JUNE 10th - JULY 10th
உங்களுக்கு பபுள்கம் பிடிக்குமா? ஆம் என்றால் உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் ஒரு கதை இருக்கிறது. எனக்கும் பபுள்கம் ரொம்பப் பிடிக்கும். சிறுவயதில் என் முன் கடவுள் வந்து "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டால் எப்போதும் எனக்கு பபுள்கம் கிடைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று வேண்டியிருப்பேன். அந்த அளவிற்கு எனக்கு பபுள்கம் பிடிக்கும்.
என்னுடைய சொந்த ஊர் ஒரு சிறிய டவுன். என்னுடைய சிறுவயதில் அந்த நகரத்தில் நவீனம் லேசாக எட்டிப்பார்க்கத் தொடங்கியது. விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரான என்னுடைய அப்பா விவசாயத்தை விட்டுவிட்டு தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருந்தார். தினம் காலை எட்டு மணிக்கு வேலைக்கு சென்றால் அவர் வீடு திரும்ப இரவு எட்டு, ஒன்பது மணி ஆகிவிடும். அரசு பள்ளியில் படித்தவர். புதிதாக தொடங்கப்பட்டிருந்த மெட்ரிகுலேஷன் பள்ளியில் என்னை படிக்க வைத்தார். தினமும் காலையில் வேலைக்கு செல்லும் போது சைக்கிளில் என்னையும் அழைத்துக்கொண்டு பள்ளியில் கொண்டு விடுவார். மாலை வீட்டிற்கு நான் என் நண்பர்களுடன் நடந்தே வந்து விடுவேன்.
என் அப்பா தினமும் பள்ளியில் இறக்கி விடும் போது எனக்கு ஒரு ரூபாய் கொடுப்பார். அந்த ஒரு ரூபாயில் 4 பபுள்கம்கள் வாங்க முடியும். பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்தில் இருக்கும் பாய் கடையில் 4 பபுள்கம்களை வாங்கி ஒன்றை வாயில் போட்டுக் கொள்வேன். காலை பிரேயர் முடியும் வரை அதை மென்று கொண்டே இருப்பேன். ஆசிரியர்கள் பார்க்கும்போது பபுள்கம்மை நாக்குக்கு அடியில் வைத்துக்கொண்டு அமைதியாக இருப்பேன். என் வாயில் பபுள்கம் இருக்கிறது என்று இதுவரை எந்த ஆசிரியராலும் கண்டுபிடிக்க முடிந்ததில்லை. முதல் வகுப்பு ஆரம்பிப்பதற்கு முன்பு பபுள்கம்மை துப்பி விடுவேன். அதன் பிறகு மதியம் உணவு இடைவேளையின் போது வேகவேகமாக சாப்பிட்டுவிட்டு நண்பர்களுடன் பள்ளிக்கு உள்ளேயே விளையாடுவேன். அப்போது ஒரு பபுள்கம்மை போட்டுக் கொள்வேன். மணி அடித்தவுடன் வழிந்து கொண்டிருக்கும் வியர்வையை சட்டையில் துடைத்துக்கொண்டு பபுள்கம்மை துப்பிவிட்டு மதிய வகுப்பில் சென்று அமர்வேன். மதியம் முதல் வகுப்பிற்கு வரும் ஆசிரியரை எங்களுடைய வியர்வை வாடை முகம் சுழிக்க வைக்கும்.
பிறகு மாலை பள்ளி முடிந்தவுடன் பள்ளி மைதானத்திலேயே கொஞ்ச நேரம் விளையாட்டு. அப்போது இரண்டு பபுள்கம்கள். அதன் பிறகு வந்து வீட்டில் கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு என் தாத்தாவிடம் காசு வாங்கிக்கொண்டு அண்ணாச்சி கடைக்குப் போவேன். பபுள்கம்மை வாங்கி வாயில் வைத்துக்கொண்டு மீண்டும் தெருவில் விளையாட்டு. இரவு வீட்டுக்கு வரும்போது கை கால்களை கழுவிட்டு படிக்கச் சொல்வாள் அம்மா. கொஞ்சநேரம் புத்தகத்தை வைத்துக்கொண்டு நேரம் கடத்துவேன். பிறகு இரவு உணவை முடித்து விட்டு தூக்கம். மிக அழகான நாட்கள் அவை.
