சின்ன ஆசை

கற்பனை
4.4 out of 5 (38 )

சின்ன ஆசை

நிலவு மறைந்து ஆதவன் வருகைத் தர, மெல்ல வெளிச்சம் வரத்தொடங்கிய அந்த அதிகாலை பொழுதில் பெண்கள் வாசலைக் கூட்டி சாணம் தெளித்துக் கோலம் போட்டுக் கொண்டிருந்தனர்.

வழக்கம் போல தேதியை கிழிக்க சென்றவள், அன்றைய தேதியைப் பார்க்க மனதில் ஒரே குஷி. அப்போதே ஓடிச்சென்று தன் அன்னையிடம் மனதில் உள்ள சின்ன ஆசையைக் கேட்டவள், அவர் பதிலால் நாள் பூரா அதே நினைப்புடன் சுத்தினாள்.

பகல் போய் இரவும் வந்து மணி பத்திற்கு மேலே ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் தூக்கம் வந்த பாடில்லை அவளுக்கு; அவள் அனு; எட்டு வயதுடைய சிறுமி.

அவள் தூக்கம் தூரம் போகக் காரணம் நாளைக்கு அடுத்த நாள் அவள் பிறந்தநாள்.

இன்று காலை அன்னையிடம், "இந்த பொறந்த நாளுக்கு எனக்கு புதுத்துணி வேணும். அதுவும் சுடிதார்…" என அடம்பிடிக்க,

கடன்வாங்கியாவது வாங்கி கொடுத்து விட வேண்டும் என நினைத்தாலும், கைக்கு காசு வராமல் உறுதி கொடுக்க அவரால் இயலவில்லை.

"சரி பாக்கலாம்" என்பதோடு முடித்துக் கொண்டார்.

பொறுப்பற்ற கணவன், வேலை சென்று குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் மனைவி, பதின்ம வயதில் இரண்டு பெண் பிள்ளைகள், ஒரு பையன், கடைக்குட்டியாக மீண்டும் பெண். இதுவே அந்தக் குடும்பம்.

வீட்டில் அனைவரின் வயிற்றை நிறைக்கவும், அன்றாட தேவைகளுக்கும் அந்த ஊரில் உள்ள ஒரு சிறிய கர்ச்சீப் ஓட்டும் கார்மென்ட்சில் வேலைக்கு சென்றார்.

காலம் செல்ல வளர்ந்த இரு பெண் பிள்ளைகளும் அவருடன் இணைந்து கொண்டனர்.

அன்னை மரகதம் ஞாயிறு தவிர்த்து வேலைக்கு செல்ல, அவரின் இரு மகள்கள் வார இறுதியில் வேலைக்கு செல்வர்.

மரகதம் சமயம் காட்டு வேலைக்கு செல்வதும் உண்டு.

ஆனால் இதுவெல்லாம் அவர் கணவர் ராஜாவிற்கு எந்த உறுத்தலையும் ஏற்படுத்துவதில்லை போலும்.

அனைத்தையும் பார்த்தாலும் தனக்கு நேரத்திற்கு சாப்பாடும், அவ்வப்போது செலவிற்கு காசும் கொடுத்தால் போதுமென இருந்து கொள்வார்.

பொறுப்பற்ற குடும்பத்தலைவன் இருந்தால் எத்தனை கஷ்டங்கள் பட வேண்டுமோ அதையெல்லாம் அனுபவித்துக் கொண்டிருந்தது அந்தக் குடும்பம்.

ரேஷன் அரிசியே அவர்கள் பெரும்பாலும் உண்பது. குழம்பிற்கு பெயருக்காக எதும் செய்து கொள்வர்.

பெரிதாக வசதி வாய்ப்பு இல்லாவிட்டாலும், ராஜாவின் தந்தை உழைப்பின் பொருட்டு அவர்களுக்கு நிலம் இருந்தது.

அதை விற்று கட்டிய சொந்த ஓட்டு வீட்டில்தான் இருந்தனர்.

அந்த வீட்டிற்கு சிமெண்ட் பூச, கரண்ட் வாங்க, பின்னால் உள்ள பழைய குடிசைக்கு கூரை மேய என தேவை வர, சம்பாதித்த காசு பற்றாமல் கடன் வாங்குவது,

பின் அதைக் கட்ட மரகதத்திற்கு இருக்கும் காட்டினை அவர் பெற்றோர் மற்றும் உடன் பிறப்போடு சண்டையிட்டு திட்டு வாங்கியாவது கையெழுத்து மூலம் அப்போதைக்கு விற்று பணம் வாங்கிக் கடனை அடைப்பது என்பது வழக்கமானது.

