நாணல்

கற்பனை
4.9 out of 5 (48 )

நாணல்

"ஏட்டி எந்திரி மணி ஏழாகுது பாரு.காலையிலே பள்ளிக்கூடத்துக்கு கிளம்பணுமேன்னு கொஞ்சமாச்சும் உணரு இருக்காப்பாரு.பொம்பளை பிள்ளை இப்படித்தூங்குத.உங்கூட சேர்ந்த பிள்ளைகள் எல்லாம் பூப்பறிச்சுட்டு வந்தாச்சு,எந்திரி"என்று நாண என்று ஊராரால் பேச்சுவழக்கில் சுருக்கமாக அழைக்கும் கைம்பெண்ணான நாணல் தனது மகள் இளவரசியை எழுப்பிக்கொண்டிருந்தாள்.


இளவரசியோ தனது அம்மா எழுப்பியதும் உருண்டுப்பிரண்டு எழுந்து அமர்ந்தவளைக் கண்டவள் "யம்மா இளவரசி சீக்கிரம் எந்திரி மா.பள்ளிகூடத்துக்கு போகணும்னு நினைப்பிருக்கா.சீக்கிரமா எந்திரிச்சு பல்லை விளக்கி குளிச்சுட்டுவா.சின்ன பண்ண தோட்டத்துல மோட்டார் ஓடுதாம் ஓடிப்போய் குளிச்சுட்டு வந்திரு.இரட்டை ஜடை பின்னிவிட்டுட்டு போறேன்"என்று விரட்டினாள்.


அவள் விரட்டியதில் இளவரசி மனதே இல்லாமல் கோபத்திலே எழுந்து பல்பொடியை கையில் தட்டிக்கொண்டு வெளிக்கொடியில் காய்ந்துகொண்டிருந்த தலைதுவட்டும் துண்டினை எடுத்துக்கொண்டு தோட்டத்திற்கு நேராக நடந்தாள்.


இளவரசி பனிரெண்டாம் வகுப்பு படிக்கின்றாள்.தனது தாயின் கண்டிப்பில் சரியாக வளர்ந்து நிற்கும் அழகான காட்டு ரோஜா.


நாணல் மகள் எழுந்து சென்றதும் வேகவேகமாக சமைத்து முடித்து, அவளுக்குப் பிடித்த இரண்டு துண்டு கருவாட்டைப் போட்டுக் குழம்பு வைத்து, இளவரசி மத்தியான சாப்பாட்டிற்குக் கொண்டு செல்லும் டப்பாவில் எல்லாம் அடைத்துவைத்துவிட்டு அவளுக்காகக் காத்திருந்தாள்.


மகள் வருவதற்குத் தாமதமாகியதும் இன்னும் வரவில்லையே! இன்னும் சுறுசுறுப்பு வயசுப்பிள்ளைக்கு வரலையே என்று தானாகப்பேசிக்கொண்டே தனது வியாபாரத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய கருவாடுகளை எடுத்து,ரகம் வாரியாக பிரித்து அடுக்கிவைத்துக்கொண்டிருந்தாள்.


அப்போது குளித்துவிட்டு வீட்டினுள்ளே வந்த இளவரசிக்கு அந்த கருவாட்டின் நெடி மூக்கிலடிக்கவும்"ம்மாஆஆஆ ரொம்ப நாத்தமடிக்குதுமா"என்று சிணுங்கிக்கொண்டே வந்தாள்.


"என்னடி குரலே ஒருமாதிரி இருக்கு.என்ன இன்னைக்கு பள்ளியோடம் போகலையா என்ன?"


"அதில்லமா"


"வேற என்ன?"


"இல்லை ஸ்கூல்ல என்னைப் பார்த்ததும் பையனுங்க எல்லாம்….கருவாடு வருதுடோய்னு மூக்கைப் பிடிச்சு கேலியாப்பேசுறாங்கம்மா"


"அதுக்கு இப்போ என்ன செய்யணுங்குற"


"நீ பேசாமல் ஒன்னு செய்யேன் வயலுக்கு வேலைக்குப்போயேன்"


அதைக்கேட்டு மெல்லத் திரும்பிப் பார்த்த நாணல் வேறெதுவுமே மகளிடம் பேசாது"உனக்கு நேமாயிட்டு இங்கே வா தலைக் காஞ்சிருக்காப் பாரு.ரிப்பன்னு இரண்டையும் எடு" என்று அவளை வேலை ஏவிக்கொண்டே ஜடை பின்னி முடித்து அவளுக்கு ஒரு தட்டில் சாப்பாடு எடுத்துப்போட்டு வேகவேகமாக அள்ளிக்கொடுத்தாள்.


