JUNE 10th - JULY 10th
காலையில் கதிரவன் உதிக்கும் நேரம் கையில் காபி டம்ளருடன் பால்கனியில் வந்து அமர்ந்தாள் வசுந்தரா. வசுந்தராவுக்கு ஐம்பது வயது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள் அதையும் உடற்பயிற்சி, யோகா என பழக்கி ஆரோக்கியமாகவே வைத்து இருந்தாள்.
மாமியார் எழ எப்படியும் எட்டு மணிக்கு மேல் ஆகும், கணவர் வேலை விஷயமாக மதுரைக்குச் சென்றிருந்தார் நாளை தான் வருவார். மகனும் காலை ஷிப்ட் என்று அதிகாலையிலேயே வேலைக்குச் சென்று விட்டான்.
எனவே கிடைத்திருக்கும் அந்த நேரத்தை இயற்கையுடன் ஒன்றி கரைக்க நினைத்தாள், ஆனால் சில நிமிடத்திலேயே அதில் நிலைக்க முடியாமல் எண்ணம் நேற்று மாலை கணவன் சொல்லிவிட்டு சென்ற விஷயத்தில் போய் நின்றது.
‘அது எப்படி அவரே இப்படி ஒரு முடிவை எடுக்கலாம், இல்லை இதை இப்படியே விடக் கூடாது. நான் படும் கஷ்டம் என் மருமகளும் படக் கூடாது .மகன் வரட்டும் பேசி விடுவோம்’ மருமகள் என்றதும் பத்து நாட்களுக்கு முன்பு பெண் பார்த்தது நியாபகம் வந்தது.
ஒரு நட்சத்திர ஓட்டலில் வைத்து பெண் பார்க்கும் படலம், பார்த்த மாத்திரத்திலேயே அனைவருக்கும் பெண்ணைப் பிடித்து விட்டது.
பெற்றவர்கள் ஒருபுறம் பேச ஆரம்பிக்க பெண்ணும், மாப்பிள்ளையும் ஓரமாக இருந்த ஒரு டேபிளில் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்தப் பெண்ணின் நளினமும் கூடவே இருந்த கம்பீரமும் வசுந்தராவை வெகுவாக கவர்ந்தது.
‘அப்படிப்பட்ட பெண்ணை திருமணம் முடித்து வேலைக்குச் செல்ல வேண்டாம் என சொல்லி விட்டு வந்திருக்கிறார், இது சரியா? கூடவே கூடாது’ முடிவெடுத்தவள் மாமியார் எழுந்து வரும் சத்தம் கேட்கவும் இவளும் எழுந்து உள்ளே சென்றாள்.
மாமியாரும் இவளும் சாப்பிட்டு முடித்து உட்கார்ந்திருக்கும் போதும் மீண்டும் அதே நினைப்பு தான். அப்போது கணவர் காளிதாஸ் பெண் வீட்டில் எப்படி பேசி இருப்பார் என கற்பனையில் எண்ணிப் பார்த்தாள், “எங்கள் வீட்டிற்கு வந்தவுடன் உங்கள் பெண்ணை ராணி மாதிரி பார்த்துக் கொள்வோம், அதனால் வேலைக்கு போய் கஷ்டப்பட வேண்டாம் வீட்டிலேயே இருக்கட்டும்” நினைக்கையிலேயே நெஞ்சம் அசுவாரஸ்யமாக உணர்ந்தாள். ஏனென்றால் இதே போன்று தான் தங்களது திருமணத்தின் போதும் அவர் பேசியது நினைவிற்கு வந்தது.
வேலைக்காரி வந்து வேலையை முடித்து செல்கையில் தயங்கியபடி வந்து நின்றாள், “சொல்லு செல்வி”என்றாள் வசுந்தரா.
