முல்லைக் கொடியும் கொடி வீரனும்

pradeep_deep74
அமானுஷ்யம்
4.7 out of 5 (6 Ratings)
Share this story

"நிஷா வீடு எங்க இருக்கு ?" என்று யார் கேட்டாலும் , அந்த பூஞ்செடிகள் இருக்குற வீடு என்று தான் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கூறுவார்கள்.அந்த அளவிற்கு நிஷாவின் அம்மா ராஜத்திற்கு பூக்கள் என்றால் அவ்வளவு பிடிக்கும்.வீடு கட்டும் போதே இந்த இடத்தில் இந்த பூ வைக்க வேண்டும் என்று பிளான் செய்து கட்டினார் . முல்லைக் கொடியை த் தடியான கயிற்றினை கொண்டு மாடி வரை செல்லும் படி கட்டி இருந்தார் .

பிச்சிக்கும் தனியாக ஒரு கொடி இருந்தது.பல வகையான ரோஜா மலர்களும் இருந்தன.ஒரு நாள் பறிக்கா விட்டாலும் அதிகமான பூக்கள் தரையில் விழுந்து விடும்.அதை சுத்தம் செய்வதற்குள் ஒரு வழியாகிடுவார் ராஜம்.காற்றில் அசைந்தாடும் முல்லை மலர்களை காணும் போது எந்த துன்பம் வந்தாலும் அந்த காற்றோடு பறந்து போய் விடும் என்று உறுதியாக நம்பினார் .தினமும் பூ பறித்து நூலோடு கட்டி அதனை தானும் சூடி நிஷாவிற்கும் சூடி அழகுப் பார்த்தார்.

எந்த வேலை மறந்தாலும் பூ பறித்து கட்டும் பழக்கம் மட்டும் மறக்கவே இல்லை.மிஞ்சும் பூக்கள் சுவாமி படங்களுக்கு மாலையாக உருமாறியிருந்தன.

நிஷாவை பூவோடு அதிகமாக பார்த்திருப்பதாகக் தான் அவளது தோழிகள் நியாபகம் வைத்திருந்தனர்.

"குளிக்கிறாளோ இல்லையோ பூ மட்டும் வச்சிட்டு வந்திருவா " என்று அவளது தோழிகள் கிண்டல் செய்வர்.பூக்காரி என்ற பட்ட பெயரும் அவளுக்கு இருந்தது.

நிஷாவிற்கு அடிக்கடி ஓர் கனவு வந்து கொண்டுயிருந்தது .மலையாள நடிகர் ஜெயராம் சாயலில் முப்பது வயதுக்கு மேற்பட்ட ஒருவர் , நீளமான மூக்கும் பெரிய நெற்றியும் கொண்டிருந்தார். அடர்த்தியான மீசை வைத்திருந்தார். அந்த நபர் அடிக்கடி நிஷாவிடம் "இந்த மல்லிகை பூ ஒரு கூடை நிறைய வருமா?" என்று கேட்டு கொண்டியிருந்தார் .இந்த கேள்விக்கு பதில் சொல்ல இயலாமல் நிஷா திணறுவாள்.அவர் அடுத்த கேள்வி கேட்கும் முன் நிஷா கண் விழித்து விடுவார்.இந்த கனவில் வந்தவரை அதிகமாக யோசித்தும் நிஷாவால் கண்டுபிடிக்கமுடியவில்லை.

கல்லூரி பயின்ற பொது தற்செயலாக ரோஜா பூ கூந்தலில் இருந்து விழ,இருபது வயது மதிக்கத்தக்க இளைஞன் அந்த ரோஜா பூவை எடுத்து கொடுத்தான்.அவளும் தேங்க்ஸ் என்று வாங்கி கொண்டாள் .இந்த சம்பவத்தை தோழிகள் கண்டதால் அன்றிலிருந்து 'ரோஜா ரோஜா' என்று பாட்டு பாடி ஆரவாரம் செய்ய ஆரம்பித்து விட்டனர். "யாருடி அந்த காதலர் தினம் குணால்?" என்று அடிக்கடி கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தனர் .

"அதெல்லாம் ஒன்னும் இல்லடி." என்று எத்தனை முறை விளக்கம் கொடுத்தாலும் அவர்கள் விடுவதாக இல்லை.

எவ்வளவு யோசித்தும் அந்த இளைஞனின் முகமும் சரியாக நியாபகம் வைத்து கொள்ள முடியவில்லை.அந்த வசந்த காலங்களை நினைக்கும் போது நிஷாவிற்கு மகிழ்ச்சியாக இருக்கும்.எல்லாமே நேற்று நடந்தது போல இருந்தது .அதற்குள் ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன .

பெண்கள் படிக்கும் பள்ளியிலும் கல்லாரியிலும் படித்ததால் ஆண் வாசனையே இல்லாமல் வளர்ந்தாள்.சமூக வலைத்தளங்களிலும் பெரிதாக ஈடுபாடு கிடையாது.முகநூலில் கூட அவளிடம் ஆண்கள் நண்பர்களாக இருப்பவர்கள் அவளது தந்தையும் சித்தப்பாவும் தான்.நடிகை நஸ்ரியாவின் புகைப்படம் வைத்ததற்கே வீட்டில் பயங்கர சண்டை வந்தது. ஆண்கள் யாராவது ரெக்வஸ்ட் அனுப்பி இருந்தாலும் அவர்களின் ப்ரொபைலை மட்டும் பார்ப்பாள் .அவர்கள் பதிவு செய்த புகைப்படங்களை பார்ப்பாள்.ஆண்களுக்குத் தான் எவ்வளவு சுதந்திரமான வாழ்க்கை என்று நினைத்து கொள்வாள் .நினைத்த நேரத்தில் நண்பர்களுடன் ஊர் சுற்றி புகைப்படம் எடுத்து கொள்கின்றனர்.ஆனால் இவள் தோழிகளை அழைத்தால் எங்கள் வீட்டில் விடமாட்டார்கள் என்று ஏதாவது சாக்கு சொல்வார்கள்.

"என் ஆளு விடமாட்டான் " என்று ஒரு தோழி சொல்லும் போது பயங்கர கடுப்பாகியது.அலுவலகத்திலாவது ஏதாவது பையனோடு பேசலாம் என்றால் எல்லாம் வயதானவர்களாவே இருந்தார்கள்.எந்த பையனோடும் பேசாமலே திருமணம் செய்து கொள்வேனோ என்ற பயம் எப்போதும் இருந்து கொண்டே இருந்தது .ஆண்களின் உலகம் எப்படி இருக்கும் என்பதனை அறிய எவ்வளவோ முயற்சி செய்தும் பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. இறக்கை விரித்தப் பறவை போல பைக்கில் சுற்றுகிறாரகள்.

ஒரே சட்டையை நான்கு நாட்கள் அணிகிறார்கள்.கலர் குருவி போல தலை முடிக்கு வண்ணங்கள் பூசுகிறார்கள் ஆண்களின் வாழ்க்கை தான் எவ்வளவு அலாதியானது .ஆனால் பெண்களுக்கு எல்லாம் தலைகீழாக இருக்கிறது .பெண்ணியம் பற்றி பேசினாலும் வீட்டில் எதுவும் எடுபடாது .'உலகத்துல என்னன்ன அநியாயம் நடக்குது' என்று தனது அப்பா பாடம் நடத்துவார் . வெளியூரில் வேலை செய்தால் கூட தன்னுடைய இஷ்டப்படி வாழலாம் என்று நினைத்தாள். ஆனால் அந்த கனவும் பழிக்காமல் போனது .வெளியே சுற்ற நினைத்தாலும் 'கல்யாணம் பண்ணின பிறகு புருஷனோட சுத்தலாம் ' என்று வீட்டில் சொல்லுவார்கள் .தன்னோட ஆசை தாபங்கள் அனைத்தும் பூக்களோடு தான் முறையிடுவாள்.காற்றில் பூக்கள் அசையும் போது ,தான் சொல்வதை கேட்டு ஆமாம் சொல்லுவது போல தோன்றும்.புதிதாக பூக்கள் பூக்கும் போது அதை நுகர்ந்து பார்ப்பது ஓர் அதீத மகிழ்ச்சியைக் கொடுத்தது.புதிதாக ஒரு செடி நட்டு அதற்கு தண்ணீர் ஊற்றி தளிர் விட்டு அது மொட்டு விடும் போது ஒரு புது உற்சாகத்தை கொடுத்தது.அந்த நாளும் இனிய நாளாக மாறியது.உற்சாகத்தில் கண்ணிற்கு அதிக மைத் தீட்டுவாள் .உதட்டிற்கு அதிக சாயம் பூசுவாள்.ஏதாவது பாடலை முணுமுணுப்பாள்.செடி வாடினால் தனது அம்மாவிடம் கடிந்து கொள்வாள்.

'நீ ஒழுங்கா தண்ணி ஊத்தல' என்று கோபப்படுவாள்.

