக்கும் இடத்தை சுருக்கி, பின்னால் இருக்கும் இடத்தை விரிச்சு நாம போகலாம். ஹ்ம்ம்.. உதாரணத்துக்கு சொல்லனும்னா ஒரு 'ட்ராக்ஸ் பாண்ட்' (pant) உள்ள நம்ம கயறு கொடுக்கணும்னா என்ன பண்ணுவோம்? ஒரு ஊக்கு கயிறோட மாட்டி அந்த 'பாண்ட்ல இருக்கும் துவாரத்துல கொடுத்து முன்னாள் இருக்கும் துணியை சுருக்கி பின்னால் இருக்கும் துணியை விரிச்சு இழுப்போமே. அந்த மாதிரி" என்றார்.


எனக்கு ஓரளவு புரிந்தது போல் இருந்தது. "ஆனா இதை வச்சு ஸ்பேஸ்க்கு தான போகமுடியும். வேறு காலத்துக்கு போக முடியுமா?"


"அப்படி தானே கவசித் வந்தார்" என்றார் கைரா.


"ஆனா எப்போ டெலிபோர்ஸ் உபயோகப்படுத்துனாங்கனு எப்படி தெரியும்?" என்றேன் கேள்வியாக.


கைரா புன்னகைத்தபடி "அதையும் அவரே சொன்னார். 2200-ல் நவீன டெலிபோர்ஸ் உருவாக்கி ஒரு போர் நடந்ததாகவும், அந்த வருடத்திற்கு எப்படி போகணும்னு சொல்லி கொடுத்தார். இதை போல் ஒரு ஷிப் நம்ம உருவாக்க ஒரு மாதம் கூடவே இருந்தார்" என்று கவசித்தை மெச்சிக்கொண்டார் கைரா.


“ஒரு ஆயுதத்தை உருவாக்க எதிர்காலத்துக்கு போகணுங்கிறது ஏத்துக்கமுடியல” என்றேன்.


“மகாபாரதத்தில் கூட அர்ஜுனன் நிறைய ஆயுதங்கள் பத்தி தெரிஞ்சுக்க, பல இடங்கள், காலங்கள் பயணிச்சதா சொல்லுவாங்களே!” என்றார் கைரா.


“புராண கதையும் நிஜ வாழ்க்கையும் ஒண்ணா?” என்ன ஒரு அபத்தம்?!


“அது வெறும் கற்பனைன்னு தோணுச்சுன்னா, நீங்க அதை நிஜமாக்குங்கள்” என்று சிரித்தபடி கூறினார்.


"யாரோ காலப் பயணம் செய்து டெலிபோர்ஸை பற்றி தெரிஞ்சு என் கிட்ட வந்து சொல்லுவாங்க, நான் அது மாதிரியே செய்யணும்.அதானே?" என்றேன் கோபத்தை அடக்கியபடி.


"இல்ல" என்றார் கார்த்திகேயன். "காலப்பயணம் செய்ய போறதே நீ தான்."


நான் அதிர்ந்து சுற்றியிருந்த அனைவரையும் பார்க்க, அங்கிருந்த அனைவரும் இதில் திடமாக இருந்ததார்கள். "ஏன்? எனக்கு காலப் பயணம் பத்தி எதுவும் தெரியாதே?" என்று பதறினேன்.


ஆனால் கார்த்திகேயன் என் கண்ணைப் பார்த்து பேசினார். "ஏன்னா, நாங்க இப்போ வரலாற்றை மாத்த விரும்பல" என்று சொல்லி ஒரு ஏதோ ஒன்றை நீட்டினார். புத்தகம் மற்றும் டேப்பின் (tab) கலவைப் போல பார்க்க கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. "இது பிற்காலத்தில் வந்த நாளிதழ். கவசித் கொண்டு வந்தது" என்றார்.


