JUNE 10th - JULY 10th
*இருமனம்*
தலையில் நீர் சொட்ட சொட்ட குளியறையில் இருந்து வெளியே வந்தவன்.
"ஹப்பா! பெண்டு நிமிர்ந்துருச்சு." என்று கூறிக்கொண்டே படுக்கையில் உறங்கும் மகளை திரும்பி பார்த்தவனின் உள்ளத்தில் ஓர் மகிழ்ச்சி கரைபுரண்டோடியது.
"உன்னோடு வாழத்தானே உயிர்வாழும் போராட்டம்" ஒலிக்கும் தன் அலைபேசியை எடுத்து "ஹலோ!" என்றான் வேந்தன்.
"வேந்தா என்னடா பண்ற? பாப்பா என்ன பண்றா? சாப்டிங்களா?" என்றார் அக்கறையாய்.
"இன்னும் இல்லம்மா. இப்போ தான் எல்லாம் அடுக்கி முடிச்சி குளிச்சிட்டு வந்தேன். சாப்பிடணும். குட்டிமா தூங்குறா." என்றான் கண்ணாடியை பார்த்துக்கொண்டே தலை துடைத்து.
"சாப்பிட என்ன இருக்குப்பா?" அம்மா.
"இன்னைக்கு வேலை ஜாஸ்திமா. அதனால செல்வா தான் வாங்கிட்டு வந்து கொடுத்திட்டு போனான்." என்றான்.
"உனக்கு என்ன தலையெழுத்து யாரும் இல்லாத ஊர்ல அனாதையா போய் கைகுழந்தையை வச்சிக்கிட்டு கஷ்டப்படனும்னு?" என்று பெருமூச்சுவிடும் அம்மாவின் வருத்தம் புரிந்தாலும்,
"அம்மா! எனக்கு ஓரு மாற்றம் தேவை. நான் பார்த்துக்குறேன்."
"என்னவோ பா. நீ இப்படி கைக்குழந்தையை வச்சிக்கிட்டு அங்க போய் தனியா இருக்கிறது எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குப்பா." என்றார் அவனின் தாய் வேதனையாய்.
"அம்மா அதெல்லாம் ஒண்ணுமில்லை மா. நீங்க எதுவும் வருத்தபடாதீங்க. எனக்கு ஒரு மாறுதலா இருக்கும்னு தான் இங்க வந்துருக்கேன். நான் பார்த்துக்குறேன். நீங்க என்னை நினைச்சு வருத்தபடாம அப்பாவை பார்த்துக்கோங்க. அவருக்கு உடம்பு முடியலை. அதனால தான் உங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு வரலை. சரிம்மா பாப்பா எழுந்துட்டா. நான் அப்புறம் பேசுறேன்." என்று வைத்தான். விட்டால் மீண்டும் அதையே பேசிக்கொண்டிருப்பார்கள் என்று தெரியும். மணி மதியம் இரண்டு என்று காட்டியது.
காலையில் வந்தது முதல் வீட்டில் பொருட்களை அடுக்கி வைப்பதில் நேரம் சரியாக இருந்தது.
நண்பன் செலவாவின் உதவியால் அலுவலகத்தின் அருகேவும் செல்வாவின் வீட்டருகேவும் ஒரு வீட்டை வாடகைக்கு பார்த்து குடி வந்தாயிற்று.
அடுத்து தன் மகளை பார்த்துக்கொள்ளும் டே கேர் எங்கிருக்கிறது பார்க்கவேண்டும் என்ற அவனின் கவனத்தை சிதைக்க வந்தாள் குட்டி தேவதை.
அவளின் அழுகுரலில் வேகமாக மகளிடம் ஓடினான்.
"செல்லக்குட்டி எழுந்துட்டிங்களா?" என்று தூக்கிக்கொள்ள அழுகை நின்ற இடம் மாயமானது.
தன் தந்தையை முட்டைகண்களால் சரி பார்த்தவள் பஞ்சு போன்ற பிஞ்சு இதழ்களால் அவனின் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.
ஒரு நொடி ஆடிபோனவன் நின்ற இடத்தில் வேரூன்ற, தன் மனைவியின் ஞாபகம் பலமாய் தாக்கியது.
