Jodi Pura

பயண இலக்கியம்
4.9 out of 5 (201 )

நான் சிறு வயதிலிருந்து எங்கள் ஏரியாவில் பார்த்துக் கொண்டு வந்த பெரியகருப்பன் அவர்களின் கதைதான் இது. இதைப் போல கைவிடப்பட்ட பெரியகருப்பன்கள் நம்மூரில் ஏராளம். ஆளில்லா கல் மண்டபத்தில், கோயில் பிராகாரத்தில், ஆற்றங்கரையோரத்தில் தனிமையில் வாழ்ந்துகொண்டிருக்கும் அவர்களின் பிடிவாதம் அவர்களுக்கே உரியது. பள்ளியில் படிக்கும் போதிருந்து, கல்லூரிக்காலங்கள் எனப் பல வருடங்கள் கழித்து இப்போதுதான் அவரிடம் என்னால் பேச முடிந்தது. ஆள் சற்று குள்ளமாக அழுக்கு வேட்டியுடன் ஒரு கையில் கம்பு மற்றொரு கையில் தூக்குவாளியுடன் இருப்பார். அவர் மாதா கோவில் அருகே எப்போதும் சுவற்றின் ஓரம் அமர்ந்திருப்பார். மற்றவர்கள் போல் அல்லாமல் யாரிடமும் அவர் யாசித்து நான பார்த்தேயில்லை. சில நேரம் அவருடன் இன்னோரு வயதான பெண்மணி உடன் இருப்பார்கள். இவர்கள் இருவரையும் சிறுவர்கள் “ஜோடிப் புறா” என்று கூறக் கேட்டிருக்கிறேன். முதலில் அவர்கள் இருவரையும் கடந்துபோகும் யாரும் அவர்களை கணவன் மனைவி என்றே நினைப்பார்கள். நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன். அப்பெண்மணி அவர் கையில் வைத்திருக்கும் கம்பின் ஒரு முனையைப் பிடித்துக் கொள்ள மறுமுனையில் அவர் பிடித்துகொண்டு நடப்பார். அந்தபெண்மணியும் இவரைப்போலவே சொந்தங்களால் கைவிடப்பட்டவராக இருக்கவேண்டும். பார்க்க மிகவும் ஒல்லியாக குட்டையான தேகம் கொண்டு நன்றாக வாராத முடிகளுடன் அழுக்கு படிந்த சீலைகலை உடுத்தியிருப்பார். சில துடுக்குச் சிறுவர்கள் அவர்களைப் பார்த்து “ஜோடி புறா” என்று கத்திக் கொண்டே கடந்து போகும் போது இவர் சிரித்துக்கொண்டே கையில் அகப்பட்ட கல்லைக் கொண்டு எறிவதுபோல அபிநயிப்பார். எதற்காக இவர்கள் இவர்களை ஜோடிபுறா என்று கூறுகிறார்கள் என்ற எண்ணம் எனக்கு இருந்தது . இப்போது தான் அதற்கு விடையும் கிடைத்தது.

தூக்குவாளியில் டீ வாங்கி, பக்கத்துக் கடைல பீடியும் வாங்க நின்று கொண்டிருந்த பெரிய கருப்பனிடம் பேச்சுக் கொடுத்தேன்‌. சட்டைப்பையினுள் இருக்கும் காசைத் தேடி எடுத்துக் கொண்டிருந்தார். நான் காசு கொடுக்கலாம் என்று நினைப்பதற்குள் அவரே கசங்கிய ஐஞ்சு ரூபாய் நோட்டு ஒன்றைத் தேடி எடுத்துக் கொடுத்தார். அவர் எப்போதும் உட்காரும் இடம் எனக்கு தெரியுமாகையால் அவரின் கையைப்பிடித்து அழைத்துசென்று உட்கார வைத்து சாப்பாடு ஏதும் வேண்டுமா என்று கேட்டேன். இதற்கிடையில் தனது தூக்குவாளியில் வாங்கிய தேனீரை மூடியில் ஊற்றிக் குடித்து விட்டு, என்னை கொஞ்சம் தண்ணி பிடிச்சுக் கொடுப்பா என்று தூக்கு வாளியைக் கொடுத்தார். சாப்பாடு வேண்டுமா என்று கேட்க இரண்டு உளுந்தவடை போதும் என்றார். உளுந்தவடையை வாங்கிக்கொடுத்துவிட்டு அவரிடம் பேச்சுக்கொடுத்தேன். அவருக்கு வயது எழுபது . அவரின் வீடு கொடிகுளத்தில் இருக்கிறது. கொடிகுளம் இங்கிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவிருக்கும் . பஸ்ஸில்தான் போக முடியும். பல கேள்விகள் இரண்டுமுறை அதுவும் சத்தமாக கேட்டால்தான் அவருக்கு காதில் கேட்டது. வயது எழுபது ஆகிவிட்டதால் கூடிய உபத்திரமாக கூட இருக்கலாம்.