அதில் 'சண்டிகா, 2036-ம் ஆண்டில் இருந்து 2200-ம் ஆண்டிற்கு வந்த முதல் காலப் பயணி' என்று எழுதி என் புகைப்படம் இருந்தது. அப்பொழுது புரிந்தது, இவர்கள் என்னை விடப் போவதுமில்லை, எனக்கு வேறு வழியும் இல்லை.


இரு வாரங்கள் கைரா எனக்கு உதவியாக இருந்து நான் எப்படி இந்த கால இயந்திரத்தை இயக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்தார். கவசித் இந்த இயந்திரத்தைப் பற்றி சொன்ன போது ஒளிப்பதிவு செய்து வைத்ததைப் போட்டு காட்டினார்.


கவசித் நல்ல உயரம். என் வயது இருக்கும். சற்று இறுகிய முகம், கூர்மையான பார்வை.


"காலப் பயணத்துக்கு முன்னாடி டெலிபோர்ஸ் உருவாகாதுன்னு கவசித் தான் சொன்னார்" என்று பேசும்போது சொன்னார் கைரா. எனக்கு கோபம் வந்தது. இவன் மட்டும் வராமல் இருந்திருந்தால் ஒருவேளை என் ஆராய்ச்சிக்கு இரண்டு வருடங்கள் முன்பே ஒப்புதல் தெரிவித்திருப்பார்களோ?


ஜூலை 6, 2036 அன்று கவசித் உருவாக்கிய கால இயந்திரத்தில் ஏறி புறப்பட தயாரானேன். கி.பி. 2200-ம் ஆண்டு எப்படி இருக்குமோ, அங்குள்ள மனிதர்கள் என்னை ஏற்றுக்கொள்ளுவார்களா என்றெல்லாம் யோசனையும் பயமும் வந்தது.


நான் கிளம்பியதும் என் கண்முன் வினோதமான காட்சிகள் தெரிந்தது. நான் ஏதோ வளைந்து செல்லும் சுரங்கத்தில் செல்வது போலவும், என் முன்னால் இருந்து வரும் ஒளி கீற்றுகள் சுருங்கியும் என் பின்னால் அவை விரிவதைப் போலவும் இருந்தது.


திடீரென்று என் முன்னால் இருந்த ஒளியணுக்கள் பூதாகரமாக விரிந்து, கண் கூசும் வெளிச்சம் ஏற்படுத்த, நான் கண்களை இறுக்க மூடிக்கொண்டேன். "உங்கள் வருகைக்காக நாங்கள் காத்திருந்தோம் Ms. சண்டிகா" என்று குரல் கேட்க திடுக்கிட்டு விழி விரித்தேன்.


அதிநவீன ஆய்வகத்தில் கவசித் நின்றிருந்தான். கூடவே வேறு சிலரும். அவர்கள் அனைவரும் கவசித் போலவே உயரமாக இருந்தனர். பரிணாம வளர்ச்சியின் தாக்கம் போல.


"நீங்க கவசித் தானே. கி.பி. 2250-ல் வாழ்ந்தவர்.. இல்லை.. வாழ போறவர். ப்ச்.. ஏதோ ஒண்ணு. அப்போ இது 2200-ம் வருஷம் இல்லையா?" என்று சுற்றி முற்றி பார்த்தேன்.


"இது கி.பி. 2200-ம் வருஷம் தான். நான் கவசித். 2200-ல் வாழுற விஞ்ஞானி. எங்களுக்கு இப்போ ஒரு இக்கட்டான சூழ்நிலை. அதுக்கு உதவியைத் தேடி எதிர்காலத்துக்கு, அதாவது கி.பி. 2250 வருஷத்துக்குப் போனேன். அங்க தான் 2036-ல் இருந்து சண்டிகாவான நீங்க எங்க காலத்துக்கு வந்து உதவி செஞ்சதா அவங்க கோப்புகளில் இருந்ததைப் பார்த்தேன். அதான் நேரா 2036-ம் வருஷத்துக்கு வந்துட்டேன்" என்றான் கவசித்.