****
"என்னங்க எழுந்திரிங்க." என்று எழுப்பும் மனைவியின் குரலை கேட்டாலும் வேண்டுமென்றே எழாமல் விழிகள் மூடி படுத்திருந்தான்.
"எனக்கு ஆபீஸ்கு நேரமாகுது மாமா செல்லம் இல்ல. எழுந்துறீங்க." என்றாள் சிணுங்களாய்.
அவளின் கொஞ்சல் மனதிற்கு இனிமையாய் இருந்தாலும் மீண்டும் எழாமல் இருக்க, "இப்போ எந்திரிக்கலை..." என்று மிரட்டும் மனைவியின் முகபாவனை கண்டு முகம் மலர எழுந்தான்.
மறுநொடி அவனின் கன்னத்தில் இதழ் பதித்தவள். "ஐ லவ் யு செல்லபையா! இனி எப்பவுமே நீ எழுந்தவுடனே இப்படி தான்." என்று கூறும் மனைவியை ஆச்சர்யமாய் பார்த்தவன்.
"எனக்கு ஒரு சந்தேகம்?" என்றான் விழிகளில் குறும்புடன்.
"என்ன?" என்றாள் ஒன்றும் புரியாமல்.
"இல்ல.. இதெல்லாம் என் மேல இருக்க அன்பால நீ செய்யற வேலையா? இல்ல ஒருவேளை என் பொண்ணு செய்ய வைக்கிறாளோ?" என்றான் கன்னம் தட்டி யோசிப்பது போல்.
முதலில் ஒன்றும் புரியாமல் யோசித்தவள் பின், "உனக்கு எவ்ளோ கொழூப்பிருந்தா உன் பொண்ணு பிறக்கிறதுக்கு முன்னாடியே என் அன்பை சந்தேகபடுவ?" என்று விடாமல் துரத்தினாள்.
"ஏய்! பார்த்துடி! வயத்துல புள்ளைய வச்சிக்கிட்டு இப்படி ஒட்ற? செல்லக்குட்டி சும்மாதாண்டி சொன்னேன். நீ என் உயிர்டி உன்னை சந்தேகபட்டா என்னையே சந்தேகபட்ற மாதிரி தானே?" என்று சிரித்து மனைவியை கட்டிக்கொண்டான்.
"இப்படி சொல்லி சொல்லியே என் வாய அடைச்சுரு." என்று அவன் நெஞ்சில் சாய்ந்தவள், "என்னங்க?" என்றாள் மெதுவாய்.
"என்ன?"
"இன்னும் ஒரு மாசத்துக்குள்ள பாப்பா பிறந்துரும்." என்றாள்.
"ஆமா டா. எப்போ என் பொண்ணை பார்ப்பேன்னு இருக்கு." என்றான் முகம் முழுவதும் மகிழ்ச்சியுடன்.
"ஆனாலும் நீ முன்ன மாதிரி இல்ல. எப்போ பாரு உனக்கு உன் பொண்ணு பேச்சு தான். என்னை பத்தி யோசிக்கிறதும் இல்ல." என்று உதடு பிதுக்கியவளை கண்டு உள்ளம் நெகிழ, "அப்படியா சங்கதி. பொண்ணை கொஞ்சினதும் அம்மாவுக்கு கோபம் வருதோ?" என்றான் குறும்பாக.
'ஆமாம்.' என்று தலையாட்ட, அவளின் நெற்றியில் இதழ் பதித்து, "இன்னும் எத்தனை குழந்தை பிறந்தாலும் நீ தானே பர்ஸ்ட்டு... வேற யாராலயும் அந்த இடத்தை நிரப்ப முடியாது." என்றான்.
"ஒருவேளை எனக்கு ஏதவாது ஆகிடுச்சுன்னா என்ன பண்ணுவ மாமா?" என்றாள் தயங்கியபடி.
"எந்த நேரத்துல என்ன பேசுற? உனக்கு எதுவும் ஆகாது. நீயும் பாப்பாவும் பத்திரமா இருப்பிங்க." என்று நெற்றியோடு நெற்றி முட்டினான் வேந்தன்.
