JUNE 10th - JULY 10th
கரும்பலகை கணக்குகள்
ஒரு தினம் துவங்குவது எல்லோருக்கும் ஒருபோலவா என்றால் இல்லவே இல்லை எனலாம் போல. புலரிகள் சில இடங்களில் மட்டும் புத்துணர்வுடன் குதூகலமாய் புலர்வதாய் தோன்றும். மொடமொடத்த காட்டன் புடவைகளில் ஆசிரியைகளும் வண்ண வண்ண பட்டாம் பூச்சிகளாய் மாணவியரும் மிளிர்ந்தெழுந்த அப்படி ஒரு காலையில் அது ஒரு புகழ் பெற்ற கல்லூரி வளாகம். அனைத்து வகுப்பறைகளிலும் காலை வகுப்புகள் துவங்கி ஒரு அரை மணி நேரம் கடந்திருக்கும்.
“ஒரு சின்ன பிள்ளையார் சிலை செய்யணும் ..என்ன செய்வீங்க? ஒரு பெரிய கற்பாறையை சிறிது சிறிதாக செதுக்கி நினைத்த வடிவில் ஒரு சிறிய சிலை செய்யலாம் அல்லது சிறிது களிமண் துகள்களை சேர்த்து குழைத்தெடுத்து ஒரு பெரிய சிலை செய்யலாம். முன்னது மேலிருந்து கீழாக (டாப் டவுன் ) பின்னது கீழிருந்து மேலாக (பாட்டம் அப் ) இரு வகை முறைமைகள்!எப்பொழுதும் மேலிருந்து கீழாகத்தான் என்றில்லை. கீழிருந்து மேலாக ஒரு தனிமத்தின் மூலக்கூற்றையும், அணுவையும் முறையாகக் கையாள சொன்ன முறைமையில் தான் நானோ தொழில்நுட்ப எழுச்சியே வந்தது”
இப்படி விளக்கி க்கொண்டே மாணவிகளின் விழிகளோடு விழி மலர்த்தி வகுப்பறையை ஒரு வலம் வந்தாள் கண்மணி.
இன்று கணினியும் மென்பொருளுமாய் இணையவழி க்கல்வி என எங்கோ காலம் போகிற போதிலும் கற்றலும் கற்பித்தலும் விஸ்வரூபமாய் வியாபித்து இருப்பதென்னவோ அந்த கரும்பலகை துகள்கள் நிறைந்த வகுப்பறைகளில் தான்! அந்த வகுப்பறைகளுக்குள் வீசுகிற காற்றில் சரஸ்வதியின் ஒரு பிரத்தேயக கையொப்பம் இருப்பதாய் தோன்றும் கண்மணிக்கு.
கண்மணி ஒரு கல்லூரிப்பேராசிரியை. முதுகலை மாணவிகளுடனான தன் வகுப்புகளை மிக நேசித்து இயன்ற வரை தன் முழு பங்களிப்பை அளிக்க முயல்பவள்.
இன்று தன உரையை துவங்கிய மூன்று நிமிடங்களில் சரியாய் சிந்துவில் நிலைகொண்டது பார்வை. “ஆஹா நல்லவேளை இன்று வந்துவிட்டாள், இன்று கேட்டே ஆகவேண்டும் அவளிடம்” என்று நினைத்தபடியே உரை தொடர்ந்தாள் கண்மணி.
சிந்து இளங்கலை படிப்பிலிருந்து இக்கல்லூரியில் படிப்பவள். இது ஐந்தாவது வருடம். நன்கு படிக்க கூடிய மாணவி. நல்ல கோதுமை நிறம், கொடி போன்ற உடல்வாகு, அதற்கேற்றாற் போல் சிக்கென நேர்த்தியான குர்தி ஜீன்ஸ் அணிந்து வருவாள். அழகாய் நீண்ட மெல்லிய விரல்களில் நகப்பூச்சும் புருவங்களை சீர் செய்தும் இன்றைய நவீன மாணவி அவள் என்றால் மிகையாகாது. பெண்பிள்ளைகள் எப்படி பார்த்தாலும் அழகு என்று தோன்றும் கண்மணிக்கு. அதிலும் முத்தாய்ப்பாய் நீண்ட கரு கரு கூந்தல் இடை தாண்டி தோகையென கிடக்கும் அழகுப்பெண் சிந்து! புறத்தோற்றம் போகட்டும் படிப்பிலும் பிற காரியங்களிலும் அப்படி ஒரு நேர்த்தி அவளிடம். முத்து முத்தான கையெழுத்தில் அவள் எடுக்கிற வகுப்பு குறிப்புகளிலும் வகுப்புகளின் நடுவே அவள் கேட்கிற கேள்விகளும் அவள் ஒரு எடுத்துக்காட்டு மாணவியே தான். அவளைத்தான் இரு தினங்களாக காணாது தேடினாள் கண்மணி.
