JUNE 10th - JULY 10th
"என்னங்க.... தோசையில கொஞ்சம் நெய் ஊத்துங்க.... பெரியவனுக்கு நெய் தோசை தான் ரொம்ப பிடிக்கும்..." என்ற மரகதத்தை பார்த்து புன்னகை புரிந்த சதாசிவம், "சரிம்மா... உனக்கு எப்பவும் உன் மொத பிள்ளை தான் ரொம்ப ஒசத்தி..." என்றார்...
மரகதமோ, "எப்பவுமே எல்லா அம்மாவுக்கும் தன்னுடைய மொத புள்ள ஒசத்திதாங்க... சரி... சரி... என் கிட்ட பேசிகிட்டே தோசையை கருக விட்டுடாதீங்க..." என்று கூறி சிரித்தாள்...
அதற்குள் அவர்களின் மூத்த மகன் சமையலறைக்குள் வரவும், அவர்கள் தங்கள் பேச்சை நிறுத்திக் கொண்டனர்... உள்ளே வந்தவன் தட்டில் தோசை எடுத்து வைத்துக்கொண்டு, சதாசிவத்தை ஒரு மாதிரியாக ஒரு பார்வை பார்த்து விட்டுச் சென்றான்...
அவன் சென்றதும் சதாசிவம் மெல்லிய குரலில் மரகதத்திடம், "நீ கொஞ்சம் நேரம் அமைதியா இரு... அவனுங்கள அனுப்பிவிட்டுட்டு அப்புறம் நாம ரெண்டு பேரும் மெதுவா பேசுவோம்..." என்று சொல்லவும், மரகதம் 'சரி' என்று தலையசைத்தார்...
அனைவருக்கும் தேவையான தோசையை சுட்டு வைத்துவிட்டு, நான்கு வயது பேத்திக்கு தோசையை சுட்டு கொண்டு சமையலறை விட்டு வெளியே வந்தார்... தன் பேத்தியை கையில் ஏந்திக்கொண்டவர், சிறிய மகனை பார்த்து, "என்னடா அதுக்குள்ள காலேஜ்க்கு கிளம்பியாச்சா? போ... போய் உள்ள தோசை இருக்கு... எடுத்து போட்டு சாப்பிட்டு அப்புறம் போ" என்று கூறியவர், பேத்திக்கு தோசையை ஊட்ட ஆரம்பித்து விட்டார்...
அவர் எல்லாரையும் அக்கறையாக கவனித்து கொள்வதை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்த மரகதம் சதாசிவத்தை பார்த்து சிரித்தார்... "எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமாங்க இப்படி எல்லாரையும் பார்க்க" என்று கூறி கண்கலங்கினார்...
மரகத்தின் கண்ணின் நீர் துளியை கண்டவர் பார்வையாலேயே 'அழாதே' என்று ஜாடை காட்டினார்..
மரகதமும் 'சரி' என்று தலையாட்டினார்...
மூத்த மகனும் மருமகளும் வேலைக்கு கிளம்பி செல்ல, இளைய மகனும் கல்லூரிக்கு கிளம்பி சென்றுவிட்டான்... நான்கு வயதுப் பேத்தியை இடது கையால் பிடித்துக்கொண்டு, அதே தோளில் அவளின் புத்தக பையையும், வலது கையில் அவளது மதிய உணவு கூடையையும் எடுத்துக்கொண்டு, அவளைப் பள்ளி வாகனத்தில் ஏற்றுவதற்காக அழைத்துக் கொண்டு சென்றார்... கூடவே மரகதமும் நடந்து வந்து கொண்டிருந்தார்...
அவர்கள் இருவரும் மௌனமாய் பேருந்து நிற்கும் இடத்திற்கு சென்று பேத்தியை பள்ளி வாகனத்தில் ஏற்றி விட்டு விட்டு, திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தனர்...