எனக்கு சிரிப்பு வந்தது. ஏதோ எதிர் வீட்டுக்கு சென்று நேராக நண்பன் வீட்டுக்கு வந்தேன் என்பதைப் போல் கூறுகிறான். அவ்வளவு எளிமையாகி விட்டதா இந்த காலப் பயணம்?


"அப்போ 2036-க்கு வந்து உங்க கூடவே என்னையும் கூட்டிட்டு வந்துருக்கலாமே?" என்றேன்.


"நான் வரலாற்றை மாத்த விரும்பல. வரலாறுபடி நீங்க தனியா தான் இங்க வந்தீங்க. நான் அதை மாத்த நினைச்சு தேவையில்லாத அசம்பாவிதம் நடந்துடக் கூடாது. அதான் இரண்டு வருஷம் முன்னாடியே வந்து எல்லாம் கத்துகொடுத்தேன். எப்படியும் மனுஷங்களை முதல்ல அனுப்ப யோசிச்சு, நிறைய ஆராய்ச்சி நடத்துவாங்கன்னு தெரியும்” என்றான்.
கார்த்திகேயன் சொன்ன அதே வார்த்தைகள். 'வரலாற்றை மாத்த விரும்பல.'

"உலகமே போரை எதிர்நோக்கி இருக்கு" என்று கவசித் தொடர, நான் குறுக்கிட்டேன். "இங்கேயுமா? எந்த நாடுகளுக்குள்ள போர்?” என்றேன் சலிப்பாக.


அவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். "இது உலகத்துக்கும் வேற்று கிரகவாசிகளுக்கும் நடக்கும் போர்" என்றான் கவசித். நான் அதிர்ந்தேன்.


"அதான் உங்க உதவியோட டெலிபோர்ஸ் தயார் செய்யாலாமேன்னு யோசிச்சேன். நான் எங்களுக்கு உதவி வேணும்னு கேட்டா உங்க காலத்துல இருக்குறவங்க ஏத்துக்க மாட்டாங்களோன்னு நினைச்சுதான் நான் 2250 ல இருந்து வந்தேன்னு சொன்னேன். 2036-ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் போரில் நீங்க ஜெயிக்கணும்னா சண்டிகா 2200-க்கு காலப்பயணம் பண்ணனும்னும், அதுக்கு முன்னாடி டெலிபோர்ஸ் கதிர்கள் உருவாக்குன்னா அது தோல்வியில் முடியும்னும் சொன்னேன்" என்றான் கவசித்.


கோபம் தலைக்கேற, " ஏன் அப்படி சொன்னீங்க? நான் இந்த ஆராய்ச்சிக்கு எவளோ மெனக்கெட்டுருக்கேன்னு தெரியுமா?" என்று குரலை உயர்த்தினேன்.


அவன் நிதானமாக "தெரியும். உங்களைப் பத்தி எங்க பாடத்தில் படிச்சிருக்கோம். நிகோலா டெஸ்லா அடுத்து டெலிபோர்ஸ்-ஐ பற்றி அதிகம் ஆராய்ச்சி செய்ததும் நீங்க தான். 7 ஜூலை, 2036 இந்த ஆராய்ச்சிக்கு தடை விதிக்க கேட்டு கொண்டதும் நீங்க தான். எங்க 2200க்கு வர்றதுக்கு முன்னாடி எதுவும் தோல்வியோ விபத்தோ ஏற்பட்டு, இந்த ஆராய்ச்சிக்கு தடைன்னு எங்களுக்கு உதவ மாட்டேன்னு சொல்லிட கூடாதேன்னு தான் நான் அப்படி சொன்னேன்" என்றான் கவசித்.


நான் அதிர்ந்தேன். என் இத்தனை வருட கனவை நான் ஏன் காலப் பயணம் செய்த மறுநாளே தடை செய்ய வேண்டும்? ஒருவேளை இந்த ஆயுதம் கவசித் கண்டுபிடித்ததாக காட்டவேண்டும் என்று எண்ணி, இவன் ஏதும் சதி திட்டம் தீட்டியிருப்பானோ?