“வந்து என் பையன் பிளஸ் ஒன் படிக்கறது உங்களுக்கே தெரியும் இல்லக்கா, அதுக்கு ஏதோ நோட்டு புஸ்தகம் எல்லாம் வாங்கனுமாம் ஒரு ஐநூறு ரூபாய் தந்தீங்கன்னா நல்லா இருக்கும். எப்பையும் போல சம்பளத்துல புடிக்கோங்க”
பணம் எடுத்து வந்து நீட்டிக் கொண்டே கேட்டாள் வசுந்தரா, “பையன் எப்படிப் படிக்கிறான் செல்வி”
“ரொம்ப நல்லாப் படிக்கிறான் அக்கா, அவங்க டீச்சர் கூட அப்படி தான் சொல்றாங்க. எங்க ஊட்ல இந்த மனுஷன் மட்டும் குடிக்காம காசு சேத்து வெச்சாருன்னா எம் பையனை நல்லாப் படிக்க வைக்கலாம். ம்ஹூம்... ஒவ்வொரு தடவையும் இது மாதிரி யாருகிட்டயாவது கையேந்த அசிங்கமா தான் இருக்கு” என அங்காலாய்த்தாள் அவள்.
“படிப்புக்காகக் கேக்கறது ஒன்னும் தப்பில்லை செல்வி, அதுக்காக பையனோட படிப்பைக் கெடுத்துராதீங்க. படிப்புக்காகக் குடுக்கறதுக்கு ஐயா ஒன்னும் சொல்ல மாட்டாரு” கையில் காசு கிடைத்த நிம்மதியுடன் சென்றாள் வேலைக்காரி.
காலையில் வேலைக்காரி வந்தாள் என்றால் மதியம் அடுத்த வீட்டு மைதிலி வந்தாள், “வசு, ஒரு ஆயிரம் ரூபாய் இருந்தால் கொடேன் அடுத்த மாசம் திருப்பி கொடுத்திடறேன்”.
“ஏன் இன்னைக்கு வேலைக்குப் போகலையா மைதிலி?”
“அதையேன் கேக்குற வசு, ஒரு நாலு மாசத்துக்கு முன்ன ஆபீஸ்ல ஒருத்தர் சேலை கொண்டு வந்தார்னு நான் கூட ஒரு சேலை எடுத்தேன் இல்லை?”
“ஆமாம் பச்சையில வெள்ளை கலர் பூப்போட்ட சேலை”
“ஆங்... அதேதான். மாசம் ஐநூறு ரூபாய் இன்ஸ்டால்மெண்டில் தான் எடுத்தேன். போனமாசமும் என்னால் பணம் கொடுக்க முடியலை இந்த மாசமும் கொடுக்க முடியல, ஒருவாரமாக அந்த ஆள் கண்ணுல படாம மறைஞ்சி வரேன். இன்னைக்கு அதனால லீவே போட்டுட்டேன்னா பாரேன்” அவள் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாலும் வசுந்தராவிற்கு சிரிப்பு தான் வந்தது.
“நீ தான் கை நிறைய சம்பாதிக்கிறியே ஒரு ஆயிரம் ரூபாய் புரட்ட முடியலையா என்ன?”
“எங்க வசு, சம்பாதிக்கிறது தான் நானு, அதை வெச்சு செலவு செய்யறது என் வீட்டுக்காரரு தானே”.
அருகில் வந்து கிசுகிசுத்தாள் “உனக்கு தான் தெரியுமே அவருக்கு என்னை விட சம்பளம் குறைவு அதனால எனக்கு கர்வம் ஏறிடுமொன்னு அவருக்கு பயம். அதனால வீட்டு நிர்வாகம் முழுதும் அவர் தான் பாக்குறார். ஒரு சேலை வாங்கறதா இருந்தா கூட அவர்கிட்ட கெஞ்சனும். அந்த சேலையைப் பார்த்ததும் விடறதுக்கு மனசே வரலை வசு அதான் எடுத்துட்டேன்”
“அடுத்த மாசம் எனக்கு பிறந்த நாளுக்கு புடவை எடுக்க அவர் கொடுத்த பணம் இருக்கு அதை தரேன் மைதிலி, சீக்கிரம் கொடுத்திடு”
“நிச்சயம் சீக்கிரமே கொடுத்திடறேன் வசு” பணத்தை வாங்கியவள் சிறிது நேரம் அரட்டை அடித்து விட்டுச் சென்றாள்.
மாலையில் மகன், மாமியாருக்கு டீ கொடுத்து விட்டு தானும் ஒரு டம்ளரை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தாள். மகன் விதார்த்திடம் திரும்பி, “விது உன் கிட்ட ஒன்னு பேசணும்”
மகனுக்கு முந்தி மாமியார் முகம் திருப்பி என்ன என்பது போல் பார்த்தார். அதை சட்டை செய்யாமல் மகனின் முகத்தை ஏறிட்டாள் வசுந்தரா.
