மெழுகுவர்த்தி

Swarna
மர்மம்
5 out of 5 (11 Ratings)
Share this story

அன்று மதுரையில் இருந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். எங்கள் ஊரிலிருந்து இரண்டு மணி நேர பயணம். மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று விட்டு, கோரிப்பாளையம் அம்மா மெஸ்ஸில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு, ஏ கே அஹமட் இல் ட்ரெஸ் எடுத்துவிட்டு, மாலையில் மதுரை பேமஸ் ஜிகர்தண்டா கடையில் ஜிகர்தண்டா சாப்பிட்டு விட்டு திரும்பிக் கொண்டிருந்தோம். இப்படி எப்போதாவது வருவதுண்டு, ஒரு நாள் பிக்னிக் போல்.

எங்காவது செல்லலாம் என அம்மாவை கேட்டால், அவள் சொல்கிற ஒரே இடம் கோவில். ஏதாவது ஒரு கோவிலைத் தான் சொல்வாள், அதன் பின் நாங்கள் என்ன சொன்னாலும் எடுபடாது.

“ பிள்ளையார்பட்டி போகலாம் . பிள்ளையார பாத்து ரொம்ப நாள் ஆச்சுல”

“ஏங்க ஒரு எட்டு சமயபுரம் போய்ட்டு வந்துடுவோமா. அம்மனுக்கு புடவ சாத்தனும்னு முன்ன வேண்டிக்கிட்டேன்.”

“ வீரபாண்டி ஆத்துல தண்ணி ஓடுதாம் , அப்படியே கோவிலுக்கு போயிட்டு வந்துடுவோம்.”

“ சோழவந்தான் பக்கத்துல ஒரு கோவில் இருக்காம். வாசுகி டீச்சர் சொன்னாங்க. என்ன கோவில்னு விசாரிக்கறேன். போயிட்டு வந்துருவோமா?”

இதேபோல் தான் அன்றும், எங்களுக்கோ மதுரையில் புதிதாக திறந்திருக்கும் அதிசயம் பார்க் போக ஆசை. ஆனால் வழக்கம் போல் கோவிலுக்கு தான் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருக்கிறோம். எங்களுடன் மாமாவின் மகளும் அன்று வந்திருந்தாள்.

மெல்ல மெல்ல இருட்டத் தொடங்கியிருந்தது. வத்தலக்குண்டு வரையிலும் கூட சாலையில் வாகனங்கள் கொஞ்சம் இருந்தன. இரவு உணவு வத்தலக்குண்டுவில் முடித்து விட்டு கிளம்பிய பின் ஆளரவமே இல்லாமல் சாலையே வெறிச்சோடி இருந்தது. எங்களைத் தவிர அந்த பகுதியில் ஆட்களே இல்லாததுபோல் இருந்தது. காட்ரோட் பிரிவில் ஒன்றிரண்டு வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. அதையும் கடந்த பின் மையிருட்டு. அப்போதெல்லாம் நான்கு வழிச் சாலைகளும் இல்லை, புற வழிச் சாலைகளும் இல்லை. அதனால் சாலைகளில் கடைகளும் இல்லை. நான்கு வழி சாலைகளும் புற வழி சாலைகளும் வந்த பின் தான் சாலையோர கடைகளும் ஹோட்டல்களும் வரத் தொடங்கியிருந்தன. பெரும்பாலான சாலைகளில், சாலையின் இரு புறமும் மரங்கள் அடர்ந்திருக்கும். பகல் நேரங்களில் ரம்மியமாவும் இரவில் பயங்கரமாகவும் தோற்றமளிக்கும் அம்மரங்கள்.

“சீக்கிரம் கிளம்புங்கனு சொன்னா கேக்றீங்களாடி ? எங்க போனாலும் லேட் பண்ணிட்டே இருக்கீங்க. இப்ப பாரு ரோட்ல ஒரு ஜனமில்ல”

“ அத்த,.நானும் தாரணியும் சீக்கிரமே எடுத்துட்டோம் இந்த அக்கா தான் ட்ரெஸ் எடுக்க லேட் பன்னிட்டா., இல்லனா சீக்கரமே வீட்டுக்கு போயிருப்போம்ல ?”