விடுமுறை நாட்கள் முழுவதும் விளையாட்டுத்தான். அந்தத் தெருவை விட்டு வேறு எங்கும் செல்ல மாட்டேன். நண்பர்களோடு கும்பலாக யாருடைய வீட்டிலாவது விளையாடிக் கொண்டிருப்போம். அல்லது தெருவில் ஏதோ ஒரு மூலையில் விளையாடிக் கொண்டிருப்போம். வெயில், புழுதி என்று பாராமல் ஒரே ஆட்டம். சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் தான் வீட்டிற்கு வருவேன். "ஊர்ல இருக்க வெயிலெல்லாம் உன் மேல தான் அடிக்குது" என்பாள் என் அம்மா. அதை பற்றி கவலையே படமாட்டேன்.
எப்பொழுதும் வாயில் ஒரு பபுள்கம். அதை வாங்குவதற்கு பணம் எப்படியும் எனக்கு கிடைத்துவிடும். அப்பாவிடம் இருந்தும், ஒரு கூடையை கொடுத்து கடைக்குப் போய் ஏதாவது வாங்கி வரச் சொல்லும்போது அம்மாவிடமிருந்தும், தாத்தாவிடம் இருந்தும், பாட்டியிடம் இருந்தும், யாராவது உறவினர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து ஊருக்குப் புறப்படும்போது பணம் கொடுக்கும்போது என்று எப்படியோ எனக்கு காசு கிடைத்துவிடும்.
சில நேரங்களில் நான்கைந்து பபுள்கம்களை உதட்டிற்கு பின்னால் வைத்து நாக்கினால் மெதுவாக வெளியே தள்ளி காற்றை நிரப்பி முட்டை விடுவேன். யார் பெரிய முட்டை விடுகிறார்கள் என்று சிறுவர்களாகிய எங்களுக்குள் ஒரு பெரிய போட்டியே நடக்கும்.
பபுள்கம் சாப்பிடக்கூடாது என்று அப்பாவும் அம்மாவும் எவ்வளவோ தடவை சொல்லியிருந்தாலும் அவர்கள் சொல்வதை நான் கேட்க மாட்டேன். எப்போது என் கையில் காசு கிடைத்தாலும் அதை எடுத்துக்கொண்டு வேகவேகமாக அண்ணாச்சி கடைக்குப் போவேன். என்னைப் பார்த்தவுடன் "எத்தனை பபுள்கம்?" என்று கேட்பார் அவர். அண்ணாச்சிக் கடையில் சாப்பிடுவதற்கு எவ்வளவோ மிட்டாய்கள், சாக்லேட்கள் இருந்தாலும் நான் பபுள்கம் மட்டும்தான் வாங்கிச் சாப்பிடுவேன். ஒருமுறை அண்ணாச்சி "எங்க ஊர்ல ஒரு பையன் பபுள்கம்மை முழுங்கி செத்துட்டான். நீயும் முழுங்கிடாத" என்று பயமுறுத்தினார்.
