JUNE 10th - JULY 10th
ஒரு மத்திம கோடை காலம். தஞ்சை மாவட்டத்தின் காவிரி கரை பகுதி. வெயிலின் உஷ்னம் தாழாமல் தலைக்காவிரி வறண்டு, கிளை நதி, கடைமடை, விளைநிலம் யாவும் வாய் பிளந்த முதலைப்போல வெடித்து கிடந்தன.
ரயில்பாதைப் போல தொடரும் வண்டிசோட்டுப்பாதயில் மாட்டுவண்டி ஒன்றில் கைகளில் தூக்கி செல்லும் டீசல் எஞ்சின்கள் மூன்றும், வண்டியின் பின்னால் கட்டப்பட்டு இரும்பு சக்கரங்கள் கொண்ட பெரிய டீசல் எஞ்சினையும் இரட்டை மாடுகள் இழுத்து வந்துக்கொண்டிருந்தது.
பூமியைத் துளைத்துக்கொண்டு ஈர ஆழம் கண்டிருந்த வயல் நண்டுகளை ஒரு வேட்டை கும்பல், ஒரு நேர் குச்சியில் ஒன்றின் கீழ் ஒன்றாக இணைக்கப்பட்ட மூன்று தகர சக்கரங்கள் காற்றை எதிர்த்து போராடி உழன்று சுழன்று இரைச்சலை ஏற்படுத்த, குளிர்பான பாட்டிலின் மூடியை துளைத்து நண்டு வளைக்குள் போலி மழை பொழிந்து விட, வெளியே எட்டிப்பார்க்கும் நண்டுகளை பட்டென பிடித்து பைகளில் சேமித்துக்கொண்டிருக்க, வெப்பல் காட்டில் இரைத்தேடி திரியும் கரிச்சான் குருவிகள் இளைப்பாற, கட்டவிழ்த்து மேயும் கரவை மாடுகளின் சிலிர்க்கும் முதுகு பரப்பு போதுமானதாக இருந்தது.
அந்த கிராமப்பகுதியில் 2 பெரும் குளங்களும், 7 சிறிய அளவு நீர் தேக்க குளங்களும் இருந்தாலும், ஆண்டு முழுவதும் தண்ணீர் வற்றாமல் கோடையிலும் தெப்பலோடும் ஒரே நீர் ஆதாரம் விரால்மீன்குளம். அடர்ந்து வளர்ந்த பசுமையான வேப்பமரங்களுக்கு மத்தியில் தண்ணீரில் மலர்ந்த நட்சத்திரங்களான செந்தாமரை மலர்களுடன், கெண்டை மீன் குஞ்சுகள் துள்ளி விளையாடும் பாய்மரக்கலம் போல படர்ந்த இலைகள் தடாகத்தின் ரம்மியத்தை கூட்டுவதோடு, சுட்டெரிக்கும் வெயிலிலும் தண்ணீரை சில்லென குளிர வைத்திருக்கும். பகல் முழுதும் மரக்கிளை இலைகளின் இடைவெளியில் நட்சத்திரங்களை பறிக்க நீளும் சூரியக்கைகள்.
குளத்தின் ஈசான்ய மூலையில், கஜா புயலில் சிக்கி குளத்தின் பக்கம் சாய்ந்தவாறு பக்கக்கிளைகளுடன் வளர்ந்து நின்ற அரசமரம் வாலில்லா வாலிபர்கள் வானிலிருந்து வீழும் மீன்கொத்திப்போல குதித்து மகிழ வாய்ப்பாக இருந்தது. ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரமாவது குளத்தின் அமைதியை நிலைக்குலைய செய்வதில் இந்த மரத்திற்கும், மரம் ஏறும் காளைகளுக்கும் உள்ள பங்கு அளவில்லாதது.
காவிரியிலிருந்து பிரிந்து வாய்க்காலில் வரும் முதல் தண்ணீரில் குப்பை கூலங்கள், பூச்சிபொட்டுகள், வரண்ட மனித மலங்கள், நண்டுகள், தலைபிரட்டைகள், வறட்டிகள் யாவும் அடித்து செல்லப்பட்ட இரண்டு நாளில் தெளிந்து, அதிக தேக்கத்தில் தண்ணீர் வரும்போது மதகுத் திறக்கப்பட்டு குளத்திற்கு தண்ணீர் திறந்து, போதும் போதுமென அலையாடி அரசல்புரசலாக நான்கு பக்க கரைகளின் உச்சி தென்பட குறுங்கடலின் மடை அடைக்கப்படும். அதன்பின் அடுத்த ஓராண்டு வரை மனித துணி, மணி அழுக்குகள், வண்டி வாகனங்களின் அழுக்குகள், ஊறி களித்த கறுத்த எருமைகளின் கழிவுகள், காலைக்கடனுக்கு பிந்தைய நீர்த்தேவைகள், ஈமசடங்குகள் முடித்து கரையும் பினச்சாம்பல், என இன்னும் விவரிக்க இயலாத அத்தனையும் ஒற்றைக்குளத்திற்குள் சங்கமம்!
