Annapoorani

kanda.srees65
பெண்மையக் கதைகள்
4.5 out of 5 (14 )

அன்னபூரணி (சிறுகதை )

மகளுக்குத் தலைப் பின்னி விட்டவாறே மகனுக்கு அர்ச்சனை வைத்தாள் நீலவேணி..

‘’ஏல...வெங்கிட்டு...குழம்பை எடுத்தேல்ல...தட்டைப் போட்டு ஒழுங்கா மூடி வையி...அடுத்தாளு சாப்ட வேண்டாமா’’

‘’அந்தக் கவலையெல்லாம் அவனுக்கு ஏன்...தான் வயிறு நெறஞ்சா சர்தான்..தடிப் பய’’ கைக்கண்ணாடியில் பார்த்து சாண்டல் பவுடர் போட்டவாறே அவன் அக்கா ரஞ்சிதா வசை பாட...

‘’எம்மா...உன் மவளை வாயை வச்சுகிட்டு சும்மாயிருக்கச் சொல்லு...அப்பறம் நல்லாயிருக்காது...ஆமா..சொல்லிட்டேன்’’ கார்த்தி தட்டை தள்ளி விட்டு எழுந்து கை கழுவியவாறு பதில் சொல்ல...நீல வேணி மகளின் தலையில் பல்லைக் கடித்தவாறு ஒரு குட்டு வைத்தாள்...

‘’அவன்கிட்ட வம்புச்சண்டை இழுக்கலைன்னா விடியாது உனக்கு...பேசாம இரேன்...’’

‘’ம்க்கும்...மகனை சொல்லிட்டா அப்பிடியே பொத்துகிட்டு வந்துருமே’’ என்று வெட்டியவாறு எழுந்தவள் கதவில் ஒட்டி வைத்து இருந்த ஸ்டிக்கர் பொட்டை எடுத்து நெற்றியில் வைத்து விட்டு சைக்கிளைக் கிளப்பினாள்...கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வரலாறு படிக்கிறாள்...

அவள் தம்பி கார்த்தி எட்டாம் வகுப்புப் படிக்கிறான்...மகனும் மகளும் கிளம்பிப் போனதும் அப்பாடா என்று இருந்தது நீல வேணிக்கு...கணவன் முத்து கிருஷ்ணன் பைக்குகள் பழுது பார்க்கும் பட்டறை ஒன்று வைத்து இருக்கிறான்...அந்த வருமானத்தில் நாலு ஜீவன்கள் பசியாற வேண்டும்....நீல வேணிக்கு ஏதாவது ஒரு சிறு தொழில் செய்து பொருளீட்ட ஆசைதான்...ஆனால் தனது சூழலுக்கு ஏற்ற தொழில் எதுவெனத் தேடுவதிலேயே பாதி காலம் ஓடிவிட்டது...

‘’நீலா..அம்மா..நீலா..’’

‘’போம்மா...தாத்தா கூப்பிடறாரு...என்னன்னு கேளு’’

காலை உணவு எடுக்க வீட்டுக்கு வந்த முத்து கிருஷ்ணன் சட்டையைக் கழட்டியவாறே மனைவியிடம் சொல்ல...அவள் வாசலை எட்டினாள்..

‘’சொல்லுங்க சார்’’

‘’குழம்பு ஏதானும் வச்சியாம்மா’’

‘’ஆமா சார்...வெந்தயக் குழம்பு’’

‘’இந்தக் கிண்ணியில கொஞ்சம் குடும்மா’’

உள்ளே போய் ஊற்றி எடுத்து வந்து தந்தாள்...

‘’சோறு ஆக்கிட்டீங்களா சார்’’

‘’ஆமா...ஒரு உழக்கு அரிசியை குக்கர்ல வச்சி இறக்கிட்டேன்...கேரட்டை வதக்கிப் பொரியல் கூடப் பண்ணிட்டேன்...வரட்டாம்மா’’

பக்கத்து வீட்டில் வசிக்கும் மனைவியை இழந்த பெரியவர்—எல்லா வகையிலும்.. பெயர் ராமகிருஷ்ணன்...குடிநீர் வாரியத்தில் பணியாற்றி ஒய்வு பெற்றவர் .கடல் போல பெரிய வீடு...ஒற்றை ஆளாக ஆண்டு வருகிறார்....ஒரே மகள் வெளிநாட்டில் இருக்கிறாள்.. .தெருவில் .அவர் பேச்சுப் புழக்கம் வைத்துக் கொள்ளும் ஒரே வீடு நீலாவி னுடையது...அதுவும் வாசலோடு சரி...நடை தாண்டி உள்ளே வந்தது கிடையாது....

