தீர்த்தக்கரை ஓரத்திலே

காதல்
4.3 out of 5 (26 )

பத்மா கிரகதுரை

எழுதிய

தீர்த்தக்கரை ஓரத்திலே


"சுபா , ஆடி திருவிழாவிற்கு நம் குலதெய்வம் கோவிலுக்கு போய்விட்டு வரலாமா ? " உயிரொளியற்ற வெறுமை சுமந்த மகளின் கண்களை பார்த்தபடி கேட்டாள் மனோகரி .


" என்னம்மா ஆச்சர்யம் ? எல்லோரும் போகிறோமா ? அப்பாவுமா ?"


" ம் ..வந்து ...உ...உனக்கு விவாகரத்து கிடைத்துவிட்டால் வருவதாக நேர்ந்திருந்தாராம் .இப்போதுதான் எல்லாம் முடிந்துவிட்டதே .அதுதான் போகலாமென்று…" கரகரத்த தாயை வெறுமையாக பார்த்து தலையசைத்தாள் .


அப்பாவிற்கு இந்த குலதெய்வ வழிபாடு , சொந்த ஊர் , உறவுகள் போன்றவற்றில் அவ்வளவாக பற்றிருந்ததில்லை .இப்போதென்னவோ…!?மேலே யோசிப்பதை தலை உதறி நிறுத்தினாள் சுபலட்சுமி .


அப்பாவின் சொந்த ஊரான வேலங்குடிக்கு போய் சேர்ந்தபோது மாலை வந்துவிட்டது .தாத்தாவின் வீட்டு வாசலில் இறங்கியதுமே அவளது பார்வை தானாக எதிர்வீட்டுப் பக்கம் போனது .அதிக விளக்குகளின்றி இருளாக இருந்தது எதிர்வீடு.அவள் மனம் கப்பிய இருளில் சிறிதோ அங்கும்! தலையுதறி நினைவுகளை களைந்து வீட்டிற்குள் நுழைந்தாள்.


"பாப்பா" ஓடி வந்து அணைத்துக் கொண்ட பாட்டியின் உடல் கதகதப்பு அவளுக்கு அந்நேரம் அவசியமாயிருந்தது.தன் தோளில் கிடந்த பாட்டியின் காது பாம்படத்தை ஒற்றை விரலால் வருடி…


"இது எப்போ தருவீங்க பாட்டி?" என்றாள்.


கண்ணீரை உள்ளிழுத்து புன்னகைத்தார் பாட்டி.குழி விழுந்த கன்னங்கள் மிக வசீகரமாய் சுபாவிற்கு பட்டது.


"உனக்குத்தான்டி ராசாத்தி.இப்பவே கூட வாங்கிக்கோ"


பாம்படத்தை தொட்ட பாட்டியின் கையை விலக்கினாள்."இப்போ இல்ல பாட்டி.என் கல்…"கிட்டித்து நின்றது அவள் நாக்கு.வழக்கமான பேச்சு தன்னையறியாமல் வந்துவிட்டது.


"என் கல்யாணம் வரைக்கும்தான் பாட்டி இது உனக்கு.கல்யாணம் முடிந்ததும் எனக்கு கழட்டி கொடுத்துடனும்"


பாட்டியின் வித்தியாசமான இந்த கம்மலில் சிறுமியிலிருந்தே சுபலட்சுமிக்கு ஒரு கண்.இது போல் எனக்கும் வேண்டுமென சிறுபிள்ளையில் அடம் பிடித்திருக்கிறாள்.கொஞ்சம் விபரம் தெரிந்ததும் கழட்டி கொடு என தகப்பனை பெற்றவளை மிரட்டுவாள்.


"உனக்கு கல்யாணம் முடியட்டும்.பிறகு தருகிறேன்" சிறுபிள்ளையை இப்படி பேசி சமாளித்து விடுவார் பாட்டி.


பிறகு அவளது கல்யாணம் நடந்த போதோ! பாம்படத்தை கேட்கவோ...கொடுக்கவோ இருவரது மனதிலும் தெம்பில்லை.


சற்று முன் எதிர்வீட்டில் தெரிந்த இருள் இப்போது பாட்டி வீட்டிற்குள் படர்ந்தாற் போலிருந்தது. சூழலின் கனத்தை குறைக்க தாத்தா மெல்ல செருமினார்.


