முதன் முதல் பறந்த பறவை

உண்மைக் கதைகள்
5 out of 5 (34 )

முதன் முதல் பறந்த பறவை

ஜி ஆர் கோபிநாத், இந்தியாவில் முதன்முதலில் குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்கியவர். கனவு காணுங்கள் வெற்றி நிச்சயம் என்று கூறிய அப்துல்கலாமின் பொன்மொழியை நிஜமாக்கும் வகையில் தனது வாழ்வை தனது கனவுகளின் மூலம் தனது உயர்ந்த லட்சியத்தை அடைந்தவர். விமான கம்பெனி வைக்கும் அளவிற்கு பணக்காரர் என்று தானே யோசிக்கிறீர்கள்? தற்பொழுது தான் அவர் பணக்காரர். ஆனால், பிறந்தது சாதாரண நடுத்தரவர்க்க குடும்பத்தில் தான். சாதாரண குடும்பத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரி உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரி லட்சிய கனவு இருந்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்பதற்கு ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கை ஒரு சாட்சி…


இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலம் அது. விமானப் போக்குவரத்து என்பது பணக்காரர்களும், செல்வந்தர்களும், முக்கிய பிரமுகர்களும் மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தது. வான்வழிப் பயணம் அவர்களுக்கே உரிய எழுதப்படாத பிறப்புரிமை என்றொரு சூழலும் நிலவியது. அப்போது இந்தியாவில் விமான வழிச்சேவை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை வெறும் 1% சதவிகிதம்தான். ஆனால் இங்கு பல விமான நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. அந்த 1% மக்களைத் தன் பக்கம் இழுப்பதற்காக அவர்களுக்குள் கடும் போட்டி நிலவிவந்தது. அந்த சமயத்தில் 'ஏர் டெக்கான்' என்றொரு நிறுவனமும் களத்தில் குதித்தது. ஆனால் அந்த நிறுவனம் தன் வாடிக்கையாளராக கருதியது இந்தியாவின் இன்ன பிற 99% மக்களை. ஆம்... விமான சேவையை பயன்படுத்தாத மக்களும் இனி விமானத்தில் பறக்க வேண்டும், விமானப் போக்குவரத்து என்பது சாதாரண, நடுத்தர மக்களுக்கும் கிடைக்கக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என அதில் வியக்கத்தகு புரட்சியை செய்தார், G.R கோபிநாத்.


ஜிஆர் கோபிநாத்தின் முன்னோர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆனால் கர்நாடகாவுக்கு குடியேறியவர்கள். ஜி ஆர் கோபிநாத் 13 நவம்பர் 1951-ல் கர்நாடகாவில் உள்ள மெல்கோட்டா என்னும் இடத்தில் பிறந்தார். தந்தை ஒரு பள்ளி ஆசிரியர் மற்றும் நாவலாசிரியர் ஆவார். கோபிநாத்தின் தந்தை பள்ளிக்கு அனுப்பினால் மாணவர்களுக்கு சுதந்திரம் கிடைக்காது என்று எண்ணி வீட்டிலேயே கோபிநாத்துக்கு பாடங்களைக் கற்பித்தார். கோபிநாத் ஒன்பது வயது வரை பள்ளிக்குச் செல்லவில்லை. பின் நேரடியாக ஐந்தாம் வகுப்பில் அங்கு உள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டார். பள்ளி காலத்திலேயே அவருக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருந்தது.


ஒருமுறை ஆசிரியர் வகுப்பிலுள்ள மாணவர்களிடம் சைனிக் பள்ளியில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் கைகளை உயர்த்தவும் என்றவுடன் ஜி ஆர் கோபிநாத் தன் கைகளை உயர்த்தினார். காரணம் சிறுவயதிலிருந்தே புதிய இடங்களைப் பார்க்க வேண்டும் புதிய இடங்களுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியிருந்தது. சைனிக் பள்ளி என்பது ராணுவத்தில் சேர விரும்பும் மாணவர்களுக்காக சிறுவயதிலிருந்து இராணுவப் பயிற்சியும் கல்வியும் சேர்த்து வழங்கும் கல்வி நிறுவனங்கள் ஆகும். இந்தப் பள்ளியில் சேர நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்ற செய்தியைக் கேட்டவுடன் நுழைவுத் தேர்வுக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டாராம் ஜி ஆர் கோபிநாத். கடுமையாக உழைத்து நுழைவுத் தேர்விலும் வெற்றி பெற்றார். பிறகு சைனிக் பள்ளியில் தனது படிப்பைத் தொடர்கிறார். தனது கிராமத்திலிருந்து 258 கிலோமீட்டர் தூரத்திலுள்ள சைனிக் பள்ளியில் தங்கி படித்து வந்தார் கோபிநாத்.