*****
உறக்கத்தில் இருந்து பட்டென விழித்தவன் முகத்தில் அரும்பியிருந்த வியர்வை துளிகளை துடைத்தபடி மணியை பார்க்க, விடியல் நான்கு காட்டியது. பக்கத்தில் விழிகளை கொள்ளை கொள்ளும் மலராய் அவன் மகள் அவன் மேல் ஒரு காலையும் கையையும் போட்டு உறங்கி கொண்டிருந்தாள்.
"அப்டியே அம்மா மாதிரி." என்று சிரித்தவன் மீண்டும் மகளுடன் ஒட்டி படுத்தான்.
****
"ஏய் காலை எடுடி." என்றான் வேந்தன்.
"மாமா ப்ளீஸ். எனக்கு உன் மேல கால் போட்டு தூங்கினா தான் தூக்கம் வரும்." என்று உறக்கத்தை தொடர்ந்தாள்.
"அம்மு... என் மேல கால் போட்டு தூங்கினா நான் எதுவும் சொல் மாட்டேன்டி. ஆனா என் கழுத்து மேல காலை போட்டா தான் தூக்கம் வருமாம்மா உனக்கு? ரொம்ப படுத்துறடி நீ. என் பொண்ணு வரட்டும் உன்னை ஒரு வழி பண்றேன்." என்று கழுத்திலிருந்த காலை எடுத்துவிட்டு மீண்டும் உறங்க தொடங்கினான்.
****
காலையில் எழுந்தவன் எல்லா வேலைகளையும் முடித்து மகளுக்கு டேகேர் சென்டரை தேடி சென்றான்.
இரண்டு மூன்று பார்த்தும் திருப்தியில்லாமல் மீண்டும் தேட, வீட்டிலேயே ஒரு பெண் டெகேர் வைத்திருப்பதாக கூறினர்.
அங்கே சென்று பார்த்ததும் பிடித்துவிட்டது வேந்தனுக்கு. அப்பெண் இல்லையென்பதால் வேலை செய்யும் பெண்ணிடம் மகளை பற்றி கூறிவிட்டு வந்தான்.
மறுநாள் மகளை டெகேரில் விட்டுவிட்டு புது அலுவலகத்திற்கு வந்தான்.
அனைவருக்கும் தன்னை அறிமுக படுத்திக்கொண்டு தன் வேலையை தொடங்கினான்.
"புது மேனேஜர் ஸ்மார்ட்டா இருக்கார்ல? செம அழகு. யாருக்கு வாய்ச்சுருக்கோ இவர் மனைவியாக." என்று பெண்களில் ஒரு சிலர் கூறியது எதுவும் அவனை பாதிக்கவில்லை.
அவனை போலவே இன்னொரு பெண்ணும் இவர்களின் பேச்சில் கலந்து கொள்ளாது தன் வேலையை கவனித்து கொண்டிருந்தாள். அவள் தான் நந்திதா.
வேந்தன் அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரின் நடவடிக்கைகளையும் அமைதியாக கவனித்து கொண்டுதானிருந்தான்.
அதில் இந்த பெண் மட்டும் யாருடனும் பேசாமல் தன் வேலைகளை மட்டுமே பார்த்து கொண்டிருந்தாள். விழிகளில் தெரிந்த சோகமும் இன்னும் ஏதோ ஒன்று ஏன் இவ்வாறு இருக்கிறாள் என்று தோன்றினாலும் நமகெதற்கு என்று தன் பணியை தொடர்ந்தான்.
*****
"மாமா"
"ம்ம்"
"மாமா." என்று உறங்கி கொண்டிருந்தவனின் காதில் நாவால் கோலமிட, "என்னடி?" என்று திரும்பிப்படுத்து மனைவியை தன் மேல் போட்டு கொண்டவன்.
"என்ன வேணும்? காலைலயே மாமாவை டிஸ்டர்ப் பண்ற?" என்றான் விழி திறக்காமல்.
பதில் ஏதும் வராததால் விழி திறந்தவன் மனைவியை பார்க்க அவளும் அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள்.