இந்த கனவு வேற அடிக்கடி வருவதால் தங்கள் வீட்டுத் தோட்டத்திற்கு எதுவும் ஆகிவிடுமோ என்று தோன்றியது.பிச்சிக் கொடியும் முல்லைக் கொடியும் மழைக் காற்றில் சாய்ந்து விடுமோ என்ற பயம் நிஷாவை தொற்றிக்கொண்டது. அல்லது தனது தோட்டம் தண்ணீர் இல்லமால் காய்ந்து விடுமோ , மின்னல் எதுவும் தாக்கி கருகி விடுமோ என்றெல்லாம் நினைத்து அவள் பயந்தாள்..அவள் யோசனைக்கு செவி சாய்ப்பது போல பூக்களும் தலையாட்டின.அந்த கொடியை வாஞ்சையோடு கட்டிக் கொண்டாள்.

அந்த கனவு வரும் நாட்களில் எல்லாம் பித்துப் பிடித்ததுப் போல இருந்தாள். முல்லைக் கொடியைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருப்பாள்.அதன் அசைவில் ஏதாவதொரு மாற்றம் தெரிகிறதா அல்லது அது உயிர் போகும் முன் ஏதாவதொரு சமிக்ஞைக் காட்டுகிறதா என்று உற்று நோக்குவாள்.

பூக்கள் வாசத்தோடு வித்தியாசமான ஆண் வாசனையும் சேர்ந்து வந்தது.ஒரு நிமிடம் கனவில் வந்த மனிதர் கண் முன் தோன்றினார்.அவளைப் பார்த்து சிரித்தார் .அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை .கை கால் எல்லாம் உதற ஆரம்பித்தது.சுற்றி என்ன நடக்கிறது என்று அனுமானிக்க முடியவில்லை.கருஞ்சிவப்பு ,ஊதா ,பச்சை என்று அவர் கண்களின் நிறம் நொடிக்கொருமுறை மாறிக் கொண்டே இருந்தது.அவரின் கையில் கூடை இருந்தது.கூடையிலும் பூக்கள் இல்லை. புன்முறுவளோடு இவளை அழைப்பது போன்றேத் தோன்றியது.கொடியைத் காணவில்லை என்றதும் பதற்றம் அடைந்தாள்.நாற்காலியில் அமர்ந்திருந்தவள் தோட்டத்தை நோக்கி ஓடினாள்.

பக்கத்தில் வந்துப் பார்த்த போது கொடி அப்படியே இருந்தது.இவளை கண்டு சிரிப்பது போல் பூக்கள் மெல்ல தலை அசைத்தன.கொடியைக் கண்ட மகிழ்ச்சியில் கட்டிப்பிடித்தாள்.கொடியின் எடை திடீரென்று கூடியது ஒரு ஆணின் உடலை கட்டி பிடிப்பது போன்று தோன்றியது.அண்ணாந்து பார்த்தால் , அவரே தான்.இவளை இறுக்கமாக கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தார்.இவள் கடும் முயற்சி செய்து தன்னை விடுவிக்க நினைத்தாள்.ஒரு வழியாக வெற்றியும் கண்டாள்.வீட்டை நோக்கி ஓடினாள்.இப்பொதும் அந்த மனிதர் அங்கேயே நின்றுக் கொண்டிருந்தார்.இவளை பார்த்து கண் அடித்தார்.தன் அம்மாவை அழைத்தாள்.

"என்னடி கத்துற ?" என்று விரைந்து வந்தார்.

"யாரோ அங்க நிக்குறாங்க " என்று முல்லைக் கொடியைக் காட்டினாள்.

"லூசு மாதிரி உளறாத.அங்க யாரும் இல்ல ", என்று ராஜம் கடிந்து கொண்டார்.

"நீ உள்ள வா " என்று நிஷாவை அழைத்துச் சென்றார்.

திரும்பி பார்த்தால் அவர் இவளுக்கு டாட்டா காட்டினார்.மறுபடிப் பார்க்கும் போது மறைந்து விட்டார்.

இது நிஜமா கனவா இல்ல எதுவும் அமானுஷ்யமா என்று பயந்து நடுங்கினாள்.

ஏதோ கடவுளின் கிருபையால் தூங்கி எழுந்தாள்.எவ்வளவோ யோசித்தும் என்ன கனவு வந்தது என்று நினைவில் இல்லை.காலையில் எழுந்து வீட்டுக்கு வெளிய வந்து சோம்பல் முறித்தாள்.ஆள் நடமாட்டமே இல்லாத தெருவில் அங்கங்கு ஆட்கள் நின்று கொண்டு இருந்தார்கள் .ஆட்களின் தலை தெரிந்த உடனே வீட்டிற்குள் ஓடினாள்.

"நம்ம தெருவில ஏதும் விசேஷமோ !" என்று நினைத்து கொண்டாள்.

