JUNE 10th - JULY 10th
தாயை சபித்த நிமிடங்கள்
வருடம் 2002....
எட்டாம் வகுப்பிற்க்கு இன்று பீ.டி க்ளாஸ் இல்லாததால் பள்ளியில் இருந்து ஒருகிலோமீட்டரே உள்ள தனது வீட்டிற்கு நரம்பு பையை கையில் பிடித்தபடி பசியினால் உள்ளடங்கிய வயிற்றோடு நடக்கமுடியாமல் நடந்துகொண்டிருந்தாள்... இளவரசி.
முன்னே செல்பவள் இரண்டு ரூபாய்க்கு வாங்கிய சோள கதிரை கடித்தவாறு செல்ல அவளின் ஒருஒரு கடிக்கும்... இவளுக்கு நாக்கில் அடியில் எச்சில் ஊறியது... 'அந்த மாமரத்தை தொட்டுவிட்டால் வீடு சீக்கிரம் வந்துவிடும்... அடுத்து அந்த புங்கை மரம்...' நினைத்தபடி வீட்டின் தொலைவை மனதில் குறைத்துகொண்டே நடக்க எத்தனை மலிவாக வாங்கியதோ அவளின் காலின் பஞ்சி செருப்பு அவ்வப்போது வழுக்கியது.
'இந்த அம்மா ஒரு ரெண்டு ரூபாய் கொடுத்தால் தான் என்ன பசியுடன் நடக்க கூட முடியவில்லை என்மேல பாசமே இல்லாதவ' மனம் தானே மரியாதை இல்லாமல் பேசினால் யாருக்கு தெரிய போகிறது என்று... நடை தளர ஆரம்பித்து பொறுமையாக நடந்தாள்...
பக்கத்து ஊரிலிருந்து கரும்பு ஆலை டேங்கர் லாரி செல்ல, சுடசுட சர்க்கரை பாகு ஒழுகி சென்றது... அதை பார்த்ததும் கண்கள் மின்னியது.
தன் பின்னே திரும்பி பார்க்க தூரத்தில் சிலர் நடந்து வருவது தெரிந்தது... முன்னால் சென்றவர்களும் சோளகதிரின் தெம்பில் நடந்துவிட...
வாகன நெரிசல் போட்டி இல்லாத தார் சாலை... சர்க்கரைப்பாகு இரண்டு மூன்று சொட்டுகள் ஒரே இடத்தில விழுந்திருக்க, தனது பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து கீழே போடுவது போல் போட்டு கட்டை விரல் நெகக்கண்ணில் வழித்துக்கொண்டாள்... அம்மி அரைத்த பக்குவம் உதவியது.
யாரும் பார்க்கா வண்ணம் கட்டை விரலை சப்பிகொண்டாள்... யாரும் பார்த்துவிடக்கூடாது என்று கடவுளை வேண்டினாள்... அவ்வளவு கெளரவம் பார்ப்பவள்.
மீண்டும் ஒரு பத்தடியில் இதுபோல... அடுத்த லாரி வருகிறதா என்று திரும்பி திரும்பி பார்க்கையிலே ஊரு வந்து சேர்ந்துவிட்டது.
வீடு பூட்டி இருக்க வயிற்றில் 'பகீர்' என்ற சொரசொரப்பு... நக்கிய சர்க்கரைப்பாகு மேலும் பசியை கிளப்பியிருந்தது. எப்பொழுதும் வைக்கும் இடத்தில் சாவியை துழாவி எடுத்தவளுக்கு பெற்றவள் மேல் அத்தனை வன்மம் 'எங்கே போய் தொலஞ்சிதோ' தாயின் மேல் உள்ள கோபத்தில் அந்த பூட்டு இரண்டுமுறை அரைவாங்கியது.
கடுப்புடன் உள்ளே சென்று அடுப்படியை பார்க்க... கழுவி அடுக்கிய பாத்திரம் அவளை பார்த்து பல்லை இளித்தது...
இரண்டு சொம்பை எடுத்து தன்னால் முடிந்தமட்டும் வேகமாக தரையில் அடிக்க சாணியிட்டு மொழுகியிருந்த தரை கொஞ்சம், அடிவாங்கியது... "என்னம்மா சத்தம்" கேட்டுக்கொண்டே உள்ளே வந்த தந்தையின் கையிலிருந்த வொயர் கூடை காய் கறிகளை தின்று வயிற்றை பிதுங்கியிருக்க உபரியாய் கருவேப்பில்லை அவளை பார்த்து கண்ணை சிமிட்டியது.
"தண்ணி குடிக்க சொம்பு எடுத்தேன்பா விழுந்துடுச்சி..." இரண்டு சொம்பையும் எடுத்து அடுக்கியவள்... அடக்கிய பொறுமையுடன்... "அம்மா எங்கப்பா...!"