"சாப்பிட்டு பேசலாமே.வாங்க"


கொத்தும் ஞாபகங்களிலிருந்து தப்ப அனைவரும் அவசரமாக அந்த இடத்தை விட்டு நீங்கினார்கள்.


தாத்தா , பாட்டியின் வரவேற்பில் நெகிழ்ந்து , இரவு உணவு முடித்து வெளியே வந்த போது…


எதிர் வீட்டு வாசல் வேப்பமர ஊஞ்சலில் நிழலுருவமாக அமர்ந்திருப்பது யார் ? சுபலட்சுமியின் மனம் படபடத்தது.வாசலில் இவள் தோன்றியதும் மெல்ல அந்த ஊஞ்சல் ஆடத் துவங்கியது.


" இந்த வருசம் எதிர் வீட்டிலும் குலதெய்வ வழிபாட்டிற்குன்னு சனங்க வந்திருக்காங்க " பாட்டி சொல்ல இவளுக்குள் மழைக்கால தட்டான்களின் சிறகசைப்பு .


மறுநாள் காலை கிராமமே அமர்க்களப்பட்டது .எல்லோருடைய வீட்டு வாசலிலும் தவறாமல் ஒரு கூண்டு வண்டி நின்றிருந்தது. அதன் மேல் சாமான்கள் கட்டப்பட்டிருந்தன .வண்டிகளின் கீழே மாடுகளுக்கான உணவுகள் சேகரிக்கப்பட்டிருந்தன .


" நல்லநேரம் தொடங்கியாச்சு . கிளம்பலாம் " கிராமத்து மூத்தவர் சொல்ல ஜல் ஜல்லென்ற சலங்கை ஓசைகளுடன் ஒன்றன் பின் ஒன்றாக அனைத்து வண்டிகளும் கிளம்பின.


அனைவரும் குலதெய்வமான அழகர் கோவில் பதினெட்டாம்படி கருப்பசாமியை தரிசிக்க செல்கின்றனர்.இது போல் பழமை மாறாமல் வண்டி கட்டிப் போய் குலதெய்வத்தை வழிபடுவதுதான் அவர்களது வழக்கம் .


சுபலட்சுமியின் தாத்தா வண்டி பெரியதாக உள்ளே இலவம்பஞ்சு மெத்தை போடப்பட்டு அமர வசதியாக இருந்தது .எதிர் வீட்டு வண்டியும் பெரியதுதான் .ஆனால் அதில் வைக்கோல் போர் மெத்தைதான் .காரணம் பணமில்லாமை இல்லை .பந்தா இல்லாமை .


பின் தொடர்ந்து வரும் வண்டியில் வண்டிக்காரரருகே அமர்ந்தபடி போனை நோண்டிக் கொண்டு வரும் அவன் சுதந்திரன் , இவளை பார்த்தான் போல் இல்லை.முதல் நாளிரவு ஊஞ்சலாட்டத்தின் போது பார்த்தான்தானே? அப்படித்தானென்று அறுதியிட்டது அவள் மனது.


கண்களால் அவன் வண்டியின் உட்புறம் சலிக்க , அவன் அப்பா அம்மா தாத்தா பாட்டி தவிர அவனுக்கருகே சிறு காலி இடம் .அவன் மனைவியினுடையது ?


சுதந்திரம் என்ற வார்த்தையில் அதீத பற்று வைத்த அவனது தாத்தா வைத்த பெயர் சுதந்திரன் .முன்னொரு நாள் சிறு கிண்டலுடன் அவன் பெயரைக் குறிப்பிட்ட போது கிடைத்த விளக்கம் இது .


" அண்ணா என்ன பாட்டு கேட்கிறீங்க ? " பக்கத்து வீட்டு பொடியன் இவளருகிலிருந்து கத்தலாக கேட்டான் .காதிலிருந்த இயர்போனை எடுத்த சுதந்திரன் " உன் ப்ளூடூத் ஸ்பீக்கரை ஆன் பண்ணு " இவர்களருகே வைத்திருந்த சிறு ஸ்பீக்கரை காட்டினான் .


இப்போதாவது என்னைக் கவனித்தானா ... இல்லையா ? சுபலட்சுமி குழப்பத்தில் இருந்த போது அவர்கள் ஸ்பீக்கர் அதற்கு பதில் சொன்னது .