“ அடியே, அம்மாவே கடுப்பா இருக்காங்க. சும்மா இருடி.”

“ ஏங்க ஒரே மேகமுட்டமா இருக்கு. மழை வரும்போல இருக்கு. பெரிய மழை வர்றதுக்குள்ள வீட்டுக்கு போயிட்டா பரவாயில்லங்க. டிரைவர இன்னும் கொஞ்சம் வேகமா போக சொல்லுங்களேன்.”

“ ஏற்கனவே எம்பது தொண்ணூருனு தான் போகுது. இந்த ரோட்ல இதுக்கு மேல வேகமா எல்லாம் ஓட்ட முடியாது. நீ பயப்படாம இரு.”

அம்மாவிற்கு எப்பொழுதுமே கார் பயணம் என்றால் கொஞ்சம் பயம் தான். பயணத்தில் அவள் கண் அயர்ந்து நான் பார்த்ததேயில்லை. உயிரை கையில் பிடித்து கொண்டு இருப்பது போல்தான் அம்ர்ந்திருப்பாள். முணுமுணுத்துக் கொண்டேயிருந்தாள், எல்லாம் எங்களை திட்டி கொண்டு தான்.

“ சும்மா டென்சன் ஆகாத. இன்னும் அர மணி நேரத்துல வீட்டுக்கு போயிடலாம்.”

அப்பா சொல்லிக் கொண்டிருக்கும்போதே திடிரென கார் கட்டுபாடில்லாமல் ஓடி, கொஞ்ச தூரம் போன பிறகு ப்ரேக் அடித்து நிறுத்தப்பட்டது. எங்களுக்கு உயிரே போய்விட்டது.

“ என்னப்பா ஆச்சு?”

“சார், டயர் பன்ச்சர் ஆயிருக்கு. ஏதாச்சும் ஆணி மேல் ஏறியிருக்கும் போல சார். அதான் இப்படி ஒரு சத்தம்.”

“ ஏம்பா பாத்து போக கூடாதா ? பிள்ளங்க எல்லாம் பயந்துடுச்சுங்க பாரு.”

“ எப்படி ஆச்சுனு தெரியலம்மா. ரோட்ல ஆணி கிடந்துருக்கும் போல.”

அப்பாவும் டிரைவரும் கீழே இறங்கி பார்க்கலானார்கள். நாங்கள் யாரும் காரை விட்டு இறங்கவே இல்லை. இப்போது போலெல்லாம், அப்போது கைப்பேசியில் டார்ச் எல்லாம் இல்லை. ஸ்மார்ட் போன்கள் எல்லாம் அப்போது வந்தேயிருக்கவில்லை. பலரிடம் கைப்பேசி கூட வந்திராத காலம். எல்லார் வீட்டிலேயும் லேண்ட்லைன் போன் மட்டுமே இருக்கும் காலம். அப்பாவிடம் மட்டுமே கைப்பேசி இருந்தது.

“ சார் ஸ்டெப்னி மாத்திட்டா கிளம்பிடலாம் ,அப்புறம், வண்டிக்குள்ள லைட் எறிஞ்சுட்டே இருந்தா பேட்டரி போயிடும் சார். அப்பறம் ஸ்டார்ட் பண்றது கஷ்டம்.”

“ ம். சரி, நீ ஸ்டெப்னி மாத்த என்ன செய்யனும்னு பாரு.”