உங்ககிட்டே நான் ஒரு கேள்வி கேட்பேன், கோபிக்காம பதில் சொல்லுவீங்களா? என்று கேட்க உடனே சிரித்துக்கொண்டே தலையாட்டினார் . “உங்கள ஏன் பசங்கலாம் ஜோடி புறானு சொல்றாங்க? உங்க கூடவே இருப்பாங்கல்ல அவங்க யாரு? இப்ப அவங்க எங்கே? என்று கேல்விக்கணைகளைத் தொடுத்தேன். அவர் உடனே ஒன்றும் கூறவில்லை. பிறகு தணிந்த குரலில் “எங்களைப் போல அனாதைகளுக்கு அனாதைகள்தான் உதவி. என்னதான் இருந்தாலும் ஒரு பொட்டைப் புள்ளையை இப்படி அனாதையா விட்டவங்களை என்ன சொல்ல. ஒரு ஆறுதலுக்கு நாங்க ஒருத்தருக்கொருத்தர் மனம் விட்டு பேசிக்கிற அதிர்ஷடமில்லா ஜோடிப்புறா” என்று வயிறு குலுங்க சிரிக்க ஆரம்பித்தார். “சரி வேறெதும் வேணுமா சாப்பிட?” என்று நான் கேட்டதிற்கு பெரிய கருப்பன் தனக்கு பன்றிக்கறி வேண்டுமென்றார்.
ஒவ்வொரு துண்டமாக ரசித்துச் சாப்பிட்டுக்கொண்டே “ உனக்கு ஒரு கதை சொல்லவா” என்று கேட்க நான் தலையை ஆர்வமாக ஆட்டினேன். அவர் தன் கதையை நடுங்கும் குரலில் கூற ஆரம்பித்தார்.
அன்று ஆடி அம்மாவாசை. கருமை படர்ந்த வானில் வெளிறிய மஞ்சள் நிறத்தில் விண்மீன்கள் கண் சிமிட்டும் நேரம். ஊர்காவல் பதினெட்டாம்படி கருப்பனை வேண்டி முந்தானையில் திருநீரை முடிந்து மருத்துவமனை வாசலில் எனது அப்பாயி பழனியாயி பதட்டத்துடன் காத்துக் கொண்டிருந்தாள். எனது தந்தை இரு கைகளையும் கட்டிக்கொண்டு நீளமாக இருந்த புழுதி படர்ந்த வராண்டாவில் காத்துக்கொண்டிருந்தார். எனது முதல் அழுகைச் சத்தம் கேட்டு ஆனந்த கண்ணீர் வடித்தாள் அப்பாயி. அப்பாவோ மகிழ்ச்சியில் ஒன்றும் புரியாமல் அப்பாயியை அணைத்துக்கொண்டார். விடியலின் நிறங்கள் பரிதியைச் சுற்றிப் படர்ந்தது. எங்கும் வெளிச்சம் தயக்கத்துடன் படர மருத்துவமனையில் மட்டும் இருளே கவிழ்ந்திருந்தது. இருளில் என் அன்னையை தேடினேன்.
வெள்ளை நிற அம்பாசிடர் காரில் என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். காரின்‌ ஜன்னல்கள் வழியே இதமான ஈரக் காற்று வீசியது. எங்கள் வீடு தோட்டத்தின் நடுவே இருந்தது. ஆராத்தி எடுத்து வீட்டினுள் அழைத்து சென்றார்கள். இருள் தொடர்ந்து வீடு வரை வந்தது. இன்றளவிலும் என்னைத் தொடர்ந்துகோண்டேதான் இருக்கிறது. நான் பிறந்து இரண்டு வருடங்களில் அம்மாவும் அப்பாவும் இறந்து போனார்கள் என்பதை அப்பாயி சொல்லி தான் எனக்கே தெரியும்.
