JUNE 10th - JULY 10th
மனதின் வேகம்!
"ஸ்மூத் லைக் பட்டர்.." என்று மழலை குரலில் பாடியவாறு ஆடிக் கொண்டிருந்தவனைப் பார்த்து "ஆடாம நில்லு சர்வேஷ்!" என்று கார்த்திகா அதட்டினாள்.
ஆனால் அவளது மகன் படுக்கையில் திரும்பி நின்றுக் கொண்டு தலையை படுக்கையில் வைத்து குனிந்து கால்களுக்கு இடையே தெரிந்த இடைவெளியில் அவளைப் பார்த்து சிரித்தான்.
கார்த்திகாவிற்கு சிரிப்பும் கோபமும் ஒருங்கே வந்தது. சிரிப்பை ஓரம் கட்டி வைத்துவிட்டு கோபத்துடன் தனது மகனைப் பார்த்தாள். ஏனெனில் அவள் சிரித்துவிட்டால் "அம்மா! எங்கே நீ என்னை மாதிரி செய்..!" என்று அவளைக் குட்டிக்கரணமே அடிக்க வைத்து விடுவான்.
அவனது பின்னால் வலிக்காமல் அடித்து.. "எழுந்திரு! நேரா உட்காரு!" என்று அவனைப் பிடித்து நேராக அமர வைத்தவள், "எங்கே சொல்லு பார்க்கலாம். எது பார்ஸ்ட்டா ஓடும்? ஆர்ஸ்ட்ரீச்சா! சீட்டாவா!" என்றுக் கேட்டாள்.
ஆனால் அவள் பெற்ற செல்வமோ அதற்குள் உருண்டு சென்று மேசையில் வைத்திருந்த அவனோட பொம்மை காரை எடுத்து தரையில் வைத்தவன் "என்னோட கார் தான் பார்ஸ்ட்டா போகும். ஜூர்ர்ர்ம்ம்ம்.." என்று அதை வேகமாக தரையில் தேய்த்து விடவும், அது திறந்திருந்த கதவின் வழியே ஹாலுக்கு சென்றது, அவனும் அதன் பின் ஓடினான்.
"அடேய்!" என்றவாறுக் கத்தியவாறு கார்த்திகா படுக்கையில் இருந்து எழவும், அந்நேரத்தில் குளியலறையில் இருந்து வெளியே வந்த அவளது கணவன் நரேன் "அவனை விடு கார்த்திகா! அவன் என்ன பப்ளீக் எக்சாம்மா எழுதறான். இப்போ தான் ப்ரீ கேஜீ போறான். அவனுக்கு போய் காலையில் ஆறு மணிக்கு பாடம் எடுத்துட்டு இருக்கே..! என் பையன் என்னை மாதிரியே நேரத்துல எழுந்திருக்கிறே பழக்கம் இருக்கு என்கிறதுக்கு இப்படிச் செய்யறது ரொம்ப தப்பு! அந்த விசயத்தில் அவன் உன்னை மாதிரி இல்லை. டெய்லியும் உன்னை எழுப்பி விடரது எனக்கு எவ்வளவு பெரிய வேலை தெரியுமா.." என்று முகத்தைத் துடைத்தவாறு வந்தான்.
கார்த்திகா "ஸார் ஜாங்கிங்கிற்கு கிளம்பியாச்சா..! இனி பிரெண்ட்ஸ் கூட ஜாலியா பேசிட்டே ரவுண்ட் அடிச்சுட்டு இன்னைக்கு வந்த நீயூஸை பற்றி ஒன்று விடாம பேசிட்டு.. ஏழு மணிக்கு தான் வருவீங்க..!" என்றுக் கேட்டாள்.
அதற்கு நரேன் "ஆமா! அதுக்கு என்ன..?" என்றுக் கேட்கவும், கார்த்திகாவின் குரலில் சுருதி ஏறியது.