"நான் உதவி செய்றேன். ஆனா நான் மறுபடியும் என் காலத்துக்கு போனதும் இந்த ஆயுதத்தை அங்கேயும் பயன்படுத்துவேன். அத தடுக்கக்கூடாது" என்றேன்.

என் மன ஓட்டம் அவனுக்கு அப்பட்டமாக தெரிந்திருக்கும் போல. சட்டென சிரித்து பின் அடக்கி கொண்டு "தாராளமா" என்றான்.

நாங்கள் வேலையை ஆரம்பித்தோம். கவசித் ஏற்கனவே இயந்திரத்தை வைத்திருந்தான். வெற்றரையில் (vacuum) துகள்களை ஒலியின் வேகத்தை விட 48 மடங்கு அதிவேகத்தில் முடக்கி, துரிதப்படுத்தி (particle acceleration) பின் அதை விண்ணை நோக்கி செலுத்த வேண்டும். சொல்வதற்கு சுலபம். ஆனால் நடைமுறையில் பல தடைகளும், சவால்களும் இருந்தன. நான் பல நாட்கள் அங்கேயே இருக்க வேண்டியதாயிற்று. அதற்குள் நானும் கவசித்தும் நல்ல நண்பர்களானோம்.


ஒரு நாள் கவசித்திடம் "நான் என் காலத்துக்கு போறதுக்குள்ள அங்க போரே முடிஞ்சுடும் போல" என்றேன் வருத்தத்தோடு.


"கவலைப்படாதீங்க சாண்டி. நீங்க கிளம்புன தேதி, ஜூலை 6, 2036-க்கே நான் உங்களை அனுப்பி வைக்கிறேன். காலப்பயணத்தில் நாம ஆசைப்படுற நேரத்துக்கே போகலாம்" என்றான்.


கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அப்போதுதான் அந்த வினோதமான உலோகத்தாலான சிறிய குடை போன்ற ஒன்று என் கண்ணில் பட்டது.


"இது என்ன?" என்று அந்த பொருளை நோக்கி கைகாட்டி கேட்டேன்.


என்னை பார்த்து யோசித்தவனின் கண்கள் சட்டென விரிய, தனக்குப் பிடித்த பொம்மையை பரிசளித்தவளை கண்ட சிறுவன் போல் சிரித்தான்.


"இது கவசம் மாதிரி. பல வருஷங்களுக்கு முன்னாடியே இருந்தது. இந்த ஒரு கவசத்தை இயங்க வச்சோம்னா சுத்தி ஒரு 200 மைல் வரை எந்த இடத்துலயும் அணு ஆயுதத்தால தாக்க முடியாது. ஏன்னா எந்த ஒரு அணு ஆயுதத்தின் சக்தியும் இந்த கவசத்தை ஊடுருவ முடியாது. 200 மைல் தள்ளி இன்னொரு கவசம் பொருத்தணும். இந்த மாதிரி நிறைய செஞ்சுருக்கோம். ஆனா இப்போ நீங்க பாக்குற இந்த கவசம் நான் செஞ்சேன். இது இன்னும் அதிக தூரம் வரை கவசம் ஏற்படுத்தும்" உற்சாகமாக சொன்னான்.


நான் பிரமிப்பாய் பார்த்தேன். "இது வச்சு சுலபமா ஜெயிச்சிடலாமே".


"சாண்டி, வேற்றுகிரக வாசிகள் ஆண்டி-மேட்டர் குண்டுகள் எல்லாம் உபயோகப்படுத்துறாங்க. அதுக்கு இது மட்டும் போதாதுன்னு தான் தொலை விசை கதிர்களும் பயனப்படுத்தலாம்னு நினைச்சோம்" என்றான்.


