மறுவாழ்வு

r.rasiga97
கற்பனை
4 out of 5 (2 )

மறுவாழ்வு

இருளுக்குள் மூழ்கிய தமிழ்நாட்டின் தலைநகரத்தின் நடுவே அமைந்திருந்த அந்த சிறிய வீட்டின் மாடியில் நின்றிருந்தாள் பூவிதா.

அவள் கவனத்தை ஈர்க்கவே இடித்தது இடி. அவள் முகத்தை பார்க்க துடித்த மின்னல் பளிச்சென்று மின்னி மின்னி மறைந்தது. அவள் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அவள் மேனியில் உருண்டு பிரள துடித்த மழை சிறிய இடைவேளை கூட விடாமல் அவளை முழுதாக நனைத்துக் கொண்டிருந்தது.

சடார் சடாரென முகத்தில் விழுந்து தெறிக்கும் மழைதுளிகள் எல்லாம் ஆனந்தமாய் அவள் முகத்தில் பட்டு தெறித்த இன்பத்தில் கடலினுள் சென்று சேர ஓடியது. சுளீரென படும் மழைதுளியினை தாங்கியபடி முகத்தை வானோக்கி நின்றிருந்த பூவிதாவின் எண்ணங்கள் முழுதும் இப்புவியில் இல்லை. மாயங்கள் நிறைந்த கற்பனை உலகத்திற்குள் மூழ்கி கிடந்தது.

"அடியேய் பூவி ... எவ்வளவு நேரம் தான் இப்படி மழையில நனைவ ... உடம்புக்கு எதாவது ஆனா என்ன பன்ன ... கொஞ்சம் கூட உடம்பு மேல அக்கரையே இல்லை" என்று அக்கரையாய் கடிந்தபடி பூவிதாவை நோக்கி குடையை விரித்து பிடித்தவாறு வந்து நின்றாள் கண்மணி பூவிதாவின் சிறுவயது தோழி.

தன் தோழியின் ஆதங்க குரலில் முகத்தை கீழறக்கி தன் தோழியின் புறம் பார்வையை திருப்பினாள் பூவிதா. மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டிருந்த கைகளுக்கு விடுதலை அளித்தவள் கண்கள் சிவந்து போய் இருந்தது.

கண்மணி பூவிதாவை இழுத்துக் கொண்டு கீழே சென்றவள் நாற்காலியில் பூவிதாவை அமர வைத்து ஒரு துண்டையும் எடுத்து பூவிதாவின் தலையை துவட்டினாள். பல உயிர்கள் தன் வாழ்வில் வந்தும் சென்றதும் உண்டு. ஓர் உறவின் பாசம் நிற்கும் நேரத்தில் மற்றொரு உறவு அவள் வாழ்வில் சேரும். பாசம் என்னும் கடலுக்கு எப்பொழுதுமே சொந்தகாரி. அவளை சுற்றி பாசம் வேண்டாம் என்றாலும் எப்பொழுதும் நிறைந்தே கிடக்கும்.

இப்பொழுது கூட பள்ளி காலத்தில் உடன் படித்து சுத்தமாக மறந்து போன தோழி தனக்காக அக்கரையாய் பாசமாய் பணியாற்றி பார்த்துக் கொள்வதை எண்ணி பூவிதா பூரித்து போனாள். 'பரவாயில்லை தன் வாழ்வில் பாசமிகுந்த உள்ளங்களிடம் பழகி பல நல்லுள்ளங்களை சம்பாதித்து வைத்திருக்கிறோம்' என்று பூரித்து போனாள் பூவிதா.

கலங்கிய கண்களுடன் அமர்ந்திருந்த பூவிதாவினை கண்ட கண்மணி "என்னடி ... இன்னமும் நீ எதையும் மறக்கலையா ... ஒரு வருஷம் ஓடி போச்சி டி ... இன்னமும் நீ அதையே நினைச்சிட்டு அழுதுட்டு இருந்தா அப்பறம் எப்படி மிச்ச வாழ்க்கைய கடந்து போறது சொல்லு ... எல்லாத்தையும் மறந்துட்டு புது வாழ்க்கைய வாழ ஆரிமி" என்று கூற பூவிதா மெலிதாக புன்னகைத்தாள்.