நாணலின் வேகத்திற்கு ஈடுகொடுக்கமுடியாது சாப்பாட்டினை விழுங்கிய இளவரசிக்குக் கோபமாக வந்தது.கிட்டதட்ட இரண்டு வருடமாக இதவைத்தான் சொல்றேன்.எல்லாரும் என்னைக் கிண்டல் பண்றாங்க.ஒருமாதிரியாக சொல்றாங்க இந்த கருவாடு விக்காதம்மான்னு சொல்லிட்டிருக்கேன்.ஆனால் இந்தம்மா எங்க கேட்கிறாங்க என்றுதான் கோபம் வந்தது.


நாணலைப் பொறுத்தவரை அவளுக்கும் அவளது மகளுக்கும் கிட்டதட்ட பதினாறு வருஷத்திற்கு மேலாகச் சோறுபோடுகின்ற ஒரு தொழில்.அதை அவள் யார் சொன்னாலும் விட்டுவிடப்போவதில்லை.ஆனால் மகள் கேட்கும் கேள்விக்கும் பதில் சொல்லுவதாகவும் இல்லை.


நாணலின் பெற்றோர்கள் இளம்பிராயத்திலே இறந்துவிட.இரண்டு அண்ணன்களுக்கும் மூன்று அக்காக்களும் கடைசி தங்கை என்று பிறந்ததால்,அவளது ஒருவேளை பசிக்கு உணவிட்டாலும் அவளது எதிர்காலத்திற்கு யாரும் பொறுப்பேற்றுக் கொள்ளவிரும்பவில்லை.


இருபது வயதில் இளமையின் கனவுலகில் இருந்தவளுக்கு நாயகனாக வந்தவன்தான் அவளது கணவன் குருசுமுத்து.கருவாட்டினை கடற்கரை பக்கமிருந்து மொத்தமாக வாங்கி பஸ் வசதியில்லாத கிராமங்களுக்குக் கொண்டு சென்று வியாபாரம் செய்து வந்தான்.


அப்படி நாணலின் ஊருக்குள் கருவாட்டு வியாபாரியாக வந்தவனது ஆளுமையும் இளமையின் திமிரும் சேர்ந்து நாணலிற்குத் தூண்டில் போட்டது.இருவரும் ஒருவரை ஒருவர் விரும்ப ஆரம்பித்து கருவாட்டுக்குழம்பும் சோறும்போல இணைந்து வாழ முடிவெடுத்து, அவன் சைக்கிளில் பின்னாடி இருந்த கூடையை அப்படியே தூக்கி தன் மடியில் வைத்துவிட்டு ஏறியமர்ந்தவளை தனது நெஞ்சில் காதலியாக மனைவியாகச் சுமந்தான் குருசுமுத்து.


அவனுக்கும் யாருமில்லை அவளுக்கும் யாருமில்லை.இருவரின் அந்த நிலைதான் அன்பினை பகிர்ந்துகொண்டு சந்தோஷமாக வாழவைத்தது.இரண்டு வருடக் காதல் வாழ்க்கையில் தங்களுக்கென்று வந்து பிறந்த முதல் சொந்தமும் உயிரும் என்பதால் இளவரசியின் பிறப்பில் அப்படியொரு மகிழ்வினைப் பெற்றனர்.


எத்தனை தூரமென்றாலும் எத்தனை ஊர்கள் என்றாலும் அந்த ஒற்றைச் சைக்கிளினை மட்டுமே அவனுக்குத் துணையாக வைத்து, தனது கருவாட்டு விற்பனையை அமோகமாக இல்லாவிட்டாலும் தனது குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற வருமானம் வருவதால் அதையே மனநிறைவாக நடத்தினான்.


