ஊஞ்சல்

leelasrkanchi
அமானுஷ்யம்
4.6 out of 5 (58 )


ஊஞ்சல்
**********
(அமானுஷ்யம்)

"பாட்டி! நான் வந்துட்டேன். நீங்க ஒளிஞ்சி வெளாடுனது போதும். வாங்க ரெண்டு பேரும் வேற வெளாட்டு வெளாடலாம்"

"அப்பு வந்துட்டியா? வா கொஞ்ச நேரம் மடியில உக்காரு. சாஞ்சாடலாம். அப்பறம் வேற வெளாட்டு வெளாடலாம்."

அப்பு ஆசையாகப் பாட்டியின் மடியில அமர,
"சாஞ்சாடம்மா சாஞ்சாடு
சாயற்கிளியே சாஞ்சாடு
குத்து விளக்கே சாஞ்சாடு
கோயில் புறாவே சாஞ்சாடு.."

பாட்டி ஆட்டுவதோடு தானும் உந்தி உந்தி சாய்ந்தாடினான் அப்பு.

"பாட்டி பந்து வெளாடலாமா?"

"சரி எடுத்துட்டு வா"

பந்தை எங்கே எப்படிப் போட்டாலும் பாட்டி லாவகமாகப் பிடித்துச் சரியாக அப்புவின் கையில் போட்டாள். அப்புவுக்குத் தானேதான் மிகச் சரியாகப் பந்தைப் பிடித்து விட்டோம் என்ற குதூகலம்.

அப்பு போட்ட பந்து ஊஞ்சலில் போய் விழுந்தது. அதையும் பாட்டி எடுத்துப் போடுமுன்,
"பாட்டி! பந்து வெளாடுனது போதும். ஊஞ்சலாடலாம் வாங்க" என்றபடியே ஓடிச் சென்று ஊஞ்சலில் அமர்ந்தான் அப்பு.

ஊஞ்சலை ஆட்டினாள் பாட்டி. படிப்படியாக வேகம் கூடி இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்குமாக ஊஞ்சல் ஆடியது. அப்புவின் கெக்கெலி கொட்டிய சிரிப்பு வீடெங்கும் எதிரொலித்தது

லதாவுக்கும் கேட்டது.

"அப்பு, வந்துட்டியா..! எதுவும் சாப்புடாம பாட்டி கூட வந்து விளையாட ஆரம்பிச்சிட்டியா?"

"பாட்டி! அம்மா வந்துட்டாங்க. அம்மா! வந்து நீங்களும் ஊஞ்சல் ல உக்காருங்க. பாட்டி நல்லா ஆட்டி விடுறாங்க."

"பாட்டி வயசானவங்க. நீயும் பாட்டியும் உக்காருங்க. நான் ஆட்டி விடுறேன்."

"வா, லதா! அப்பு ஆசைப்படறான்ல. கொஞ்ச நேரம் அவனோட நீ உக்காரு. அப்புறம் நான் உக்கார்றேன்."

லதா தயங்கியபடி வந்து அமர, பாட்டி ஆட்டிவிட ஊஞ்சல் ஆடியது.

"அத்தை! போதும்.. வந்து நீங்க உக்காருங்க. நான் ஆட்டுறேன்."

•••

"மாப்பிள்ளை, மாப்பிள்ளை! எழுந்திருங்க. வந்து இந்தக் கூத்தெப் பாருங்க. நடுராத்திரியில் ஊஞ்சலாடிக்கிட்டு இருக்குறா லதா. வாங்க, வந்து பாருங்க"
படபடவென்று கதவைத் தட்டினாள் பர்வதம்.

மனோஜ் எழுந்து பார்க்க, அருகில் படுத்திருந்த மனைவி லதாவைக் காணவில்லை. பதறி எழுந்து சும்மா சாத்தி இருந்த கதவைத் திறந்தான்.

"நடு ராத்திரியில ஊஞ்சல் சத்தம் கேட்டு வந்து ஹால்ல பாத்தா.. லதா உக்காந்து ஆடிக்கிட்டிருக்கா. நீங்களே வந்து பாருங்க."

"என்ன சொல்றீங்க அத்தை? எம்பக்கத்தில தானே படுத்து இருந்தா. எப்ப எழுந்து போனா? நான் கொஞ்சம் கண் அசந்துட்டேன்."
என்றபடி ஹாலுக்கு வந்தான்.

லதா மிகவும் குதூகலமாக ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தாள்.

