JUNE 10th - JULY 10th
மறுபடியும் அந்த ஆயா உலக பிரபலம் ஆகி விட்டிருந்தார். அவருக்கு ஒரு தனியார் நிறுவனம் மூணு செண்ட் நிலத்தை வாங்கி ஐந்து லட்சம் ரூபாயில் ஒரு வீடு கட்டிக் கொடுத்திருந்தது. அரசியல்வாதி ஒருவர் அவருக்கு அந்த கட்டிடத்தை திறப்பு விழா நடத்த ஸ்பான்சர் செய்திருந்தார். யூட்யூப், சேட்டிலைட் சேனல்கள், பத்திரிகைகளுக்கு மறுபடியும் தீனியாகி இருந்தாள் பாட்டி.
இந்தக் காலத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி யாராவது தரமுடியுமா? அதுவும் 90 வயதான மூதாட்டி அதை ஏழை எளியவர்களுக்காக சேவையாகவே 25 ஆண்டுகளாக செய்து வருகிறார் என்றால் சாதாரண விஷயமா?
உசிலம்பட்டியின் கடைகோடி கிராமம். அதுவும் ஏழை எளிய விளிம்பு நிலை மக்கள் அதிகம் வசிக்கும் காலனிப் பகுதியில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு மட்டுமல்ல, உளுந்து வடை இரண்டு ரூபாய்க்கும், தோசை இரண்டு ரூபாய்க்கும், மதியம் சாப்பாடு ஐந்து ரூபாய்க்கும் வாரி வழங்கிக் கொண்டிருந்தார் பாட்டி.
அதற்காகத்தான் அவரை ஊரே கொண்டாடிக் கொண்டிருந்தது. இப்பவும் நியூஜெர்சி மில்லர்ஸ்பர்க் நகரிலிருந்து ஜேம்ஸ் ஆல்பர்ட் ஸ்டீவன்ஸன் வாட்ஸ் அப் காலருக்கு வந்திருந்தார்.
‘‘திரும்பவும் உங்க ஜனங்க பாட்டியைக் கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்களே. இந்த முறையாவது அவங்களுக்கு நம்ம அந்த ரிவார்டு கொடுத்துடலாம்ன்னு பார்க்கிறோம்!’’ என்று பிசிறில்லாத ஆங்கிலத்தில் பேசினார்.
‘‘கொஞ்சம் பொறுங்க ஸ்டீவன்ஸன். திரும்பவும் போய்ப் பார்க்கிறேன். பாட்டி மாறியிருந்தால் நானே உங்களுக்கு அவரைப் பரிந்துரைக்கிறேன்!’’
‘‘உலகமே இதைக் கொண்டாடும்போது நீங்க மட்டும் இதை இப்படி வச்சுப் பார்க்கிறது ஆச்சர்யமாயிருக்கு. எதுவாயிருந்தாலும் வெளிப்படையா சொல்லுங்க!’’
‘‘உமக்கு இப்போ என்ன அவசரம் ஸ்டீவன்சன். எனக்கென்னவோ அந்தப் பாட்டி திருந்தியிருப்பார் என்று தோன்றவில்லை. வேணும்ன்னா உங்களுக்காகப் போய்ப் பார்க்கிறேன். ஆனால் நான் இந்த விஷயத்தை மட்டும் பாட்டியிடம் சொல்ல மாட்டேன்’’ என்றான் சுந்தரம்.
‘‘கொஞ்சம் கவனமா பாருங்க சுந்தரம். நம்ம ஜூரிகளில் ஆறுபேர் ஓ.கே பண்ணீட்டாங்க. இந்தியாவில் உள்ளூரில் இருக்கிற லோக்கல் ரெப்ரசண்டே்டீவ் நீங்க மட்டும்தான். நீங்க சொல்லாம இது செல்லாதுன்னு உங்களுக்கே தெரியும்..!’’
‘‘அதை நான் தெரிந்தே இருக்கிறேன் ஸ்டீவன்சன்!’’
‘‘ஆகட்டும். ரிசல்ட் எப்ப சொல்லுவீங்க?’’
அப்பவும் விடவில்லை. வெள்ளைக்காரர்கள். அதிலும் அமெரிக்கக்காரர்கள் இப்படித்தான். ஒரு விஷயத்தை எடுத்தால் முடித்தே ஆக வேண்டும்.