வரும் வழியில் அவர்கள் சிரித்து பேசிக்கொண்டே நடந்து வந்து கொண்டிருந்ததைப் பார்த்த எதிர்வீட்டு மாணிக்கம், சதாசிவத்தை ஒரு முறை முறைத்துவிட்டு அவர்களை வேகமாக கடந்து போனார்...
அதற்கு மரகதம், "எதுக்குங்க அவர் உங்கள பார்த்து இப்படி மொறச்சிட்டு போறாரு?" என்று கேட்டார்...
"அதுவா? நான் என் பொண்டாட்டி கிட்ட சிரிச்சு பேசிகிட்டு போறேன் இல்ல ... அதான் பொறாமையில பொங்கறான்" என்று கூறிவிட்டு இடி இடி என்று சிரித்தார்...
"போதும் உங்க குசும்பு... சும்மா இருங்க" என்று கூறிய மரகதம் வெட்கப்பட்டுக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்து கொண்டார்... உள்ளே நுழைந்த சதாசிவம் நாற்காலியில் அமர போக, அதைத் தடுத்த மரகதம் "மொதல்ல போய் சாப்பிடுங்க" என்று கூறினார்...
"இல்லம்மா... இன்னும் கொஞ்ச நேரம் போகட்டும் அப்புறம் சாப்பிடறேன்" என்று கூறிய சதாசிவத்தை பார்த்து முறைத்தவர், "ஏற்கனவே வயசு 60 ஆச்சு... ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிடலன்னா... என்னத்துக்கு ஆகும்? போய் தோசையை எடுத்து சாப்பிடுங்க" என்று அவரை அதட்டிய மரகதத்தை பார்த்த சதாசிவம் "நீ எப்பவும் எங்கள பத்தி தான் கவலைபடுவ... நீ எப்பவும் எங்களுக்காகத்தான் யோசிச்சுக்கிட்டே இருக்க... ஆனா நாங்க யாரும் உன்ன சரியா கவனிச்சிக்கவே இல்லைல..." என்று ஒரு பெருமூச்சு எறிந்தார்...
"போதும்... போதும்... உடனே ஆரம்பிச்சிடாதீங்க... முதல்ல சாப்பிட்டுட்டு அப்புறம் மத்தத பேசிக்கலாம்..." என்று அதட்டி அவரை சாப்பிட வைத்தவர்,
மாத்திரைகளையும் போடச் சொல்லி கட்டாயப்படுத்தி அவரைப் போட வைத்து, நாற்காலியில் அமரச் சொன்னார்
அவரின் கால் அருகே அமர்ந்த மரகதம் சதாசிவத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்...
"என்னடி அப்படி பார்த்துகிட்டு இருக்க? என்று கேட்ட சதாசிவத்தை பார்த்து வெட்கம் கலந்த புன்னகை சிந்திய மரகதம், "என்ன புதுசா 'டீ' எல்லாம் போட்டு பேசுறீங்க" என்று கேட்க "ஏன்? என் பொண்டாட்டிய, நான் 'டீ' போட்டு பேசக்கூடாதா? " என்று கேட்டார்..
"அடேயப்பா... இப்பதான் இளமை திரும்புது உங்களுக்கு... ரொம்பத்தான்... போதும் போதும்" என்று சொல்ல "ஆமாண்டி எனக்கு இளமைதான் திரும்புது... எனக்கு என்ன குறைச்சல்? என்ன பாத்தா கெழவன் மாதிரியா இருக்கு?" என்று கேட்டார்...
இப்படியே மதிய உணவு நேரம் வரை அவர்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டே இருந்தனர்....
மரகதம் சதாசிவத்தை போய் மதிய உணவு உண்ண சொல்லி விட்டு, அவரின் அலைபேசியில் பேத்தியை அழைத்துக் கொண்டுவர 'அலாரம்' வைத்துவிட்டு போய் தூங்க சொன்னார்...
