தலைவா...

kadaitheru
அரசியல்
5 out of 5 (1 )

"எல்லாரும் எங்கிட்ட ரொம்ப வருஷமா கேட்டுகிட்டே இருக்கிற ஒரு கேள்வி. அரசியலுக்கு எப்போ வரப்போறிங்க. அதுக்கான பதிலை இன்னும் மூணு மாசத்துல இதே மண்டபத்தில நடக்கப்போற என்னோட பிறந்த நாள் விழாவில் உறுதியா,இறுதியா சொல்றேன்" என்று நடிகர் ராஜ் பேசிமுடிக்கும் முன்னே ரசிகர்களின் கரகோஷத்தில், விசில் சத்தத்தில் அந்த கல்யாண மண்டபமே அதிர்ந்தது.

பாதுகாவலர்கள் புடைசூழ அனைவருக்கும் சிரித்தமுகத்துடன் கை அசைத்தபடி நடந்துசென்றார் ராஜ். விரைவில் தனது அறுபதாவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். எளிமையான உருவம். வெள்ளை நிற குர்தா. ஒல்லியான தேகம்,மாநிறம். முகத்தில் முக்கால்வாசி நரைத்த தாடி. அவர்தான் தமிழ்சினிமாவின் மெகா ஸ்டார் என்று சினிமா பற்றி தெரியாதவரிடம் சொன்னால் சத்தியமாக நம்பமாட்டார்கள்.

தமிழகத்தில் தீபாவளி,பொங்கல் பண்டிகைகளுக்கு அப்புறம் பெரிதாக கொண்டாடப்படும் நாள் ராஜ் படம் ரிலீஸ் ஆகும் நாள்தான்.

புதிது,புதிதாக அவருக்கு பின்னால் நடிகர்கள் அறிமுகமாகி, அதில் பலர் காணாமல்போய், பலர் மாமா,அப்பா,சித்தப்பா கேரக்டராக செட்டிலாகி, சிலர் மட்டும் முண்ணனி ஹீரோக்களாக ஜெயித்தாலும், மார்க்கெட் நிலவரத்தில் நெம்பர் ஒன் என்றால் அது அன்று முதல் இன்றுவரை ராஜ் மட்டும்தான். நூறுவயதானாலும் அவர் சினிமாவில் நடிக்கும்வரை அவர்தான் மெகா ஸ்டார் என்று வினியோகஸ்தர்கள் பேசிக்கொள்வார்கள்.

மறுநாள் டிவி சேனல்கள், தினசரிகள் தொடங்கி டீக்கடைவரை 'ஹாட் டாபிக்'கானது ராஜ் அவர்களின் அரசியல் குறித்தான பேச்சு.

ராவொடு ராவாக ஊரெங்கும் 'வருங்கால முதல்வரே' என்று திரும்பியபக்கமெல்லாம் போஸ்டர், பேனர் என அமர்க்களப்படுத்த தொடங்கிவிட்டார்கள் அவரது ரசிகர்கள்.

ஒருசில அரசியல்கட்சி தலைவர்கள் அவரது அரசியல் வருகைக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து இப்போதே 'துண்டு' போட்டு தனது கூட்டணியை(!) உறுதி செய்தனர்.

"அவருடைய தாத்தா ஒரிசாவில் பிறந்தவர். அதற்கான ஆதாரம் இருக்கிறது.அவர் தமிழர் இல்லை. அதனால் ராஜ் அரசியலுக்கு வரக்கூடாது " என்று விமர்சித்தார் ஒரு அரசியல்கட்சியின் தலைவர்.

முதல்வர்,து,முதல்வர்,எதிர்க்கட்சிதலைவர்,சக சினிமாக்கார்கள்,பேஸ்புக்கிகள் என அனைவரும் அவரது அரசியலை எதிர்த்தோ,ஆதரித்தோ தங்களது கருத்துக்களை 'டிவிட்'டினார்கள்.

ஒரு முண்ணணி செய்திசேனல் ஒரு டாக்டர், ஒரு கவிஞர், ஒரு ரிட்டையர்டு அரசு ஊழியர், ஒரு ஒயின்ஷாப் உரிமையாளர் ஆகியோரை உட்காரவைத்து ராஜ் அரசியலுக்கு வருவதற்கு அவருக்கு தகுதி இருக்கிறதா? இல்லையா? என மணிக்கணக்கில் விவாதம் செய்து, அதை நேரலையாக்கி தங்களது 'டிஆர்பி'யை ஏற்றிக்கொண்டது.