எனக்கு அப்போது வயது ஐந்து. எனது சக கூட்டாளிகளுடன் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தேன். அனைவரும் சென்று ஒளிந்து கொண்டார்கள். என் கண்களில் கட்டப்பட்ட துணியைக் கையில் எடுத்துக் கொண்டு அவர்களை இருளில் தேட ஆரம்பித்தேன். அனைவரையும் ஐந்தே நிமிடங்களில் கண்டுபிடித்து விட்டேன். விளையாட்டு முடிந்து அனைவரும் வீடு திரும்ப நான்‌மட்டும் மறுபடியும் அதே வகளக்குளற்ற மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தேன். விளையாட்டு முடிந்து திரும்பும் வேளையில் அருகிலிருந்த பள்ளத்தில் நான் விழுந்துவிட்டேன் என்று அப்பாயி கூறக் காதில் கேட்டது. எனது காலுக்கு மருந்து போட்டுக்கொண்டிருந்த மருத்துவர் நல்ல உயரம். பார்த்தாலே பரவசமூட்டும் அளவிற்கு மழுங்க சிராய்த்த மேவாயுடன் பிரகாசமாக இருந்தார். அவரிடம் அப்பாயி பேசுவது காதில் பட்டது. “இந்த பயலுக்கு பார்வை வருமா பாருங்கய்யா. நானும் போகாத கோயிலில்ல. என் அப்பன் ‌கருப்பன்தான் உங்க மூலமா ஒரு வழி சொல்லனும்” என்று குரல் மங்க வேண்டிக்கொள்ள “எதுக்கு பாட்டிமா கவலைப்படறீங்க. உங்க பேரனை அடுத்தவாரம் எங்கிட்டே கூட்டிகிட்டு வாங்க. கொஞ்சம் டெஸ்ட் எடுக்கனும்” என்று கூறிக்கொண்டே என் தலையை ஒரு தந்தையின் வாஞ்சையோடு கோதி விட்டார்.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புகையில் கடையில் வெத்தலை. சுண்ணாம்பு அப்படியே எனக்கு மிகவும் பிடித்த தேன் மிட்டாயும் வாங்கி என்னை இடுப்பில் சுமந்தவாறு ஆற்றங்கரையைக் கடந்தாள் பழனியாயி. அப்போது ஆற்று நீரின் குளிர்ச்சி திவளைச் சிதறல்களாக என் பாதங்களை நனைக்க நான் சிரித்துக்கொண்டே கூச்சத்துடன் கால்களை இழுத்துக்கொண்டேன். இதைக் கவனித்த பழனியாயி நீரைக் கையிலெடுத்து என் முகத்தில் தெளித்தாள். அதற்கடுத்து நன்றாக வளர்ந்த சோளக்காட்டின் நடுவே செல்கையில் முதிர்ந்த சோளத்தின் மணம் நெஞ்சை நிறைத்தது. “இதுதான்ல கருப்பா ஓரு காலத்திலே நம்ம காடு. இப்போ அது நம் கையை விட்டு நழுவிப் போச்சு” என்று கூறிக் கொண்டே முதிர்ந்த சோளக் கதிர் ஒன்றை பறித்து கைகளால் கசக்கி முத்துக்களை என் உள்ளங்கைகளில் நிறைத்தாள்.
என் வயதுப் பிள்ளைகள் பள்ளி செல்ல ஆரம்பித்தனர். அவர்களின் புதுப் புத்தகத்தின் வாசம் என் தனிமையை உணர்த்திய முதல் தருணமாக இருந்தது. பள்ளி விட்டு வீடு திரும்பும் நேரம் என் வீட்டின்‌முன்னே “டேய் கருப்பா சாயங்காலம் மைதானத்துக்கு வந்துடுடா” என்று குரல் கொடுக்க பழனியாயியும் ஒரு காவல் தேவதையைப் போல என்னுடனேயே வந்துவிடுவாள். நான் விளையாடும் போது தூரத்தில் வரப்பினோரம் மரத்தின் கீழே வெத்தலை இடிக்கும் சத்தம் எனக்கு கேட்டுக்கொண்டே இருக்கும்.
