தூரத்தில் வீசியெறிந்த பிரம்பு

உண்மைக் கதைகள்
5 out of 5 (2 )

மணிமாறனும் வள்ளியும் வேகமாக ஓடி சென்று ஒரு மரத்தின் பின்னால் மறைந்து காதுகளை பொத்திக்கொண்டனர்.

சிறிது வினாடியில் “டொம்” என்ற ஒரு பெரிய சத்தத்தில் பூகம்பம் வந்தது போல் நிலம் அதிர்ந்தது.

சத்தம் நின்றதுமே ஹேய்ய்ய்ய்… என்று கத்திக்கொண்டு ஓடி வந்தனர். கிணற்றை சுற்றிலும் பாதுகாப்பு கயிறு கட்டி இருந்ததால் அதை தாண்டி அவர்களால் சென்று பார்க்க முடியவில்லை. அங்கே குழி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. வெடிமருந்து வாசம் மூக்கில் ஜிவ்வென்று ஏறியது.

”டேய்ய்.. பசங்களா இங்க வர கூடாது தூரமா போயி விளையாடுங்க.” என்று வள்ளியின் அப்பா பாலன் சொல்ல கொஞ்சம் தள்ளி நின்றுகொண்டார்கள்.

”ஹேய்.. மணி அங்க பாரு உன்னோட ஆடு, மாடுகளெல்லாம் அந்த கொள்ளு காட்டுக்குள்ள போய்டுச்சு.”

மணிமாறன் ஓடிச்சென்று தூரத்தில் எங்கோ வீசியெறிந்த பிரம்பை தேடி எடுத்து அவைகளை அருகில் இருந்த கருவேலாங்காட்டுக்குள் விரட்டினான்.

திரும்ப வந்து மறுபடியும் வள்ளியுடன் விளையாடிக்கொண்டிருக்க வள்ளியின் அப்பா அவர்களுக்கு நுங்கு வெட்டி கொடுத்தார். கைக்கட்டை விரலால் நுங்கு கண்ணை பிதுக்கி எடுக்க ”ச்சீத்” என அடித்த நுங்கு தண்ணியை வாயால் வைத்து இரண்டு பேரும் உறிஞ்சி எடுத்து சாப்பிட்டு கொண்டிருக்க மறுபடியும் ஆடுகள் கொள்ளு காட்டிற்குள் நுழைந்தது.

மணிமாறன் ஓடிச்சென்று விரட்டிக்கொண்டிருக்கும் போது பின்னால் இருந்து வள்ளியின் சத்தம் கேட்டது.

”டேய்.. மணி மறுபடியும் வெடி வைக்குறாங்க வாடா” என்று கத்திக்கொண்டு ஓடி வந்து மரத்தின் பின்னால் உட்காந்து காதுகளை பொத்திக்கொண்டாள்.

மணிமாறனும் காதுகளை பொத்திக்கொண்டு வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தான்.

சில வினாடியில் அதே “டொம்” என்ற சத்தம், அதே புகை மண்டலம்.

இப்போது மணிமாறன் அருகில் வந்து விட்டான்.

அவனை பார்த்த வள்ளி “ஹேய், நான் தான் முதல்ல போவனே” என்று வேகமாக எழுந்து கிணற்றை நோக்கி ஓட ஆரம்பித்தாள். மணிமாறனை பார்த்துக்கொண்டே ஓடி வந்த வள்ளி பாதுகாப்பு கயிறு தடுக்கி விட்டதில் அம்மா… என்று கத்திக்கொண்டு குழியில் விழுந்தாள்.

வள்ளி விழுவதை பார்த்த மணிமாறன் அதிர்ச்சியில் மெதுவாக வேகம் குறைந்து தூரத்திலேயே நின்று கொண்டான்.

வேலை செய்துகொண்டிருந்த அனைவரும், ”எங்க இருந்து சத்தம்?? யாரு அம்மா என்று கத்தியது?” என்று சுற்றிலும் தேடுகிறார்கள். புகை மூட்டதில் எதுவும் தெரியாமல் குழம்பினார்கள்.

பாலன் மணிமாறனின் அருகில் வந்து, ”டேய்.. மணி எங்க டா வள்ளி? எங்க இருந்து டா அந்த சத்தம் வந்துச்சு?” என்று பதற்றமாக கேட்டுக்கொண்டு இருக்க..

மணிமாறன் எதுவும் பேசாமல் அதிர்ச்சியின் உறைந்து அப்படியே நின்றான்.

