குப்பைத் தொட்டி சாமி

உண்மைக் கதைகள்
5 out of 5 (2 Ratings)
Share this story

குப்பைத் தொட்டி சாமி

அரக்கோணத்திலிருந்து வேலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் சர்ர் சர்ர் சத்தமிட்டவாறு வருவதும் போவதுமாக இருந்தது. எப்போதுமே சுறுசுறுப்பாக காணப்படும் அந்த சாலையில் அன்று வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் வாகனங்களை பார்க்க முடிந்தது. பொங்கல் விடுமுறைக்காக ஞாயிற்றுக் கிழமையுடன் சேர்ந்து தொடர்ந்து ஆறு நாட்கள் விடுமுறை என்பதால், நகரத்தில் வசிக்கின்ற மக்கள் தமது சொந்த ஊர்களுக்கும், உறவினர் வீடுகளுக்கும் செல்ல தொடங்கியதுதான் காரணம். பொங்கல் வருவதையொட்டி ஜவுளிக் கடைகளும், பலகார கடைகளும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. பொங்கல் தள்ளுபடி என்ற பெயரில் பழைய துணிகளையும் புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட துணிகளோடு சேர்த்து அதிக லாபம் பார்த்துக் கொண்டிருந்தனர் ஜவுளிக்கடை வியாபாரிகள்.


அரக்கோணத்திலிருந்து சுமார் இருபது கிலோமீட்டர் தூரத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மூன்று கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருந்தது தட்டான்மலை என்னும் கிராமம், அந்த கிராமத்திற்கு செல்லும் பேருந்து நிறுத்தத்தில் இருநூறு வயதைக் கடந்திருந்த பெரிய ஆலமரம் ஒன்றை பார்க்க முடியும். அந்த மரத்தின் கீழே இளநீர் கடைகளும் பனைநுங்கு விற்பவர்களும் என நான்கைந்து கடைகள் முளைத்திருந்தது. வாகனங்களில் செல்வோர் சிலர் இளநீர் நுங்கு வாங்குவதற்காகவும், இன்னும் சிலர் பயணக் களைப்பு நீங்க அந்த மரத்தினடியில் வாகனத்தை நிறுத்திவிட்டு சாப்பிட்டும் தூங்கியும் செல்வார்கள். மரத்தின் வலதுபுறத்தில் பெரிய குப்பைத் தொட்டி ஒன்று இருந்தது. எப்போதாவது அதில் சேரும் குப்பைகளை குப்பை வாகனம் எடுத்துச்செல்லும், பல நேரங்களில் அந்த குப்பைத்தொட்டி நிரம்பி நாற்றம் வீசிக்கொண்டுதான் இருக்கும். குப்பைத்தொட்டிக்கு இடதுபுறமாக நன்கு அகன்று விரிந்திருந்த கிளைக்கு கீழே ஒரு முதியவர் படுத்துக் கொண்டிருந்தார். நான்கு வருடங்களாக அந்தப் பெரியவர் மரத்தின் கீழேதான் தங்கியிருக்கிறார். அவர் எங்கிருந்து வந்தார் இன்னார் என்ற விவரம் அங்கிருந்த யாருக்கும் தெரியாது. எதையும் கூர்ந்து நோக்கும் கண்களும் நீண்டு வளர்ந்திருந்த தாடியுடன் காணப்பட்டார் அந்த முதியவர். இரண்டு வெள்ளை சட்டையும் மற்றும் இரண்டு வேட்டியும் ஒரு துண்டு அவரின் சொத்தாக இருந்தது, மரத்தடிக்கு வந்த புதிதில் அவரிடம் சிலர் அவரின் பூர்வீகத்தை பற்றி விசாரிக்கத் தொடங்கினார். ஆனால் அவர்களுக்கு எந்தவித பதிலையும் சொல்லாமல் சிரித்தபடியே சென்று விடுவார்.

