புத்தர் கனவு

கற்பனை
5 out of 5 (6862 )

ஒரு ஊரில் புத்தரை பின்பற்றுகிறவர் ஒருவர் இருந்தார். அவர் புத்தரது போதனைகளை மிகவும் மதித்தார். புத்தரை பற்றியும் அவரது போதனைகளை பற்றியும் எவராவது தவறாகப் பேசினால் அவர்களுடன் சண்டையிட்டு அடிக்கக் கூடத் தயங்கமாட்டார். ஆனால் புத்தரது போதனைகளுக்கும் அவரது வாழ்க்கை நடைமுறைக்கும் தொடர்பு இருக்காது. சாதி பார்ப்பார் தன் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும்போது வரதட்சணை கேட்பார். பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து வைப்பார். ஆசைகளை துறக்க வேண்டும் என்ற புத்தருக்குக் கோயில் கட்டி தங்கத்தில் சிலை வைக்கப்பட்டிருப்பது போல தங்கத்தில் இவருக்கு மிகவும் நாட்டம்.

ஒரு முறை அவர் சுற்றுலாவாக புத்த மடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஒரு நாள் அதிகாலை வீடு திரும்ப இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்ததார். அப்போது ஒரு நபர் படிக்கட்டு அருகில் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்ததார். அவர் அங்கும் இங்கும் நடந்தபடி தொலைபேசியில் பேசிக்கொண்டே இருந்தார். புத்தரடியார் இறங்க வேண்டிய இரயில் நிலையமும் நெருங்கி கொண்டிருந்தது. புத்தரடியார் அருகில் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டு தொலைபேசியில் பேசிக்கொண்டே இருந்தார் அந்த நபர். அவர் தொலைபேசியில் ஹாங்காங் செல்வதை பற்றியும் பிளைட் (flight) விவரங்களையும் பேசிக்கொண்டே இருந்தார். இதை கவனித்த புத்தரடியார் இவருக்கும் இவரது உடைக்கும்‌ ஹாங்காங் செல்வதற்கும் கொஞ்சமும் பொருந்தவில்லையே என்று உள்ளுக்குள் நினைத்தபடி தான் இறங்க வேண்டிய இரயில் நிலையம் வந்ததும் தனது பைகளை எடுத்து கொண்டு இறங்கினார்.

புத்தரடியவர் தன் பைகளை வைத்து விட்டு கல்தூண் இருக்கையில் அமர்ந்து தன்னை அழைத்து செல்ல வரும் தன் மகனுக்காக காத்திருந்தார். அவர்க்குப் பின்பு இறங்கிய ஹாங்காங் நபர் மீண்டும் அவர் அமர்ந்திருந்த கல் இருக்கையில் அமர்ந்து தொலைபேசியில் பேசிக்கொண்டே இருந்தார். சற்று நேரத்திற்கு பிறகு இவரிடம் ஐயா நாளைக்கு ஹாங்காங் செல்வதற்கு பிளைட் எத்தனை மணிக்கு என்று தெரியுமா? என்று கேட்டார். உடனடியாக புத்தர் பற்றாளர் ஏன் கேட்கிறீர்கள் உங்களுக்கு அங்கே ஏதாவது வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதா? என்று கேட்டார். இல்லை இல்லை நான் அங்கு தான் பிறந்தேன். எனது குடும்பம் அங்கு தான் இருக்கிறது. இந்தியாவில் வேலைநிமித்தம் இருக்கிறேன் என்று சொன்னார். இந்த புத்தர் பற்றாளரின் சந்தேகம் வலுத்தது. ஐம்பது விழுக்காடு உறுதி செய்து கொண்டார்.

