என் மனம் என்னவென்று

Mythili
கற்பனை
4.9 out of 5 (18 )

நாதஸ்வரத்தில் முன்னணி திரையிசைப் பாடல்களை பாடி அசத்திக் கொண்டிருந்தார் வித்வான். நாலு பக்கமும் கேட்கும்படி ஒலிபெருக்கி கட்டப் பட்டிருந்ததால், எதிர் வீட்டில் இருந்து பாடல்கள் மிகத் துல்லியமாகக் கேட்டன.


முன்னறையின் ஜன்னல் கம்பியில் முகத்தை வைத்து அழுத்தியபடி அமர்ந்து கண்மூடி ரசித்துக் கொண்டிருந்தேன்.ஏனோ கண்ணோரங்களில் லேசாக ஈரக்கசிவு தெரிந்தது. சே! என்ன இது நான் அழறேனா எனப் பதறிப்போய் அவசரமாகக் கண்களை துடைத்துக் கொண்டு மீண்டும் பாடலில் லயிக்க முற்பட்டேன்.ஏனோ மனம் ஒரு நிலைப்படவில்லை.


இன்னிக்கு காலையில இருந்தே இப்படித்தான் ஒரு சங்கடம் மனசுக்குள்ள புகுந்து குடையிற மாதிரி இருக்கு.அதனாலதான்

வீட்டின் பூஜை அறையில் மாட்டி இருக்கும், வலம்புரி விநாயகரிடம் முதன் முறையாக ஒரு பிரார்த்தனையை கூட வைத்தேன்.


"பிள்ளையாரப்பா! என்னைப் பத்தி தப்பா நினைக்காம, கூனோ குருடோ, குரூபியோ ஒரு மாப்பிள்ளையைக் கொண்டு வந்து எனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சிடேன்" என்று.


இப்படி வேண்டிக்கிட்டதால என்னைப் பத்தி யாரும் தப்பா நினைச்சுடாதீங்க. கல்யாணத்தைப் பத்தி எந்த நாள்லேயும் எனக்கு பெரிசா ஏதும் கனவு இருந்ததில்லை.


அப்பா உயிரோடு இருந்த போது முதல் முதலா ஒரு வரனைத் தேடிக் கண்டுபிடித்து கொண்டு வந்தாரே அப்போதே, மாப்பிள்ளை சென்னையில வேலை பாக்கறாராமே அப்போ சென்னையைப் பாத்திடலாம், அப்பறம் கல்யாணம்னா நிறைய நகை, தகதகன்னு பட்டுப் புடவையெல்லாம் கட்டிகிட்டு, அலங்காரம் பண்ணிகிட்டு அன்னிக்கு முழுக்க நாமதான் கதாநாயகி போல எல்லார் பார்வையிலும் இருப்போம். இப்படி சிறுபிள்ளைத்தனமான கற்பனையில் மிதந்தேனே தவிர வேறு பெரிதாக யோசிக்கத் தெரியாதவளாகத்தான் இருந்தேன்.


அப்போதே அப்படி என்றால் இந்த நாற்பத்தியோரு வயதில் என்ன கனவு இருக்கப்போகிறது. பின் ஏன் இந்த விபரீதப் பிரார்த்தனை என்றால் முழுக்காரணம் அம்மாவும் தம்பி ரகுவும்தான்.


என் கல்யாணத்தை பார்த்து விட்டுத்தான் கண்களை மூட வேண்டும் என்ற வைராக்கியத்தில் குழி விழுந்த கண்களை தூங்கும் நேரத்தில் கூட மூடத் தயங்குகிறாள் அம்மா.


தம்பி ரகுவோ தன் அழகான அக்காவுக்கு வயது நாற்பத்தி ஒன்று ஆகிறது என்பதையே மறந்து அவளுக்கு ஒரு ராஜகுமாரனை கொண்டு வந்தே தீருவேன் என கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறான். அதற்காக கிடைத்த வேலையெல்லாம் செய்து கொண்டு, ஓடி ஓடி வரன் பார்த்துக் கொண்டு என்று தன் வாலிபத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறான்


இந்த உறுத்தல்தான் என்னை தினமும் பிய்த்துத் தின்கிறது. அன்று அப்பா மிகக் கஷ்டப் பட்டு தேடிக் கொண்டு வந்த வரனை, திட்டம் போட்டு தட்டிப் பறிப்பது போல் அபகரித்துக் கொண்டவள் என் தோழி மட்டுமல்ல, எங்க குடும்பத்துக்கே நண்பரான கிருஷ்ணனின் பெண் மகிளா.