தட்டான் மலை கிராமத்திற்கு செல்லும் வழியில் கந்தகோட்டம் கதிர்வேல் முருகன்கோயில் ஒன்று அமைந்திருந்தது. அந்தக் கோவில் வெகு பிரபலம் என்பதால், தினமும் மக்கள் கூட்டம் அலைமோதும். பங்குனி உத்திரம் தைப்பூசம், பௌர்ணமி தினம் என்றால் சொல்லவே வேண்டாம் கூட்டம் அவ்வளவு முண்டியடிக்கும். பெரும்பாலும் அந்த கோயிலில்தான் அந்த பெரியவரை காண முடியும். காலையில் கோவில்நடை திறந்ததும் முதல் இரவு நடை சாற்றும்வரைக்கும் பிரகாரத்தை பெருக்குவது, பூஜைக்கு தேவையான பூக்கள் தொடுப்பது, அபிஷேகத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதுவரை அனைத்து வேலைகளையும் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். யாருடனும் அதிகமாக பேசமாட்டார் எப்பொழுதாவது ஒரு சில வார்த்தைகள் வெளிவரும். கோவில் குருக்களும் அவரின் நிலைமையை உணர்ந்து இறைவனுக்கு படைக்கும் பிரசாதத்தை அவருக்கென்று தனியாக எடுத்து வைத்து கொடுப்பார். மற்றபடி கோவிலுக்கு வருபவர்கள் அல்லது யாரேனும் சாப்பாடு அல்லது பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ள மாட்டார். ஆரம்பத்தில் அவரை தலைக்கணம் பிடித்தவர்கள் பேசியவர்கள் கூட போகப்போக அவரது நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு அவர் சாமியாராகவோ அல்லது சித்தராகவும் இருக்க வேண்டும் என்று எண்ணி அவரின்மேல் மரியாதை செலுத்தினர். கோயிலில் வேலை இல்லாத நேரங்களில் ஆலமரத்தின் கீழ் அமைந்திருந்த குப்பைத் தொட்டிக்கு பின்னால் படுத்துக் கொண்டு எதையோ யோசித்த வண்ணமாக காணப்படுவார், குருக்கள் இரவு நேரத்தில் கோயில் மண்டபத்திலேயே தங்கிக் கொள்ளலாமே என்று கேட்டபோதும் மறுத்துவிட்டார். திருநீற்றுப் பட்டையுடன் காணப்பட்ட அந்த முதியவரை சிலர் சாமி என்று அழைக்கத் தொடங்கினர். அவர் பெரும்பாலும் குப்பைத்தொட்டி பக்கத்திலேயே தங்குவதால், நாளடைவில் குப்பைத்தொட்டிச் சாமி என்ற பெயரே அவருக்கு நிலைத்து விட்டது.


பங்குனி உத்திரம் என்பதால் தட்டான்மலை கிராமம் அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. பக்தர்கள் கந்தகோட்டம் முருகனுக்கு காவடிகளை சுமந்தும், அலகு குத்தியும் இன்னும் சிலர் மேளதாளம் ஒலிக்க மாலைகளையும், பால் குடங்களையும் சுமந்தவாறு சென்ற வண்ணமிருந்தனர். இன்னும் சிலர் பக்தர்கள் செல்லும் சாலை ஓரத்தில் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்காக அன்னதான கூடங்களை அமைத்து உணவும் தண்ணீரும் மோரும் வழங்கிக் கொண்டிருந்ததனர். திருவிழா ஐந்து தினங்கள் நடக்குமென்பதால் சாலையோரங்களில் அதிகமான இடங்களில் பலகார கடைகளும், பொம்மை கடைகளும் காணப்பட்டது. கடைகளில் வாங்குவோரும் விற்பவரும் போடும் சத்தங்களோடு பக்தர்களின் அரோகரா சத்தமும் சேர்ந்துகொண்டு ஆலமரம் இருந்த தேசிய நெடுஞ்சாலை வரைக்கும் கேட்டது.