அலாரம் அடிக்கும் நேரம் சதாசிவத்தின் அருகில் அமர்ந்திருந்த மரகதம் அவரையே பார்த்துக் கொண்டு இருந்தார்... அலாரத்தின் சத்தத்தில் விழித்த சதாசிவம், தன்னருகே தன்னையே பார்த்தவாறு அமைந்திருந்த மரகதத்தை பார்த்து புன்னகை புரிந்துவிட்டு முகம் கை கால் கழுவி விட்டு வெளியே வந்தார்...
இருவரும் பேத்தியை கூப்பிட செல்லும்போது சிரித்துப் பேசிக் கொண்டே செல்ல, காலையில் பார்த்த மாணிக்கம் மறுபடியும் அவரை முறைத்துக்கொண்டே சென்று, தன் பேரனை பள்ளி வாகனத்தில் இருந்து அழைத்துக் கொண்டு சென்றார்
அதைப் பார்த்த சதாசிவம் "இவன் திருந்தவேமாட்டான்... எப்ப பாத்தாலும் என் முறைப்பையன் மாதிரி மொறச்சுக்கிட்டே திரியறானே?" என்று தன் மனைவியிடம் கூறி சிரித்துக் கொண்டார்...
பேத்தியை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தவர் அவளுக்கு உண்ண உணவு கொடுத்து உறங்க வைத்தார்...
சமையலறை சென்று தேநீர் கலந்துகொண்டு எடுத்து வந்தவர் "மரகதம் கொஞ்சம் 'டீ' குடிக்கிறியா?" என்று கேட்க, அவரைப் பார்த்த மரகதம் மறுப்பாய் தலையசைத்தார்...
"நான் போட்ட 'டீ'யை குடிக்க கொடுத்து வச்சு இருக்கணும் தெரியுமா? வேணாம்னு சொல்றீயே..." என்று சிரித்தபடியே கேட்ட சதாசிவத்தை பார்த்து, "எனக்கு அந்த கொடுப்பினை இல்லையே என்ன பண்றது?" என்று கண் சிமிட்டி கேட்ட மரகதத்தை பார்த்த சதாசிவம், "நான் உனக்கு ஒரு நல்ல புருஷனாவே நடந்துக்கலல்ல?" என்று கேட்டவரை பார்த்து பதறிய மரகதம் "என்ன பேச்சு பேசறீங்க? அதெல்லாம் ஒன்னும் இல்ல... எனக்கு நீங்க ஒரு குறையும் வைக்கல... எதையாவது போட்டு மனச குழப்பிக்காம போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க" என்றார்...
மரகதத்தை பார்த்து சிரித்தபடியே தேநீரைக் குடித்துவிட்டு எழுந்த சதாசிவம் சமையல் அறையில் இருந்த அழுக்கு பாத்திரங்களை தேய்க்க ஆரம்பித்தார்... "நீங்க இந்த வேலையெல்லாம் செய்யறத பாக்கும்போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க..." என்று கூறிய மரகதத்திடம், "இத்தனை வருஷமா நீதானம்மா செஞ்சிக்கிட்டு இருந்த? இப்ப உன்னால முடியாததாலதானே நான் செய்யறேன்... உன்னால முடிஞ்சா நீ என்ன செய்யவிட்டுட்டு இப்படி பார்த்துக்கிட்டு இருப்பியா? உன்னோட இந்த நிலமைக்கு நான்தானே முழு காரணம்? என்னை மன்னிச்சிடுன்னு கேட்க கூட முடியாது... ஏன்னா நான் மன்னிக்கக் கூடிய தப்பை பண்ணலியே... மன்னிக்கவே முடியாத தப்பைதானே இத்தன வருஷமா பண்ணிக்கிட்டு இருந்திருக்கேன்..." என்று வருந்தியவரை பார்த்த மரகதம், "ஐயோ என்னங்க இது? ஏன் இப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க? நான் இங்க இருந்தா இப்படி தான் நீங்க பேசிகிட்டே இருப்பீங்க... நான் வெளியில போறேன்... நீங்க முடிச்சிட்டு வாங்க..." என்று கூறவும், "இல்லம்மா இல்லம்மா நான் எதுவும் பேசல... நீ இங்கேயே இரு..." என்று கூறியவர், சமையலறையை சுத்தம் செய்துவிட்டு வெளியே வந்தவர் பின்னாலேயே வந்த மரகதம் வாசலைப் பார்த்துவிட்டு "என்னங்க சின்னவன் வந்துட்டாங்க" என்று குரல் கொடுத்தார்...