என்னை விட ஏற்கெனவே அழகானவள் போதாததற்கு வசதியிலும் அதிகம் உள்ளவள். வேண்டுமென்றே என்னைப் பெண் பார்க்க வந்திருக்கிறாங்கன்னு தெரிஞ்சே, அலங்கார பூஷிதையாக அம்மன் சிலை போல வந்து நின்று அபகரித்துக் கொண்டு போய்விட்டாள் அந்த வரனை.


போகட்டும் ஸ்திர புத்தி இல்லாதவன், நல்ல வேளை இப்போதே அவன் புத்தி தெரிந்து விட்டதே என்றெல்லாம் சொல்லி ஏமாற்றமே இல்லாதது போல் ஆளுக்கு ஒன்றாகச் சொல்லி பேசி சமாளித்தாலும், உள்ளுக்குள் குடும்பமே உடைந்தது மறுக்க முடியாத உண்மை.


அப்போது கூட நான் "ஏற்கெனவே அழகி மகிளா. சென்னைக்குப் போயிட்டு வந்தாள்னா இன்னும் மெருகேறி அழகா ஆயிடுவா. புதுப் புது ஸ்டைல் எல்லாம் பண்ணிகிட்டு மினுக்குவா" என்றுதான் யோசித்தேனே தவிர, வேறு விதமான சிந்தனையே வரலை.


அப்புறம் என்னவோ எந்த வரனுமே பெண்பார்க்கும் படலம் வரை கூட வரவேயில்லை. எனக்கு கல்யாணம் என்ற ஒரு எழுத்தே எழுதப் படவில்லை போலும். அப்பாவும் இறந்தபிறகு இன்னும் பல விதங்களில் சிரமப் பட்டோம். அதிலிருந்து மீண்டு எழுந்துவந்து மறுபடியும் வரன் வேட்டை தொடங்கிய போதே எனக்கு வயது நிறைய ஓடி விட்டிருந்தது.


ரகு என்னை விட பன்னிரெண்டு வயது இளையவன்.அதனாலதான் குடும்பப் பொறுப்பை அவன் ஏத்துக்கிற வரைக்கும் வெளியில சொல்லிக் கொள்ள முடியாத அளவு சிரமத்தில் இருந்தோம். இப்போது சரியான பருவத்தில் நிற்கிறான். ஆனால் தன்னைப் பற்றி துளியும் யோசிக்காமல் அவன் படும் அவஸ்தைகள் என்னால் பொறுத்துக்கவே முடியலை.


வாய் திறந்து எதுவும் பேசவும் முடியறதில்லை. சின்னவயசில பார்த்துப் பார்த்து அலங்காரம் பண்ணிகிட்டு நிற்பேனா. கண்மணிக்கு டிரஸ் சென்ஸ் அபாரம் என்று அக்கம் பக்கத்தினர் கூட சொல்லுவாங்க. இப்போது அதில் சிறு மாற்றம் வந்தாலும், அக்கா விரக்தி ஆயிட்டா போல அதான் இப்படி எந்த ஆசையும் பிடிப்பும் இல்லாம ஏனோ தானோன்னு வாழறா போலன்னு அவனாகவே கற்பனை பண்ணிகிட்டு அம்மாகிட்ட புலம்பித் தள்ளுறான் தம்பி.


"அம்மா! அக்கா மனசு வெறுத்துப் போயிடுச்சா ஏன் இப்படி ஒண்ணுமே பண்ணிக்காம இருக்குன்னு"


"ஆமாண்டா அப்படித்தானே இருப்பா. இவ உடனொத்தவ எல்லாம் குடியும் குடித்தனமுமா ஆன பிறகு இவ மனசு என்ன பாடு படும்னு எனக்கும் புரியுது ஆனா என் கையில ஒண்ணும் இல்லையே. அந்தக் கடவுளுக்கும் கண்ணு இருக்கா, காது இருக்கான்னே தெரியலையே. எம் புள்ளைங்களை படைச்சதோட மறந்திட்டான் போல இருக்கேன்னு" அழ ஆரம்பிச்சிடுவா அம்மாவும்.