"அவ கிடக்கா ஓடுகாலி ஆத்தாகாரி வீட்டுக்கு போயிட்டா... நீ ஒலையை போடு அடுப்புல, புளிக்குழம்பு வச்சிடு... நான் எஞ்சினுக்கு டீசல் வாங்க போயிட்டுவறேன்..."
சென்ற தகப்பனை மூக்கு விடைக்க பார்த்துவிட்டு மேல் மூச்சி வாங்க வெறுப்போடு ஒலைப்பாணையை கையில் எடுத்துக்கொண்டு தண்ணீர் அடிக்க போனாள் அதற்குள் அந்த பானை கதவிலும், சுவற்றிலும் இரண்டு மொத்து வாங்கியது.
பசியில் தாயை வாயில் அரைத்தவாறு வேலையை செய்தாள்... "போன இடத்துலே அப்படியே செத்து போயிடுச்சின்னா ராசப்பா சித்தப்பா மாதிரி அப்பாவுக்கும் இன்னொரு கல்யாணம் நடக்கும்..." உலையை அடுப்பில் ஏற்றியவள் உடையைமாற்றி கைகால் அலம்பி வந்தாள்... வயிறு என்னை கொஞ்சமேனும் கவனியேன் என்று கண்கள் அரிசியிலும் தக்காளி பழத்தை பார்த்து ஏங்க அந்த பசியிலும் வாய் வக்கணைக்கு அது போதவில்லை.
உலைகொதிக்கும் முன் பக்கத்துவீட்டில் ஒரு நார்த்யிலையை பறித்து வந்து கருப்புபுளியில் நாரை எடுத்துவிட்டு, கல்லுப்புடன் மசித்து இலையில் வைத்து தட்டையாக மடித்து புளிப்பு, உப்பு, துவர்ப்பும் மூன்றும் சேர்த்து சப்பி உறியும்போது "ஷ்ஸ் அஹ்ஹ்" என்ற சத்தத்துடன் கடைவாயில் எச்சில் குமிழ் ஊறிக்கொண்டே இருந்தது அதன் சுவையில்... சமையல் முடியும் பொழுது வாயும் கல்லுப்பில் உராய்ந்து எரிய ஆரம்பித்திருந்தது.
"சோறு ஆயிடுச்சாமா...!"
"வாங்கப்பா சாப்பிடவேண்டியதான்... என்றவள் பக்குவமாய் பரிமாறினாள் ஏனோ தானோவென போட்டால் அதற்கும் தாயிடம் அடிவாங்கிய நிமிடங்கள் வந்து தொலையும்.
"அம்மா எப்பப்பா வரும்...!" பசி அடங்கியதும் கோபம் குறைந்து தன் கருவறையை தேடியது மனம்.
"நீ எடுத்துவைச்சி படிக்கிற வேலையை பாரு, வரும் போது வருவா..." ஒரு வெள்ளை நிற சிகிரெட்டை பற்றவைத்து கொண்டு வெளியில் போனார் ஞானசம்மந்தம்.
மீண்டும் பள்ளிக்கூடம், பசி, சக்கரைப்பாகு, பூட்டியவீடு, சமையல், படிப்பு மூன்றுநாள்களுக்கு பிறகு வீடு திறந்திருந்தது... ஓடிவந்து எட்டிப்பார்க்க உள்ளே அப்பா சிகிரெட் பிடித்துக்கொண்டிருந்தார்.
மகளை பார்த்ததும் "இளா அந்தா பண்ணு வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு எடுத்துக்க..."
பசி இருந்தபோதிலும் அவ்வளவு ஏக்கம் இல்லை பண்ணுக்கு அம்மாவைவிட, "அம்மா எப்பப்பா வரும்...!"
"சனியனே அதான் திங்க வாங்கிட்டுவந்து கொடுக்குறேன் அதை திண்ணு வருவா..."
உதடு பிதுங்க அந்த நெகிழியை பிரித்து வெள்ளை கிரீம் அப்பியிருந்ததை தந்தையின் அருகிலேயே அமர்ந்து உண்ண, சிகிரெட் புகை சுவாசித்ததும், நாற்றமும் மொத்தமும் குமட்டிக்கொண்டு வெளியில் வந்தது.
"நான் வெளியில போய் பிடிக்கிறேன் சுத்தம் பண்ணிட்டு சொத்தை ஆக்கு".
இரண்டு நாள் இடைவெளியில் மீண்டும் கதவு திறந்திருக்க உள்ளே நுழையும் போதே அம்மா வைக்கும் புளிகுழம்பின் வாசம், அம்மாவை பார்த்ததும் ஓடி சென்று அருகில் நின்றாள்... கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் அளவிற்க்கு எல்லாம் அம்மா இணக்கமாக இருந்ததில்லை.