‘’எனக்கு குழம்பு இருக்கா ‘’—முத்து கிருஷ்ணன்...

‘’ஏன்...அவரு ஒத்தை கட்டைக்கு இம்புட்டு குடுத்ததுல சட்டி கவுந்து காலி யாயிருமாக்கும்...உக்காருங்க...வைக்கிறேன்’’

‘’சும்மா சொன்னேன்...பாவம்...பெரிய மனுஷன்..கோயில் போல....ஆமா,அவரு ஐயரு ஆளுக தான..நாம .மட்டன் எடுக்கற அன்னிக்கு அவரு என்ன செய்வாரு’’

‘’ம்ம்ம்...செய்வாரு...அஞ்சாறு...ரசம் இருக்கும்லா..அதை வாங்கிட்டுப் போவாரு...உங்க பிள்ளைக ஒரு நாளு மீன் குழம்பை கொண்டு சத்தமில்லாம குடுத்துட்டுதுக...’’ எதிரில் வந்து அமர்ந்து சொன்னாள் நீல வேணி...

‘’அய்யய்யோ அப்பறம்’’

‘’அவரு பாவம்...கவனியாம தட்டு சோத்துல ஊத்திட்டாராம்....பெறவு வாடை தெரியவும்...அப்பிடியே கொண்டாந்து கார்த்திகிட்ட குடுத்து சாபிடுய்யா,,நான் இன்னிக்கு விரதம் அப்பிடின்னுட்டாரு ’’

‘’அடக் கடவுளே..அவரு சாப்பாட்டுல மண்ணள்ளிப் போட்டுட்டானா...’’

‘’ஆமா..அதிலேர்ந்து..இவனை முன்ன விடறது இல்ல.கொரங்கு புத்திக்காரன்....அவரு பென்சன் வாங்குதாரே ...நம்ம கைச்செலவுக்கு கொஞ்சம் குடுக்கலாம்லா அப்பிடின்னு இவனுக்கு ஒரு எண்ணம்...இந்தப் பொட்டச்சிக்கும் அப்பிடி ஒரு நெனப்பிருக்கு..அதான் ரெண்டு பெரும் அவரைக் கண்ணுல காண விடாம கரிச்சுக் கொட்டுதாக..’’

‘’அவரு காசு பாடு பட்டு சம்பாதிச்சது....நமக்குக் குடுக்கனும்னு என்னக் கட்டாயமா...ஒருத்தர் குடுத்து ஒருத்தருக்கு நெறையாது...விடு சின்னக் கழுதைக...சரி...நாளை சமையலுக்குக் காய் இருக்கா’’

‘’இருக்கு...ரெண்டு தேங்காய் மட்டும் வாங்கியாந்து தந்துட்டுப் பொங்க’’

மாலையில்மீண்டும் வீட்டு வாசலுக்கு வந்த ராமகிருஷ்ணன்

‘’இந்தாம்மா..நீலா ..இந்தக் கூடையில மாங்காய் இருக்கு...எடுத்துக்க’’ என்றார்..

‘’ஏது சார் ..இவ்ளோ மாங்கா’’

‘’என் ஃபிரண்டு விஸ்வநாதன்... அவன் வீட்டுல மாமரம் இருக்குது...காய்ச்சுத்தள்றதுடா ....யாருக்கானும் குடுன்னு தந்தான்...எனக்கு உங்க வீட்டை விட்டா வேற யாரைத் தெரியும்.அதான் கொண்டு வந்தேன்...நேக்கு நாலு எடுத்துண்டுட்டேன்.....அம்மா.நீலா ..பாதியை அரிசி டின்ல பழுக்கப் போட்டுடு...நன்னாப் பழுத்ததும் எடுத்து வெட்டி தயிர் சாதத்துக்கு தொட்டு சாப்பிட்டியானா இந்த வெயிலுக்கு தேவாமிர்தமா இருக்கும்....இமாம் பசந் வெரைட்டி இது...தேனா இருக்கும்...உனக்குப் பிரியம்னா ரெண்டு மூணு மாங்காய்களை ஊறுகாய் கூடப் போட்டுக்க..தப்பில்ல’’

‘’சரி சார்’’ என்று உள்ளே திரும்பியவளிடம்...

