பயமோ பயம்

உண்மைக் கதைகள்
4.7 out of 5 (40 )

பயமோ பயம்

என் பெயர் சரவணன். நான் ஒரு காலத்துல ரொம்ப தைரியமான ஆளாத்தான் இருந்தேன். எங்க அம்மா சொல்லுவாங்க, நான் பிறந்தப்போ கூட அழுகவே இல்லைனு டாக்டர் எல்லாம் கூட என்னைக் கைல வெச்சுட்டு பயந்தங்களாம். அப்பறம், என்ன தல கீழாத் தொங்கவிட்டு, என் முதுகுல மெதுவாத் தட்டி, ரொம்ப கஷ்டப்படுத்தி என்ன அழவெச்சாங்களாம். அவ்ளோ தைரியமான ஆளு நானு பாத்துக்கங்க.

நான் பிறந்தப்போ வெயிட் கம்மியாத் தான் இருப்பனாம். அப்போ, என்னைப் பெத்த எங்க அம்மா, அஞ்சு புள்ள பெத்த எங்க அம்முச்சி எல்லாருமே கூட என்னைத் தூக்கப் பயப்படுவாங்களாம்.

மேல சொன்னதெல்லாம் ஒரு சாம்பிள் தான். ஒரு சின்ன கொழந்த குப்புற விழுக கொறஞ்சது எவ்வளோ நாள் ஆகும்? சொல்லுங்க. மூணு மாசத்துல இருந்து அஞ்சு மாசம் வரைக்கும் ஆகும் சரிதானே. ஆனா நானு, பிறந்த எட்டாவது நாளே முதல் தடவை குப்புற விழுந்துட்டனாம். அவ்வளோ தைரியம் எனக்கு. குப்புற மட்டும் நான் சீக்கிரம் விழுல, எட்டாம் மாசத் தொடக்கத்துலேயே எட்டு வெச்சு நடக்க ஆரம்பிச்சுட்டனாம்.

இப்படி தைரியமா இருந்த கதையை ஏன்டா இங்க சொல்லிட்டு இருக்க? அப்டினு தான கேக்குறீங்க. அதுக்கு ஒரு காரணம் இருக்குங்க.

எனக்கு அப்போ ஒரு வயசு இருக்கும். எங்க அம்மா, அவங்க அண்ணன் வீட்டுக்கு, அதான் எங்க தாய்மாமா வீட்டுக்கு என்னைத் தூக்கிட்டு போனாங்களாம். போறப்போ, எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா, போயிட்டுத் திருப்பி வரப்போ, எங்க ஊரு வர ஒரு கிலோமீட்டர் இருக்கும்போது எங்க அம்மா இறங்கலாம்னு என்ன தூக்கிட்டு சீட்ல இருந்து எந்திரிக்கறதுக்கும், ரோடு கிராஸ் பண்ண காட்டுப் பன்றி ஒன்னு குறுக்க வரதுக்கும் சரியாய் இருந்துச்சாம்.

அந்த பஸ் டிரைவர் ரொம்ப நல்ல மாமா தான். என்ன? அந்தப் பன்றியைக் காப்பாத்த அவரு போட்ட பிரேக்குல நானும், எங்க அம்மாவும் வெளியே படிக்கட்டுல உருண்டு போயி ஓடுற பஸ்ல இருந்து கீழே விழுந்துட்டோம்.

என்ன கேக்குற உங்களுக்கே பயமா இருக்கா? பயமா இருக்கல்ல எனக்கும் அப்டித்தான் இருந்து. உண்மைய சொல்லப் போன நான் முதல் தடவை என் வாழ்க்கையில அப்போ தான் பயந்தேன். அப்புறம், எங்க ரெண்டு போரையும் கூட்டிட்டுப் போயி ஆஸ்பத்திரில சேத்துனாங்களாம்.

அந்த ஆக்சிடெண்ட்ல எங்க அம்மாவுக்கு முதுகுலேயும், எனக்கு மண்டையிலேயும் சின்ன அடிதான். சீக்கிரமே ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்குத் திரும்பி வந்துட்டோம். அந்த ஆக்சிடெண்டுக்கு அப்புறம் எங்க அம்மா என்ன நெனச்சு ரொம்ப பயந்துட்டாங்க. அதுக்கப்புறம் தான் என் வாழ்க்கையில பயம் அப்டிங்குற நிழல் என்னைத் தொடர ஆரம்பிச்சுது.

