தடுமாறிய நெஞ்சம்

காதல்
4.7 out of 5 (9 )

லாயர் சரண்யாவின் வீட்டு காலிங் பெல்லை அடித்துக் கொண்டிருந்தான் வருண்.

சில நிமிடங்களுக்குப் பிறகு கதவைத் திறந்த வேலைக்காரி, “யார் சார் நீங்க? யாரை பார்க்க வந்து இருக்கீங்க?” என்று கேட்டாள்.

“லாயர் சரண்யா மேடத்தை பார்க்கணும்… பார்க்க முடியுமா?”

“வாங்க சார்… உள்ள வந்து உட்காருங்க… நான் மேடம் கிட்ட நீங்க வந்திருக்க விவரத்தை சொல்லி கூட்டிட்டு வரேன்” என்று சொல்ல வேலைக்காரி வருணை உள்ளே அழைத்து வராண்டாவில் இருந்த சோபாவில் அமர சொன்னாள்.

அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த சரண்யா, “வணக்கம் சார்… நீங்க என்ன பார்க்க வந்திருக்கறதா வேலைகாரி சொன்னா… என்ன விஷயமா என்ன பார்க்க வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்டபடி சோபாவில் அமர்ந்தார்.

“என்னோட விவாகரத்து விஷயமா மேடம்” என்று வருண் சற்று தயக்கத்துடன் சொன்னான்.

“ஓ அப்படியா… சரி வாங்க என்னோட ஆபீஸ் ரூம்ல போய் பேசலாம்” என்று சொன்ன சரண்யா வலது புறம் இருந்த தன்னுடைய அலுவலக அறைக்கு வருணை அழைத்துச் சென்றார்.

தன்னுடைய நாற்காலியில் அமர்ந்தவர் எதிரே இருந்த நாற்காலியில் வருணை அமர சொன்னார்.

“சரி சொல்லுங்க சார்… உங்களுக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சு? எதுக்காக உங்க மனைவிய விவாகரத்து பண்ண நினைக்கிறீங்க?”

“எங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் தான் மேடம் ஆகுது… அதுலயும் கல்யாணமான உடனேயே நான் ஆன்சைட் ப்ராஜெக்ட்காக கனடா போயிட்டன்… இப்போ மூணு மாசத்துக்கு முன்னாடி தான் இந்தியா வந்தன்… இந்த மூணு மாசம் என் பொண்டாட்டி கூட வாழ்ந்ததுல எங்க ரெண்டு பேருக்கும் ஒத்துவராதுனு எனக்கு தெரிஞ்சு போச்சு… அதான் அவளை விவாகரத்து பண்ணிடலாம்னு முடிவெடுத்து உங்களை பார்க்க வந்தேன்”

“ஓ அப்படியா சார்… சரி உங்க மனைவியும் உங்களை விவாகரத்து பண்ண தயாரா இருக்காங்களா? ஏன்னா மியூச்சுவலா இருந்தா விவாகரத்து வாங்குவது ஈஸி”

“இல்ல மேடம் அவளுக்கு நான் இப்படி ஒரு முடிவெடுத்திருக்கறதே தெரியாது… இனி தான் சொல்லணும்” என்று வருண் தயக்கத்துடன் சொன்னான்.

“ஓ… ஒத்து வராதுன்னு சொன்னீங்களே… எதனால அப்படி சொன்னீங்க? அவங்க உங்களை மதிக்கிறது இல்லையா? தொட்டதுக்கெல்லாம் உங்க கூட சண்டை போடறாங்களா? அதான் விவாகரத்து பண்ணலாம்னு முடிவு எடுத்துட்டீங்களா?”

“சே... சே… அதெல்லாம் இல்லை மேடம்… என் பேச்சை மீறி அவ இதுவரைக்கும் ஒரு விஷயத்தை கூட செய்தது கிடையாது… சண்டை எல்லாம் போடவே மாட்டா… நான் ஏதாவது கத்தினா கூட அமைதியா போய்டுவா” என்று பெருமையுடன் வருண் சொன்னான்.

அவனை ஆச்சரியத்துடன் பார்த்த சரண்யா, “உங்களை மதித்து நடப்பாங்கன்னு சொல்றீங்க… நீங்க சண்டை போட்டா கூட அமைதியா போயிடுவாங்கன்னும் சொல்றீங்க… அப்புறம் ஏன் உங்க ரெண்டு பேருக்கும் ஒத்து வரலன்னு சொல்றீங்க… நீங்க சொல்றது எனக்கு புரியல சார்… கொஞ்சம் தெளிவா சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்…” என்று கேட்டார்.

