JUNE 10th - JULY 10th
மஞ்சள் விளக்கின் மெல்லிய ஒளியின் கீழே நாங்கள் நால்வரும் நின்றிருந்தோம். நானும் புனிதாவும் வராண்டாவின் வாசலிலும், சந்துருவும், மோகனும் எதிர் முனையிலும் நின்றிருந்தனர்.
சந்துரு அங்கிருந்தபடி புனிதாவுக்கு ஜாடை காட்டி அழைத்தான். அவளும் என்னிடம்,"என்ன என்று கேட்டு வருகிறேன்" என்று சொல்லி நகர்ந்தாள்.
வெளியே பரல் பரலாக மழை கொட்டியது. கண்களுக்கு மழையைத் தவிர ஒன்றும் தெரியவில்லை. வராண்டாவிலிருந்து சற்றுத் தள்ளி அவர்கள் பேசிக் கொண்டிருந்தாலும், ஒரு வார்த்தைக் கூட காதுகளை எட்டவில்லை. தகர கூரையின் மீது வேகமாக மோதும் மழைத்துளியினால், உண்டான ஒளி செவிப்பறையைக் கிழியச் செய்தது.
இப்போதுதான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. இந்த நாள் ஒன்றும் அவ்வளவு நன்றாக அமையவில்லை, நினைக்கும்போதே கண்கள் கலங்கியது. எப்படி பேசிவிட்டான், அத்தனைப் பேருக்கு மத்தியில், எத்தனை அவமானமாய் போயிற்று, அவ்வளவு பேரும் எண்ணைப் பார்த்த பார்வையில், உடல் கூசியதை எப்படி சொல்வது. நெஞ்சு அடைக்க, வெளியே பெய்த மழை என் கண்களிலும் பொழிந்தது. கைக் குட்டையால் கண்களைத் துடைத்துக் கொண்டேன். புனிதா என்னை நோக்கி வந்தாள், அவள் முகத்தில் இத்தனை நேரம் இருந்த மகிழ்ச்சி இப்போது இல்லை. தயக்கமாய் கைகளை பிசைந்தபடி என்னருகில் வந்து நின்றாள்.
அவளது தயக்கத்தைப் புரிந்துகொண்டு, "அவளிடம் என்னடி என்றேன்,"அவள் "மோகன் உன்னைக் காதலிக்கிறானாம்," அவள் அப்படிச் சொன்னதும், எரிச்சலில் இருந்த எனக்கு, மேலும் எரிச்சலூட்டியது. என் முகம் மாறுவதை புரிந்துகொண்டு, புனிதா மேலும் பேசினாள். "நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டேன் சங்கீ, (சங்கீதா என்பதை சுருக்கி) சந்துரு பிடிவாதமா கேட்டு சொல்ல சொல்றான்,எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை," என்றாள்.
என் நிலைமையை என்னவென்று சொல்வது, கோபமும், பயமும், வெறுப்பும், கொஞ்சம் நஞ்சம் ஒட்டியிருந்த நம்பிக்கையும், உடைந்துபோக மனசுடைந்து அழுதேன். நான் அழுவதைக் கண்டு புனிதாவும் அழுதபடி, "அழாதே சங்கீ, அழாதே டி" என்று என்னைத் தேற்ற, நானோ மொத்தமாய் நொறுங்கிப் போயிருந்தேன்.
இன்று மாலை,
பொதுத் தேர்வு நெருங்கிவிட்டது. அதனால், பள்ளியிலும், டியூஷனிலும் படிப்பு படிப்பு என்று ஆர்வத்தோடும், பயத்தோடும் ஓடிக் கொண்டிருந்தோம். மாதிரித் தேர்வுகள் நடப்பதால், ஒருநாளும் டியூஷன் வரத் தவறுவதில்லை. என்றும் இல்லாமல் இன்று விட்டு விட்டு மழை பெய்தபடி இருந்தது. வீட்டிற்கு வரும்போதோ, டியூஷனுக்கு வரும் வரையோ, மழை இல்லை. ஆனால், வந்த அரைமணி நேரத்தில் தொடங்கிய மழை, இன்னும் நிற்கவில்லை.