" தீர்த்தக்கரை ஓரத்திலே ..தென்பொதிகை சாரத்திலே....பாடும் மொழி உனது ...தேடும் விழி எனது " ஏக்கம் சுமந்த ஆணின் குரல் சுபலட்சுமியை ஊடுறுவி உயிர் அறுத்தது.


" இன்னமும் அதே பழைய திமிர்தான் .கழுத்து எப்படி உசந்திருக்கு பார்த்தியா ? " அம்மா காதிற்குள் முணுமுணுக்க இவளுக்கு ஒன்றும் புரியவில்லை .


" அவருக்குத்தான் .அதே பழைய தெனாவட்டு .." மனோகரி சுட்டிக் காட்டியது , பின் வண்டியில் .சுதந்திரனின் அப்பாவை .


இதென்ன தொல்லை ஒரு நான்கு நிமிட பாட்டைக் கூட நிம்மதியாக கேட்க விடாமல் ...அம்மாவை முறைக்க , மனோகரி பார்வையை பின் வண்டிக்கு விட்டாள் .


" அங்கேயும் ஒண்ணும் சுகப்படலையாம் .கேள்விப்பட்டேன் " குனிந்து முணுமுணுக்க , சுபலட்சுமிக்கு திக்கென்றது . பார்வை சுதந்திரனின் அருகே கிடந்த வெற்றிடத்தில் குழப்பமாய் அமர்ந்தது .


இடையிடையே மாடுகளுக்கு ஓய்வு கொடுத்து , உணவிட்டு இவர்களும் இளைப்பாறி , கையோடு கொண்டு வந்திருந்த கலவை சாதங்களை உண்டு என அழகாக தொடர்ந்தது அந்த மாட்டுவண்டி பயணம் .


திருப்பத்தூர் தாண்டி எஸ்.எஸ் புரத்தில் வழக்கமாக தங்கும் அரசினர் பள்ளியில் அனைவரும் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .கொண்டு வந்திருந்த உணவுகள் தீர்ந்து விட்ட நிலையில் அங்கேயே சமைத்து மீண்டும் உணவு கட்டிக் கொள்ள ஏற்பாடுகள் நடந்தன .பெண்களனைவரும் சமையலில் இறங்க , ஆண்கள் சாமான்கள் ஏற்பாடு செய்ய கிளம்பினர் .


" கந்தசாமி தாத்தா வண்டியில் பெரிய டேக்ஸா இருக்குமே…" மனோகரி சொல்ல ...


" ஆமாம் , அதோ அந்த பெரிய கற்களை கூட்டி வைத்து அடுப்பேற்றலாம் " என்றபடி இணைந்து கொண்டாள் பூமதி,சுதந்திரனின் அம்மா.


மாலை மங்கிக் கொண்டிருக்க சுபலட்சுமி மெல்ல பள்ளியின் பின்புறம் நடந்தாள் .அங்கே தூர்ந்து போய் கிடக்கும் குளமொன்று உண்டு .ஏதோ எதிர்பார்த்து குளத்தின் சிதைந்த படிகளில் நடந்தவளுக்கு பாடலோசை மெலிதாக கேட்க கால்கள் அந்தப் பக்கம் செல்ல மனம் அதனை முந்திக் கொண்டது .


" கட்டிக்கொள்ள நீ சம்மதித்தால்

அத்தனையும் இன்பமடி

கட்டிக்கொள்ள நீ மறுத்தால்

அத்தனையும் துன்பமடி...தீர்த்தக்கரை ஓரத்திலே…"


அவன்தான்.சுதந்திரன்...


முன்பிருந்த வசீகரம் இப்போது குரலில் இல்லை .படும் துயரின் சாயல் குரலை பாதித்திருக்கலாம் .ஆனால் அந்த காந்தம் அப்படியே இருந்தது .இதோ அவள் கால்களை கட்டி இழுக்கிறதே !


அங்கேயும் ஒண்ணும் சுகப்படலையாம்! அம்மாவின் குரல் காதிற்குள் ஒலிக்க,அவனது சுகமின்மைக்கு இவளது மனம் வெதும்பியது.இல்லை...இவன் நல்லவன்.இவனுக்கு இப்படி ஆகியிருக்க கூடாது...புலம்பியது.


எதிர் வந்து நின்ற வெண் பாதங்களில் நிமிர்ந்து பார்த்தான் சுதந்திரன் .கண்களில் கண்ணாடித்தாள் பளபளப்பு .

" நேராக உன் பார்வை

என் மீது வாராது

நீ இன்றி இன்பங்கள் என்னோடு சேராதம்மா " இப்போது குரல் கரகரத்தது.