ஒரு நாள் மாலை பள்ளியில் கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தோம். யார் முதலில் அவரவர் வீட்டுக்குள் போகிறார்கள் என்பது போட்டி. கத்திக்கொண்டே ஓடிக்கொண்டிருக்கும் போது என்னையுமறியாமல் வாயில் வைத்திருந்த பபுள்கம் உள்ளே போய் விட்டது. எப்போதும் அப்படி நடந்ததில்லை. பபுள்கம் உள்ளே போய்விட்டது என்று என்னால் நம்பமுடியவில்லை. மெதுவாக நின்று பற்களுக்குள் எங்காவது ஒட்டி இருக்கிறதா என்று நாக்கினால் துழாவிப் பார்த்தேன். இல்லை. என் தொண்டையை தடவிப் பார்த்தேன் நிச்சயமாக முழுங்கி விட்டிருந்தேன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்படியானால் அண்ணாச்சி சொன்னதுபோல் நான் செத்து விடுவேனா? சாவு என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? கொஞ்ச நாட்களுக்கு முன்பு என் நண்பன் பரணியின் தாத்தா செத்துப் போனார். ராத்திரி படுத்தார்; காலையில் எழுந்திருக்க வில்லை அவ்வளவுதான். அதுதான்.
அவ்வளவுதானா? இன்று இரவு படுப்பதுதான். நாளை காலை எழுந்திருக்க முடியாது, மரணம் தான் எனக்கு. அழுகையாக வந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் மெதுவாக நடந்து வீட்டிற்குள் சென்றேன். இன்றைக்குள் என்னவேல்லாம் விளையாட முடியுமோ அவற்றையெல்லாம் விளையாடி விடவேண்டும். நாளை தான் செத்து விடுவேனே?
எதை முதலில் விளையாடுவது. யோசித்துக் கொண்டிருந்தபோது தாயக்கட்டை விளையாடலாம் என்று தோன்றியது. வேகவேகமாக பாட்டியிடம் சென்று "பாட்டி வா தாயக்கட்டை விளையாடலாம்" என்று கூப்பிட்டேன்.
"விளக்கு வைக்கிற நேரத்துல அதேல்லாம் விளையாடக்கூடாது" என்றாள் பாட்டி.
"இன்னும் அம்மா விளக்கு வைக்கல" என்று கூறிவிட்டு என் பாட்டியின் கையைப் பிடித்து இழுத்து வந்து தாழ்வாரத்தில் உட்காரவைத்தேன்.
அதன்பிறகு வேக வேகமாக சென்று இரும்பு டப்பாவை எடுத்து வந்தேன். அதற்குள் தாயக்கட்டை, காய்கள், மாக்கல் இருந்தன. பாட்டி அந்த மாக்கல்லை வைத்து அழகாக கட்டத்தை வரைந்தாள். தாயக்கட்டைகளை எடுத்து இரண்டு கைகளிலும் வைத்து வேகமாக உரசினேன். உரசிவிட்டு கட்டைகளை கீழே போட்டு விளையாட ஆரம்பித்தேன். எதிர்முனையில் பாட்டி "ஒரு ஆறு... அஞ்சு" என்று சொல்லிக்கொண்டே கட்டைகளை தரையில் வீசினாள். ஒரு பத்து நிமிடம் விளையாடியிருப்போம். அதற்குள் வெளியில் சென்று விளையாட வேண்டும் என்று தோன்றியது. வேகமாக எழுந்து ஓடினேன். "டேய் டேய்" என்று பாட்டி கூப்பிட "விளக்கு வைக்கற நேரம் ஆயிடுச்சு" என்று கூறிவிட்டு தெருவுக்கு வந்தேன்.
நான் நினைத்தது போலவே என் நண்பர்கள் கோலிகுண்டு விளையாடிக்கொண்டிருந்தனர். நான் மீண்டும் வீட்டுக்குள் போய் கோலிகளை எடுத்துக்கொண்டு அவர்களோடு விளையாடினேன். கிருபாகரன் அம்மா அவனைப் படிக்க அழைத்தபோது நாங்கள் அனைவரும் அவரவர்கள் வீட்டிற்குள் சென்றோம். நான் கோலி குண்டுகளை வைத்துவிட்டு கை கால்களை கழுவிட்டு வந்தேன்.