“சொல்லுங்கம்மா”
“நேத்து பெண் வீட்டுக்குப் போய் உங்க அப்பா பேசிட்டு வந்திருக்காரு”
“கல்யாண விஷயமா தானே அப்பா போன் பண்ணினார் அம்மா”
இதுக்கா இந்தப் பீடிகை என நினைத்து மாமியார் முகம் திருப்பினார்.
“அது மட்டும் இல்லை” வசுந்தரா தொடர்ந்தாள்.
நெற்றி புருவம் சுருங்க “வேற என்னம்மா ?”
“கல்யாணத்துக்கு அப்புறம் பெண் வேலைக்குப் போக வேண்டாம்னு சொல்லிட்டு வந்திருக்கார்”
“அப்படியா?” அவன் சாதாரணமாகச் சொல்ல மாமியார் கோபத்துடன் கேட்டார், “அதனால் என்ன இப்போ, கொழந்த கஷ்டப்படாம வீட்டுல நிம்மதியா இருக்கட்டுமேன்னு நினைச்சு இருப்பான் இதைப் போய் பெருசு பண்ணிட்டு”
“படிச்சப் படிப்பு வேஸ்ட் ஆகுது இல்லையா விது” மகனிடம் எடுத்துரைத்தாள் வசுந்தரா.
“ஏன் வேஸ்டாகப் போகுது அவங்க பிள்ளைகளுக்குப் படிப்பு சொல்லிக் கொடுக்க உபயோகமா இருக்குமே, அது போதாதா” சிடுசிடுத்தார் மாமியார்.
“அந்தப் பொண்ணு கையில நாலு காசு வேண்டாமா டா” ஆத்திரம் வந்தாலும் அடக்கிக் கொண்டு அமைதியாகவே பேசினாள் வசுந்தரா.
“உன்னை எப்படி என் மகன் ராணி மாதிரி வச்சு இருக்கானோ அதே மாதிரி என பேரனும் அவன் பொண்டாட்டிய ராணி மாதிரி வெச்சுக்குவான்”
“என்னை மாதிரி தான் வேண்டாங்கறேன்” அழுத்தமாகச் சொன்ன வசுந்தராவிடம் எகிறினார் மாமியார்.
“இப்ப உனக்கு என்ன குறைச்சல் வந்துடுச்சு , வீட்டுக்கு வேணுங்கறதுல இருந்து உனக்கு தேவையானது வரை அவன் நல்லா தானே செய்யறான். நீயும் ராணி மாதிரிதானே இருக்க, வேற என்ன குறை உனக்கு. என் மகனைக் குறை சொல்ற வேலை எல்லாம் வெச்சுக்காத”
இதற்கு மேல் விட்டால் சண்டை மூண்டு விடுமோ என பயந்தான் விதார்த், “அம்மா என்னோட துணிகள் சேர்ந்து போச்சு கொஞ்சம் மிஷின்லப் போடறீங்களா?” பேச்சை மாற்றியவன் தன் தாயிடம் அமைதியாக இருக்கச் சொல்லி சைகைச் செய்தான்.
ஆறு மணிக்கு மேல் டிவி முன் உட்கார்ந்தால் பாட்டி எல்லா சீரியல்களும் முடியும் வரை எழுந்துகொள்ள மாட்டாள் என்பது தெரிந்து, மேலே துணி காயப்போடப் போன அம்மாவுடன் தானும் சென்றான் விதார்த்.
“அம்மா இப்ப சொல்லுங்க என்ன விஷயம்?”
“உங்க அப்பா அந்தப் பெண்ணை வேலைக்குப் போக வேண்டாம்னு சொல்றது சரியா விது?”
“அவங்க வீட்டுல என்ன சொல்றாங்க ஏதாவது பிரச்சினையா அம்மா, வேலைக்குப் போய்தான் ஆகணும்னு சொல்றாங்களா?”
