JUNE 10th - JULY 10th
நீங்கள் உங்கள் வயிற்றின் இருப்பை, முதன்முறையாக எப்போது உணரத் தொடங்கினீர்கள்? வயிறு என்ற ஒன்று இருப்பதாக, வயிறே பிரதானமாக எப்போது தோன்றியது? இத்தனை நாள் இருப்பதே தெரியாமல் இருந்த ஒன்று,
உங்கள் சிந்தனை முழுக்க, வயிறே வியாபித்து எண்ணங்களை நிரப்பியது என்றிலிருந்து? பசி முதலில் வந்த போது என்பீர்கள். நீங்கள் அன்னையின் கருவறையின் இருளில் கிடந்திருக்கும் போதே, பசியில், வயிற்றை என்னவென்றே தெரியாமல் உணர்ந்திருப்பீர்கள். பசி என்ற அடிப்படை உணர்வால் வயிற்றை அறிவது. நான் கூற வருவது அதுவல்ல.
உடலோடு இணைந்த உறுப்பு. உணர்வு அறியாமல் கிடந்தது. இப்போது மட்டும், விலகித் தனி உயிராக மாறி, என்னுடலின் மேல் பெரும்பாறையை வைத்தது போல் என்னை நசுக்குகிறது. இது போல நீங்கள் என்றாவது உணர்ந்ததுண்டா? நீரில் விழுந்து, இரண்டு நாள் கழித்து, கண்கள் இருந்த இடத்தில் வெறுமை படிந்த குழிகளோடு, மேலே எழும் பிணம் போல, ஊதி உப்பிக் கிடக்கிறது. பலூன் போல பறந்து விடுமோ? என் எடையினால் அதுவும் சாத்தியமில்லை தான். தனியாகப் பறந்து போய்விட்டால் கூட நன்றாக இருக்கும், என்று தான் தோன்றுகிறது. நல்லவேளை, நான் பறவையாக இல்லாமல் போனேன். இப்படி தொங்கும் வயிருடன் விண்ணில் உலவ, எவ்வளவு பெரிய சிறகுகள் தேவைப்பட்டிருக்கும். அவஸ்தை வாயு வெளியேறாமல், உற்பத்தியான இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறது. வயிற்றின் பாடு மிகவும் சிரமப்படுத்துகிறது. இந்த வயிறு ஏன் இப்படிக் கிடந்து உயிரை வாங்குகிறது.? வேதாளத்தைப் போல.
முடிவில்லாமல் நடந்து கொண்டிருக்கும் ஒரு துன்பியல் நாடகத்தில், காட்சிகளின் வேதனையை தாங்க முடியாமல், மூட முடியாத திரையைப் போல கனமாகக் கிடக்கிறது தொங்கியபடி. அந்தத் திரையை தூக்கிச் செல்லமுடியாமல், எங்கேயும் உணவு தேடிச் செல்வதில்லை. உடல் சுருங்கி விட்டது. தலையைத் தூக்கிப் பார்க்கும்போது மரத் தண்டு ஒன்று தொய்வடைந்து கிடப்பது போல, வயிறு மட்டுமே தெரிகிறது. வயிறு சொகுசாய் புதர் நிழலுக்குள் கிடக்க அதனுடன் வாலும், நிழல் காய்கிறது. புதருக்கு வெளியே, சூரிய ஒளியில் என் தலை வேகிறது. இந்தப் புதரும் பெரிதாய் வளர்வேனா என்று அடம்பிடிக்கிறது.
இந்த பசி ஏன் வந்து தொலைக்கிறது...?
ஒரு மதிய நேர வெயிலில்,
மெல்ல மெல்ல நகர்ந்து இந்தப் புதரை வந்து சேர்ந்தேன். இங்கே தான் சில புழுக்கைகள் கிடக்கின்றன. ஊர்ந்து செல்லும் போது, என் அடிப் பகுதியில் அழுந்தியதில் உணர்ந்தேன். எனில் இந்தப் புதர் அருகில், இந்தப் பசியை அணைக்கும் தீ ஒன்று கிடைக்கலாம். வெள்ளைத் தீ. காத்திருந்தேன். மாலை நெருங்கிய போது, அவன் வந்தான். வெண்மையான பஞ்சு மேகம் ஒன்று வானத்தில் மெதுவாக நகர்வது போல பொறுமையாக, நிதானமாக. நெருங்கி வந்த போது குருதியின் வாடை அடித்தது. அவனின் பின் பக்கம், வெள்ளை முடிகள் அடர் சிவப்பு வண்ணத்தில் தோய்ந்து காய்ந்து ஒட்டிக் கிடந்தன. பின்னங் கால்களில் ஒன்றில் இருந்தது அந்தக் குருதி வந்த அடையாளம் பெரிய காயத்துடன் இருந்தது.