நேராக புத்தகப் பையை எடுத்து டிராயிங் புக்கை வெளியே வைத்தேன். யாரும் சொல்லாமல் நானாகவே புத்தகத்தை எடுத்தது அம்மாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. டிராயிங் புக்கில் கலர் அடிப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும். புக்கில் ஒரு பக்கம் அழகாக படம் வரைந்து கலர் கொடுக்கப்பட்டிருக்கும். அதை பார்த்து மற்றொரு பக்கத்தில் அதுபோலவே கலர் அடிக்க வேண்டும். வாரத்திற்கு இரண்டு ட்ராயிங் வகுப்புகள் தான். ஒரு வகுப்பிற்கு ஒரு படம் கலர் அடித்து முடித்திருக்க வேண்டும். என்னுடைய புத்தகத்தில் நிறைய பக்கங்கள் இருந்தன. வேகவேகமாக பக்கங்களைப் புரட்டி எனக்குப் பிடித்த படங்களில் எல்லாம் கலர் கொடுக்க ஆரம்பித்தேன். அதற்குப் பிறகும் நிறைய பக்கங்கள் வெறுமையாக இருந்தன. அதற்கேல்லாம் என்னால் கலர் அடிக்க முடியாதே என்று நினைக்கும்போது அழுகை அழுகையாக வந்தது. வேகமாக புத்தகத்தை மூடிவைத்துவிட்டு கண்களைத் துடைத்தபடி வெளியே வந்தேன்.
வீட்டுத் திண்ணையில் எப்போது போல் தாத்தா ஈசி சேரில் உட்கார்ந்திருந்தார். தாத்தாவிற்கு வெற்றிலை போடும் பழக்கம் உண்டு. "வெத்தல போடுறீங்களா?" என்று கேட்டுக்கொண்டே அவர் பக்கத்தில் போய் உட்கார்ந்தேன். "நான் போட்டுக்கறேன்டா" என்று தாத்தா சொல்ல "நீங்க நாளைக்கு போட்டுக்கோங்க" என்று கூறிவிட்டு வெற்றிலைப் பெட்டியை திறந்து இரண்டு வெற்றிலைகளை எடுத்தேன். மேலே காம்பையும் கீழே நுனியையும் கிள்ளி எறிந்துவிட்டு இடது கையில் வெற்றிலையை பரப்பி வைத்துக் கொண்டேன். வலது கையின் மோதிர விரலால் சுண்ணாம்பு எடுத்து அந்த வெற்றிலையில் தடவினேன். என் தாத்தா அப்படித்தான் செய்வார். கொஞ்சம் சீவல் எடுத்து அந்த வெற்றிலையில் மடித்து தாத்தாவிற்கு கொடுத்தேன். அவர் சிரித்துக்கொண்டே வாங்கி வாயினுள் அதக்கிக் கொண்டார். இனிமேல் தாத்தாவுக்கு என்னால் வெற்றிலை மடித்து கொடுக்க முடியாது. தாத்தாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதற்கு காரணம் அவரிடமிருந்து வரும் அந்த வெற்றிலை வாசம்தான். நானும் அவருக்கு அடிக்கடி வெற்றிலை மடித்துக் கொடுப்பேன். அது எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு விளையாட்டு.
