தாய்மை

உண்மைக் கதைகள்
4.7 out of 5 (17 )

தாய்மை

சுட்டெரிக்கும் சூரியன் தன் வெப்பத்தை தாராளமாய் வழங்கிக் கொண்டிருக்க… அந்த வெயிலையும் பொருட்படுத்தாது தன்னால் முடிந்த மட்டும் வேகமாய் நடந்தார் துரைசாமி.முதுமையின் தளர்வு அவரை நடக்க விடாமல் தடுத்தது.ஆனால் அதையும் பெரிதுபடுத்தாமல் தன்னால் முடிந்தவரை கொஞ்சம் எட்டி நடையைப் போட்டவர் அவர் வரவேண்டிய நீதிமன்றத்தில் வந்து நின்றார்.

அந்த வளாகமே பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.கருப்பு உடையணிந்தவர்களும்,காக்கி உடை அணிந்தவர்கள்,பொதுமக்கள் என பலவித மனிதர்களால் நிரம்பி வழிந்தது.

இன்று துரைசாமியின் வழக்கிற்கான முதல் நாள்.


துரைசாமிக்கு வேலூர் பக்கத்தில் உள்ள ஒரு சின்னக்கிராமம் தான் அவருடைய சொந்த ஊர்.இத்தனை காலமாய் நிம்மதியாய் வாழ்வை கழித்து வந்தவருக்கு சில வருடங்களாக நிம்மதி இல்லாமல் இப்பொழுது தன் பேரன்பேத்திக்கு நியாயம் கிடைப்பதற்காக சென்னையில் உள்ள உயர்நீதிமன்றத்தில் தனது மருமகனை எதிர்த்து வழக்குத் தொடுத்துள்ளார் துரைசாமி.


துரைசாமிக்கு ஒரே மகள் வள்ளி.அவளை பக்கத்து ஊரில் உள்ள செல்வம் என்பவருடன் திருமணம் முடித்து வைத்தார் பெரியவர்.செல்வத்தோடு வள்ளியின் வாழ்க்கை நன்றாகப் போய் கொண்டிருந்தது. இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின்பு வள்ளிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அவளை பல மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்து சரியாகாமல் போக அவள் இறந்து போகிறாள்.இனிமேல் தாங்கள் வாழும் வாழ்க்கையே வீண் என அவர்கள் நினைத்து விரக்தியாய் பெற்றவர்கள் இருவரும் வாழத் துவங்கினர்.

வள்ளி இறந்து ஆறு மாதத்திலேயே செல்வம் தன் இருகுழந்தைகளையும் துரைசாமியிடம் விட்டுவிட்டு இரண்டாம் திருமணம் செய்துக் கொண்டான்.அதனால் துரைசாமி தன் மனைவியின் உதவியோடு மகளின் மைனரான இரண்டு பிள்ளைகளையும் தன்னுடன் வளர்க்கத் தொடங்கினார் துரைசாமி.

பெரிதாக வசதிகள் எதுவும் இல்லாததால் துரைசாமி தினமும் வேலைக்கு போய் சம்பாதித்தால் அவர்களுக்கு மூன்று வேளை சாப்பாடு என்ற நிலைமையில் இருந்தது.

இருந்த ஒரே வீட்டையும் தன் பாசமான மகள் வள்ளிக்கு சீதனமாக கொடுத்து விட்டார்.இப்பொழுது அந்த இடத்தில் வேறொரு பெண் வந்து இருக்கிறாள்.அதைப் பார்த்த பெற்றவர்கள் மனது வேதனை அடைந்தது. நடந்ததை யாரால் மாற்ற இயலும் என்று தங்களை அவர்களே தேற்றிக் கொண்டார்கள்.

செல்வம் வாரத்திற்கு ஒரு முறையாவது வந்து தன் இரு பிள்ளைகளையும் பார்த்து விட்டு அவர்கள் விரும்பிக் கேட்கும் பொருட்களை வாங்கிக் கொடுத்து விட்டுச் செல்வான். நாட்கள் வேகமாய் கடக்க அவன் வருவது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போனது.செல்வம் தான் பெற்ற இருபிள்ளைகளைப் பற்றியும் மறந்து போனான்.

கடைசியில் அவனுடைய புதுமனைவிக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தவுடன் செல்வம் வருவது முற்றிலும் நின்று போனது.