"என்ன? ஆண்டி-மேட்டரா? அப்போ வெறும் துகள்கள் போதாது. நாமளும் ஏதாவது பெருசா.." என்று யோசித்தேன்.
"டேகியோன்ஸ் (Tachyons)" என்று இருவரும் ஒரு சேர சொன்னோம்.


ஒளியை விட வேகமாக செல்லக் கூடிய ஒரே துகள். அதை தொலைவிசை கதிரில் பயன்படுத்தினால் ஆண்டி-மேட்டர் விளைவுக்கு இணையாக செயல் படும். முன்பே ஒருமுறை என்னிடம் இவர்கள் டேகியோன்ஸ் உருவாக்குகிறார்கள் என்று கவசித் சொல்லி இருந்தான். ஒருவழியாக செய்து முடித்தோம்.

"ரொம்ப நன்றி சாண்டி. இனி நீங்க கிளம்புங்க. நாங்க பார்த்துக்குறோம்" என்றான் கவசித்.

"ஒரு தடவ நீங்க உபயோகப்படுத்துறத நான் பார்த்துட்டு போறேனே. ஏதாவது பிழை இருந்தாலும் சரி செய்ய முடியும். என் காலத்துக்கும் உதவும்" என்றேன்.
தொலைவிசை கதிரை வெளியே ஒரு இடத்தில் வைத்துவிட்டார்கள். நாங்கள் ஆய்வகத்தில் இருந்து திரை வழியாக பார்த்துக்கொண்டே இயக்கினோம். என் கண்டுபிடிப்பை பார்க்க ஆர்வமாக இருந்தேன்.

சுமார் 100 மின்னல்களின் வெளிச்சத்தோடு கதிர்வீச்சு விண்ணை நோக்கி பாய்ந்தது. பல நூறு மைல்கள் தள்ளி நின்ற நூறுக்கும் மேற்பட்ட வேற்றுகிரக விமானங்களை ஒரே நேரத்தில் தாக்க அவை ஆகாயத்திலேயே சிதறியது. பூமியின் வெளிமண்டலத்தில் நடந்தாலும் நிலத்தில் அதிர்வு தெரிந்தது. பின் அனைத்து பாகங்களும் கீழே விழும்போது கவச கருவியின் உதவியால் அணுவின் கதிர்வீச்சுகளை தடுக்க முடிந்தது.


அனைவரும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தார்கள். எனக்கும் முதலில் சந்தோஷமாக இருந்தாலும் சிறிது நேரத்திற்கு பின் உள்ளுக்குள் ஒரு கலக்கம். என் முகமாற்றத்தைப் பார்த்து கவசித் வந்தான். "என்னாச்சு?"


"வேற கிரகத்துல இருந்து வந்து வெளிமண்டலத்துல போர் புரிஞ்சவங்க மேல் இதை பயன்படுத்தினோம், அவங்க நவீன ஆயுதங்கள் முன்னாடி இது தப்பா தெரியல. ஆனா 2036-ல் நம்ம மண்டலத்துக்குள்ளயே வாழுற சக மனுஷங்க மேல இதை பயன்படுத்தும்போது விளைவு எப்படியிருக்கும்" என்றேன்.


பூச்சி கொல்லி மருந்திற்கு சரியும் பூச்சிகள் போல அந்த விமானங்கள் விழுவதை திரை வழியாகப் பார்த்தேன்.


"கவசித், எனக்கு தொலைவிசை வேணாம். ஆனா உங்கள் உதவி வேணும்" என்று தீர்மானமாக சொன்னேன்.


நான் என்னவென்று சொல்லுவதற்கு முன்னரே கவசித்திற்கு புரிந்தது போல, மீண்டும் அந்த சிறுவன் போன்ற சிரிப்பை உதிர்த்து "தாராளமா" என்றான்.


கவசித்திடம் இருந்து அணு கவசத்தைப் பற்றி கேட்டு தெரிந்து கொண்டேன்.