”பாலண்ணே இங்க வாங்கணே.” என்ற சத்தம் கூடவே அய்யோ… கடவுளே.. என்ற அழுகுரலும் கேட்டது.

”என்னாச்சு… என்னாச்சுடா..” என்று பதறிக்கொண்டு குழியின் அருகில் ஓடினார். பின்னாலேயே மணிமாறனும் சென்றான். மெதுவாக கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தான்.

அங்கே பாறை மேல் விழுந்து நெற்றியிலிருந்து மூக்கு வரை தலை ரெண்டாக பிளந்து கிடந்த வள்ளியை பார்த்தான். பின்னாமல் விரிந்த கூந்தலை போல் இரத்தம் வழிந்து ஓடிக்கொண்டிருந்தது.

மணிமாறனுக்கு கால்கள் நடுங்கியது. கும்மென்ற ஒரு மெளனம். சுற்றியிருந்த அலறல்கள், அழுகைகள் எதுவும் கேட்கவில்லை. ஓடிச்சென்று மரத்தின் பின்னால் உட்காந்து காதுகளை பொத்திக்கொண்டு பயத்தில் அலறினான். உடம்பெல்லாம் நடுங்கியது.

கிணற்றின் அருகே இருந்தவர்கள் பரபரப்பாக கயிறுகளை உள்ளே இறக்கி இறங்கிக்கொண்டிருந்தனர்.

இன்னொரு பக்கம் ஆடு, மாடுகள் நிதானமாக கொள்ளு காட்டிற்குள் புகுந்து மேய்ந்து கொண்டிருந்தன.

ஒரு வாரத்திற்கு பிறகு,

ராத்திரி பெய்த கனமழையில் அந்த வண்டித்தடம் முழுவதும் செம்மண் இரத்தமாய் குழைந்து கிடந்தது. மேடான வாக்கிலேயே சைக்கிளை வளைத்து, வளைத்து ஓட்டிய காத்தவராயன் பெடலின் வேகத்தை கூட்டினான்.

புஸ்ஸ்…. புஸ்ஸ்… என காத்தவராயனின் மூச்சுக்காத்து முன்னால் முக்கோணத்தில் உட்காந்திருந்த மணிமாறனின் உச்சந்தலையில் வ்வுஸ்.. வ்வுஸ்.. என அடித்தது. தடத்திற்கு வேலியாக இரண்டு பக்கமும் முளைத்து இருந்த கற்றாழை செடிகள் சைக்கிளின் வேகத்தில் விர்ர்றென்று பின்னால் போனது.

தடம் முழுக்க ஆங்காங்கே மழைத்தண்ணி குட்டைபோல் தேங்கிக்கிடக்க.. காத்தவராயனின் கட்டுப்பாட்டை இழந்த சைக்கிள் அடம்பிடித்து அடிக்கடி அந்த சேத்துக்குட்டைக்குள் போய்வந்து சொர்றென்று சேத்துத்தண்ணி சக்கரத்தில் சுழன்று வந்து மணிமாறனின் பின் தொடையில் அடித்தது.

”அப்பா.. மெதுவா போப்பா.. டவுசரெல்லாம் நனையுது.” என்று கத்தினான்.

காத்தவராயனின் கவலையோ அடுத்த மழைக்கெல்லாம் ஊர் போயி சேர வேண்டும் என்பதே. அவன் நினைப்பை நிஜமாக்கும் முயற்சியில் மேகக்கருக்கல் வடக்கே இருந்து லேசான குடு… குடு… சத்தத்தோடு வந்து கொண்டிருந்தது. அப்பப்போ மேகாத்து தடம் பார்த்து வீசி சைக்கிளின் வேகத்தை குறைத்தது.

கத்தாழபுரத்தில் இருந்து புளியூருக்கு பதினொறு மைல் தூரம். ஒத்தையடி குறுக்குப்பாதையில் சென்றால் ஐந்து மைல் தூரம் தான். அந்த ஒத்தையடி பாதையை பிடிக்க இன்னும் ஒரு மைல் தூரம் ஊர் எல்லையை கடக்க வேண்டியதாய் இருந்தது.

இராத்திரி முழுக்க டொம்.. டொம்மென மேளம் கொட்டிய அசதியிலிருந்து மெல்ல எழுந்து கொட.. கொடவென சடவெடுத்தது வடகருக்கலோடு வந்த இடி. நேற்று மழைக்கு போட்டியாக அடித்த சூரைக்காற்று தன் பங்குக்கு நாலு, அஞ்சு கத்தாழை மரங்களை சாய்த்துவிட அதில் நீண்ட மரமொன்று வண்டித்தடத்தின் குறுக்கே விழுந்து கிடந்தது.