எங்களின் பூர்வீக நிலத்தை குத்தகைக்கு விட்ட காசை வைத்து அப்பாயி வீட்டையும் என்னையும் கவனித்துக்கொண்டாள். விளையாட்டு நேரம் போக மீதி நேரம் அப்பாயியிடம் கதை கேட்பதுதான் எனது பொழுது போக்கு. அப்பாயி தான் வளர்ந்த நாட்களைப் பற்றியும் ஊரைப் பற்றியும் தனக்கே உரிய பாணியில் கூறுவாள். தான் மகிழ்ச்சியாக இருந்த தருணங்கள், ஊர்த் திருவிழா, அவளுக்கு மிகவும் பிடித்த பலகாரங்கள் என்று அடுக்கிக்கொண்டே போவாள்.
ஒரு நாள் புளியமரத்தின் அடியில் என்னிடம் பேசிக்கொண்டு அப்படியே உறங்கிவிட்டாள். ஏதோ புதிதாக ஒரு சத்தம் தூரத்தில் எனக்குக் கேட்க அதுவே அருகில் அதிகரித்துக் கொண்டே வந்தது. இப்போது அது எனக்கருகில் நிற்பதை உணர்ந்தேன். அவ்வளவு நேரம் அவளுடன் பேசிக்கொண்டிருந்த நான் அமைதியானேன். எனது மெளனத்தின் காரணத்தை அப்பாயி கண்டு கொண்டாள். ௮டேய் ராசு வீரியண்டா என்று அலறிக்கொண்டே என்னை வாரிச் சேர்த்து அணைத்துக் கொண்டு ஒரு ஓரமாக ஒதுங்கினாள். ராசு அண்ணனும் மாரி அண்ணனும் கல் எரியும் சப்தமும் , கட்டையால் அடிக்கும் சப்தமும் மாறி மாறிக் கேட்டது. சிறுவர்கள் இறந்த பாம்பை கூடி நின்னு வேடிக்கை பார்த்து கொண்டிருக்க நான் மட்டும் இறந்த பாம்பை தயக்கத்துடன் தொட்டுப்பார்த்தேன். அதன் வால் மட்டும் இன்னும் துடித்துக்கொண்டிருக்க சட்டென்று கைகளை எடுத்தேன். இன்னும் அதன் உடலின் இரத்த்தத்தின் சூடு குறையவில்லை. தலையில் அடிக்காமல் விட்டிருந்தால் கண்டிப்பாக அது இன்னேரம் எங்காவது ஓடி இருக்கும். சிறிது நேரத்தில் பையன்கள் அந்தப் பாம்பை கம்புக்குச்சியில் தூக்கி மின்சாரக் கம்பியின் மேலே தொங்க விட்டு எக்காளமிட்டனர். தரையில் தெரிந்த அதன் நிழல் அனைவரையும் பயமுறுத்தியது.
நாட்கள் ஓட உடன் ஊர் சுற்றிய, என்னுடன் விளையாடிய நண்பர்கள் அனைவரும் படிப்புக்காகவம், வேலைக்காகவும், கல்யாணம் ஆகியும் வெவ்வேறு ஊர்களுக்குக் குடிபுகுந்தார்கள். எங்கள் ஓட்டு வீடும் இப்போது காரை வீடாக மாறியிருந்தது. ஆங்காங்கே தூரி ஆடிய ஆலமரங்களும் அதனடியே எப்போதும் உறங்கி கிடக்கும் பெருசுகளின் சிம்மசொப்பனமாக இருந்த கட்டைகளும் காணாமல் போயின. இருபது வயது எட்டிய நானும் அப்பாயி மட்டும் எங்கள் ஊரில் அதே வீட்டில் இருந்தோம். அது வரை உடனிருந்த அப்பாயிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது‌. வருத்தத்துடன்‌ நான் இனிமேல் எவ்வாறு இருக்கப் போகிறேன் என்ற கவலையும் என்னுடன் சேர்ந்து கொண்டது. அன்றிலிருந்து அப்பாயிக்கு குழந்தையாயிருந்த நான் அவளுக்குத் தாயானேன். அவளைக் குளிப்பாட்டுவது, உணவளிப்பது என அனைத்து வேலைகளையும் நானே பார்த்துக் கொண்டேன்.