"ஏங்க.. பாருங்க. அப்புவையும் என்னையும் உக்காத்தி வச்சி அத்தை ஊஞ்சலை ஆட்டுறதை..! அப்பு எப்பிடிச் சிரிக்கிறான் பாருங்களேன்."

மனோஜுக்கு ஒன்றும் புரியவில்லை.

"லதா! என்னம்மா இந்நேரத்தில வந்து ஊஞ்சலாடிக்கிட்டு.. வா. காலையில ஆடலாம்"

ஊஞ்சலின் ஆட்டம் வேகம் குறைந்தது.

"அத்தை, அப்பு! ஏன் போறீங்க? இருங்க. நாம வெளையாடலாம். ஒண்ணுமே சாப்புடாமே போறீங்களே!"

ஊஞ்சல் நின்றது.

மனோஜ் லதாவைக் கைத்தாங்கலாக ஊஞ்சலை விட்டு இறக்கினான். லதா அந்த அறையைப் பார்த்துக் கையசைத்தாள்.

"அவர் கூப்பிடறார் அத்தை. அப்புறமா வர்றேன் அப்பு. டாடா!"

மனோஜ் லதாவின் தலையைக் கோதிவிட்டபடி அழைத்துச் சென்றான்.

பர்வதம் அதைப் பார்த்துப் பெருமூச்சுடன் தனது அறைக்குத் திரும்பினாள்.

இப்பொழுதெல்லாம் லதாவின் நடவடிக்கைகள் வினோதமாக இருந்தன. இரவில் எழுந்து கொண்டு யாரோ அருகில் இருப்பதைப் போல் பேசிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருந்தாள். அடிக்கடி அவள் பேச்சில் 'அப்பு', 'அத்தை' என்ற வார்த்தைகளையே உச்சரித்தாள்.

இதோ இன்று ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தாள். எங்கே அவள் நினைவில்லாமல் வெளியே சென்று விடுவாளோ என்று இப்போதெல்லாம் வெளிக் கதவைப் பூட்டி வைக்க வேண்டி இருந்தது.

அடுத்த நாள் மனோஜ் ஆபீஸ் ஆடிட்டிங் என்று சற்றுச் சீக்கிரமாகவே செல்ல வேண்டி இருந்தது. லதா இரவில் போட்ட மாத்திரையால் அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள். பர்வதம் சமையலறையில் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள்.

பருப்பு வேகவைத்த குக்கர் விசில் சத்தம் வரவே எழுந்து ஸ்டவ்வை அணைத்துத் திரும்பினாள். மீண்டும் விசில் சத்தம். சரி.. நாம் தான் ஸ்டவ்வைச் சரியாக அணைக்கவில்லை என்று மீண்டும் அணைத்தாள். ஆனால் இவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஸ்டவ் தானாகவே எரிந்தது. மீண்டும் பலமுறை இப்படியே நடக்க அவளுக்குப் பயம் வந்தது.

சிலிண்டரை நிறுத்தி விட்டுக் காயை நறுக்கக் கத்தியை எடுத்தால் கத்தி தானாகவே நகர்ந்து கீழே விழுந்தது. அதை எடுக்கக் கீழே குனிந்தாள். கத்தி சடாரென்று மேலே நிமிர்ந்து சற்றுத் தள்ளிப் போய் இவளை நோக்கி வேகமாக வந்தது. பயத்தில் அலறினாள் பர்வதம்.

"அம்மா! என்னாச்சு? ஏன் கத்துனீங்க?"
கண்ணைக் கசக்கியபடியே வந்த லதா
கீழே விழுந்து கிடந்த கத்தியைக் குனிந்து எடுத்து வைத்தாள்.

பயத்தில் வாயடைத்துப் போய் நின்றிருந்த பர்வதத்துக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

"கத்தி கீழே விழுந்ததும்மா. அது காலைக் குத்திடுமோன்னுதான் கத்தினேன்" என்று ஏதோ சொல்லிச் சமாளித்தாள்.

"அம்மா! இதோ பத்து நிமிஷத்துல குளிச்சிட்டு வந்து நான் சமையல் செய்றேன். நீங்க போய் ரெஸ்ட் எடுங்க"
என்று சொல்லிக்கொண்டே பதிலை எதிர்பார்க்காமல் போய் அறைக் கதவைச் சாத்திக் கொண்டாள் லதா.

