டெப்டி மேனேஜர்

bhanus.kannan
கற்பனை
4.8 out of 5 (107 )


டெப்டி மேனேஜர்


•••••

அருண்குமாரை அவள் முதல்முதலாகச் சந்தித்தது அந்த வங்கிக் கிளைக்கு மாற்றலாகி வந்த அன்றுதான். கையில் தலைமை அலுவலக டிரான்ஸ்ஃபர் கடிதத்துடன் வங்கியில் நுழைந்து யாரிடம் தரவேண்டும் என்று ஒரு கணம் தயங்கி நின்ற போது பியூன் தான் அருண்குமாரைச் சுட்டிக்காட்டி. "அவர் கிட்ட குடுங்க மேடம். அவர் தான் இந்த பிராஞ்ச்சுடைய டெப்டி மேனேஜர்!" என்றான்.


பிராஞ்சில் டெஃப்டி மேனேஜர்களின் ரோல் என்ன என்று அவளுக்குத் தெரியும். சீனியர் மேனேஜருக்கு அடுத்த இடம். வங்கியின் இரண்டாவது தலைமை. சீனியர் மேனேஜர்கள் கருவறை சாமிகள் என்றால் இவர்கள் உற்சவ மூர்த்திகள். நகர்வலம் வருவது என்னவோ உற்சவ மூர்த்திகள் தானே? அருண் குமாரும் அப்படித்தான். அங்கிங்கெனாதபடி வங்கி முழுவதும் சுற்றிக் கொண்டிருந்தார்.


"எக்ஸ்யூஸ்மி சார்.." என்று இவள் அவரை அணுகிய போது "எஸ்..ப்ளீஸ்..?" என்று நிமிர்ந்தார்.


அருண் மிகவும் எளிமையான மனிதராகத் தெரிந்தார். வங்கியின் இரண்டாவது தலைமைத் தோரணைகள் எதுவும் அவரிடம் இல்லை. நீண்ட பெரிய சாவிக்கொத்து ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டிருந்தார். ஸ்ட்ராங்க் ரூம் சாவி என்று நினைத்துக் கொண்டாள். வங்கியின் மொத்தப் பணமும் அதோடு வாடிக்கையாளர்களின் லாக்கர்களும் நிர்வகிக்கப்படும் இடம். பெயருக்கேற்ப அதன் கதவை நெம்பித் திறக்கவே அத்தனை ஸ்ட்ராங் தேவைப்படும்!


வங்கியின் வேலை நேரம் ஆரம்பிக்க இன்னும் பத்து நிமிஷம் இருந்தது. ஆனால் அருண்குமாரோடு சேர்த்து இரண்டு மூன்று பேரே வந்திருந்தார்கள். அதில் ஒருவன் இவளிடம் பேசிய பியூன்.


"உக்காருங்க மேடம். என்ன வேண்டும் உங்களுக்கு ?" என்றார். அந்த 'மேடம்'' ரொம்ப பதவிசாக இருந்தது. இவளை கஸ்டமர் என்று நினைத்து விட்டார் போல! ஒரு வாடிக்கையாளரிடம் கூட இவ்வளவு தன்மையாகப் பேசும் அவரின் சுபாவம் மனதைக் கவர "ஹெட் ஆபீஸ்லேர்ந்து வரேன் சார். இந்த பிராஞ்ச்சில் எனக்கு டிரான்ஸ்ஃபர் போட்டிருக்கு!" என்று கடிதத்தைக் கொடுத்தாள்.


"ஓ..ஃஸ்டாப்பா? வாங்க..வாங்க..உக்காருங்க..!" என்றார் நிஜமான மகிழ்ச்சியுடன். வங்கியின் வேலையைப் பகிர்ந்து கொள்ள இன்னொரு கை கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சியாக இருக்கலாம். அல்லது அவரின் சுபாவமே அப்படி மகிழ்ச்சியோடு வரவேற்பதாக இருக்கலாம்.


"இதற்கு முன்பு எந்த பிராஞ்ச்சில் இருந்தீங்க மேடம்?" என்றார். சொன்னாள்.


"ஸோ பிராஞ்ச் ஆக்டிவிட்டீஸ் நன்றாகத் தெரிந்திருக்கும் உங்களுக்கு?"


புன்னகைத்தாள்.


"டெபாசிட்டில் தான் ஆள் தேவைப்படுகிறது. அது பார்க்கிறீர்களா?"


"ஓகே சார்."