சைனிக் பள்ளியில் படித்துவந்த மாணவர்களுக்கு அடுத்த இலக்கு நேஷனல் டிபன்ஸ் அகாடமியில் படிப்பது. நேஷனல் டிபன்ஸ் அகாடமியில் சேர கடுமையான நுழைவுத்தேர்வு இருக்கும்.கல்வி ஆண்டிற்கு (சனவரி முதல் மே மற்றும் ஜூலை முதல் டிசம்பர் வரை) இரு பருவத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. மூன்றாண்டு பயிற்சியும், ஆறு பருவத்தேர்வுகளும் கொண்டது. அந்தப் பயிற்சியையும் முடித்துவிட்டு நேஷனல் டிபன்ஸ் அகாடமியில் பயின்றார் ஜி ஆர் கோபிநாத்.


பிறகு கடுமையான பயிற்சிக்கு பின்பு ராணுவத்தில் கேப்டனாக சேர்த்தார் ஜி ஆர் கோபிநாத். இவர் கேப்டனாக இராணுவத்தில் சேர்ந்த சில மாதங்களிலேயே வங்காளதேசம் தனிநாடு கேட்டு போரில் ஈடுபட்டது. அந்தப் போரில் கேப்டனாக இருந்து வழிநடத்துவதில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு.


பொதுவாக வெற்றியாளர்கள் சில சாதனைகளைப் புரிந்து விட்டு நின்றுவிடுவதில்லை. அடுத்து என்ன சாதனை? அடுத்த இலக்கு என்ன? என தனது அடுத்தகட்ட வெற்றிப் பயணத்தில் களமிறங்குவார்கள். ஜி ஆர் கோபிநாத்தும் அப்படித்தான், தனது ராணுவ உயர் அதிகாரிகளை சந்தித்து தான் வேலையை விடப் போவதாக கூறினார். உயர் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி. "இளம் வயதிலேயே கேப்டனாக பதவி வகிப்பதால் ஒரு காலத்தில் நிறைய பதவி உயர்வு வரும்" என்று பேசிப் பார்த்தார்கள். ஆனால் ஜி ஆர் கோபிநாத் அவரது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. தனது 27 வயதில் ராணுவத்தில் இருந்து விலகினார். ராணுவ உயர் அதிகாரிகள் அடுத்து என்ன? என்று கேட்டபோது அதற்கு அவர் "விவசாயம் செய்யப் போகிறேன்" என்றார்.


நிறைய பேர் அரசாங்க வேலையோ அல்லது தனியார் நிறுவனத்திலேயோ வேலை கிடைத்த பிறகு தனது உண்மையான லட்சியத்தை மறந்துவிடுகிறார்கள். உங்களது லட்சியம் மற்றும் கனவுகளை என்றும் விட்டுக் கொடுக்காதீர்கள் உங்களது லட்சிய பயணங்களை தொடருங்கள். வெற்றி உங்களுக்கே!


"ஏதாவது புதிதாய் செய்ய வேண்டும் என்ற ஆசை எல்லோரும் கவர்மெண்ட் வேலை, கம்பெனி வேலை என்று ஆசைப்படுவார்கள் நான் விவசாயத்தில் கொடிகட்டி பறக்க வேண்டும் என்று நினைத்தேன்" என்கிறார் கோபிநாத்.

ராணுவத்தில் இருந்து விலகிய பிறகு தனது சொந்த ஊரான கர்நாடகாவிலுள்ள ஹாசன் மாவட்டத்திற்குட்பட்ட கோரூர் கிராமத்திற்கு வருகிறார். அங்கே அவருக்கு அதிர்ச்சியான தகவல் அவருடைய பசுமையான நிலத்தையெல்லாம் அணை கட்டுவதற்காக அரசாங்கம் கையகப்படுத்தி இருந்தது. அந்த நிலத்திற்கு பதிலாக பல கிலோமீட்டர்கள் தள்ளி 40 ஏக்கர் கட்டாந்தரை ஒதுக்கி இருந்தது அரசாங்கம். அந்த கட்டாந்தரை நிலத்தில் விவசாயம் செய்ய முடியுமா? இதெல்லாம் உனக்கு சரிப்பட்டு வராது என்கிறார் அவருடைய தந்தை. வெற்றியாளர்கள் ஒருபொழுதும் முன் வைத்த காலைப் பின் வைக்க மாட்டார்கள். ஆம், ஜி ஆர் கோபிநாத் அந்த நிலத்தை பசுமையாக மாற்ற உழைத்துக் கொண்டிருந்தார். காவலுக்காக ஒரு நாய் உதவிக்கு ஒரு வேலையாள் ஒரு டெண்ட் என அந்த நிலத்திலேயே குடியேறிவிட்டார் கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தை முழுவதுமாக மாற்றி விட்டார். இந்த நேரத்தில் பார்கவி என்பவருடன் அவருக்கு திருமணம் ஆகியிருந்தது.