‘’ம்மா..நீலா ..காய்களைத் தட்டிட்டு கூடையைத் தந்துடு’’’’

என்று சொன்னார்...உள்ளே போன நீலாவை பிள்ளைகள் பிலு பிலுவேனப் பிடித்து கொண்டனர்...

‘’பார்த்தியா....கிழம் எவ்ளவு வெவரமா இருக்கு...இந்த அழுக்குக் கூடையை நாம வச்சுகிட்டாலும் அப்பிடியே மணத்துரும்...’’

‘’நீ அவரு குரல் கேட்டதும் குழம்பைத் தூக்கிட்டு ஓடுவே...அவரு காரியத்துக்கு உன்னை நல்லா பயன்படுத்திக்கிறாரு’’

‘’சீ..வாயை மூடுங்க.பெரிய மனுஷன் காதுல விழுந்துடப் போகுது....அவருக்குன்னா சமைக்கிறோம்...செய்யறதுல இம்புட்டு வாங்கிகிட்டுப் போயி ஒரு வாய் சோறு சாப்பிடறாரு...வயசான மனுஷன்...இதே எங்கப்பாவா இருந்தா செய்ய மாட்டேன்?...ஒவ்வொருத்தங்க தான தர்மம்னு செய்யிறாக ....நம்மால முடிஞ்சது அக்கம் பக்கத்துல இருக்கறவகளுக்கு ஒத்தாசை பண்ணுதோம்...இதை ஒரு குத்தமா பேசுதீக...என்னத்த படிச்சு பாழாப் போனீகளோ போங்க’’ என்று தன் பிள்ளைகளுக்கு தக்க பதிலடி தந்து விட்டு வெறும் கூடையை கொண்டு போய் அவரிடம் தந்தாள்...

‘’ஏம்ல..அவளைப் போட்டு நோண்டுதீக....அவ மனசுக்கு சரின்னு பட்டதை செய்தா...சோலியைப் பாருங்க’’ என்றான் பிள்ளைகளிடம்...முத்து கிருஷ்ணன்

‘இல்லப்பா..நீயே சொல்லு....ஒரு வீட்டுல வாங்கிச் சாப்டுதோம்னு கொஞ்சமாவது நன்றி இருக்கா அவருக்கு...ஒரு அஞ்சு ரூவா காசு திருப்பிச் செய்தாரா....ஏதோ குடுத்து வச்சவரு கணக்கா தெனம் டான்னு குழம்பு தாம்மா...கூட்டு தாம்மான்னு வந்து நின்னுருதாரு .நமக்கு மட்டும் என்ன பணம் மரத்திலயா காய்ச்சுத் தொங்குது ? ..அம்மாவாக் கண்டு செய்தா...நீயாக் கண்டு விட்டுகிட்டு இருக்கே...’’

பிள்ளைகளின் பொருமலில் உண்மை இல்லாமலில்லை....ஆனால் அதைப் பெரிது படுத்த கணவன் மனைவி இருவருமே தயாரில்லை.

..பத்து நாள்கள் கழித்து ஒரு மாலையில் வாசல் திண்ணையில் சோர்வாக அமர்ந்து இருந்த நீலாவிடம் வந்து பேச்சு குடுத்தார் .ராமகிருஷ்ணன்...

‘’என்னம்மா...உக்காண்டு இருக்கறே’’ஆத்துக் காரியம்லாம் முடிஞ்சதா’’

‘’அது என்னிக்கு முடிய...நாமளா முடிஞ்சுதுன்னு நினைச்சுகிட்டு வெளியில வந்தாத்தான் நெசம்.....அதோட மனசுக்கும் சரி இல்ல..’’

‘’ஏன்..ஆம்படையான் கூட சண்டையா’’

‘’இல்ல சார்...ஒரு வாய்ப்பு வீடு தேடி வந்துருக்கு...அதுக்காக சந்தோசப் படவா...சங்கடப் படவான்னு புரியல...’’