அதிலும் இந்த ரிவார்டு விஷயத்தில் ரொம்பவுமே அவர்களுக்கு அவசரம். உலக நாடுகளில் எந்தப் பகுதியில் யார் எந்த சேவை செய்தாலும், அவர்களுக்குத் தானே முதன்முதலாக ரிவார்டு கொடுத்திருக்கிறோம் என்ற பெருமையை தக்க வைத்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறவர்கள் அவர்கள்.
அப்படித்தான் இந்தியாவில், அதிலும் தமிழ்நாட்டில் அபூர்வத்திலும் அபூர்வமான சங்கதிகள் எந்த மூலையில் நடந்தாலும் இவனையே நாடுவார்கள். அப்படியொன்றும் இவன் அவர்கள் குழுவில் உள்ளவர்கள் போல் பில்லியனர், ட்ரில்லியனர்கள் அல்லர். சாதாரண கூலித் தொழிலாளி. சமூக சேவையாளன். எழுத்தாளன். சிறு, சிறு கட்டுரைகள், கதைகள் பத்திரிகைகளில் எழுதி வருபவன். யாரிடமும் எந்த ஓர் யாசகத்திற்கும் செல்லாதவன்.
அப்படிப்பட்டவனை நியூஜெர்சியில் இருக்கும் ரோஸ் இஸ்த ரோஸ் என்ற அமைப்பு கண்டுகொண்டது. அவ்வப்போது இந்த மாதிரி உதவிகளைக் கேட்டது. எந்த இடத்திலும் அந்த அமைப்பின் நற்செயலுக்கு குந்தகம் வராமல் அவர்கள் இட்ட பணியை செய்து கொடுத்திருக்கிறான்.
இப்பவும் அப்படித்தான். அமெரிக்க மதிப்பில் 10 ஆயிரம் டாலர்கள் கொண்ட ரொக்கமும், விருதும் அபூர்வ சேவைக்காக இந்தப் பாட்டிக்கு கொடுக்க விரும்புகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடந்த ஏற்பாடு இது. இவனால்தான் தடைபட்டது.
அப்போதும் கூட இவன் அப்படி இதை நினைக்கவில்லை. ஆர்வமாகத்தான் பாட்டியைக் கள ஆய்வு செய்யச் சென்றான். அப்போதும் இப்படித்தான் பத்திரிகை மீடியாக்கள் பாட்டியைப் பற்றி போட்டி போட்டுக் கொண்டு செய்தியை வெளியிட்டிருந்தன.
உசிலம்பட்டியிலிருந்து 10 மைல் தூரம் எருமையூரான் விலக்கு. அங்கேயிருந்து இரண்டு கிலோமீட்டர் ஒரு சைக்கிள் எடுத்துக் கொண்டுதான் போக வேண்டியிருந்தது. ஊருக்குள் ஐநூறு வீடுகளுக்கும் குறையாது. ஊருக்குக் கிழக்கே ஒதுக்குப்புறமான காலனியோரம்தான் பாட்டியின் உணவு விடுதி. சின்ன குட்டிச்சுவர்.
உள்ளே நுழைந்தால் ஓட்டுக்கூரை தாவாரம். நீளமாய் வடக்கும் தெற்குமாய் சிமெண்ட்டில் சின்னத் திண்டு. இவன் போகும்போது அந்த இரண்டு திண்டுகளிலும் வரிசைக்கு எட்டுப் பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போதே பக்கத்து ஊர்களுக்கும் பாட்டி ஃபேமஸ் ஆகியிருந்தார். டீவியில் பார்த்தேன். பேப்பரில் பார்த்தேன்.
இந்தக் காலத்தில் இப்படியொரு பாட்டி. எங்க ஊருக்கே பெருமை!’ என்றெல்லாம் நிறைய சிலாகித்தார்கள். சுந்தரம் தன் வசம் கொண்டு போன செல்போன் கேமராவில் எல்லாவற்றையும் பதிவு செய்ய ஆரம்பித்தான். கூன் பாட்டி. வயசான தேகம். ஒடுங்கிய கன்னங்கள். முகத்தில் மட்டுமல்ல, உடம்பு முழுக்க ஆயிரமாயிரம் சுருக்கங்கள்.