கூடிய சீக்கிரத்தில் விவசாயம் செய்ய தொடங்கிவிட்டார், ஜி ஆர் கோபிநாத். எல்லோரும் செய்வது போல் நிலத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளையோ ரசாயன உரங்களையோ இவர் பயன்படுத்தவில்லை. விவசாயத்தில் புதுமையைப் புகுத்தினார். இயற்கை பொருட்களை கொண்டு விவசாயம் செய்தார்.


இந்திய மக்கள் அனைவரும் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர் 2003 ஆம் ஆண்டு ஏர் டெக்கான் என்ற விமான நிறுவனத்தை தொடங்கினார். அனைத்து நடுத்தர குடும்பத்தினரும் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பது அவருடைய கனவு. நிறுவனத்தைத் தொடங்கிய பிறகு முதலில் ஹெலிகாப்டர்கள் வாடகைக்கு விடும் பணியை செய்து வந்தார். விமான சேவை தொடங்க பல வருடங்கள் அரசாங்கத்தின் அனுமதிக்காக காத்திருந்தார். ஒருமுறை அவர் ஹெலிகாப்டரில் பயணித்து கொண்டிருக்கும் பொழுது கீழே உள்ள பாறைகளின் மேல் காற்று பட்டு எதிரொலிக்க செய்யுமாம். அப்போது விமானியிடம் ஹெலிகாப்டரை குறைவான உயரத்தில் பறக்க செய்து பார்க்கும் பொழுது அனைவரது வீடுகளின் மேல் டிவி ஆன்டனா இருக்குமாம். அவற்றை பார்த்த பிறகு அவருக்கு ஒன்று புரிந்தது. இந்திய மக்களால் அனைத்தையும் வாங்க இயலும் விலை குறைவாக இருந்தால். “ எனவே விமான டிக்கெட்டுகளை குறைவான விலையில் விற்க முடிவு செய்தார். உண்மையில் இந்தியா என்பது பட்டினியால் வாழும் மக்கள் நிறைந்த நாடு அல்ல.. இது பட்டினியால் வாடும் நுகர்வோர்கள் நிறைந்த நாடு. நம் இந்திய மக்களால் விமான டிக்கெட்டைத் தவிர மற்ற அனைத்தையும் வாங்க முடிகிறது. இவர்களால் விமான டிக்கெட்டுகளும் வாங்க முடிய வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தேன். அவர்கள் வசதிக்கேற்ப ஒன்றை வடிவமைக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். இதைத்தொடங்க எவ்வளவு பணம் தேவைப்படும், விமானம் வாங்க எவ்வளவு பணம் வேண்டும் என எந்த ஆலோசகரிடமும் விவாதிக்கவில்லை. உடனே தொடங்கலாம் என்று முடிவெடுத்தேன். 15 வருட பழமையான விமானம் ஒன்றைத்தான் முதலில் பறக்கவிட்டோம். தங்கள் வாழ்வில் விமானத்தில் பறக்கவே முடியாது என்ற நிலையில் இருந்தவர்கள் எல்லாம் பறக்க வழி செய்தோம், அதுவரை விமானப் போக்குவரத்து சென்றடையாத பல இடங்களை வான்வழி இணைத்தோம். வெகுவிரைவிலேயே ஏர் டெக்கான் 'மக்கள் விமானம்' என்ற பெயரை எடுத்தது. பெரும் லாபநோக்கத்தோடு டிக்கெட் விலையை வைத்து 1% மக்களை மட்டும் பறக்க வைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இந்திய மக்களின் விமானப்பயன்பாட்டை பரவலாக்க வேண்டும். என்பதே என் நோக்கமாக இருந்தது” என்று கூறுகிறார் கோபிநாத்.


நம்மில் பெரும்பாலானவர்கள் நமது முதல் வேலையிலேயே காலம் முழுக்க இருந்துவிடுவதுண்டு. நிறுவனங்கள் மாறினாலும் வேலை ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் இவர் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று தனது பல்வேறு கனவுகளை துரத்தி பிடித்திருக்கிறார். 'இந்தியர்கள் பறக்க வேண்டும்... அதுதான் என்னுடைய கனவு...' என தன் கனவுகளுக்கு இறக்கை கட்டி விட்ட G.R கோபிநாத்தின் வாழ்க்கைப்பயணம் நமக்கு பல படிப்பினைகளைத் தரும்.

மு. ஜெயமோகன் ஸ்ரீராஜன்,
தன்னம்பிக்கை எழுத்தாளர் மற்றும் பேச்சாளர்.

যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...