நானும் புவனாவும் இன்று கொஞ்சம் தாமதமாக வந்தோம். இன்று நிறையபேர் வரவில்லை, முக்கியமாக பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் முழுமையாக வரவில்லை. அதனால், எங்களுக்குக் கொஞ்சம் வசதியாக இருந்தது. எல்லா இடங்களிலும் நாங்கள் மட்டுமே இருந்தோம். எங்கள் வகுப்பு ஆண்கள் சிலர் வெளியிலும், ஒன்றிரண்டு பேர் உள்ளேயும் இருந்தனர். நானும் புவனாவும் வாசலிலேயே நின்று பேசிக் கொண்டிருந்தோம்.
நாங்கள் ஆர்வமாக பேசிக் கொண்டிருந்தோம், யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்று தெரியவில்லை. திடீரென ஒரு குரல், எங்களை நிகழ்காலத்திற்கு இட்டு வந்தது. "சீ வழிவிடுங்க, வழியிலேயே நின்று பேசிகிட்டு இருக்கீங்க, உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட அறிவில்லையா." என்று விகாரமாய் கத்தினான் அவன். அங்கே அத்தனை பேரும் அமைதியானார்கள். சந்துருவும், மோகனும், எங்கள் எதிர்தரப்பு சவிதா, கோமதி, பத்மா, பவ்யா, சுமதி என்று அனைவரும், எங்களையே பார்க்க, என் மனம் கூனிக் குறுகிப் போனது.
நாங்கள் அமைதியாக உள்ளே சென்று அமர்ந்துகொண்டோம். எங்களைச் சுற்றி அனைவரும் சத்தம் வராமல் எங்களைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தனர். அழுகையை அடக்க முடியாமல் விசும்பினேன், வெளியிலிருந்த ஆண்கள் சிலர், உள்ளே வந்து "என்ன! என்ன!" என்று சந்துருவிடம் கேட்பதும், அவன் "அதோ அவன்தான், சங்கீதாவ செமையா அசிங்கபடுத்திவிட்டான்" என்று சொல்வதும், பதிலுக்கு அவர்கள் "சங்கீதாவையேவா!" என்று சொல்வதும், பதிலுக்கு சத்தம் வராமல் சந்துரு சிரிப்பதும், எனக்கு இன்னும் அவமானமாய் இருந்தது.
அவமான உணர்விலிருந்து என்னால் விடுபட முடியவில்லை. நான் என்ன தவறு செய்தேன், அவன் என்னைச் "சீ" என்று சொல்லி விட்டானே, என்று, என் மனம் புலம்பியது. என்னைப் பற்றிய பேச்சுப் போய், மற்றவர்கள் அவனைப் பற்றிப் பேசுவது கேட்டது. புவனா என் காதருகே "சங்கீ அழாதே சங்கீ" என்று கெஞ்சிக்கொண்டிருந்தாள். நான் நிமிர்ந்தேன், திரும்பிப் பார்த்தேன், அவன் தனியாக அமர்ந்து, புத்தகத்தை திறந்து வைத்துக் கொண்டு, குனிந்து அமர்ந்திருந்தான். வந்ததிலிருந்து அவன் அப்படிதான் உட்கார்ந்திருக்கிறான் என்று, அவர்கள் பேச்சில் தெரிந்தது.
அறையில் கூட்டம் இல்லை. எங்களோடு சேர்த்து சுமார் இருபது பெண்களும், அதிசயமாக சந்துருவும், மோகனும் அமர்ந்திருந்தனர். சட சட வென மழை பெய்யத் தொடங்கியது. வெளியிலிருந்த ஆண்கள் அப்படியே ஓடிப்போயிருக்க வேண்டும், சற்று நேரத்தில் மழையின் வேகம் கூடியது. நிமிடங்கள் கழிந்தது, கால், அரை, என்று ஒரு மணிநேரம் தாண்டி மழை கொட்டிக் கொண்டிருக்க, ஆசிரியர் வந்தால், "படிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தால், பிள்ளைகள் காத்திருக்கிறார்கள்," என்று, அவர் தரும் பாராட்டுக்காக காத்திருந்த கூட்டம், கலையத் துவங்கியது. குடை வைத்திருந்த பெண்கள் மழையை பார்க்காமல் கிளம்பினர். சிலர் வீட்டிலிருந்து ஆட்கள் வந்து விட்டனர், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் நனைந்தாலும் பரவாயில்லை என்று ஓடிவிட்டனர். கூட்டம் குறைய குறைய எங்களுக்கு பயம் கூடியது, அவன் மட்டும் இன்னமும் தலை நிமிரவில்லை.