கைகளை பின்னால் இறுக்கி கட்டிக் கொண்டாள் .சற்றே தாமதித்திருந்தாலும் அவன் கழுத்தில் இணைந்திருக்கும் அவைகள் .


பாசமேறி உடைந்திருந்த படிக்கட்டுகளில் எதிரெதிர் அமர்ந்து ஒன்றையொன்று சலிக்காது தின்று விழுங்கின இரு ஜோடி விழிகள் .


" என்ன ஆச்சு ? " முதல் விசாரணை அவனுடையது .


" எல்லாம் முடிந்தது " அவள் உதடு பிதுங்கியது .அந்த பிதுங்கலில் துளி கவலையில்லை .


ஆனால் அக்கறை அவனுக்கிருந்தது.


"பெரியவர்களை வைத்து பேசி பார்த்திருக்கலாமே?" ஆற்றாமை மின்னிய அவனது குரலை ஜீரணிக்க முயன்றாள்.


"பேசிப் பார்க்க ஒன்றுமில்லை.முடிந்தது"


"இது வாழ்க்கை சுபா.இவ்வளவு அலட்சியம் கூடாது" மெல்லிய அதட்டல் சேர்ந்திருந்த அவன் குரல் சிறு வயதில் கணக்கை வகுக்க விழித்து நின்ற போது அவளது உச்சந்தலையில் விழுந்த அவனது கொட்டை நினைவுறுத்தியது.


மெல்லிய புன்முறுவலுடன் " உங்களுக்கு…? " என்றாள்.


" ப்ச்...எரித்து கரைத்தாயிற்று " அவனது சாதாரணத்தில் சிறு அதிர்வு இவளுக்கு.


" வாழ்க்கையில் இவ்வளவு அலட்சியம் கூடாது சுதன்" பதிலுக்கு பதில் பேசி விட்ட நிறைவில்லை அவளிடம்.பதட்டத்துடன் கூடிய பரிதவிப்பு.


" ஆஸ்பத்திரி,மாத்திரை,மருந்து ,அலைச்சல்...ச்சப்பா.என்னால் முடியலை சுபா.அவள் போய் சேர்ந்ததும் ஒரு நிம்மதி.விடுதலை எனக்கு மட்டுமில்லை. அவளுக்கும்தான்"


"எனக்கும் சட்டப்படி விடுதலை.அருவெறுப்பு மறைந்து நிம்மதியாயிருக்கிறேன்"


இனி என்ன பேச ? இரு அன்புள்ளங்களும் தம்மைத் தாமே திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தன.


பாலைவனப் பாதையிலே

பால் நிலவை நானும் கண்டேன்

தேனிரைத்த பால் நிலவு

தீ இரைத்து போவதென்ன

காதல் வரி பாடல் எல்லாம்

கானல் வரி ஆனதென்ன…


சுதந்திரனின் இதழ்கள் தன் போக்கில் இசையத் தொடங்கின.


--------


"அவரோட வெளிநாட்டு மோகத்திற்கு சரியான சாட்டையடி .தினமும் அழுது கரையிறாரு " மனோகரி கண்ணில் வழிந்த நீருக்கு விறகினை சாக்காக்கினாள் .


" இவரோட அவசரத்திற்கு கிடைச்ச செருப்படி .கண்ணுல தண்ணி வத்திப் போச்சு இவருக்கு " பூமதியும் விறகுகளை ஊத ஆரம்பிக்க , கண்களில் கண்ணீர் .


" ஆம்பளைங்க அவசரத்துக்கு , படோபடத்துக்கு நாம தலையாட்டியிருக்க கூடாது பூவு "


" ம் ...என்ன செய்ய மனோ ? காலங் காலமா பொம்பளை தலையெழுத்து இதுதான்னு ஆகிப் போச்சே ! "


---------


"நிறைய சிகரெட் பிடிக்கிறீங்களோ ? பாடுறப்போ குரல்ல ஒரு தடுமாற்றம் வருதே…"


" நான் சொன்னா நம்புவியா ? உனக்கான மரியாதையோ இல்லை எனக்கான தண்டனையோ ...ஏதோ ஒன்றுக்கென நான் சிகரெட்டை நிறுத்தி மூன்று வருசமாச்சு "


உள்ளுக்குள் உருண்ட கலைடாஸ்கோப் வண்ணங்களை முகத்தில் காட்டாமலிருக்க பிரயத்தனப்பட்டாள் .முன்பு அடிக்கடி வலியுறுத்திய பிறகும் சிகரெட்டை விடாதவன்.