காத்தவராயன் சைக்கிள் ஸ்டேண்டை போட்டுவிட்டு மணிமாறனை கீழே இறக்கிவிட்டான்.

”நாம போகும்போது தான் எல்லா இழவும் வந்து விழும்.” என்று புலம்பிக்கொண்டே வந்து மரத்தை தூக்கினான். சேத்து சகதியில் மரம் வழுக்க, ”காஞ்ச முட்டியா இருந்தா பசங்களுக்கு நீச்சப்பழக்கவாது வெட்டிட்டு போலாம், இளமுட்டியா இந்தகணம் கணக்குதே.” என்று அதன் உச்சியில் முளைத்திருந்த பூக்களை பிடித்து ஓரமாக இழுத்தான்.

விழுந்த கத்தாழைக்கு அடுத்து இருந்த சுமைதாங்கி கல் ஊர் எல்லைக்கு வந்துவிட்டோம் என்று காட்டியது.

மணிமாறன் டவுசரில் ஒட்டியிருந்த செம்மண் சேத்தை தட்டிவிட்டு அரைக்குண்டி தெரிய இருந்த டவுசரை இழுத்து அர்ணாக்கொடியோடு சேர்த்து இறுக்கிக்கொண்டான்.

மூக்கில் ஒழுகிக்கொண்டிருந்த சளியை வலது கை தோள்சட்டையை இழுத்து துடைத்துக்கொண்டு இடதுபுறமாக பார்த்தான்.

தடத்தின் ஓரமாக இரண்டு முரட்டு கத்தாழை செடிகளுக்கு நடுவே அழகாக பூத்து விரிந்திருந்த சப்பாத்திகள்ளி செடியில் “யார் கையேனும் பட்டுவிடகூடாதாயென’ ஏங்கி கிடந்த அந்த செவத்தகள்ளியின் மேல் மணிமாறனின் கை பட்டது.

ஒரு கல்லை எடுத்து கள்ளிப்பழத்தை சுற்றியிருந்த முற்களையெல்லாம் சொற.. சொறவென தேய்த்தெடுத்து அந்த கள்ளியை ரெண்டாக பிளந்தான். சிவந்த ரோஜாவை பிளந்தால் தேன் ஒழுகுமோ இல்லையோ இந்த செவத்தகள்ளியில் ஒழுகியது. அன்னாக்க பார்த்து இரண்டு கைகளிலும் பிய்த்திருந்த பழத்தை அமுக்கிப்பிழிந்தான். வாயில் விழுந்ததுமே உள்நாக்கு சுழற்றி அடித்து வாய்முழுக்க வண்ணம் பூசிக்கொண்டது.

மென்றுகொண்டே தான் வந்த வழியை பார்த்தான். ’கத்தா’ என்ற பாதி எழுத்தோடு எப்போது விழுவோமென்று தெரியாமல் நேற்று அடித்த சூரைக்காற்றுக்கு தப்பித்து நின்றுகொண்டிருந்தது அந்த ஒற்றைக்கால் துருப்பிடித்த போர்டு.

போர்டுக்கு பின்னால் கண் மறையும் தூரம் இரண்டு பக்கமும் கத்தாழை செடிகளாய் நிறைந்து இருந்தது. நடுவே இருந்த வண்டித்தடம் செழித்து வளர்ந்த வெங்காய வயலுக்கு நடுவே போகும் வாய்க்கால் போல் சேறும், சகதியுமாய் கடைசியாக வலப்புறமாக திரும்பி மறைந்தது.

மணிமாறன் அந்த வழியையே பார்த்துக்கொண்டு நின்றான். மண்வாசம், மழைவாசம் மூக்கிலேறி இலை, தளை எல்லாம் சந்தோசத்துளிர் விட்டு தும்மியதை கண் கொட்டாமல் பார்த்தான். அதை பார்த்து மனதிற்குள் எழுந்த சந்தோசத்தையும் ஊரை விட்டு போகபோகிற வருத்தத்தையும் முந்திக்கொண்டு முதலில் வந்து நின்றது அந்த பயம். ஒரு வாரமாக மூச்சடக்கி வைத்திருந்த அந்த பயம். நெருப்புக்கே தீ மூட்டி சூடு வைத்த அந்த பயம்.

வள்ளியின் முகம் நினைவிற்கு வந்தது. கிணற்றிக்குள் விழுந்து மூளை சிதறி இரண்டாக பிளந்து கிடந்த அந்த முகம் நினைவிற்கு வந்தது. அவன் முகம் எல்லாம் வெடவெடத்து, கண்கள் சொறுகி நடுக்கத்துடன் வேர்த்து நடுங்கி நின்றான்.