ராஜ் தனது வீட்டில் தனது அகில இந்திய ரசிகர்மன்ற தலைவர் கதிரேசன்,குடும்ப நண்பரும், முதுபெரும் பத்திரிக்கையாளருமான பரமசிவம் ஆகியோருடன் அமர்ந்திருந்தார்.

.

"நீங்க சொன்ன ஒரே வார்த்தையில மீடியாவே பத்திகிட்டு எரியுது தலைவரே. இதுக்காகதான் நாங்க இத்தனை வருஷமா காத்திருந்தோம்" என்று உற்சாகமாக கதிரேசன் பேசியதை மெல்லிய புன்னகையுடன் கேட்டார் ராஜ்.

"நான் ஸாரி நாம அரசியலுக்கு வந்தா ரசிகர்கள் தவிர மத்த பொதுமக்களோட ஆதரவு கிடைக்கும்னு நினைக்கிறீங்களா கதிர்" என்று கேட்டார் ராஜ்.

"என்ன தலைவா. இப்படி கேட்டுடிங்க. இன்னைக்க நம்ம தமிழ் நாட்டு மக்கள் உங்களை போன்ற நல்ல தலைவருக்கு ஏங்கி கிடக்குறாங்க.

மாறி,மாறி இரண்டு கட்சிகள் மட்டுமே ஆட்சி செஞ்சது போதும். ராஜ் சார் அரசியலுக்கு வரணும்ன்னு பொது இடங்கள்ல மக்கள் பேசிக்கிட்டதை நானே கேட்டிருக்கேன். அடுத்த ஆட்சி நம்மோடுதான் தலைவா. சரின்னு சொல்ற உங்க ஒரு வார்த்தைக்குதான் எல்லாரும் காத்துகிட்டிருக்கோம்" என்று அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு பதிலினார் கதிர்.

"நீங்க ஒண்னும் பேசலையே சிவம்" என்று கேட்டார் ராஜ். பரமசிவம், ராஜ் அவர்களின் பால்யகால நண்பர். ஒரு பிரபலமான அரசியல் பத்திரிக்கையின் ஆசிரியர், சொந்தவிஷயங்களில்கூட இவரது கருத்தை கேட்காமல் எந்த முடிவையும் எடுக்கமாட்டார் ராஜ் என்பது அனைவருக்கும் தெரியும்,

"இன்னும் ஒரு வருஷத்துல தேர்தல் வரப்போகுது, சட்டுன்னு கட்சி ஆரம்பிச்சு ஆட்சியை பிடிக்கறதுக்கெல்லாம் சான்ஸே இல்லை.

இனிமே கூட்டணி இல்லாம நீங்க மட்டும் இல்ல, எந்த அரசியல் கட்சியும் தமிழ்நாட்டில தனியாக ஆட்சியை பிடிக்க முடியாது ராஜ்"

என்று சிவம் சொன்னதை மிக கவனமாக, பள்ளி மாணவனைபோல கவனித்தார் ராஜ்.

"ஆனா, நிச்சயமா ஒண்ணு சொல்லமுடியும். தமிழ்நாட்டு அரசியல்ல ஒரு வெற்றிடம் இருக்கிறதும், மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறதும் உண்மை.சென்னை டு கன்னியாக்குமரி வரைக்கும் உங்களுக்குன்னே இருக்குற புகழ்,செல்வாக்கு, எல்லாத்துக்கும் மேல இரண்டு தலைமுறையா இருக்கிற ரசிகர்கள் இதையெல்லாம் வச்சு பாக்கும்போது நீங்க தனிக்கட்சி ஆரம்பிச்சா குறைஞ்சது அம்பது சீட் தாராளமா ஜெயிக்கமுடியும்.அடுத்த ஆட்சியில யாரை உட்காரவைக்கலாம்ன்னு தீர்மானிக்கற இடத்துல நம்ம கட்சி கண்டிப்பா இருக்கும்" என்று முடித்தார் சிவம்.

'அதுதான் சிவம்' என்று தோன்றியது ராஜ் அவர்களுக்கு. ஒரு பத்து நிமிட சிந்தனைக்கு பின் கதிரிடம் சொன்னார் ராஜ்.