அங்க போகாத, இங்க போகாத, வேகமா ஓடாத, அத சாப்பிடாத, இத சாப்பிடாத, தண்ணிகிட்ட போகாத, பதவலுக்குள்ள போகாத, வாய்க்காலுக்குக் குளிக்கப் போகாத, ரோடு தனியா கிராஸ் பண்ணாத அப்படி, இப்டினு ஆயிரத்தெட்டு ரூல்ஸ் போட்டாங்க என்னைப் பெத்த எங்க அம்மா.

அப்போ ஆரம்பிச்சது எனக்குள்ள பயம். நீங்க கேக்கலாம்? உங்க அம்மா சொன்ன உனக்கு எங்க போச்சு புத்தி. நீ தைரியமா இருக்க வேண்டியது தானேனு. அதற்கும் ஒரு உதாரணம் சொல்றேன் கேளுங்க.

அப்போ எனக்கொரு எட்டு வயசு இருக்கும். எங்க வீட்ல இருந்து ஒரு கிலோமீட்டர் தள்ளி இருந்துச்சு அந்த மேட்டுக் காடு. எங்க ஊர்ல இருக்குற எல்லாப் பெரிய அண்ணன்களும் அந்தக் காட்டுல தான் போயி கிரிக்கெட் விளையாடுவாங்க. நானும் எத்தன நாள் தான் வீட்டுக்குப் பக்கத்துல இருக்குற குறுகிய மண்ணு ரோட்டுல பயந்து, பயந்து கிரிக்கெட் விளையாடறதுன்னு, அந்தக் காட்டுல விளையாட, இல்ல இல்ல எப்படிப் பெரிய அண்ணனுங்க கிரிக்கெட் விளையாடுறாங்கன்னு பார்க்கப் போனேன்.

என் கூட வந்த என் பிரண்டு கொஞ்ச நேரத்திலயே வீட்டுக்குப் போலாம்னு கூப்பிட்டான். ஆனா, எனக்குப் போக இஷ்டம் இல்ல. நீ போடானு சொல்லிட்டேன். அன்னைக்கு சாயந்தரம் வரைக்கும் சாப்டாமக் கொள்ளாம அங்கேயே உட்கார்ந்து அந்த அண்ணன் கூட்டம் விளையாடுறதப் பார்த்துச் சந்தோசப்பட்டேன். பையனக் காணம்னு அங்க இங்கனு தேடி, என் பிரண்ட் வீட்ல நான் எங்க இருக்கனு கேட்டுட்டுக் காட்டுக்கே வந்துருச்சு எங்க அம்மா.

அப்புறம் என்ன சொல்றதுக்கு இருக்கு, அன்னைக்கு குச்சி பிஞ்சு போகுற அளவுக்கு அடி விழுந்துச்சு. அதோட விட்ருந்தாக் கூடப் பரவாயில்லை. ஆனா, அடுத்த ஒரு வாரம் கொடுத்தாங்க பாரு ஒரு அட்வைஸ். அங்க விளையாடுறவனுங்க எல்லாம் கெட்ட பசங்க, அடுச்சு தூக்கி உன்ன வாய்க்காலுக்குள்ள வீசிருவாங்க, போன வாரம் கிரிக்கெட் விளையாடப்போன ஒரு பையன் அந்த இடத்துல பந்து பட்டு இறந்துருச்சுனு. அவங்க எல்லாரும் சேர்ந்து கொடுத்த அட்வைஸ்லயே எனக்கு அங்க இங்க ஒட்டிக்கொண்டு இருந்த கொஞ்ச தைரியமும் காணாமப் போயிருச்சு.

அப்பறம் எனக்கொரு பத்து வயசு இருக்கும். என் வயசுல இருந்த எல்லாப் பசங்களுக்கும் அவங்க அப்பா அம்மா சைக்கிள் வாங்கிக் கொடுத்து இருந்தாங்க. ஆனா எங்க வீட்டுல சைக்கிள் வாங்குற அளவுக்கு வசதி இல்ல. அதனால, நான் எங்க ஊர்ல இருந்த அண்ணாச்சி கடைல போயி சைக்கிள் வாடகைக்கு எடுத்து ஓட்டிப் பழகலாம்னு முடிவு எடுத்தேன்..

எங்க வீட்ல எனக்கு சைக்கிள் வாங்கி கொடுக்கல அப்படினாலும் பரவா இல்ல. ஆனால் அந்த சைக்கிள எடுத்துட்டு வந்ததுக்கு அப்புறம் அவங்க ஒரு பயம் கலந்த அட்வைஸ் கொடுப்பாங்க பாருங்க அச்சச்சோ இப்போ நெனச்சாலும் தாங்க முடில.