அப்பறம் அவளை யாராலையும் சமாதானம் பண்ண முடியாது. அழுது அழுது விம்மி கடைசியில மயக்கமே வந்திடும் சில நேரங்கள்ல.


அதனாலேயே ரகு எதையும் அம்மாகிட்ட ஷேர் பண்ணிக்கிறதில்லை. நானும் பிடிக்குதோ பிடிக்கலையோ அலங்காரம் பண்ணிக் கிட்டு மனசில எந்த வருத்தமும் இல்லாதவ மாதிரி வளைய வரக் கத்துகிட்டேன்.


இப்ப எதிர் வீட்டில இருக்கிற சுப்பா என்கிற சுப்பராயனோட பொண்ணு மதுவுக்குத்தான் கல்யாணம். சுப்பாவே என்னை விட ஆறுமாசம் சின்னவன் என்று அவன் அம்மா சொல்லுவாங்க.


சுப்பாவுக்கு ரொம்ப சின்ன வயசிலேயே சொந்தக்காரப் பெண் தாராவை கட்டிவைத்து விட்டார்கள். அவங்க குழந்தை மது எங்கிட்டயே வளர்ந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.


பெரும் பொழுது எங்கள் வீட்டில் தான் இருப்பாள். தாராவும், "கண்மணி அக்கா! கொஞ்சம் குழந்தையைப் பாத்துக்கங்க வேலை முடிச்சிட்டு வந்து தூக்கிட்டுப் போறேன்" என்று குழந்தைப் பருவத்தில் இருந்தே என்னிடம் விட்டு விட்டுட்டுப் போனதால் குழந்தையும் என்கிட்ட மிகவும் பிரியத்துடன் ஒட்டிக் கொண்டது.


இன்று அந்தக் குழந்தைக்குத்தான் கல்யாணம். சுப்பா கல்யாணத்தின் போது எப்படி சன்னலில் கன்னம் பதித்து உட்கார்ந்திருந்தேனோ அதைப் போலவே இன்றும் உட்கார்ந்திருக்கிறேன்.


இரண்டு குடும்பங்களும் தலை முறை தலைமுறையாக அருகருகே இருப்பதாலும், உறவினர்கள் போல பழகிவிட்டதாலும், அவர்களின் அழைப்பைத் தட்ட முடியாமல் அம்மா எதிர் வீட்டிற்கு போயிருக்கு.


சுப்பாவின் அம்மா வழக்கம் போல குத்தலாகவோ அல்லது சூது வாது தெரியாமல் பேசியோ அம்மாவை வெகுவாகக் காயப்படுத்தி விட்டார். "ஏன் கண்மணியை அழைச்சுக்கிட்டு வந்திருக்கலாமே. அவ தூக்கி வளர்த்த பொண்ணுதான மது நீங்க என்ன இன்னமும் வீட்டுக்குள்ளேயே பூட்டி பூட்டி வைக்கறீங்க" என்று.


"பாவம் அந்தப் பொண்ணு எத்தனை வருஷம்தான் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும். எங்க மதுவை இந்த கொஞ்ச வருஷம் வீட்டோட வைக்கவே நாங்க பட்ட பாடு யப்பா.." என்று பேசியிருக்கிறார்.


அம்மா உடைந்து நொறுங்கிப் போயிருந்த நேரத்தில் வந்த சுப்பாவும் தன் பங்குக்கு, "அம்மா! கண்மணிக்கு ஒரு வரன் இருக்கு வயசு ஐம்பது கிட்ட இருக்கும். முத சம்சாரம் செத்துப் போச்சாம், புள்ளை குட்டி இல்லையாம் பாக்கலாமா" எனக் கேட்டிருக்கிறான்.


அம்மா ரகுகிட்ட கேக்கறேன்னு சொல்லிட்டு வந்திட்டுது. வந்ததில் இருந்து ஒரே அழுகைதான். ரகு அப்போதுதான் அவன் நடத்திக் கொண்டிருக்கும் தட்டச்சு பயிற்சி மையத்தில் இருந்து வந்து சாப்பிட்டு விட்டுப் போயிருந்தான்.