மாமாவும் வந்திருக்க கூடப்போய் ஒட்டிக்கொண்டாள்... மாமன் முத்தமெல்லாம் கொடுத்தான் நன்றாகத்தான் இருந்தது... அவன் மீசையின் குறுகுறுப்பு கன்னத்தை துடைத்துக்கொண்டாள்.
கீழே அமர்ந்திருந்த தந்தையிடம் "மாமா அக்காவை ஏன் அடிக்குற, அடுத்த தடவ பணம் எதாவது வேணுமுனா என்கிட்ட கேளு ரெடி பண்ணித்தறேன், அக்கா நீயும் பொம்பள பிள்ளையை விட்டுட்டு அடிக்கடி அங்க வந்து தங்காத"
"அவ இருக்குற தைரியத்துலதான் என்னகிட்ட சண்டையை வளத்து அடிக்கடி மேல கையவைக்குறது... அவளுக்கு வீட்டுவேலையெல்லாம் கத்துக்கொடுத்துட்டேன்ல, நான் இல்லனாலும் ஒரு சோறை குழம்பை வச்சிடுவா... வயித்து பொழப்புக்கு வழி இல்லனாதான பொண்டாட்டிய தேடுவாரு..." மேலே என்ன சொல்ல நினைத்தாரோ புருஷனின் முகத்தை பார்த்து வாயை மூடிக்கொண்டார்.
"உன் அப்பன் உன்ன இப்படி வச்சிருக்கும் போதே உனக்கு இவ்ளோ வாய்கொழுப்பு எல்லாருக்கும் சாப்பாடு எடுத்துவை தொட்டுக்க எதாவது பொட்டலம் வாங்கிட்டு வரேன்"
"அதெல்லாம் வேண்டாம் கெழங்கு எண்ணையில் பொறிச்சது இருக்கு... சாப்பிடலாம்". என்று எடுத்து வைக்க, இன்னைக்கு பசி ஏன் எடுக்கவில்லை என்று இளாவிற்கு தெரியவில்லை.
"நாளைக்கு ஞாயித்து கிழமை தானடா இருந்து போவுறது..."
"இல்லக்கா வேலையிருக்கு கடைக்கு சரக்கு போடணும், புயலை நறுக்கணும்..." கடலூரில் புகையிலை தோட்டம் இருந்தது.
"ச்சை... அப்பா தான் அம்மாவை அடிச்சிருக்கு இது தெரியாம அம்மாவை சாவ சொல்லி வேண்டிக்கிட்டோமே... மன்னிச்சுடு பிள்ளையாரப்பா" அம்மா பெரிய கூடை முழுவதும் பாட்டி வீட்டிலிருந்து எடுத்துவந்த விதவிதமான தீனி அவளின் ஒருமாத மாலை பசியை தீர்த்தது... 'அம்மாவுக்கு நம்ப மேல பாசம் தான்'.
*******
ஞாயிற்று கிழமை அந்த மொட்டை வெயிலில் எண்ணெய்யை தலையில் வைத்து தேய்க்க உடல் கூசி சிலிர்த்தது... "அம்மா வேண்டாமா ஒருமாதிரி இருக்கு..." என்று அழுத்தவளை தலையில் ஒரு கொட்டு வைத்து.
"எண்ணெய் குளிச்சா ஏன் உனக்கு வலிக்குது, நல்லா ஷாம்பை போட்டு குளிச்சி மேனா மினுக்கி மாதிரி விரிச்சிவிட்டு திரியவா..."
இளவரசியின் மனக்கண்ணில் 'சேலையில வீடு கட்டவா சேர்ந்து ரசிக்க' அந்த பாடலில் சிம்ரனின் முடி எப்படி பறக்குது என்று வியந்த நிமிடம் வர, இந்த எண்ணெய் குளியலின் ஒரு முடி கூட பறக்க போவதில்லை என்று ஊர்ஜிதமானது.
எழுந்து நிற்க சொல்லி தொப்புலிலும், காதுகளிலும் எண்ணெய் வைத்து அரக்கி தேய்க்க... பக்கத்தில் விறகு நறுக்க இருந்த அரிவாளை எடுத்து அம்மாவின் மண்டையை பிளந்தால் தேவலை என்றிருந்தது.