ஒரு மணி நேரத்துக்கு ரெண்டு ரூபாய்னு வாடகைக்கு எடுத்துட்டு வந்தாலும் மெதுவா ஓட்டு, வீடு வாசல்லயே ஓட்டு, ரோட்டுக்குப் போகாத அப்டி, இப்படினு ரூல்ஸ் போடுவாங்க. சைக்கிள் ஓட்டவே தெரியாத நான் எப்படிம்மா வேகமா ஓட்டுவேன்?, இந்தக் கல்லு இருக்குற வாசல்ல எப்டிமா சைக்கிள் ஓட்ட முடியும்னு கேட்டா? எதிர்த்துப் பேசறன்னு அடுத்த தாட்டி சைக்கிள் வாடகைக்கு எடுக்கக் காசே கொடுக்க மாட்டாங்க. எப்படியோ கஷ்டப்பட்டு சைக்கிள் ஓட்டிப் பழகிட்டேன். இவங்க இப்படி என்னை பயமுறுத்தி, பயமுறுத்தி வளர்த்ததுனால காலப்போக்குல சாதாரணமா நடக்குற ஒரு சில விஷயத்தைக் கண்டாக் கூடப் பயம் வர ஆரம்பிச்சுடுச்சு.

எங்க ஊருக்குப் பத்துக் கிலோமீட்டர் தள்ளி ஒரு ஸ்ட்ரிக்ட் ஆன ஸ்கூல் இருந்துச்சு. என் பிரண்டுங்க ஒரு சிலர் ஆறாவதுல இருந்தே அந்த ஸ்கூல்ல தான் படுச்சாங்க. அவனுங்க அடி வாங்கிட்டு வந்து, அந்த ஸ்கூல் பிரம்பையும், வாத்தியாரையும் பற்றிச் சொல்லும் போதே எனக்கு ஏதோ ஈவில் டெத் படத்த தியேட்டர்ல தனியா உட்கார்ந்து பார்க்குற மாதிரி அடிவயிறு கலங்கும். நல்லாப் படிக்குற அவங்களுக்கே அப்டினா நானெல்லாம் அங்க போன சட்னிதான்னு என் மனசுக்குள்ளே நெனச்சுக்குவேன்.

எங்க ஊர்ல இருந்து அந்த ஸ்கூல்ல படுச்ச ஒரு அண்ணன் அந்த வருஷம் அந்த ஸ்கூல்லயே, இல்ல இல்ல எங்க மாவட்டத்துலயே முதல் மார்க் எடுத்தாங்க. அவ்ளோதான் எங்க ஊர்ல இருக்குற எல்லா அம்மாக்களுக்கும் என்ன ஆச்சோ தெரில அரசுப் பள்ளில படுச்ச அவங்க, அவங்க பசங்க, பொண்ணுங்களைக் கூட்டிட்டுப் போயி அந்த மாசத்துலயே அந்த ஸ்கூல்ல சேர்த்து விட்டுட்டாங்க.

எங்க அம்மா மட்டும் விதி விலக்கா என்ன? என் மார்க்கப் பார்த்துக் கவலைப்பட்டுட்டு இருந்த எங்க அம்மா என்னைக் கொண்டு போயி ஒன்பதாம் வகுப்புல அந்த ஸ்கூல்ல என்னைத் தள்ளிட்டு வந்துட்டாங்க. நான் முன்னாடி படுச்ச ஸ்கூல்ல விட இந்த ஸ்கூல் மூணு மடங்கு பெருசு. அங்க வாத்திங்க வெச்சுருக்குற பிரம்புங்க அத விடப் பெரிசு. அந்த ஸ்கூல்ல இருந்த ஒவ்வொரு வாத்தியையும் பார்த்தாலே எனக்கு அடிவயிறு கலங்கும். பத்தாததுக்கு எனக்குக் கணக்குப் பாடம், இங்கிலிஷ் பாடம் சுட்டுப் போட்டாலும் வராது. ஸ்கூல் நோட் எழுதிப் பழக்கமே கிடையாது. அடியே வாங்கக்கூடாதுனு தான் முதல்ல நெனச்சேன். ஆனா, நம்ம படிப்பைப் பத்தி நமக்குத் தெரியாதா என்ன? தப்பு செய்து வாங்கிய ஒரு சில அடிகளில் அஞ்சிப் போனேன். அந்த ஸ்கூல்ல அடி தாங்க முடியாம, என் கூடப் படுச்ச பல பசங்க இடையிலேயே வேற ஸ்கூலுக்கு மாறிப் போய்ட்டாங்க.