விறகடுப்பு மூட்டி, பெரிய ஒரு இட்லிப் பானையை வைத்துத்தான் சுடச்சுட இட்லி அவித்து வந்தவர்களுக்கு சில்வர் தட்டில் ஒரு அரச இலையோ, ஆல் இலையோ வைத்து பரிமாறிக் கொண்டிருந்தாள். எப்படி பாட்டி உங்களால் இப்படி முடிகிறது?
‘‘இங்கே இருக்கறவங்க எல்லாம் ஏழை பாழைக. காட்டு வேலை, கட்டிட வேலைக்குப் போவாங்க. ஒரு நாளைக்கு கூலி கிடைக்கும், கிடைக்காமலும் போகும். அவங்க காலையில போகும்போது என்னன்னு செய்வாங்க. ஊருக்குள்ளே இட்லிக்கடைக இருக்குதுதான். ஆனா அங்கே ஒரு இட்லி அஞ்சு ரூவாய்க்கு விற்குது. இவங்களால வாங்க முடியுமா? பத்து வருஷத்துக்கு முன்னால வரைக்கும் ஒரு இட்லி அம்பது பைசாவுக்கு கொடுத்திட்டிருந்தேன். இருபது வருஷம் முன்னால வெறும் பத்து பைசாதான் எங்கிட்ட இட்லி. ரேசன் அரிசிதான். கூட கொஞ்சம் நல்லரிசி கலக்குவேன். உளுந்து தோட்டங்காட்டுல கம்மி விலைக்கு வாங்குவேன். தக்காளி, வெங்காயம், மிளகாய் எல்லாம் எனக்குத் தெரிஞ்ச கடைக்காரங்ககிட்ட வாங்குவேன். விறகு வெளியே வாங்க மாட்டேன். வெளியே போனா முள்ளு வெறகு வெட்டிட்டு வந்து வச்சுக்குவேன். இப்படியெல்லாம் செஞ்சாத்தான் விலை கட்டுபடியாகும். ஒரு நாளைக்கு பத்து அடசல் இட்லி பொங்குவேன். எப்படியும் நூறு, எரநூறு எனக்குக் கிடைக்கும். ஒரு பையன், மூணு பொண்ணுக. புருஷன் முப்பது வருஷத்துக்கு முந்தியே செத்துப் போயிட்டான். இதுகளையெல்லாம் கரை சேர்த்தி பேரன், பேத்திகள் கண்டாச்சு. பையன்தான் உருப்படியில்லாம போயிட்டான். மருமகள் கூலி நாழிக்கு வேலைக்குப் போறா. வீடு இதுதான்...!’’ பாட்டி சொல்ல சொல்ல சுந்தரம் வியப்பின் உச்சிக்கே போனான். ‘‘சரி பாட்டி, இதே இட்லிய ஒண்ணரை ரூபாய்க்கு ஏத்திக்கலாம்ல? இப்படி விறகுக்குப் பதில் கேஸ் சிலிண்டர் வாங்கிக்கலாம். பழைய ஓட்டுக்கூரைய மாத்திக்கலாம்!’’
‘‘நீ சொல்றது வாஸ்தவம்தானப்பா. ஆனா இங்கே எங்கிட்ட சாப்பிட வர்றவங்களுக்கு வாங்கற வசதி வேணும்லப்பா? அவங்க இந்த ஒரு ரூபாய் இட்லிக்கே கடன் சொல்லீட்டுப் போற ஆளுக!’’ என்று கனிந்துருகினாள். ஆச்சர்யம்தான். இவரே ஓர் ஏழை. அழுக்கும், கந்தலுமான துணியை கட்டியிருக்கிறார். இவரைச்சுத்தியிருக்கிற ஏழை, எளியவங்களுக்காக பாகாய் உருகுகிறார். எப்படியான கழிவிரக்கம்.
‘‘சரி, இந்த வீடியோவுல எல்லாம் எடுத்துப் போட்டாங்களே பாட்டி. அதுல ஏதும் நடந்ததா?’’