"உங்க ஃப்ரென்ட்ஸையெல்லாம் மீட் பண்ண நீங்க கொஞ்ச நேரம் காத்திருக்கணும். எல்லாரும் கொஞ்சம் நிதானமாக வருவாங்க! "


லேட்டாக என்பதை நிதானமாக என்று அவர் சொல்லிய விதம் கவர்ந்தது. அதுவும் சிரித்தபடியே ! இந்த பிராஞ்ச் ஊழியர்கள் கொடுத்து வைத்தவர்கள் தான் என்று நினைத்துக் கொண்டாள்.


அப்படித்தான் இருந்தது. லேட்டாக வந்த எவர் மீதும் அவர் கோபப்படவில்லை. "பஸ் கிடைக்கலே...ட்ராஃபிக் ஜாம்.." என்று அவர்களே ஏதோ காரணங்களைச் சொன்ன போது கூட சிரித்துக்கொண்டே தலையசைத்தார். யாரையும் எவ்விதக் குற்ற உணர்வுக்கும் ஆட்படுத்தி விடக்கூடாது என்று நினைப்பதைப்போல் இருந்தது அந்தக் தலையாட்டல்.


ஆண் ஊழியர்கள் ரொம்பவே சகஜமாக அவரிடம் இழைந்தார்கள். சில பேர் ஏதோ தமாஷ் செய்து ஜோக்கடித்து விட்டுப் போனார்கள். எல்லாவற்றையும் புன்னகையோடு அவர் அனுமதித்த விதம் பிராஞ்சுக்கு ஒரு இனிய பரிமாணத்தைத் தந்தது. இப்படிக்கூட ஆபீசர்கள் இருப்பார்களா என்று தோன்றியது.


அருண் இவளை விட சில ஆண்டுகள் வயதில் சிறியவராக இருக்கக்கூடும் என்று தோன்றியது. மூர்த்தியும் சிறிது தான். ஸ்மால் மேட்! துருதுருவென்று வீட்டில் நடமாடும் ஒரு தம்பியைப் போலவே இருந்தார். விட்டால் "என் புடவையை இஸ்திரிக்குக் கொடுத்திருக்கேன். போய் கொஞ்சம் வாங்கிட்டு வந்துடுடா தம்பி!" என்று சொல்லி விடுவோமோ என்று கூட பயமாக இருந்தது.


பெண் ஊழியை ஒருவர் வந்த போது அருண் அவரிடம் இவளைக் காட்டி "ராதா மேடம் நம் பிராஞ்ச்சில் ஜாய்ன் பண்ண வந்திருக்காங்க. இவரை எல்லாருக்கும் அறிமுகப்படுத்தி வையுங்க ப்ளீஸ்!" என்றார்.


அந்த மேடம் இவளை சீட்..சீட்டாக அழைத்துக் கொண்டு போனாள். ஆண்கள் பெண்கள் என்று நிறையப் பேர் இருந்த பெரிய பிராஞ்ச் அது. ஒரு மாதிரி இடநெருக்கடியோடு கசகசவென்று இருந்தது. பலர் புன்னகைத்து வரவேற்றார்கள். சிலர் கைகுலுக்கினார்கள். சிலர் எழுந்து நின்று ஆல் த பெஸ்ட் சொன்னார்கள். சில பெண்களின் பார்வை கொஞ்சம் எடை போடுவது போல் இருந்தது. சகஜம் தானே?


•••


அருண்குமாரைப் பற்றிய அவள் முதல் அபிப்பிராயம் சரியாகவே இருந்தது. அலுவலகத்தின் இரண்டாவது முக்கியஸ்தர் என்றாலும் அவர் குரல் எழும்பி அவள் கேட்டதில்லை.கொஞ்சம் பெண்மை கலந்த மென்மையான சுபாவம் அவருக்கு. வொர்க்கஹாலிக்! காலையில் ஆபீசில் நுழையும் முதல் ஆள் அவராகத்தான் இருப்பார். வந்த நிமிஷத்திலிருந்தே பரபரவென்று எதையாவது செய்யத் தொடங்கி விடுவார். வங்கியை விட்டுக் கிளம்பும் கடைசி நபரும் அவராகத்தான் இருப்பார் என்று நினைத்துக் கொண்டாள்..


வங்கி விரைவிலேயே பிடித்துப் போயிற்று. அதன் கலகலப்பும் சுறுசுறுப்பும் உள் நுழைகையிலேயே ஒரு உற்சாகத்தைத் தந்தது. வாடிக்கையாளர்களைப் பார்க்கிறபோது மனதில் ஒரு பூ பூத்தது. அவரவர் தேவையை நிறைவேற்றி முடிக்கிறபோது மனதில் ஒரு பெருந்திருப்தி நிலவியது. சிரித்த முகத்தோடு அவர்கள் தேங்க்ஸ் சொல்லி நகர்கிறபோது அந்த தேங்க்ஸ்களை வாங்கி கைப்பையில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றிற்று.