அந்த ஸ்கூல்ல நான் எந்த அளவுக்கு பயந்த அப்டிங்கறதுக்கு ஒரேயொரு எக்ஸாம்பிள் மட்டும் சொல்றேன். நான் பத்தாவது படிக்கும்போது பப்ளிக் எக்ஸாம்க்கு முன்னாடி பிறந்த தேதி ஸ்கூல்ல தவறாக் கொடுத்திருந்தா மாத்திக்க ஒரு வாய்ப்பு கிடைச்சுது. எங்க கணக்கு வாத்தி தான் வந்து யாராச்சுக்கும் தப்பா இருந்தாச் சீக்கிரம் சொல்லுங்க அப்படினு கைல பிரம்போட வந்து கத்திட்டு இருந்தாரு. அவரைப் பார்த்து பயந்து போயி நான் எந்திரிக்கவே இல்ல. ஒன்னு சொல்லுட்ட இப்போ வரைக்கும் நான் பிறந்த தேதி வேற. என் மார்க் சீட்ல உள்ள தேதி வேற. ஒரு சின்ன பயம் தான். ஆனா எவ்ளோ பெரிய விளைவு பாத்தீங்களா.

இதெல்லாம் இதோட நிக்கலங்க. காலேஜ் போனப்போ அங்க உள்ள இங்கிலிஷ் புக்கக் கண்டா பயம். யாராச்சும் ப்ரொபெஸர் இங்கிலிஷ்ல முன்னாடி வந்து பேசச் சொன்னாலும் பயம், இண்டெர்வியூ போறதுக்கு பயம், எப்படி அட்டென்ட் பண்றதுன்னு பயம். இப்படி பயந்து, பயந்து போன என் வாழ்க்கைல அந்த பயம் செஞ்ச ஒரே உருப்படியான காரியம் என்ன நல்லாப் படிக்க வெச்சுது.

ஸ்கூல்ல அடி வாங்காம இருக்கணும்னு கண்ணுல விளக்கெண்ணெய் ஊற்றிப் படுச்ச படிப்பு எல்லாப் பக்கமும் யூஸ் ஆச்சு. காலேஜ் மூணாவது வருஷம் படிக்கறப்போ எப்படியாச்சும் ஒரு அரசு வேலை வாங்கிவிட வேணும்னு வீட்ல இருந்துட்டே நல்லாப் படுச்சேன்.

நல்லாப் படிச்சதுக்குப் பிராய்ச்சித்தமா ஒரு அரசாங்க வேலை கிடைச்சது. அங்க போனதுக்கு அப்புறமாச்சும் நான் தைரியமா இருந்தன்னு நெனைச்சீங்க அதான் இல்ல. ஆபீஸ் போயி அங்கேயும் அந்த பயம் தொடர்ந்துச்சு.

நான் ஜாயின் பண்ணுன ஆபீஸ்ல வேல செஞ்ச எல்லாருமே அங்க உள்ள மேலதிகாரியைக் கண்டு பயப்பட்டாங்க. நான் சாதரணமாவே பயப்படுவேன். அவங்க வேலைக்கு ஜாயின் பண்ணுன முதல் நாலு அந்த ஆஃபீசரப் பற்றிப் போட்ட தூபத்துல நான் ஆடிப்போயிட்டேன்.

வேலைக்குச் சேர்ந்து முதல் ரெண்டு வருஷம் எந்தப் பிரச்சனையும் இல்ல. அலுவலகத்தில் பயந்து பயந்து கண்ணுங்கருத்துமாக வேலை செஞ்சதுனாலே எல்லார்கிட்டயும் நல்ல பெயர் எடுத்தேன்.

அதுக்கப்புறம் எனக்கு ப்ரோமோஷன் கொடுத்து சென்னைக்கு அனுப்புச்சாங்க. நான் ஜாயின் பண்ணுனது நான் வேலை செஞ்ச ஆபீஸ் ஓட ஹெட் ஆபீஸ். அந்த ஆபீஸ் போயி ஜாயின் பண்றதுக்கு முன்னாடியே நான் பர்ஸ்ட் ஜாயின் பண்ணுன ஆபீஸ்ல உள்ள எல்லாரும் எனக்கு ஒரு பெரிய தூபம் போட்டாங்க. ஐயோ தம்பி அங்க அந்த ஆஃபீஸர் அப்படி, இந்த ஆஃபீஸர் அப்படினு.