என்னை நோக்கித் தான் மெல்ல நகர்ந்து வந்தான். சோர்வு அவன் கண்களில் தெரிந்தது. அவன் நான் இருப்பதை அறியவில்லையா? மிக நெருக்கமாக வந்தான். நான் காத்திருந்தேன். எந்த வித ஆற்றலும் செலவில்லாமல் நான் அவனை கவ்விப் பிடித்தேன். அவன் ஆற்றல் முழுவதையும், எங்கேயோ இழந்திருக்க வேண்டும் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை.
என்னை அறியாமலேயே, என் உடல் அவனைச் சுற்றி முறுக்கியிருந்தது. இறுக்கிய அழுத்தத்தால் அவன் காயத்திலிருந்து, புதிய இரத்தம் வழியத் தொடங்கியிருந்தது. இரத்தமும் சதையுமாக, சுவையான ஒரு உணவு. மெதுவாக, சுவைத்து விழுங்கினேன்.
இன்றோடு மூன்று நாட்கள்.
மூன்று நாட்களின் ஒவ்வொரு நொடியையும் எண்ணிக் கொண்டு இருக்கிறேன். ஒவ்வொரு நொடியும் அது கரையாமல் உள்ளேயே முண்டிக் கொண்டிருக்கிறது. பசி வெறியில் அன்று ஓர் ஆமையை ஒட்டுடன் உடைத்து விழுங்கிய போது, அடுத்த ஒரு மணி நேரத்தில், மீண்டும் பசி, பசி என்று கதறிய வயிறு இது.
எடையை விடப் பல மடங்கு உணவை உண்ட போதும், புதைகுழி போல எப்போதும் திறந்தே கிடந்தது. இன்று என் வாலின் எடை அளவு உணவைக் கூட சுமக்க முடியாமல் தவிக்கிறது. வயிற்றின் கதவு, அடிக்கடி பூட்டிக் கொள்கிறது. கீல்களில் துருவேறி விட்டது போல திறக்கவே யோசிக்கின்றது.
இந்த பசி ஏன் வந்து தொலைக்கிறது?
அன்று உணவு கிடைக்காத பொழுதுகளில் உயிரை அரித்த கேள்வியின் பரிமாணம், இன்று மாறிவிட்டது.
இந்த பசி ஏன் வந்து தொலைக்கிறது...?
இதோ இங்கே ஒடுகிறானே இந்தக் குட்டிப் பயல். எவ்வளவு சுவையாக இருப்பான் தெரியுமா? புதருக்குள் நுழையும் முன் பாய்ந்து, முறுக்கி எலும்புகளை உடைத்து, விழுங்கி, எத்தனை முயல்களைச் சுவைத்திருப்பேன். எலும்புகள் நொறுங்கும் ஓசையின் இனிமையை, ஆஹா.. எப்படிச் சொல்வேன்.? ஒரு கவிதைத் தருணமாக வெளிப்படத் தவிக்கும் இசைத் துணுக்கு அது.
அசையும் எல்லாமும் உணவு.
தசையின் வாசமே இனிமை.
திசைகள் தோறும் வேட்டை.
வருடமும் மாதங்களும்,
இரவும் பகலும் இல்லை
இளமையின் வயிற்றுக்கு.
வயிறு.. பசி..
வயிறு.. பசி.. வயிறு..
வயிறு.. வயிறு..,
வேண்டாம், வேண்டாம், வேண்டாம்..!
ஒரு நிமிடம். அது முயல் இல்லை போலவே.? முழுவதும் காண்பதற்குள் ஓடி விட்டான் படுபாவி. இயங்கும் அசைவின், அதிர்வில்லாமல் ஓடுகிறான். ஒரு வேளை கால்கள் தரையில் பாவாமல் பறந்து சென்றானா? மண்ணுக்கும் எனக்கும் தொடர்பு இற்றுவிட்டதா? எந்தவித அதிர்வும், மணமும் என்னை வந்து சேரவில்லையே.