தெருவில் என் நண்பர்கள் விளையாடும் சத்தம் கேட்டது. வெளியே சென்று பார்த்தபோது எதிர் வீட்டில் கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. அதற்காக வெளியே மணல் கொட்டப்பட்டிருந்தது. அங்கே விளையாடிக்கொண்டிருந்தனர் என்னுடைய நண்பர்கள். நானும் அவர்களுடன் போய் சேர்ந்து கொண்டேன். மண்ணில் சிறிதாக வீடு கட்டினோம். பிறகு ஒரு சிறு பொம்மையை ஒளித்து வைத்து அதைத் தேடத் தொடங்கினோம். என் நண்பர்களுடன் விளையாடும் போது இதுதான் விளையாட்டு என்று இல்லை; தினமும் புதிது புதிதாக ஏதாவது ஒன்று விளையாடிக் கொண்டே இருப்போம். நாளை முதல் என் நண்பர்களுடன் விளையாட முடியாது என்று நினைத்துக்கொண்டு அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். பின்பு திரும்பிப் பார்க்காமல் வேகமாக வீட்டிற்குள் வந்தேன். பின்பு என்னுடைய விளையாட்டு சாமான்கள் போட்டு வைத்திருக்கும் பையை எடுத்தேன். அதிலிருந்து எனக்கு பிடித்த குட்டிக்குட்டி கார்களை எடுத்து விளையாட ஆரம்பித்தேன். இந்த கார்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. இதுபோன்ற பொம்மைகளை எங்கே பார்த்தாலும் அப்பாவை வாங்கித் தரச்சொல்லி அடம்பிடித்து வாங்குவேன்.
கொஞ்ச நேரத்தில் அந்த கார்களை எடுத்து வைத்துவிட்டு அம்மாவைத் தேடினேன். அம்மா சமையலறையில் இருந்தாள். நான் போகும்போது வெங்காயம் உறித்துக் கொண்டிருந்தாள். "கண்ணு எரியும்...அப்புறமா வா" என்று கூறினாள். நான் கேட்காமல் அவள் கால்களை கட்டிப் பிடித்துக் கொண்டே நின்றேன். அம்மாவை கட்டிப் பிடித்த போது என் கண்களில் கண்ணீர் வந்தது. அது நிச்சயமாக வெங்காயத்தினால் அல்ல. அம்மாவிற்கு அது தெரியவில்லை. பின்பு அம்மிக்குப் பக்கத்தில் சென்று இரவு உணவிற்காக துவையலை அரைக்கத் தொடங்கினாள். நான் அழுதுகொண்டே நின்றேன். "நான் தான் வராதேன்னு சொன்னேன்ல" என்று சொல்லிவிட்டு துவையலை அரைத்து முடித்தாள். பின்பு கைகளை நன்கு கழுவி விட்டு தன்னுடைய சேலைத் தலைப்பினால் என் கண்களைத் துடைத்து விட்டாள். ஆனாலும் எனக்கு அழுகை வந்து கொண்டே இருந்தது. பின்பு அம்மா எனக்காக தோசை விட்டு சாப்பிடக் கொடுத்தாள். நான் ஊட்டித்தரச் சொல்லவே அவள் எனக்கு ஊட்டி விட்டாள்.
நாளை முதல் யாரையும் பார்க்க முடியாது என்று நினைத்தபோது மேலும் அழுகையாக வந்தது. ஓடிப்போய் அம்மா கால்களை மீண்டும் பற்றிக் கொண்டேன். "என்னடா தங்கம் ஆச்சு?" என்று கேட்டாள் அம்மா. நான் ஒன்றுமில்லை என்று தலையாட்டினேன்.