தாரா தான் அக்கா தம்பி இருவருக்கும் வலுக்கட்டாயமாக கேரியரில் எடுத்து வந்து கொடுத்துச் சென்றிருந்தாள்.


சன்னலில் முகம் பதித்து உட்கார்ந்திருந்த நான் வீட்டின் முன்புறம் இருந்த முள்படலை காலால் உதைத்துத் திறந்து கொண்டு சைக்கிளுடன் வேகமாக உள்ளே நுழைந்த தம்பியைப் பார்த்ததும், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இடத்தை விட்டு வெகு வேகமாக எழுந்து சமையலறைக்கு சென்று சாப்பாட்டை எடுத்து வந்தேன்.


"அம்மா இன்னும் அங்கிருந்து வரலையா" என்ற ஒரு கேள்வியைத் தவிர வேறு எதுவுமே பேசாமல் இருவருமாக சாப்பிட்டு எழுந்தோம்.


அவன் மனசில என்ன ஓடியதோ எனக்குத் தெரியாது. ஆனால் நெற்றிச் சுருக்கங்கள் ஏதேதோ யோசிச்சுகிட்டே இருக்கான்னு தெளிவா காட்டுச்சு.


எனக்குத்தான் ரொம்ப நாளா மனசுக்குள்ள ஒரு நினைப்பு ஓடிகிட்டு இருந்தது. தம்பிக்கு ஒரு வேளை மது மேல ஒரு நோக்கம் இருக்குமோன்னு.அவன் சாதாரணமா இயல்பாக் கூட அவ கிட்ட பேசறதும், அவளைப் பத்தி எங்ககிட்ட பேசறதுமா இருந்திருக்கலாம். அவனோட வாழ்க்கைக்கு தடையா நான் நிக்கறேங்கிற குற்ற உணர்வு எப்போதும் எனக்குள்ள நிறைஞ்சிருக்கிறதால, ஒரு வேளை எனக்கு இந்தமாதிரி தோணுதோ என்னவோ.


இன்னைக்கும் அதே நினைப்பினால தான் அவன் முகத்தையே உறுத்துப் பார்த்தேன். அவன் மனசில உள்ளதை படிக்க முடியுதான்னு. மது கல்யாணம் அவனை டிஸ்டர்ப் பண்ணுதோ என்று தவிப்பாக இருந்தது.


"என்னக்கா! என் முகத்தையே பாத்திட்டு இருக்க ஏதாவது சொல்லனுமா. என்னா தயக்கம் பட்டுன்னு கேளுக்கா" என்றான்.அவன் குரல் அவன் மனசைக் காட்டிக் கொடுத்திடுச்சு.


நான் தூக்கி வளர்த்த பெண்ணுக்கு கல்யாணம் அது என்னை நிலை குலைய பண்ணி இருக்குமோன்னு அவன் தவிக்கிறது நல்லாவே புரிஞ்சிக்க முடிஞ்சுது.


சே! இவனைப்போய் வேற மாதிரி எப்படி என்னால யோசிக்க முடிஞ்சுது. என்னைக்கு அவன் தன்னைப்பத்தி நினைச்சிருக்கான். மனசு முழுக்க என்னையும் என் கல்யாணத்தையும் பத்திதான அவன் நினைப்பு சுத்திகிட்டு இருக்கும்.


நான் தலையை சிலுப்பிக் கொண்டு "ஒண்ணுமில்லைடா சும்மாதான் பார்த்தேன்னு" அசடு வழிஞ்சுகிட்டே சொல்ல,


"சரிக்கா நான் போயிட்டு வரேன். எதைப்பற்றியும் யோசிக்காம ஏதாவது புக் எடுத்துப் படி. புக் இருக்கில்ல ஏதாவது வரும்போது வாங்கிட்டு வரேன்" என்றபடி கிளம்பிப் போன பின்தான் அம்மா வந்தாள். காரணமே சொல்லாமல் அழுது கொண்டே இருந்தவளை, மெல்ல மெல்ல ஆசுவாசப் படுத்தி நடந்ததைக் கேட்டறிந்தேன்.


