இழை

மர்மம்
4.9 out of 5 (18 )

இரத்தம் தரையில் சிதறிக் கிடக்க, ராம்தாஸ் தனது வீட்டு கூடத்தில் இறந்து கிடந்தார். குடும்பத்தினர் திக்பிரமை பிடித்துப் போய் சுற்றி நின்று கொண்டிருந்தனர். ராம்தாஸின் மனைவி மீனா கட்டுப்படுத்த முடியாத துயரத்தில் ஆழ்ந்த துக்கத்தில் அழுது கொண்டிருந்தாள். அந்த ஏரியா ஆய்வாளர் அஜய் இதனை விசாரணை செய்யுமாறு கட்டளையிடப்பட்டிருந்தான். வீட்டு வாசலில் கும்பல். காவலர்கள் அவர்களை உள்ளே வர விடாமல் தடுத்துக் கொண்டிருந்தனர்.

தடவியல் நிபுணர்கள் ஏற்கெனவே அங்கு வந்து விட்டிருந்தனர். எல்லா இடத்திலும் க்ரைம் சீன் டேப்பைப் போட்டு, தடவியல் நிபுணர்கள் கிடைத்த பொருட்களிலிருந்து தடயம் எடுத்துக் கொண்டிருந்தனர். அஜய் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து வந்தான். அங்கே திரு.ராமதாஸ் குடும்பம், அவர் மனைவி மீனா, அவர் மகன்கள் தினேஷ், இளங்கோ ஆகியோரிடம் விசாரணை நடத்த ஆரம்பித்தான். ராமதாஸின் நண்பரும் ஒரு விஞ்ஞானியுமான கிஷோர்சாமி என்பவரும் அந்த நேரத்தில் அங்கு இருந்தார்.

"மை டீப்பஸ்ட் கண்டொலன்சஸ்!" என்று அந்த குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். தன்னை அஜயிடம் ராம்தாஸின் நீண்ட நாள் சிநேகிதர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

"உங்களுக்கு இந்த வழக்கு விஷயமாக என்ன தகவல் வேண்டுமென்றாலும் என்னை எப்போது வேண்டுமானாலும் இந்த அலைபேசி எண்ணில் அழைக்கலாம்!" என்று தன் அலைபேசி எண்ணைக் கொடுத்து விட்டுச் சென்றார்.

அஜய் பிணத்தை உற்றுப் பரிசோதித்ததில் கழுத்தில் பலத்த வெட்டு, மார்புப்பகுதியில் ஆழமான மற்றும் நீளமான வெட்டு அனைத்தையும் அஜய் தன் ரிப்போர்ட்டில் குறித்துக் கொண்டான். துக்கத்தில் மூழ்கியிருந்த அவர் குடும்பத்தினரிடம் கையொப்பமும் வாங்கிக் கொண்டான். ராம்தாஸின் உடல் பிரேத பரிசோதனைக்குச் சென்றது. அஜயும் குற்ற சம்பவம் நடந்த இடத்தில் எடுத்த புகைப்படத்துடன் துப்பு துலக்கஆரம்பித்தான்.

மூன்று நாட்கள் சென்றன. ராம்தாஸின் மனைவி மீனா அந்த வீட்டில் அதே போல் இறந்து கிடந்தாள். கழுத்து வெட்டு, மார்பக வெட்டு அனைத்தும் அந்த குற்றத்தின் நகல் போன்று இருந்தன. உடல் பரிசோதனைக்கு சென்றது. இருவருக்கும் வெட்டு எப்படி என்று பார்த்தால், வலது புற கழுத்துப் பகுதியில் ஆழமான கீறலோடு வெட்டப்பட்டிருந்தன.

இந்தச் செயலை செய்தவன் இடது கை பழக்கமுள்ள நபராகத் தான் இருக்க வேண்டும் என்று கருதினான் அஜய். அவன் அவர்களின் வாழ்க்கை முறைகள், அந்த குடும்பத்து பழைய பகைகள் என்று அனைத்தையும் விசாரணை செய்யத் தொடங்கினான். தடவியல் நிபுணர்கள் தேடியதில் ஒரு தலைமுடி இழை கிடைத்தது. அது ஒரு பெண்ணின் தலைமுடி. அவர்களிடம் இருக்கும் பட்டியலில் உள்ளவர்களுக்கு அது பொருந்தவில்லை. ஆதலால் வழக்கு கொஞ்சம் குழப்பத்திலேயே இருந்தது.