துரைசாமிக்கு சிறிது நாள் உடல்நிலை சரியில்லாமல் போனதால் வேலைக்குச் செல்ல முடியவில்லை அதனால் பேரப்பிள்ளைகள் பட்டியினால் துடித்தனர் .அவர்கள் இப்படி கஷ்டப்படுவதைப் பார்த்த துரைசாமியால் தாங்க முடியவில்லை.தான் செல்லமாய் வளர்த்த மகளின் பிள்ளைகள் இப்படி அநாதையாக நிற்பதைப் பார்த்து பொறுத்துக் கொள்ளாதவர் பேரப்பிள்ளைகளின் பராமரிப்பு செலவுக்காக பணம் வேண்டி நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்ற நோக்கத்தோடு இப்பொழுது உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் துரைசாமி.

வக்கீலிடம் தன் நிலைமையைச் சொல்ல அவரும் வழக்கை எடுத்து வாதாடுவதாகச் சொல்லி இன்று அவருடைய வழக்கிற்கான முதல் நாள்.நீதிமன்றத்தில் நீதிபதி முதலில் துரைசாமியிடம் விசாரித்தார்.


" துரைசாமி உங்க பக்கம் உள்ள வாதங்களை சொல்லுங்க"


"அம்மா என் பொண்ணு வள்ளி இறந்த பிறகு என் பேரப்பசங்களை வந்து நான் தான் கவனிச்சுக்கிறேன் என் மருமகன் என்னன்னு கூட பெற்ற பிள்ளைகளைப் பற்றி கவலைப்படலை, முதுமையினால் என்னால முதல்ல மாதிரி இப்போ உழைக்க முடியலை,உழைத்தால் தான் சாப்பாடு அப்படிங்கிற வாழ்க்கை என்னோடது நான் வேலைக்கு போகலைன்னா குழந்தைகள் இரண்டும் ஒருவேளை சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படுறாங்க அதனால அந்தப் பிள்ளைகளின் பராமரிப்பு செலவுக்காக அவங்க அப்பாகிட்ட இருந்து மாசமாசம் அவங்களுக்கு தேவையான பணத்தை தரச் சொல்லுங்க" என்று தன் பக்க நியாயத்தைச் சொன்னார்.

ஆனால் செல்வத்தின் வக்கிலோ "செல்வமே இரண்டு பிள்ளைகளையும் வளர்ப்பதாகச் சொல்கிறார்,அதோடு தன்னுடைய மாமனார் பணத்திற்கு ஆசைப்படுகிறார்" என்று தன் பக்க பொய்யாய் நியாயத்தை சொன்னார்.

இதைக் கேட்டதும் அங்கிருந்த அனைவரும் செல்வம் சொல்வதே சரியென்று நினைக்கும் பொழுது துரைசாமி வெளிப்படையாய்… "அம்மா இத்தனை வருஷமா பார்த்துக்காதவரு இப்போ நான் பராமரிப்பு செலவுக்காக பணம் வேணும்னு சொன்னவுடன் பார்த்துகிறேன்னு பொய் சொல்றாரும்மா" என்று தான் இதுவரை பட்ட அனுபவத்தில் பேசினார்.

உடனே செல்வம் "அவரே வயசாகி போய் இருக்காரு இதுல எப்படி அவரால என் பிள்ளைகளை பார்த்துக்க முடியும்? அதனால நானே பார்த்துகிறேன்" என்றான்.

துரைசாமியின் வக்கிலோ "குழந்தைகள் இருவரும் மைனராக இருப்பதால் அவர்கள் தாய்வழி தாத்தாவின் பராமரிப்பில் இருக்க வேண்டும்" என்று தன் வாதத்தை வைத்தார்.

செல்வத்தின் வக்கிலோ "நமது சட்ட உரிமைப்படி குழந்தைகள் தந்தையின் பொறுப்பில் வளர அனுமதி உண்டு அதனால் செல்வம் பணத்தை தராமல் அவரே வளர்ப்பதாக விருப்பம் தெரிவிக்கிறார் " என்றார்.

நடந்த இருபக்க வாதத்தையும் வழக்கையும் விசாரித்த நீதிபதி "குழந்தைகளில் ஆண்குழந்தை தந்தையிடமும் பெண் குழந்தை தாத்தாவிடம் வளர வேண்டும் என்றும் பெண் குழந்தையின் பராமரிப்பு செலவிற்காக மாதம் பத்தாயிரம் ரூபாய் தர வேண்டும்" தீர்ப்பு தந்தார்.

மாதம் பத்தாயிரம் தர விரும்பாத செல்வம் நீதிபதியிடம் "அம்மா என் இரண்டு பிள்ளைகளையும் நானே சந்தோஷமா வைச்சு பார்த்துகிறேன் அதனால ரெண்டு பேரையும் என்கிட்ட வளர அனுமதி கொடுங்க" என்று கெஞ்சியபடி தன் வாதத்தை வைத்தான்.