தங்களது தேவைக்கு மிஞ்சிய எந்தவிதமான ஆசைகளும் அவர்கள் இருவருக்குமே இருந்ததில்லை.நிம்மதியாக வாழணும் தங்களது மகளை நன்றாகப் படிக்க வைக்கணும்.தங்களைப் போன்று யாருமற்றவளாக வளர்ந்துவிடக்கூடாது என்ற தெளிவு குருசுமுத்துவுக்கு இருந்தது.


அதனால் மனைவியிடம் தனிமையில் அவன் சொல்லுவது"எனக்கெல்லாம் அதிகமாக ஆசைகிடையாதுடி.உடுக்க நல்ல துணிமணி,ஆகாயம் பார்க்காத நல்ல கூரையோடு கூடிய ஒரு வீடு.மச்சிபாவுன வீடெல்லாம் ஆசையில்லை;குடிசையோ ஓட்டுவீடோ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.என்னைத் தாங்கிப்பிடிக்க ஒரு அன்பான மடியொன்று போதும்" என்று சொல்லிக்கொண்டே அவளது மடியின் மீது தலைவைத்துப் படுத்தவன்.தனது மகளைத் தூக்கி நெஞ்சில் போட்டுக்கொண்டான்.


அப்படியொரு நிறைவான வாழ்க்கை வாழ்ந்தனர் இருவரும்.நாணலுக்குமே தனது காதல் மீதும் தன் கணவன் மீதும் அப்படியொரு நம்பிக்கை இருந்தது.அடுத்த நாள் கருவாட்டுக்கூடையைச் சைக்கிளில் வைத்துக்கொண்டு கிளம்பியவன் என்ன நினைத்தானோ தெரியாது மீண்டுமா இறங்கிவந்தவன் தனது மகளைக் கையில் வாங்கி இரு கன்னத்திலும் முத்தமிட்டவன் நாணலிடம்"நம்ம மகளை எப்படியாவது டீச்சர் படிப்பு படிக்கவைக்கணும்.நம்மதான் படிக்க முடியலை நம்ம பிள்ளையாவது படிச்சு நாலுபேருக்கு நல்லபுத்தி சொல்லிக்கொடுக்கிற டீச்சராக்கணும்.அதுக்காக இன்னும் உழைக்கணும்"என்று சிரித்தவாறே சொன்னவனை வித்தியாசமாகப் பார்த்த நாணலின் கையில் தனது பாக்கெட்டில் எத்தனை பணம் இருக்கும் என்று எண்ணாது எடுத்து திணித்துவிட்டு உற்சாகமாக அவளது கன்னத்தில் தனது அன்பின் வெளிப்பாடாக ஒரு முத்தத்தை வைத்து வெடுக்கென்று சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.


அந்த ஒற்றை முத்தமே அவளுக்கு வாழ்க்கை முழுவதிற்கும் போதுமானதாக இருக்கும் என்று எண்ணிவிட்டானோ?என்னவோ?அதன் பின் அவன் திரும்பி வரும்போது உயிரற்ற உடலாகத்தான் வந்து சேர்ந்தான்.


அப்போதெல்லாம் அத்தனை நல்ல சாலைகள் இல்லாத ஊர்களாதான் அதிகம்.அப்படி ஊரு ஊரில் மண்சாலையாக இருந்த வழியாக சென்றவனின் பின்னாக அதிசயமாக அன்று ஊருக்குள் நுழைந்த கவர்மண்ட் பஸ் இடித்துத் தள்ளியதில் அவனது கனவுபோன்றே உயிரும் காணாது மறைந்துவிட்டிருந்தது.


காலையில் அவன் தந்துவிட்டுப்போன பணம் அவளது நெஞ்சோடு இருக்க,அவன் முத்தமிட்ட இடம் இன்னும் ஈரம் காயாததுபோன்று உணர,மடியில் மகளை வைத்துக்கொண்டு தன் முன்னால் உடற்கூறாய்வு முடிந்து, மருத்துவமனையிலிருந்து பொட்டலமாகக் கொண்டு வந்து ஈச்சம்பாயில் கிடத்தியிருந்தவனைச் சுற்றி நின்று அழுவதற்குக்கூடச் சொந்தங்கள் இல்லாது,வேடிக்கை பார்க்கமட்டுமே நின்றிருந்தனர் அந்த ஊர் மக்கள்.


