JUNE 10th - JULY 10th
அன்று சீக்கிரமாக வேலை முடிந்துவிட்டது இரவு 2:40க்கு எட்டாவது மாடியிலிருந்து லிஃப்டை பிடித்து கிரவுண்ட் ஃப்ளோர்க்கு வந்தேன். தூங்கிக்கொண்டிருந்த கேப் டிரைவரை கண்ணாடியில் தட்டி எழுப்பி கார் கதவைத் திறக்கச் சொன்னான்.
“என்ன தம்பி இன்னைக்கு சீக்கிரமா வந்துட்டீங்க?”
“இன்னைக்கு வேலை கொஞ்சம் கம்மிதான். அதான் சீக்கிரமே முடிச்சுட்டேன்” என்றான் பைரவ்
டயர்கள் நகர தாம்சன் சொல்யூஷன் என்ற ஐடி கம்பெனியை விட்டு வெளியே வந்தார்கள்.
பைரவ் ஃபோனில் மெயில் செக் செய்து கொண்டு இருந்தான். டிரைவர் எஃப் எம்மை தட்ட “ஊருசனம் தூங்கிருச்சு” என்ற பாடல் ஸ்பீக்கரில் இருந்து கரைந்தது.
டிரைவர் பிரேக்கை அடிக்க, பைரவ் ரோட்டைப் பார்த்தான். டேக் டைவர்ஷன் என்ற போர்டுக்கு பின்னால் ரோட்டை ரிப்பேர் செய்ய உடைத்து வைத்திருந்தார்கள். கார் டயர்கள் வலது பக்கமாக திரும்ப பைரவ் மறுபடியும் ஃபோனுக்குள் புகுந்தான். டிரைவர் சற்று தயங்கி வண்டியை ஓட்டினார்.
“தம்பி உங்களுக்கு இந்த பக்கம் வழி தெரியுமா?”
“தெரியாதே, ஏன் உங்களுக்கு தெரியாதா?”
“இந்த பக்கம் வந்த மாதிரி ஞாபகம், சரி வாங்க பாத்துக்கலாம்”
அந்த ரோட்டினின் இறுதியில் சுவற்றில் முட்டி வலதுபக்கம் வளைந்தது. அந்த இடத்தில் ஃபேக்டரி ஒன்று பூட்டிக்கிடந்தது. டிரைவர் யோசித்துக்கொண்டே ஸ்டேரிங்கை வலதுபக்கம் திருப்பினார். ஹெட்லைடில் இருந்து புறப்பட்ட எல்இடி வெளிச்சம் காருக்கு முன் சென்று வழி காட்டியது, திடீரென்று வெளிச்சம் ஒரு சுவற்றில் முட்டி நின்றது. டிரைவர் பிரேக்கை அழுத்த பிரேக் ஷூ டயரை நிறுத்தியது.
“என்ன ஆச்சுன்னா?”
“முட்டுச்சந்து” என்று டிரைவர் ஃபஸ்ட் கியர் போட்டு வண்டியை திருப்ப லேசாக முன்னே நகர்த்தியபோது வண்டி செயலிழந்தது.
டிரைவர் சாவியை திருக இஞ்சின் லேசாக உருமி விட்டு மௌனமானது. மறுபடியும் திருக மறுபடியும் அதேயே செய்தது.
“இதோட ஒரு தொல்லை கண்ட நேரத்துல கண்டம் ஆயிரும்” என்று மறுபடியும் முயற்சித்தார்.
பைரவ் கண்ணாடி வழியாக வெளியே பார்த்தபோது திடீரென்று ஒரு முகம் கண்ணாடி முன் வந்தது. பைரவ் பயந்து சீட்டில் இருந்து ஒரடி பின்னே குதித்தான். கண்ணாடியில் தெரிந்த ஒருவன் கதவை தட்டி திறக்கச் சொன்னான். பைரவ் ஹார்ட் பீட் நார்மலானதும், கண்ணாடியை திறந்தான்.