இதைக் கேட்ட நீதிபதி "அந்த குழந்தையோட தகப்பனாக இருப்பதால் நான் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தரேன் பிள்ளைகள் உங்க கூட சந்தோஷமாக இருப்பதற்கான ஒரு சாட்சி கொடுங்க " என்று வழக்கை ஒத்தி வைத்து ஒருவாரத்தில் சாட்சி ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

துரைசாமிக்கு நம்பிக்கையே போய் விட்டது.பேரப்பிள்ளைகளின் நலன் கருதி அவர் போட்ட வழக்கு இப்பொழுது அவர்களுக்கே எதிராக மாறி விடுமோ? என்று பயந்தார்.மூத்தவன் ஆண் பிள்ளை அதோடு அவன் நான்கு வருடங்களில் பெரியவனாகி விடுவான்.ஆனால் பெண்பிள்ளைக்கோ பத்து வயது கூட முடியவில்லை.பெண்பிள்ளையின் பாதுகாப்பு, எதிர்காலத்தை நினைத்து கவலையடைந்தார்.

மறுநாள் செல்வம் தன் மகளையும்,மகனையும் வீட்டிற்கு அழைத்துச் சென்று தற்போது நடைபெறும் வழக்கு தன் பக்கம் தீர்ப்பு வருவதற்காக அவர்களுடன் அன்போடு இருப்பது போல் அவனும் அவனது மனைவியும் ஒன்றாக பாசமாக இருப்பது போல் நடித்து மகிழ்ச்சியாக அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டான் செல்வம்.


ஒரு வாரத்திற்கு பின்…


நீதிமன்றத்தில் செல்வத்தின் சார்பில் ஒரு புகைப்படம் தாக்கல் செய்யப்பட்டது.


அதில் செல்வம் தன் புது மனைவியோடும் பெண்குழந்தையோடு மகளும் சேர்ந்து மகிழ்ச்சியாக இருப்பதாக இந்த புகைப்பட ஆதரமே போதுமென்று அவனது வக்கில் வாதிட்டார்.துரைசாமியால் எதுவும் பேச முடியாத நிலைமையில் இருந்தார்.எல்லாம் கைமீறி போய் விட்டதாக அவர் நினைத்தார்.

புகைப்படத்தை வாங்கி உற்று நோக்கினார் நீதிபதி அவர்கள்.அதில் இரண்டாவது மனைவியின் குழந்தையின் கழுத்தில் தங்க ஆபரணங்களும், இந்த குழந்தையின் கழுத்தில் சாதாரண பாசிமணியும் அணிந்திருப்பதைப் பார்க்கிறார்.

அவர் மனதில் புரட்சி கவிஞன் பாரதியின் கனவுகள் தீர்ப்பாய் மலர்ந்தது.புகைப்படத்தில் இருந்ததை சுட்டிக் காட்டிய நீதிபதி அவர்கள் "செல்வம் பொய்யான அன்பைக் காட்டி சித்தரித்து நீதிமன்றத்தை ஏமாற்றி அவமதித்தற்காக இந்த நீதிமன்றம் அவரை வன்மையாய் கண்டிப்பதோடு மன்னிப்புக் கேட்கும் படியும்,சமூகத்தில் இப்படிப்பட்ட பாகுபாட்டில் வளர்க்கப்படும் குழந்தையின் மனதில் தேவையற்ற குழப்பங்கள் மேலோங்கும்,பெண் குழந்தையின் எதிர்கால நலனை பிரதானமாக வைத்து பெண் குழந்தை தாத்தாவின் பாதுகாப்பில் வளரட்டும் மற்றும் மாதம் பத்தாயிரம் ரூபாய் குழந்தையின் பராமரிப்புக்காக தந்தை வழங்க வேண்டும்,அதோடு அவருடைய பொறுப்பில் வளரும் ஆண் குழந்தையின் நிலைமையைப் பற்றி இரு மாதத்திற்கு ஒருமுறை ஒரு அறிக்கையை தயார் செய்து குழந்தையின் தாய்வழி தாத்தாவிடமும் அங்குள்ள சமூகநல அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று ஆணித்தனமாக தனது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை எழுதினார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிஷாபானு அவர்கள்.

நீதிபதி காட்டிய பெண்மையோடு கூடிய தாய்மையே அங்கே வென்றது.


துரைசாமி நீதிபதி அவர்களைப் பார்த்து நன்றியோடு கூடிய வணக்கத்தை மரியாதையாகச் செலுத்தி விட்டு மனநிறைவோடு தன் வீட்டிற்கு சென்றார்.


முற்றும்.



तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...