"ம்ம்! அதுவரை இவனைப் பார்த்துகிறது யாராம்? எல்லா விளையாட்டு சாமான்களையும் காலையிலேயே வீடு புல்லா பரப்பி வச்சுருவான். போதாக்குறைக்கு வேலை செய்துட்டு இருக்கிற என்னை தொந்திரவு செய்வான். சமையலில் இருந்து எல்லா வேலையும் முடிச்சுட்டு.. நானும் ஆபிஸிற்கு கிளம்பணும் தானே.." என்றுப் படபடத்தாள்.
நரேன் குழப்பத்துடன் "அதற்கும்.. இந்த நேரத்தில் பாடம் சொல்லித் தருவதற்கும் என்ன இருக்கு..?" என்றுக் கேட்டான்.
கார்த்திகா "ம்ம்ம்! உங்க பையனுக்கு பாடப்புத்தகத்தை எடுத்தா தூக்கம் வந்திரும். அவன் அமைதியா தூங்கிட்டா.. நான் என் வேலைப் பார்ப்பேன் தானே..! இந்த விசயத்திலும் அவன் உங்க மாதிரி தான்.." என்றுக் கூறிவிட்டு அவனை இடித்து தள்ளிவிட்டு குளியலறைக்குள் புகுந்தாள்.
நரேன் தலைச் சொறிந்தபடி நின்றுவிட்டான்.
அடுத்த நிமிடமே கையில் பேஸ்ட்ம் பிரஷூமாக வெளியே வந்த கார்த்திகா "அவனை டூ மினிட்ஸ் பார்த்துக்கோங்க.." என்றுவிட்டுச் சென்றவளிடம் நரேன் "கார்த்திகா! எனக்காக வெயிட் செய்துட்டு இருப்பாங்க.." என்றான்.
உடனே கார்த்திகா திரும்பி முறைக்கவும், நரேன் "சர்வேஷ்.." என்றுத் தற்பொழுது அவளை இடித்துவிட்டு மகனைப் பார்க்க விரைந்தான்.
அப்பனும் மகனும் விளையாடுவதைப் பார்த்துவிட்டு வீட்டின் பால்கனி கதவை திறந்த கார்த்திகா.. அங்கு இருந்த பால்கனியில் சென்று நின்றாள். ஐந்தாவது மாடியில் இருந்து பார்த்தால்.. கிட்டத்தட்ட பாதி நகரமே தெரியும். அதைப் பார்த்தவாறு பல்துலக்குவதோ… தேநீர் அருந்துவதோ அவளுக்கு மிகவும் பிடிக்கும்.
ஆனால் அன்று நிதானமாக இரசிக்காமல் அலுவலகத்திற்கு செல்லுவதற்குள் செய்து முடிக்க வேண்டிய வேலைகளை அவளது மனம் பல் துலக்கியவாறு திட்டமிட்டது.
'முதலில் பால் காய்ச்சி கொடுத்து சர்வேஷ் வயிற்றை நிரப்பணும். பெரிய பொம்மைகள் இருக்கிற டாஸ் பாக்ஸை மட்டும் கொடுத்துட்டு சின்ன டாஸ் இருக்கிற மற்ற இரண்டு பாக்ஸை மேலே எடுத்து வச்சரணும். அப்போ தான் அவன் எப்படி பரப்பி வச்சுருந்தாலும் ஈஸியா எடுத்து அடுக்கி வச்சுருலாம்.'
'அப்பறம் கிச்சனுக்குள்ள புகுந்துட்டா.. சரியா இருக்கும். இன்னைக்கு மெனு.. காலையில சாப்பிட தோசை சம்பார் போதும்.. கொஞ்சம் டையர்டா இருக்கு. மென்சன் டைம் பக்கம் வருது. அது முடிந்த பிறகு வேணுன்னா சப்பாத்தி, பூரி அந்த மாதிரி செய்துக்கலாம்.'