கையில் துடைப்பத்தை வைத்தவாறு நின்ற சதாசிவம், சின்னவனை பார்த்து, "வா தம்பி... 'டீ' குடிக்கறியா? போட்டு எடுத்துட்டு வரவா?" என்று கேட்க "அதெல்லாம் வேணாம் பா... நான் வரும்போதே கேண்டீன்ல குடிச்சிட்டு தான் வந்தேன்..." என்று சொல்லிவிட்டு அவர் கையில் இருந்த துடைப்பத்தை வாங்கி வீட்டை பெருக்க ஆரம்பித்தான்...
சிறிது நேரம் கழித்து வந்த மருமகள் சமையலறை சென்று பார்த்துவிட்டு "ஏன் மாமா... நான் வந்து சாமானெல்லாம் தேய்ச்சு இருக்க மாட்டேனா? நீங்க ஏன் இந்த வேலை எல்லாம் பாக்குறீங்க? நீங்க காலையில எழுந்து சமைக்கிறதே பெரிய விஷயம்... இதுல இந்த வேலை எல்லாம் ஏன் பாத்துக்கிட்டு இருக்கீங்க? இனிமேல் இதெல்லாம் செய்யாதீங்க மாமா.. எத்தனை தடவை சொன்னாலும் நீங்களே செய்றீங்க..." என்று அக்கறையுடன் குறை கூறிய மருமகளை வாஞ்சையுடன் பார்த்தவர், "வீட்ல சும்மாதானம்மா இருக்கேன்... எனக்கும் பொழுது போக வேணாமா... அதனாலதான்மா செஞ்சேன்" என்று அவரின் வழக்கமான வார்த்தைகளை கூறினார்... அதற்கு சிரித்தபடியே தலையாட்டிக் கொண்ட மருமகள், "மாமா.. நான் இன்னைக்கு ராத்திரிக்கு சப்பாத்தி செய்யறேன்... நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம்..." என்று கூறிவிட்டு தன் மகளை கவனிக்க சென்றவளிடம், "அப்ப சரி மா... நான் கொஞ்ச நேரம் மாடியில் நடந்துட்டு வர்றேன்" என்று கூறி விட்டு மாடிக்கு சென்று விட்டார் தன் மனைவியுடன்...
சிறிது நேரம் மாடியில் பௌர்ணமி நிலவில் தன் மனைவியுடன் நடந்துவிட்டு கீழே வந்தவரை பார்த்த மூத்தமகன், "ஏம்ப்பா எத்தனை தடவை சொன்னாலும் சொன்ன பேச்ச கேக்கவே மாட்டீங்களாப்பா? அந்த மாணிக்கம் அங்கிள் அவ்ளோ பேச்சு பேசறாரு... வீட்டுக்குள்ள எப்படி வேணா இருந்துக்கோங்கப்பா... அத பத்தி நான் ஒண்ணுமே சொல்ல மாட்டேன்.. ஏன்னா உங்க கஷ்டம் என்னன்றது எங்களுக்கு தெரியும்... ஆனால் வெளியே போகும்போது கொஞ்சம் பார்த்து நடந்துக்கோங்கப்பா... ஏன்னா அவங்க எல்லாரும் உங்கள வேறமாதிரி நெனைக்கிறாங்கப்பா... தயவு செஞ்சி புரிஞ்சுக்கோங்கப்பா... ப்ளீஸ்..." என்று ஆற்றாமையுடன் கூறியவன் அமைதியாக தன் அறைக்குச் சென்று விட்டான்..