மற்றவர்களைப் போலல்லாமல் நேரத்துக்கு வங்கிக்கு வந்து விடுவது அவளின் இயல்பான சுபாவமாகவே இருந்தது. ஐந்து நிமிடத்தாமதம் கூட மனதைப் பதற வைத்தது. "எனக்கப்புறம் வங்கியில் நுழைகிற அடுத்த ஸ்ஃடாப் இவர் தான்!" என்று அருண்குமாரே ஒரு முறை சிலாகித்துச் சொல்லி விட்டார். பொதுவாக அவர் எவரையும் விமர்சிப்பது கிடையாது. அவர் அதிகப்படியாக பேசிய வார்த்தைகளே இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.


ஏதோவொரு வகையில் அருண்குமாரின் நடவடிக்கைகள் தன்னை ஈர்ப்பதை உணர்ந்தாள். எல்லாரோடும் அவர் நன்கு பழகுவது போல் இருந்தது. அதேசமயம் பழகாதது போலும் இருந்தது. எப்படி ஒரு மனிதரால் ஒரே சமயத்தில் இப்படி இருக்க முடிகிறது! 'ஹி ஈஸ் யூனிக்..' என்று நினைத்துக் கொண்டாள். வேலை தவிர்த்து அவளுமே அவரிடம் அதிகமாகப் பேசுவதில்லை.


அன்றைக்கு அவள் எழுதிய கதையொன்று பிரபல பத்திரிகையில் பிரசுரமாக, வங்கி ஆச்சரியப்பட்டுப் போனது.‌


"நீங்க கதை எழுதுவீங்கன்னு சொல்லவே இல்லையே மேடம்!"

"இதுவரை எத்தனை கதை எழுதியிருக்கீங்க?"

"எந்தெந்தப் பத்திரிகையில் வந்திருக்கு?"

"உங்களுக்கு ஐடியாக்கள் எப்படித் தோணும்?"

"கருவை எப்படி உருவாக்குகிறீர்கள்?"

"ஆபீஸ் குடும்ப வேலைகளுக்கிடையில் எழுத நேரம் கிடைக்கிறதா மேடம்?"

"எப்படி டைம் மேனேஜ் செய்கிறீர்கள்?"


ஒரு குட்டி இன்டர்வ்யூ போலத்தான் இருந்தது. பல சமயங்களில் பலர் கேட்டிருக்கிற கேள்விகள். எனவே பதில் சொல்வது கஷ்டமாக இல்லை.


வங்கியின் முதல் நிலை அலுவலரான சீனியர் மேனேஜர் ஒரு இலக்கியரசிகர் என்று முன்பே கேள்விப்பட்டிருந்தாள். இசை ரசிகரும் கூடவாம்! அவர் எழுந்து இவள் இருந்த இடத்துக்கே வந்து விட்டார். இவள் கதையை ரொம்பவே சிலாகித்துப் பேசினார். தனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் என்று சில பெயர்களைப் பட்டியலிட்டார். அவளுக்கு யாரைப் பிடிக்கும் என்று கேட்டுத் தெரிந்து கொண்டார். நல்ல புத்தகம் என்று அவள் நினைப்பதை தனக்கு ரெஃபர் செய்யும்படி கேட்டுக் கொண்டார். எழுத்து என்ற ஒற்றை விஷயம் சட்டென்று மற்றவர்களுக்கு இல்லாத ஒரு பரிமாணத்தை தனக்கு ஏற்படுத்தி விட்டதை உணர்ந்தாள்.


இவளைப் பலர் சூழ்ந்த போதும் அருண்குமார் மட்டும் கண்டும் காணாதது போல் இருந்ததை மனதுக்குள் குறித்துக் கொண்டாள். அவர் தன் வேலையில் கருத்தாய் இருக்கிறாரோ? தன் கதை பத்திரிகையில் வந்திருப்பது... வங்கியின் முதல்நிலை அலுவலர் முதற்கொண்டு பலர் அதைப் பாராட்டுவது அவருக்குத் தெரியாமலா இருக்கும்? குறைந்தபட்சம் ஒரு வாழ்த்துக்கூட அவர் சொல்லவில்லை என்பது ஒரு மாதிரி இருந்தது. ஒரு வேளை அவருக்கு இதிலெல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்லையோ? அல்லது ஈகோ..?