“சார் ப்ளீஸ் சார் என்ன காப்பாத்துங்க. கார் கதவை திறங்க நான் உள்ள வரேன்” என்று பதட்டப்பட்டான்
“வெயிட், நீங்க யாரு? ஏன் இப்படி பயந்து ஓடி வரீங்க? என்ன ஆச்சு?”
“என்ன கொல்றதுக்கு ஒருத்தன் கோடாரி எடுத்துட்டு சுத்திகிட்டு இருக்கான் சார்!!!”
டிரைவரும் பைரவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
“யோவ் என்ன கலாய்க்கிறீயா? நடுராத்திரில உன்னை எதுக்குயா கோடாரி எடுத்துட்டு கொல்ல வரான்?” என்றான் டிரைவர்
“தெரியல சார், நான் வேலைக்கு போயிட்டு பாலத்துக்கு அடியில போற ரோட்ல நடந்து வந்துட்டு இருந்தேன். அப்போ ரோட்டுக்கு அந்த பக்கம் ஒருத்தன் நின்னுட்டு இருந்தான். என்ன கொஞ்சநேரம் பாத்துகிட்டே இருந்தான், திடீர்னு கைல இருந்த பையில இருந்து கோடாரி எடுத்துட்டு என்னை பார்த்து ஓடி வந்தான். நான் பயந்து வேகமா இந்த ஏரியாகுள்ள ஓடி வந்து ஒளிச்சுகிட்டேன். அவன் இப்ப எங்க இருக்கான்னு தெரியல, இந்த இடத்தவிட்டு போகவும் பயமா இருந்துச்சு, அதான் இங்கயே இருந்தேன்.அப்பதான் நீங்க வந்தீங்க. சார் ப்ளீஸ் என்னை இந்த இடத்தை விட்டு கொஞ்சம் வெளியே கொண்டுபோய் விட்டுருங்க. ப்ளீஸ் உங்க கால்ல வேணும்னாலும் விழுறேன்”
பைரவ் பின் கதவை திறந்தும் வேகமாக ஏறி கொண்டான்.
“சார் ப்ளீஸ் சீக்கிரம் போங்க இந்த இடத்தை விட்டு போயிடலாம் வண்டிய எடுங்க” என்று டிரைவர் தோளில் தட்டினான்.
டிரைவர் தொடர்ந்து முயற்சித்ததில் இறுதியாக இன்ஜின் உயிர்பெற்றது. டிரைவர் வேகமாக வண்டியை ரிவர்ஸில் எடுத்து நேராக சென்றார். டேக் டைவர்ஷன் என்ற போர்ட்டு இருந்த இடத்திற்கு வந்தார்கள்.
“யோவ் அவன எங்கேயா பார்த்த?” என்றார் டிரைவர்
“சார் கொஞ்சம் பின்னாடி போங்க”
டிரைவர் ஆக்சிலரேட்டரை லேசாக அழுத்த டயர்கள் மெதுவாக பின்னோக்கி உருண்டது.
“அங்கதான் சார்” என்று அவன் எதேர்ச்சையாக கையை நீட்ட அவன் உண்மையாகவே அங்கு நின்றுகொண்டிருந்தான்.
“சார் அவன் தான் சார் வேகமா ஓட்டுங்க! ஓட்டுங்க! ஓட்டுங்க!!” என்று அவன் பின்னிருந்து டிரைவர் தோளில் தட்ட டிரைவர் ஓரக்கண்ணால் ரோட்டிற்கு அந்த பக்கம் பார்க்க காரை நோக்கி ஒருவன் ஓடி வந்தான்.