------------


"நம்ம காலம் போகட்டும் பூவு .நம்ம பிள்ளைங்க காலமும் இப்படியே இருக்க கூடாது .நம்ம வீட்டு ஆம்பளைங்க போட்ட கோலத்தை நாம மாத்தனும் .அந்த பதினெட்டாம்படி கருப்பசாமி நமக்கு துணையிருப்பார் "


மனோகரியும் ,பூமதியும் பிள்ளைகளின் வாழ்வை செப்பனிட முனைந்தனர்.


-----------


"இன்னொரு தடவை பாடுறீங்களா ? "


இந்த பாட்டுதான் இவர்களிருவருக்குள் பதின்ம வயதில் ஒரு சரளத்தை கொணர்ந்தது.பிறகொரு வகை ஈர்ப்பை கொடுத்தது. இப்போதோ ஏதோ ஆறுதலை தந்து கொண்டிருக்கிறது .


" ஒற்றை வழி பாதையிலே..

உன்னை மட்டும் நான் நினைத்தேன்

நெற்றி முதல் பாதம் வரை…"


தொடராமல் நிறுத்தியவனின் கண்களில் பருவப் பையனில் பார்த்த அதே வெட்கம் .அன்று வரிகளை அவன் தொடர்ந்த போது இவளுள்ளும் குமிழியிட்ட வெட்கத்தை தாண்டி ஓர் செல்ல கோபம்.


" கெட்ட வார்த்தை பேசுறல்ல நீ…" ஊடிக் கொண்டு ஓடினாள் .பின்பு இந்த பாட்டை பாடும் போதெல்லாம் அவன் அந்த வரிகளை விழுங்கி விடுதல் வழக்கம் .பதிலாக லாலாலா...அல்லது ஊஊஊஊஊம் .


இப்போதும் அந்த வார்த்தைகளை ம்மு..ம்மு...ம்மு ...என ஏதோ இட்டு நிரப்ப , அந்த ம்மும் அவளுள் திகிட திகிட என இறங்கியது.


-----------


உண்டு முடித்து மீண்டும் உணவு கட்டிக் கொண்டு மேலூரை அடைந்த போதும், அங்கே தங்கி பின் மதுரைக்கு பயணமான பொழுதுகளிலும் மனோகரி , பூமதி உடன் ஊர் பெண்களின் கூட்டு விசாரணை ,விமரிசைகள்.சலசலப்பின்றி மென் தூரலாய் பெண்களின் பேச்சுக்கள்.தங்களுக்குள் ஏதோ பரிமாறின.


கருப்பசாமியை வணங்கி கிடா வெட்டி பொங்கல் வைத்து வேண்டுதலை முடித்ததும் , ஜமுக்காளம் விரித்து ஆண்களாக சீட்டுக்களை கலைத்து போட்டுக் கொண்டிருந்த போது பெண்கள் கும்பல் அவர்களை முற்றுகையிட்டது .


"உங்க கச்சேரியை அப்புறம் பாத்துக்கலாம்.முதல்ல எங்களுக்கு பதில் சொல்லுங்க"


"அட பொண்ணுங்க கச்சேரியா? பாடுங்களேன் கேப்போம் " நக்கலடித்தது ஒரு பெருசு.


"பொண்ணுங்க கச்சேரி பண்ண ஆரம்பிச்சா ஒரு ஆம்பள எதிர்க்க நிக்க முடியாது.அந்த பேச்சு இப்ப வேண்டாம்.என் வீட்டு பிரச்சனை ஒண்ணுக்கு இந்த கருப்பசாமியை சாட்சியாக்கி பிராது கொடுக்க வந்திருக்கேன்" தைரியமாய் தலை நிமிர்ந்து நின்றார் சுதந்திரனின் பாட்டி செண்பகத்தம்மா.


" என் பேரனுக்கு எதிர்வீட்டு தனம்மா பேத்தியை பெண் கேட்டோம் . பொண்ணை பாரினுலதான் கொடுப்பேன்னு அவுக அப்பாரு நின்னுட்டாரு . அந்தக் கோவத்துல என் மவன் சரியா விசாரிக்காம ஒரு சீக்காளிப் பொண்ண என் பேரனுக்கு கட்டி வச்சுட்டான் .அந்த மகராசி கதை நோயாலே சுருக்கவே முடிஞ்சுடுச்சு "


செண்பகத்தம்மா விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தார் தனம்மா.