சாயந்தரம் அலுவலகம் கிட்டத்தட்ட காலியான நிலையில்

அருண்குமார் இவளிடம் வந்தார். "உங்க கதை வந்த புத்தகத்தைத் தர முடியுமா மேடம்? நான் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போய் இரவு படித்து விட்டு நாளைக்குக் காலையில் கொண்டு வந்து கொடுத்து விடுகிறேன்!"


அப்பாடா..கடைசியில் பேசி விட்டார்!


"காலையில் நிறையப்பேர் என்னை விஷ் செய்தார்கள். ஆனால் நீங்கள் கண்டுக்கவே இல்லை. ஒரு வேளை உங்களுக்குக் கதை படிப்பதெல்லாம் பிடிக்காதோ என்று நினைத்து விட்டேன் சார்?"


"ஸாரி மேடம்.." என்று நெளிந்தார்.


"என்னம்மா அப்படிச் சொல்லிட்டீங்க! சாரே எழுதுவாரு! ஒரு புஸ்தகம் கூட போட்டிருக்காரு! தெரியாதா உங்களுக்கு?" என்றார் இன்னொரு அலுவலர்.


திகைத்துப் போனாள். "நிஜமாகவா சார்? நீங்களும் எழுதுவீங்களா?!"


"ம்.." என்று கூச்சப்பட்டுச் சிரித்தார். "கதை வராது மேடம். ஆனால் கவிதைகள் எழுதுவதுண்டு.."


"கதையை விட கவிதை தான் சார் கஷ்டம் ! சுருங்கச் சொல்லி விளங்க வைக்கணும்! புக் போடுகிற அளவு எழுதியிருக்கிறீர்கள்! கிரேட்! உங்கள் கவிதைகளை கொடுங்களேன். படிச்சுட்டுத் தரேன்!"


இவள் தன் கதையையும் அவர் தன் கவிதையையும் பரிமாறிக்கொள்ள இப்படி ஆரம்பித்தது அவர்கள் நட்பு. கதை கவிதை தான் பேசுபொருள். தனிப்பட்ட முறையில் இருவரும் மற்றவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முயன்றதில்லை. அலுவலகத்தில் இருவருமே பிசி என்பதால் அருண்குமார் இவள் கதைகளை வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போய் படித்து விட்டு வருவார். பிறகு கொஞ்ச நாளில் ஏனோ உணவு இடைவேளையில் ஆபீசிலேயே படித்து விட்டு திருப்பிக் கொடுத்து விட்டார்.


"நீங்க வீட்டுக்கே எடுத்துக்கொண்டு போய் படிக்கலாம் சார். எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை." என்றாள்.


"பரவாயில்லை மேடம்.. இருக்கட்டும்.." என்றார்.


அருண்குமாரின் எழுத்தும் நன்றாகத்தான் இருந்தது. இவள் மனித உணர்வுகளை எழுத்தில் வடித்தாள் என்றால் அவர் இயற்கையை நேசித்தார். பூ..பனித்துளி, நெய்தல்.. பாலை, மலை..மலைசார் இடங்கள், மயில்..வானவில் என்பதாய் அவர் கவிதைகள் விரிந்து பரந்தது. கவிதை எழுதுவதால்தான் அவர் இத்தனை மென்மையாக இருக்கிறாரா அல்லது மென்மையாக இருப்பதால் தான் கவிதை எழுதுகிறாரா என்ற சந்தேகம் எழுந்ததுண்டு.


அவள் கதைகளைப் படித்து விட்டு, "நல்லாயிருக்கு மேடம்" என்ற ஒற்றை வார்த்தையைத்தான் பெரும்பாலும் அவர் சொல்வது. "இது எல்லாரும் சொல்வது தானே சார். ஒரு கவிஞராக நீங்கள் சிறப்பாக சில வார்த்தைகள் சொல்லலாம் இல்லையா.." என்று ஒரு முறை கேட்டபோது சட்டென்று ஒரு பேப்பரை எடுத்து உடனேயே எழுதிக் கொடுத்தார்.


'கருவில் உள்ள மனோதத்துவம்

எழுத்தில் உள்ள லாவகம்

அள்ளித்தெளித்த நகைச்சுவை

ஆங்காங்கே லேசாக சடையர்..

வியக்க வைத்து விட்டீர்கள் என்னை! '


அருண்குமாரும் வியக்கத்தான் வைத்து விட்டார்.