"சாண்டி, வரலாறுபடி இந்த கவசம் 2036-ல் நீங்க தான் முதல்ல உபயோகப்படுத்துனீங்க. அதனால தான் அன்னைக்கு நீங்க இந்த கவசத்தைப் பத்தி புதுசா கேட்டதும் நான் கொஞ்சம் குழம்பினேன்" என்றான் கவசித்.


"ஓ! அதான் அன்னைக்கு அப்படி ஒரு சிரிப்பு சிரிச்சீங்களா?"


"ஆமா. ஆனா அது மட்டுமில்லை. இன்னொரு காரணம் இருக்கு. நீங்க உங்க காலத்துக்கு போனதும் தெரியும்" என்று புதிர் போட்டான். நான் என்னவென்று பலமுறை கேட்டும் சொல்லவில்லை; விட்டுவிட்டேன். ஆனால் இன்னொரு கேள்வி என் மனதை அரித்தது.


"கவசித், நீங்க கடந்த காலத்துக்கு பயணம் செஞ்சு அங்கிருந்த என்னை இங்க வரவைக்க வார்ப் டிரைவ் சொல்லிக் கொடுத்தீங்க. அதனால தான் நான் காலப்பயணம் செஞ்சேன். அப்போ உண்மையில் யார் முதல் காலப்பயணி? நீங்களா இல்ல நானா? அப்புறம் எதிர்காலத்துக்கு வந்து தொலைவிசை கதிர்கள் உருவாக்கி, அதன் விளைவுகளைப் பார்த்து கடந்த காலத்துக்குப் போய் தடை விதிக்க போறேன். அதே போல எதிர்காலத்தில் நீங்க உருவாக்கிய கவசத்தை நான் என் காலத்துக்கு எடுத்துட்டுப் போறேன். அப்படீன்னா இந்த ஆயுதங்கள் எப்போ உண்மையா உருவாச்சு, எது கடந்தகாலம், எது எதிர்காலம்? ஒரே குழப்பமா இருக்கு" என்றேன்.


"இது தான் கால முரணிலை. Causal loop, Time paradox னு சொல்வாங்க. எதிர்காலத்தில் நடக்கும் நிகழ்வுகள் கடந்த காலத்தின் நிகழ்வுகளை நிர்ணயம் செய்யுங்கிறது தான் இதன் கோட்பாடு. காலப்பயணம் பத்தி ஒரு அனுமானம் இருக்கு. அதாவது காலப்பயணம் செஞ்சா நாம வேறு காலத்துக்கு மட்டும் போகமாட்டோம். வேறு பிரபஞ்சத்துக்கு போவோம். அதாவது நீங்க பிரபஞ்சம் 1-ல இருந்து காலப்பயணம் செய்யும்போது பிரபஞ்சம் 2-க்கு போய்டுவீங்க" என்றான்.


"அப்போ பிரபஞ்சம் 1 என்ன ஆகும்?”


“இது தெரியணும்னா நாம வேற காலத்துக்கு போய் தான் தெரிஞ்சுக்கணும்" என்று என்னை வம்பிழுத்தான்.

நான் கைகூப்பி மறுப்பாக தலையசைத்தேன். "வேண்டாம். ரெண்டு காலங்களிலேயும் போர் நடக்குது. அதை கவனிப்போம்”. இருவரும் சிரித்தோம்.

காலம் கடந்து கிடைத்த என் உயிர் நண்பனிடம் இருந்து விடைபெற்று என் காலத்திற்கு சென்றேன்.

ஜூலை 6, 2036
"சண்டிகா, அஞ்சு நிமிஷத்துலயே வந்துட்ட? என்னாச்சு?" என்று கைரா கேட்டார்.

தொலைவிசைக் கதிரை தடைசெய்ய வேண்டும் என்றும், அதற்கு பதில் கவசத்தை பயன்படுத்தலாம் என்றும் கூறினேன். அணு ஆயுதத்திடம் இருந்து பாதுகாக்கும் கவசம் என்றதும் ஒப்புக்கொண்டார்கள். ஆனால் ஆராய்ச்சிக்குத் தடை செய்ய முதலில் தயங்கினார்கள். தடை செய்தால் தான் நாம் வெற்றி பெற முடியும் என்று கூறி 2200-ல் இந்த போரை பற்றியும், தொலைவிசை கதிரின் தடை பற்றியும் இருந்த புத்தகம் போன்ற ஒன்றை காட்டினேன்.