ஏற்கனவே கொட்டியதே வலித்தது... ஒருவழியாய் எண்ணையில் பாதி பாத்திரத்தை காலி செய்த பிறகே... "போய் தண்ணி அடிச்சிவை... சீயக்காய் வாங்கிட்டு வரேன்"
அந்த வெயிலில் பாதி ஆடையுடன் நடக்கையில் அத்தனை அருவருப்பு, 'ஆஹ்ஹ்!' வென்று கத்த வேண்டும் போல் இருந்தது... "குச்சிக்காரி எண்ணையை தேச்சு விட்டுட்டா..." அழுகையோடு மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து அப்பொழுதே வெளியில் கேட்கும் அளவிற்கு சொல்லிவிட்டாள்.
பம்படிக்கு கையை கழுவிவிட்டு செல்லவந்த அவளின் தாயின் காதில் பரிசுத்தமாய் விழ காளியாய் நின்ற தாயை பார்த்ததும், தன் தவறை உணர்ந்து... எண்ணையின் அருவருப்பு மறைந்து பீதி அடைந்துபோனாள்.
குச்சிக்காரி என்பது அவள் கேட்டு வளர்ந்த பெண்களை திட்டும் மோசமான வார்த்தை வழக்கம் அவர்களது ஊரில்.
விளையாட செய்துவைத்திருந்த கிட்டிப்பிலை எடுத்துவந்து விளாசிவிட்டார்... மகளை.... அன்றும் தாயை சபித்தாள் 'சீக்கிரம் செத்துப்போயிடு சனியனே! இன்னும் திட்டித்தீர்த்தாள் வலி குறையும்வரை..'.
ஆனால் அதன் பிறகு என்ன கோவத்திலும் 'மயிறு' என்னும் வார்த்தைகூட மனதோடு மரித்துப்போனது.
அதுமட்டுமா... சாப்பிடும்போது விருந்தினர் வந்துவிட "செய்ததே கொஞ்சம் அவங்களுக்கு ஏன் கொடுக்கணும்" என்று அடுக்கையில் அம்மாவிடம் ரகசியமாக கேட்டாலும்... அவர்கள் என்றதும் கன்னத்தில் வாங்கிய அறையோடு...
"தொண்டைக்கு கீழ போனா அதுக்கு பேரு வேற... திங்குறதுல கொஞ்சம் குடுத்துட்டு சாப்பிட்டா குறைஞ்சிடமாட்டா என்ன மயிறு படிப்பு சொல்லித்தரானுகளோ..."
'இதெல்லாம் ஒரு அம்மா மூஞ்ச பாரு பெத்த பொண்ணுக்கு அதிகமா கொடுக்காம எவனோ ஒருத்தனுக்கு குடுக்குது... பைத்தியம்' ஆனால் அவளது வாத்தியாருக்கு சேர்த்து விழுந்த திட்டில், யாரும் கேட்காவிடிலும் கொஞ்சம் கொடுத்து சாப்பிட பழகிக்கொண்டாள்.
வீட்டில் கீழே கிடத்த காசை எடுத்து பத்திரப்படுத்தியதற்கு அம்மாவிடம் வாங்கிய திருட்டு பட்டம்... 'அப்பா காசை ஆட்டைய போடல...இவ பெரிய யோக்கிய சிகாமணி...' என்று பெயரிட... அதன் பிறகு எங்கு பைசா கிடைத்தாலும் அருகில் யாரென்னு இருக்கிறார்களா என்று முதலில் தேடி கொடுப்பது வழக்கமானது.
அப்பா, சித்தப்பா சண்டையில் மரியாதை இல்லாமல் பேசி அம்மாவிடம் வாங்கிய அடியோடு... "நாங்க அடிச்சிப்போம் சேர்ந்துபோம் நீ என்ன பெரியவங்களை மரியாதையை இல்லாமல் பேசுறது...", 'இச்சை இவ என்ன லூசா' அதன் பிறகு ஒருவரை திட்டும் பொழுதும் வயதிற்குகந்த மரியாதையோடு திட்டுவதுபழக்கமானது.
'எல்லாருக்கும் நல்ல அம்மா கிடைச்சிருக்காங்க நமக்கு மட்டும் காட்டேரி மாதிரி ஒருத்தி' என்று பெற்ற தாயிக்கு புது புது விகார பெயர் வைத்து சபித்தாள் இளவரசி.
நாட்கள் செல்ல அவரது கண்டிப்பு துணி உடுத்துவதிலும் உள் நுழைந்து கண்ணியம் செலுத்த சொல்ல... 'இந்த பிடாரியை விட்டு ஓடிவிடலாமா' என்று தோன்றிய எண்ணத்தை,
"என் ஆசா, பாசத்ததை எல்லாம் அடக்கி உன்ன காலேஜ் படிக்க வச்சிருக்கேன்... உன் வயசுல புள்ளைங்க எல்லாம் சரியா படிக்காம வீட்ல கிடக்குதுங்க பார்த்தல்ல... அப்பன் பேரை காப்பாத்து..." என்ற தாய் என்னும் பிசாசின் வார்த்தையில் படிப்பில் கவனம் செலுத்தினாள்.