‘’வாய்ப்பு என்னன்னு நீ சொல்லு..வழியை நான் சொல்றேன்’’

‘’என் மவளுக்கு மாப்ள வீட்டுத் துப்பு ஒண்ணு வந்துருக்கு சார்’’

‘’நல்ல விஷயம்தானே...பையன் எந்த ஊரு...என்ன பண்றான்’’

‘’சிவகங்கை ...சொந்த வேன் ஓட்டுதான்...மாசம் கையில இருவதாயிரம் நிக்குமாம்.ஆளும் கழிக்கறாப்புல இல்ல..பின்ன நம்ம பிள்ளை மட்டும் என்ன ரதியா..நம்ம தரத்துக்கு ஏத்தாலதான பாக்க முடியும்.?.....பையனுக்கு கெட்ட பழக்கம் ஒண்ணுங்கெடையாது...இவனுக்கு அக்கா ஒருத்தி அவ கல்யாணமாகி மதுரையில இருக்கா..அப்பா இல்ல..அம்மாகாரி மட்டுந்தான்...ஒரு அக்குத் தொக்கு இல்ல...நாம தேடிப் போனாக் கூட இம்புட்டு தூரம் கெடைக்காது பாத்துகிடுங்க சார்...நல்ல எடம்’’

‘’பொண்ணுக்கு அது போடுங்க..இது போடுங்கன்னு ஏதானும் தொல்லை பன்றாளாம்மா’’

‘’இல்ல சார்.அதெல்லாம் ஒண்ணும் பேச்சில்ல..பொய்யா சொல்ல முடியும்....பொண்ணு கிடைக்கறது பெரும்பாடா இருக்குல்லா...அதான் இம்புட்டு தூரம் எறங்கி வாராக...’’

‘’அது என்னவோ சரிதான்மா....ஒரு காலத்துல பொம்பளைப் புள்ளையா வேண்டவே வேண்டாம்னு வயித்துப் பிள்ளையை வழிச்சுப் போட்டாக...இப்ப.ஆயிரம் ஆம்பளைப் பிள்ளைக்கு எண்ணூறு பொம்பளைப் பிள்ளைகதான் இருக்கு...அதான் பிள்ளை வீட்டுக்காரா பொண்ணுகளுக்கு வலை வீசித் தேடிண்டு இருக்கா...’’

‘’அத சொல்லுங்க சார்...மேலேறிஞ்ச கல்லு கீழ வந்து விழத்தான செய்யும்’’

‘’சரி..நம்ம விவகாரத்துக்கு வாம்மா..எல்லாம் பாசிடிவாத்தானே இருக்கு...

கவலைப் படக் காரணம் என்னவோ’’

‘’இருக்கு சார்...மூணு பவுனு தாலி செயின் போட்டு கல்யாணத்தை கவுரதையா முடிச்சு விட்டுருங்க அப்பிடின்னு சொல்லிட்டாக...’’

‘’சரி...’’

‘’சரியில்லையே சார் .நகை என்கிட்டே உள்ளதை போட்டுருவேன்...அது கவலையில்ல..ஆனா...கல்யாண மண்டப வாடகையே அம்பதாயிரம் ஆகுது...மேற்கொண்டு சாப்பாட்டுச் செலவு இருக்கு...கண்ணு முழி பிதுங்கிப் போகும்..அதான் அப்பிடி ரோசனையிலையே உக்காந்துட்டன்’’

‘’எதுக்கும்மா மண்டபம்’’

‘’பின்ன..இந்த குச்சு வீட்டுலையா சார் கல்யாணம் வைக்க முடியும்’’

‘’சரி...குச்சு வீட்டுல வேண்டாம்...பக்கத்துல இருக்கற மச்சு வீட்டுல நடத்து’’

‘’சார்’’என விழி உயர்த்தினாள் நீலா...

‘’மண்டபம் பத்தின கவலையை விடும்மா.....எங்க வீடு போர்ட் மாட்டாத மண்டபம்தான் . .வாசல்ல ..பந்தலைப் போட்டு ஜாம்ஜாம்னு நடத்து.... என் வீட்டுக்கும் இப்பிடிக் கல்யாணக் களை வந்தாத்தான் உண்டு..என் மக அவ பிள்ளைக்கு இங்க வந்தா கல்யாணம் காட்சி பண்ணப்போறா..என் வீட்டுல மங்கள காரியம் நடந்தா நேக்கும் கசக்கவா போறது?’’

மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது நீலாவிற்கு..

‘’பெரிய ஒத்தாசை சார்’’என விழி விரிக்க...

‘’அதெல்லாம் ஒண்ணுமில்ல.ஆக வேண்டியதைப் பாரும்மா...கரையில பயந்துண்டே நிக்கற வரைதான் பயம் பதட்டம் எல்லாம்...துணிஞ்சு இறங்கிட்டா காரியங்கள் கட கடன்னு நடந்துடும்.....வாரேம்மா..போயி தோசை வார்க்கணும்’’

அவளுக்கு இருந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் இரவு உணவின் போது மகனும் மகளும் அம்மியில் வைத்து அரைத்து எடுத்தார்கள்..

‘’போம்மா...அவரு பெரிய கர்ண பிரபு.பெரிசா பேச வந்துட்ட.பெருமையா....அவரு வீடு பேய் பங்களா மாதிரியிருக்கு....நாலு பேரு நடமாடுனா நல்லதுன்னு நெனப்பாரு...அதோட நாம கல்யாணம்னா எப்பிடியும் தூத்துப் பெருக்கித் துடைச்சு வப்போம்..மனுஷன் அதுக்கு அடிபோடுவாரு..எப்பிடி ஆளு..’’.

‘’ஆமா..கஞ்சாப் பிசினாரி...எச்சிக் கையால காக்கா ஓட்ட மாட்டாரு...அவரு ஏதோ சொன்னாருன்னு நீயும் வந்து பீத்திகிட்டு இருக்கே’’

பதிலேதும் பெசவில்லை எனினும் வடிந்து போயிற்று நீலாவிற்கு...அவர் என்ன செய்தால் என் குடும்பத்தாருக்கு திருப்தி வரும்...தெரியவில்லை...இப்பொழுது அதைப் பற்றி சிந்தனை செய்யும் மனநிலையிலும் அவள் இல்லை புரிந்து கொள்ள மறுப்போருக்கு என்ன சொல்லி என்ன ஆகப்போகிறது?...மவுனமாக பாத்திரங்களை ஒழித்துப் போட்டு தேய்க்கத் தொடங்கினாள்...

அடுத்த வந்த நாள்களில் நீலா வீட்டில் கல்யாணக் களை கதவு தட்டி வந்து சேர்ந்தது..

‘’என் மவளுக்கு மாலை பூத்துருச்சு...அது உன்னைய என்னைய கேட்டுகிட்டா இருக்கும்...வந்து விழுந்துருச்சு’’

என்று தனது அண்டை அயலாரிடம் சொல்லி மாய்ந்து போனாள் நீலா ...பத்து பேரை வைத்து எளிமையாக நிச்சயம் செய்தாகி விட்டது

...முத்து கிருஷ்ணன் மற்றும் நீலா இருவருக்கும் கவனமெல்லாம் கல்யாணத்தில் இருந்தது . .ஊரில் ..கழுத்து நிறைய நகைகளைப் போட்டு,கை நிறைய காசு வைத்துக் கொண்டு மாப்பிள்ளைக்காக வழி மேல் விழி வைத்துக் காத்து இருப்பவர்களை அவன் அறிவான்... அப்படி இருக்கையில் என்ன கணக்கில் கடவுள் என் வீட்டு வாசலில் மணப்பந்தலைப் போட்டு இருக்கிறாரோ..யாரறிவார்.?.

.மனதைத் தேற்றிக் கொண்டு களத்தில் இறங்கினான் முத்துக்ரிஷ்ணன் .கல்யாண மஹால் பிரச்சினை இல்லை..ராமகிருஷ்ணன் சார் வீடுதான் என்பது முடிவாயிற்று.....தனது திறனுக்கு ஏற்றவாறு பூ,உணவு,மேளம்,ஆகியவற்றை ஏற்பாடு செய்தான்..