இதற்கு மேல் செய்ய ஒன்றுமில்லை என்ற நிலையில் அவனைத் தெரிந்தவர்கள் என்ற முறையில் குருசுமுத்துவின் உடலை அடக்கம் செய்யச் சிலபேர் முன்வந்து உதவி செய்து அவனைத் தூக்கிச்செல்லும்போதுதான் நாணல் உடைந்து அழுதாள்.


இதுவரை கிடைக்காத மொத்த அன்பையும் இரண்டே வருடத்தில் கொடும் மழையாகக் கொட்டித்தீர்த்துவிட்டு வெறிச்சோடிக் காணப்படும் வானம் போன்று அவளது வாழ்க்கையிலிருந்து மொத்தமாகச் சென்றுவிட்டவனை நினைத்து மார்பிலும் நெஞ்சிலும் அடித்து அழுதவளைக் காண்பவர்களுக்கும் கொஞ்சமே கொஞ்சமாக ஈரம் சுரந்து, கண்ணில் நீர்ப்படலம் வந்து, கண்களை மறைக்கத்தான் செய்தது.


அன்னை அழும் அழுகையின் காரணம் தெரியாது ஒருவயதான இளவரசியும் சேர்ந்து அழுதது அன்றுதான்.அடுத்தநாள் குருசுமுத்துவின் காரியத்திற்குச் செலவிட்ட பணத்திற்காக ஊரார் வந்து நின்றபோதுதான் தான் இனி எப்படிப் பிழைக்கப்போகிறோம் என்ற சிந்தனையே வந்தது.


அப்போது வெளியே நின்றிருந்த குருசுமுத்துவின் சைக்கிளும் அதிலிருந்த கருவாட்டுக்கூடையும்தான் கண்ணில் பட்டது.


தனது கணவன் இறந்த ஏழே நாட்களில் வயிறு என்ற ஒன்று இருக்கிறது, அதை நிரப்ப உழைக்கவேண்டும் என்று துணிந்து எழும்பியவளுக்கு குருசுமுத்து ஓட்டிய சைக்கிளை போலீசார் எடுத்துக்கொண்டு போட்டிருந்தது வசதியாகப் போயிற்று.அது அரையுராக கேட்பாரற்று கிடந்ததைப் பார்த்தவள் முதன்முறையாக அதை எடுத்து,தனக்குத் தெரிந்த முறையில் நெளிவுகளைச் சரிசெய்து ஓட்டியவள் மகளைத் தனது மார்போடு தனது முந்தானையால் இறுக்கி கட்டிக்கொண்டு கருவாட்டுச் சந்தைக்குச் சென்று அவன் இறுதியாகக் கொடுத்துச்சென்ற பணத்தை முதலீடாக வைத்து, குருசுமுத்துவின் வியாபாரத்தை தான் கையில் அன்றெடுத்தவள் இன்றுவரை யாரிடமும் கையேந்தாது தனது மகளைப் படிக்க வைத்துவிட்டாள்.இப்போது பனிரெண்டாம் வகுப்பின் இறுதி தேர்வுக்குக் காத்திருக்கிறாள்.


கணவன் இழந்து இருபத்திரண்டு வயது பெண் தனியாக இருக்கும்போதும் சரி வேலைக்குச் செல்லும்போதும் சரி ஊராரின் கண்கள் அவர்கள் தசைமீது தான் இருக்கும்.செத்து அழுகி நாறிப்போனதை வட்டமிடும் கழுகைப்போன்று தின்றுத்தகிக்க காத்திருந்தவர்களின் வாயிற்குள் மண்ணை அள்ளிப்போடும் விதமாக நாணலின் குணத்தில் வித்தியாசம் வந்தது.


அதுவரை கணவனின் பாதுகாப்பான கரத்திலிருந்தவளின் துணிச்சல் மிக அசாத்தியமானதாக இருந்தது.மென்மையாகப் பேசுபவளின் வார்த்தைகள் கர்ணகடூரமான வசைச்சொற்களாக வெளியே வர ஆரம்பித்திருந்தது.