"உடனே நம்ம மன்றத்து பேர்ல ஒரு வெப்சைட் ஆரம்பிங்க. ரசிகர்கள், அவர்களோட குடும்பத்தினர், சொந்தக்காரங்க,நம்ம மன்றத்துல சேர விரும்புறவங்கன்னு எல்லாரையும் அதில் பதிவு பண்ணுங்க. ஒரு

கிராமத்தையும் விடாதீங்க.தமிழ்நாட்டோட மூலை முடுக்கெல்லாம் விண்ணப்பபடிவத்தோட போங்க. இந்த ப்ராஜெக்ட்டை இரண்டு மாசத்துல முடிக்கணும்" என்று ராஜ் பேச,பேச கதிர்

முகத்தில் கோடிவாட்ஸ் பல்பு எரிந்தது.

"ஜாமாய்ச்சிடலாம் தலைவா" என்று பொறி பறக்க சொன்னார் கதிர்.

"என்ன ராஜ். ஒருவழியா முடிவு பண்ணியாச்சா" என்று சிரித்தபடி கேட்டார் சிவம்.

"இல்லை சார்.அதுக்குதான் இது. டேட்டா முழுசா கைக்கு வந்ததுக்கு அப்புறம் மத்தது பேசிக்கலாம்,நம்ம பலம் என்ன, பலவீனம் என்னனு தெளிவா தெரிஞ்சுக்காம சண்டைக்கு போறது தப்பு" என்று பதிலுக்கு சிரித்தார் ராஜ், சினிமா வாழ்க்கையில் ராஜ், தன் குருநாதரைப்போல மதிக்கும் தயாரிப்பாளர் ராமச்சந்திரன் அடிக்கடி பேசும் வார்த்தை இது. பேசிமுடித்ததும் ராஜுக்கு ராமச்சந்திரனின் ஞாபகம் வந்துவிட்டது .

"ராமச்சந்திரன் சாரை பார்த்து நலைஞ்சு வருஷமாச்சு. எங்க இருக்கார்ன்னு கேளுங்க. உடனே நான் பாக்கனும்னு சொல்லுங்க" என்று தனது உதவியாளரை அழைத்து சொன்னார் ராஜ்.

"கதை ரொம்ப நல்லா இருக்கு. எம்,ஜி.ஆர் சார் பண்ணா சூப்பரா இருக்கும் சார்" என்று ராஜ் சொன்னதை கேட்டு சிரித்த ராமச்சந்திரன்,

"தம்பி, இதை நீங்கதான் பண்ணப்போறிங்க" என்று அவர் சொன்னதும் கொஞ்சம் பதறித்தான் போனார் ராஜ்.

ஏதோ பகல்கனவுபோல இருந்தது அவருக்கு. பத்துவருடங்களாக துக்கடா கதாபாத்திரங்களில் தொடங்கி இப்பொதுதான் வில்லன் கதாபாத்திரங்களுக்கு வந்த தனக்கு திடீரென்று ஹிரோ வாய்ப்பு வந்ததையும்,அதுவும் ஒரு பெரிய பேனரில் என்பதையும் அவராலேயே நம்பமுடியல்லை.

"சார். இதெல்லாம் ஒத்துவருமா. என்னால முடியுமானு எனக்கே

தெரியல.உங்களுக்கு எதுக்கு தேவையில்லாத ரிஸ்க்" என்று தயக்கத்தோடு பேசியவரிடம் "ஒரு யுத்ததுக்கு போறதுக்கு முன்னால நம்ம பலம் என்ன, பலவீனம் என்னனு முதல்ல நாம நல்லா தெரிஞ்சிக்கனும், உங்களுக்குன்னு பிரத்யேகமா இருக்கிற ஒரு மானரிசம்தான் உங்க பலம். அதை இதுவரைக்கும் புரிஞ்சுக்காம இருக்கிறதுதான் உங்க பலவீனம். இந்த கதை உங்களுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும். இந்த படத்துல உங்க ஸ்டைல் பெருசா

பேசப்படும் பாருங்க" என்று நம்பிக்கை கொடுத்தார் ராமச்சந்திரன்.

அந்த படம் ப்ளாக்பஸ்டராகி, சாதாஸ்டாராக இருந்த ராஜ் மெகாஸ்டார் என்று உயர்ந்தார், அதன்பிறகு இருபது வருட சினிமா வாழ்க்கையில் ராமச்சந்திரன் பேனரில் மட்டும் பத்து படங்கள். அதில் எட்டு படங்கள் சூப்பர்ஹிட்.