அலட்சிய பார்வையையும், வயதில் ஆண்களை மேயும் கண்களையும் கவனித்த தாய்... "நாங்க தான் படிக்காம அடுப்படி, வயல்வேலினு கிடக்குறோம்... நல்லா படிச்சு நாலு பேருக்கு உதவி செய், உன்ன பார்த்து நாலு பசங்க முன்னேறணும்... படிக்க அனுப்பினாங்க ஊரை மேயுதுனு... காதுல விழுந்தது விஷத்தை வச்சு கொன்னுடுவேன்...", 'இவள் பேய் என்ன விஷம் கொடுப்பது நானே குடிச்சி செத்துடலாம் என்று தோன்ற...'
வெளியில் தாயின் குரலுக்கு காது கொடுத்தாள்...
"இல்ல செண்பகம் இப்ப பொண்ணு குடுக்குற மாதிரி இல்ல, அவங்க சாரை போய் பாத்துட்டு வந்தேன், நல்லா படிக்குது பெருசா வருவா குணமும் தங்கணும்னு சொன்னாரு, அது சொந்த கால்ல நிக்கட்டும், நம்பள மாதிரி கூலிக்கு மாரடைக்க வேண்டாம் பாரு, இன்னும் ரெண்டு வருஷம் படிக்கட்டும் அப்பறம் பார்ப்போம்" அதை கேட்டதிலிருந்து விஷம் குடிப்பதை ஒத்தி போட்டாள்.
அன்று இரவு அனைவரும் ஒன்றாக படுத்திருக்க... மகள் தூங்கியதாக நினைத்து...
"ஏண்டி அந்த செண்பகம் நம்ம பொண்ண கேட்டாளா..?"
"ம் ம்ம்ம்..."
"நம்ப பொண்ணுக்கு அவளோ வயசு ஆகிடுச்சாடி...?"
"இல்லையா பின்ன, அவ வயசுல நான் உனக்கு புள்ளைய பெத்துட்டேன்..."
"யாருக்கு கேட்டா..."
"அந்த வரதன் குடிகார நாய்க்கு கேட்குரா... என் பொண்ணு இருக்குற அழகுக்கும் அறிவுக்கும் இந்த கடலூர் ஜில்லால மாப்பிளை கிடையாது... நான் கொண்டுவறேன் பாருங்க ராசா மாதிரி, ஊரு மேட்ச கட்டிக்குடுக்கணும்".
தன் தாய் தானா இப்படி பேசுவது என்று கண்ணை திறக்காமல் அசையாமல் படுத்திருந்தாள் இளவரசி.
ராசா மாதிரி மாப்பிள்ளை என்றதும் முகத்தில் ஒரு வெட்கமும், மனக்கண்ணில் அஜித்தை போல் தலையை கொதிய வந்தியத்தேவனும் அவனது வெள்ளை புரவியும் தோன்ற உறங்கிப்போனாள், சாவெனும் சபதம் சத்தமில்லாமல் சென்றுவிட்டது அவளை விட்டு.. தாயை அப்பொழுது வியக்க ஆரம்பித்தவள் அடுத்தடுத்து வியந்துக்கொண்டே இருந்தாள்.
வேலைக்குச்சென்று சொந்த உழைப்பில் நின்று, பாகுபாடின்றி பழகி, மரியாதையுடன் நடந்து, அறம் தவறாமல் நிமிர்வுடன், நேர்மையாக இருந்து அனைவர் மனதையும் வென்று, தனக்காக தனது அலுவலகத்தில் பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட நற்பண்பு மற்றும் சிறந்த ஆசிரியருக்கான கிரௌன்னையும் ஷீல்டையும் கையில் வைத்திருக்கும் பொழுதும் மனதில் தாயை திட்டினாள்... 'சூனியக்காரி...'.
அந்த ஷீல்டு அவளை பார்த்து நக்கலடித்து போல் இருந்தது... 'இது உனக்கு உரிமையுள்ளதா...!'
'நீ கொஞ்சம் பேசாம இரு! அந்த சூனியகாரி செய்ததை எல்லாம் பொறுத்தேனே சோ ஐயம் டீசெர்வ் இட்...'
மைக் அவளிடம் நீட்ட பட..., தன் கையிலிருந்ததை பார்த்தவள் "அம்மாவுக்கு டெடிகேட் பண்றேன்...!".
என் பொண்ணு வளர்ப்புக்கு இவனுங்க என்ன பத்திரிக்கை அடிக்குறானுக... பெருமிதம் கண்ணில் இருந்தாலும் உதடு அலட்சியம் பேசிவிட்டு நகர்ந்தது.