இருந்தும் அதன் இயல்பில் பெரிதும் மாற்றம் ஏதும் ஏற்படாமல், கடல் போல கழிவுகளை வாங்கிக்கொண்டிருந்தது. இயற்கையில் எத்தனை எழிலை கொண்டிருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் மீன் பிடித்திருவிழாவின்போது வீசப்படும் வலையில் மற்ற மீன்களை விட, அதிக அளவில் சிக்கும் விரால் மீன்களே இக்குளத்தின் மற்றொரு பெருமையாக வாசம் கொண்டது.
அதிலும் இவ்வூரைச் சேர்ந்த இளைவட்டங்கள் ஆசைக்காட்டி மோசம் செய்வதில் பலே கில்லாடிகள். பதின் பருவ பிள்ளைகள் முதல் பல்லுபோன கிழவிகள் வரை உல்லாச குளியல் போடும் இக்குளத்தின் நான்கு பக்க கரைகளில் அமர்ந்துகொண்டு, தூண்டில் போட்டு தூக்குவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே. பருவ வனப்பில் தொட்டால் வழுக்கும் வெண்ணெய் போல தளதளவென உடல் முழுவதும் தசை போர்த்திய விரால் மீன்கள் சிக்குமென்றால் எப்படி வேறிடம் செல்ல மனம் வரும்?
பாசிகளையோ, அழுக்குகளையோ உணவாக எடுக்காத இவ்வகை மீன்கள் அவ்வளவு எளிதில் தூண்டிலில் சிக்குவதில்லை. மேலும் பிற மீன்களைப்போல அற்ப மண்புழுவிற்கு ஆசைப்படுவதும் இல்லை. கடலில் வாழும் சுறா மீன்களுக்கு நிகராக உயிருடன் உள்ள பிற மீன்களை வேட்டையாடி உண்ணக்கூடியது. அதற்காக கெண்டை மீன் குஞ்சுகளை துணி விரித்து பிடித்து அதை தூண்டிலில் கோர்த்து போட்டு, நீந்தவிட்டு விரால் மீனைப் பிடிக்க வேண்டும். தூண்டிலில் கோர்த்துப்போடும் மீன் குஞ்சு இறந்துவிட்டாலும் விரால் மீன் அருகில் வராது.
இவ்வளவு பிரயத்தனம் செய்து காத்திருந்து கண நேரத்தில் தூக்கி, மீன்களின் முகத்தில் பாய்ந்த தூண்டில் முள் காயத்துடன் வாளிக்குள் நீந்தவிட்டு உயிர் மீன்களாக வீடு கொண்டு சேர்ப்பதில் அவர்களுக்கு ஒரு பெருமை. இயல்பாகவே கரை சேர்ந்தும் உயிர் விட நேரம் எடுக்கும் தன்மைக்கொண்ட விராலை மீண்டும் அதே குளத்து தண்ணீரில் மூடியிட்ட தொட்டிக்குள் விட்டுவைத்து, தினம் ஒருமுறை தண்ணீர் மாற்றினால் வாரக்கணக்கில் உயிருடன் இருக்கும்.
இந்த ஆண்டு அறுவடைப்பணிகள் நிறைவடைந்து ஒவ்வொரு குளமாக நீர் வற்றி வர, விரால்மீன்குளம் மட்டும் தேக்கம் குறையாமல் தத்தளித்தது. அடுத்த ஒருவாரத்தில் ஊர் பெரும் தலைகளின் நாக்குகள் விரால் மீன் கறிக்கு ஆசைபட்டு ஊறிக்கிடக்க, வைகாசி கடைசி வெயிலின் தாக்கத்தில் தண்ணீர் மட்டம் இரண்டடிக்கும் மேலாக குறைந்தது. இதுதான் சந்தர்ப்பம் என முடிவு செய்து அமாவாசை நாள் இரவு, விரால் மீன் குளம் பிடிப்பது குறித்து தலைக்கட்டுகள் நால்வர் மட்டுமே கொண்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
சொந்த கதையில் துவங்கி, ஊரில் அதிக கண்டுமுதல், கோயில் குளத்தின் ஏல விவரம், பக்கத்து ஊரில் மீன் விலை, என பலக்கதைகள் பேசி இறுதியில், டீசல் எஞ்சின் ஒருவர், அதற்கான டீசல் செலவு இருவர், பணியாட்கள் சம்பளத்தொகையை ஒருவர் ஏற்பது மேலும் நிர்ணயிக்கும் தொகையில் மொத்த விற்பனையாக ஒருப்பகுதி மீன் வாங்கிக்கொள்வது என முடிவானது. மேலும் குளத்தின் கரைத்தடுப்பு, புதிய படித்துறை அமைக்க அரசு ஒப்பந்தம் லட்சத்தி எழுபதாயிரம் உறுதியானதை ரகசியமாக பேசி முடித்து, விற்பனை செய்யவுள்ள மீனிற்கான விலை நிர்ணயத்தில் அமாவாசைக் கூட்டம் முடிவடைந்தது.