" என் பேத்தியை படித்த பாரின் மாப்பிள்ளைன்னு ஒருத்தனுக்கு கட்டிக் கொடுத்தான் என் மகன்.அவன் கூட அங்கே பிரண்டுன்னு தங்கியிருந்தவன்... கருமம் இரண்டு ஆம்பளைகளும் ஒரே வீட்டுல குடித்தனம் பண்ணிட்டு இருந்தாகளாம் .இதெல்லாம் இங்க சாதாரணம்.கண்டுக்காம போங்கிறானாம் புருசன்காரன். எம் பேத்தி பதறி பரிதவிச்சு அங்கிருந்து ஓடியாந்து , அந்த கண்றாவி புடிச்சவன்கிட்ட இருந்து சட்டப்படி விடுதலை வாங்கிட்டு ஒத்தை மரமா நிக்கிறா "


இரு பாட்டிகளும் தங்கள் பேரன் , பேத்தியின் வாழ்க்கை அவலங்களை வெளிப்படுத்த , கசமுச பேச்சுக்களால் நிரம்பியது அந்த இடம்.


பேச வழியில்லா மௌனத்தை இருவரின் அப்பாக்களும் குத்தகைக்கு எடுத்திருக்க,தங்கள் மகன்களை குத்தூசி பார்வையால் துளைத்த பாட்டிகள் தலை நிமிர்ந்து சபை முன் வந்து நின்று கை கோர்த்துக் கொண்டனர்.


" இப்ப இந்த ஊர் சனங்க முன்னாடி நம்ம குலதெய்வத்த சாட்சியா வச்சு என் பேரன் சுதந்திரனுக்கு , பேத்தி சுபலட்சுமியை கல்யாணம் கேட்குறேன் " செண்பகத்தம்மா உரக்க அறிவிக்க,


" நான் அதற்கு சம்மதிக்கிறேன்" பதில் குரல் கொடுத்தார் தனம்மா.


ஊர் பெண்கள் கூடி வெற்றிலை பாக்கு தட்டை தயார் செய்து நீட்ட ,செண்பகத்தம்மா வாங்கி தனம்மாவிடம் கொடுக்க சரியாக கோவில் மணி ஒலித்தது.


நீதியை நிலை நாட்டி விட்டதான இறுமாப்புடன் பதினெட்டு படி மேலிருந்து புன்னகைத்தார் கருப்பசாமி.


கண் கலங்க தங்களை பார்த்த பேரப் பிள்ளைகளை புன்னகையால் ஆசீர்வதித்தனர் பாட்டிகள்.தனம்மா தனது காது பாம்படத்தை தொட்டு வருடி பேத்திக்கு சுட்டினார்.


"கல்யாணம் முடியட்டும்.உனக்குத்தான்"


சுபலட்சுமியின் உடல் சிலிர்த்து நின்றது.இனித்தானே அவள் வாழ்வில் திருமணம்! வெயில் கசடு நீக்க வானம் பொழிந்து குளிர்விக்க தொடங்கியது.


------


ஊர் திரும்பும் வழியில் மீண்டும் எஸ்.எஸ் புரத்தில் தங்கல் .தூர்ந்து கிடந்த அந்த தீர்த்தகரையினில் சற்று முன் ஊற்றிய மழையால் சிறிய நீர்ப் பிரவாகம்.


சலசலத்த அந் நதிக்கரையில் தற்போது சுதந்திரமாக பாடுகிறான் சுதந்திரன் .இப்போது அவன் வார்த்தைகளை விழுங்கவில்லை .


" நெற்றி முதல் பாதம் வரை

முத்தம் இட்ட சொப்பனங்கள்

ஒற்றிக் கொண்ட தொட்டுக் கொண்ட

அத்தனையும் கற்பனைகள்…

நேராக உன் பார்வை

என் மீது வாராது

நீ இன்றி இன்பங்கள் என்னோடு சேராதம்மா"


அவனது முத்த சொப்பனங்களையும், கற்பனை இன்பங்களையும் கன்னங்கள் சிவக்க வரிகளை ரசித்து கேட்டிருந்தாள் சுபலட்சுமி .


-நிறைவு -

যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...