ஐந்து வருடங்களுக்கு முன்னால் ராமச்சந்திரன் தயாரிப்பில் வெளியான நூறாவது படமான "குதிரை" படத்தின் வெற்றிவிழா அன்றுதான் ராஜ் அவரை கடைசியாக பார்த்தது,

"சார்,அவரே உங்களை பார்க்க வந்துகிட்டு இருக்கிறார்" என்று ராஜின்

நினைவுகளை கலைத்தார் உதவியாளர்.

ராமச்சந்திரனா அது? கம்பீரம் கலைந்து ஒடிந்துவிழுகிற தேகத்தோடு, ஐந்து வருடங்களில் பத்து வயது கூடினார்போல இருந்தவரை பார்த்து ஒரு கணம் பதறிப்போனார் ராஜ். "என்ன ஆச்சு சார். உடம்புக்கு எதுவும் முடியலையா." என்று ஒடிவந்து அவர் கைகளை பிடித்து வரவேற்றார் ராஜ். இவ்வளவு உயரத்துக்கு போனாலும் கொஞ்சமும் மாறாத அதே பழைய பணிவை கண்டு வியந்தார் ராமச்சந்திரன்.

"சினிமா தந்த பரிசுதான் இது" என்று சிரித்துகொண்டே சொன்னவர்,சம்பதாய விசாரிப்புகளுக்கு பின் "ஆமா நீங்க

அரசியலுக்கு வரப்போறிங்கன்னு பார்த்தேன்." என்று கேட்டபடி

அமர்ந்தார் ராமச்சந்திரன்,

"யோசிச்சுகிட்டே இருக்கேன். இன்னும் முடிவு பண்ணல சார்".

"இன்னும் என்ன யோசனை. சினிமாக்காரங்க தாராளமா அரசியலுக்கு வரலாம் ராஜ். ஏன்னா, நிஜ அரசியலைவிட பல மடங்கு படுகேவலமான அரசியல் இன்னைக்கு சினிமா

உலகத்துல நடந்துகிட்டு இருக்கு".

"சார்.கடைசியா நீங்க பண்ணிண 'குதிரை' பெரிய ஹிட் ஆச்சே".

இதை கேட்டுவிட்டு விரக்தியாய் சிரித்தார் ராமச்சந்திரன்,

"ஐந்துகோடி பட்ஜெட்டில மொத்த படத்தையும் முடிச்சோம். அந்த படத்தை சம்பத் ஆறுகோடிக்கு எங்கிட்ட இருந்துவாங்கி, அறுபதுகோடிக்கு லாபம் பார்த்தான்". என்றார். அவர் குறிப்பிட்ட சம்பத் மிகப்பெரிய அரசியல் பிண்ணனியில் இருந்துவந்து குறுகியகாலத்தில் பெரிய தயாரிப்பாளர் ஆனவன்.

"நீங்க ஏன் சார் அந்த படத்தை அவன் கிட்ட வித்தீங்க. வழக்கமா நீங்களேதான் உங்க படத்தை ரிலிஸ் செய்வீங்க".

"ராஜ், மெகா பட்ஜெட் படங்கள். பெரிய லெவல் பிசினஸ்ன்னு போய்விட்ட உங்களுக்கு இன்றைய சினிமா டிரெண்ட் புரியாம போயிடிச்சின்னு நினைக்கிறேன். அவன் கிட்ட கொடுக்காம போயிருந்தா அந்த படம் இன்டர்நெட்டில் மட்டும்தான் ரிலீஸ் ஆகியிருக்கும் " என்றவர் தொடர்ந்து பேசினார்.

"ஒட்டுமொத்த தமிழ்சினிமாவும் இன்னைக்கு குறிப்பிட்ட நாலுபேர் கையிலதான் இருக்கு. அவங்கதான் எந்த படம் எப்போ ரிலீஸ் ஆகனும், அதுக்கு எத்தனை தியேட்டர்கள் கொடுக்கனும், அதுவும் எந்த தியேட்டர்கள் அப்படின்னு முடிவு பண்றாங்க. இன்னும் சொல்லப்போனால், தியேட்டர்ல்ல ஷோ டைம் ஒதுக்கறது கூட அவங்கதான்.