அவளின் உடல் நிலையும் நாளுக்கு நாள் நலிந்துகொண்டே வந்தது. உடலின் இயலாமை அவளின் மரணத்தை எதிர்நோக்கியிருந்தாலும் ,அவளின் மனதின் வலிமை எனக்காக இன்னும் சிறிது நாள் வாழ்ந்தாக வேண்டும் என்ற வைராக்கியம் தெரிந்தது. “நான் இல்லாட்டி உன்னை எந்த நாதி பாத்துக்கும் தெரியலய்யா. அதனால நீயே சோறு வடிக்க, குழம்பு கிழம்பு வைக்க கத்துக்கனும்” என்று வாய் சலிக்காம ஓயாமா புலம்பிக்கிட்டே இருக்கும்.
பழனியாயி வைக்கும் பன்னிக்கறிக்கு நான் வாழ்நாள் அடிமை. மணம் நாசியைத் தீண்ட எங்கிருந்தாலும் ஓடி வந்து விடுவேன். ஆவி என் முகத்தில் பட அதன் வாசத்தை ரசித்து நுகர்வேன். "என்னா சாமி நாக்குலே எச்சில் ஊறுதானு” கேட்டுகிட்டே அப்பாயி திடமான ஒரு துண்டை எடுத்து ஊட்டிடுவாள். இப்போது நினைத்தாலும் வாயில எச்சி ஊறவைக்கும். இப்படியாக அப்பாயி சொல்ல சொல்ல நான் பல முறை பன்னிக்கறி சமைத்திருக்கிறேன். ஊரில் பழனியாயியின் கைப்பக்குவம் பேரனுக்கும் வந்துவிட்டது என்றார்கள். ஒரு நாள் கறி வாங்க கடைக்கு போனபோது ராசு அண்ணன் வேகமா வந்தான். “டே கருப்பா நம்ம பழனியாயி செத்துப் போச்சுடா. நீதான் அதோடு வாரிசு. விரசா வீட்டுக்குக் கிளம்பு. நீதான் எல்லாக் காரியமும் செய்யனும்” என்று கூறினான். கடைசியா அது கேட்ட பன்னிக்கறியை செஞ்சு கொடுக்க முடியலைங்கற வருத்தம் என் தொண்டையை அடைத்தது.
நெடுஞ்சாண்கிடையாக பழனியாயியை படுக்க வைத்திருந்தார்கள். தலைமாட்டில் இருந்த விளக்கு எரிவதும் பின் அணைவதுமாக இருந்தது. உழைத்துக் களைத்த பாதங்களில் இருக்கும் வெடிப்பு தண்ணீர் இல்லாமல் காய்ந்து வெடித்திருக்கும் பூமியைப் போல இருந்தது. சலிக்காமல் தொடர்ந்து என்னுடனேயே வந்த காவல் தெய்வத்தை இந்த நிலையில் காண மனம் கனத்தது. என்னைத் தோளில் சுமந்தவளை இன்று நான் தோளில் சுமந்தேன். எங்கள் தோட்டத்திலேயே அவளை புதைத்தோம். அடுத்த நாள் அவளைப் புதைத்த இடத்தில் ஒரு ஆலமரம் தன் குருத்து இலைகளை விரித்து காற்றில் அசைய பழனியாயி மீண்டும் என்னப் பார்க்க வந்தது போலத் தோன்றியது. பழனியாயி இறந்து பதினாறு நாட்கள் ஆகிவிட்டது. அவளுக்கு மிகவும் பிடித்த பன்னிக்கறியை அவளுக்கு பிடித்தது போல சமைத்துப் படைத்தேன். என் அனைத்து வேலைகளையும் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் பழனியாயி விரும்பியது போல நானே செய்துகொண்டேன்.
ஒரு நாள் என் பால்ய நண்பன் முத்து என்னக் காண வந்திருந்தான். நேரம் போவது கூட தெரியாமல் பேசிக்கொண்டே இருந்தோம். அவன் கிளம்பும் போது என் கைகளைப் பிடித்துக்கொண்டு “ பழனியாயி இப்போது உயிரோடு இருந்திருந்தால் உனக்கு ஒரு கலியாணம் செஞ்சு பார்த்து சந்தோசப்பட்டிருப்பா. எனக்கு ரொம்ப தெரிஞ்ச இடத்திலேயிருந்து வரன் ஒன்னு வந்திருக்கு. பொண்ணு கேரளா. பேரு கல்யாணி. என்ன சொல்றே” என்று கேட்க நான் மறுப்பேதும் கூறவில்லை. சிறிது நேரம் தயங்கியவன் “ பொண்ணுக்கு ஒரு கண் தெரியாது. நீ சரீன்னு சொன்னா வர ஆவணியிலே கலியாணத்தை நடத்தி முடிச்சிடலாம்” என்று ஆர்வத்துடன் என் பதிலிற்காக ஒரு குழந்தையைப் போலக் காத்திருந்தான்.