"என்னடா?" அவள் நெற்றியில் இதழ் பதித்து இதமாய் தலை கோத, அவனிடம் இருந்து விழி அகற்றாமல் தன் கரத்தில் இருந்த சின்ன பரிசு பொருளை கொடுத்தாள்.
"என்னது இது? இன்னைக்கு என் பர்த்டே இல்லையே?" என்று கேட்டபடி ஆர்வமாய் பிரித்தான்.
உள்ளே இருந்த சிறிய பொருளை கண்டவுடன் விழிகளில் தெரிந்த மகிழ்ச்சிக்கு இந்த உலகையே உள்ளங்கையில் மடித்து தரலாம் என்றிருந்தது. அப்படி ஒரு பேரானந்தம்.
"அம்மு!" என்று விழிகளில் கண்ணீரோடு அணைத்து கொண்டான்.
"நான் எவ்ளோ சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?" என்று அவளை அணைத்து கொண்டான்.
"இன்னும் எட்டு மாசம் ஆகுமா? இப்போவே தரியா?" என்றான் சிறு குழந்தை போல்.
"ஹ்ம்ம் ஆசைய பாரு. உன்னோட பாப்பா தான். ஆனா நான் பெத்து தர எட்டு மாசம் ஆகும்." என்று அவனின் தலை முடியை அசைத்து விளையாடினாள்.
*****
"சர்!" என்று குரலில் கண் விழித்தவன், "என்ன?" என்பது போல் பார்த்தான்.
"மணி எட்டு ஆகிடுச்சு சார். எல்லோரும் போய்ட்டாங்க." என்று தலையை சொறிந்தான் பியூன்.
'மணி எட்டு ஆகிடுச்சா? அச்சோ பாப்பா...' என்று பதறியபடி எழுந்து வேகமாய் ஓடினான்.
அவசரமாய் அந்த டெகேரில் நுழைய அங்கே அவன் மகள் அழகாய் சிரித்து விளையாடி கொண்டிருந்தாள். தன் மகளுடன் விளையாடி கொண்டிருந்த பெண்ணை அதிர்ச்சியாய் நோக்கினான்.
இன்று அலுவலகத்தில் பார்த்த அதே பெண் தான் ஆனால் முகம் நிறைய புன்னகையுடன்.
"வாங்க சார். பாப்பா சாப்பிட்டாங்க. நீங்க வீட்டுக்கு போய் தூங்க வச்சா போதும்." என்று குழந்தையை தந்தாள்.
"தேங்க்ஸ். நீங்க..." என்றான்.
"நான் தான் இந்த டே கேரை நடத்திட்டு வரேன்." என்றாள் மெலிதான புன்னகையுடன்.
"பாப்பாக்கு எத்தனை வயசு?" என்றாள்.
"இரண்டரை வயசு." என்றான்.
"ரொம்ப சுட்டி." என்று புன்னகைத்தாள்.
"நீங்க இன்னைக்கு ஆபிஸ்ல..." என்று இழுத்தான்.
"ஹ்ம்ம். தெரியும் சார். நீங்க தான் இன்னைக்கு வந்த மேனேஜர். ஆனா குழந்தையோடு அப்பா நீங்க தான்னு தெரியாது." என்றாள்.
"உங்க பேரு?"
"நந்திதா கணேஷ்." என்றாள்.
"சரிங்க. நாங்க வரோம்." என்று கிளம்பினான்.
அந்த மாதம் முழுவதும் இப்படியே சென்றது. சில நேரங்களில் வர லேட்டாகும். சில நேரங்களில் சீக்கிரம் வந்துவிடுவான். மகளை பாதுகாப்பான இடத்தில் விட்டு செல்கிறோம் என்ற நிம்மதி அவனுக்கு. சில நேரங்களில் எதிர் படும் பொழுது புன்னகையை பரிமாற தொடங்கியிருந்தனர் இருவரும்.
*****
இன்று வேலை பளுவின் காரணமாக லேட்டாக வந்தான்.
"பாப்பா சாப்பிட்டு இவ்ளோ நேரம் விளையாடிட்டு தான் இருந்தா. இப்போ தான் தூங்கிட்டா." என்றாள்.
"சரிங்க"
"பாப்பாவோட அம்மா..." என்று இழுத்தாள்.