அந்த இழையை எடுத்து டி.என்.ஏ. சோதனையிட்டபோது,, ராம்தாஸின் அல்லது அவர் குடும்பத்தாரின் டி.என்.ஏ வுடன் பொருந்தவில்லை. அவர்கள் இரண்டு மகன்களுக்கும் எந்த பெண் பற்றியும் தெரியாது என்று விசாரணையில் கூறி விட்டார்கள். அஜய் துப்பு துலக்க, அவர்கள் வீட்டிற்கு சென்று வீடு முழுவதும் தேடி விட்டு மாடிக்குச் சென்று அங்கேயிருந்து கீழே நோட்டம் விட்டபோது தோட்டத்தில் ஒரு வித்தியாசம் தெரிந்தது. உடனே கீழே இறங்கி, உதவியாளர்களை அழைத்து வித்தியாசம் தென்பட்ட இடத்தைத் தோண்டினார்கள். அங்கு ஓர் பெண்ணின் சடலம் இருந்தது. மற்றும் சில காகிதங்கள், அதில் மரபணு குறியீடுகள் போல் இருந்தன. தலைப்பில் 'ஸ்பெசிமன் நேம் பூர்ணிமா' என்று எழுதியிருந்தது.

யார் இவள்? குற்ற சம்பவம் நடந்த இடத்தில் இருந்தது இவள் தலைமுடி இழையா? புதைக்கப்பட்டவள் உடலைப் பார்த்தால் சில மாதங்களுக்கு முன் புதைக்கப்பட்டது போல் தோன்றியது. அவன் கிடைத்த தடயங்களை தடவியல் துறையில் மரபணு ஆராய்ச்சிக்கு அனுப்பி வைத்தான். அந்த இழை பூர்ணிமாவின் டி.என்.ஏ.வோடு ஒத்துப் போனது.

அஜய் ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான். அஜய்க்கு சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. ராமதாஸின் நண்பரான கிஷோர்சாமிக்கு ஏன் இந்த விவரங்களைத் தெரிவித்து உதவி கேட்கக்கூடாது என்று.

உடனே ராமதாஸின் நண்பரான கிஷோர்சாமியை அஜய் அலைபேசியில் தொடர்பு கொண்டான்.

கிஷோர்சாமி அஜயைப் புரிந்து கொண்டு, "சார்! வழக்கெல்லாம் எப்படி போய்க்கிட்டிருக்கு? நானே உங்களை தொடர்பு கொண்டு பேசலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்குள் நீங்களே பேசிட்டீங்க!"

"எனக்கு இந்த வழக்கு விஷயமாக சில உதவிகள் தேவைப்படுகின்றன. மேற்கொண்டு இந்த வழக்கில நடந்ததெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ராமதாஸுக்குப் பிறகு அவர் மனைவி மீனா கொலை செய்யப்பட்டார். இப்போதோ பூர்ணிமா என்னும் ஒரு பெண்ணின் சடலம் அந்த வீட்டுத் தோட்டத்தில் கிடைத்தது. கூடவே சில மரபணு குறியீடுகளும் கிடைத்தன."

இப்போது கிஷோர்சாமி அஜயை இடைமறித்து," பூர்ணிமா என்பவள் உருவாக்கப்பட்டவள்!" என்றார்.

அஜய் அதிர்ந்து போனான்.

"என்ன சொல்றீங்க? உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா?" என்றான் அஜய் பரபரப்பாக.

"ஆமாம் சார்! ராம்தாஸ், மீனா இவர்களுக்குக் குழந்தையில்லை. அவர்கள் மரபணு ஆராய்ச்சியில் நாட்டம் கொண்டு ஏன் நமக்கென்று ஒரு குழந்தையை உருவாக்கக் கூடாது என்று ஆராய்ச்சி செய்தபோது இவள் உருவாக்கப்பட்டாள். ஷீ இஸ் ஜெனிடிக்கலீ இன்ஜினீர்ட்!"

"அப்போ ஏன் இவள் இப்படி இறந்து புதைக்கப்பட்டிருக்கிறாள்?

"பூர்ணிமா உருவானது பற்றி ஆராய்ச்சி நிலையத்திற்குத் தெரிய வர ராம்தாஸ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் நிலை வந்தது. வேறு வழியின்றி ராம்தாஸும் மீனாவும் இவளைக் கொன்றார்கள். ஆனால் அவர்கள் அத்துடன் நிற்கவில்லை"

"சார்! உங்களுக்கு இத்தனை விஷயம் தெரிஞ்சிருக்கு. உங்களால் கட்டாயம் எனக்கு உதவ முடியும். மேலும் சொல்லுங்க..." என்றான்

"இதுக்கு மேல அலைபேசியில பேச முடியாது. நீங்க நேரே வர்ரீங்களா? பேசலாம்!" என்றார் கிஷோர்சாமி.

"கண்டிப்பா வரேன் சார்!" என்று அஜய் புறப்பட்டான்.