திருமணமும் நல்லபடியாக நடந்தேறியது. முதல் குழந்தை பிறந்தவுடன் கல்யாணி “நம்ம பொண்ணுக்கு ரெண்டு கண்ணும் நிச்சயம் தெரியுமுங்க. தைரியமா இருங்க ” என்றாள். பழனியாயிற்கு குழந்தையைக் காண்பிக்க சென்ற போது உயரமாக வளர்ந்திருந்த ஆலமரக் கிளை ஒன்று காற்றிற்கு வளைந்து குழந்தையின் நெற்றியில் முத்தமிடுவது போல தீண்டியது. பிரசவ கோளாறில் கல்யாணியும் இறந்து போக என் குழந்தையின் எதிர்காலம் பெரிய கேள்விக்குறியாகத் தோன்றியது. அவளும் வளர ஆரம்பித்தாள்.
நான் பிறந்த மருத்துவமனையில் இருந்த பாதிரியார் என் மகளின் படிப்பிற்கு உதவினார். அவருடைய பரிந்துரையால் விடுதியில் தங்கி படிக்க ஆரம்பித்தாள். தினமும் காலைல பஸ் ஏறிப் போய் அவளைப் பார்த்து விட்டு இருட்டுரப்ப வீட்டுக்கு வந்திடுவேன். அவளுக்கு வேண்டியதை வாங்கி கொடுக்க வயக்காட்டில் பாதியை விற்று மீதியை அவளுக்கென்று வங்கிக்கணக்கு ஆரம்பித்து மீதிப் பணத்தை அதில் போட்டு வைத்தேன். மகளின் பள்ளிப்படிப்பு முடிந்ததும் ஊரிலுள்ள வயக்காட்டில் மீதியையும் விற்று நண்பரின் உதவியுடன் சென்னையில் ஒரு பெரிய கல்லூரியில் சேர்த்தேன். அங்கு நன்றாகப் படித்து பெரியாளாகி ஒரு கம்பெனியில் அமெரிக்கா சென்று வேலை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. என் வாழ்க்கை பந்தயத்தில் வெற்றி இலக்கை நோக்கி ஓடும் குதிரையைப் போல விரைந்து ஓடிக்கொண்டே இருந்தது. எனது கையிலும் சிறிது வங்கியில் அவளுக்கென்று சேர்த்த பணத்தில் அமெரிக்கா அனுப்பி வைத்தேன். அமெரிக்கா சென்று பேசுகிறேன் என்று கூறிச் சென்றவள் வரும்போது ஒரு அமெரிக்காகாரர கல்யாணம் பண்ணிக்கிட்டு நான்கு வருடங்களுக்குப் பிறகு என்னைப் பார்க்க வந்தாள்.
பேரப்பிள்ளைகளைப் பார்த்து தழுவிய எனக்கு அம்மா,அப்பா, அப்பாயி, என் பொண்ணு எல்லோரும் என்னை விட்டுச்சென்ற வலி மறைந்து போனது. என் கூடவே இருந்திடுப்பா என்று சொல்லுவாள் என்று எண்ணிய எனக்கு அவளிடமிருந்து கிடைத்தது மெலிதான சிரிப்பு மட்டுமே. அனைத்து உறவுப் பறவைகளும் விலகிப் போக மீண்டும் அதே தனிமை. அப்பாயி புதைத்த இடத்தில் வளர்ந்த ஆலமரத்தடியில் அமர்ந்தால் அந்தப் பாழும் தனிமை தற்காலிகமாக தொலைந்தது போல எனக்குத் தோன்றும்.
கடைசித் கறித்துண்டை இலையிலிருந்து தேடியெடுக்க நான் அவருக்கு உதவினேன். “உன்னோட பேரு என்ன?” என்று என்னிடம் கேட்க நான் பெரிய கருப்பன் என்றேன். நான் தனியாக வீடு திரும்பும் போது பழனியாயி ஒரு காவல் தெய்வம் போல என்னுடனேயே துணைக்கு வந்தாள்.
**********

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...