"அவ்வளவு சீக்கிரம் மறக்கற வலி இல்லை கண்மணி என் மனசுல நிறைஞ்சி கிடக்றது ... எந்த கவலையும் இல்லாம திரிஞ்சவ நா இப்போ குடோன்ல மூட்டைய அடுக்கி வச்ச மாதிரி கவலை மட்டும் தான் மனசு முழுக்க நிறஞ்சி இருக்கு ... மறக்கவும் முடியல பாரம் தாங்காம இறக்கவும் முடியல ... வலிக்குது" என்று பூவிதா கூறவும் கண்மணி "எல்லாம் சரி ஆகிடும் போய் ட்ரஸ்ஸ மாத்திட்டு வந்து சாப்பிடு போ" என்று பூவிதாவை அறைக்குள் அனுப்பி விட்டாள்.

அறைக்குள் சென்று கதவடைத்த பூவிதா தன் வாழ்க்கை பயணத்தை ஒரு முறை நினைத்து பார்த்தாள். பிறந்து வளர்ந்து பதினெட்டு ஆண்டுகள் அவள் அந்த வீட்டின் இளவரசி. பிடித்ததை தங்களின் சக்தியை மீறி வாங்கி தரும் பெற்றோர்கள். எல்லாம் பதினெட்டு ஆண்டுகள் தான்.

சிறு வயது முதல் அவள் விருப்பத்தையே கேட்டு செய்தவர்கள் அவளின் முக்கிய நிகழ்வும் அவளின் அடுத்தகட்ட வாழ்க்கையையும் அவள் விருப்பமின்றியே அமைத்து கொடுத்தனர். வேண்டாம் என்றாலும் விடாமல் கண்ணீர் வடித்தும் தற்கொலை , கவுரவம் என்னும் ஆயுதத்தை காட்டியும் சம்மதிக்க வைத்தனர்.

விதியே என்று தன் வாழ்க்கைக்காக போராட தைரியமும் பக்குவமும் இல்லாமல் பூவிதா தலை குனிந்து வாழ்க்கையை ஏற்றுக் கொண்டாள். மஞ்சள் கயிறுடன் தங்க தாலி கோர்த்து தன் கழுத்தில் ஏறிய தங்க தாலி மேல் பட்டு தெரித்தது பூவிதாவின் விருப்பமின்மையின் அடையாளம்.

அப்பொழுது முதல் தினம் தினம் வேதனையும் மனம் முழுதும் பாரம் தான். மேல் படிப்புக்காக கல்லூரி சென்று வந்துக் கொண்டிருந்தவள் மேல் அனைவரின் எதிர்பார்ப்பு குழந்தைபேறு. ஆனால் அறையினுள் அவர்களுக்குள் ஊமையாய் நடந்துக் கொண்டிருந்த வாக்குவாதமும் சண்டையும் வெளியில் யாருமே அறியாதது.

திருமணம் முடிந்த ஒரு வருடத்தில் அந்த வீட்டில் குழந்தையின் சத்தம் கேட்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. பெண்ணின் விருப்பமும் முக்கியமல்ல அவளின் படிப்பும் முக்கியமல்ல. பெண் பிள்ளைகள் படித்து என்ன செய்ய போகிறது அடுத்த வீட்டிற்கு வாழ போகிறவளுக்கு வீட்டு வேலைகள் தான் தெரிய வேண்டும் என்பது பலரின் எண்ணங்கள்.

பெண்கள் இயந்திரம் அல்ல அவளும் சதையும் எலும்பும் கொண்ட ஆசை, கனவுகள் போன்ற அழகான சுமைகளை மனதில் தாங்கியவர்கள் என்பதை மறப்போர் பலர்.

அதில் மாட்டிக் கொண்ட பெண்களில் பூவிதாவும் ஒருவள். வாழ்க்கையை பற்றி முழுதாக அறியும் முன்னே அடுத்த வீட்டிற்க்கு மருமகளாக காலடி எடுத்து வைத்தாள். தினமும் நடக்கும் ஊமை சண்டையால் படிப்பில் கவனம் இல்லை. படிப்பையும் சரியாக முடிக்காமல் திருமண வாழ்க்கைக்குள்ளும் நுழைய முடியாமல் பாதி கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்தாள்.