உள்ளிருந்து கேட்டுக்கொண்டிருந்த மருமகள் தன் கணவன் உள்ளே வந்ததும் "ஏங்க... வந்ததும் வராததுமாக அவர்கிட்ட மல்லுக்கட்டிக்கிட்டு போய் நிக்கிறீங்க" என்றவளை இயலாமையுடன் பார்த்தவன் "என்னை என்னடி பண்ண சொல்ற? வாசலுக்கு எப்போ வருவேன்னு காத்துக்கிட்டு இருந்துகிட்டு, அந்த மாணிக்கம் அங்கிள்... 'உங்க அப்பாவ ஒழுங்கா போய் ஒரு பைத்தியக்கார ஹாஸ்பிடல்ல சேருன்னு' தினம் தான் சொல்லிக்கிட்டு இருக்காரு... ஒவ்வொரு தடவையும் கேட்கும்போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு... அந்தக் கோபத்தில் தான் பேசிட்டேன்... இரு வரேன்..." என்றவன் வேகமாக தன் தந்தையின் அறைக்குச் சென்று கட்டிலில் கண்மூடிப் படுத்திருந்த சதாசிவத்தை பார்த்து "அப்பா... சாரிப்பா... இனி இப்படியெல்லாம் பேசமாட்டேன் பா... " என சொல்ல, சதாசிவம் “விடுப்பா… என் மேல தான் தப்பு… நான் கொஞ்சம் பார்த்து நடந்துக்கணும்… இனி இந்த தப்பு நடக்காது… நான் பாத்துக்குறேன்" என்று சொன்னார் அதற்கு "இல்லப்பா” என்று ஆரம்பிக்கும் போதே "இல்ல தம்பி.. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல… நான் பார்த்துக்கிறேன்… என்னால இனி எந்த பிரச்சனையும் உனக்கு வராது… சரியா… நீ ஒண்ணும் யோசனை பண்ணாத... வா போய் சாப்பிடலாம்..." என்று கூறிவிட்டு அனைவரும் சாப்பிட்டு முடித்து தன் அறைக்கு தன் மனைவியுடன் வந்து அமர்ந்தார்... இரவு மாத்திரைகளைப் போட்டுவிட்டு மரகத்தைப் பார்த்தவர் கண் கலங்கினார்...
"நான் ஒரு நல்ல புருஷனா இல்லவே இல்லலமா உனக்கு? கல்யாணம் முடிச்சி வந்ததுல இருந்து, நீ, 'எனக்கு இது வேணும் அது வேணும்'னு எதுவுமே கேட்டதில்லை... எனக்கு எல்லாமே பார்த்து பார்த்து செஞ்ச... என் அம்மா அப்பாவ நல்லபடியா பாத்துக்கிட்ட... அவங்க சாகற வரைக்கும் எந்த குறையும் இல்லாம பாத்துக்கிட்ட... பசங்களயும் நல்லபடியா கவனிச்சிக்கிட்ட... உங்கூட நான் கொஞ்ச நேரங்கூட சந்தோஷமா செலவழிச்சதில்ல... பணம் பணம்னு பணம் சம்பாதிக்கறதுலயே காலத்த ஓட்டிட்டேன்... ஆனா நீ எதயும் எதிர்பாக்காம எல்லாத்தையும் எங்களுக்காக செஞ்ச... உன் ஒடம்பக்கூட கவனிச்சிக்காம எங்கள கண்ணும் கருத்துமா பாத்துக்கிட்ட... உன்னை நான் கொஞ்சமாச்சும் கவனிச்சி பாத்திருந்திருக்கணும்... நான் சம்பாதிச்சிப் போட்டத தவிர வேற எந்த வேலையும் பாக்கல... பசங்களுக்கு அம்மாவும் அப்பாவுமா நீதான் இருந்து பாத்துக்கிட்ட..."