“ மதி, பிள்ளைங்கள கூப்புட்டு கீழ இறங்கு. ஸ்டெப்னி மாத்தினாதான் கிளம்ப முடியும்”

நாங்கள் அனைவருமே கீழே இறங்கினோம். சுற்றியும் அப்படி ஒரு இருட்டு. மையிருட்டு. சாலையின் இருபுறமும் இருக்கும் மரங்கள், மேலும் அந்த இருளை அதிகமாக்கியது. எங்கள் பேச்சொலியைத் தவிர வேறெந்த ஒலியுமே இல்லாமல் நிசப்தமாக இருந்தது. எங்களுக்கு பயம் அதிகரித்துக் கொண்டே போனது. நாங்கள் மூவருமே அம்மாவின் கைகளை இறுக பற்றிக் கொண்டிருந்தோம்.

சற்று தூரத்தில் ஓரிடத்திலிருந்து மங்கலான ஒளி வந்தது. அது என்ன இடம் என பார்ப்பதற்காக அப்பா விரைந்தார். அது ஒரு மாதா கோவில். எங்களை அழைத்து சென்று அங்கே இருக்கும்படி சொல்லிவிட்டு அப்பா சென்று டிரைவருக்கு ஒத்தாசையாக இருந்தார். துரிதமாக வேலை நடந்தால் தான் நாங்கள் விரைவாக வீடு செல்ல முடியும் என்பதை உணர்ந்த டிரைவரும் வேகமாக ஸ்டெப்னி மாற்றுவதற்கான வேலையை செய்ய ஆரம்பித்தார். காரில் இருந்த சின்ன டார்ச்சின் வெளிச்சத்தில் அவர்களிருவரும் டயர் மாற்றும் வேலையில் இறங்கினார்கள்.

கோவில் என்றால் பெரிய கோவிலெல்லாம் இல்லை. நான்கு தூண்களும் மேலே கான்க்ரீட் கூரையுமாக இருந்த மிகச் சிறிய கோவில். மாதா இருந்த இடத்தில் மட்டும் கேட் போட்டிருந்தார்கள். கேட்டின் இடுக்குகளின் வழியே நாங்கள் உள்ளிருக்கும் மாதாவை பார்த்தோம். கையில் குழந்தையுடன் புன்னகைத்துக் கொண்டிருந்தாள். அவளருகில் மெழுவர்த்திகள் எரிந்து முடிந்து போயிருந்தன.

அம்மா கோவிலின் ஒரு தூணில் சாய்ந்து அமர்ந்து விட்டாள். கோவிலைச் சுற்றி சிறு சிறு செடிகள் வளர்ந்திருந்தன. சுவர் கோழிகள் ரீங்கரிக்கும் சத்தம் தவிர வேறில்லை. அதுவே சற்று நேரத்திலெல்லாம் பெரும் ஓசை போல் கேட்டது.

“ என்ன அப்படி சுத்தி சுத்தி பாத்துட்டு இருக்கீங்க ? பேசாம சாமிய கும்பிட்டுட்டு வந்து உக்காருங்க”

“ என்ன சாமியம்மா கும்பிடறது ?”

“ இந்தா. இந்த மேரி மாதா முன்னாடி மண்டி போட்டு சீக்கரம் வீட்டுக்கு போயிடனும்னு வேண்டிக்கோங்க.”

“ஏம்மா கிரிஸ்டியன்ஸ்தானே அப்படி மண்டி போட்டு கும்புடுவாங்க?”

“ மாரியம்மான்னா என்ன மேரி மாதான்னா என்ன? எல்லாம் ஒன்னு தான்.”

நாங்களும் மறு பேச்சில்லாமல் அதை செய்தோம். மண்டியிட்டு வேண்டிக் கொண்டோம்.

“ அத்த. ஏதோ கத்துற சத்தம் கேக்குதில்ல.. என்ன அது?”

“ சுவர்க் கோழி கத்திட்டு இருக்கு.”

“ ஏம்மா, இந்த சுவர்க் கோழி பகல்ல எல்லாம் கத்தாதா ? ஒரு நாளும் பகல்ல நான் கேட்டதேயில்லையே.”