"அவங்க டெலிவரில தவறிட்டாங்க."
"ஒஹ் மன்னிச்சுடுங்க. ரொம்ப குட்டி வயசா இருக்கறதுனால கேட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க." என்றாள்.
"பரவால்லைங்க. நீங்க தான் டெகேர் நடத்துறீங்க அப்புறம் ஏன் வேலைக்கும்...?" என்று இழுத்தான்.
"அது ஒன்னுமில்லை சார். நாலு குழந்தைங்களோட படிப்பு செலவை நான் ஏத்துகிட்டுருக்கேன் அதான் வேலை பார்க்கிறேன்." என்றாள்.
"ஒஹ்... சரிங்க நான் கிளம்புறேன்." என்றான்.
"நாளைக்கு சன்டே..."
"ஆமா"
"நாளை போலியோ ட்ராப்ஸ் பாப்பாக்கு மறக்காம போட்ருங்க." என்றாள்.
"சரிங்க." என்று வீட்டிற்கு வந்து விட்டான்.
நாட்கள் சிறகில்லாமல் பறந்தது.
நாளையோடு அவன் மனைவி மிருதுளா இறந்து மூன்று வருடங்கள் ஓடிவிட்டது. இங்கு வேலைக்கு வந்து ஆறு மாதங்கள் ஓடிவிட்டது.
"அடுத்தவங்க பேசுறாங்கன்னு என்னை பத்தி யோசிக்காம உன் உயிருக்கு ஆபத்திருக்குன்னு தெரிஞ்சும் குழந்தையை பெத்து என்கிட்ட கொடுத்துட்டு நீ போய்ட்ட... நீ ரொம்ப செல்பிஷ் டி." என்றான் மனைவியின் புகைப்படத்தை வருடியபடி.
"ஏன் என்னை பத்தி நீ யோசிக்கவே இல்லையா?" கண்ணீரில் கரைந்தான்.
"யாரை பாரு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ ன்னு சொல்றாங்க. உன்கூட வாழ்ந்த வாழ்க்கையை மறந்துட்டு எப்படி டி இன்னொரு பொண்ணுகூட வாழமுடியும்?" என்று மருகினான்.
"உள்ள வரலாமா?" வாசலில் குரல் கேட்கவும் கண்ணீரை துடைத்து வெளியே சென்றான்.
நந்திதா தான் நின்று கொண்டிருந்தாள்.
"வாங்க வாங்க..." என்று வரவேற்றான்.
"இன்னைக்கு பாப்பாக்கு பிறந்தநாள். அவ அங்க வரல அதான் பார்த்துட்டு போலாம்னு வந்தேன். பாப்பா எங்க?" என்றாள் தயக்கமாய்.
ஒரு சிலநொடி மௌனமாக கழித்தவன், "இல்ல இன்னைக்கு என் மனைவி இறந்தநாள். அதான் பிறந்தநாள் கொண்டாடினதில்லை." என்றான் வருத்தமாக.
"இந்த நாள் நிச்சயமா உங்களுக்கு ரொம்ப வருத்தமான நாள் தான். ஆனாலும் அந்த சின்ன குழந்தை என்ன பண்ணா. அவளுக்கு எதுவும் தெரியாதே. பாவமில்லையா?" என்றாள்.
என்ன சொல்வதென்று தெரியவில்லை வேந்தனுக்கு.
அமைதியாய் உள்ளே சென்றவன் குழந்தையை கொண்டு வந்து,
"இந்தாங்க." என்றான்.
ஆசையாய் குழந்தையை வாங்கி முத்தமிட்டு கொஞ்சியவள், "சார்! எனக்கு எதுவும் தெரியாது. அதனால கேக் வாங்கிட்டு வந்துட்டேன். வெட்டலாமா?" என்றாள் தயக்கமாய்.
புன்சிரிப்புடன், "சரிங்க." என்றவுடன் அவள் வாங்கி வந்த ட்ரெஸ்ஸை போட்டு குழந்தைக்கு தலைவாரி அழகு படுத்தியவள் வேந்தனின் மனைவி படத்துக்கு விளக்கேற்றி கேக்கை வெட்ட வைத்தாள்.