அன்றொரு நாள் ஸ்டாப்ரூமில் தன் சக பேராசிரியர்கள் இருவர் பேசியதை இவள் கேட்டிருந்தாள்.
“இந்த சிந்து வர வர ஒன்னும் படிக்கிற மாதிரி இல்லல்ல ..ஆமா அன்னிக்கு பார்க்கிறேன் கிளாஸ்ல கவனமும் இல்ல. இவ மினுக்கிட்டு சிக்குன்னு வரும்போதே தெரியும் “ இப்படி வார்த்தைகள் கேட்டதுமே சட்டென ஏதோ போல் ஆயிற்று. வார்த்தைகள்.. வெறும் வார்த்தைகளா என்ன ? அவை தரும் வலியில் வார்த்தைகளை விட மேலான
ஆயுதம் இருக்க க்கூடுமா என்ன? உள்ளுக்குள் மூண்ட தீக்கனல் மறைத்து வகுப்பு ஆசிரியையாய் அவளை சிறிது கண்காணிப்போம் என்று தோன்றிற்று கண்மணிக்கு.
ஒரு நாள் அவள் ஏதோ ஒரு மாணவனுடன் அதி தீவிர முக பாவனையில் பேசிக்கொண்டிருக்க கண்டாள். பின்னொரு நாள் முகம் அழுதழுது வீங்கியதாக ஒரு வகுப்பில். இப்பொழுதெல்லாம் சிரிக்க மறந்தவளாய் ஒரு தோற்றம்!
மழை வருமோவென அண்ணாந்து பார்க்கையில் முதல் சொட்டு விழுவதை போல் தன் கணிப்புகள் பல மிகச்சரியாய் பலித்த நிச்சயத்தில் பல முன்முடிவுகள் எடுப்பவள் கண்மணி. இப்பொழுதும் அப்படியே! சிந்து ஏதோ காதல் கசமுசாவில் விழுந்து இப்படி இலக்கற்று போய் தெரிகிறாள் என மனம் சொன்னது .
“காதல் ஒன்றும் தவறு இல்லையே! நல்ல தோழமையும் ஒத்த மனநிலையும் அமைய பெற்ற பிள்ளைகள் இடையே உயர் கல்வியில் காதல் முகிழ்வது பிழையா என்ன ? ஆனாலும் அது ஒரு கோக்குமாக்கான உணர்வு! துடிக்கும் இதயம் கையில் தந்து உருட்டி பார்க்க த்தரும் உணர்வாச்சே..ஏதேனும் உணர்ச்சி பிரவாகத்தில் ஒன்னு கிடக்க ஒண்ணு ஆச்சுன்னா ... “இப்படி நினைத்தே துவண்டு போகிறாள் இப்பொழுது!
அதற்கு ஏற்றார் போல் வகுப்பிலும் அவ்வளவு சிரத்தையாய் கேள்விகள் கேட்டு ஆர்வமாய் இருப்பவள் ஒரு இமை விலக்கா பார்வை மட்டும் தருகிறாள். கண்கள் கீழ் கருவளையம் வேறு. இரவு முழுவது மொபைல் பார்ப்பாளோ என்னமோ ! அவளை அணுகி ஆலோசனை ஏதும் கூறப்போக ஈகோ காயப்பட்டு இன்னும் விலகி ப்போவாளோ என்ற பயம் வேறு.
இப்படி இரு மாத சஞ்சலத்தில் தான் கடந்த இரு தினங்கள் விடுப்பு வேறு .
“என்ன இப்படி ஆகிவிட்டது இந்த பொண்ணு” என்று நினைத்தபொழுது பெல்லும் அடிக்க “ஓகே ஸ்டுடென்ட்ஸ், நாளை பாப்போம்” என்றவாறே "சிந்து, வாங்க என் கூட" என்று கான்டீன் கூட்டி ப்போனாள் கண்மணி.