அப்பா வந்துவிடமாட்டாரா என ஏங்கினேன். அங்கே இருக்கப் பிடிக்காமல் இருவரும் எழுந்து வராண்டாவிற்கு வந்தோம். மழை எதிரில் வருபவர் யாரென்று அடையாளம் காண முடியாத அளவுக்கு பெய்தது. எங்களோடு மிச்சமிருந்த பெண்களும், இப்போது அவரவர் வீட்டிலிருந்து ஆட்கள் வர கிளம்பினர். நாங்கள் தனியாய் நின்றோம். நாங்கள் தனியாய் இருப்பதைக் கண்டு, சந்தருவும் மோகனும் அருகில் வந்தனர். சந்தரு புனிதாவிடம் சொன்னான், வீட்டிலிருந்து ஆட்கள் வரும் வரை நாங்கள் துணைக்கு இருக்கிறோம். என்று, அவன் சொன்ன அந்நேரம், எங்களுக்குக் கடவுளாகத் தெரிந்தான். எங்களுக்கு நம்பிக்கை பிறக்க, கொஞ்சம் பயம் தெளிந்தது.
இப்போது,
நான் வராண்டாவின் ஒரு மூளையில் சாய்ந்து அழுது கொண்டிருந்தேன். புனிதாவின் பயம் கோபமாக மாறி அவர்களிடம் எரிந்து விழுந்தாள். "எல்லாம் உங்களால்தான் வந்தது, ஏற்கனவே அந்த பைத்தியம், இப்போ நீங்க, இதெல்லாம் பேச உங்களுக்கு நேரம் காலம் இல்லையா, உங்களை நம்பி நின்னா, கழுத்தருத்துட்டீங்களேடா பாவிங்களா," என்று கத்தினாள்.
மறுமுனையில் சந்துரு எகிறினான், "யாரைப் பார்த்து டா போட்டு பேசுர, தெருவை தாண்டமாட்ட ஞாபகம் இருக்கட்டும், பாவம் பார்த்து நின்னா, ரொம்பதான் பேசுர, அவ என்னவோ நீலிக்கண்ணீர் வடிக்கிரா, நீயென்னமோ துள்ளுர, அதோ உள்ளே ஒன்னு இருக்கு பார், அதைக் கட்டிகிட்டு அழுங்க, டேய் வாடா…!," என்று, மோகனை இழுத்துக் கொண்டு போனான். அவர்கள் மழையில் நனைந்து, கரைந்து, காணாமல் போயினர்.
இதற்கு மேல் அங்கிருக்க எங்களுக்கும் தைரியம் இல்லை. நாங்களும் மழையில் இறங்கி நடக்க ஆயத்தமானோம். அந்த நெடி, எங்களை இருள் சூழ்ந்தது. அதுவரை இருந்த மின்சாரம் இப்போது துண்டிக்கப்பட்டது. அதே நொடி, இருவரும் ஒருசேர வீல் என அலரிக் கூச்சலிட்டோம். எங்கள் கூச்சல் மழையின் இறைச்சலில் ஒன்றுமில்லாமல் போனது. இதயம் நெஞ்சுக்கு மேலெழும்பி துடித்தது. இதயம் துடிப்பது, மார்பின் மீது மென்மையான பொருளால், ஓங்கி அடிப்பதுபோல் இருந்தது. நாங்கள் ஒருவரை ஒருவர் இருக்கமாகப் கட்டிக்கொண்டு, அங்கிருந்த சுவரில் ஒட்டிக்கொண்டோம்.
மழையின் சப்தத்தை தாண்டி, எங்களால் எந்த சப்தத்தையும் கிரகிக்க முடியவில்லை. புனிதா என் காதோடு வாய் வைத்து, "சங்கீ தயவுசெஞ்சு சத்தம் போடாதே, அவனுக்கு நாம் இங்கே இருப்பது தெரியவேண்டாம், நாம் பயத்தில் ஓடிப் போய்விட்டோம், என்று, நினைத்துக் கொள்ளட்டும்." என்றாள், நான் பிரமை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தேன்.
எனக்கு அவன் அங்கிருந்து எழுவதும், அப்போது புத்தகம் கீழே விழுவதும், அவற்றை பொறுக்கி எடுப்பதும், பின், அவன் நடப்பதும், தெளிவாய் கேட்டது. அந்தக் காலடி ஓசை அறையை விட்டு வெளியே வந்து, வராண்டாவில் நுழைந்து, ஒவ்வொரு அடியாய் முன்னேறி வந்தது. நெருங்கியும் விலகியும் எழும் காலடி சப்தம், அந்தப் பொழுதை அமானுஷ்யமாய் உணரச்செய்தது. முகமும் உடலும், உள்ளும் புறமும், வியர்வையில் நனைந்தது. நடுக்கத்தோடு, ஏதேனும் அதிசயம் நடந்துவிடாதா என காத்திருந்தோம்.