பர்வதத்துக்குச் சமையலறையில் நிற்கவே பயமாக இருந்தது. வெளியில் வந்து ஹாலில் ஊஞ்சலில் அமர்ந்து கண்களை மூடி, நிதானமாக மூச்சை இழுத்து விட்டாள்.
அன்று நடந்ததை அசை போட்டாள்.

அன்று லதா காய்கறிகள் வாங்க வெளியே சென்றிருந்தாள்.

அலுவலகத்திலிருந்த மனோஜுக்கு அவனது தாயார் யசோதாவும் குழந்தை அப்புவும் வாந்தி எடுத்து மயக்கமாக இருப்பதாகப் போன் வந்தது.

அவன் பதறி அடித்து வந்து இருவரையும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றும் ஏதும் பயனின்றி இருவருமே மயக்கம் தெளியாமலேயே உலகை விட்டுச் சென்றுவிட்டனர்.

இதைப் பார்த்த லதாவுக்கு உடல் நலமில்லாமல் போக, பர்வதம் வீட்டைக் கவனிக்க வந்து சேர்ந்தாள். லதா மட்டும் இன்னும் தனது குழந்தை அப்புவும் தனது மாமியாரும் வீட்டில் இருப்பது போலவே நடந்து கொள்வதுதான் விசித்திரமாக இருக்கிறது.

ஊஞ்சல் மெதுவாக அசைந்தது. பின் மெதுவாக ஆடத்தொடங்கியது. பர்வதம் தன்னை யார் ஆட்டுகிறார்கள் என்று கண்களைத் திறந்து பார்த்தாள். யாருமில்லை. பயத்தில் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.

ஊஞ்சல் இப்போது வேகமெடுத்து இரண்டு கோடிகளுக்குமாக ஆடியது. பர்வதம் சத்தமிட முயற்சித்து, தோற்று, அவள் தொண்டைக்குள்ளிருந்து வினோதமான ஒரு ஒலி வெளியேறியது.

இப்போது அவள் காதில் கிசுகிசுப்பாக, "என்ன பர்வதம்! அன்னிக்கு என்ன நடந்ததுன்னு நீயே எல்லார்கிட்டயும் சொல்லி ஜெயிலுக்குப் போறியா, இல்லை சொல்லாமே நரகத்துக்குப் போறியா?"
என்ற யசோதாவின் குரல் ஒலித்தது.

"இன்னும் கொஞ்சம் வேகமா ஆட்டலாமா பாட்டி?"
அப்புவின் மழலைக் குரல்!

"ஐயோ! என்னை விட்டுடுங்க. நான் எல்லாத்தையும் சொல்லிடறேன்."

"போலீஸ்கிட்டே சொல்லணும்."

"சொல்றேன். எல்லார்கிட்டேயும் சொல்றேன்."

லதா வந்தாள்.

"அம்மா! உங்களையும் அத்தையும் அப்புவும் ஊஞ்சலாட்டுறாங்களா? ஜாலிதான்!"

"லதா! மனோஜை உடனே போலீஸைக் கூட்டிட்டு வரச் சொல்லு. ஏன்னு கேட்டா எங்களைக் கொன்ன கொலைகாரியைக் கைது பண்ணன்னு சொல்லு. உங்கப்பாவையும் வரச் சொல்லு . சீக்கிரம்."

லதாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

"அத்தை! என்ன சொல்றீங்க? அம்மாவா கொலைகாரி?"

"எல்லாத்தையும் பர்வதமே வாக்குமூலத்தில சொல்லுவா. நீ ஃபோன் பண்ணு."

லதா ஃபோன் பண்ணினாள்.

எல்லோரும் வந்து சேர்ந்தார்கள்.

பர்வதம் திக்கித்திணறி சொன்னதிலிருந்து..

லதாவின் ஜனனமும் அவளது தாயின் மரணமும் ஒன்றாக நிகழ்ந்தன. உறவினர்கள் கூடி லதாவின் தந்தைக்குத் தூரத்துச் சொந்தமான ஆதரவற்ற பர்வதத்தைக் குழந்தையைப் பார்த்துக் கொள்ள என்று இரண்டாவதாகத் திருமணம் முடித்து வைத்தார்கள்.

லதா பர்வதத்தை 'அம்மா' என்று அழைத்தே வளர்ந்தாள். பர்வதமும் லதாவை நல்லபடியாகவே வளர்த்தாள். அடுத்த இரண்டாவது ஆண்டில் பர்வதத்துக்கு ராதா பிறந்தாள்.