குழந்தையின் மகிழ்ச்சியை கண்டவனுக்கு குற்றவுணர்ச்சியாக இருந்தது.
"நான் கிளம்புறேங்க." நந்திதா.
"இருங்க முதல் தடவை வந்துருக்கிங்க. சாப்பிட்டு போங்க." என்றவன் வற்புறுத்தி சாப்பிட வைத்தான்.
"உங்க சமையல் நல்லாருக்கு சார்." என்றாள்.
"நீங்க வேற கிண்டல் பண்ணாதீங்க." என்று புன்னகைத்தபடியே சாப்பிட்டான்.
"அப்பா அம்மாகூட இல்லையா நீங்க?"
"நீங்க தப்பா சொல்றிங்க. நான் தான் அவங்க கூட இல்ல." என்று வெற்று புன்னகைத்தாள்.
"என்னங்க சொல்றிங்க? நீங்க மட்டும் தனியாவா இருக்கிங்க?" என்றான்.
"ஹ்ம்ம்... ஆமாங்க." பெருமூச்சோடு.
"உங்களுக்கு விருப்பம் இல்லன்னா விடுங்க பரவால்ல." என்றான் மெதுவாய்.
"அட நீங்க வேற... என்னை தவிர யாரையும் நான் நம்புறதில்லைங்க. ஆறுமாசமா உங்களை பார்க்கிறேன். நல்ல மனுஷன் நீங்க சொல்றேன்." என்றாள்.
"நான் வீட்டுக்கு பெரிய பொண்ணு தம்பி ஒருத்தன். டிக்ரீ முடிச்ச கையோட மாப்பிள்ளை பார்த்தாங்க. இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்னு எவ்ளவோ கெஞ்சுனேன். பொட்ட புள்ளைய வீட்ல வச்சிருந்தா வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு இருக்கணும். நல்ல இடம். வாய மூடுன்னு சொல்லிட்டாங்க.
நானும் இதான் என் தலைவிதின்னு கல்யாணம் செஞ்சுகிட்டேன்.
போகும்போது, "என்ன ஆனாலும் புருஷனோடு தான் இங்கே வரணும் தனியா வரக்கூடாது புருஷன் என்ன சொன்னாலும் செய்யணும்னு சொன்னாங்க.
அங்க போன பிறகு தான் தெரிஞ்சுது அது வீடு இல்ல ஜெயில்னு. ஒரு கிரைண்டர், மிக்சி, வாஷிங் மெஷின் எதுவுமே கிடையாது எல்லாமே நான் தான் செய்யனும். அதுவும் பழகிக்கிட்டேன். அவங்க ரூல்ஸ் டி வி பார்க்க கூடாது... ரேடியோ கேட்கலாம் அதுவும் கொஞ்ச நேரம் தான். அக்கம் பக்கத்துல யார்கிட்டயும் பேசக்கூடாது. பான் போடக்கூடாது. முக்கியமா போன் பேசக்கூடாது. போன ரெண்டு நாள்ல என் போனையும் நகையையும் வாங்கி வச்சுட்டாங்க. வீட்டுக்கு பேசனும்னு கேட்டா முதல் ஒரு வாரம் மட்டும் போட்டு கொடுத்தாங்க. அதுக்கு பிறகு அதுவும் இல்லை. மீறி வீட்டுக்கு பேசனும்னா அடி விழும். எந்த ஒரு வசதியும் இல்லாம யாருக்கிட்டயும் பேசாம எப்படி இருக்க முடியும்? பைத்தியம் பிடிக்கலை அது மட்டும் தான் குறை.
இதுகூட பரவால்ல பொறுத்துக்கலாம். ஆனா என் புருஷன் அங்க போன ஒரு நாள் மட்டும் பேசினார். அதோட அவ்ளோ தான் அவர் மேல் மெத்தையிளையும் நான் கிழ தரைலயும் தூங்கனும். நானும் பொறுத்து பொறுத்து பார்த்துட்டு ஒரு நாள் கேட்டேன்." என்று தயங்கினாள்.