“ இல்ல . கத்தாது. இராத்திரில மட்டும்தான் கத்தும் . அதும் நல்ல லைட் வெளிச்சம் இருந்தா கத்தாது. இருட்டுல மட்டும் தான் கத்தும்.”

“ ஏன் அத்த. சுவர்க் கோழினா நாட்டுக் கோழி மாதிரி இருக்குமா? இல்ல பிராய்லர் கோழி மாதிரி இருக்குமா? இருட்டுக்குள்ள எங்க இருக்கும் ? நிறைய இருக்க மாதிரி சத்தம் வருதே. கண்ணுக்கு ஒன்னுமே தெரியலயே.?”

“ ஹா ஹா .. சுவர்க் கோழினா கோழி இல்லடி அது ஒரு பூச்சி. பாக்க கொஞ்சம் வெட்டுக்கிளி போல இருக்கும்.”

மாமா மகள் கேட்ட கேள்வியில் எல்லோரும் சிரிக்க சற்று இறுக்கம் குறைந்தது.

திடீரென பலத்த காற்று வீசத் தொடங்கியது. வானம் இன்னும் இருளாக மாறியது போலிருந்தது. ஆங்காங்கே மின்னல் வெட்டி இடி இடிக்க ஆரம்பித்தது. எங்களுக்கு மறுபடியும் பயம் தொற்றிக் கொண்டது.

எங்கள் முன்னிருக்கும் மரங்கள் எல்லாம் பேயாட்டம் போடுவது போல் ஆடிக் கொண்டிருந்தன. பார்க்கவே அச்சுறுத்துவதாக இருந்தது.

அடுத்து வெட்டிய மின்னல் வெளிச்சத்தில் தான் தெளிவாக அந்த கோவிலை சுற்றியிருந்த பகுதி தெரிந்தது, அச்சிறிய கோவிலுக்கு பின்புறம் சற்று தள்ளி, காம்பவுண்டு சுவர் ஒன்று இருந்ததும், அதற்கு பின் இன்னும் தள்ளி ஓர் வீடு இருந்துதும் தெரிந்தது. இவ்வளவு நேரம் இது எதுவுமே எங்கள் கண்களுக்கு தெரியவில்லை. இப்போது பயமும் குழப்பமும் அதிகமாயின.

‘ யாருடைய வீடாக இருக்கும்? எப்படி இப்படி ஒரு இடத்துல வந்து வீடு கட்டி இருக்காங்க ? பயமா இருக்காதா இவங்களுக்கு? வீட்ல யாரும் இருக்கிற மாதிரி தெரியலையே? இங்க இருக்க பயந்துட்டு போயிருப்பாங்களோ?’ இப்படி என் மனதில் கேள்விகள் ஓடத் தொடங்கின. எல்லோரும் அம்மாவை சுற்றி அமர்ந்து கொண்டோம். கோவிலில் இருந்த லைட்டும் மினுக் மினுக்கென விட்டு விட்டு எரிய ஆரம்பித்தது.

“ மா. அடிக்கற காத்துக்கு கரண்ட் போயிட்டா என்ன பண்றது?”

“ கோவில்ல எங்கையாச்சும் தீப்பெட்டி, மெழுவர்த்தி இருக்கானு பாருங்கடி. மாதா கோவில்னால இருக்கும். தேடுங்க.”

நாங்கள் மூவரும் வேகமாக தேட தொடங்கினோம். எரிந்து கொண்டிருந்த லைட் அணைவதற்குள் கிடைத்தாக வேண்டும் என்ற பதற்றம் வேறு தொற்றிக் கொண்டது. கிடைத்த சின்ன சின்ன மெழுகுவர்த்தி எல்லாவற்றையுமே ஒன்று விடாமல் சேகரித்து எடுத்துக் கொண்டோம். எங்கு தேடியும் தீப்பெட்டி மட்டும் கிடைக்கவேயில்லை. நாங்கள் தேடுவதை நிறுத்தவும் இல்லை.