இதில் அழுவதற்கு என்ன இருக்கு நாற்பது கடந்த பெண்ணுக்கு முப்பது வயது மாப்பிள்ளையா வருவான். இது ஏன் அம்மாவுக்கும் புரிய மாட்டேங்குது, தம்பிக்கும் புரியமாட்டேங்குது. நாம இதைச் சொன்னா என்னவோ கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டு சொன்னமாதிரி நினைச்சுக்குவாளே என்ன செய்யறது என தவிப்பாக இருந்தது.


இந்த மாதிரி தாக்குதல்கள் எல்லாம் என்னை பாதிச்சதே இல்லை. நான் வளர்த்த கன்றுக்குட்டி மாடாகி கன்று ஈன்று விட்டது. நான் வைத்த தென்னங்கன்று வளர்ந்து மரமாகி காய்த்துக் குலுங்குகிறது.


எனக்குத் தெரிந்து பாவாடை கட்டத்தெரியாமல் ஓடி விளையாடிய சிறுமிகள் எல்லாம் கல்யாணம் முடிந்து போய்விட்டார்கள்.


கடவுள் என்னவோ வேணுமின்னே எங்களை, குறிப்பா அம்மாவை நோகடிக்கனும்னே கங்கணம் கட்டிகிட்டு வேலை செய்யற மாதிரி தெரிஞ்சுது.


பின்னே ஊரில உள்ள ஒவ்வொரு பெண்ணையும் தேடிக் கண்டு பிடிச்சு கல்யாணம் முடிச்சு வச்சுகிட்டே இருந்தாரே. நாந்தான் அந்த ஊரின் ஒரே கன்னிப் பெண்ணா இன்னும் நிக்கிறேன்.


இவ்வளவு ஏன் மேல வீட்டுக்காரர் என்று அழைக்கப்படும் ரங்கநாதனின் வயக்காட்டில் கரும்பு வெட்டறதுக்காக பிழைப்புக்கு வருஷா வருஷம் வரும் தெற்கத்தி மக்கள், என்னைப் பார்க்கும் போதெல்லாம், "இன்னும் கட்டிக் குடுக்கலையா" என்று கேட்காமல் போனதில்லை.


அதில் முதல் வருஷம் கரும்பு வெட்ட வந்த பொண்ணு மறுவருஷம் வரும் போது அவங்க தலையாரியை கட்டிகிட்டு, வயக்காட்டுக்குப் போகாம எல்லாருக்கும் சோறு பொங்குற வேலையைப் பாத்துகிட்டு, நிழல் கோழியா நின்னிருக்கா. அடுத்த மகசூல் நேரத்தில குழந்தையும் கையுமாக வந்து நிப்பா.


அவங்களுக்கெல்லாம் நான் ஒரு பேசு பொருளாத்தான் இருந்தேன். அவங்களுக்குள்ளேயே பேசிக்குவாங்க. அதிரடியாக நேரிடையாகவும் கேட்டுடுவாங்க சில நேரங்கள்ல.


"ஏன் நல்லா அழகாத்தானே இருக்கீங்க ஏன் கட்டிக்கிட யாரும் வரலை. எங்க சனமா இருந்தா இத்தனை நாள் கொத்திகிட்டு போயிருப்பாங்களேன்னு"


எதுவும் என்னை பாதிக்கவில்லை அல்லது பாதிக்காதது போல் காட்டிக் கொள்ள பழகிக் கொண்டேன் என்று தான் நினைக்க வேண்டி உள்ளது.


இப்ப என் தவிப்பெல்லாம் தம்பி காதுக்கு இந்த செய்தி எதுவும் போயிடக் கூடாதே என்பதுதான்.


அம்மா! அம்மா கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிக்கம்மா. தம்பிக்குத் தெரிஞ்சா தாங்க மாட்டான்மா" என்று போராடினேன். ஆனால் முழு சம்பாஷணையையும் கேட்டுக்கொண்டு ரகு வாசலில் தான் நின்று கொண்டிருந்தான்.


காலையிலேயும் சாயந்திரத்திலேயும் எல்லோரிடமும் பால் வாங்கி ஹோட்டல்கள், டீக்கடைகளில் சப்ளை செய்து வந்தான் ரகு. அதற்காகத்தான் இன்ஸ்ட்டியூட்டில் இருந்து வந்திருக்கிறான்.