"ஒரு படத்தை நல்லபடியா எடுத்துமுடிச்சாக்கூட பைனான்சியர்கிட்ட கடன் வாங்கி முதல்போட்ட புரொட்யுசர், படத்தோட

டைரக்டர், அந்த படத்தோட ஹிரோ இப்படி யாருக்கும் அந்த படம் எப்போ ரிலிஸ் ஆகும்னே தெரியாது. அதுதான் இன்னைக்கு தமிழ்சினிமாவோட நிலைமை.முன்னாடி எல்லாம் படம் ஹிட்டானால் கொண்டாடுவாங்க. இப்போ படம் தியேட்டர்ல ரிலீஸ் ஆனாலே கொண்டாடுற சூழ்நிலை.இப்படி நூத்துக்கணக்கான படங்கள் வருமா இல்ல வரவே வராதான்னு தெரியாம வருஷக்கணக்கா முடங்கி கிடக்கு".

என்று அவர் பேசிதை பொறுமையாக, ஒருவித அதிர்ச்சியோடு கேட்டுக்கொண்டிந்தார் ராஜ்.

."குதிரை படத்தில வந்த ஆறுகோடியை வச்சி அப்புறம் ஒரு படம் எடுத்தேன். புது இயக்குனர். அழகான கிராமத்து கதை. சினிமா தொழிலாளர் ஸ்டிரைக், உதவி இயக்குனர்கள் ஸ்டிரைக்ன்னு இரண்டு தடவை படத்தோட ரிலீஸ் தள்ளிபோச்சு, அப்புறம் பெரியபடங்கள் இல்லாத ஒரு வெள்ளிக்கிழமை கொடுத்தாங்க. கைகாசை

எல்லாம் போட்டு விளம்பரம் செஞ்சேன். அந்த ஒரே நாள்ல என்னோட படம் மாதிரி பத்து சிறிய பட்ஜெட் படங்களோட ரிலீஸ். சென்னையில இருபது ஷோ ஒதுக்கி இருக்கோம்ன்னு சொன்னாங்க".

இடைவிடாமல் பேசிக்கொண்டிருந்த ராமச்சந்திரனின் குரல் கம்மியது.இனம்புரியாத துக்கம் தெரிந்தது.

"பத்திரிக்கைகாரங்க, நண்பர்கள்ன்னு எல்லாரையும் கூட்டிக்கிட்டு முதல் ஷோ பாக்க சத்யம் தியேட்டருக்கு ஒடினேன் ராஜ். ஒரு ஸ்கூல் பையன் மாதிரி. உங்க படம் எதுவும் இன்னைக்கு ரிலீஸ் இல்லையே சார். நிறைய படங்கள் வந்ததால உங்க படத்துக்கு தியேட்டர் கிடைக்கலன்னு நினைக்கிறோம், எங்களுக்கு எதுவும்நியுஸ் வரலை, சாரி சார்ன்னு பதில் சொன்னாங்க".

என்று கண்கலங்க சொல்லிக்கொண்டிருந்தார் ராமச்சந்திரன்.

"பழம்தின்னு கொட்டைபோட்ட என்னை மாதரி ஆளுக்கே இந்த நிலைமை என்றால் புதுசா சினிமா தொழிலுக்கு வருபவர்கள் ரொம்ப பாவம் ராஜ். ஆர்வத்தோடு வர்றவங்களை அப்படியே மண்ணோடு மண்ணா புதைக்கறதுக்குன்னு ஒரு கும்பலே இருக்கு". என்றுசொல்லிமுடித்தார் அவர்.

எப்பேர்ப்பட்ட தயாரிப்பாளர். எத்தனை வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். எவ்வளவு பார்த்திருப்பார். இன்றைக்கு அவர் படத்தை ரிலீஸ் செய்வதற்கு இவ்வளவு போராட்டமா?.

"நீங்கதான் ராஜ் படத்தை ரிலீஸ் செய்ய ஹெல்ப் பண்ணனும், அதுக்குதான் நானே உங்களை பார்க்கனும்னு நினைச்சிகிட்டு இருந்தேன். ஆண்டவன் மாதரி நீங்களே என்னை வரவெச்சுடிங்க"

இத்தனை வருட நட்பில் சுயமரியாதை மிகுந்த ராமச்சந்திரன் உதவி என்று ராஜிடம் கேட்பது இதுவே முதல் முறை.

தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் வினியோகஸ்தர்கள் சங்கங்களிடம் பேசி அவரது படத்தை வெளியிடுவதற்கு உதவுவதாக உறுதி அளித்த ராஜ், தனது அடுத்த படத்தின் சென்னை நகர உரிமையை அவரது நிறுவனத்துக்கு வாங்கித்தருவதாகவும்

ராமச்சந்திரனிடம் வாக்களித்து, அவரை அன்போடு தேற்றி அனுப்பினார்.