மின்னலும் இடியும் அதிகரித்திருந்தது. மின்னல் ஒளியில் அப்பாவும் டிரைவரும் ஸ்டெப்னி மாற்ற போராடிக் கொண்டிருப்பது தெரிந்தது. நாங்கள் அப்பாவை கூப்பிட்டு பார்த்தோம், தீப்பெட்டி அவரிடம் அல்லது டிரைவரிடம் இருக்குமா என விசாரிக்க. ஆனால் நாங்கள் அழைத்தது அவர்கள் காதுகளை எட்டவே இல்லை. எங்களுக்கோ இருட்டில் செல்ல பயம்.

“சரி. நான் போய் அப்பாவ பார்த்து, தீப்பெட்டி இருந்தா வாங்கிட்டு வரேன். நீங்க தேடிட்டே இருங்க”

“ ம்மா . ப்ளீஸ்மா போகாதீங்க. சப்போஸ் நீங்க போற நேரம் கரண்ட் போயிடுச்சுனா என்ன பன்னுவோம்.”

“ ஆமா அத்த. ப்ளீஸ் இங்கையே இருங்க. பயமா இருக்கு.”

“ தீப்பெட்டி இல்லனா கரண்ட் போனப்றம் இருட்டுல இருக்கனும். அம்மா போய் வாங்கிட்டு வர்றது தான் சரி.”

“ க்கா. நீ சும்மா இரு. அதெல்லாம் அத்த எங்கையும் போக வேணாம்.”

“ மா. நான் வேனா போய்ட்டு வரவா ?”

“ வர்றப்போ அப்பா டார்ச் வச்சுருந்தார். இப்போ ரொம்ப இருட்டா இருக்கு. முள்ளு பூச்சினு ஏதாச்சும் இருக்கும். நீ எல்லாம் போக வேணாம்.

நீ இந்த பிள்ளைங்கல பாத்துக்கோ. நான் வேகமா போய் வாங்கிட்டு வரேன்.”

அம்மா சொல்லிக் கொண்டிருந்த போதே சட்டென்று லைட் அணைந்து விட்டது. எங்களுக்கு இதயமே நின்று விட்டது போலிருந்தது. அனைவரும் அம்மாவை சுற்றி இன்னும் நெருக்கமாக அமர்ந்து கொண்டோம். பயத்தில் யாருக்கும் பேச்சே வரவில்லை. நிசப்தம். ஆந்தை அலரும் சத்தமும், சுவர்க் கோழியின் சத்தமும் எங்களை மிகவும் அச்சுறுத்தியது. சுற்றிலும் இருட்டு.

“ யாரும்மா அங்க கோவில்கிட்ட இருக்றது ?”

சட்டென அனைவரும் சத்தம் வந்த திசையைப் பார்த்தோம். சற்று தொலைவில் ஒரு மூதாட்டி கையில் மெழுவர்த்தி வெளிச்சத்துடன் வந்து கொண்டிருந்தாள். மெழுகுவர்த்தி காற்றில் அணையாமலிருக்கும்படி கைகளுக்குள் வைத்து கொண்டு வந்து கொண்டிருந்தாள்.

“ யாருனு கேக்கறேன்ல . பதில் பேசாம இருக்கீங்க.?”

கோவிலை நெருங்கி உள்ளே வந்து விட்டாள். எங்களுக்கு வியர்த்துக் கொட்டியது. நிசப்தமாக இருந்தததை விடவும் இந்த மூதாட்டியின் குரல் பயத்தை உண்டு பண்ணியது.. அம்மாதான் பேசலனாள்.

“ ஆமா. நீங்க யாரு? இந்த கோவிலுக்கு இப்போ எப்படி வந்தீங்க? அர மணி நேரத்துக்கு மேல இங்க தான் இருக்கோம் நாங்க.”

“ என் குடிச பக்கத்துல தான் இருக்கு. இந்தா அங்கன குள்ள இருக்கு.”