இன்னும் ஒரு சிலர் அச்சச்சோ அங்கயா போட்ருக்காங்க அப்படினு ஷாக் ஆனாங்க. அவங்க பேசுன பேச்சுல எனக்குப் ப்ரமோஷன் கூட வேணாம்னு தோணுச்சு. ஆனா, ப்ரமோஷன் வேண்டாம்னு ஏன் முதல்லியே சொல்லுல அப்டினு யாராச்சும் கேட்டா என்ன பண்றது அப்டிங்குற பயத்துல போயி ஜாயின் பண்ணிட்டேன்.

அங்க போனதுக்கு அப்பறோம், ஒரு பெரிய ஆஃபீஸ்ர் அம்மாக்குக் கீழ என்னப் போட்டாங்க. அந்த அம்மா தான் ஆபீஸ்லயே ரொம்ப ஸ்ட்ரிக்ட் அப்டினு சொன்னாங்க. எனக்கு முன்னாடி அந்த அம்மாவுக்குக் கீழ ஒர்க் பண்ணுன ரெண்டு பசங்க வேலையே வேணாம்னு சொல்லிட்டு ரிசைன் பண்ணிடுப் போய்ட்டாங்களாம். ஒரு பையன் வேற எங்காச்சும் ட்ரான்ஸபெர் போடுங்க அப்டினு எங்கள் துறைத் தலைமை அதிகாரி கால்ல விழுந்து மாறிட்டானாம். இந்த நியூஸ்லாம் என் காதுக்கு வர வர எனக்கு ஹார்ட் அட்டாக்கே வர மாறி ஆயிருச்சு.

மனசுல ரொம்ப பயத்தோட அந்த அம்மாவுக்குக் கீழ ஒர்க் பண்ண ஆரம்பிச்சேன். முதல் ரெண்டு நாள் அமைதியாத்தான் இருந்துச்சு. அப்பறம், என் பயத்தைப் பார்த்து அந்த அம்மாவுக்கு தைரியம் வந்துச்சோ என்னமோ? தெரில காச் மூச்னு கத்த ஆரம்பிச்சாங்க. நிறைய பேர் சுத்தி இருக்கறதக் கூடப் பார்க்காம வாயில வர வார்த்தையெல்லாம் சொல்லித் திட்ட ஆரம்பிச்சாங்க.

இதெல்லாம் போதாதுன்னு, அதோட வேலையெல்லாம் சொல்லிக் கொடுக்குற அப்படிங்கற பேருல எல்லா வேலையையும் தூக்கி என் கிட்டக் கொடுத்துச்சு. நானும் ஒரு நாளைக்கு 11 மணிநேரம் வரைக்கும் ஒர்க் பண்ண வேண்டிய சூழ்நிலை இருந்துச்சு.

ஒரு நாள் ஏதோ ஒரு பேப்பர் நாளைக்கு வேணும்னு ஸ்ட்ரிக்ட் ஆகச் சொல்லிட்டுப் போய்ட்டாங்க. ஒரு நாள் நைட் முழுசா உட்கார்ந்து தேடுனேன். அன்னைக்கு வீட்டுக்குக் கூடப் போகல. ஆனா, அந்தப் பேப்பர் கிடைக்கவே இல்ல.

அடுத்த நாள் கிடைக்குல அப்டின்னதும் அவங்க போயி எங்க துறையின் தலைமை அதிகாரி கிட்ட சொல்லிட்டாங்க. அவரும் கூப்டு ரெண்டு நாள் டைம் கொடுத்தாரு. அதற்குள் அந்த பேப்பரும் வேறு ஒரு அலுவலரின் இருக்கையிலிருந்து கிடைத்தது.

அந்த ஒரு நிமிடம் என் மனதில் ஆயிரத்தெட்டு யோசனைகள். இவ்ளோ நாள் நாம கெட்ட பேரு வாங்கக் கூடாது அப்டினு தான கஷ்டப்பட்டோம். அவங்க செய்ய வேண்டிய வேலைய நம்ம வேலையா நெனச்சுச் செஞ்சோம். எல்லாத்துக்கும் மரியாதை இவ்ளோ தானா?