அவ்வளவுதான் ஏற்கெனவே நல்ல சிவந்த நிறமுள்ள அவன் முகம் உள்ளே பொங்கிய ரௌத்திரத்தில் ரத்தச் சிவப்பாக பார்க்கவே பயங்கரமாக ஆகிவிட்டது.


"நான் இப்பவே போய் அந்த சுப்பாகிட்ட கேட்டுட்டு வரேன்மா என்ன நினச்சுகிட்டு இருக்காரு மனசில. பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிட்டா தலையில என்ன கொம்பா முளச்சிடும்.


நம்ப இவருகிட்ட வரன் பார்த்துத் தரச் சொல்லிக் கேட்டமா" என சத்தம் போட்டுக் கொண்டு குதி குதியெனக் குதிக்கிறான். அவனிடம் எப்படிப் பேசுவது, என்னன்னு பேசுவது என்று புரியாமல் விதிர் விதிர்த்து நின்றேன் நான்.


அம்மாதான் அவனை ஆசுவாசப் படுத்தினாள். "அவங்களைக் குறை சொல்லி என்னப்பா பிரயோசனம். கடவுள் நம்பளை அந்த நிலமையில தான வச்சிருக்கார்" என்று ஏதேதோ பேசி ஒருவழியாக இருவரும் அமைதி அடைந்தனர்.


"இதுக்கெல்லாம் நீ ஒண்ணும் கலங்காதக்கா நான் இருக்கேன் உனக்கு. யார் வேணா என்ன வேணா பேசிட்டுப் போகட்டும்" என்று என் முகம் பார்க்காமலேயே சொல்லிவிட்டுப் போய்விட்டான் ரகு


வழக்கமில்லாத வழக்கமாக யாருக்கும் தெரியாமல் நிறைய அழுதேன் நான். அக்காவுக்குப் பண்ணிட்டுதான் நான் பண்ணிப்பேன்னு யார் கல்யாணப் பேச்சை எடுத்தாலும் சொல்லிடறான். அம்மா கூட ஒரு நாள் சொன்னுது. "ரகு! அவளுக்கு வரபோது வரட்டும். உனக்கும் வயசு ஓடுதேப்பா நம்ப கீரக்களூர் மாமா பொண்ணு தாரேங்கிறார் உனக்கு" என்று ஆரம்பித்து விட்டு, அவன் கேட்ட கேள்வியில் வாயடைத்துப் போய் நின்னுடுச்சு.


"உனக்கும் எம்மேல நம்பிக்கை இல்லாமப் போயிடுச்சா. நான் அக்காவுக்கு மாப்பிள்ளை கொண்டாற மாட்டேன்னு நினச்சுதான இந்த முடிவுக்கு வந்திட்ட" என்று அழுகையும் ஆத்திரமுமாகக் கேட்டபோது அம்மா வாயைப் பொத்தி சமாதானம் செய்து அனுப்பி வச்சுது.


இதையெல்லாம் நினைச்சுப் பாத்துதான் நான் தனிமையில் கதறுகிறேன்.


இந்த மாதிரியான ஒரு மோசமான சூழ்நிலையில் தான், ரொம்ப நாளைக்கு அப்பறம் ரகு முகமெல்லாம் சந்தோஷம் பூக்க, வெயில் மண்டையைப் பிளக்கும் உச்சி வெயில் நேரத்தில் வேகமாக சைக்கிளில் வந்து இறங்கினான்.


"அம்மா! அம்மா சாயந்திரம் சம்மந்தம் பேச வராங்களாம். நம்ப புரோக்கர் மாமாதான் அவரு பேரன் கிட்ட சொல்லி அனுப்பிச்சாரு. வேற ஒண்ணும் விபரம் சொல்லலை. நான் ஸ்வீட் காரமெல்லாம் கடையிலேயே வாங்கிட்டு வந்திடறேன் நீ ஒண்ணும் அடுப்படியில நின்னு கஷ்டப் பட வேண்டாம். அக்காவை ரெடி பண்ணு" என்று உற்சாகமாக சொல்லிவிட்டு ஓடினான்.