கேளாதோரிடத்தேல்லாம் கடன் கேட்டு கல்யாணத்தை ஒரு வழியாக முடித்தான்...அளவான கூட்டம்..அழகான நிகழ்வு...ராமகிருஷ்ணன் சார் வீட்டில் பழைய முறைப்படி முத்தத்தில் சிமெண்ட்டால் கட்டப்பட்ட மணவறை இருந்தது...அதில் ஜமுக்காளம் விரித்து பூக்களால் அலங்கரித்து மணமக்களை அமர வைத்துத் தாலி கட்டவும்,அதுவே அந்தக் கல்யாணத்துக்கு ஒரு அழகான ஆண்டிக் லுக் குடுக்க,விருந்தினரின் பாராட்டில் பூரித்துப் போயினர் முத்துக்ரிஷ்ணன்—நீலா தம்பதி...

ஆனால் கல்யாணப் பெண்ணுக்கு அதிலொன்றும் பெரிதான லயிப்பு இருக்கவில்லை...ராமகிருஷ்ணன் ஆசீர்வாதம் செய்ய வந்தபோது கூட,அவள் முகத்தில் அலட்சியமே இருந்தது...

‘’ரொம்பப் பெருமை பீத்தாதம்மா...மழை பெய்யாம நம்மளைக் காப்பாத்தியிருக்கு....போன வாரம் பெஞ்சுதே...அது போல அடிச்சு ஊத்தியிருந்தா தெரியும் சேதி’’என்று உள்ளே வந்து அம்மாவிடம் விமர்சனம் வேறு...தலையில் அடித்துக் கொண்டாள் நீலா ...பெற்ற பிள்ளையாகப் பொய் விட்டாள்...வேறு என்ன செய்வது என்ற எண்ணத்துடன் அடுத்த வேலைக்குத் தாவினாள்...

.அன்றைய நாள் கழியக் கழிய பெற்றவர்களது மனப்பதட்டமும் குறைந்தது....மூன்றாம் நாளே மறு வீடு...சீர் செனத்தியுடன் மணமக்களை சிவகங்கையில் கொண்டு விடுவதற்காகப் புறப்பட்டார்கள்....

‘’ராமக்ரிஷ்ணன் சார்கிட்ட கூட சொல்லிக்காம வந்துட்டேன் அவசரத்துல’’வேனில் ஏறிய பின்பு நீலா இப்படிச் சொல்லி நாக்கைக் கடிக்க...

‘’சார் எங்கயும் போயிர மாட்டாரு...வந்து விவரம் சொல்லிக்கோ’ .’வெட்டினாள் ரஞ்சிதா

மகராசி எந்த முகூர்த்த வேளையில் வாய் மலர்ந்தாளோ....

அவர் போய்த்தான் விட்டார்...நீலா ஊரிலிருந்து திரும்பிய கையோடு பட்சணங்கள் எடுத்துக் கொண்டு

‘’வாங்க...ராமகிருஷ்ணன் சார் வீட்டுல பலகாரங்களைக் குடுத்துட்டு அவருக்கு நன்றி சொல்லிட்டு வருவோம்’’..கல்யாணத்தன்னிக்கு அவரு மொகத்தை ஏறெடுத்துப் பார்க்ககூட நேரமில்ல’’என்று கணவனுடன்

ராமகிருஷ்ணன் சார் வீட்டுக்குப் போனபோது அவரில்லை....அவர் நண்பர் விஸ்வநாதன்தான் இருந்தார்...சார் விசு என்றழைப்பார்...

‘’சார்...ராமக்ரிஷ்ணன் சார் இல்லியா’’

‘’...நீங்கதான நீலா’’’’

‘’ஆமா..சார்...’’

‘’உள்ள வந்து பாருங்க...இருக்கார்’’

தயங்கியபடி உள்ளே போனார்கள்..

ஹாலில் ராமகிருஷ்ணன் சார் வழக்கமான புன்னகையில் மாலை போட்ட சட்டத்திற்குள் இருந்து அவளை வரவேற்றார்,,,அலறி விட்டாள் நீலா...

‘’..சார்.போய் சேர்ந்துட்டாகளா’’’’

‘’ஆமாம்மா...செத்தவங்க படத்துக்குத்தான மாலை போடுவாங்க’’

மண்டியிட்டு அமர்ந்து வாய் பொத்தி அழுதாள்...சுவரெங்கும் அவர் குரல் ஒலித்தது...

‘’நீலா.....என்னம்மா சமைச்சு இருக்கே....கிண்ணி எடுத்தாரவா’’கேட்பது போல் காதுகளில் ஒலித்தது..