காரணங்கள் மாறியது காட்டை விற்பது மாறவில்லை!

கொடுத்தக் காசை சரியாக உபயோகம் செய்து நிலையான வருமானம் பெரும் திறமையில்லாமல், காசு தீரும் வரை கொஞ்ச காலம் நன்றாக போகும் அவர்கள் வாழ்க்கை, பின் மீண்டும் அதே நிலைக்கு வந்துவிடும். இதுவே அவர்கள் குடும்ப பொருளாதார நிலை.

காசு இல்லாவிட்டாலும் அன்பான அழகான குடும்பம்தான்.

இதையேதும் அறியாத அச்சிறுமி நாளை தன் அன்னை தனக்கு புதுத்துணி வாங்கித் தருவார் என நம்பிக் கொண்டு சிறிது நேரத்தில் கண்ணயர்ந்தது.

'அவள் ஆசை நிறைவேறுமா?'

அடுத்த நாள் எழுந்து அன்னை பின் சுற்றியவள், "எப்போம்மா கடைக்கு துணி எடுக்க போவோம்?" என கேட்டுக்கொண்டே இருந்தாள்.

அவரும் தெரிந்த சிலரிடம் கடன் கேட்டு பார்த்து விட்டார், இல்லை என்றுவிட்டனர். கையிலும் காசு இல்லை. அன்று நேரம் அப்படி இருந்தது போல.

அவளிடம் முடிந்தளவு பொறுமையாக பேசிக்கொண்டிருந்தவருக்கு மனதுக்குள் அத்தனை வருத்தமாக இருந்தது.

அவருக்கு ஆசையில்லையா என்ன தன் பிள்ளைக்கு புதுத்துணி வாங்கித்தர?காசு இல்லையே...

ஒருக்கட்டத்தில் இயலாமை கோபமாக மாற, பிள்ளையை அடித்து விட்டார்.

"சும்மா துணி துணினு... இருக்கிறத போய் போடு" என கூறிவிட்டு நகர்ந்து விட, அனு அழ ஆரம்பித்தாள்.

'அவள் ஆசையை குறை சொல்வதா?'

'அது நிறைவேற வருமானம் இல்லாமல் இருக்க காரணமானவரை குறை சொல்வதா?'

'ஒருவேளை அவள் ஆசை அத்தனை தவறோ?'

வருடத்திற்கு ஒரு துணி என்பதே அவர்களுக்கு பெரிய விஷயம்தான். அவர்கள் வேலை செய்யும் கார்மென்ட்சின் சொந்தக்காரரின் மனைவி அவர்கள் வீட்டுப் பிள்ளைகளின் பழைய துணி, பத்தாத துணியை அவ்வப்போது கொடுப்பார். அதை அணிந்து கொண்டு இவர்களும் சுற்றுவர்.

ஆனால் அவளுக்கு பிறந்தநாளுக்கு புதுத்துணி வாங்க ஆசையாக இருந்தது.

'எல்லா ஆசையும் நிறைவேறிவிடுமா?'

'எல்லார் ஆசையும் நிறைவேறிவிடுமா?'

மரகதத்தின் தந்தை அவருக்கு ஒரு சிறிய துணி தைக்கும் மெஷினை வாங்கி கொடுத்திருந்தார். மோட்டார் வைத்ததில்லை; காலில் மிதித்து தைக்க வேண்டும்.

மகள் நிலை அறிந்தவரால் செய்யப்பட்ட ஒரு உதவி!

அவரும் சில பல நாள் தையல் வகுப்பிற்கு சென்று ஓரளவிற்கு துணி தைக்கப் பழகிக் கொண்டார்.

ஊரில் உள்ளவர்கள் துணியில் தையல் விட்டுப் போனால் இங்குதான் வருவர்.

ஜாக்கெட், உள்பாவாடை, தலையணை உறை, சுருக்குப்பை போன்றவற்றை ஓரளவு தைப்பார்.

லுங்கி மூட்டுவது, துணி டைட் பிடிப்பது போன்றவையும்...

ரொம்ப அதிகம் இல்லாவிட்டாலும் அதுவும் அக்குடும்பத்திற்கு ஒரு முக்கிய வருமானம்தான்.

அன்று முழுவதும் அழுத மூஞ்சியாக சுற்றியக் குழந்தையைத் தேற்ற கை பரபரத்தாலும், மனதை அடக்கியவர் தன் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார்.