தொடர்ந்து தங்கள் பெயர் என்ன என்று கேட்டார். எனது பெயர் புரூஸ்லீ என்றும் அவரது பாக்கெட்டில் ஒரு அட்டையை எடுத்து காட்டினார். அதில் கராத்தே வீரர் புரூஸ்லீயின் நிழற்படத்தை ஒட்டி வைத்து கீழே புரூஸ்லீ என்று பெயருடன் முகவரியும் எழுதி வைத்திருந்தார். இதைப் பார்த்தவுடன் எழுபத்தைந்து விழுக்காடு உறுதி செய்து கொண்டார். மீண்டும் புத்தர் பற்றாளர் உள்ளுக்குள் சிரித்தபடி தங்களுக்கு ஏதாவது உடல் நிலை சரியில்லையா? என்று கேட்டார் அதற்கு அவர் நான் கொஞ்சம் பைத்தியம் என்றார். அந்த நிமிடம் இவர் உள்ளுக்குள் சிரித்த சிரிப்பு நின்று விட்டது. அப்பா அங்கே யாருடன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்? வாங்க போகலாம் என்ற குரல் கேட்டவுடன். தனது மகன் வந்து விட்டதைப் பார்த்து அவரது இரண்டு சக்கர வாகனத்தில் அமர்ந்தபடி யோசித்து கொண்டே சென்றார். தன்னை யார் என்று கேட்டால் அப்பா பெயர், ஊர் பெயர், செய்யும் வேலை எல்லாவற்றையும் என்று சொல்லிக் கொண்டு சரியாக பதில் சொல்ல தெரியாத மனிதர்களிடையே தன்னை ஒரு பைத்தியம் என்று அறிந்து கொண்டு அதையே தனது அடையாளமாக சொல்வது வியப்புக்குரியது என்று நினைத்துக் கொண்டார்.

வீட்டிற்கு வந்ததும் தனது மனைவியிடம் தான் வாங்கி வந்த அனைத்துப் பொருட்களையும் ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டினார். குறிப்பாக தான் வாங்கி வந்த புத்தர் சிலைகளை எடுத்துக் காட்டி புகழ்ந்து பேசி கொண்டு இருந்தார். அப்போது அவர் மனைவியிடம் அடுத்த மகனுக்கு திருமணம் செய்கிற போது வரதட்சணையாக தங்கத்தில் புத்தர் சிலை கேட்க வேண்டும் என்றார். உடனே அங்கே வந்த அவரது இளைய மகன். அந்த ஆசையெல்லாம் எனக்குக் கிடையாது. நான் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்வேன். வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்வேன் என்று சொன்னார். உடனே அந்த புத்த பற்றாளர் நீ இப்படி எல்லாம் செய்தால் நான் புத்தரை போன்று இந்த வீட்டை விட்டு சென்று விடுவேன். திரும்பி வரவே மாட்டேன் என்றாராம். சரிங்க அப்பா அதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். புத்தர் எதற்காக எல்லாவற்றையும் துறந்தார் என்று தெரியாத புத்த பற்றாளர் இவர். இவர் இங்கு இருக்க வேண்டியவர் அல்ல. இலங்கையில் ராஐபக்சேவுடன் இருக்க வேண்டியவர் என்று நினைத்து கொண்டு சென்று விட்டார் மகன்.