"ஸ்கூல் டீச்சர் யாராவது அடிச்சாங்களா? தாத்தா, பாட்டி ஏதாவது திட்டினாங்களா? பிரெண்ட்ஸ் கூட ஏதாவது சண்டையா? என்று பலவாறாக கேட்டுப் பார்த்தாள். ஆனால் நான் எதுவும் சொல்லாமல் இல்லை என்றே தலையசைத்தேன். பின்பு அம்மா, தோசை வார்த்து தாத்தா பாட்டிக்கு சாப்பிடக் கொடுத்தாள். அவ்வளவு நேரமும் நான் அம்மாவை விட்டு விலகவில்லை. கொஞ்ச நேரத்தில் அப்பா வாசலில் சைக்கிளை நிறுத்தும் சத்தம் கேட்டது. வேக வேகமாக வெளியில் ஓடினேன். அப்பாவுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டு தெருவுக்கு வந்தேன். அப்பாவுடைய சைக்கிள் பெரியது. கிட்டத்தட்ட என்னுடைய உயரத்துக்கு இருக்கும். என்னால் சீட்டில் உட்கார்ந்து ஓட்ட முடியாது. குரங்குப் பெடல் அடித்துக் கொண்டு ஓட்டுவேன். அப்படி ஏழெட்டு முறை குரங்கு பெடல் அடித்துக்கொண்டே தெருவில் இந்தப் பக்கத்திற்கும் அந்தப் பக்கத்திற்கும் போய் வந்தேன். வாசலில் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் வந்தேன். அதற்குள் அப்பா கைகால்கள் எல்லாம் கழுவிவிட்டு சாப்பிட உட்கார்ந்தார். நானும் அவர் பக்கத்தில் போய் உட்கார்ந்தேன். பின்பு அவர் மடியில் படுத்துக்கொண்டேன்.
"என்னடா ஆச்சு?" என்று கேட்டார் அப்பா. எதுவும் சொல்லாமல் படுத்துக்கொண்டேன்.
"என்னன்னு தெரியலைங்க; கொஞ்ச நேரமா ஒரு மாதிரி இருக்கான்...திடீர்னு அழறான்; கேட்டா ஒண்ணுமில்லங்கறான்" என்று கூறினாள் அம்மா. என்னவென்று மீண்டும் அப்பா கேட்க எதுவும் சொல்லாமலேயே படுத்துக்கொண்டேன். அவர் என் தலையை வருடியவாறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவ்வளவுதான் இத்துடன் முடிந்தது; நாளை காலை என்னால் எழுந்திருக்க முடியாது. அப்பாவை, அம்மாவை, தாத்தாவை, பாட்டியை, நண்பர்களை என்று யாரையும் பார்க்க முடியாது. நினைக்க நினைக்க அழுகையாக வந்தது. அப்பாவின் கால்களை இறுகப் பிடித்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டேன். அப்படியே தூங்கிப்போனேன்.
மறுநாள் காலை எப்போதும் போல் எழுந்தேன். குளித்து முடித்துவிட்டு வேகவேகமாக சாப்பிட்டுவிட்டு வாசலில் சைக்கிளை பிடித்துக்கொண்டு எனக்காக காத்திருக்கும் அப்பாவை நோக்கி ஓடினேன். சைக்கிளில் அமர்ந்துகொண்டு பள்ளிக்குச் சென்றேன். நேற்றைய சம்பவம் எதுவுமே நினைவில் இல்லை. பள்ளிக்கூட வாசலை அடைந்ததும் கீழே இறங்கினேன். தன் பையிலிருந்து அப்பா எனக்கு ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு பபுள்கம் வாங்குவதற்குத் திரும்பினேன். அப்போதான் நான் இன்னும் சாகவில்லை என்று என் நினைவுக்கு வந்தது. திரும்பி அப்பாவை பார்த்து கையசைத்துவிட்டு வேகவேகமாக பள்ளிக்குள் ஓடினேன். நான் அப்போது அடைந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை ஏதுமில்லை. குதித்துக்கொண்டே பள்ளிக்குள் சென்றேன். அந்த நொடியை என்னால் வாழ்நாளில் மறக்கவே முடியாது.
அன்று நான் முழுங்கிய பபுள்கம் வெளியே வரவில்லை. என் மனதிற்குள்ளே இருக்கின்றது. அதன்பிறகு இன்றுவரை நான் பபுள்கம் சாப்பிடுவதில்லை என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
#270
Current Rank
58,117
Points
Reader Points 1,450
Editor Points : 56,667
30 readers have supported this story
Ratings & Reviews 4.8 (30 Ratings)
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
Shajil609
Arumai
Samuthran62
அருமை! அருமை!! இப்பணி சிறக்க வாழ்த்துக்கள்!!
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points