நாலு மணி வாக்கில் வந்தவர்களைப் பார்த்து எல்லோருமே அதிர்ந்தோம். முன்னறை ஜன்னல் வழியாகப் பார்த்து விட்டு இவர்கள் எதுக்கு வந்திருக்காங்க எனக் குழம்பி நின்றேன்.


வந்தவர்கள் வேறு யாருமல்ல. எனக்கு வந்த முதல் வரனை தட்டிக் கொண்டு போன மகிளாவும் அவள் கணவனுமேதான்.


பிரமிப்பில் இருந்து மீண்டு அம்மாதான் அவர்களை உள்ளே அழைத்தாள். புரோக்கரும் உடன் உள்ளே நுழைந்தபடியே, "நம்ம ஊர்க்காரவங்கதான். ரகுவுக்கு அவங்க பொண்ணைக் கொடுக்கனும்னு தேடி வந்திருக்காங்க" என்றார்.


சே! என்ன முட்டாள்தனம் நான் உயிரோடு இருக்கற வரைக்கும் எனக்குதான் சம்மந்தம் வரும்னு எப்படி யோசிச்சேன். மணவாழ்க்கைக்கு காத்திருக்கிறது நான் மட்டும் தானா என்று நினைக்கவே வெட்கமாக இருந்தது எனக்கு.


சுய உணர்வுக்குத் திரும்பிய ரகுவோ கொஞ்சமும் தாமதிக்காமல் "அக்கா கல்யாணத்துக்குப் பிறகுதான் என் கல்யாணப் பேச்சை எடுக்கனும்னு சொல்லி இருந்தேனே மாமா இதெல்லாம் என்னது" என்றான் கடுகடுப்பாக.


"உனக்கு முடிச்சிட்டா அவங்களும் சேர்ந்து உன் அக்காவுக்கு வரன் பார்ப்பாங்கள்ல" என்று அசட்டுச்சிரிப்புடன் அவர் பதில் சொல்ல, கோபமாக ஏதோ சொல்ல ரகு வாய் திறந்த விநாடி,


"உங்க அக்காவுக்கு இனிமே எப்படி மாப்பிள்ளை கிடைக்கும். வேணும்னா என் வீட்டுக்காரருக்குத்தான் கட்டிக்கனும் சம்மதமான்னு உன் அக்காவைக் கேளு" என்று அந்த மகிளா அலட்சியமாகக் கேட்க,


"சம்மதம்" என்று உள் அறையில் இருந்து ஓங்கிக் குரல் கொடுத்து விட்டேன் நான். ஏன் அப்படிச் சொன்னேன் எனக்கே புரியலை. எது என்னை அவ்வளவு தைரியமாக அந்த வார்த்தையை சொல்ல வைத்தது.


ஒருவேளை எனக்காக வந்த முதல் வரன் என்ற ஆசை இன்னும் இருக்கா, இல்லை தட்டி பறிச்சுகிட்டு போனாளேங்கிற ஆதங்கமும் ஆத்திரமும் என்னை அப்படிப் பேச வச்சுதா என மனசு கேட்ட கேள்விகளில் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து கொண்டிருந்தேன்.


மகிளாவும் ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டு கணவனை அழைத்துக் கொண்டு கிட்டத்தட்ட ஓடியே விட்டாள். அவனை நன்கு அறிந்தவள் அல்லவா.


அவள் எப்படியாவது போகட்டும். நான் இப்ப தம்பி முகத்தில எப்படி முழிப்பேன்.


இப்ப வந்து கேப்பானே "ஏன்க்கா எம்மேல வச்ச நம்பிக்கையை விட்டுட்டியா, இல்லை கல்யாண மோகம் தலைக்கேறி போச்சான்னு" நான் என்ன பதிலைச் சொல்லுவேன். அவன் முகத்தை எப்படி ஏறிட்டுப் பார்ப்பேன். நான் ஏன் அப்படிச் சொன்னேன்னு எனக்கேத் தெரியலையே.


என் மனசோட எதிர்பார்ப்பு என்ன. அதை மூடி மறச்சுகிட்டு நாடக வாழ்க்கைதான் வாழ்ந்திட்டிருக்கேனா. விடை தெரியாத வினாக்களில் அழுகைதான் பொங்கியது எனக்கு.

तुम्हाला आवडतील अशा कथा

X
Please Wait ...