"நிஷாமா " என்று யாரோ அழைக்கும் சத்தம் கேட்டது.மிக்ஸி ஓடும் சத்தத்தில் ராஜத்திற்கு சரியாகக் கேட்கவில்லை.காலிங் பெல்லை அழுத்தும் சத்தம் கேட்டது.ராஜம் வெயியே சென்றுப் பார்த்தார்.

நிஷா பல் துலக்கி காபி அருந்தி கொண்டிருந்தாள்.

"யாருமா ?" என்று நிஷா கேட்டாள்.

பக்கத்து வீட்டு ஆன்ட்டி வந்தார்.

"என்னவாம் " என்று கேட்டாள் .

"பக்கத்து தெருல ஒரு பையன் தற்கொலை பண்ணிட்டான் "

நிஷாவிற்கு திடுக்கென்றது.

எல்லா பிரச்சனைக்கும் ஒரு முடிவு உண்டு என்ற சித்தாந்தத்தில் தீவிர நம்பிக்கை கொண்டவள் நிஷா.

"தற்கொலை செய்து கொள்வது முட்டாள்தனம் " என்று நிஷா ராஜத்திடம் கூறினாள் .

"அவனுக்கு என்ன பிரச்சனையோ " என்று ராஜம் பதில் அளித்தார்.நிஷா வேலைக்கு செல்ல ஆயத்தம் ஆனாள்.வழக்கமாக பக்கத்துத் தெரு வழியாக செல்லும் அவள்.இம்முறை மாற்று வழியாகச் சென்றாள்.

மாலை வீடு வந்து சேரும் போது ஏழு மணி ஆகி விட்டது.கை கால்களை கழுவி விட்டு உடை மாற்றி சோபாவில் அமர்ந்து டிவிப் பார்த்தாள்.

"அந்த பையனுக்கு ரொம்ப நாளாப் பொண்ணு பாத்தங்களாம்.ஆனா எதுவும் செட் ஆகலையாம்.அதனால தற்கொலை பண்ணிட்டானாம். பையன் பூ வியாபாரம் பண்ரானாம் " என்று ராஜம் பேச ஆரம்பித்தார்.

"எந்த பையன் ?" என்று நிஷா கேட்டாள்.

"பக்கத்து தெருல ஒரு பையன் தற்கொலை பண்ணிட்டான்ல அந்தப் பையன் "

ராஜம் விளக்கிய போது தான் நிஷாவிற்கு எல்லாம் புரிந்தது.வேலைப் பளுவின் காரணமாக காலையில் நடந்த விஷயங்கள் எல்லாம் மறந்து போனது.

"ஓ அப்படியா " என்றாள் நிஷா.

மறுநாள் நன்றாகவே மலர்ந்தது.

"நேத்து அந்த பையன் தற்கொலை பண்ணினது போலிஸ் கேஸ் ஆச்சு.கண்டிப்பா பேப்பர்ல வந்திருக்கும்" என்று ராஜம் கூறினார்.

செய்தித்தாளில் அப்படி எதுவும் செய்தி வந்துள்ளதா என்று நிஷா கவனமாக புரட்டிப் பார்த்தாள்.

ஒரு ஓரத்தில் திருமணம் ஆகாததால் இளைஞர் தற்கொலை என்ற செய்தி கண்ணில் பட்டது.அந்த இளைஞரின் பெயர் வாசன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.அந்த புகைப்படத்தை பார்த்த போது நிஷாவிற்கு தூக்கி வாரிப் போட்டது.தனது கனவில் அடிக்கடி வருவபவர் இந்த இளைஞன் தான் என்று எண்ணிய போது ஒரு வித பயம் மனதை தொற்றிக் கொண்டது.பூ வியாபரம் செய்ததால் ஒரு கூடை பூ கேட்டிருப்பாரோ என்ற ஐயமும் தோன்றியது.தோட்டத்திற்கு விரைந்தாள்.முல்லைக் கொடியைப் பார்த்தாள், அது காற்றில் மெல்ல அசைந்தாடியது.அந்த மனிதர் ஒரு முறை தெரிகிறாரா என்று நோக்கினாள். அவர் தெரியவில்லை.தன்னை அறியாமல் கண்களில் கண்ணீர் தாரைத் தாரையாகக் கொட்டியது.முல்லை கொடியை அருகில் சென்று பார்த்தாள்.ஒவ்வொரு கிளையாக ஆராய்ந்து பார்த்தப் போது, ஒரு கிளை முற்றிலுமாக வாடி இருந்தது.வாஞ்சையுடன் கொடியை கட்டி கொண்டாள்.திடீரென்று ஓர் ஆண் வாசனை காற்றில் கலந்தது.மேலே பார்த்தாள்.தலையில் பூக்கள் விழுந்தன.அதில் ஒரு மொட்டும் இருந்தது.

Stories you will love

X
Please Wait ...