‘‘ஓ.. அதை முதன் முதலா எடுத்துப் போட்டது நம்மூர் பசங்கதான். சும்மா வந்து இங்கே உட்கார்ந்திருந்தாங்க. இட்லி சாப்பிட்டாங்க. என்னை அப்படி நில்லு, இப்படி நில்லு, அப்படிப் பேசுன்னு எதை, எதையோ நீட்டிக் கேட்டாங்க. போட்டோ எடுக்கறாங்கன்னுதான் தெரிஞ்சுது. அப்புறம் பார்த்தா ஊர் உலகமெல்லாம் நான் பரவீட்டேன். இதுக்கு முன்னால வரைக்கும் அரசு இலை பறிச்சுட்டு வந்துதான் இட்லி கொடுத்துட்டு இருந்தேன். இப்ப டீவியில பார்த்துட்டுத்தான் ஒரு தம்பி நூறு சில்வர் தட்டு வாங்கிக் கொடுத்துட்டுப் போனாரு. அதுலதான் இப்ப இட்லி குடுக்கிறேன். அப்பறம் ரெண்டு மூணு பெரிய மனுஷங்க வந்தாங்க. உனக்கு என்ன பாட்டி வேணும்ன்னு கேட்டாங்க. எனக்கு எதுக்கு சாமி. நாலு இட்லி நீ உண்டுட்டுப் போன்னு சொன்னேன். உண்டதோட இல்லாம ஆளாளுக்கு ஐநூறு ரூபா எடுத்துக் கொடுத்தாங்க. செலவுக்கு வச்சுக்கன்னாங்க. யாருக்கோ போன் பண்ணினாங்க. இவ்வளவு பெரிய இட்லிச்சட்டி, சாம்பார், சட்னி அரைக்கறதுக்கு பாத்திரங்கள் எல்லாம் வேன்ல வந்து இறங்குச்சு. அது மட்டுமா? இன்னொருத்தர் வந்தாரு. ‘ஏம் பாட்டி இன்னும் ஆட்டாங்கல்லுலயே அரைச்சு இட்லி சுடறியான்னு கேட்டுட்டு மாவு மிஷினே கொண்டு வந்து எறக்கீட்டாரு... எம்மேலதான் எத்தனை பேருக்கு பாசம்?’’
எல்லாமே வீடியோவில் பதிவாகி விட்டது. பாட்டி அவித்த இட்லியை சுந்தரமும் ஒரு தட்டில் வாங்கி சாப்பிட்டுப் பார்த்தான். வீட்டில் சாப்பிட்டால் நாலு இட்லியே அதிகம். இங்கே ஒரு டஜன் இட்லி வயிற்றுக்குள் போனதே தெரியவில்லை.
இட்லிக்கு, சட்னி, சாம்பார் எல்லாமே பாட்டியின் கைப்பக்குவம். ஐநூறு ரூபாயை எடுத்துக் கொடுத்தான். பாட்டி வாங்க மறுத்தார். வற்புறுத்தித் தந்த பிறகும் சில்லறையில்லையே தம்பி என்றார்.
‘இல்லே பாட்டி, இந்த ஐநூறு ரூபாயும் உங்களுக்குத்தான்!’’ என்ற போது, ‘‘உன்னை மாதிரிதான் சாமி. வர்றவங்க எல்லாம் நூறு, இருநூறு, ஐநூறுன்னு கொடுத்துட்டுப் போறாங்க. எல்லாம் இந்த ஜனங்களுக்குத்தானே!’’ என்றபடி சுருக்குப் பையில் வாங்கிப் போட்டுக் கொண்டார்.
அதற்குள் பாட்டிக்கு உள்ளூருக்குள் உதவியாளர்கள் வந்து சேர்ந்திருந்தார்கள். அவர்கள் ஆளாளுக்குப் பாட்டியைப் பற்றி பேட்டி கொடுத்தார்கள். பாட்டி அடிக்கடி ஏழை, எளியவர்கள் என்று சொன்னவர்களும் மைக் முன்பு நின்று பேசினார்கள்.
‘‘இந்த ஆயா மாதிரி நீங்க எங்கியுமே பார்க்க முடியாது. ஊருக்குள்ளே கடைகளில் எல்லாம் கடன் தரமாட்டாங்க. ரேட்டும் அதிகம். ஆயா நம்ம வந்தவுடனே சாப்பிடறியான்னு கேட்குமே ஒழிய, எந்த இடத்திலும் பணம் மட்டும் கேட்காது. நாங்களா கணக்குச் சொல்லி பழைய கடன் கொடுத்தாத்தான் வாங்கிக்கும்!’’ என்று உருக்கமாகச் சொன்னார்கள்.