வருணுக்கு தன் மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுத்த காரணத்தை சரண்யாவிடம் சொல்ல தயக்கமாக இருந்தது.

அவன் தயங்குவதைப் பார்த்த சரண்யா, “நீங்க தயங்க வேண்டிய அவசியமே இல்ல சார்… டாக்டர் கிட்டயும் வக்கீல் கிட்டயும் பொய் சொல்லக்கூடாது… அதனால நீங்க என்கிட்ட உண்மையான காரணத்தை சொல்லுங்க… அப்போ தான் என்னால உங்களுக்கு ஈசியா விவாகரத்து வாங்கி தர முடியும்” என்று அவனை ஊக்கினார்.

“அது வந்து மேடம்… எங்க தாம்பத்திய வாழ்க்கைல தான் பிரச்சனை… அவளால என்னை திருப்திபடுத்த முடியலை” என்று வருண் தயக்கத்துடன் சொன்னான்.

தன் தொழில் வாழ்க்கையில் இதுபோன்ற காரணங்களை எல்லாம் ஏற்கனவே கேட்டிருந்ததால் சரண்யாவிற்கு அந்த காரணத்தை கேட்டதும் சங்கடம் எல்லாம் தோன்றவில்லை.

மாறாக வருணின் முகத்தை ஆழ்ந்த பார்த்தவர், “திருப்திப்படுத்த முடியலன்னா என்ன அர்த்தத்தில் சொல்றீங்க? தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடவே மறுக்கிறார்களா?”

“இல்ல… இல்ல மேடம்… அதெல்லாம் இல்ல… நான் கேட்டு அவ மறுத்தது கிடையாது… ஆனா என்னோட சில ஆசைகளுக்கு அவ ஒத்துழைக்க மாட்றா… நானும் இன்னைக்கு சரியாகிடுவா நாளைக்கு சரியாகிடுவான்னு எவ்வளவோ பொறுத்து போயிட்டன்… ஆனாலும் அவ இந்த ஒரு விஷயத்தில் மட்டும் தான் பிடித்த பிடியில் பிடிவாதமா இருக்கா… நீங்களே சொல்லுங்க மேடம்… தாம்பத்திய வாழ்க்கையில திருப்தி இல்லன்னா என்ன பண்றது? அதான் நான் அவளை விவாகரத்து பண்ணலாம்னு முடிவெடுத்தன்”

“ஓ அப்படியா” என்று சொன்ன சரண்யா சிறிது நேரம் எதையோ யோசித்தவர் பின்னர், “ஒரு நிமிஷம் நீங்க இங்கேயே இருங்க சார்… நான் கொஞ்ச நேரத்துல திரும்பி வந்துடறன்” என்று சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறியவர் திரும்பி வரும்போது தன் கணவனுடன் வந்தார்.

தன் புருவத்தை உயர்த்திய வருண் கேள்வியுடன் சரண்யாவை பார்த்தான்.

“நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எனக்கு புரியுது வருண்… என்னடா தனியா போனவங்க திரும்பி வரும்போது ஒருத்தரை கூட்டிட்டு வந்துருக்காங்கன்னு தான நினைக்கிறீங்க… இவர் என்னோட புருஷன்… நீங்க கொஞ்ச நேரம் இவர்கிட்ட பேசிகிட்டு இருங்க… அவர்கிட்ட பேசி முடிச்ச பிறகும் நீங்க உங்க மனைவியை விவாகரத்து பண்றதுல உறுதியா இருந்தா நான் நிச்சயமா உங்களுக்கு விவாகரத்து வாங்கி தரேன்… ஆனா அதுக்கு முன்னாடி நீங்க இவர்கிட்ட பேசணும்னு நான் விருப்பப்படறன்” என்றவர் வருணின் பதிலை எதிர்பார்க்காமல் கதவை சாத்திக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினார்.

வருணுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. அதனால் அமைதியாக அமர்ந்திருந்தான்.

மணிகண்டனுக்கு வருணை போல தயக்கம் எல்லாம் இல்லை. அதனால் முதலில் அவரே பேச்சை தொடங்கினார்.