என்னைச் சுற்றிலும் ஓசைகள். பறவையின் ஒலிகள், பூச்சிகளின் மலர்ப் பேச்சுக்கள். இன்னும் நிறைய ஒலிகள். ஒரு நிமிடம்! ஆ..! யாரோ நெருங்கி வரும் ஓசை தொலைவில் எனக் கேட்கிறது. அவர் வரும் காலடி ஓசையில் ஒரு மென்மை, இனிமை தெரிகிறது. நிச்சயம் நல்லவர். என் இந்நிலையை மாற்ற வந்த வானவர். வானவர் தான். தரையில் நிழல் இல்லாமல் வருகிறார். அண்மையில் அவர் மணம், நான் அறிந்த ஏதோ ஒரு மலரின் வாசனையை நினைவு படுத்துகிறது. மலரின் பெயர் நினைவு வரமாட்டேன் என்கிறது. பச்சை வண்ண மலர் போல இருப்பதாகத் தெரிகிறது அவர் உருவம். பசுமை நிற மலர். உலகின் மிகப் பெரிய வண்ணம். உலகை உய்விக்கும் நிறம். என்னைத் தேடி வரும் பச்சை மலர். இதுவரை பச்சை நிறத்தில் ஒரு மலரை கண்டதில்லை. முதன் முறையாக அருகில் காண்கிறேன்.
இதோ, அவர் என்னைத் தழுவிக் கொள்கிறார். இதற்காகத்தானே காத்திருந்தேன். அந்த அன்பருக்கு என் மேல் எத்துணை அன்பு. இந்தத் தழுவலின் இறுக்கம் சிறிது சிறிதாக, என் மார்பை மகிழ்ச்சியால் நிரப்புகிறது. மகிழ்ச்சி நிரம்பிய மார்பு. முழுவதும் மகிழ்ச்சியால் நிரப்பிய மார்பு உங்களுக்கு எப்போதாவது அமைந்துள்ளதா? குறைந்தது பாதியாவது?
எங்கேயோ எலும்புகள் உடையும் ஓசை எனக்கு நன்றாகக் கேட்கிறது. மீண்டும் அந்த ஓசை. எவ்வளவு இனிமையாக இருக்கிறது. விழிகள் தெளிவாகத் தெரிகின்றன. அதோ தொலைவில் ஒரு தாய் மான் தன் குட்டிகளுடன் மேய்ந்து கொண்டிருக்கிறது. அதன் வாயில் இருக்கும் புல்லின் நுனியில் மகரந்தத் துகள்கள் வெண் மஞ்சள் நிறத்தில் ஒட்டியுள்ளது. கவிதையின் இலக்கணம் குறித்து படிக்கவில்லை. இல்லையெனில் இத்தருணத்தை, மனதில் தோன்றும் தரிசனத்தைக் கவிதையாக்குவேன். பரவாயில்லை. அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது அதற்கு நேரமில்லை. ஆமாம். காட்சியின் அழகில் நானும் கவனிக்கவில்லை. என் வயிறு எங்கே? இங்கே தானே இருந்தது. காணவில்லையே.! என்னால் திரும்பிப்பார்க்க இயலவில்லை. என் வயிறு இருக்கும் இடம், தெரியவில்லை. ஓடி விட்டதா என்னை விட்டு? எங்கே போனது? வேதாளத்தைக் காணவில்லையே. நிம்மதி. அமைதி. மனதில் இப்போது தான் வருகிறது. என்ன ஒரு அழகான நேரம். பாரம் குறைந்துவிட்டது. நான் மெல்ல மெல்ல ஓர் இருண்ட குகைக்குள் செல்லத் தொடங்கினேன். எவ்வித கிளைப் பாதைகளும் இல்லாத குகை. மென்மையான, ஈரமான தரைத் தளத்தைக் கொண்டிருந்தது. செல்லச் செல்ல வெப்பம் குறைந்தது. குளிர்ந்தது. எனக்குப் பின்னால், ஒளி பிரகாசமாகிக் கொண்டே வந்தது.
#619
55,250
250
: 55,000
5
5 (5 )
viji.comics
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
vkarunkamal
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50