இழுத்து ஒரு பெரு மூச்சுவிட்டேன். மனதிலிருந்து மேலே எழும்பிக் கொண்டு வந்த பயத்தை அப்படியே கீழே போட்டு மிதித்தேன். என் வாழ்க்கையில் முதன் முறையாக என் இதயம் நான் சொல்வதைக் கேட்டு மெதுவாகத் துடிக்க ஆரம்பிச்ச தருணம் அது.

அந்த நிமிஷம் நான் முடிவெடுத்தேன். இனிமேல், காரணமில்லாமல் யாருக்காகவும், எங்கேயும், எந்த நிலைமையிலேயும் பயப்படப்போறது இல்லனு. நாலு நாள் அந்த மேடம் கூடப் பேசவே இல்லை. ஏன் அந்த மேடம் கூட என் கூடப் பேசவே இல்ல. நாலு நாள் கழுச்சு இதெல்லாம் செஞ்சுரு அப்படினு ஒரு வாரமாகச் சேர்த்து வெச்சிருந்த எல்லா வேலையும் கொடுத்தாங்க. இங்க பாருங்க இந்த வேல எல்லாம் உங்களோடது. இதெல்லாம் செய்ய முடியாதுனு சொன்னேன்.

அவ்ளோதான் கீழ போயி எங்க அலுவலக தலைமை அதிகாரி கிட்ட தாம் தூம்னு குதுச்சுச்சு. அவரும் கூப்பிட்டு என்ன பிரச்சனை அப்டினு கேட்டாரு. நானும் ரெண்டு வருசமா நடந்த எல்லாக் கதையையும் சொன்னேன். அவரு சிரிச்சுகிட்டே இதைச் சொல்ல எதுக்குப்பா இவ்ளோ நாள் தள்ளிப்போட்ட அப்டினு எனக்கு சப்போர்ட் பண்ணுனாரு. அந்த நொடி தான் எனக்குப் புரிஞ்சுது. அர்த்தமற்ற பயம் தான் நம்மல அடிமையாவே வெச்சுருக்கும்னு.

அப்போ இருந்து இந்த நாள் வரைக்கும் எதுக்குமே நான் பயப்படுறது இல்லை. வேறு ஒரு எக்ஸாம் எழுதி இப்போ ஒரு பெரிய போஸ்ட்ல இருக்கேன். ஏன் இப்போ கூட எனக்கு கீழே உள்ள ஒவ்வொருத்தர் கிட்டயும் நான் சொல்றது ஒரேயொரு விஷயம் தான். யாரும் யாருக்கும் அடிமை கிடையாது. இங்க உள்ள எல்லாரும் அவங்க அவங்க வேலைய மட்டும் செஞ்சாப் போதும். யாரும் யாருக்கும் பயப்பட வேண்டியது இல்லனு.

உடனே நீங்க எல்லாரும் கேட்கலாம். இப்போ எந்த விஷயத்திற்கும் நீ பயப்படுறது இல்லையானு. இப்போவும், ஒரு சில விஷயத்திற்கு பயப்படுவேன். என் மனைவிக்கு பிரசவ வலி வந்த அப்பவும், என் கொழந்தை வேகமா ஓடிக் கீழ விழுகுற அப்பவும், இரவு நேரத்த்துல நடு சாமத்துல தீடிர்னு அவலச் சேதியோடு அலைபேசி அழைப்பு வரப்பவும், ஏன் இன்னும் எவ்வளவோ விஷயத்திற்கு இன்னைக்கு வரைக்கும் பயப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறேன். ஆனால், அப்படி வர பயத்த தேவையா இல்லையானு கண்டு பிடிக்க எங்கிட்ட ஒரே ஒரு தாரக மந்திரம் மட்டும் இருக்க. அது என்ன தெரியுமா?

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்.

என்ற வள்ளுவரின் வாக்குதான்.

உங்க எல்லாத்துகிட்டயும் நான் கெஞ்சிக் கேட்டுக்கறதும், வலியுறுத்திச் சொல்லறதும் ஒண்ணே ஒண்ணுதான். உங்க குழந்தைக்கு பயத்தைச் சின்ன வயசுல இருந்தே ஊட்டி ஊட்டி வளர்க்காதீங்க. பூச்சாண்டிக் கதையிலிருந்து, பேய்க்கதை வரைக்கும் எதைச் சொல்லியும் பயமுறுத்தாதீங்க. சினம் மட்டும் இல்லங்க பயமும் மனிதனைக் கொல்லும் ஒவ்வொரு நாளும்.

যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...