'மதியம் கொண்டு போக.. முழு கத்திரிக்காய் புளிக்குழம்பு, வெண்டைக்காய் ப்ரை, அவிச்ச முட்டை செய்தரலாம். அதுக்கு வேண்டியது எல்லாம் பீரிட்ஜ்ல இருக்கு..!'
'அதுக்கு முதல்ல அரிசியை ஊற வச்சுட்டு, பருப்பை குக்கரில் போட்டுட்டு.. அழுக்கு துணியை மிஷின்ல போட்டரணும். அதுபாட்டிற்கு துவைச்சுட்டு இருக்கும். அயர்ன் செய்து வந்த துணி மூட்டை அப்படியே கிடக்கு. அதை நரேன் வந்ததும் அடுக்கி வைக்க சொல்லணும். சர்வேஷை நரேன் குளிக்க வைத்து கிளப்பி விடரதுக்குள்ள காய்ந்த துணியை மடிச்சு அயர்ன் செய்ய வேண்டிய துணியை பிரிச்சு வைக்கணும். மிஷினில் இருக்கிற துவைத்த துணியைக் காயப் போடணும்.. கிளம்பும் போது கீழே அயர்னிங் கடையில அயர்ன் செய்ய என்று கட்டி வைத்த மூட்டையை கொடுத்துட்டு போகணும்.'
'மென்சன் வரதாலே.. அடுத்து வர நாட்களில் பெருசா ஒண்ணும் செய்ய முடியாது. அதனால் மாவு ஆட்டணும். அதுக்கு இட்லி அரிசியை ஊற வைக்கணும். அப்போ தான் சாயந்திரம் வந்ததும் ஆட்டி வச்சுரலாம். முடிஞ்சா வெங்காயம் தோலுரிச்சு வைக்கணும், தேங்காய் கூட சீவி டப்பால போட்டு வைக்கணும். அப்போ தான் சட்னி அரைக்க எடுத்துக்க ஈஸியா இருக்கும்.'
'அப்பறம் நரேன் ஜாங்கிங் முடிச்சுட்டு வரும்போது சாமி படத்துக்கு போட பூ வாங்கிட்டு வரச் சொல்லணும். சாமி படத்துக்கு பூ மாத்த சொல்லணும். முந்தா நாள் போட்டது. அப்படியே இருக்கு!'
என்று மனதிற்குள் அன்று காலையில் செய்யும் வேலைகளைத் திட்டமிட்டதும், பால்கனியில் இருந்த சின்கில் வாயைக் கழுவி விட்டு சொன்னதைச் செயலாற்ற விரைந்தாள்.
கார்த்திகாவின் தலையைப் பார்த்ததும் "அப்போ நான் கிளம்பரேன்." என்று எழுந்தவனிடம் சண்டை போட நேரமில்லாமல் அமைதியாக சமையலறைக்குள் நுழைந்தவள், பாலை காய்ச்சி ஆற்றி சர்வேஷிற்கு கொடுத்தாள். அவன் பால் குடித்துக் கொண்டிருந்த நேரத்தில்.. பெரிய பொம்மைகள் கொண்ட பெட்டியை அவனுக்கு விளையாட எடுத்து வைத்துவிட்டு சிறுப் பெட்டிகளை மேலே எடுத்து வைத்தாள். பின் சமையலறைக்குள் புகுந்தாள்.