கோவிலின் உள்ளே கூட்டம் நெருக்கியடித்துக் கொண்டிருந்தது. குப்பைத்தொட்டிசாமி என்றழைக்கப்பட்ட அந்த பெரியவர் சுமங்கலி அறக்கட்டளை அன்னதானக்கூடம் என்னும் பெயர் பலகையை தாங்கி நின்ற கட்டிடத்தின் வாயிலில் நின்று கொண்டு முருகனை தரிசித்துவிட்டு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் பணியில் மும்முரமாக இருந்தார், பச்சரிசியில் சிறுபருப்பும் வெல்லமும் சேர்த்து நெய்விட்டு செய்யும் பிரசாதம் தட்டான்மலை முருகன் கோவிலுக்கு தனிச்சிறப்பாக அந்த வட்டாரத்தில் பிரபலமாகி இருந்தது, எனவே அந்த பிரசாதத்தை பெறுவதற்காகவே பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு நின்றார்கள். அந்தப் பெரியவரும் சளைக்காமல் பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்தார். நேரம் ஆக ஆக கூட்டம் கூடிக் கொண்டே இருந்ததே தவிர குறைவதாக தெரியவில்லை, பிரசாதம் பெறுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த ஒருவன் அந்தப் பெரியவரை வைத்த கண் வாங்காமல் ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டே வந்தான். அந்தப் பெரியவரை நெருங்கிவரும் சமயத்தில் அவரும் அந்த மனிதனை பார்த்ததும் ஏனோ அவர் ஒரு கணம் தயங்கி நின்றவர், அந்த மனிதனை வெறித்து நின்றவாறு பதற்றமடைந்தவர் போல் காணப்பட்டார். இதனால் அவர் பிரசாதம் வழங்கும்போது தவறி ஒரு சிறுவன் மீதும் பின்னால் நின்றிருந்த மனிதன் மீதும் கொட்டிவிட்டது. அந்த சிறுவன் சூடு தாங்காமல் அலற தொடங்கினான். பின்னால் நின்றிருந்த அந்த மனிதன் அந்தப் பெரியவரை தள்ளிவிட்டான். ஏன்யா நீ பெரிய மனுஷன்தானே அறிவு இருக்கா உனக்கு? சுடச்சுட மேலே கொட்டுறியே, நான் யார் தெரியுமா என்னோட ஸ்டேட்டஸ் என்னன்னு தெரியுமா உனக்கு? இன்னைக்கு கோயில்ல முருகனுக்கு செஞ்சிருக்க அலங்காரத்திலிருந்து அன்னதானம் வரைக்கும் எல்லாமே என்னோட கைங்கரியம். கண்ணு தெரியல உனக்கு வயசாகி போச்சுன்னா மூடிக்கிட்டு மூலையில் ஓரமா உட்கார வேண்டியதுதானே, யார்யா இந்த கோவில நிர்வாகம் பண்றது? வேற ஆளே கிடைக்கலையா உங்களுக்கு, குழந்தைக்கு மட்டும் எதனா ஒன்னு ஆச்சு உன்னை என்ன செய்வேன்னு தெரியாது என்று கோபத்தில் கத்த தொடங்கியவனை இடைமறித்த அந்தப் பெரியவர், சாமி நான் வேணும்னு செய்யலங்க கைதவறி கொட்டிடுச்சு என்ன மன்னிச்சிடுங்க என்றவாறு இறுகிய முகத்துடன் அந்த இடத்தைவிட்டு செல்லத் தொடங்கினார். நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவாறு வரிசையில் நின்று கொண்டிருந்த அந்த மனிதன் கூட்டத்தை விலக்கியவாறு அந்தப் பெரியவரை நோக்கி ஓடிவர தொடங்கினான். அவன் வந்து சேர்வதற்குள் அந்தப் பெரியவர் அந்த இடத்தை விட்டு காணாமல் போயிருந்தார். கோயிலுக்கு உள்ளேயும் வெளியிலும் தேடிய போதும் அந்தப் பெரியவரைக் காண முடியவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பி வந்தபோது கோயில் நிர்வாகியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தான் கைங்கரியம் கொடுத்ததாக சொல்லியவன்.