“அண்ணா வேகமா போங்க அவன் வர்றான்” என்று பைரவ் பதட்டப் படுத்த டிரைவர் கியரை மாற்றி வண்டியை வேகமாக கிளப்பினார் டயர்கள் அதற்கு ஏற்ப சீறிப் பாய்ந்தது. அவன் பாதி ரோட்டிற்கு வருவதற்குள் வண்டி வேகம் பிடித்து அந்த இடத்தை விட்டு அகன்றது.
“அப்பாடா ஜஸ்ட் மிஸ் இல்ல இன்னிக்கு ஒரு சைக்கோவுக்கு பலியாயிருப்போம்” என்றான் பைரவ்
“நல்ல வேலை நீங்க வந்தீங்க, இல்ல இன்னைக்கு என்ன கண்டிப்பா கொன்னுருப்பான்”
“ஏதோ நீங்க சொன்னதால எங்களுக்கு தெரிஞ்சது இல்ல நாங்களும் அவன்கிட்ட போய் மாட்டிருப்போம். நாங்க தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும் ஆமா உங்க பேரு என்ன?” என்றான் டிரைவர்
“டேவிட், இங்க பக்கதுல மோராக்ன்னு கேம் டேவலப்பிங் கம்பெனில வேலை பார்கிறேன்”
“இந்த மாதிரி ஆளுங்கள ஏன் இன்னும் பிடிக்காம இருக்காங்க. நாளைக்கு ஃபஸ்ட் வேலையா போலிஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணனும்”
“தம்பி அதுக்கு அவசியமே இல்லை”
“ஏன்?” என்றான் பைரவ்
“அங்க பாருங்க ஒரு போலீஸ் பூத் இருக்கு” என்று டிரைவர் கைகாட்டிய இடத்தில் ஒரு போலீஸ் பூத் இருந்தது.
“அப்படியே ஓரமா வண்டிய நிறுத்துங்க, போலீஸ்கிட்ட இன்ஃபார்ம் பண்ணிட்டு போலாம்” என்று பைரவ் சொன்னவுடன் டிரைவர் வண்டியை ரோட்டோரமாக நிறுத்தினார்.
பைரவ் கீழே இறங்கி போலீஸ் பூத் நோக்கி நடந்தான்.
பூத்தின் வாசலில் ஒரு பல்ப்பின் மேல் குடத்தை கவிழ்த்து வைத்திருந்தார்கள். பூத்துக்குள் ஒரு போலீஸ் அதிகாரி துக்கத்தில் குறட்டை ஒலியுடன் போராடி கொண்டிருந்தார்.
“தம்பி உங்களுக்கு ஆயுசு கெட்டி” என்று டிரைவர் எஃப் எம்மை ஆன் செய்தார்.
“ஆமா சார், நீங்க மட்டும் வரலைன்னா என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியல”
“இந்த போலீஸ்காரங்க நைட்ல ரவுண்ட்ஸ் போறாங்க இவன மாதிரி ஆளுங்கள எல்லாம் பிடிக்க மாட்டாங்க”
“ஆமா சார்”
“நீங்க எங்க இறங்கணும்?”
“சார் அம்பத்தூர் பாலத்துக்கிட்ட இறக்கி விடுங்க சார், அங்கிருந்து ஃபிரண்ட்க்கு கால் பண்ணி வர சொல்லிடுவேன்”
“எதுக்கு வம்பு நானே உங்கள வீட்ல ட்ராப் பண்ணிறேன். அப்புறம் அங்க எவனாவது சுத்தியல தூக்கிட்டு துரத்த போறான்” என்று சிரித்தார்
“தேங்க்ஸ் சார்”
“ஆமா அந்த சைக்கோ கையில என்ன வச்சி இருந்தான்னு சொன்னீங்க??”
“கோடாரி சார்”
“ஆனா அவன் ஓடி வரும்போது கைல கோடாரி இல்லையே?”
“அதான் இங்க இருக்கே சார்” என்று அவன் நீட்டிய கோடாரி டிரைவர் கழுத்திலிருந்து இரண்டு இன்ச் தள்ளி இருந்தது.