அவளிடம் வம்பு வளர்க்க நினைத்த ஆண்களெல்லாம் அதன்பிறகு அவள் வரும்போது "யப்பா கருவாட்டுக்காரி நாணல் வர்றாப்பா.வாயைக்கொடுத்துத் தப்ப முடியாது"என்று பம்மிக்கொண்டு அமைதியாக ஒதுங்கி நிற்க ஆரம்பித்தனர்.


அதுதான் அவளின் பலமாக மாறியது காருவாடு வாங்கிக்கொண்டு காசு கொடுக்காமல் ஏமாற்ற நினைத்தால் சட்டென்று ஆணோ பெண்ணோ கையையோ அல்லது சட்டையையோ எட்டிப்பிடித்து நாணல் கேட்கின்ற கேள்வியிலும் பேச்சிலுமே அடுத்து யாரையும் ஏமாற்றவேண்டும் என்ற எண்ணமே வராதளவிற்குச் செய்துவிடுவாள்.


ஊரில் நாணல்கிட்ட பேசித்தப்பிக்கமுடியாதுப்பா?ஆனால் நல்ல உழைப்பாளிப்பா.யாருகிட்டயும் அடிபணியாது வாழ்கையில் ஒற்றைப்பிள்ளையை வளர்த்துட்டாப்பா என்றுதான் இன்று பேசுகின்றனர்.


அதனால்தான் இந்த கருவாட்டுக்கூடையை கீழ வைச்சிருமா வேண்டாம் இந்த தொழில் என்று மகள் சொல்லும்போதெல்லாம் சிரித்துக் கடந்துவிடுவாள் நாணல்.


அவளைப் பள்ளிக்கு அனுப்பிவைத்துவிட்டு தனது சைக்கிளை மெதுவாக மிதித்து "காருவாடு….கருவாடு….நல்ல சாளை நெத்திலி கருவாடு இருக்கு….கருவாடு கருவாடு….ஊறக்கருவாடு இருக்கு கருவாடு கருவாடு"என்று சத்தமிட்டவாறே தன் முன் கடந்து சென்ற தனது அம்மாவின் குரலிலே ஒரு கம்பீரமும் துணிவும் இருப்பதை இளவரசி உணரத்தான் செய்தால் ஆனாலும் அதை வெளியே சொல்லாது அமைதியாக இருந்துவிடுவாள்.


இன்று இரண்டு வருடங்கள் எப்படி ஓடியது என்று தெரியாது இளவரசி இப்போது ஆசிரியர் பயிற்சி முடித்து அங்கிருந்த ஒரு தனியார்ப் பள்ளியில் வேலைக்கும் சேர்ந்துவிட்டாள்.


நாணலுக்கு அன்றுதான் மனநிம்மதியோடு நிறைவாகத் தூக்கம் வந்தது.


குருசுமுத்துவின் தூரத்து உறவிலிருந்து திடீரென்று ஒருநாள் இளவரசியை பொண்ணுக் கேட்டுவந்துவிட்டனர்.நாணல் தன் மகளைப் படிக்கவைத்து வேலையில் சேர்த்துவிடவேண்டும் என்று உழைத்தாளே தவிர அவளுக்கென்று இதுவரை நகைகளோ பொருட்களோ எதுவுமே சேர்த்து வைக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் வரவில்லை.


இப்போது திடீரென்று இளவரசியைப் பொண்ணுக்கேட்டு வரவும் என்ன சொல்வதென்று தவித்துத்தான் போனாள்.மகளிடமே விருப்பத்தைக் கேட்க அவளோ"இத்தனை நாள் வளர்த்தவளுக்கு எனக்கு எது நல்லதென்று தெரியாதம்மா?நீ என்ன சொல்றியோ அதுதான் என் முடிவும்" என்று சொல்லிவிட்டாள்.


நாணலுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.இரண்டு நாள் பொறுத்து பதில் சொல்லுகிறேன் என்று சொல்லி அனுப்பியவள் இரண்டுநாள் கழித்து அவர்கள் வீட்டிற்கே சென்று தனது நிலைமையைச் சொல்லிவிட்டாள்.