லதா, ராதா இருவருக்குமே எதையும் ஒன்று போலவே வாங்கித் தந்து வளர்த்தாலும் நாட்கள் செல்லச் செல்ல ராதாவுக்குத் தன் பொருட்களை விட லதாவிடம் இருக்கும் பொருட்கள் தான் பிடித்தன.

லதாவுக்குத் திருமணப் பேச்சு ஆரம்பித்து, அவளைப் பெண் பார்க்க வந்த முதல் மாப்பிள்ளை மனோஜுக்கும் லதாவுக்கும் ஒருவரையொருவர் பிடித்துப் போக இருவருக்கும் திருமணம் நடந்தது.

மனோஜின் தாய் யசோதா லதாவைத் தன் மகளாகவே நடத்தியதையும் மனோஜின் தோற்றம், படிப்பு, பதவி, குணம், அவன் லதாவிடம் காட்டிய அன்பு எல்லாமுமாகச் சேர்ந்து ராதாவைத் தனக்கும் மனோஜைப் போலவே தான் மாப்பிள்ளை வேண்டும் என்று எண்ண வைத்துவிட்டன.

இதனிடையே லதா குழந்தை உண்டானாள். அவளை மனோஜும் அவனது மாமியாரும் அப்படித் தாங்கினார்கள்! பிரசவத்திற்குக் கூட அவளைப் பிறந்த வீட்டிற்கு அனுப்பவில்லை.

லதாவின் பிரசவத்திற்குப் பர்வதம் வந்து மருத்துவமனையிலும் பிறகு வீட்டிலும் உதவியாக இருந்தாள்.

குழந்தையைப் பார்க்கத் தன் தந்தையுடன் வந்த ராதாவும் சில நாட்கள் அங்கு தங்கிச் சென்றாள்.

அப்பு பிறந்ததிலிருந்து லதாவின் மாமியார்தான் அவனைப் பார்த்துப் பார்த்து வளர்த்தார். அப்புவும் பாட்டியிடம்தான் அதிகம் ஒட்டிக் கொண்டான்.

இதையெல்லாம் பார்த்துப் பார்த்து ராதாவுக்கு மனோஜ் மாதிரி என்பதைவிட மனோஜே தன் கணவனாக வேண்டும் என்ற ஆசையே வந்துவிட்டது.

ராதாவுக்கு வரன் பார்க்க ஆரம்பித்தார் தந்தை. வருபவர்களையெல்லாம் தட்டிக் கழித்தாள் ராதா. இறுதியில் பர்வதத்திடம் உறுதியாகத் தனக்கு மனோஜ்தான் வேண்டும் என்று கூறிவிட்டாள்.

அப்புவின் மூன்றாவது பிறந்த நாள் விழா வந்தது. லதாவின் தந்தை நடராஜன், பர்வதம், ராதா மூவரும் வந்திருந்தார்கள். விழா முடிந்ததும் நடராஜன் கிளம்பினார்.

ராதா தன் பையை எடுக்க அறைக்குள் வந்தாள்.
"அங்கங்கே பெத்தப் பொண்ணுக்காக என்னென்னமோ செய்றாங்க. என் வாழ்க்கையே மனோஜுடன்தான்னு சொல்லியும் நீ ஒரு துரும்பையும் எடுத்துப் போடல. மனோஜ் இல்லைன்னா நான் உயிரோடயே இருக்க மாட்டேன்."

"சரி. நீ அப்பாவோட கெளம்பு. நான் ஏதாவது ஏற்பாடு பண்ணிட்டுப் பெறகு வர்றேன்."

இருவரும் அறையை விட்டு வெளியேற, உள்ளே பீரோவில் எதையோ வைத்துக் கொண்டிருந்த யசோதாவின் காதில் இந்த உரையாடல் விழுந்து, அவளைத் துணுக்குற வைத்தது.

அவர்கள் அனைவரும் சென்ற பிறகு யசோதா பர்வதத்திடம் வந்தாள்.

"பர்வதம்! ஒம்பொண்ணு ஏதோ குழந்தை பொம்மையை வாங்கிக் குடுன்னு கேக்குற மாதிரி மனோஜ் தான் வேணும்னு கேக்குறா. நீயும் சரி ஏற்பாடு பண்றேன்னு சொல்லியனுப்பறே. இது லதா அப்பாவுக்குத் தெரியுமா?