ஒரு கட்டத்திற்கு மேல் படிப்பை விட திருமண வாழ்க்கையையே சீரமைத்துக் கொள்வோம் என்று முடிவெடுத்து அதனுள் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். ஆனால் அவளின் இல்லற வாழ்விற்கு ஆதாரமாக அனைவராலும் கருதப்படும் குழந்தைப்பேறு மட்டும் கிடைக்கவில்லை. அவளவனின் 'இதுக்கு தான் சொன்னன் எது எது எப்ப நடக்கனுமோ அப்போவே நடக்கனும் இல்லனா இப்படி தான் அவஸ்தப்படனும் ... படிப்பாம் படிப்பு ... வெளியில தலை காட்ட முடியல ... பாக்கறவன் எல்லாம் உன் பொண்டாட்டி என்ன படிச்சிருக்கான்னா கேக்றாங்க எத்தனை பிள்ளைங்கன்னு தான் கேக்றாங்க .... நீ வீட்டுக்குள்ளே இருக்க என்னை மாதிரி வெளில போய் நாலு பேர பார்த்து அவங்க கேட்டு உனக்கு அசிங்கமா இருந்தா தான் புரியும்' என்று ஒவ்வொரு மாதமும் குத்தி காட்டும் போதெல்லாம் குற்றவுணர்வுக்கு ஆளானாள் பூவிதா.

'எல்லாம் என் தப்பு தான் ... அவர் சொல்ரது உண்மை தான் ... நா முன்னவே இந்த வாழ்க்கைய ஏத்துகிட்டு இருந்திருக்கனும்' என்று நினைத்து தினம் தினம் கலங்கி போனாள். ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் போகக் கூடாது சோதனை கருவியில் இரண்டு கோடு வர வேண்டும் என்று வேண்டாத தெய்வம் இல்லை குடிக்காத பச்சிலை இல்லை எடுத்துக்கொள்ளாத ஆங்கில மருந்தும் இல்லை. எதுவுமே பயனில்லை.

முதலில் வாழ்க்கையை ஏற்க மறுத்து அழுத கண்கள் அடுத்து எப்பொழுது குட்டியின் வருகை என்பதை நினைத்து கலங்கியது. எந்த நிமிடத்தில் தாலியின் மீது அவள் கண்ணீர் பட்டதோ அப்பொழுதிலிருந்து கண்களில் கண்ணீர் வற்றும் வரை அழுதழுது சோர்ந்து போனாள்.

வாழ்க்கையை சரி செய்ய பூவிதா யோசித்துக் கொண்டிருக்க அவளின் தலையில் இடியாய் விழுந்தது அவள் கணவனின் இழப்பு. வாழ்வில் மனைவியின் பாசமும் இல்லை பாசமாய் வளர்க்க குழந்தையும் இல்லை . வருவோர் போவோரெல்லாம் குழந்தைபேறுக்காக ஒவ்வொரு மருத்துவமணையையும் ஒவ்வொரு சித்த வைத்தியமும் ஒவ்வொரு கோவிலும் ஒவ்வொரு பரிகாரமும் கூற மனமுடைந்தவர் குடி பழக்கத்திற்கு ஆளானார்.

குடித்து குடித்தே விபத்தில் மாட்டிக் கொண்டவர் ஒரேயடியாக கடவுளிடம் வரம் கேட்க சென்றுவிட்டார். இனி வாழ்க்கையில் என்ன செய்ய போகிறோம் எப்படி வாழ போகிறோம் என்று தெரியாமல் இருந்த பூவிதா வேலைக்காக கிளம்பி வந்தாள் தமிழகத்தின் தலைநகரத்திற்கு.

மனதிற்கு சிறு மாற்றம் தேவை என்று அவளின் பெற்றோர் அவளை அனுப்பி விட்டனர். அங்கேயே பூவிதா இருந்தால் விதவை முகத்தில் விழித்தால் காரியம் கெட்டுவிடும். விதவை நல்ல காரியங்களுக்கு செல்ல கூடாது என்று பல விதிகளுக்கு இடையில் இன்னும் பூவிதா சிக்கி தவிக்க கூடாது என்பது அவர்களின் எண்ணம்.