நேராக நிர்வாகியிடம் சென்றதும் சார் இந்த கோயிலின் நிர்வாகம் பண்றது நீங்கதானே என்றதும் ஆமாம் உங்களுக்கு என்ன வேணும் என்றார் கோயில் நிர்வாகி. என்னோட பெயர் வசந்தன், கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தாரே ஒரு பெரியவர் அவரைப் பத்தி உங்களுக்குத் தெரியுமா? அவர் இப்போ எங்க இருப்பார் என்று சொல்ல முடியுமா? என்றவனை ஏற இறங்க பார்த்த நிர்வாகி அந்தப் பெரியவராலதான் இன்னிக்கு பிரச்சனை ஆமா அவர எதுக்கு நீங்க கேட்கிறீங்க? சார் காரணமாத்தான் கேட்கிறேன், அவர் அடிக்கடி இந்த கோவிலுக்கு வருவாரா? அவர் எங்கு தங்கி இருக்கிறார் என்று சொல்ல முடியுமா? அவரப் பத்தி எனக்கு சில விஷயம் தெரியணும் என்றான் வசந்தன். நிர்வாகியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த வசந்தனை கண்டு கோபத்தின் உச்சிக்கே சென்று கத்த தொடங்கினான் அந்த மனிதன். டேய் யார்ரா நீ? அந்தக் கிழவன் குழந்தை மேல சுடச்சுட சோத்த கொட்டிட்டான்னு கோவத்துல இருக்கேன், நீ என்னமோ அந்தக் கிழவனை பத்தி அவ்வளவு ஆர்வமா விசாரிக்கிற? நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லாம அவன் கூட பேசிகிட்டு இருக்கீங்க. வருஷம் ஆனா நாலு லட்சம் வரைக்கும் கொட்டிக் கொடுக்கிறேன். மேனர்ஸ் தெரியாது உங்களுக்கு? யாருக்கு எப்படி மரியாதை கொடுக்கணும்னு தெரியாதா? என்னோட ஸ்டேட்டஸ் தெரியுமா உங்களுக்கு? நான் எங்க வேலை பாக்குறேன்னு தெரியுமா? சுமங்கலி குரூப்ஸ் ஆப் கம்பெனியோட ஒன் ஆப் தி மேனேஜிங் டைரக்டர் சுதர்சனம், எனக்கு பதில் சொல்லுறத விட்டுட்டு போயும் போயும் அந்த கிழட்டுப் பரதேசியை பற்றி சொல்லுறது முக்கியமாப் போச்சா? உங்களுக்கு என்று எரிமலையாய் வெடிக்கத் தொடங்கினான் சுதர்சனம். அவன் கத்தியதை கோவிலில் இருந்த அனைவரும் வேடிக்கை பார்க்கத் தொடங்கினர். அதனைக் கண்ட கோயில் குருக்கள் தன்னுடன் இருந்தவனை கூப்பிட்டு கொஞ்சநேரம் பாத்துக்க நான் போய் என்னன்னு பார்த்துட்டு வந்துடறேன், என்றவாறு அவர்களை நோக்கி சென்றவர் சுதர்சனத்தை கண்டவுடன் வாங்க சார் ஏதாச்சும் பிரச்சனையா? என்ன ஆச்சு என்று விசாரிக்கத் தொடங்கினார்.


நிர்வாகி நடந்த விஷயங்களை சொன்னதும், சார் கோவிச்சுக்காதீங்க அந்தப் பெரியவர் ரொம்ப நல்ல மனுஷன். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம கோயிலுக்கு சேவை பண்ணுறவர், யாருன்னு தெரியாது , நாலஞ்சு வருஷமா இங்கதான் இருக்கார். அனாவசியமா ஒரு வார்த்தை பேசமாட்டார் ஏதோ தெரியாமல் நடந்து இருக்கணும். உங்க கோபம் நியாயமானதுதான் அவர் சார்பாக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன் என்றார் குருக்கள்.


என்ன குருக்களே, நீயும் அந்த கிழட்டு பரதேசிக்கு வக்காலத்து வாங்கி பேசுறீங்களே, இந்த கோயிலுக்கு நான் எவ்வளவு கொடுக்கிறன்னு என்று உங்களுக்கு தெரியுமா, இன்னைக்கு நடக்கிற பூஜையிலிருந்து எல்லாரும் சாப்பிடற சாப்பாடு வரைக்கும் நான் கொடுக்கிற பணம்தான், என் வைஃப் ஆசைப்பட்டான்னுதான் நான் இந்த கோயிலுக்கு வரேன், என்னோட பிசி ஷெட்யூல் எல்லாத்தையும் விட்டுட்டு வரிசையில நிற்கிறேன். அடுத்ததடவை கோயிலுக்கு டொனேஷன் கொடுங்கன்னு ஆபீஸ் வாசல்ல வந்து நிக்குறப்போ நான் யாருன்னு காட்டுறேன் என்று சொல்லிக்கொண்டே அந்த சிறுவனை தூக்கிக்கொண்டு போனான் சுதர்சனம். சற்று நேரத்தில் நடந்துவிட்ட சம்பவங்களினால் என்ன செய்வதென்று தெரியாமல் நின்ற குருக்களும், நிர்வாகியும் தனது சிறிது நேரம் கழித்து தனது பணிகளை கவனிக்கத் தொடங்கினர்.

இனியும் இவர்களிடம் கேட்பதனால் எந்தப் பயனும் இல்லை என்று உணர்ந்துகொண்ட வசந்தன், மீண்டும் ஒரு முறை கோவிலை சுற்றி தேடத் தொடங்கினான். சிலரிடம் விசாரித்தும் அந்தப் பெரியவரைப் பற்றி எந்த தகவலும் தெரியாததால் தனது பென்ஸ் காரில் ஏறியதும் டிரைவர் வண்டிய நேரா பெரியப்பா வீட்டுக்கு விடு என்று சொன்னதும், கார் அரக்கோணம் செல்லும் சாலையிலிருந்து பிரிந்து பெங்களூர் செல்லும் சாலையில் வேகம் எடுக்கத் தொடங்கியது..