அப்போதுதான் ஒன்றைக் கவனித்தான் சுந்தரம். அதாவது அங்கே இருந்த திண்டிலும், ஒன்றிரண்டு நாற்காலி, பெஞ்சிலும் சிலர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, பாட்டி சொன்ன ஏழை எளியவர்கள் அங்கே ஓர் ஓரமாகத் தரையில் அமர்ந்து இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் தட்டில் சாப்பிட்டு, அதில் இருந்த இலையை பக்கத்தில் உள்ள ஒரு பக்கெட்டில் போட்டு விட்டு, சாப்பிட்ட தட்டை அங்கேயே வைத்து விட்டு கை கழுவினார்கள்.
இந்த எளியவர்கள் மட்டும் தட்டில்லாமல் இலையிலேயே சாப்பிட்டு, எச்சிலையை வெளியே கொண்டு போய் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு வந்தார்கள். வெளியே இருந்த உடைந்த சிமெண்ட் தொட்டியில் இருந்து தண்ணீர் பிளாஸ்டிக் டம்ளரில் அள்ளி கைகழுவிக் கொண்டிருந்தார்கள்.
ஏன் அப்படி, பலரும் அப்படியே செய்ய மனம் துணுக்குற்றது.
அதை எல்லாமே வீடியோ எடுத்துக் கொண்ட சுந்தரம் கடைசியாகக் பாட்டியிடம் கேட்டான்.
‘‘ஏன் பாட்டி அவங்க எல்லாம் தரையில உட்கார்ந்து சாப்பிறாங்க. தட்டு இல்லாம இலையில சாப்பிட்டு அதையும் தானே எடுத்துப் போய் வெளியில போடறாங்க!?’’
அதைக்கேட்டதும் பாட்டி முகம் கொஞ்சம் அல்ல, நன்றாகவே மாறியது. சுந்தரத்தை நெருங்கி வந்தாள். ‘‘சாமி. அவங்க தண்ணி பொழங்காத சாதி சாமி. சரிசமமா ஒண்ணுமோட ஒண்ணா உட்கார வச்சு சாப்பிட வக்க முடியுமா?’’ அவள் வார்த்தைகள் பொட்டில் அறைந்தது போலிருந்தது.
திரும்ப வரும்போதெல்லாம் இதே யோசனை. தர்மம், சேவை, கருணை எல்லாம் தாண்டி ஜாதியின் தீ நாக்கு. எப்படிப்பட்ட விருது. அத்தனை தகுதிகளும் இருந்தும் ஒரு துளி விஷத்தில் எப்படியான விருதை தவற விடுகிறாள் பாட்டி? நிறைய கேள்விகள்.
‘தாங்கள் அளிக்கும் விருதுக்கு துளியும் தகுதியில்லை பாட்டி!’ ஒரே ஒரு வரிதான் எழுதினான்.
இரண்டு வருடங்கள் முன்பு நியூஜெர்சியிலிருந்து இந்த ஸ்டீவன்சன் மட்டுமல்ல, கூட இருந்த ஏழு ஜூரிகளும் பதறிக் கொண்டு லைனில் வந்தார்கள், வீடியோ கான்ஃபரன்சில் வந்தார்கள்.
‘‘விருதுக்கு தகுதியில்லை. சரி. அதற்கு என்ன காரணம்?’’ துருவித் துருவிக் கேட்டார்கள்.
இவன் சொல்லவில்லை. சொன்னால் விஷயம் பரவும். மீடியாக்கள் வெளிச்சம் போடும். பாட்டியின் வாழ்க்கையே சிக்கலுக்குள்ளாகும்.
இந்த வயசில் பிசிஆர், தீண்டாமைக் கொடுமை வழக்குகளை சந்திக்க நேரும். இந்த சமூகத்தில் புரையோடிப் போன ஒரு விஷயத்திற்கு பாட்டியின் பிழைப்பில் மண்ணைப் போடலாமா? ரொம்ப ரகசியமாக ஸ்டீவன்சனிடம் மட்டும் சொன்னான். அவர் ரொம்பவுமே ஆடிப் போய் விட்டார். ‘நீ எடுத்த முடிவுதான் சரி!’’ என்றார்.