ஏதோ அத்தோடு தாயின் கனவு நிறைவேறியது போல் அடுத்து மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். ஜாதகத்ததை தந்தை கேட்க தாயோ "அவ மனசுல என்ன இருக்குனு கேட்டுக்கங்க..."
"ச்சீ... பட்ச புள்ளடி அதுகிட்ட என்ன கேட்குறது..."
"பட்ச புள்ளதான்...!" வெறுப்புடன் மகளை பார்த்த தாய் "என்னடி ஜாதகம் பார்க்க கொடுத்தனுப்பவா...."
"வேண்டாம்..." என்று மறுத்தவள், விழி பிதுங்கி நின்றாள்... மகளின் கள்ளம் அறியாமல் இருக்க அவள் ஒன்று சாதாரண நல்ல தாயில்லையே... பிடாரி தானே.
நீங்க கொஞ்சம் வெளியில இருங்க என்றவள் மகளின் கன்னத்தில் அறைய... "மொத்தமும் கக்கினாள்..."
"அட்ரஸ்... என்ன, விவரம் சொல்லு..."
கொடுத்தாள்...
ஒருமாதமும் பாராமுகமாக செல்ல தாய் எப்பொழுதும் யோசைனையுடனேயே இருந்தாள் அவளை யாரும் நிறுத்தவில்லை வேளைக்கு சென்றுவந்தாள்.
ஒருநாள் மாலை நேரம்... இளவரசி எதோ எழுதிக்கொண்டிருந்தாள்... தந்தையின் குரல் கேட்டது.
"அடியே! அந்த பையனை பத்தி நல்லாத்தான் சொல்றாங்க... நானும் ஒருமாசமா கவனிச்சிட்டுதான் வந்தேன், நம்ப சாதி சனம் இல்ல வேற ஆளுங்க..."
"அதனால என்ன! ஒரே சாதியில் கட்டிக்கிட்டதுங்க என்ன சாதிச்சி கிலிக்குதுங்க..."
"ஜாதகம் பொருத்தணுமே...!"
"பத்து பொருத்தம் இருந்தும் என்னத்த பொருத்தமா வாழ்ந்தாச்சி... மனசு ஒத்துபோச்சுல ஜாதகம் பாக்க வேண்டாம்..."
"ஊரு கொஞ்சம் தூரமா இருக்கேடி..."
"நல்லது!, தொட்டத்துக்கும் உடனே பைய தூக்கமாட்டா...!"
"சொந்த பந்தத்துட்ட ஒரு வார்த்தை கேட்கணும்..."
"எதுக்கு அதெல்லாம் வேண்டாம், கட்டினவனா தவிர மத்தவனா சோறுபோடப்போறான், மரியாதைக்கு நிச்சயத்துக்கு சொல்லிக்கலாம் பேசிமுடிங்க..."
"என்னடி சொல்ற உனக்கு சம்மதமா...!"
"வீட்ல பார்த்து கட்டிகிட்டு வந்து என்னத உங்ககிட்ட பெருசா தொங்க தொங்க மாட்டிகிட்டு வாழ்ந்துட்டேன்... அவ மனசுக்கு பிடிச்சமாதிரி கட்டிக்குடுங்க இந்தனை வருசமா அவ கஷ்டப்பட்டது போதும்... நம்மகிட்ட என்னத்த அனுபவிச்சா... வெந்த சொத்தை தவிர... அவளை நல்லா வளர்த்துருக்கேன் இவ நாலு குடும்பத்துக்கு சோறு போடுவா... அவளுக்கு அந்த தகுதி இருக்கு தைரியமா கட்டிக்குடுங்க".
"என்னடி எதை கேட்டாலும் என்னையே சாடுற... நீ ரொம்ப யோசிக்கியம்...!"
"ஹ்ம் ம் "என்று கழுத்தை வெட்டினார்.
அம்மாவை பின்னாலிருந்து அணைத்துக்கொண்டாள் இப்பொழுது அனுமதி கேட்டு நிக்க அவளுக்கு பயமில்லை.
*********இன்று 2022****
"இளா!, இளா...!"
"ஹான்..." நினைவில் இருந்து மீண்டவள் கணவன் கையிலிருந்த தன் ஆறுவயது பெண்ணை பார்த்து முறைத்தாள்.
"இப்ப எதுக்கு அவளை தூக்கி வச்சிருக்கீங்க இறக்கி விடுங்க..."
"குழந்தைகிட்ட என்ன கோவம்..." என்றவன் இறக்கிவிட்டான்...