ராணிப்பேட்டையிலிருந்து நான்கு நிமிட பயண தூரத்தில் சுமங்கலி குரூப்ஸ் ஆப் கம்பெனி என்ற பெயர் பலகை தாங்கியவாறு கம்பீரமாய் நின்றது அந்த கட்டிடம். அந்த கட்டடத்தின் வாயிலில் தனது காரை பார்க்கிங் செய்த சுதர்சனம் அவசரமாக இறங்கி ஓட்டமும் நடையுமாக உள்ளே செல்லத் தொடங்கினார். வரவேற்பு அறையில் சுதர்சனத்தை கண்ட அந்தப் பெண் சார் உங்களுக்காகதான் வெயிட்டிங் அவருடைய ரூம்ல இருக்காரு என்று சொன்னதும், எதுக்காக சார் இவ்வளவு அவசரமா கூப்பிட்டு இருக்காரு தெரியலையே என்று எண்ணியவாறு லிப்டில் பயணித்து எட்டாவது மாடியில் இறங்கிக் கொண்டதும் காரிடாரில் நடக்கத் தொடங்கினார். கதிர்வேலன் சான்சலர் சுமங்கலி குரூப்ஸ் ஆப் கம்பெனி என்ற வாசகம் தாங்கிய கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றதும், வாங்க மிஸ்டர் சுதர்சனம் உங்களுக்காகத்தான் காத்துகிட்டு இருக்கேன் ப்ளீஸ் உட்காருங்க என்றவாறு வரவேற்றான் கதிர்வேலன். அவனுக்கு பக்கத்தில் நேற்று கோயிலில் பார்த்த வசந்தன் நின்று கொண்டிருந்ததை கண்டதும் ஒரு கணம் திகைப்போடு இவன் எங்க இப்படி என்ற கேள்வியோடு அமர்ந்தார் சுதர்சனம்.

மிஸ்டர் சுதர்சனம் தட்டான் மலை முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவிற்கு போனதா கேள்விப்பட்டேன், தரிசனம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா? என்று கேட்டதும் அதெல்லாம் நல்ல படியா முடிஞ்சது சார் என்று சொல்லியவாறே வசந்தனை வெறித்த பார்வையோடு பார்த்தவரை, வெரி குட் இவரைப் பற்றி உங்களுக்கு தெரியாது இல்லையா? இவர் என்னோட சித்தி பையன் பேரு வசந்தன் நேத்திக்கு கோயில்ல உங்கள மீட் பண்ணதா வசந்தன் சொன்னான் என்றதும், சுதர்சனத்திற்கு ஏசி அறையிலும் குப்பென்று வியர்க்க தொடங்கியது. சாரி சார் நீங்க யாருன்னு தெரியாம உங்ககிட்ட அனாகரிகமான நடந்துகிட்டேன், ஐ அம் வெரி சாரி வசந்தன் சார் என்று பதறத் தொடங்கினார் சுதர்சனம்.