”டேய்ய்.. யார்றா அவன்?”

திடுக்கிட்டு பின்னால் திரும்பி பார்த்தான். மாட்டுவண்டியில் ரங்கன் உட்காந்திருந்தான்.

”இங்க தனியா என்னடா பண்ணிட்டு இருக்க?”

மணிமாறன் அந்தபக்கம் திரும்பி பார்க்க.. அருகே இருந்த சிறிய பாறையில் தேங்கி இருந்த மழைத்தண்ணீரில் கை கழுவிக்கொண்டு காத்தவராயன் வந்தான்.

வண்டியிலிருந்து வடிவேலுக்கவுண்டர் எட்டிப்பார்த்து, ”யார்றா அது ராயனா?” என்று கேட்டார்.

”சாமி..” என்று வேட்டியை இறக்கிவிட்டு வண்டியின் அருகில் வந்து, ”சாமி எப்படி இருக்கீங்க சாமி.”

”நான் நல்லா இருக்கேன்டா ராயா, நீ எப்படி இருக்க? என்ன இது புது பழக்கம் ஊருக்கு வந்துட்டு நம்ம சாலைக்கு வராம போறது?”

”அய்யோ அப்படி எல்லாம் இல்லீங்க.. நேத்து ராத்திரி தான் வந்தேன். அடுத்த மழை வர்றதுக்குள்ள ஊரு போயி சேர்ந்துடலாம்னு தான் கிளம்பிட்டேன். அங்க நிறைய சோலி கிடக்கு சாமி.”

”சரி அதுக்கு ஏன் மாறனையும் கூட்டிட்டு போற.. பையனுக்கு அவ ஆத்தா நியாபகம் வந்துருச்சாக்கும்?” என்றார் வடிவேலுக்கவுண்டர்.

”அதுவும் தானுங்க சாமி, பிறவு அந்த வள்ளி புள்ள போனதுக்கு அப்பறம் பையன் குளுரும் காய்ச்சலும் வந்து படுக்க படியா கிடந்தான். அதான் கஷ்டமா போச்சு.. ஊருக்கு போயி அவ ஆத்தா, தம்பி கூட இருந்தா கொஞ்சம் எல்லாத்தையும் மறந்து கிடப்பான் அதான் சாமி. கொஞ்ச நாள் கழிச்சு பையன அங்கேயே பள்ளிகூடத்துலயும் சேர்த்து விடலாம்னு இருக்கேன்.”

”அப்படியா விசயம்?” என்று தாடியை தேய்த்துக்கொண்டு, ”சரி இவ்வளவு தூரம் வந்து இருக்க சாலைக்கு வராம போன எப்படி வாடா ராயா வந்து ஒரு வாய் சாப்பிட்டு போலாம்.”

”இல்ல சாமி.. மோடம் போடுறத பார்த்தா மறுபடியும் மழை வர்ற மாதிரி இருக்கு இப்பவே போனாதான் ஊருபோயி சேர முடியும்.”

”அட.. வந்து சாப்பிட்டு போறதுக்கு எவ்வளவு நேரம் ஆக போகுது. கவுண்டச்சியும் அடிக்கடி உன் பொஞ்சாதிய பத்தி கேட்டுடே இருப்பா நீ வந்து சொன்னா அவளும் கொஞ்சம் சந்தோச படுவால்ல..”

”டேய் ரங்கா.. நீ போய் ராயானோட சைக்கிளை எடுத்துட்டு பின்னாடியே வா.. ராயா பையன கூட்டிட்டு வந்து வண்டிய எடு நாம பேசிட்டே போலாம்.”

”ஐயா.. எனக்கு சைக்கிள் ஓட்ட தெரியாதுங்களே.”

”ஓட்ட தெரியலைனா தள்ளிட்டாவது வாடா.”

ரங்கன் இறங்கி சென்று சைக்கிளை எடுக்க, காத்தவராயன் மெதுவாக தயங்கிக்கொண்டே சென்று மணிமாறனை மடியில் உட்கார வைத்துக்கொண்டு மாட்டுவண்டியை ஓட்டிக்கொண்டு சென்றான்.

வண்டி வீட்டுக்கு வந்ததும் ராயனும், மாறனும் வண்டியை விட்டு இறங்க வடிவேலு கவுண்டர் வேகமாக வீட்டிற்குள் சென்றார். உள்ளே வளர்மதி சமையலறையில் வேலை செய்து கொண்டிருக்க..