"இப்படித்தாப்பா எல்லாத்துக்கு திட்டுது பேசாம வேற அம்மாவை மேரேஜ் பண்ணிருக்கலாம் நீ போப்பா இந்த அம்மாவை பிடிக்கல..."
"போ! உன் டாய்ஸ் எல்லாம் எடுத்துவை, உன் டிரஸ் எல்லாம் கண்டபடி கடக்கு பாரு மடிச்சு வை..."
"எல்லா வேலையும் நானே செய்றேன் நீ என்னதான் பண்ணுவியோ..." மகள் தாயை திட்டியபடி அவளது அறைக்கு செல்ல.
"அவளை ஏண்டி திட்டிகிட்டே இருக்க, பாரு அடிக்கிற அடியில அம்மாவீட்டுக்கு துரத்தி விடுறேன்..." வடிவேலுப்போல் சொல்ல...
"முதல்ல அதை செய்ங்க கொஞ்ச நாள் உங்க தொல்லை இல்லாம நிம்மதியா இருந்துட்டு வருவேன்... ஒரு பத்துநாள் சேர்ந்தமாதிரி விடுறது கிடையாது..." அலுத்துக்கொண்டவளை இடையோடு வளைத்து இறுக்கியவன்.
"என்னடி ரொம்ப சலிச்சிக்குற, எப்ப பாரு உன் அம்மாவை திட்டுவ இப்பவெல்லாம் என் பொண்ண திட்டுற... என் பொண்ணு சொல்றமாதிரி வேற அம்மா ரெடி பண்ணவேண்டியதுதான்..."
அவனின் கன்னத்தில் இடித்தவள்... "நிக்குறாங்க வரிசையில..."
"வலிக்குதுடி, சொல்லு கடைசியா உங்க அம்மாவை எப்ப திட்டின...?"
"உங்கள கட்டிக்கிட்ட அன்னைக்கு..."
"தாலி கட்டின அன்னைக்குக்கூட திட்டு வாங்கினியாடி... என்ன சொன்னாங்க என் மாமியார்..."
"அவ ஒரு சூனியகாரி, நான் காதலுக்கு சம்மதம் சொன்னேன்னு ஆனா ஊனா பொட்டிய தூக்கிட்டு வரவேலை வச்சிக்காத, வந்தா உன் புருஷன்கூடவா, இல்லனா வராதனு சொல்லிடுச்சி வந்துச்சுப்பாருங்க கோவம்..." ,'போடி' னு வழக்கம் போல மனசுக்குள்ள சொல்லிக்கிட்டேன்... ஆனா இங்க வந்ததுக்கு அப்பறம்தான் அவங்க என்ன அடிச்சு வளர்க்கல, கொஞ்ச கொஞ்சமா செதுக்கிருக்காங்கனு தெரிஞ்சிது" கண்கள் கலங்கியது அவளுக்கு.
"நான்கூட அன்னைக்கு உங்க அம்மாவை திட்டிட்டேன்..."
"நீங்க என்ன திட்டினீங்க அவங்கள...!" கோபமாக கேட்டாள்.
"அதுவந்து மண்டபத்துல தனியா இருந்தப்ப வந்தாங்க..." அவள் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தாள்.
"தம்பி உன்ன நம்பித்தான் கட்டிக்கொடுத்தேன், என் பொண்ண நாலு அடிகூட அடிச்சீங்கனா பொறுத்துப்பா ஆனா அதுக்கு அவ தப்பு பண்ணிருக்கணும், அன்பா என்ன சொன்னாலும் கேட்டுப்பா, அதிகாரம் பண்ணா பிடிக்காது... பார்த்துக்கங்கனு சொல்றாங்க இதுக்குஎன்னடி அர்த்தம் மறைமுகமா மிரட்டல் விடுறாங்க...."
இளா சிரித்து "அதுக்கு நீங்க என்ன சொன்னிங்க..."
"பெரிய அழகு ரதிய பெத்து வச்சிருக்கீங்க பத்துநாள்ல, உங்க பொண்ணு பண்றது சரியில்லனு சொல்லி அவங்க முன்ன உன்ன நிறுத்தணும் பார்த்தேன்... பத்துவருஷம் ஆச்சி ஒரு காரணம் கிடைக்க மாட்டேங்குது..." கோபமாக சொல்லவேண்டிய வார்த்தை ஏன் மோனமாக வந்தது என்றுதான் அவனுக்கு தெரியவில்லை... நான்கு கண்களும் அங்கு வேறுகதை பேசிசிரித்தது.
"அதிகாரம் பண்ணா பிடிக்காதாமே... போய் அந்த கதவை சாத்திட்டு வாடி" அதிகாரமாக சொன்னான்...
சாதிட்டுவந்தவள் "என்ன!" என்றாள்.