புத்த பற்றாளர் மனைவி ஒரு கடிதத்தை கொண்டு வந்து அவர் கையில் கொடுத்தார். அதை வாங்கி பிரித்த புத்த பற்றாளர் இது எனது நண்பர் ஒருவர் அனுப்பி வைத்துள்ளார். இதில் நமது இளைய மகனுக்கு மணப்பெண் நிழற்படத்தையும் அனுப்பி வைத்துள்ளார் என்று சொல்லி. அந்தப் படத்தை தனது மனைவியிடம் கொடுத்தார். அதை வாங்கிய அவரது மனைவி இந்தப் பெண் மிகவும் அழகாக இருக்கிறாள். நமது மகனுக்கு பொருத்தமாக இருப்பாள். கட்டாயம் அவனுக்கு பிடிக்கும் என்றாள்.அப்படியா சொல்கிறாய் என்று சொல்லி மீண்டும் அந்த பெண்ணின் படத்தை வாங்கி பார்த்தார் அந்தப் புத்த பற்றாளர். என்னமோ உன்னுடைய மகன் காதல் திருமணம் தான் செய்வேன் என்று என்னை மிரட்டி கொண்டு இருக்கிறான். ஆனால் நீயோ அவன் சம்மதம் சொல்வான் என்கிறாய். பொறுத்து பார்ப்போம் அவனுக்குத் திருமணமா இல்லை நான் வீட்டை விட்டு வெளியே செல்கிறேனா என்று சொல்லி விட்டு, சரி இந்தப் பெண் என்ன வேலை செய்கிறார் என்று ஏதாவது கடிதத்தில் எழுதி இருக்கிறதா என்று பார். ஆமாம் எழுதியிருக்கிறார், இந்தப் பெண் கீழ்பாக்கம் மருத்துவமனையில் பைத்தியம் பிடித்த மனநோயாளர்களுக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவராக பணி செய்கிறார். பைத்தியம் என்று சொன்னவுடன் புத்த பற்றாளருக்கு மீண்டும் அந்த இரயில் நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. சரி விடும்மா பிறகு பார்த்து கொள்ளலாம் என்று சொல்லி விடுகிறார்.

இந்த நிகழ்ச்சி ஒரு புறம் இவர் உள்ளத்தை தைத்துக் கொண்டிருக்க ஒரு நாள் இவர் மரத்தால் ஆன புத்தர் சிலையை செய்து வீட்டில் வைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற மரம் வெட்ட காட்டிற்குச் சென்றார். அப்போது ஒரு மரத்தை வெட்ட முயலும் போது அந்த மரம் அவரை பார்த்து சிரிக்கத் தொடங்கியது. அந்த மனிதர் அந்த மரத்தை பார்த்து ஏன் நீ என்னை பார்த்து சிரிக்கிறாய்? என்று கேட்டாராம். உடனே அந்த உயர்ந்த மரம் மனிதர்களை பார்த்தாலே எனக்கு சிரிப்பு தான் வருகிறது என்று சொல்லி விட்டு மீண்டும் சிரித்ததாம். கோபப்பட்ட புத்தர் பற்றாளர் நீ வெறும் மரம் தானே, மனிதர்களாகிய எங்களை பார்த்து சிரிக்கும் அளவுக்கு நாங்கள் எவ்விதத்தில் தரம் குறைந்து விட்டோம் என்று கேட்டார். அப்போது விழும் நிலைக்கு வெட்டப்பட்ட அந்த உயர்ந்த மரம் அவர் பக்கமாக சாய்ந்து கொண்டே சொன்னதாம். ஆமாம் மனிதர்கள் நீங்கள் எங்களைவிட தரம் குறைந்தவர்கள் தான்.ஏனென்றால் "என்னிலிருந்து ஆயிரம் புத்தர் சிலைகளை உருவாக்க முடியும் உன்னிலிருந்து ஒரு புத்தரை உருவாக்க முடியுமா?" திடிரென அவர் பக்கம் சாயும் மரத்தை கண்டு அலறி விழுந்து எழுந்து பார்த்தால் கனவு. கனவு தெளிந்து விழித்து பார்த்தார். இது புத்தர் கனவல்ல இந்தச் சமுதாயத்தை பற்றிய புத்தரின் கனவு. இது புத்தர் கனவல்ல ஒவ்வொரு தனிமனிதனை பற்றிய புத்தரின் கனவு. அன்று பேசியது புரூஸ்லி அல்ல புத்தரின் போதனை. என்னை அறிவதே ஞானம். புத்தரின் போதனைகளை அறிந்து கொண்ட நான், நான் யார் என்று அறிந்து இருந்தால் என் வாழ்க்கை முறை மாறியிருக்கும் என்று தூக்கம் தெளிந்து அவர் விழித்து கொண்டார்.

যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...