சென்னை மாநகரமே அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தை பார்த்ததில்லை. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ராஜ் முகம் பதித்த கொடிகள் கட்டிக்கொண்டு சைக்கிள்,பைக்,கார்,வேன்,லாரி என சகல வாகனங்களிலும் பிறந்த நாள் விழா நடைபெறும் மண்டபத்தை நோக்கி பறந்தார்கள். வெளி மாநில நிருபர்கள் மட்டுமில்லாமல், சர்வதேச நிருபர்களும் குவிந்திருந்தனர்.

உள்ளூர் கவுன்சிலர் தொடங்கி ஒட்டுமொத்த இந்திய அரசியலும் ராஜ் என்ன அறிவிக்கபோகிறார் என்று கவனித்துக்கொண்டிருந்தது.

அடுத்த முதல்வர் கனவில் இருந்த ஒரு பெரிய அரசியல்கட்சியின் தலைவர்,கவலையுடன் கடைசிவரைக்கும் தனக்கு 'பெட்ரோமாக்ஸ் லைட்டு'தானா என்று தாவங்கட்டையில் கை வைத்துக்கொண்டு டிவியில் ராஜின் பேச்சை கேட்க காத்துக்கொண்டிருந்தார்.

"அரசியல் ஒரு சாக்கடை. அதை சுத்தப்படுத்த வேண்டும் அப்படின்னு ஆசை எனக்கு இருக்கிறது உங்கள் எல்லாரையும் போல" மேலே பேசவிடாமல் பேரலையாய் எழுந்த ரசிகர்களின் கரவொலியை கையசைத்து அடக்கிய ராஜ் தொடர்ந்து பேசினார்.

"ஆனால்,அதை சுத்தப்படுத்த இளைஞர்கள் மற்றும் மாணவர் சக்தியால் மட்டுமே முடியும். நான் இளமைப்பருவத்தை கடந்துவிட்டவன்.அரசியலுக்கு வந்துதான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்பதில்லை. நல்லதை யார் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் செய்யலாம். நான் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு நல்லது செய்ய முடிவெடுத்து இருக்கிறேன்."

இவ்வாறு ராஜ் சொன்னதும் மொத்த மண்டபமே பெரும் அமைதியில் ஆழ்ந்தது. கூடியிருந்த ரசிகர்கள் முகத்தில் ஏமாற்றம். பெரும் அதிர்ச்சி.

"என் மீது அளவில்லாத அன்பு வைத்திருக்கும் ரசிகர்களிடம் என்னுடைய இந்த முடிவுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அரசியலுக்கு வரமாட்டேன் என்றுதான் சொன்னேன். சினிமா என் உயிர். நீங்கள்தான் என் மூச்சு. உயிர் இருக்கும்வரை, கடைசிமூச்சு இருக்கும்வரை திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன். அடுத்ததாக நானே படங்களை தயாரிக்கவும் போகிறேன். உங்களின்

பேரன்பிற்க்கும், பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. வணக்கம்" என்று பேசிவிட்டு மேடையைவிட்டு இறங்கி வழக்கமான தன் புன்சிரிப்புடன், அனைவருக்கும் கையசைத்தபடி நடந்தார் ராஜ். சில நிமிட அமைதிக்கு பின் ஏமாற்றத்தை காட்டிக்கொள்ளாத ரசிகர்களின் கைத்தட்டல்கள் காதை பிளந்தன.

காரில் ஏறும்போது அவரிடம் அவசரமாக ஓடிவந்த கதிரேசன் அவர் காதுகளில் மெதுவாக கேட்டார். "என்ன தலைவா. எப்படியெல்லாம் எதிர்பார்த்தோம். இப்படி பட்டுன்னு சொல்லிடிங்களே" என்றார் வருத்தத்துடன்.

"நான் முப்பது வருஷமா இந்த சினிமாவில இருக்கேன். தீர்க்கவேண்டிய ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் என்னோட சினிமா துறையிலேயே இருக்கு. ஒரு கட்சி ஆரம்பிச்சு நாட்டையே திருத்தப்போறேன்னு சொல்றதுக்கு என்னோடமனசாட்சி இடம் கொடுக்கல கதிர்" என்றார் ராஜ் அமைதியாக.அழுத்தமாகவும்.

சிறுகதை : இன்பா

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...