கார்த்திகேயன் வரலாற்றை மாற்ற விரும்பமாட்டார் என்று தெரியும். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு ஒப்புக்கொண்டனர். அதற்கு பெயர் ‘கவசித்’ என்று வைத்தேன். அவனால் தானே எனக்கும் இந்த உலகிற்கும் இந்த கவசத்தைப் பற்றி தெரிந்தது. கவசித்தின் சிரிப்பு என் கண் முன்னே வந்து சென்றது.

போர் தொடங்கியது. எதிரி நாடுகளின் தாக்குதலுக்கு நாங்கள் பதிலளித்தோம்; அணு ஆயுத தாக்குதலுக்கு 'கவசித்' பதிலளித்தது. அவர்கள் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. எப்படி முடியும்? எதிர்காலத்தில் உருவான கருவி ஆயிற்றே. பல மாதங்கள் நடந்த போரில் நாங்கள் இறுதியில் வெற்றி பெற்றோம்.

ஒருநாள் கைரா என்னை தனியாக அழைத்து காலப்பயணம் பற்றி விசாரிக்க, நான் அனைத்தையும் கூறினேன்.


"இதுக்கு தான் தொலைவிசை ஆராய்ச்சியைத் தடை செய்ய சொன்னியா?" கைரா கேட்டார்.


"ஆமாம். போர் அடிக்கடி வருவதைத் தடுக்க முடியாது. ஆனா என்ன ஆயுதங்கள் உபயோகிக்குறோம்னு நாம முடிவு செஞ்சுக்கலாமே. அணு ஆராய்ச்சியினால நிறைய நன்மைகள் இருக்கு. ஆனா அதை போர் கருவியா உபயோகப்படுத்தி இந்த பூமியையும் மக்களையும் அழிக்காம இருக்கலாமே. ஒருவேளை எதிர்காலத்துல வேற்றுகிரகவாசிகளோட அதிநவீன கருவிகளுக்கு இது சரியா தோணலாம். ஆனா இப்போ இவ்ளோ ஆபத்தான ஆயுதங்கள் வேண்டாம்" என்றேன்.


"அதுவும் சரி தான். காலப் பயணம் பண்ண மாட்டேன்னு என்கிட்ட எவ்வளவு அடம்பிடிச்ச? ஆனா அதுனால தான் இந்த ஆயுதம் கிடைச்சிருக்கு பாத்தியா?" என்றார்.


"ஆமா, இவை இரண்டும் கால முரணிலையின் ஆயுதங்கள்" என்று நான் சொல்ல இருவரும் சிரித்தோம். பின் நான் கைரா அறையை விட்டு வெளியில் வந்தேன்.


திடீரென்று என் மூளையில் பொறி தட்டியது. கவசித் காலப்பயணம் செய்தால் வேறு பிரபஞ்சம் சென்று விடுவேன் என்று சொன்னானே. கிளம்பும் அவசரத்தில் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதுவரை கைரா என்னை ஒருமையில் குறிப்பிட்டதே இல்லை. ஆனால் இப்பொழுது அவர் பேசுவது தற்செயலாகவா? நான் காலப் பயணம் செய்யமாட்டேன் என்று ஒருபோதும் வாய் திறந்து கூட சொன்னதில்லையே? ஆனால் கைரா அடம்பிடித்ததாக கூறுகிறார்?

செக்கசிவந்த வானத்தில் கருநீலத்தை பூசியபடியே முழுமதி சிரித்திட, நான் எந்த பிரபஞ்சத்தில் இருக்கிறேன் என்ற பயம் என்னை சூழ்ந்தது.

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...