“ஹாய் வருண்… என்னோட பேர் மணிகண்டன்… நான் ஒரு டாக்டர்…” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர், “நீங்க உங்க மனைவியை விவாகரத்து பண்ணுவதற்காக சரண்யாவை பார்க்க வந்திருக்கறதா சொன்னா… அதுக்கு நீங்க சொன்ன காரணத்தையும் சொன்னா…” என்று அவர் சொன்னதும் வருண் தலைகுனிந்தான்.

“இப்போ எதுக்காக நீங்க தலைகுனியறீங்க… உண்மையிலேயே நீங்க சொன்னது வேலிட் ரீசன் தான்” என்று அவர் சொன்னதும்

“நிஜமாவே இது வேலிட் ரீசன்னு நீங்க நினைக்கிறீங்களா சார்… எனக்குள்ள இப்பவும் இதுக்காக நாம அவள டிவோஸ் பண்ணனுமானு தோணிகிட்டே இருக்கு…” என்றான்.

“நிச்சயம் வேலிட் ரீசன்தான் வருண்… ஆனா விவாகரத்து பண்ண முடிவெடுத்த பிறகும் இன்னும் உங்களுக்கு ஏன் இவ்வளவு குழப்பம்? உங்க மனைவிய உங்களுக்கு கொஞ்சூண்டு பிடிக்குமோ?”

“நிறையவே பிடிக்கும் சார்…. அதுதான் பிரச்சனை… எல்லாவிதத்திலும் என்ன நல்லா கவனிச்சுக்கறவ இந்த ஒரு விஷயத்தில் மட்டும் பிடி கொடுக்கவே மாட்றா… நானும் கெஞ்சி, கொஞ்சி, மிஞ்சின்னு எல்லா வகையிலும் முயற்சி பண்ணிட்டன்… ஆனாலும் கொஞ்சம் கூட இறங்கி வர மாட்றா… எப்பவும் ஒரே பொசிஷன்ல பண்ண கடுப்பா இருக்கு சார்… நிறைய பொசிஷன்ஸ் பண்ணலாம்னா சுத்தமா ஒத்துழைக்க மாட்றா… என்னோட ஆசை அவளுக்கு சுத்தமா புரியல சார்... கடைசி வரைக்கும் இப்படியே காம்ப்ரமைஸ் பண்ணி வாழ என்னால முடியாது... அதான் அவளை விவாகரத்து பண்ணிடலாம்னு முடிவு பண்ணிட்டன்”

“குட்… வெரி குட்… நல்ல முடிவுதான்…” என்று சொன்ன மணிகண்டன் பின்னர் “ஆமா வருண் நிறைய பொசிஷன் ட்ரை பண்ணுனும்னு ஆசையா இருக்குன்னு சொன்னீங்களே அந்த ஆசை உங்களுக்கு எப்படி வந்தது? நிறைய ப்ளூ பிலிம் பார்ப்பீங்களோ?” என்று சிரித்தபடி கேட்டார்.

தன் உதட்டை கடித்த வருண், “சார்… அது வந்து….” என்று இழுத்தான்.

“சும்மா சொல்லுங்க… ஒரு ஆணை பற்றி இன்னொரு ஆணுக்கு தெரியாதா என்ன?”

“ஆமா சார்… உண்மையை சொல்லனும்னா அதைப் பார்த்த பிறகுதான் அந்த மாதிரி எல்லாம் பண்ணனும்னு தோணுச்சு… பொசிஷன் மாத்தி பண்ணும் போது அவங்க முகத்துல இருக்க சந்தோஷத்தை பார்க்கணுமே… அந்த சந்தோஷத்தை நானும் அனுபவிக்கனும்னு தோணுது… ஆனா என் மனைவி சுத்தமா ஒத்துழைக்க மாட்றா”