அவள் காட்டிய இடத்திலும் இருளே கவ்வியிருந்தது.

“ அங்கன தான் இருக்கு . இருட்டுல தெரில. ஒங்க பேச்சுக்குரல் ரொம்ப நேரமா கேட்டுட்டுதான் இருந்துச்சு . இந்தா கிளம்பிடுவாங்கனு யோசிச்சுட்டே படுத்துட்டேன். விடாம ஒங்க பேச்சு கேக்கவும் , சரி என்ன தான்னு ஒரு எட்டு பாக்கலாம்னு வந்தேன். ஆமா அசலூரா நீங்க ?”

இதற்குள் அவள் கொண்டு வந்திருந்த மெழுகுவர்த்தியின் சுடரிலிருந்து, நாங்கள் சேகரித்து வைத்திருந்த எல்லா மெழுவர்த்திகளையும் ஏற்றினோம். காற்றடித்தால் அணையாதவாறு மெழுவர்த்திகளை இடம் பார்த்து வைத்தோம். சற்று நேரத்திற்கெல்லாம் அந்த இடமே ஒளி மயமாக மாறியது.

“ அசலூர் எல்லாம் இல்லம்மா. பெரியகுளந்தான் . மதுர போய்ட்டு வந்துட்டு இருந்தோம். கார் டயர் பன்ச்சர் ஆயிடுச்சு. என் வீட்டுக்காரரும் டிரைவரும் சரி பண்ணிட்டு இருக்காங்க.”

“ என்ன ஆத்தா. இப்புடி இருட்டுல வந்து மாட்டிக்கிட்டீங்களே. வெல்லன கெளம்பியிருக்கலாம்ல ஆமா , இது மூனும் ஒம்மவளுகளா?”

“ இல்ல. இது ரெண்டும் என் மகளுங்க. இது அண்ணே மக.”

“ நல்லது. மூனு பேரும் ஆத்தா அப்பன் பேச்சக் கேட்டு , ஒழுக்கமா நடந்துக்கனும். சரியா ?”

நாங்கள் மூவருமே வேகமாக சரியென்று தலையசைத்தோம்.

“ நீங்க இங்க என்ன பண்றீங்க? வேலைக்கு எதும் போறீங்களா?”

“ தோட்டத்து வேல செய்வேன். எப்பாவாச்சும் எளனி கட போடுவேன். அப்டியே பொழப்பு ஓடுது.”

“ தனியாவா இருக்கீங்க? வீட்டுக்காரர் பசங்க எல்லாம் இல்லையா?”

“ வீட்டுகாரு எப்பவோ எறந்து போயிட்டார். ஒரே பையன். எளந்தாரி பைய. அவனும் என்ன அநாதையா விட்டு மேல போய் சேந்துட்டான்.”

அவள் குரல் உடைந்தது. ஒருவாராக அழுகையை அடக்கிக் கொண்டாள்.

“ அவுக ரெண்டு பேரும் போனப்றம் நான் மட்டும் ஒண்டி கட்டையா இங்க கிடக்றேன்.”

அவள் பேசிக் கொண்டிருக்கும்போதே அப்பா வந்துவிட்டார். டயரை மாற்றி விட்டதாகவும், கிளம்பலாம் எனவும் சொல்லி அழைத்து போக வந்தார். அம்மா, அப்பாவிடம் இருந்து கொஞ்சம் பணம் வாங்கி, அந்த மூதாட்டிக்கு குடுத்தாள்.

“ செலவுக்கு வச்சுகோங்கம்மா. நீங்களா தனியா வேற இருந்து கஷ்ட பட்றீங்கல்ல”

“ இல்ல ஆத்தா. அதெல்லாம் வேணாம். இந்தா இந்த உண்டியல்ல போடு. அவ தான நம்மள எல்லாம் பாத்துக்கறா.”