பொங்கிப் பொங்கி அழுதாள் நீலா .

‘’எப்ப சார் நடந்தது...இந்த காலண்டர்ல என்னோட போன் நம்பர் இருக்குமே...தாக்கல் சொல்லியிருக்கலாம்ல’’—கண்களில் தேங்கிய அதிர்ச்சியுடன் கேட்டான் முத்துக்ரிஷ்ணன்..

‘..ராமகிருஷ்ணன் உங்களைப் பத்தி எல்லாமே என்கிட்டே சொல்லுவார்... ’நீங்க நல்ல காரியத்துக்கு போயி இருக்கீங்க.....அதான் இந்தத் தகவலை சொல்ல வேணாம்னு இருந்துட்டேன்..

யாரு நினைச்சுப் பார்த்தா...நைட்டு என்கிட்டே பேசிட்டுதான் படுத்தான்..காலயில எழுந்துக்கவே மாட்டான்னு யாருக்குத் தெரியும்?..வழக்கமா வாக்கிங் வர்றவன் அன்னிக்கு வரலை...மனசு கேக்காம வீட்டுக்கு வந்து பார்த்தேன்....நான் சந்தேகப்பட்டது சரியாப்போச்சு...தூக்கத்துலயே உயிர் போயிருக்கு...இருபது வருசப் பழக்கம்...சொல்லாம கொள்ளாம காத்தோட கரைஞ்சிட்டான்’’

‘’ஐயோ...எனக்கு ஆறவேயில்ல...பெத்த தகப்பன் மாதிரி என் பொண்ணு கல்யாணத்துக்கு மனசார உதவுனாரு...காலம் பூரா பக்கத்த்துல இருந்துட்டு அவரு உயிரை விடற நேரத்துல பரதேசம் போயிட்டேனே...இனி அவரு குரலை என்னிக்குக் கேக்கப் போறேன்’’எனப் பெரும் குரலெடுத்து அழுதாள் நீலா ...

‘’வருத்தப் படாதீங்கம்மா...ஒரு மனுஷனுக்கு உயிர் போறச்சே பிரியமானவா எல்லாரையும் தூரத் தள்ளி வச்சுடும்னு சொல்வா...

என்னிக்கும் அவரோட ஆசீர்வாதம் உங்க குடும்பத்துக்கு உண்டு..அப்புறம்மா...அவரு உங்களுக்கு அப்பா மாதிரின்னு சொன்னீங்க....அவரும் உங்களை மகளா நினைச்சு இந்த வீட்டை உங்க பேருக்கு உயில் எழுதி வச்சு இருக்காரும்மா’’

சுவாசம் நின்று உதடு உலர்ந்து போனாள் நீலா ...

‘’என்ன சார் சொல்றீங்க/’’—முத்து கிருஷ்ணன்..

‘’ஆமா தம்பி...காலமெல்லாம் எனக்கு உணவளித்த அன்னபூரணிக்கு என் பரிசு அப்பிடின்னு எழுதி வச்சு இருக்கார்...ஏற்கெனவே என்கிட்டே விபரம் சொல்லித்தான் வச்சு இருந்தார்...அவரு சொன்ன இடத்துல இருந்து பத்திரங்கள் எடுத்துகிட்டேன்...அடுத்த மாசம் போயி பத்திரப் பதிவு பண்ணிடலாம்’’

அப்பா என்றழுதாள் அந்தப் பெறாத மகள்...

‘’கைகளில் ஏந்தி

தோள்களில் சுமந்து

நீ காணா உயரங்களை

நான் காண ஆவல் கொண்டாயே..

தன்னலமின்றி யாவையும் எனக்களித்து

எதிர்பார்ப்புகளுக்கு

எதிரி ஆனாயே..

என் தோழனாகிய தந்தையே..’’

தூய மனங்களுக்கிடையிலான உன்னதமான அன்பு,உலகோரின் ஊனப்பார்வைக்குப் புரிவதுமில்லை..புலப்படுவதுமில்லை---ஒரு போதும்...

ஆக்கம்..

கண்ணம்மாள் ஸ்ரீதர்..

தூத்துக்குடி..

போன்.---9025205675

.

‘’

‘’

যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...