சம்பாருக்கு பருப்பை குக்கரில் வைத்தவள், அரிசையும் ஊற வைத்தாள். அதன் இட்லி அரிசியை ஊற வைக்க எடுத்தாள். அப்பொழுதே இந்த வேலை செய்யும் போது.. துணியை மிஷினில் போட வேண்டும் என்று திட்டமிட்டது நினைவிற்கு வரவும், அழுக்கு துணிகளை பொறுக்கி.. மிஷினில் போட்டவள், சோப்பு பவுடரையும் போட்டு ஆன் செய்தாள். அப்பொழுது குக்கர் விசிலடிக்கவும்.. நேராக சமையலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
பின் அவளும் சுவிட்ச் போட்ட மிஷினை போல் மடமடவென சமையல் வேலைகளை முடித்தாள். உடனுக்கு உடன் பாத்திரங்களையும் கழுவி வைத்தாள். அவ்வவ்போது சர்வேஷ் வந்து அவளைத் தொந்திரவு செய்யும் வேலையும் நடந்தது. வெங்காயத்தை உரித்து வைத்துவிட்டு தேங்காயை எடுத்து உடைத்தாள். அவளது துரதிர்ஷ்டவசமாக அழுகி போயிருந்தது. அவள் திட்டமிட்டதில் ஒன்று செய்ய முடியலையே என்று.. புலம்பியபடி அடுத்த வேலையைப் பார்க்க சென்றாள்.
அதற்குள் நரேன் வரவும்.. திட்டமிட்டது போல்.. அயர்ன் செய்து வந்த துணிகளை அடுக்கி வைக்க சொன்னாள்.
அதற்கு நரேன் "உனக்காக நான் இது கூடச் செய்ய மாட்டேனா..! இன்னும் எதாவது வேலை இருந்தா கூடச் சொல்லு.. செய்யரேன்." என்றுச் சிரிப்புடன் கூறினான்.
அதைக் கேட்ட கார்த்திகா இடுப்பில் கையை வைத்தவாறு "இன்னைக்கு எல்லாரும் என்ன டாப்பிக் ஓட்டனீங்க..? பொண்டாட்டி கிட்ட யார் அதிகமா அன்பா இருக்காங்க என்கிறதா..! ஆள் ஆளுக்கு ஒரு கதை விட்டாச்சா.." என்றுக் கேட்டாள்.
உடனே நரேன் "என்ன கார்த்திகா! என்னைப் பார்த்து இப்படிச் சொல்லிட்டே" என்றான்.
அதற்கு கார்த்திகா "நான் கெஸ் செய்தது சரியா! தப்பா! என்று மட்டும் சொல்லுங்க.." என்றாள்.
நரேன் அசடு வழிந்தவாறு சரி என்று தலையை ஆட்டினான்.
உடனே மதர்ப்புடன் சிரித்துவிட்டு கார்த்திகா உள்ளே செல்ல திரும்பவும் நரேன் அவளைப் பிடித்து நிறுத்தி "எப்படிக் கண்டுப்பிடிச்சே! அதை முதலில் சொல்லு.." என்றான்.
அதற்கு கார்த்திகா "நேத்து.. பரண் மேலே இருக்கிற பெரிய பாத்திரத்தை எடுத்து தரச் சொன்னேன். அதுக்கு நான் என்ன உன் வேலைக்காரானா என்றுக் கேட்டுட்டு போனீங்க..! நேத்து பொண்டாட்டிதாசன் இல்லை என்கிற டாப்பீக் தானே ஓடுச்சு.." என்றுக் கேட்கவும், நரேன் "நான் அயர்ன் செய்த துணிகளை எடுத்து வைக்க போறேன்." என்று அங்கிருந்து கழன்றுக் கொண்டான்.
கார்த்திகா "அப்படியே! சர்வேஷை ரெடி செய்துட்டு நீங்களும் ரெடியாகுங்க.." என்றாள்.
நரேன் "ஒகே! ஒகே!" என்றவாறுச் சென்றான். அங்கு பெரிய பொம்மைகளை வைத்து விளையாடி போரடித்து போயிருந்த சர்வேஷின் அடுத்த குறி நேற்று அயர்னிங் செய்து வைத்த துணிகள் கொண்ட மூட்டையாக இருக்கவும்.. நரேன் விரைந்து சென்று அவனுக்கு முன் அதைக் கைப்பற்றி.. நிம்மதி பெருமூச்சு விட்டான்.