பல மன பாரங்களை மனதில் சுமந்தவாறு சென்னை வந்திறங்கி இதோ நாளையில் இருந்து வேலைக்கு செல்ல போகிறாள் பூவிதா.

"இன்னுமா டி ட்ரஸ் மாத்தர" என்ற கண்மணியின் குரலில் தன் கடந்த காலத்தில் இருந்து மீண்ட பூவிதா வேகமாக உடையை மாற்றிக் கொண்டு சாப்பிட சென்றாள்.

அடுத்த நாள் காலை முதல் நாள் முதல் வேலைக்கு கிளம்பி சென்றாள் பூவிதா. அலுவலகத்தின்னுள்ளே பூவிதா நுழையும் முன்னே அவளை ஒரு ஜோடி கண்கள் சுவாரசியமாக பார்த்தது.

"ஹேய் புவி" என்று ஆச்சரியமாகவும் ஆனந்தமாகவும் அவளை நெருங்கியவனை அதே ஆச்சரியத்துடன் பார்த்தாள் பூவிதா.

"ஹேய் சூரியா நீ என்ன இங்க" என்று பூவிதா கேட்க "அத நா கேக்கனும் நா இங்க தான் வேலை செய்றன் நீ இங்க என்ன பன்ற" என்று கேட்டான் பூவிதாவின் சீனியரும் நண்பனுமான சூரியா.

"நானும் இங்க தான் வேலைக்கு ஜாயின் பன்னி இருக்கன்" என்று பூவிதா கூறவும் சூரியா "கங்க்ராட்ஸ்" என்று கை நீட்டினான். பூவிதாலும் சூரியாவின் கை பிடித்து குலுக்கினாள்.

புது வேலையாட்களை அழைக்கவும் பூவிதா சூரியாவிடம் இருந்து விடைபெற்று நகர்ந்தாள். சூரியாவின் ரசனையான பார்வை மீண்டும் பூவிதாவை தொடர்ந்தது.

"அவ இங்க ஜாயின் பன்னது உனக்கு தெரியவே தெரியாது இல்லை" என்று சூரியாவின் நண்பன் கேலியாக கேட்கவும் சூரியா மர்மமாக புன்னகைத்தான்.

"அவ எனக்கு இல்லன்னு இருந்தப்போவே அவள கவனிச்சிட்டு இருந்தவன் நான்... இப்போ அவளை அடைய ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும் போது விட்ருவனா" என்று சூரியா கூற அவனின் நண்பன் புன்னகைத்தான்.

சூரியா தான் பூவிதாவிற்கு வேலைக்கு ஆள் தேவை என்று விளம்பரத்தை அனுப்பியது. பூவிதாவை அவன் வேலை செய்யும் அலுவலகத்திற்கே வேலைக்கு நியமிக்க அவன் எல்லா கள்ளத்தனத்தையும் செய்தான். காதல் கொண்டால் கள்ளதனமும் சேர்ந்து வரும் என்பது பொய்யல்ல உண்மை என்பதை சூரியா நிரூபித்தான்.

தன் புது வேலை தான் புது வாழ்க்கை என்று நுழையும் பூவிதாவிற்காக சூரியா வடிவில் ஒரு மறுவாழ்வு காத்திருக்கிறது என்பது தெரியாத ஒன்று. அவள் சிரிப்பை மீட்டு தரவும் அவள் வலிகளுக்கு மருந்திடவும் அவள் கனவுகளுக்கு உயிர் கொடுக்கவும் அவள் பாதைக்கு பாதுகாவலனாகவும் அவள் உயிருக்கு உயிராகவும் அவளின் அபசகுண அலங்கோல பேச்சுக்களை துரத்தியடிக்கவும் அவளின் நெற்றி வகிடில் மீண்டும் குங்குமம் இடவும் காத்திருக்கிறான் சூரியா. மறுவாழ்வின் துவக்கத்தில் பூவிதா.

যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...