“நெனச்சன்… இந்த மாதிரி தான் நீங்க சொல்வீங்கன்னு நெனச்சன்… ஆனா உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா வருண்… நீங்க பதினைந்து நிமிஷம் பாக்கற அந்த படத்த அவங்க மூன்று நாள் எடுப்பாங்க… எத்தனை டேக் போகும்னு உங்களுக்கு தெரியுமா… அது மட்டும் இல்ல எந்த மனுஷனாலயும் தான் நெனச்ச நேரம் எல்லாம் தாம்பத்ய உறவில் ஈடுபட முடியாது… அதனால அந்த மாதிரி படத்துல நடிக்கிறவர்களுக்கு போதை மருந்து கொடுப்பாங்க… அதனாலதான் அவங்களால அந்த மாதிரி எல்லாம் நடிக்க முடியுது… இது எதுவுமே தெரியாம நிறைய பேர் அந்த மாதிரி படங்களைப் பார்த்துட்டு நாமளும் அந்த மாதிரி பண்ணனும்னு நினைக்கிறாங்க… அதை தப்புன்னு சொல்ல முடியாது… ஆனா அது தன்னோட பார்ட்னருக்கு பிடிக்குமான்னு யாரும் யோசிக்கறது இல்லை… எனக்கு ஆசையா இருக்கு… நான் பண்ணனும்… அதுக்கு நீ ஒத்துழைக்கணும்னு தான் பல ஆண்கள் நினைக்கிறாங்க… அவங்க பார்ட்னர் அதுக்கு ஒத்துழைக்காத போது குடும்பத்துல பிரச்சனை தொடங்குகிறது… இன்றைய நிலையில் நிறைய பேர் தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தி இல்லன்னு சொல்லித்தான் விவாகரத்து கேட்கறாங்க… அப்படி கேட்பவர்களில் கிட்டத்தட்ட தொண்ணூறு சதவிகிதம் பேர் இந்த மாதிரி ப்ளூ பிலிம்க்கு அடிக்ட் ஆனவங்க தான்…” என்ற மணிகண்டன் சொல்லிக்கொண்டே வந்த போது அவர் பேச்சை இடை நிறுத்திய வருண், “அப்போ நான் அந்த மாதிரி ஆசைப்படறது தப்புன்னு சொல்றீங்களா டாக்டர்?” என்று கேட்டான்.

“இல்ல… நிச்சயமா இல்ல… ஆனா உங்க மனைவியோட மனநிலையையும் நீங்க பார்க்கணும் இல்லையா… பொதுவாகவே நம்ம தமிழ்நாட்டுல உள்ள பொண்ணுங்களுக்கு தாம்பத்ய வாழ்க்கையை பற்றிய அறிவு அவ்வளவா இல்ல… அதே சமயம் அவங்க பெருசா இதுல ஈடுபாடும் காட்ட மாட்டாங்க... அதுக்கு முக்கிய காரணம் நாமதான்... அவங்களுக்கும் மனசிருக்கு... அதுல சில ஆசை இருக்குன்னு புரிஞ்சிக்காம கடிவாளம் கட்டின குதிரை மாதிரி பல ஆண்கள் இருக்கோம்… அப்படி இருக்கும் போது அவங்ககிட்ட நீங்க மெல்ல மெல்ல தான் நீங்க உங்க ஆசையை புரிய வைக்கணும்... இந்த காரணத்துக்காக நீங்க உங்க மனைவியை விவாகரத்து பண்றீங்கன்னு வச்சுப்போம்... அப்புறம் எப்படியும் நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிபீங்க இல்லையா? அந்த பொண்ணும் உங்க முதல் மனைவி மாதிரியே இருந்தா என்ன பண்ணுவீங்க? அவங்களையும் விவாகரத்து பண்ணுவீங்களா?"

டாக்டர் சொன்னதை கேட்டதும் வருண் திகைத்துவிட்டான்... அவர் சொன்னதில் இருந்த உண்மை அவன் முகத்தில் அறைந்தது.

"நீங்க சொல்றது எல்லாம் புரியுது டாக்டர்... அப்போ நான் கடைசிவரைக்கும் காம்ப்ரமைஸ் பண்ணி தான் வாழணும்னு சொல்ல வரீங்களா?" என்று வருண் மெல்லிய குரலில் கேட்டான்.

"அதுக்கு அவசியம் இல்ல வருண்... நிச்சயம் உங்க ஆசையில எந்த தப்பும் இல்ல... ஆனா உங்க ஆசைக்கு உங்க மனைவி ஒத்துழைக்கலன்னு அவங்களை விவாகரத்து பண்ண நெனச்சீங்க பாத்தீங்களா அதுதான் தப்பு..."