அவர்கள் கிளம்பி வருவதற்கும் அவர்களுக்கு மதியத்திற்கு தேவையான உணவுகளை டிபன் பாக்ஸில் போட்டு வைத்தாள். அப்பொழுதே முட்டையை வேக வைக்க மறந்ததைக் கவனித்தாள். நெற்றியில் அடித்துக் கொண்டு சர்வேஷிற்கு எளிதாக சாப்பிட ஏதுவாக சிறிது தயிர் சாதம் தாளித்து வெண்டைக்காயை எடுத்து வைத்தாள். பின் சர்வேஷ் மற்றும் அவர்களுக்கு சில பழத் துண்டுகளையும் வைத்தாள். தோசைகளை ஊற்றி வைத்து சாம்பாரை கறிவேப்பிலை போட்டு தாளித்து எடுத்து சாப்பாட்டு மேசையில் சாப்பிட தயாராக வைத்தாள்.
நரேனும் சர்வேஷூம் தயாராகி வந்தனர். காலையில் நேரமாக எழுந்ததால் சர்வேஷ் தூக்கக்கலக்கத்துடன் கொட்டாவி விட்டவாறு தந்தையின் தோளில் சாய்ந்தபடி வந்தான்.
மேசையில் தோசையை பார்த்ததும் நரேன் "தோசையா! பாஸ்தா, ஆலூ பரோட்டா அந்த மாதிரி செய்யக் கூடாதா.." என்றுக் கேட்டான்.
அதற்கு கார்த்திகா சமையலறையை சுத்தம் செய்தவாறு "நேத்து சாப்பாடு கொஞ்சம் மிச்சமாகிருச்சு. அதுல தண்ணி ஊத்தி வச்சு கொடுத்திருக்கணும்." என்றாள்.
அதற்கு நரேன் "நேத்து அதுதான் ஆர்டர் போட்டு வாங்கி சாப்பிட்டேன். நல்லாயிருந்துச்சு.." என்றான். அதைக் கேட்ட கார்த்திகாவிற்கு மென்சன் டைமில் செய்ய டிஷ் ஒன்று கிடைத்த மகிழ்ச்சியில் அவளுக்கு 'ஈவில் கொம்பு' முளைத்தது.
சர்வேஷிற்கு ஊட்டியவாறு நரேன் "டைம் எட்டாகிருச்சு கார்த்திகா.." என்கவும்.. அவள் "இதோ ஹீட்டரை போடப் போறேன்." என்றுவிட்டு ஹீட்டரை போட்டு அணிய வேண்டிய துணிகளை எடுத்து வைத்தாள். அதைப் பார்த்ததும் துணி துவைக்க போட்டது நினைவிற்கு வரவும்.. பால்கனியில் நேற்று காயப் போட்டிருந்த துணிகளை எடுத்து.. கையோடு அயர்ன் செய்யும் துணிகளைப் பிரித்து எடுத்து வைத்தாள்.
அப்பொழுதே சாமி படத்திற்கு பூ மாற்ற வேண்டும் என்பது நினைவிற்கு வந்தது.
எனவே "சாமி படத்துல இருக்கிற பழைய பூவை எல்லாம் எடுத்துட்டு புது பூ போட்டுருங்களேன்." என்றுக் குரல் கொடுத்தாள். அவனும் சரி என்று பழைய பூச்சரத்தை எடுத்தவன், குளிர்சாதனப்பெட்டியை திறந்து "பூ எங்கே கார்த்திகா?" என்றுக் கேட்டான்.
சர்வேஷ் பரப்பி வைத்த பொம்மைகளை அடுக்கிக் கொண்டிருந்த கார்த்திகா அதிர்ச்சியுடன் "நீங்க ஜாக்கிங் முடிச்சுட்டு வரும்போது பூ வாங்கிட்டு வரலையா..?" என்றுக் கேட்டாள்.