அடுத்தநாள் காலை
டன டன டன டன...
டன் டன்..
டன் டன்..
டன் டன்......
"இதனால ஊர் மக்களுக்கு தெரிவிக்கிறது என்னன்னா, ரால்மீன்கொளம் படித்தொறையோட சேத்து, கர தடுப்பு புதுப்பிக்க முடிவு செஞ்சிருக்கு. இதுக்காவ வர்ற நாயித்துக்கெளம மீன் புடிக்கிறதாவும், மீன் விக்கிற தொகைய படித்தொற கட்டுமான செலவுக்கு போடுறதாவும் ஊர் பெருந்தலைகள் சார்பா முடிவுசெஞ்சிருக்கு. எல்லாரும் நாயித்துக்கெளம காலையில ரால்மீன்கொளத்துக்கு வந்திருங்கோ...
டன டன டன டன...
டன் டன்..
டன் டன்..
டன் டன்.....
என ஊர் வெட்டியான் வாயால் சேதி அறிவிக்கப்பட்டது. ஊருக்குள் வேறெங்கும் கிடைக்காத அளவு இக்குளத்தில் விரால் மீன் கிடைப்பதால் விலையில் கெடுபிடி அதிகம். மற்ற ஊரில் விற்பனையாகும் விலையை விட ஒரு கிலோவிற்கு நூறு, இருநூறு அதிகமாகவே நிர்ணயமாகும். மிதமிஞ்சி மீன் கிடந்தாலும் விலை குறைப்பு இல்லை.
மொத்த விற்பனை வியாபாரிகள், சுத்துப்பட்டு ஊர் மக்கள், என கடைசி மீன் வரை அடித்து பிடித்து அள்ளிச்செல்லும்.
முந்தைய நாள் சனிக்கிழமை பெருந்தலைகள் பேசியபடி எஞ்சின்களுக்கான டீசல் வாங்கி வர வண்டியுடன் ஆள் அனுப்பப்பட்டிருந்தது. வலை விரித்து மீன் பிடிக்க இடையூறாக குளத்தில் படர்ந்துள்ள தாமரைகளை ஒரு குழுவினர் அற்ப ஆயுளுடன் வெட்டி கரையேற்றினர். குளம் முழுவதும் அழுகி அமிழ்ந்த இலைகள் தண்ணீரில் கரைந்து நீரின் நிறம் மாறினாலும், உச்சி வெயிலில் அலைகள் வைரமாக மின்னியது.
மாலை வெயில் சாய்ந்தது. வாலால் இழுத்து வாயால் உமிழும் எஞ்சின்கள் மாலை 5 மணி முதல் நான்கு திசைகளிலும் தண்ணீர் இறைக்க துவங்கியது. காற்றாட இரவாக, டீசல் டேங்கின் கழுத்து வரை தளும்ப தளும்ப டீசல் ஊற்றிவிட, அன்றிரவு குளக்கரையில் வளர்பிறை நிலவொளியில் காவலுக்கு கண் விழிப்பவர்களின் விழி பிதுங்க அரசாங்க புட்டிகளை திருகி திறந்து, கலவைக்கு நிலவு மிதக்கும் குளத்து நீரூற்றி உரிஞ்ச தேவாமிர்தமானது.
எடை தளர்ந்த புட்டிகள் தரையில் புரள காது மந்தமாகி, காலின் கீழ் கரை நழுவ, தூரத்தில் கேட்கும் நரிகளின் ஊலையுடன் பட படவென போட்டிப்போடும் எஞ்சின் சப்தம் தேவ கானமானது. பளபளவென பொழுது புலர, காலைக்கடன் முடிக்க வந்தவர்கள் படித்துறையில் வேடிக்கைப்பார்த்தபடி இடம்பிடித்து அமர்ந்தனர். காலை 7 மணிக்கெல்லாம் தண்ணீர் இடுப்பளவை எட்டியது. வாட்ட சாட்டமான ஆட்கள், உள்ளாடை மேல் துண்டை சுற்றிக்கொண்டு வலையுடன் குளத்தில் இறங்கினார்கள்.