அந்த மூதாட்டியிடம் விடை பெற்றுக் கொண்டு எல்லோரும் காருக்கு வந்து ஏறி வீடு வந்து சேர்ந்தோம். நாங்கள் வீட்டிற்குள் நுழைந்தது தான் தாமதம். மழைக் கொட்டத் தொடங்கியது.

மறு நாள் அம்மாவும் அப்பாவும் அம்மூதாட்டியை பார்த்துவிட்டு வருவதற்காக கிளம்பினார்கள்.

“ எதுக்கும்மா அவங்கள பாக்க போறீங்க?”

“ அவங்களுக்கு நேத்து சரியா நன்றி கூட சொல்லல்ல . போய் சொல்லிட்டு வரோம். நேத்து அவங்க வந்தப்றம் தான பயம் போச்சு எல்லாருக்கும் ?”

அம்மா சொன்னது என்னவோ நிதர்சனம். ஆரம்பத்தில் அவள் குரல் சற்று பயத்தை தந்தது உண்மைதான். ஆனால் நேரமாக நேரமாக ஒருவித அமைதி ஆனது மனது. பயம் முழுக்க போய்விட்டிருந்தது. வாஞ்சையாக பேசினாள். வெள்ளையில் பூ போட்ட புடவை கட்டிக் கொண்டு காதில் பெரிய பெரிய தொங்கட்டான் போட்டுக் கொண்டு, அந்த வயதிலும் அந்த மூதாட்டி அழகாகவே இருந்தாள். அவள் முகத்தில் புன்னகை மாறவேயில்லை. மெழுகுவர்த்திகளின் ஒளியில் அவள் முகம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. முதுமையின் அழகு என நினைத்துக் கொண்டேன். அம்மா உட்பட அனைவருமே அவளை சுற்றித்தான் அமர்ந்திருந்தோம்.

“முடிஞ்சா வீட்டுக்குக் கூட கூட்டிட்டு வாங்கம்மா.”

“ வந்தா கூட்டிட்டு வரேன். வேலையெல்லாம் விட்டுட்டு வருவாங்களானு தெரியலல்ல”

அம்மாவும் அப்பாவும் சென்று விட்டார்கள். நாங்கள் மூவரும் அந்த மூதாட்டியை பற்றி பேச ஆரம்பித்தோம்.

“ எங்க இருந்து தான் வந்தாங்கனு தெரியல. கரெக்டா கரண்ட் போன நேரம் வந்தாங்க. அவங்க வரலனா நாம பயந்தே செத்துருப்போம்.”

“ ஆமாடி. எனக்கு எல்லாம் உயிரே போயிடுச்சு. எப்படா அப்பா வருவாங்கனு இருந்தது.”

“ அக்கா. அந்த பாட்டி எவ்ளோ ஃப்ரெஷா இருந்தாங்கல்ல. நாம தான் பேயறஞ்ச மாதிரி வேர்த்து போயிருந்தோம்.”

ஆம். அந்த காற்றிலும் நாங்கள் வியர்த்து போய் தான் இருந்தோம். தொலைக்காட்சியை ஆன் செய்துவிட்டு அம்மாவும் அப்பாவும் வருவதற்காக காத்திருக்க தொடங்கினோம்.

அம்மாவும் அப்பாவும் வந்து விட்டார்கள். அம்மாவின் கையில் பெரிய சட்டமிட்ட புகைப்படம் ஒன்று பேப்பரில் சுற்றியிருந்தது. அம்மா நேராக பூஜை அறையை நோக்கி சென்றாள்.

“ என்னம்மா சொன்னாங்க அந்த பாட்டி? கூட வரலனு சொல்லிட்டாங்களா?”

“ அப்படி ஒரு பாட்டியே அந்த பக்கம் இல்லையாம்!”

அம்மா பேப்பரை பிரித்து வைக்கிறாள். மாதா படம்.

அன்றிலிருந்து எங்கள் பூஜையறையிலும் மனதிலும் எப்போதும் இருக்கின்றாள் மாதா !

Stories you will love

X
Please Wait ...