“நீ??”
“சைக்கோ” என்று கோடாரியை அவர் கழுத்தில் வீசினான்.
“அங்கேயே உங்களை கொன்னுருக்கலாம், ஆனா அது ரெசிடென்ஷியல் ஏரியா அதான் வெளியே கூட்டிட்டு வந்தேன்” என்று வீசிய கோடாரியை உருவிய போது கழுத்து பாதியாக அறுந்து தொங்கியது.
“சார் சார்” என்று பைரவ் கதவைத்தட்டினான்.
அதிகாரி கண் திறக்கும் முன் பைரவ் தோளை தொட, பைரவ் திரும்பியபோது டேவிட் கோடாரியால் பைரவ் நடு முகத்தில் வெட்டினான். பைரவ் சரிந்து கீழே விழுந்து துடித்தான். அதிகாரி இன்னும் குறட்டை ஒளியோடு போராடிக்கொண்டிருந்தார். அவரை தொந்தரவு செய்யாமல் பைரவை இழுத்து சென்று காரின் பின் சீட்டில் போட்டான்.
காரை மறுபடியும் வந்த பக்கம் திருப்பினான். அதே பாலத்துக்கு அருகே சென்றான், அங்கு ரோட்டோரமாக உட்கார்ந்திருந்த பிச்சைக்காரனை கூப்பிட்டான்.
“ரொம்ப தேங்க்ஸ் நான் சொன்ன மாதிரியே ஓடிவந்ததுக்கு, இந்தா ஐநூறு ரூபா” என்று பைரவ் பர்சிலிருந்து ஐநூறு ரூபாய் எடுத்துக் கொடுத்தான்
“ரோட்டுக்கு இந்த பக்கம் இருந்து அந்த பக்கம் ஓடி வந்ததுக்கு 500 ரூபாயா தெய்வம் சார் நீங்க” என்று கும்பிட்டான்
“தெய்வம் இல்ல சைக்கோ!!” என்று காரை அழுத்தினான்
அடுத்த நாள் காலை விக்டர் டிவியை ஆன் செய்தான். டேபிளில் இருந்த விஸ்கி பாட்டிலை டம்ளரில் லேசாக கவிழ்த்தியதால் ஒரு கட்டிங் கிடைத்தது. ஆனால் இரவு அடித்த போதை இன்னும் அவனக்கு தெளியவில்லை.
ரிமோட்டை எடுத்து நியூஸ் சேனலை மாற்றினான்.
“இன்றைய முக்கிய செய்திகள், நேற்று நள்ளிரவு தாமஸ் சொல்யூஷன்ஸ் என்ற ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பைரவ் என்பவரையும் அவரை அழைத்து செல்லும் கேப் டிரைவர் விக்னேஷ் என்பவரையும் வெட்டி அவர்கள் வந்த காரிலேயே போட்டுவிட்டு வண்டியை நடுசிக்னலில் விட்டுவிட்டு ஒருவன் இறங்கி செல்கிறான்.
அவன் யாரென்று ஆராய்ந்தபோது, மனநல காப்பகத்தில் இருந்து தப்பிச் சென்ற டேவிட் என்று தெரிந்தது. டேவிட் என்பவர் கேம் டிசைனராக இருந்து மன அழுத்தம் தாங்க முடியாமல் சைக்கோவாக மாறியிருக்கிறார், தன் மனைவியை கொன்றதால் கோர்ட்டின் மூலம் இவர் மனநல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
தப்பி வந்த இவர், யார் உயிருக்கும் ஆபத்தாக மாற வாய்ப்புள்ளது. அதனால் இந்த போட்டோவில் இருக்கும் நபரை எங்கு பார்த்தாலும் இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்” என்ற சைக்கோ டேவிடின் ஃபோட்டோவை டிவியில் ஃபிளாஷாகி கொண்டிருந்தது.