புறப்படுவதற்கு முன்பு ஒரு குழுவை துனை ஆய்வாளர் ஒருவருடன் கிஷோர்சாமி வீட்டுக்கு உடனே செல்லக் கட்டளையிட்டான்.

அஜய் அவர் வீட்டுக்குச் சென்றபோது கிஷோர்சாமி துரதிருஷ்டவசமாக மாண்டு கிடந்தார். அந்தக் குழு வீட்டில் நுழைந்தபோதே அவர் இந்நிலையில் தான் கிடந்ததாக துணை ஆய்வாளர் கூறினார்.

அதே போன்ற வெட்டு கழுத்திலும், மார்பிலும்!

மர்மம் அதிகமாயிற்று. விசாரணை சூடு பிடித்தது!

அஜய் தலையைப் பிய்த்துக் கொண்டான். கை தன்னிச்சையாக பேண்ட் பாக்கெட்டில் உள்ள சிகரெட் பாக்கெட்டை எடுத்தது.

உடனே வேகமாக ராமதாஸ் வீட்டுக்குச் சென்றான். எதிரே ஒருவன் பயத்துடன் ஓடி வந்ததைக் கண்டான்.

அவன் இளங்கோ!

"சார்! என்னைக் காப்பாத்துங்க!"

"என்னாச்சு?" என்றான் அஜய்.

"தினேஷ் என்னைக் கொல்ல வரான்."

"தினேஷா? உங்க தம்பியா? நீங்க என்ன சொல்றீங்க?"

"ஆமாம் சார்! அவன் கத்தியால் என்னக் குத்த வந்தான். நான் தப்பி ஓடி வருகிறேன் சார்!"

அவனுக்கு பதட்டத்தில் மேல் மூச்சு வாங்கியது.

"ஓகே! நீங்க உக்காருங்க" என்று கூறி துணை ஆய்வாளரை அந்த வீட்டை சோதனை செய்ய கட்டளையிட்டான். பிறகு இளங்கோவுக்குக் குடிக்க தண்ணீர் பாட்டிலில் கொடுத்தான். அப்போது துணை ஆய்வாளர் வாக்கி டாக்கியில் பேசினார்.

"சார்! தினேஷ் இறந்து கிடக்கிறார்." என்றார்.

அதிர்ச்சியடைந்து நின்ற அஜயிற்கு அலைபேசியில் அழைப்பு வந்தது. மரபணு ஆராய்ச்சியாளர் தான் பேசினார்.

"சார்! அந்த குறிப்புகள் பார்க்கும்போது இன்னொரு மனிதனை உருவாக்கி இருக்கிறார் போலத் தோன்றுகிறது. பூர்ணிமாவின் டீ.என்.ஏ. இளங்கோவோட டீ.என்.ஏ வோடு கச்சிதமாகப் பொருந்துகிறது."
இதைக் கேட்டு அஜய்க்கு அதிர்ச்சி இன்னும் அதிகமாகிய நிலையில் வாக்கி டாக்கியில் துணை ஆய்வாளர் மேலும் பேசினார்.

"சார்! இங்கே இன்னொரு பிணம் கிடக்கு. ரொம்ப அழுகிய நிலையில் இருக்கு. பார்த்தால் இளங்கோவின் சடலம் போல் இருக்கு."

அஜய் அதிர்ச்சியில், 'இளங்கோ எப்பவோ இறந்து விட்டான். அப்போ இங்கே இருப்பது?' என்று அச்சத்தில் திரும்பினான். இளங்கோ இடது கையில் தண்ணீர் பாட்டிலைப் பிடித்துக் கொண்டு தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தான். எல்லாம் புரிந்த நிலையில் அஜய் அச்சத்துடன் தன் துப்பாக்கியை எடுத்தான்.

அதனைப் பார்த்த இளங்கோ, "ஆமாம்! பூர்ணிமாவை கொன்னுட்டாங்க. என்னை அவர்கள் மகன் இளங்கோவை வைத்து உருவாக்கினார்கள். என்னைக் கொல்வதற்கு முன் நானே அவர்களைக் கொன்றேன்" என்று அஜயைத் தாக்க ஓடி வந்தான்.

அஜய் துப்பாக்கி ட்ரிகரை அழுத்தினான்.

எழுதியவர்

சிரீஷ் ஸ்ரீநிவாசன்
ஙி-9, இரண்டாவது மாடி,
சக்தி திரிபுரசுந்தரி அபார்ட்மெண்ட்ஸ்,
ப.எண். 36, கிழக்கு மாட வீதி,
திருவான்மியூர், சென்னை - 600041
தொ.பே:99628 75596/044-42020312.

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...