"6 வருஷத்துக்கு முன்னாடி மயங்கி விழுந்தவ... எங்க எல்லாத்தையும் விட்டுட்டு ஒரேயடியா போய் சேந்துட்ட... அப்பதான் இந்த உலகமே நின்னு போன மாதிரி இருந்தது... சத்தியமா ஒண்ணும் புரியலமா... நீ இல்லாம நாங்க யாருமே இல்லங்கறது அப்பதான் புரிஞ்சிது... இந்த குடும்பத்தோட அச்சாணியே நீதான்னு புரிஞ்சிது...
நான் தனியா இருக்கும்போதுதான், உன்னோட நிலைம புரிஞ்சிது... எப்படி தனிமையில வாடியிருப்பன்னு புரிஞ்சிது... உனக்காக நான் கொஞ்சம் கூட நேரம் ஒதுக்கலன்னு புரிஞ்சிது... எனக்கு நீ கூட இருக்க வரைக்கும் ஒண்ணும் தெரியலம்மா.. நீ என்னைவிட்டு போனதுக்கு அப்புறம்தான் நான் எவ்ளோ இழந்திருக்கேன்னு புரிஞ்சிது.. உனக்கு நான் ஒண்ணுமே பண்ணலன்னு தெளிவா புரிஞ்சிது... ஆனா இது எல்லாம் புரிஞ்சி எந்த பலனும் இல்ல... கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்னு சொல்ற மாதிரிதான் என் நிலைம... என்னை மன்னிச்சிடும்மா..." என்ற உருகிப் பேசிக்கொண்டிருந்த சதாசிவத்தைப் பார்த்து "இதே பேச்சுதானா தினமும்? போதும் வருத்தப்பட்டதெல்லாம்... இப்படி அழுகாதீங்க... அப்ப எனக்காக நேரம் ஒதுக்கலன்னா என்ன? இப்ப என்கூடத்தானே முழு நேரமும் இருக்கீங்க? இனி நீங்க இதப்பத்தி எதுவும் பேசவே கூடாதுன்னு எத்தனை தடவைதான் சொல்றது உங்களுக்கு? இனி இந்த மாதிரி நீங்க பேசிகிட்டே இருந்தா நான் உங்கள பாக்குறதுக்கு வரவே மாட்டேன்..." என்று செல்லமாய் மிரட்டிக் கொண்டிருந்த மரகதத்தை பார்த்து "சரிமா... சரிமா... இதுக்கு அடுத்து இந்த மாதிரி எதுவுமே பேச மாட்டேன்... நீ என்ன விட்டு போறேன்னு மட்டும் சொல்லாதே... நான் உன் கூட பேசிக்கிட்டு இருக்கறதப் பார்த்து அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க எல்லாம் நான் ஒரு பைத்தியக்காரன்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க... அந்த மாணிக்கமும் தினமும் நம்ம பையன் கிட்ட அதைத்தான் சொல்லிக்கிட்டே இருக்கான்... நீ என்னை விட்டுட்டு போனா... கண்டிப்பா நான் உண்மையாவே பைத்தியமா ஆயிருவேன்... புரிஞ்சுக்கம்மா... நீ உயிரோடு இருக்கும்போது தான் உன் கூட நேரம் ஒதுக்க முடியல... எனக்கு இப்பவாச்சும் அதுக்கான நேரம் கிடைக்குதுன்னு நான் சந்தோஷப்பட்டுக் கிட்டு இருக்கேன்... தயவு செஞ்சு என்னை விட்டுட்டு போயிடாதம்மா"