கன்னத்தை காண்பித்தவன் "குடு" என்றிட... "எங்க அம்மா சரியாதான் சொல்லுவாங்க...." என்றவள் முகத்தை திருப்பி உதட்டை நோக்கி நிமிர்ந்தாள்... அவன் கேட்டதற்கு மாறாக.
"நம்ப பாப்பாவும் ஒருநாள் புரிஞ்சிப்பா இந்த சூனியகாரியை..."
அவளின் நாடியை பிடித்து ஆட்டியவன் "ம்ம் அக்ரீ..." என்று "அத்தைய அப்படி சொல்லாத...!"
"பில்லி சூனியம் எடுக்குறவ சூனியகாரிதான..."
அவன் கண்கள் சுருக்கி பார்த்தான்...
"என் மனசுல உள்ள கேட்ட சூனியத்தை எல்லாம் எடுத்தவ சூனியகாரிதான".
அவள் முகம் நோக்கி குனிந்தான்... "அப்பா!, அப்பா!" கதவை தட்டினாள் அவன் பெற்ற சூனியம்.
"வரேண்டா..." என்றவன் கதவை திறந்து "அம்மா உன்ன திட்டினால அதான் அடிச்சிட்டேன்..."
"பொய்சொல்லதப்பா நீயே அம்மாகிட்ட தினமும் திட்டுவாங்குற... நகரு" என்று மெத்தையில் விழுந்தாள்... மித்ரா...
மித்ராவின் ஒருபக்கம் படுத்தவள் அவள் உறங்கியதும்... தட்டிக்கொடுத்துக்கொண்டே "ஏங்க இவளும் என்ன இப்ப மனசுல கண்டபடி பேசுவாதானே... கேட்ட அம்மாவா...!"
மறுபுறம் படுத்திருந்தவன் மனைவியின் கையை கோர்த்து... "இந்த குழந்தைகிட்ட நல்ல அம்மான்னு பேருவாங்கி என்ன பண்ணப்போற... குடும்பத்துல பொறுப்பான மருமக, அலுவலகத்துல திறமையான பொண்ணு அக்கம்பக்கத்துல மரியாதை தெரிஞ்ச பொண்ணு, புருஷனுக்கு இப்பவும் ஆசைக்காதலினு நாளை என் மகளும் பேர்வாங்கட்டுமே!".
பகலவன் உறங்கி நாழிகை பல சென்றாலும், மகளவள் உறங்க காத்திருந்தவன் மனைவியை பக்கத்து அறைக்கு கடத்தியிருந்தான்.
"நாளைக்கு அம்மா வரேன்னு சொல்லிருக்காங்க..."
"ஹ்ம்ம் என்னவாம்..."
"மித்ரா போஃன்ல எண்ணப்பத்தி பாட்டிகிட்ட ஒரே கம்பளைண்ட்... அவங்களுக்கும் இவளை பார்க்கணும் போல இருக்குனு சொன்னாங்க... வீடியோ கால்ல பார்த்துட்டே வீடு என்ன இப்படி இருக்குனு ஒரே திட்டு, உங்க மக அதுக்குமேல அம்மா ஒருவேலை செய்யறது இல்லனு போட்டுகுடுக்குறா... எதாவது திட்டினா பாட்டிகிட்ட சொல்லுவேன்னு என்னையே மிரட்டுறா...
எங்கள பெத்ததும் மிரட்டுதுங்க, நாங்க பெத்ததும் மிரட்டுதுங்க, 90's பொறந்த பொண்ணுகளுக்கு இந்த சாபத்துல இருந்து எப்பதான் விமோச்சனம்."
"அதான் நான் இருக்கேனேடி உனக்கு விமோச்சனம் கொடுக்க..." என்றவன் மத்தகாசமாக சிரித்து.... விளக்கை மட்டும் அணைக்கவில்லை.
******
#433
54,817
650
: 54,167
13
5 (13 )
sathishhkrishna
தங்கள் கதை மிகவும் அருமை. 5 star கொடுத்துள்ளேன். படிக்கும் அனைவரும் ரேட்டிங் தருவதில்லை. அதுதான் வருத்தம். எனது கதை "அடுத்த நொடி ஆச்சரியம்" ... தயவு செய்து படித்து ரேட்டிங் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. ஒரு எழுத்தாளராக... பெருந்தன்மையுடன்... ரேட்டிங்.. அளித்து.. ஆதரவு தாருங்கள்..
yuvaprithiviraj
jothi0800
நெகிழ வைத்த கதை சிஸ்.... எப்பவும் போல சின்ன சின்ன விஷயம் நீங்க மென்ஷன் பண்ணி சொல்ட்றதுகு நான் அடிமை
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50