ஒரு பக்கத்திலிருந்து வலை விரித்து குளத்தில் வடக்கு மூலைக்கு அரித்து இழுத்து வந்த மீன்களை இயன்றவரை கரையேற்ற முயல, மதமதவென கறுத்து பெருத்த விரால்மீன்கள் திமிறிக்கொண்டு கரையில் ஏறியது. போதியமட்டும் கரை பக்கம் வலை இழுத்து மூன்று பக்கமும் சவுக்கு குச்சிகளை சேற்றில் இறுக்கி வலையை கட்டிவைக்க, வலைக்குள்ளிருந்து துள்ளி எழுந்த ஒரு பெரும் விரால் மீன், வலை இழுத்த ஒருவரின் தோளோடு சேர்த்து காதுமடலில் மெல்லிய வாலால் சுல்லென ஒன்று வைத்துவிட்டு மறுபுற நீரில் விழுந்து நீந்தி தப்பியது. வலையில் திமிறியபடி மெல்ல மெல்ல மீன்கள் மொத்தமும் கரையேறுவதற்குள் வியாபாரிகளுக்கு மீன்களை எடைப்போட்டுப் பிரிக்க துவங்கியது ஒரு குழு.
மக்கள் கூட்டம் நான்கு கரைகளிலும் கூட, தொடர்ந்து எஞ்சின் மூலம் குளத்தின் நீர்சேலை உருவப்பட்டுக்கொண்டிருந்தது. மனிதர்களோடு சேர்ந்து, பருந்துகளும், காக்கைகளும், வானத்து மேகங்களும், சூரியக்கண்களும் தடாகத்தின் நிர்வாணத்தை தரிசிக்க தவம் கிடந்தன.
மீண்டும் அடுத்தடுத்த வலைகளை விரிக்க, மாராப்பு விலகியதும் குத்திட்டு நிற்கும் மார்பகங்கள் போல குளத்தின் மேடான பகுதிகள் தண்ணீருக்கு மேல் தலைநீட்ட தொடங்கியது. கரையேறும் மீன்களை நான்கு கரைகளிலும் எடை வைத்து விற்பனை விருவிருப்படைந்தது. இதன் நடுவே பெரும் மீன்களாக பொறுக்கி எடுத்து, பெருந்தலைகட்டுகளின் வீட்டுகளுக்கு பின்பக்கமாக புறப்பட்டது.
தண்ணீர் மொத்தமும் வடித்து வெளியேற்ற, வேற்றிடம் தேடி புறப்பட்ட தண்ணீர் பாம்பின் இடையே சேற்றில் கெண்டை குஞ்சுகள் தத்தளிக்க, தவ்விய தவளையை கவ்விய கால்களுடன் பருந்தும், கரையும் காகமும் வட்டமிட அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிர்வாண தரிசனம் முடித்து பிரசாதமாக அனைவரது கையிலும், பையிலும் மீன்களை வாங்கிச் சென்றனர்.
கூட்டம் கலைந்து வெறிச்சோடி, கும்பாபிஷேகம் முடிந்த கோயிலாய் கலகலத்து போனது குளக்கரை. 11 மணி வெயில் ஏற ஏற தண்ணீர் இல்லாமல் சூடுகண்ட சேற்றை குழைத்து நெளியும் மீன்களை ராசாலி தூக்கிச்செல்ல போட்டிப்போட தன் நிர்வாண கோலத்தை ஊர் கூடி பார்த்ததால் அவமானம் தாழாமல் சில மணி நேரத்தில் உலரும் தேகம் நாற்றமெடுக்க குளம் தன்னுயிரை விட்டது.
ஒரு மாதத்திற்குப் பிறகு,
புதுத்தண்ணீர் வந்து நிறைந்ததும் ஊர் மக்கள் குளத்திற்கு சென்றபோது, புதிய சிமெண்ட் பூச்சு பொறிந்து நின்ற பழைய படித்துறை சுவரில் வெள்ளை வர்ணத்தில் பொதுப்பணித்துறை விரால்மீன் குளம் பராமரிப்பு செலவுத்தொகை ரூபாய். என்பதைத் தவிர மீதமெல்லாம் உதிர்ந்து போயிருந்தது.
-முற்றும்-
#495
30,500
500
: 30,000
10
5 (10 )
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
ramrajee23
nmurugesan673
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50