கேண்டீன் சென்று அமர்ந்து “என்னமா” என்றது தான் தாமதம் ....”மேம்…” என்றபடியே கதறி சாய்ந்தாள் சிந்து. “என்ன ஆச்சு, என்னம்மா ஆச்சு?” என்று பதறி தோள் தட்ட சிந்து கூறத்துவங்கினாள்
அவள் கல்லூரி படிப்பின் துவக்கத்தில் இருந்தே பிள்ளைகளுக்கு எட்டாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ட்டூஷன் எடுப்பதாகவும் அது தகப்பனில்லாத தனக்கும் தன் தங்கைக்கும் படிப்பிற்கு மிக உதவியாக இருந்ததையும் , அப்படி எடுத்த வருமானத்தில் த்தான் முதுகலை சேர்ந்ததையும், இரு மாதம் முன்பு அவள் தங்கை தன் 12ம் வகுப்பு தோழனுடன் காதல் என்ற பெயரில் எங்கோ சென்றதையும், அதன் பேரில் வந்த அனைத்து துன்ப நிகழ்வுகளும் அவள் விவரிக்க வ்விவரிக்க தட்டாமலை சுற்றியது கண்மணிக்கு.
உள்ளுக்குள் எதுவோ உடைப்பெடுத்து கரைபுரண்டது . “தான் நினைத்ததென்ன? இரு மாத காலமாக இவளை குறித்தான அனுமானங்கள் என்ன? நடந்ததென்ன?”
சிந்து தொடர்ந்தாள். இரு தினங்களுக்கு முன் பக்கத்தில் நிலக்கோட்டையில் இருவரும் தங்கி இருப்பதையும் தன் வகுப்பு தோழன் மூலமாய் அதை கண்டுபிடித்ததையும், தங்கை கர்ப்பமாய் இருப்பதையும் தன் வீட்டில் பேசி அவளை வீட்டிற்கு அழைத்து நல்ல விதமாய் நேற்று திருமணம் நடத்தியதையும் கூறி
"மேம் நான் எவ்வளவு கனவு கொண்டிருந்தேன் தெரியுமா அவளை பற்றி...எல்லாம் போச்சே...இப்போ இருவரையும் படிக்க சொல்லிருக்கேன் பார்ப்போம் எப்படியும் இன்னும் ஆறு மாசத்துல ஒரு வேலையில நான் உக்கார்ந்துட்டா..அப்புறம் பார்த்துக்கலாம்" என்றாள்.
கண்மணிக்கு கண் முன் ஒரு சிறு பெண் மலை போல் உயர்ந்து நிற்கிறதை கண்டாள். வயதில் எல்லாம் என்ன ? கரம் பற்றி ஒற்றிக்கொள்ள தோன்றியது. ஆனாலும் தன் அனுமானங்களை நினைத்து தன் கால் கீழ் தரை பிளந்து உள்ளே போய்விட மாட்டோமா என்றிருந்தது. அத்தனை நுட்பமாய் தோற்ற மாற்றங்களை வைத்து தான் கணித்த கணிப்பென்ன ? டாப் டவுன் , பாட்டம் அப் அனைத்து முறைமைகளை கற்று ஆனால் இன்னும் மனங்கள் கற்று தேறாத வெறும் ஏட்டு சுரைக்காயாய் சித்தம் கலங்கி போக சிந்துவிடம் மன்னிப்பை மனதுள் யாசித்தாள் கண்மணி.
ஒரு பத்து நிமிடம் ஆசான் யார் மாணவி யாரென, யார் யாரை தேற்றினார் என கூறமுடியாதபடி கண்ணீரில் கழிய மனதின் அழுத்தம் அனைத்தும் கரைந்ததாய் சிந்து மென்னகை ஒன்று தர கண்மணிக்குள்ளும் மெல்ல மெல்ல ஒரு இதம் பரவிற்று.
நொடி நொடியாய் கற்று தருவது தானே இந்த வாழ்க்கை !
நிழல்கள் அல்ல நிஜம், நிஜம் அணுக இன்னும் ஆத்மார்த்தமான அணுகுமுறை கற்று தேற மனதுள் உறுதி பூண்டு "இரு தேநீர்" என கூவிச் சொன்னாள்.
தூரத்தெங்கோ மழை போல ஒரு ஈரக்காற்று இன்னும் இதமாய் இருவரையும் தழுவிப்போனது
#676
57,700
200
: 57,500
4
5 (4 )
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை அடுத்த நொடி ஆச்சரியம் ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
onlineclassesancy2020
dbenjamin30011982
Good one!
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50