இதற்கிடையில் வாசல் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்க, விக்டர் தள்ளாடிக் கொண்டு கதவருகே சென்றான். கதவைத் திறந்தபோது வாசலில் டேவிட் நின்றுகொண்டிருந்தான்.
விக்டர் எதுவும் செய்யாமல் மறுபடியும் டேபிளில் வந்து உட்கார்ந்தான். டேவிட் கதவை சாத்தி தாள்போட்டுவிட்டு விக்டர் உட்கார்ந்திருந்த டேபிள் அருகே வந்தான், ஸ்டூலை நகர்த்தி அதில் உட்கார்ந்தான். அவன் கொண்டு வந்த பையில் இருந்து ஒரு சின்ன கோடாரியை எடுத்து டேபிள் மேல் வைத்தான்.
“ஃபோட்டோவில் தெரியும் இந்த நபரை எங்கு பார்த்தாலும் இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்” என்ற சத்தம் கேட்டு டேவிட் டிவியை திரும்பிப்பார்த்தான். அதில் அவன் முகம், திரும்பி விக்டரை பார்த்தான்.
“நீ இன்னைக்கு நியூஸ் தான பார்க்கிற, நான் நாளைக்கு நியூஸ் சொல்லவா. சைக்கோ டேவிட்டின் மூன்றாவது கொலை, உன் பேரு என்ன?”
“விக்டர்” என்று சாதாரணமாக கூறினான்
“சைக்கோ டேவிட்டின் மூன்றாவது கொலை, விக்டர் என்ற நபரை கோடாரியால் கண்டதுண்டமாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றான், அப்படின்னு நாளைக்கு நியூஸ்ல வரப்போகுது” என்று டேவிட் ஆவேசமாக கூறினான்.
கூறிய அவனையும் டேபிளில் இருந்த கோடாரியும் பார்த்து விக்டர் சிரித்தான்.
“நீ எனக்கு கோடாரி காமிச்ச, நான் உனக்கு ஒரு போட்டோ ஆல்பம் காமிக்கவா?” என்று சொல்லிவிட்டு தள்ளாடி எழுந்து பெட்ரூமிற்குள் சென்றான். வரும்போது கையில் ஒரு ஆல்பத்துடன் வந்தான்.
போட்டோ ஆல்பத்தை டேவிட்டிடம் கொடுத்தான். டேவிட் போட்டோ ஆல்பத்தை வாங்கி பிரித்துப் பார்த்தான் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு கொலையை பற்றிய நியூஸ் பேப்பர் கட்டிங்ஸ் இருந்தது. டேவிட் ஒவ்வொரு பக்கமாக திருப்பி பார்த்தான்.
“இது எல்லாமே நான் செஞ்ச கொலை. மொத்தம் 23 கொலை. உனக்கு கோடாரி மாதிரி எனக்கு கத்தி. நீ சைகோன்னு ஊருக்கு தெரியும். நானும் சைக்கோ தான், ஆனா யாருக்கும் தெரியாது”
டேவிட் பக்கங்களை திருப்பிக்கொண்டே, “இந்த கொலையல்லாம் எதுக்கு பண்ண?” என்றான் ஆர்வமாக
“சைக்கோகளுக்கு சாதாரண மக்களை கொல்ல தான் பிடிக்கும். ஆனா நான் கொஞ்சம் ஸ்பெஷல், எனக்கு சைக்கோக்களை கொல்லத்தான் பிடிக்கும்” என்று விக்டர் சொன்னவுடன் டேவிட் நிமிர்ந்தான்.
விக்டர் கத்தியை ஓங்கி டேவிட் நடுநெற்றியில் குத்தினான்.
#492
Current Rank
70,500
Points
Reader Points 500
Editor Points : 70,000
10 readers have supported this story
Ratings & Reviews 5 (10 Ratings)
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
spraveenkumar720
Nice
vigneshn2303
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points