சற்று நேரம் மகனை உற்று நோக்கிய வசுந்தரா “அவங்க சொல்றது பிரச்சினை இல்லை விது. நான் அந்தப் பெண் வேலைக்குப் போகட்டும்னு சொல்கிறேன்”
“எதனால வேலைக்குப் போயே ஆகணும்னு சொல்றீங்க”
“நான் படர வேதனை அவளுக்கும் வர வேண்டாம்னு நினைக்கிறேன்”
“அப்பயும் இதையே தான் சொன்னீங்க அப்படி என்ன தான்ம்மா உங்க நிலைமை. எதுவும் மோசமா எனக்கு ஒன்னும் தெரியலியே”
“மேலோட்டமாகப் பார்த்தால் நான் சொல்வது பெரிய விஷயமாகத் தெரியாது விது, மனதிற்குள் சென்று ஆழமாகப் பார்த்தால் தான் புரியும்”
“என்னம்மாப் பீடிகை எல்லாம் பலமா இருக்கே” என சிரித்தான் விதார்த்.
“இது பெரிய விஷயம் தான் ஆனால் யாரும் இதை பெரிய விஷயமாப் பாக்கறது இல்லை விது கண்ணா” அம்மா முக்கியமான விஷயங்கள் பேசும் போது இதுபோல் கண்ணா போட்டு பேசுவது விதுவுக்கு நன்றாகத் தெரியும் எனவே கவனமாகக் கேட்க ஆரம்பித்தான்.
“உங்க அப்பா என்னை எப்படி வெச்சு இருக்கறதா அவரு சொல்வாரு”
“ராணி மாதிரி”
“அதோட அர்த்தம் என்ன?”
“உங்களுக்கு வேணுங்கற எல்லாத்தையும் வாங்கிக் கொடுத்து எந்த குறையும் இல்லாமல் நல்லா பாத்துக்க்றதைத்தான் அப்படி சொல்றார்”
“சரியாச் சொன்ன, எனக்கு வேணுங்கறதை வாங்கிக் கொடுத்து தான், எனக்கு வேணுங்கறதை நானா வாங்கிக்க முடியாது இல்லையா ?”
“என்னம்மா சொல்றீங்க உங்களுக்குத் தேவையானதை அப்பா தானே வாங்கிக் கொடுக்கணும்”
“ஏன் அவர் கொடுக்கணும்”
“அவர் தானே சம்பாதிக்கறார் அப்ப அவர் தானே கொடுக்க முடியும்”
“ம்.. புரியுதா அவர் சம்பாதிக்கறார் அதனால அவர் எப்படி செலவு செய்யனும்னு நினைக்கிறாரோ அப்படி அவர் செலவு செய்ய முடியும். நான் வேலைக்கு போகவில்லை அதனால எனக்கு தேவையானதை வாங்க நான் அடுத்தவரை தான் நாட வேண்டும் இல்லையா ?”
“இது மாதிரி ஒருநிலை தான் என் மருமகளுக்கும் வர வேண்டாம்னு நினைக்கிறேன்”
“அப்பா சம்பாதித்தாலும் அதை வாங்கி முழு வீட்டு நிர்வாகத்தையும் நீங்க தானேப் பாக்குறீங்க”
இன்னும் மகனுக்கு சரியாக விளங்கவில்லை என்பதை உணர்ந்த வசுந்தரா, “சரிப்பா உனக்கு புரியும் படியாகச் சொல்றேன். உங்க கம்பனியில் கேஷியர் இருக்கிறார் இல்லையா ?”
“ஆமாம்”
“அவரது வேலை என்ன?”
“கம்பனியில் கொடுக்கறப் பணத்தை சரியான வகையில் கையாள வேண்டும்”
“அவசரத்துக்குன்னு அவரது சொந்த தேவைக்குக் கொஞ்சம் பணம் எடுத்தால் என்ன ஆகும்”
“ஐயோ, புடிச்சி ஜெயில்லப் போடுவாங்க ”
“அப்படி இருக்கும் போது வீட்டை நிர்வகிக்க தானே உங்க அப்பா எனக்கு பணத்தைக் கொடுக்கிறார் அதை நான் என் தனிப்பட்டச் செலவிற்கு எப்படி பயன்படுத்திக்க முடியும்”
இதைக் கேட்டதும் மகன் அதிர்ந்தான், “என்னம்மா இப்படி சொல்லிட்டீங்க, உங்களுக்கு என்ன வேணும் இப்பச் சொல்லுங்க நான் வாங்கித் தரேன்”
“ஆமாம் இதுவரை உங்க அப்பாவின் கையை எதிர்பார்த்து இருந்தேன், உன் அப்பாவிற்கு பிறகு உன் கையை தானே நான் எதிர்பார்த்து இருக்க வேண்டும் அது தானே பெண்களின் தலைவிதி” அம்மாவின் குரல் கம்மியது கண்டு பதில் பேசமுடியாமல் விக்கித்து நின்றான் விதார்த்.