"போதும்ங்க ரொம்ப கொடுமைங்க. சொல்ல முடியலைனா விட்ருங்க. பழசை கிளறி வலி உங்களுக்கு தான்." என்றான் வேந்தன்.
"உங்களுக்கு என்னை பிடிக்கலையா இல்லை என்கிட்ட என்ன குறை? ஏன் என்கிட்ட இருந்து விலகி இருக்கிங்கன்னு கேட்டது தான் நான் செஞ்ச தப்பு. அன்னைலர்ந்து சந்தேகப்பட்டு அடி உதைதான். இன்னும் கொஞ்ச நாள் இங்க இருந்தா பைத்தியமாகி நான் செத்துருவேன்ற நிலைக்கு போய்ட்டேன். இருந்தும் ஒரு குறுக்கு வழில என் வீட்டுக்கு போன் செஞ்சு பேசினா நான் என்ன சொல்ல வரேன்னு கூட அவங்க கேட்க விரும்பலை.
ஆம்பிளைன்னா அப்படி இப்படி தான் இருப்பாங்க. இதுக்கெல்லாம் கண்ணை கசக்கிட்டு இருக்க கூடாது. என்ன நடந்தாலும் அங்க கோவிச்சுக்கிட்டு இங்க தனியா வரக்கூடாதுன்னு வச்சுட்டாங்க. வாழ்க்கையே வெறுத்த நாள் அது தான். என்ன செய்றதுன்னு தெரியலை. இப்படியே இருக்கிறதுக்கு சாகிறது மேல் ன்னு தோணுச்சு. அப்போ தான் என் பெஸ்ட் பிரெண்டோட ஞாபகம் வந்துச்சு. எப்படியோ எல்லாத்தையும் அவகிட்ட சொல்லி அழத அன்னைக்கு நான் போன் பேசினது எப்படியோ தெரிஞ்சுகிட்டு அடிச்சாங்க பாருங்க. வாழ்க்கை மேல மட்டுமில்லை என் உயிர் மேலையே வெறுப்பு வந்துருச்சு. இருந்தும் நாலு நாள் அமைதியா இருந்தேன்.
அஞ்சாவது நாள் அவன் ஆபிஸ் போன நேரத்துல என் பிரென்ட் பீ.சி கூட வந்தா, யார் என்ன பேசினாலும் கேட்காம என்னை அங்க இருந்து கூட்டிட்டு வந்து போலீஸ் ஸ்டேஷன் ல கம்பலைன்ட் கொடுத்தா. போலீஸ் விசாரிச்சு சமாதானம் பேசி நகையும் சாமான்களும் தரேன்னு ஒத்துகிட்டான்." என்று நிறுத்தியவள்.
"ஹ்ம்ம்... அப்போ நல்லா விசாரிச்சதுல தான் தெரிஞ்சது அவன் டிகிரி படிச்சேன் நல்ல வேலையில இருக்கேன்னு சொன்னது எல்லாம் பொய். வெறும் ஒன்பதாம் க்லாஸ் பெயில். அதுவுமில்லாம ஏற்கனவே அவனுக்கு கல்யாணமாகி இருந்தது. இதெல்லாம் வச்சு பேசி ஒருவழியா பிரிச்சிட்டாங்க."
பெட்டி படுக்கையோ வீட்டுக்கு வந்தா,
"என்னம்மா இப்படி வந்துருக்கன்னு ஒரு வார்த்தை கேட்கலை. அதுக்கு பதிலா, 'நான் அவ்ளோ தூரம் சொல்லியும் கேட்காம வந்துருக்க... என்ன பிரச்னைனாலும் உங்களுக்குள்ள பேசி தீர்த்துக்க வேண்டியது தானே... உனக்கு இங்க இடம் இல்லை. வெளியே போன்னு துரத்தினாங்க."