"உன்ன மாதிரி நம்ம மருமகளும் கஷ்டப்படக் கூடாதுன்னுதான் என்னால முடிஞ்ச அளவுக்கு வேலைகளை பார்த்துகிட்டு பையனையும் மருமகளையும் கொஞ்ச நேரம் ஒண்ணா இருக்க மாதிரியே வெச்சுக்கிட்டு இருக்கேன்... நம்ம பையனுக்கும் இது தெரியும்... என்ன மாதிரி அவனும் குடும்பத்தோட ஒட்டாம இருந்துடக்கூடாதுன்னுதான், ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தோட வெளியில போய் நேரம் செலவழிக்க சொல்றேன்... அதுவும் முடியலன்னா மாசத்துல ஒரு நாளாச்சும் குடும்பத்துக்காக ஒதுக்க சொல்றேன்... என்ன மாதிரி நம்ம புள்ளைங்க ஆயிடக் கூடாதுன்னு நான் ரொம்ப கவனமா இருக்கேன்மா... அவங்க வளரும்போது ஒரு அப்பாவா நான் கூட இருந்து செய்யாததை... இப்ப செஞ்சிட்டு இருக்கேன்... அதனாலதான் வீட்டுக்கு ஒரு வேலைக்காரி வெச்சுக்கோங்கன்னு பையனும் மருமகளும் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் நானே பார்த்து பார்த்து செஞ்சுகிட்டு இருக்கேன் எல்லாருக்கும்" என்று கூறியவரே ஆசையாய் பார்த்த மரகதம் "எனக்குத் தெரியுங்க... இப்ப தாங்க எனக்கு ரொம்ப நிறைவா இருக்கு... இப்போ உங்க கூட பேசி சிரிச்சுகிட்டு... உங்க கூடவே இருக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குங்க... இதுக்காக நான் எத்தனை நாள் ஏங்கியிருக்கேன் தெரியுமா... ஆனா உங்களுக்கு வேலையே சரியா இருக்கும்... பிள்ளைகளும் படிப்பு படிப்புன்னு படிப்புலேயேதான் இருப்பாங்க... நான் உயிரோட இருக்கும்போது கிடைக்காதது எனக்கு இப்ப கிடைச்சிருக்கு... இது போதுங்க எனக்கு... இன்று உணர்ச்சி மிகுதியில் கூறியவர் "சரி... சரி நான் இங்கேயே இருந்தேன்னா, நீங்க பேசிக்கிட்டே தான் இருப்பீங்க... நீங்க தூங்குங்க... காலையில பார்ப்போம்..." என்று கூறிவிட்டு அருகே இருந்த மாலை இடப்பட்ட அவரின் புகைப்படத்தில் சென்று மறைந்து விட்டார் சதாசிவத்தின் மனைவி ஆவியாக...
மனைவியின் அருமை...
இருக்கும் வரை புரிவதில்லை...
புரியும்போது இருப்பதில்லை...
மனைவி என்பவள் பிறந்த வீட்டு மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கிய செடியாவாள்... புகுந்த வீட்டு மண்ணில் அவள் வேரூன்ற, அவளுக்குத் தேவை, கொண்டவனின் அரவணைப்பும் அன்புமே...
அவளின் இமாலய எதிர்பார்ப்புகள், தன் இனியவனின் இரண்டொரு அன்பு வார்த்தைகளே...
உண்மை உறவுகளுக்கு கொஞ்சம் நேரம் செலவழியுங்கள்... இருக்கும்போது ஒதுக்கிவிட்டு.. அவர்கள் இல்லாதபோது ஏங்குவது வீண்...
#90
44,900
4,900
: 40,000
101
4.9 (101 )
selvarani12673
aadharshg.k
வாழ்த்துகிறேன்... தாங்களும் எனது கதையை படித்து ரேட்டிங் செய்ய வேண்டுகிறேன் ஆதர்ஷ்ஜி திருநெல்வேலி https://notionpress.com/ta/story/ssc/22752/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF#.Ysm14rMw5FA.whatsapp
ilango.75518
Touching Story
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50