“நான் மட்டும் இல்லை விது கண்ணா, போன வருஷம் உங்க கம்பனியில ஏதோ கணக்கெடுப்புல கிடைச்ச விஷயம்னு சொன்னியே, இந்தியாவுல 2019ல் எடுத்த கணக்குப்படி 21% சதவீத பெண்கள் தான் வேலைக்குப் போறாங்கன்னு, மிச்சம் இருக்கற பெருவாரியானப் பெண்களோட நிலை இது தான்”
பேச்சற்று போய் இருந்த மகனது கைகளைப் பிடித்துக் கொண்டு பேசினாள் வசுந்தரா, “இப்போ உன் நண்பனோட கலியாணம் வருது அவனுக்கு கிப்ட் வாங்கிக் கொடுக்கணும்னா நீ யாரைக் கேட்கணும்”
“யாரையும் கேட்க வேண்டாம் அம்மா, அவன் எனக்கு எந்த அளவிற்கு முக்கியமான நண்பனோ அதற்கு ஏற்றார் போல நானே செய்து விடுவேன்”
“ஆனால் நான் என்னோட பாசமிகு அண்ணன் மகளுக்கு செய்வது என்றாலும் கூட உன் அப்பாவைக் கேட்டு அதுவும் அவர் எவ்வளவு பட்ஜெட் சொல்கிறாரோ அந்த அளவிற்கு மட்டும் தான் வாங்க முடியும். நான் உடல்நிலை சரியில்லாமல் அண்ணன் வீட்டிற்கு செல்லும் போது எல்லாம் முகம் சுழிக்காமல் என்னைக் கவனித்துக் கொள்ளும் அண்ணியின் மேல் இருக்கும் பாசத்தால் அவர் மகளுக்குப் பெரிதாகச் செய்ய நினைத்தால் அது முடியாது”
“அவங்களுக்கு எதுவும் செய்ய முடியலைன்னு தான் நீங்க இப்படிப் பேசறீங்களா?”
“இப்படி தான் தப்பாப் புரிஞ்சுக்க கூடாது, அவங்களுக்குச் செய்யறதுப் பிரச்சினை இல்லை என் மனம் போல என்னால் சுதந்திரமாகச் செலவு செய்ய முடியவில்லை, காரணம் நான் சம்பாதிக்கவில்லை என் கையில் காசும் இல்லை. அடிமைத்தனத்தின் வெளிப்பாடான இந்த வாழ்க்கை முறை எனக்கு அலுப்பைத் தான் தருது கண்ணா”
“எனக்கு ரொம்ப நாளா வீணை கத்துக்கனும்னு ஆசை ஆனால் அதை கேட்டால் இந்த வயசில் அதக் கத்துக்கிட்டு என்ன செய்யப்போறே என்கிறார் உன் அப்பா, ஆனால் அவர் ஆறு மாதம் முன்பு வெத்து கவுரவத்திற்காகத் தெரியாத ஸ்நூகர் கிளப்பில் சென்று சேர்ந்தார். காரணம் அவர் சம்பாதிக்கிறார்”
“இந்த நிலையில் இருக்கும் பெண்கள் தான் இதிலிருந்து வெளிவர தெரியாமல் தவறுகள் செய்கிறார்கள், ஆனால் அதையும் இந்த ஆண் சமூகம் பெண்கள் மேல் தான் பழி போடுகிறது”
பெருமூச்சு ஒன்றை விட்ட வசுந்தரா மேலும் தொடர்ந்தாள், “ஆண்கள் மட்டும் தான் இங்கே அவர்கள் இஷ்டத்திற்கு வாழ வந்திருக்கிறர்களா? வேலைக்காரியின் கணவன் போல வீட்டைக் கவனிக்காமல் பலர், மைதிலி ஆண்டியோட கணவர் போல வேலைக்குச செல்லும் பெண்ணாக இருந்தாலும் அவளது கையில் பணத்தைக் கொடுக்காமல் மனைவியை அடிமைத்தனத்தோடு வைத்திருக்கும் சிலர். பெண்கள் என்றுதான் எங்கள் இஷ்டப்படி வாழ்வது”
“இதை எல்லாம் நீங்க அப்பாகிட்ட பேசி இருக்கலாம் இல்லையா அம்மா ”
“கேட்டேன், இரண்டு மூன்று வருடங்கள் முன்பு வெளியில கூட சிலர் பேசினாங்களே குடும்பத் தலைவிகளுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று அது எனக்கு சரி எனப் பட்டது அதனால் உன் அப்பாவிடம் கேட்டேன், அதற்கு அவர்....” பேச்சைப் பாதியில் நிப்பாட்டிய வசுந்தராவின் கண்கள் கலங்கியது.