”ஏம்புள்ள.. வளரு, வெளிய காத்தவராயனும் அவன் பையனும் வந்து இருக்காங்க அவங்களுக்கு சாப்பாடு போடு நான் குளிச்சுட்டு வந்துடறேன்.”

வளர்மதி கைகளை கழுவிக்கொண்டு வெளியில் வந்தாள். காத்தவராயன் ரங்கனுக்கு உதவியாக மாடுகளை அவிழ்த்து கொட்டகையில் கட்டிவிட்டு வந்தான்.

”காத்தவராயா நல்லா இருக்கியா?”

”நல்லா இருக்கேன் சாமி நீங்க எப்படி இருக்கீங்க? சின்னகவுண்டர் நல்லா இருக்காருங்களா?”

”நான் நல்லா இருக்கேன். சின்னகவுண்டனும் நல்லா இருக்கான். அவன் வெளியூருல தங்கி படிச்சுட்டு இருக்கான் ஏதோ காலேஜ் கீலேஜ்ன்னு சொல்றாங்க நமக்கு எங்க தெரியுது அதெல்லாம்.. ஆமா.. ருக்குமணி வந்து இருக்காளா?? நான் அடிக்கடி அவள பத்திதான் பேசிட்டு இருப்பேன் அவ என்கூட இருக்குற வரைக்கும் எனக்கு ரொம்ப ஒத்தாசையா இருக்கும். நீ தான் இப்போ வெளியூருக்கு பண்ணையம் பார்க்க போயிட்டயே..?”

”அப்படியில்லைங்க.. என்று நெளிந்தான்.

”சரி.. பையன கூட்டிட்டு பொறத்தால வா சாப்பிடுவிங்களாமா.. இந்த ரங்கன் எங்க போயிட்டான் அதுக்குள்ள..”

”அவன் பின்னால தானுங்க இருப்பான் நான் கூட்டியாறேன்.”

”சரி மூனு இலை அறுத்துட்டு வாங்க.” என்று சொல்லி உள்ளே சென்றாள்.

காத்தவராயன் மூன்று வாழை இலைகளை அறுத்துக்கொண்டு கொல்லப்புறத்தில் இருந்த தோட்டத்திற்குள் வந்து உட்காந்தான். கூடவே ரங்கனும் வந்தான். மூன்று பேரும் வரிசையாக உட்கார வளர்மதி வந்து சாப்பாடு பரிமாறினாள். சாப்பாடு, நாட்டுக்கோழி கொழம்பு, ரசம், தயிர் என்று வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு வந்து முன்புறமாக வந்து பந்தலில் உட்காந்தனர்.

வானம் இருள் சூழ்ந்து கும்மென இருண்டு இருந்தது.

கவுண்டரும் சாப்பிட்டுவிட்டு வெளியில் வந்து ஊஞ்சலில் உட்காந்து வெற்றிலை மடித்து வாயில் போட்டார். ”வெத்தலை போடுறியாடா ராயா?”

”இல்லைங்க சாமி.”

”அப்பறம் அடுத்து என்ன பண்றதா உத்தேசம்?”

வளர்மதி கையில் ஒரு கின்னத்தோடு வெளியில் வந்தாள். ”டேய்.. மணிமாறா பின்னால போய் ஒரு மூனு ஓட்டையில்லாத கொட்டாங்குச்சியா தேடி எடுத்துட்டு வா ஓடு.”

மணிமாறன் ஒரே ஓட்டமாக எழுந்து ஓடினான்.

ரங்கன் வாசப்படியில் உட்காந்து கவுண்டரின் செருப்பில் இருந்த நெருஞ்சி முற்களையெல்லாம் ஒவ்வொன்றாக ஒரு பின்னூசியை வைத்து நோண்டி எடுத்துக்கொண்டு இருந்தான். காத்தவராயன் ஒரு ஐந்து அடி தள்ளி பந்தலின் தூணில் சாய்ந்து கை கட்டி நின்று கொண்டு இருந்தான்.

”டேய்.. ராயா, எனக்கு இங்க இருக்குற ஆடு மாடுகளை மேய்க்குறதுக்கு உன் பையன விட்ட வேற ஆள் இல்ல.. இந்த ஒரு வாரமா உன் பையன் வராம இருந்ததுக்கே ரங்கன் தோட்டத்து வேலையும் பார்த்து, ஆடு மாடுகளையும் பார்த்து ரொம்ப சிரமப்பட்டு போனான் பாவம்.”