அதற்குப் பிறகு வங்கி பல்வேறு இடங்களில் பலரைத் தூக்கிப் போட அருண்குமார் எங்கு போனார் என்றே தெரியவில்லை. இவளுக்கும் பல மாறுதல்கள். ஏதாவது கதைகள் பத்திரிகைகளில் வருகிறபோது இலக்கிய ஆர்வலரான சீனியர் மேனேஜரின் நினைவும், அருண்குமாரின் நினைவும் வரும். அவர்கள் இருந்தால் நன்கு படித்து ரசிப்பார்களே என்று தோன்றும்.


•••


ஏழு ஆண்டுகள் கழிந்து விட்டது. ஒரு திருமணத்துக்காக சென்னைக்கு வந்திருந்தபோது வங்கியில் உடன் பணிபுரிந்த தோழியை எதேச்சையாக அங்கு சந்திக்க நேர்ந்தது. தனியாக ஓரிடத்தில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்த போது தான் அவள் அந்தத் திடுக்கிடும் தகவலைச் சொன்னாள்.


"நம்ம அருண்குமார் சார் இறந்துட்டாரே..தெரியுமா உனக்கு?"


தூக்கிவாரிப் போட்டது "எந்த அருண்குமார்? கவிதை எழுதுவாரே..அவரா?"


"ஆமாம்"


"அச்சச்சோ..என்னவாச்சு அவருக்கு?"


"கேன்சர்னு கேள்விப்பட்டேன்‌பா. நல்ல மனுஷன். பாவம். எனக்கே கொஞ்சம் லேட்டாத்தான் தெரிஞ்சது.."


ஐயோ பாவமே என்றிருந்தது. அவர் குடும்பம் குழந்தைகள் என்னவார்கள்?


குழந்தைகளின் படிப்புக்கருதி பழைய வீட்டிலேயே தான் அவர் மனைவி இன்னும் இருக்கிறாளாம். "படிப்பு முடிந்தபிறகு சொந்த ஊருக்குப் போயிடுவாங்க போலருக்கு" என்றாள் தோழி.


"அவங்க அட்ரஸ் இருக்கா உன்கிட்ட?"


"ம்"


வீடு சமீபம் தான். கண்டு பிடிப்பது ஒன்றும் கஷ்டமாக இருக்காது. அவர் மனைவியைப் போய்ப் பார்த்து விட்டு வருவது அருண்குமாருக்குச் செய்யும் மரியாதையாகப் பட்டது. லேட் இஸ் பெட்டர் தென் நெவர் தானே?


•••


"யாரு?" என்றாள் அருண்குமாரின் மனைவி கதவு திறந்து.

அவளின் வெற்று வெற்றி மனதை வருத்தியது. அறிமுகப்படுத்திக் கொண்டாள்.


"ஓ.. நீ…நீங்க தானா அது?" என்றாள்.


" ? "


"உங்களைப் பத்தி அவர் நிறையச் சொல்லிருக்கார்.."


"என்னைப் பத்தியா?"


"ஆமாம். நீங்க தானே கதை எழுதறது"'


"ஆமாம்.."


"உங்க கதை எல்லாம் ரொம்ப நல்லா இருக்குமாம். ரொம்ப ரசிச்சுப் பேசுவாரு. எனக்கு சுத்தமாப் புடிக்காது!"


"!"


"மனுஷன் வீட்டுக்கு வந்தா பொண்டாட்டியைப் பத்திப் பேசணும்! இல்ல புள்ளைங்களைப் பத்திப் பேசணும். அத்தை விட்டுட்டு யாரோ கதை எழுதறவங்களைப் பத்தி? ஒரு நாள் அவரை நல்லா கேட்டு விட்டுட்டேன்! "


" ! "


"அதுக்குப் பெறவு அவர் உங்க கதைகளை வீட்டுக்குக் கொண்டு வரதே இல்லை! "


"ம்.."


"அவர் செத்து ரெண்டு வருஷமாகுது. இப்பப் போயி விசாரிக்க வந்துருக்க?" என்றாள்.


"சாரி..எனக்கு இப்போதான் தெரியும்.."


"அதெப்படி? நீங்க ரெண்டு பேரும் போன்ல பேசிக்குவீங்க தானே? அப்போ அவர் சொல்லலியா உடம்பு சரியில்லேன்னு?"


"நாங்களா? ஃபோன்லயா! எனக்கு அவர் நம்பர் கூட தெரியாதே!"


"நிஜமாவா?!"


"ஆமாம்"


அவள் கொஞ்ச நேரம் இவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் முகம் வித விதமாக மாறியது. பிறகு மெதுவான குரலில் "ம்...நான் தான் அவர்கிட்ட தப்பா சண்டை போட்டுட்டேன் போலருக்கு.." என்றாள்.


•••

பானுமதி கண்ணன்

bhanus.kannan@gmail.com

যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...