லதாவும் நீ வளத்த பொண்ணுதானே? அவளுக்குத் துரோகம் செய்யலாமா? இப்ப அப்பு பிறந்துருக்கான்.
மனோஜோ நானோ இதுக்குச் சம்மதிப்போமா? இல்லே நான் உயிருள்ளவரை இப்படி நடக்கத்தான் விடுவேனா? இப்படி ஒரு எண்ணமிருந்தா இனிமே வீட்டுப் பக்கமே வரவேண்டாம்."

"இல்லை சம்பந்தி மா. நான் ராதாவைச் சமாதானப் படுத்தறதுக்காகச் சும்மா சொல்லி அனுப்புனேன். அப்படியெல்லாம் நான் கேப்பனா? நானும் அவங்களோடயே கிளம்பி இருப்பேன். விசேஷம் நடந்த வீடு. எல்லாம் போட்டது போட்டபடி கிடக்குதே..! கொஞ்சம் ஒழுங்கு படுத்திட்டு நாளைக்குத் கிளம்பலாம்னு தான் நான் நின்னேன்."

சொன்னது போல் சாமன்களையெல்லாம் ஒழுங்கு படுத்தி விட்டுத்தான் தூங்கினாள்.

அடுத்த நாள் மனோஜ் ஆபீஸ் கிளம்ப, லதா கடைக்குப் கிளம்ப, பர்வதமும் ஊருக்குக் கிளம்பினாள்.

எல்லாரும் கிளம்பிய பின்தான் யசோதாவுக்கும் அப்புவுக்கும் இப்படி நடந்தது.

நடந்தது என்ன?

கிளம்புமுன் கடைசியாக எல்லோரும் சாப்பிடும் போது யசோதா சாப்பாட்டில் மட்டும் விஷம் கலந்திருந்தாள் பர்வதம். எப்போதும் போல அப்பு பாட்டிக் கையால் ஊட்டிக் கொண்டான்.

உண்மையில் அந்த விஷம் லதாவுக்காகக் கொண்டு வந்தது. யசோதாவுக்கு உண்மை தெரிந்துவிட்டதால் அவளைக் கொல்ல வேண்டியதாயிற்று.

எல்லோரும் சென்று அரை மணி நேரம் கழித்து விஷம் வேலை செய்து அப்புவையும் யசோதாவையும் பலி வாங்கிவிட்டது.

பர்வதம் சொல்லச் சொல்ல, மனோஜுக்கும் நடராஜனுக்கும் வந்த கோபத்திற்கு அளவே இல்லை. விட்டிருந்தால் பர்வதத்தை அவர்கள் அடித்தே கொன்றிருப்பார்கள்.

போலீசார் பர்வதத்தின் வாக்கு மூலத்தை வாங்கிக் கொண்டு அவளைக் கைது செய்து அழைத்துச் சென்றார்கள்.

லதா அழுதுகொண்டே "அத்தை! அப்பு! நீங்க நெஜமாவே இறந்துட்டீங்களா? எங்க கூடவே நீங்க எப்பவும் போல இருங்க. நீங்க இல்லாமே என்னாலே இருக்க முடியாது." என்று அவர்கள் இருந்த திசையைப் பார்த்துக் கதறினாள்.

"லதா! எங்களைக் கொன்னவ இந்தப் பர்வதம் தான் என்பதையும் அவளது கெட்ட நோக்கத்தையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வரத்தான் இத்தனை நாளா இங்கே இருந்தோம். எங்க வேலை முடிஞ்சுது.

மனோஜிடம் சொல்லி எங்க ரெண்டு பேருக்கும் ஆத்ம சாந்தி ஹோமமும் பரிகாரங்களும் செய்யச் சொல்லு. எங்களை நல்லபடியாக வழியனுப்பி வையுங்க."
என்றது யசோதாவின் குரல்.

"ஆமாம் அம்மா" என்றது அப்புவின் குரல்.

லதா அழுதுகொண்டே நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டாள்.

ஒரு நல்ல நாளில் ஹோமமும் பரிகார பூஜைகளும் செய்து அப்புவையும் அவன் பாட்டியையும் வழியனுப்பி வைத்தார்கள்.

‌ ******

லீலா ராமசாமி,
96/55A, அன்னை இந்திராகாந்தி சாலை, காஞ்சிபுரம்.
631502.

அலைபேசி எண்:
9442609957
6381108203

যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...