பரவாயில்லை விடுங்க, இந்த சுமங்கலி குரூப்ஸ் ஆப் கம்பெனியோட சொத்து மதிப்பு கிட்டதட்ட பன்னிரெண்டாயிரம் கோடிக்கு மேல இருக்கும், ஷூ கம்பெனியில் இருந்து மெடிசின் கம்பெனி வரைக்கும் கிட்டத்தட்ட நூற்று ஐம்பது கம்பெனிக்கு மேலே எங்க அம்மா சுமங்கலி பேரில் இருக்கு. சின்னதா காட்டன் மில் நடத்திக்கொண்டிருந்த எங்க அப்பா குமரேசன் எங்க அம்மாவை கட்டிக்கிட்டு பிறகுதான் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரர் ஆனார். சுமங்கலி வந்த நேரம்தான் என்னோட வாழ்க்கையில இவ்வளவு பெரிய இடத்துக்கு என்னால வரமுடிஞ்சதுன்னு என்கிட்ட அடிக்கடி சொல்வாரு. அவர் தீவிர முருக பக்தர், தட்டான் மலை கிராமத்தில சின்னதாய் இருந்த முருகன் கோயிலை புனரமைச்சி பெரிய கோயிலா கட்டி கொடுத்தவரும் எங்க அப்பாதான். அந்த முருகனோட பேரத்தான் எனக்கு வச்சிருக்காரு, ஏழு வருஷத்துக்கு முன்னால எங்க அம்மா இறந்துட்டாங்க. எங்க அம்மாவோட இழப்பை எங்கப்பாவால தாங்கிக்கவே முடியல, எவ்வளவு கம்பீரமாக வாழ்ந்தவர் எங்க அம்மா போனதும் மனசு உடைஞ்சு
போயிட்டார். எப்பவும் எங்க அம்மாவோட நெனப்புல இருந்தவர் ஆறு வருஷத்துக்கு முன்னால யார்கிட்டயும் சொல்லிக்காம எங்கேயோ போய்ட்டாரு, நாங்க எத்தனையோ இடத்தில் தேடிப் பார்த்தோம், ஆனா எங்க அப்பாவை எங்களால கண்டுபிடிக்கவே முடியல என்று சொல்லிக்கொண்டு வந்த கதிர்வேலன் தன்னையும் மீறி வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டான். சற்று நேரம் அமைதியாக இருந்தவன், மிஸ்டர் சுதர்சனம் நேத்து நீங்க உங்க ஸ்டேட்டஸ் பற்றியும், வருஷத்துக்கு நாலு லட்சம் டொனேஷன் கொடுக்கிறத பற்றியும் கோயில் நிர்வாகி கிட்ட சொன்னிங்களே, அந்தப் பணம் உங்க அப்பன் வீட்டு பணம் இல்லை என் அப்பா சம்பாதிச்ச பணம். அந்தக் கோயிலுக்கு கொடுக்கிறது எங்க அப்பா கடமையா நினைச்சார், நீங்க ஒரே ஒரு கம்பெனிக்கு மட்டும்தான் மேனேஜிங் டைரக்டர். அந்த ஒரு கோயிலுக்கு கொடுக்கிறது மட்டும்தான் உங்களுக்குத் தெரியும், இன்னும் எத்தனையோ தர்ம காரியங்கள் எங்க அம்மா பேருல நடக்கிறது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நேத்திக்கு உங்க பையன் மேல சாதத்தை கொட்டிட்டாருன்னு வார்த்தைக்கு வார்த்தை பரதேசி பரதேசின்னு சொன்னீங்களே அந்தப் பரதேசிதான் சுமங்கலி குரூப்ஸ் ஆப் கம்பெனியோட முதலாளி எங்க அப்பா குமரேசன், என்று சொல்லி நிறுத்தியதும் சுதர்சனம் முகத்தில் கலவரம் வெடிக்க தொடங்கியது, சார் என்ன மன்னிச்சிடுங்க நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன் என்றவரை இடைமறித்த கதிர்வேலன், மனுஷங்களை மதிக்கத் தெரியாத உங்களுக்கு இனி சுமங்கலி குரூப்ஸ் ஆப் கம்பெனியில இடமில்லை. உங்களுக்கு பதிலா வேற ஒருத்தரை அப்பாயிண்ட்மெண்ட் பண்ணிட்டோம். அதை சொல்லத்தான் நான் உங்களை இங்கே வரவச்சேன். இப்ப நீங்க கிளம்பலாம் என்றான் கதிர்வேலன். சார் அது வந்து என்று இழுத்த சுதர்சனத்தை, இனி ஒரு நிமிஷம் என் முன்னால நிக்க கூடாது மரியாதையா வெளிய போங்க என்றதும், தலையைத் தொங்கப் போட்டவாறே வெளியேறத் தொடங்கினார் சுதர்சனம். அன்று மாலையே வசந்தனை கூட்டிக்கொண்டு தட்டான்மலை கிராமத்திற்கு வந்து சேர்ந்த கதிர்வேலன் கோயிலில் விசாரித்துக்கொண்டு ஆலமரத்தின் அடியிலிருந்த குப்பைத்தொட்டி அருகில் வந்து பார்த்தபோது அந்த இடம் காலியாக இருந்தது. அந்தப் பெரியவர் படுத்திருந்த ஆலமரத்தின் விழுதின் பக்கவாட்டில் கதிர்வேலன் அம்மா சுமங்கலி சிரித்த நிலையில் இருந்த சிறிய புகைப்படம் ஒன்று கிடந்தது. கதிர்வேலன் அப்பா என்று அலறி அழ தொடங்கினான். தட்டான்மலை கிராமம் முழுக்கத் தேடியும் அவரைக் காணமுடியவில்லை. குப்பைத்தொட்டி சாமி எங்கு சென்றார் என்பது நமக்கும் தெரியாது...


Stories you will love

X
Please Wait ...