நான் என் மகளைப் படிக்கவைத்து வேலைக்குச் சேர்த்துவிட்டிருக்கேன்.அவ்வளவுதான் அதைத்தவிர என்னிடம் அவளுக்குப் பொன்னோ பொருளோ கொடுப்பதற்கு இல்லை.ஆனால் திருமணம் நடத்திக்கொடுக்கக் கொஞ்சம் சேர்த்து வைத்திருக்கிறேன் என்று கூறிவிட்டாள்.


அதைக்கேட்ட பையன் வீட்டார் ஏதோ சொல்ல வாயெடுக்க மாப்பிள்ளை பையனோ"அத்தை பணத்துக்கோ பொருளுக்கோ ஆசைப்பட்டு நான் உங்கள் மகளைப் பொண்ணுக் கேட்டு வரவில்லை.உங்களைப் பார்த்துதான்.உங்க தைரியத்தைப் பார்த்துத்தான் வந்தேன்"பெண்ணென்று முடங்கிவிடாது உங்கள் மாமா இறந்தபிறகும் தைரியமாக எந்த ஆண்பிள்ளைகளையும் நம்பி நிற்காது, இப்போதுவரைக்கும் நிமிர்ந்து நிக்கறீங்கதானே அதுதான்.குருசுமுத்து மாமா பெண்ணென்று கேட்டு வரமால் நாணல் மகள் இளவரசியைப் பெண் கேட்டு வந்தோம்"என்றான்.


அவ்வளவுதான் தான் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தம் இப்போதுதான் அவளுக்கே விளங்கியது. இந்த இருபது வருடங்களில் கலங்காத கண் நாணலுக்கு லேசாகக் கண்கலங்கியதும்"என் பெண்ணை உங்களுக்கு கல்யாணம் செய்துதர எனக்குச் சம்மதம்" என்று கூறிவிட்டு விறுவிறுவென்று வேகமாக நடந்து வீடுவந்து சேர்ந்தவளுக்கு ஆத்மாவின் அடியிலிருந்து ஒரு நிம்மதியான சுகம் பரவியது.


அதே வேகத்துடன் ஓரே மாதத்தில் ஊரே மெச்சும்படி தனது மகள் இளவரசியின் திருமணத்தை இனிதாக நடத்தி முடித்துவிட்டு அக்காடா என்று தனது வீட்டின் திண்ணையில் தலைசாய்த்து அமர்ந்தவளின் கண்முன்னே குருசுமுத்து தனது கைகளைக் கட்டிக்கொண்டு அவளையே இமைக்காது சிரித்துக்கொண்டே பார்ப்பதுபோன்று இருந்தது.அது அவளது பிரமையா? இல்லை கனவா?இல்லை அவளது கற்பனையா?என்று தெரியாது.ஆனால் அங்கு நின்றிருந்தவனைப் பார்த்து தானும் சிரித்தாள்.அவன் இறந்தபின்பு,இத்தனை வருடங்கள் கழித்து அவள் சிரிக்கும் முதல் சிரிப்பு….நன்றாகச் சத்தமாக ஆனந்த சிரிப்பைச் சிரித்து முடித்தாள்.


அடுத்தநாள் காலையில் தன் அம்மா நாணல் தனது அப்பா குருசுமுத்துவினைக் காணத் தனது ஆன்மாவைவிட்டுச் சென்றுவிட்டாள் என்ற தகவல்தான் இளவரசிக்கு வந்துச் சேர்ந்தது.


தான்பட்ட கஷ்டம்போல் தனது மகளும் கஷ்டப்பட்டுவிடக்கூடாது என்று அந்த நாணல் வாழ்க்கையின் பல கஷ்டங்களுக்கு நதியாகப் பாய்ந்து வந்தாலும் அதற்கு ஈடுகொடுத்து வளைந்து கடின உழைப்பாள் உயர்ந்த அந்த நாணல் வேறு யாருக்கும் தலைவணங்காது தனது வாழ்நாளெல்லாம் நிமிர்ந்து நின்றிருந்தது.

যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...