இருளுக்கு எங்கள் கண்கள் கொஞ்சம் கொஞ்சமாய் பழக, சில விவரங்கள் எங்களால் அறிய முடிந்தது. அவன் வராண்டாவில் இல்லை. அப்போது, அவன் அந்த அறையில் தான் இருக்கவேண்டும். அறைக்கும் வராண்டாவிற்குமான திறப்பு, இன்னமும் மையிருட்டாகவே இருந்தது. எங்களுக்கு அருகில் அவன் இல்லை என்பது, நிம்மதியளித்தாலும். அவன் இப்போது இங்கே இருக்கிறானா, இல்லையா என்பது கேள்வியானது. ஒருவன் இருந்ததனால் ஏற்பட்ட பயம் போய், அருகில் ஒருவரும் இல்லையே என்ற பயம் ஒட்டிக்கொண்டது.
பயத்தின் வெளிப்பாடாய், அனிச்சையாய் "அண்ணா" என்றேன். "பயப்படாதீங்கம்மா, இங்கேதான் இருக்கிறேன்" என்று பதில் வந்ததும், ஓ வென அழுதுவிட்டேன். ஏன் அழுதேன், எதற்கு அழுதேன், என தெரியவில்லை. என்னை ஆற்றுப்படுத்தும் வரை, எனக்கு அழுகை தேவைப்பட்டது. அதனால், தொடர்ந்து அழுதேன். இப்பொழுது ஒளி எங்களைச் சூழ்ந்துகொண்டது. ஆனால், இருளின் தாக்கம் எங்கள் கண்களை விட்டுப் பிரிய போதிய நேரம் தேவைப்பட்டது.
இப்போது, அதே மஞ்சள் விளக்கொளியின் கீழ், நானும் புனிதாவும் அவரும் நின்றிருந்தோம். எங்களால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. அழுதுகொண்டே இருந்தோம், அவர் பேசினார்…
"என்னை மன்னிச்சிடுங்கம்மா, யார் மேலேயோ உள்ள கோபம், உங்க மேல காட்டிவிட்டேன். என் மேல பயத்தில் இருந்தீங்க, அதான் நான் அங்கேயே இருந்துவிட்டேன்."
இந்த பொழுதில் எங்கள் உணர்ச்சிகளை எப்படி வெளிப்படுத்துவது என்று புரியாமல், அதை அழுகையாய் வெளிப்படுத்திக்கொண்டிருந்தோம். நம்பிக்கை இழந்த பொழுதில், நம்பிக்கை அளித்த அவர் இப்போது தெய்வமாக தெரிந்தார்.
மணி ஏழு, வழக்கமாய் எங்கள் டியூஷன் முடியும் நேரம். மழை நின்று போனது. அப்பாவின் இருசக்கரவாகனமும் வந்து நின்றது. புனிதா என்னை இடித்து, "அப்பா, கண்ணை துடை, தப்பா நினைக்கப் போகிறார்." என்று, சரியான நேரத்தில் என்னை உசுப்பினாள். நான் கண்களை துடைத்துக் கொண்டு, வெளியே சென்றேன்.
"எங்களுக்காக காத்திருந்ததற்கு நன்றி அண்ணா," என்றபடி வண்டியில் ஏறினோம். அப்பாவும், ஒரு நேசப் புண்ணகையை உதிர்த்துவிட்டு, வண்டியை இயக்கினார்.
அப்பா, "என்னம்மா? இன்னைக்கு டியூஷன் எப்படி போச்சு, பரீட்சைக்கு தகுந்ததா எதாச்சும் படிச்சீங்களா இல்லை, எப்பவும் போல கலாட்டா பன்னீங்களா? என்று கலகலப்பாய், சிரித்த முகத்துடன் வினவினார்.
"பரீட்சைக்கு தகுந்ததா தெரியவில்லை. ஆனால், நல்ல பாடம் ஒன்றைக் கற்றுக் கொண்டோம். என்று, மனம் நிறைந்த நிம்மதியுடன் பதிலலித்தேன்.
#404
38,250
750
: 37,500
16
4.7 (16 )
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
visalakshi.jayayaman
ramyak639
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50