நரேன் "நீ சொல்லவேயில்லையே.." என்றான்.
கார்த்திகா தலையில் அடித்துக் கொண்டு "மறந்துட்டேன்." என்றாள்.
நரேன் "சரி! சரி! டைமாச்சு! சீக்கிரம் குளிச்சிட்டு சாப்பிட்டு கிளம்பு..! அதுக்குள்ள டிபன்பாக்ஸ் எல்லாம் பேக்கில் எடுத்து வச்சு.. சர்வேஷிற்கு ஷூ மாட்டி விட்டுட்டு ரெடியாகிறோம்." என்றான்.
கார்த்திகா "இதோ.." என்று குளியலறைக்குள் ஓடியவள், அதன் பின் ஜெட் வேகம் தான்.. வேகமாக தயாராகி வந்தவள், அவசரம் அவசரமாக உண்டு முடித்தாள். சாமி படத்திற்கு முன் நின்று கும்பிடக் கூட நேரமில்லாமல் திருநீற்றை சிறிது எடுத்து நெற்றியில் பூசிவிட்டு தனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு வருவற்கும் சர்வேஷ் சிணுங்கியவாறு தாயிடம் தாவுவதற்கும் சரியாக இருந்தது.
சர்வேஷை அவள் வாங்கிக் கொண்டு வெளியே செல்லவும், நரேன் வீட்டை ஒரு தரம் பரிசோதித்து விட்டு பூட்டிவிட்டு அவர்களை அழைத்துக் கொண்டு லிப்ட்டை நோக்கி சென்றான்.
கீழே வந்ததும் அவர்களை அங்கேயே நிற்க சொல்லிவிட்டு தனது காரை எடுக்க கார் எடுக்க நரேன் சென்றான்.
தோளில் மகனுடன் நின்றிருந்த கார்த்திகாவின் கண்ணில் அயர்னிங் கடை தட்டுப்படவும் தான் சலவைக்கு என்று தனியாக துணிகளை எடுத்து கட்டி வைத்த மூட்டையை எடுத்துக் கொண்டு வராமல் போனது தெரிந்தது. அதற்குள் கார் வரவும் அதில் ஏறியமரும் முன் மேலே தெரிந்த தங்களது தளத்தின் பால்கனியை பார்க்கவும், துவைத்த துணியைக் காயப் போடாமல் வந்து விட்டது நினைவிற்கு வந்தது. 'கடவுளே' என்றவாறு காரில் அமர்ந்ததும்.. அடித்துப் போட்டது போன்ற சோர்வு தெரிந்தது. அனேகமாக நாளைக்கு என்று கணக்கு போட்டாள். அப்பொழுது தான் இட்லி அரிசியை மாவுக்கு என்று ஆட்ட ஊற வைக்காமல் பாத்திரத்தில் அளந்து போட்டு மூடி வைத்துவிட்டு வந்துவிட்டது நினைவிற்கு வந்தது. 'திட்டமிட்டது எல்லாம் போச்சா' என்றுத் தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.
கார் கிளம்பியதும் குஷியான சர்வேஷ் பின்சீட்டிற்கும் முன் சீட்டிற்கும் தாவியபடி "அம்மா! எது பார்ஸ்ட்டா போகும்?" என்றுக் கேட்டான்.
அதற்கு கார்த்திகா "உன் அம்மாவோட மனசு!" என்று எரிச்சலுடன் கூறினாள்.
நரேன் குழப்பத்துடன் பார்க்க.. கார்த்திகாவோ பற்களைக் கடித்துக் கொண்டு 'வேகமாக பிளன் மட்டும் போட்டாச்சு! ஆனா பாதி தான் முடிச்சுருக்கேன்.' என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தாள்.
முற்றும்…
#109
48,257
4,090
: 44,167
85
4.8 (85 )
s1998bhubana
ilakktamanibalasundara
geetha.santhanam
Nice
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50