ரங்கன் முகத்தில் ஒருவித பெருமிதம் ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

”நீ என்னடான்னா.. சொல்லாம, கொள்ளாம உன் பையன கூட்டிட்டு ஊர விட்டு போயிட்டு இருக்க?”

”எது பையன கூடிட்டு போறானா? ஏன்டா காத்தவராயா நாங்க உம்மட பையன சரியா கவனிக்காம போயிட்டோமா இல்ல வேலைக்கேத்த கூலி தான் கொடுக்காம விட்டுடோமா?” என்று வளர்மதி குறுக்கிட்டாள்.

”அய்யோ சாமி அதெல்லாம் இல்லீங்க..”

மெதுவாக சாரலாய் ஆரம்பித்து சட.. சட..வென பேய்மழையாய் கொட்டியது, தெண்ணை ஓலை பந்தலில் ஆங்காங்கே மழை தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது.

”மழையில நனையாத கொஞ்சம் உள்ள வந்து நில்லு.” என்றாள் வளர்மதி.

மணிமாறன் பாதி நனைந்து மூன்று தேங்காய் தொட்டியை தேடி கொண்டு வந்து ஒன்று தன் அப்பனுக்கும் இன்னொரு தொட்டியை ரங்கனுக்கும் கொடுத்தான். கின்னத்தில் இருந்த காப்பியை மூன்று பேருக்கும் ஊற்றினாள்.

”இங்க பாரு ராயா.. பையன் இங்க தான் இருக்கோனும் அவன நாங்க பார்த்துக்கறோம் கூலி வேணுமுனாலும் எட்டனாவோ ஒரு ரூபாயோ சேர்த்து கொடுக்க சொல்றேன். பேசாம பையன இங்கயே விட்டுட்டு போயிடு ஆமா..” என்றாள் வளர்மதி.

”சாமி பையனுக்கு ஒரு வாரமா உடம்பு சரியில்லாம துரும்பாட்டாம் ஆயிட்டான். ஊருக்கு போயி அவன் ஆத்தா கூட கொஞ்ச நாள் இருந்தா தேறிடுவான் அதான்..” என இழுத்தான்.

வாயில் வெற்றிலையை கொதப்பிக்கொண்டு, ”கொஞ்ச நாள் இருந்தா பரவாயில்ல ஆனா நீதான் உன் பையன அங்கேயே படிக்க வைக்க போறேன்னு சொல்றீயே?”

”அப்படியா.. பையன பள்ளிக்கூடம் அனுப்ப போறியா?” என்று வளர்மதி கேட்டாள்.

”ஆமாங்க சாமி.. அந்த வள்ளி புள்ள சாவ கிட்ட இருந்து பார்த்ததுல இருந்து பயத்துல காய்ச்சல் வந்து படுத்துட்டான். இங்க இருந்தாலும் அதே நினப்பாத்தான் இருக்கும். அதான் அங்க கூடிட்டு போயிடலாம்னு புளியூருல பள்ளிக்கூடமும் இருக்கு மதியானம் ஒருவேளை சாப்பாடும் அங்கயே போடுறாங்களாம். சேர்த்துவிட்டுடா.. ஏதோ கணக்கு வழக்காவது கத்துக்குவான்.”

”அதெல்லாம் சரிதான் டா.. போன வாரம் நம்ம ஊர்க்கவுண்டன் காட்டுல கிணறு வெட்டும் போது அங்க ஆடு மேய்க்க போன உன் பையன் அந்த பாலன் புள்ள வள்ளி கூட சேர்ந்து விளையாண்டுட்டு ஆடு, மாடுகளை பூரா நம்ம தாசில்தார் கொள்ளு காட்டுக்குள்ள மேய விட்டுட்டான் அதுக எல்லாம் காட்டயே திண்ணு தீத்துடுச்சு. இப்போ அவரு நீங்கதான் எழப்பீடு தரணுமுனு நம்ம சாலையில வந்து நிக்குறாரு. இப்போ நீயும் உன் பையன கூடிட்டு போயிட்டா அந்த பணத்தை யாரு கொடுக்கறது?”

”ஏனுங்க.. மீறி போன ஒரு ஐநூறு ரூபா வர போகுது அத நாமளே கொடுத்துடலாம். அவன் தான் பையன பள்ளிக்கூடத்துக்கு அனுப்புறேன்னு சொல்றானே போகட்டுமே..”

”நீ உள்ள போடி சிறுக்கி முண்ட என்று வளர்மதியின் மேல் சீற அவள் பயந்து உள்ளே சென்று விட்டாள்.”