அழுது பார்த்தவள், மூஞ்சை பாவமாக வைத்திருந்து பார்த்தவளை பெரிதாக யாரும் கண்டு கொள்ளவில்லை.

பொழுது சாய அவளும் சாப்பிட்டுவிட்டு தூங்கிப்போனாள்.

யோசனை செய்த மரகதம் தன்னிடம் இருந்த ஒரு பச்சை நிற பட்டு சீலையை எடுத்தார்.

அவருக்கு ரொம்ப நேக்காகவெல்லம் சுடிதார் தைக்க வராது. ஆனாலும் தைக்கத் தெரிந்த அளவு இரவே அந்த பட்டு புடவையை வெட்டி சுடிதாராக தைத்துக் கொண்டிருந்தார்.

ஓரளவு முடிய ரொம்ப தூக்கம் வரவும் படுத்தவர், காலையில் எழுந்து வீட்டு வேலையை முடித்து விட்டு மீண்டும் தைப்பதைத் தொடர்ந்தார்.

மகள் எழுந்ததுமே சமாதானம் செய்து கொஞ்சியவர், பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல, அவளும் கோபம் விட்டு அன்னையுடன் சேர்ந்து கொண்டாள்.

அப்போது, "இந்த வருசம் உனக்குத் அம்மா சுடிதார் தச்சு தரேன். அடுத்த வருசம் புது துணி வாங்கித்தரேன்" எனக்கூற,

அவள் மனதுக்குள் 'அப்போ புதுத்துணி கண்டிப்பாக இல்லையா?' என வருத்தம் கொண்டாலும், கேட்டால் மீண்டும் அன்னை கோபம் கொள்வாரோ என மண்டையை ஆட்டினாள்.

வீட்டில் உள்ளவர்கள் கூறிய வாழ்த்தையும் சிரித்துக்கொண்டு ஏற்றுக்கொண்டாள். அனைவரும் தன் பிறந்தநாளுக்கு வாழ்த்துக் கூறுவதில் ஒரு மகிழ்ச்சி.

சாப்பிட்டவள் அவர்கள் வீட்டிற்கு சில வீடு தள்ளி உள்ள ஒரு வீட்டின் குட்டி மதில் சுவரில் ஏறி உட்கார்ந்து கொண்டாள்.

அவளுக்கு அழுகையாக வந்தது. தூங்கும் முன் காலையில் அம்மா, 'புதுத்துணி வாங்கப் போலாம்' என அழைக்க மாட்டாரா என்ற நப்பாசை இருந்தது. ஆனால் இப்போது அது கண்டிப்பாக நடக்கப் போவதில்லை என புரிய, கண்ணீரைத் துடைத்தவாரு சுற்றியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

சில மணித்துளிகள் கழித்து பிள்ளையைத் தேடி அவர் குரல் கொடுக்க, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வீட்டிற்கு ஓடினாள்.

அவர் அந்த பச்சை நிற சுடிதாரை எடுத்து நீட்ட, ஏனோ அப்போது அவளுக்கு கடைக்குச் சென்று வாங்கித் தரவில்லையே என்று தோன்றவில்லை; தனக்காகவே... தன் பிறந்தநாளுக்காகவே தைக்கப்பட்டது என்ற எண்ணம் வந்தது போலும். அனைத்தையும் மறந்தவள் சிரிப்புடன் அதனை வாங்கி, குளித்து விட்டு அணிந்து கொண்டாள்.

கொஞ்சம் லூசாகதான் இருந்தது. அது ரொம்ப புது பட்டுப்புடவையும் அல்ல. கொஞ்சம் பழசுதான்.

ஆனால் அதுவெல்லாம் அனுவிற்கு தெரியவில்லை. அவளுக்குத் தெரிந்தது அவள் நினைத்த புது சுடிதார் அவள் கைக்கு வந்துவிட்டது.

அன்னை சொல்லால் கூறும்போது வராத சந்தோஷம், கண்ணால் கண்ட போதும், அதை அணிந்து கொண்ட போதும் வந்தது.

வீட்டில் அனைவரிடமும் எப்படி இருக்கு என்று கேட்டு வலம் வர, அனைவரும் சூப்பர் என்று கூறவும் பல்லைக் காட்டியவள், அன்னையை கட்டிக்கொள்ள, அவளை நெட்டி முறித்து கன்னத்தில் இதழ் பதித்தவர் பாசமாக அணைத்துக்கொண்டார்.

যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...