"எனக்கு புரியலை டாக்டர்... என்னோட ஆசை சரின்னும் சொல்றிங்க... அதுக்கு ஒத்துழைக்காத மனைவியை விவாகரத்து பண்றது தப்புன்னும் சொல்றிங்க... அப்போ நான் என்னதான் பண்றது... அதையும் நீங்களே சொல்லுங்க"

"இதுக்கு தீர்வு நீங்க நினைக்கிற மாதிரி விவாகரத்து இல்லை வருண்... உங்க மனைவிக்கு தாம்பத்ய வாழ்க்கையை பற்றிய புரிதலை ஏற்படுத்தறது தான் இதுக்கு தீர்வு.. ஒரு நல்ல செக்ஸியாலஜிஸ்ட் கிட்ட அவங்களை கூட்டிட்டு போய் கவுன்சிலிங் கொடுங்க... அவங்க உங்க மனைவியோட மனசுல இருக்க தடைகளை உடைத்தெறிய உதவுவாங்க... அதை விட்டுட்டு இந்த மாதிரி சின்ன பிரச்சனைக்கு எல்லாம் விவாகரத்து பண்ண நினைக்காதீங்க..." என்று மணிகண்டன் அழுத்தமாக சொன்னார்.

சிறிது நேரம் அவர் சொன்னதை பற்றி யோசித்த வருண், "ரொம்ப நன்றி டாக்டர்... உண்மைய சொல்லனும்னா எனக்குமே என் மனைவியை இந்த விஷயத்துக்காக விவாகரத்து பண்ணணுமான்னு யோசனையா தான் இருந்தது... ஆனா கிடைக்காத விஷயத்துக்கு தான மனசு ஏங்கும்... அந்த மாதிரி அவ மறுக்க மறுக்க எனக்குள்ள ஆசை வெறியா மாறிடிச்சி... அதான் எதுக்காக நம்ம வாழ்க்கையை வீணாக்கனும்னு நெனச்சி நான் அவளை விவாகரத்து பண்ணிடலாம்னு முடிவெடுத்தன்... நீங்க சொன்ன பிறகுதான் நாம ஏன் இப்படி யோசிக்காம போய்ட்டோம்னு தோணுது... நிச்சயமா நீங்க சொன்ன மாதிரி நான் என் மனைவியை கவுன்சிலிங் கூட்டிட்டு போறன் டாக்டர்..." என்று தழுதழுத்தபடி சொன்னான்.

அப்போது ஒரு தட்டில் மூன்று கோப்பை காபியை எடுத்து வந்த சரண்யா தட்டை வருணின் முன்பு நீட்டியவர், " என்ன வருண்... இப்பவும் உங்க மனைவியை விவாகரத்து பண்றதுல உறுதியா இருக்கீங்களா?" என்று சிரித்தபடி கேட்டார்.

"உங்க கணவர் கிட்ட பேசின பிறகு என் பதில் என்னவா இருக்கும்னு உங்களுக்கு தெரியாதா மேடம்?" என்று காபியை எடுத்தபடி வருண் சொன்னான்.

"அச்சோ... அப்போ நீங்க உங்க மனைவியை விவாகரத்து பண்ணலையா? எனக்கு வந்த ஒரே ஒரு கேஸும் அவுட்டா?" என்று முகத்தை சோகமாக வைத்தபடி கேட்டார்.

அவர் அப்படி சொன்னதும் வருணிற்கு சிரிப்பு வந்தது.

"ரொம்ப நன்றி மேடம்... நான் சொன்னதும் உடனே விவாகரத்து வாங்கி தர முயற்சி எடுக்காம நான் ஏன் அப்படி ஒரு முடிவெடுத்தன்னு தெரிஞ்சிக்கிட்டு அதுக்கு விவாகரத்து தீர்வு கிடையாதுன்னு எனக்கு புரிய வச்சிட்டீங்க..." என்று வருண் நெகிழ்ச்சியுடன் சொன்னான்.

"பரவாயில்லை வருண்... மத்தவங்க எப்படியோ நான் சட்டுன்னு எல்லாம் ஒரு குடும்பத்தை பிரிச்சிட மாட்டன்... ஒரு குடும்பம் பிரியாம இருக்க என்னாலான முயற்சியை பண்ணுவன்... அப்படிதான் உங்க விஷயத்துலயும் பண்ணன்" என்று பெருந்தன்மையுடன் சொன்னார்.

"சரிங்க மேடம்... நான் கிளம்பறன்... ஆபிஸ்ல இருந்து நேரா இங்க வந்துட்டன்... என் மனைவி இன்னும் நான் வரலையேன்னு வாசலை பாத்துகிட்டு இருப்பா" என்ற வருண் தன் வீட்டிற்கு கிளம்பினான்.

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...