வெற்றிலை எச்சியை துப்பிவிட்டு, ”சோத்துக்கு வழி இல்லாத பயலுகளுக்கு பள்ளிகூடம் போகணுமாம்.” என்று வாய்க்குள்ளே முனங்கினார்.

”சரிடா.. அந்த காசையும் நானே கட்டிடறேன். இத்தன நாளா உம்பையன் தான் இந்த ஆடு மாடுகளை மேய்ச்சுட்டு இருந்தான். இப்போ இவனும் போய்ட்டா எனக்கு வேற ஆள் கிடைக்குற வரைக்கும் இந்த வாயில்லா ஜீவனெல்லாம் பட்டினியோட கிடக்கணுமா??” என்று குரலை உசத்தி கத்தினார்.

காத்தவராயன் எதுவும் பேசாமல் தலைகுனிந்து நின்றிருந்தான். மணிமாறன் எதுவும் புரியாமல் கவுண்டரையும் காத்தவராயனையும் மாறி மாறி பார்த்துக்கொண்டு நின்றான்.

ரங்கன் குளிரில் நெருப்பை மூட்டியது போல ரசித்து மனதிற்குள் சிரித்துக்கொண்டான்.

கவுண்டர் சொம்பில் இருந்த தண்ணீரில் வாய் கொப்பளித்து பொளிச்சென்று துப்பிவிட்டு தொண்டையை கனைத்துக்கொண்டு மெதுவாக பேச ஆரம்பித்தார்.

”அதுவும் இல்லாம ஊருக்குள்ள உன் பையன் தான் அந்த வள்ளி புள்ளைய விளையாட்டு வாக்குல கிணத்துக்குள்ள தள்ளிவிட்டதா அரசல் புரசலா பேசிக்குறாங்க.”

காத்தவராயன் ஓடிச்சென்று கவுண்டரின் காலின் அருகே சென்று தரையை தொட்டு, ”ஐயா..சாமி.. என்னங்கைய்யா இப்படி ஒரு குண்ட தூக்கி போடுறீங்க? என்று அலறினான்.” அவன் கண்களில் கண்ணீர் தாரதாரையாக வழிந்தது.

அவன் கண்களில் வழிந்த கண்ணீருக்கு சொத்.. சொத்.. என பின்னனி இசை கொடுத்துக்கொண்டிருந்தது ஓய்ந்து நின்ற மழைத்துளி.

”டேய்.. எந்திரி, எந்திரி. அதெல்லாம் நிசமில்லனு எனக்கும் தெரியும். ஊருக்குள்ள அப்படிதான் புரளி பேசிட்டு திரியுறானுக.. இப்போ நீ உன் புள்ளைய கூட்டிட்டு ஊர விட்டு போயிட்டா அது உண்மையாகிடாதா?? அப்பறம் நீ எங்க போனாலும் சர்க்கார் உன்னையும் உன் பையனையும் சும்மா விடாது.”

காத்தவராயனின் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது. கீழே குனிந்து மணிமாறனை பார்த்தான். மணிமாறான் ஒன்றும் புரியாமல் தன் அப்பாவை ஏக்கத்தோடு பார்த்தான்.

காத்தவராயன் கண்களை துடைத்துக்கொண்டு, ”இப்போ நான் என்ன சாமி பண்ணனும்?”

கவுண்டர் மறுபடியும் தொண்டையை கனைத்துக்கொண்டு மெதுவாக உடம்பை நெளித்து, ”பையன் எம்மட கூடயே இருக்கட்டும். அவனுக்கு எந்த பிரச்சனையும் வராம நான் பார்த்துக்கறேன். கூலி வேணா ஒரு ரூபா சேர்த்து கொடுத்துடறேன். மாசம் பொறந்தா ஒரு கோணிய எடுத்துட்டு வா, தேங்காய், காய்கறி, வாழைதாரு, கம்பு, சோளமுன்னு மூட்ட நிறைய எடுத்துட்டு போயி நல்லா இரு. என்னதான் வெளியூருக்கு போயி பண்ணையம் பார்த்தாலும் நீ நம்ம ஊரு ஆளு உனக்கு பண்ணாம வேற யாருக்கு பண்ண போறேன்.”

காத்தவராயன் அமைதியாக நின்றான்.

”டேய்.. ரங்கா மழை ஓஞ்சிடுச்சு, பையன கூட்டிட்டி போயி நம்ம ஆட்டுபட்டிய திறந்துவிடு நேரம் ஆச்சு மேய்ச்சலுக்கு போகட்டும்.”