"பெத்த பொண்ணு மேல ஒரு துளிகூடவா பாசமிருக்காதுன்னு சந்தேகம் வந்து பாட்டிகிட்ட தனியா மறுநாள் பேசினப்ப தான் தெரிஞ்சுது. அவங்களுக்கு ரொம்ப வருஷம் குழந்தையில்லன்னு என்னை ஆசிரமத்துலர்ந்து தத்து எடுத்துருக்காங்கன்னு. இவ்ளோ நாள் வாழ்ந்த வாழ்க்கை பொய்ன்னு தோணுச்சு. அன்னைக்கு வந்தேன் தனியா. அவன்கிட்ட இருந்து வாங்கின நகை பணம் சாமான் எல்லாத்தையும் பிரென்ட் மூலமா அவங்களுக்கு கொடுத்துட்டேன். பிரெண்ட் ஒரு வேலையில சேர்த்துவிட்டா கொஞ்சநாள் ஹாஸ்டல்ல தங்கினேன். அப்புறம் இப்போ இருக்க வீட்டுக்கு வாடகைக்கு வந்துட்டேன்.
வெறி அவங்க முன்னாடி நல்லா வாழனும்னு கஷ்டப்பட்டு ஒரே நாள்ல ரெண்டு வேலை பார்த்தேன். மூணு வருஷம் முடியும்போது அந்த வீட்டை விக்க போறதா சொன்னாங்க. அப்போ தான் ஒரு யோசனை தோணுச்சு. நானும் என் பிரெண்டும் சேர்ந்து பாதி லோன் போட்டு மீதி கையில இருந்த காசை போட்டு வீட்டை வாங்கிட்டோம். அதுக்குபிறகு தான் டேகேர் ஆரம்பிச்சேன். இப்போ ஏதோ லைஃப் போகுது சார்." என்று புன்னகைத்தாள்.
மலைப்பாக பார்த்தான் வேந்தன்.
எல்லாவற்றையும் செய்துவிட்டு எதுவுமே செய்யாதது போல் சாதாரணமாக பேசும் அவளின் மீது மரியாதை இன்னும் கூடியது.
"நான் டைவர்ஸ் வாங்கினவன்னு தெரிஞ்சபிறகு நிறைய பேரொட பார்வை மாறிடுச்சு. எல்லோருக்கும் என்னோட சொந்த வாழ்க்கையை படம் போட்டு காட்ட எனக்கு விருப்பமில்லை. அதான் வெளியுலகத்தை கையாள எனக்கே ஒரு மாஸ்க் தேவைப்படுது. நேரமாகிட்டு நான் வரேன் சார். உங்ககிட்ட பேசினதுக்கு பிறகு ரொம்பநாள் கழிச்சு ஏதோ ஒரு மனபாரம் குறைஞ்ச மாதிரி இருக்கு." என்று புன்னகைத்து விடைபெற்றாள்.
அடுத்துவந்த நாட்களில் ஒரு அழகிய நட்பு உருவாகி இருந்தது இருவருக்குள். மேலும் ஆறுமாதங்கள் ஓடி போனதும் தெரியவில்லை.
"உங்களுக்கு சம்மதமா?" அவள் முன் அமைதியாய் நின்றான் வேந்தன்.
இருவாரங்களுக்கு முன் ஒரு நாள், "ஏன்லாம் தெரியாது உங்கமேல ரொம்ப மரியாதை இருக்கு. உங்களை பிடிச்சுருக்கு. எனக்கும் என் பெண்ணுக்கும் வாழ்க்கை முழுக்க துணையா வருவிங்களா? பொறுமையா யோசிச்சு பதில் சொல்லுங்க. எந்த பதிலா இருந்தாலும் பரவால்ல." என்றான் வேந்தன்.
மிகவும் யோசித்து ஒருவாரம் கழித்து தன் சம்மதத்தை நந்திதா தெரிவிக்கவும் தன் பெற்றோரை இங்கு வரவைத்து, இதோ இன்று சிம்பிளாக கோவிலில் திருமணம்.
மங்கல்யத்தை கையில் வைத்துக்கொண்டு கேட்கிறான், "உங்களுக்கு சம்மதம் தானே?" என்று அழகாய் புன்னகைத்து தலையாட்ட ஒரு சத்தமில்லாத சாந்தமான திருமணம் நடைபெற்றது.
இனி இவர்களின் வாழ்வு சிறக்கட்டும். உண்மையை தழுவி உருவான கதை.
***********
#316
41,170
1,170
: 40,000
24
4.9 (24 )
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
nithyauvani333
vadhanaramamoorthy
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50