“ஐயோ! என்னம்மா ஆச்சு” பதறினான் மகன்.
“இப்பயே என்னை மதிக்காமல் இப்படி கேள்விக் கேட்குற, கையில் பணமும் கொடுத்தால் பிறகு என்னை எப்படி மதிப்ப, உங்களை எல்லாம் இந்த அளவிற்கு தான் வைத்திருக்க வேண்டும் என கேவலமாகச் சொல்லிவிட்டு சென்றார். அப்படின்னா ராணி மாதிரி பாத்துக்கறேன்னு இவ்வளவு நாள் சொன்னதன் அர்த்தம் என்ன? சுதந்திரமாக எங்கும் செல்லமுடியாமல் ராணி மாதிரி அந்தப்புரத்தில் வைத்து அடிமைப்படுத்துவதா?”
அன்னையின் மனம் இப்போது நன்றாகப் புரிய ஆதரவாகத் தோளில் சாய்த்துக் கொண்டான் விதார்த்.
“இனிமேலாவது பெண்களையும் ஒரு மனுஷியாகப் பாருங்க விது கண்ணா, உன் பாட்டி மாதிரி ஆட்களுக்கு எல்லாம் சொல்லிப் புரிய வைக்க முடியாது, ஆனால் இனி வரும் காலத்தில் சிறியவர்களான நீங்களாவது இதை மாற்றுங்கள். அதனால் தான் உன்னிடம் இவ்வளவு தூரம் பேசிக் கொண்டு இருக்கிறேன்”
“கிளியின் இறக்கையை முறித்து வீட்டில் வைத்திருப்பது போல் பெண்கள் உங்க காலடியிலேயே கிடக்கணும்னு ஏன் நினைக்கிறீங்க. அவளும் சுதந்திரமாகப் பறக்கட்டுமே. எவ்வளவு ஆனந்தமாய் இருப்பாள் அவள்” இதைச் சொல்லும் போதே வசுந்தராவின் கண்கள் பளிச்சிட்டது.
தன் அன்னையை எண்ணி மிகவும் பெருமைப்பட்டான் விதார்த், ‘தன்னைப் பற்றி மட்டும் அல்லாமல் பெண்கள் அனைவரின் முன்னேற்றத்தைப் பற்றி பேசும் அம்மா அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைக்க மாட்டார்கள்’ என நினைத்தவன் அம்மாவை அணைத்து ஆறுதல் படுத்தினான்.
திடீரென நினைவு வந்தவளாய், “உங்க அப்பா மாதிரி நீயும் மருமகளை ராணி மாதிரி வாழ வைப்பேன்னு சொல்ல மாட்டியே?” ஏக்கத்தோடு தன் மகனின் முகத்தை ஏறிட்டாள்.
“ராணி மாதிரி இல்லைமா ராணியாகவே வாழ வைக்கிறேன் அவளை மட்டும் இல்லை உங்களையும் சேர்த்து தான்” கண்ணடித்த மகனை ஆனந்தக் கண்ணீரோடுப் பார்த்தாள் வசுந்தரா.
#36
Current Rank
60,900
Points
Reader Points 10,900
Editor Points : 50,000
220 readers have supported this story
Ratings & Reviews 5 (220 Ratings)
kanirajank
kgayathrikanirajan
jayapriyakanirajan
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10Points
20Points
30Points
40Points
50Points