‘‘இருந்தாலும் அந்தப் பாட்டியிடம் திரும்பப் போய் சொல்லுங்க. இப்படி எளிய ஜனங்ககிட்ட நடந்துக்கறது தப்பு. அதனால எல்லாருக்கும் சமமான இடம் கொடுங்க. அதுக்குப்புறம் உங்களுக்குப் பெரிய பரிசு காத்திட்டிருக்கு!’’
‘‘இல்லை ஸ்டீவன்சன். அப்படி செய்யறது தப்பு. முறையில்லை!’’ என்றவன்,
‘‘இருந்தாலும் ஒண்ணு செய்யறேன். இந்தப் பரிசைப் பத்தி சொல்லாமல், பாட்டியிடம் நியாயத்தை வலியுறுத்திப் பார்க்கிறேன். ஒரு வருஷம் காலம் கழிச்சு திரும்பப் போய் பார்க்கிறேன். சூழ்நிலை மாறியிருந்தால் இதே விருதை அந்த வருஷம் கொடுக்கப் பாருங்க!’’
இவன் கருத்து ஸ்டீவன்ஸனுக்கு ஏற்புடையதாக இருந்தது.
சுந்தரம் உடனே போனான். பாட்டியிடம் சொன்னான். பாட்டியோ வெகுண்டாள்.
‘‘என்னப்பா பேசற? எல்லாரும் ஒண்ணாயிர முடியுமா? அப்படியே நான் செஞ்சாலும் ஊருக்குள்ளே என்னை சேத்திக்குவாங்களா? ஜாதி ஜனங்க சும்மாயிருப்பாங்களா?’’ அதற்கு மேல் பேச முடியவில்லை. ஆனால் பாட்டியின் செய்தி வந்து கொண்டேயிருந்தது. ஆளாளுக்கு கேஸ் சிலிண்டர் வாங்கிக் கொடுத்தார்கள். அரிசி பருப்பு கொண்டு வந்து இறக்கினார்கள்.
தனியார் அமைப்புகளும், அரசும் கூட சில விருதுகளைப் பாட்டிக்கு கொடுத்து கெளரவித்தார்கள். இப்போது ஒரு தனியார் நிறுவனம் அவருக்கு சொந்தமாக இடம் கொடுத்து கட்டிடமே கட்டிக் கொடுத்திருக்கிறது. அதுவும் மீடியாக்களில் செய்தியாகியிருக்கிறது. இப்போது பாட்டி அந்தக் கட்டிடத்திலேயே சமைக்கலாம். பரிமாறலாம். வாடிக்கைகளுக்கு சேவை செய்யலாம்.
ஸ்டீவன்சன் கேட்டுக் கொண்டதற்குகிணங்க பாட்டியின் இட்லிக்கடைக்கு மொபட் எடுத்துக் கொண்டு சென்றான். கூன் முதுகுப் பாட்டி முன்பை விட பளிச்சென்று இருந்தாள். அழுக்கு சேலை இல்லை. விறகடுப்பு இல்லை. காரை பெயர்ந்து, மண் உதிர்ந்த திண்டுகளோ, ஓட்டுக்கூரையோ இல்லை. புத்தம் புது கட்டிடத்தினுள் இரும்பு பெஞ்ச். சேர்கள். அதில் பகட்டாய் இருந்த சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
ஓர் ஓரமாய் தரையில் எளியவர்கள் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இலை இல்லை. தட்டு இல்லை. எல்லோருக்கும் பேப்பர் பிளேட்டுகள் அதில் பெஞ்சில் அமர்ந்திருந்தவர்கள் சாப்பிட்ட பிளேட்டை அருகில் இருந்த கூடையில் போட்டுக் கைகழுவினார்கள்.
தரையில் அமர்ந்து சாப்பிட்ட எளியவர்களோ வெளியே சாலைக்கு வெளியே சென்று குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு வந்து வெளியே உள்ள சிதிலமடைந்த சிமெண்ட் தொட்டியில் தண்ணீர் எடுத்துக் கைகழுவினார்கள். சுந்தரம் மீண்டும் ஸ்டீவன்சனுக்கு கடிதம் எழுதினான்.
‘‘பாட்டிக்கு இன்னமும் நம் விருதுக்குத் தகுதி வரவில்லை!’’
#158
73,030
3,030
: 70,000
63
4.8 (63 )
visalakshi.jayayaman
alex
ok
ilaval2010
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50