”சரிங்க ஐயா.” என்று சொல்லி செருப்பில் இருந்து பிடிங்கிய முற்களையெல்லாம் கையில் எடுத்து மாறனை அழைத்துக்கொண்டு மாட்டுக்கொட்டகை அருகே சென்றான்.

மணிமாறன் ஏமாற்றமாக தன் அப்பாவை பார்த்துக்கொண்டே சென்றான். அழுகையை அடக்க முடியாமல் வாய் துடித்தது. என்னையும் கூட்டிக்கொண்டு போ இங்கே விடாதே என்று கண்களால் பேசினான்.

மாட்டுகொட்டகை மறைவிற்கு வந்ததும் அருகில் இருந்த சாணக்குழியில் முற்களை வீசிவிட்டு மணிமாறானின் தலையில் ஓங்கி ஒரு அடி அடித்து, போடா போயி பட்டிய அவித்து விடு என்று காது கொடைந்துக்கொண்டு ஒரு மாடு கட்டும் மரத்தின் மீது உட்காந்துகொண்டான் ரங்கன்.

கவுண்டர் எழுந்து இடுப்பில் நழுவிய வேட்டியை சரி செய்துகொண்டு, ”டேய் ராயா, வீட்டு செலவுக்கு வேணா நாலு தேங்காய் எடுத்துட்டு போறியா?”

”வேணாங்க சாமி அங்கயே நிறைய கிடக்கு..”

”அப்போ சரி, பிறவு பார்ப்போம் அடிக்கடி வந்துட்டு போடா.” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டார்.

காத்தவராயன் கக்கத்தில் இருந்த துண்டை எடுத்து கண்களை துடைத்துக்கொண்டு சைக்கிளை ஓட்ட மனமில்லாமல் தள்ளிக்கொண்டே சென்றான்.

கல், முள் குத்துவது கூட தெரியாமல் நடந்து சென்றுகொண்டிருந்தான். மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் குடைந்து எடுத்து நோண்டியது அந்த வலிகளுடனே அவன் கால்கள் நகர்ந்தது.

தூரத்தில் இருந்து, ”அப்பா.. அப்பா…” என்ற சத்தம் காத்தவராயன் மெதுவாக திரும்பி பார்த்தான். மக்காணிகாட்டுக்குள் புகுந்து மணிமாறன் ஒடி வந்து கொண்டிருந்தான். அவனை தாண்டி ஒரு கோரைபுல் நிலத்தில் ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தது.

”அப்பா… போகாத இருப்பா.. நானும் வரேன் என்னையும் கூட்டிட்டு போப்பா.” என்று கத்திக்கொண்டே ஓடி வந்தான்.

உடனே காத்தவராயன் அவசரமாக சைக்கிளில் ஏறி வேகமாக பெடலை அழுத்தினான். மீண்டும் மழை கொட்ட தொடங்கி விட்டது. கிழக்கு மழை நேராக முகத்தில் வந்து அடிக்க திரும்பி பார்க்காமல் வேகமாக சைக்கிளை ஓட்டிக்கொண்டு சென்றான்.

”அப்பா…. நில்லுபா..” என்று கத்திக்கொண்டே பின்னால் ஓடி வந்து நின்று பார்த்தான் அதற்குள் காத்தவராயன் தூரத்தில் சென்று மறைந்துவிட கையில் இருந்த பிரம்பை வீசிவிட்டு மண்ணில் விழுந்து அழுது புரண்டான். ”என்ன ஏன் விட்டுட்டு போன, அம்மா கிட்ட கூட்டிட்டு போறன்னு சொன்னல்ல.. இனிமேல் நீ வந்தா நான் உன்கிட்ட பேசமாட்டேன். அம்மா… அம்மா..” என்று கதறி அழுதான். தன் டவுசர் சட்டை எல்லாம் சேற்றில் நனைந்து செவப்பாக மாறியது. வாய்க்குள் சேற்றுத்தண்ணி போக துப்… துப்ப்…பென துப்பிவிட்டு அழுதான்.

டக்கென்று உருளுவதை நிறுத்திவிட்டு மேற்கே திரும்பி பார்த்தான். மழைக்கு ஆடு,மாடுகள் ஒவ்வொரு பக்கமாக வெள்ளாமை காட்டுக்குள் நுழைந்தது.

உடனே தூரத்தில் வீசியெறிந்த பிரம்பை எடுத்துக்கொண்டு மீண்டும் ஆடு, மாடுகளை நோக்கி நனைந்துகொண்டே ஓடினான்.

যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...