ராமன் இல்லையடி வாசவி

jothiramarmahi
உண்மைக் கதைகள்
4.9 out of 5 (10 )

ராமன் இல்லையடி வாசவி

அது ஒரு சிறு கிராமம், மதிய நேரம், வானில் உச்சி வெயில் மண்டையயை பிளக்க, ஆஆஆ அம்மாஆஆஆ

ஆஆஆ அப்பாஆஆஆ

அய்யோ சுடுதே சுடுதே

"காப்பாத்துங்க….,

"காப்பாத்துங்க,.... என்ற நடுத்தர வயது பெண்ணின் அலறலை கேட்டு அப்போது தான் சாப்பிடுவதற்கு வீட்டுக்கு வந்த சில ஆண்களும், வீட்டில் இருந்த பெண்களும் அரக்க பரக்க வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்தனர்.


உடம்பெல்லாம் அக்னி ஜ்வாலையில் தகிக்க, அந்த வலியை தாங்க முடியாதவளோ, அலறி துடித்தபடி, நெருப்போடு ஓடிவந்தவளை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.


டேய் சீக்கிரமா நெருப்பை அணைங்கடா… என ஆங்காங்கே குரல்கள் எழும்ப, பக்கத்திலேயே வீடு கட்டிக் கொண்டிருந்த சில இளவட்ட பசங்களும் தூரிதமாக செயல்பட்டு நெருப்பை அணைத்தனர்.


ஆஹ் ம்ம்ம்மா என்ற முனகல் மட்டுமே ஒலித்துக் கொண்டிருக்க, வாழையிலையில் கிடத்தப்பட்டிருந்த உருவத்தை காண முடியாமல் கண்களை மூடிக் கொண்டனர்.


யோவ் ஆஸ்பத்திரிக்கு தூக்குங்கடா என்று ஒருவர் கத்த, தூரிதமாக அருகே இருந்த கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு அவளை கூட்டிக் கொண்டு சென்றனர்.


டேய் எவனாவது சத்தியமூர்த்தியை ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டு வாங்கடா, அவன் பொண்டாட்டி தீக்குளிச்சிட்டான்னு என்று சொல்லி அனுப்ப, அவனை தேடி விரைந்தனர். அதே விடயம் போலீசுக்கும் பறந்தது.


டேய் சத்தியமூர்த்தியை டாஸ்மார்க்ல பாக்கலாம்டா என்று குரல்கள் பின்னால் கேட்டதுமே, அதை நோக்கி வண்டியை செலுத்தினான் ஊர்கார பையன்.


அதே நேரம் மக்கள் கூட்டத்தை பார்த்து என்னவென கேட்டபடியே வந்த சிலரிடம், நம்ம சத்தியமூர்த்தி பொண்டாட்டி வாசவி தீக்குளிச்சிட்டு என்றதும், அய்யோ வயசு புள்ளைங்களை வச்சுகிட்டு இந்த மாதிரி காரியத்தை பண்ணுவாங்களா? அவளுக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு என சிலர் திட்டவும் செய்தனர்.


அதற்குள் வாசவி தீக்குளித்த செய்தி காட்டுத்தீ போல பரவியது. அவளுடைய பிறந்த வீட்டுக்கும் இந்த செய்தி சென்றடையவும், பதறிதுடித்துக் கொண்டு வந்து சேர்ந்தவர்களுக்கு கிடைத்ததென்னவோ வாசவி சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டாள் என்றுதான்.


அதை கேட்டு வாசவியின் அண்ணனும் தம்பியும் குடிபோதையில் மயங்கி கிடந்த சத்தியமூர்த்தியை போட்டு அடித்து நொறுக்க, தாயோ சேலை முந்தானையால் வாய்ப்பொத்தி அழுதார்.


ஆனால் அவளுடைய தங்கையோ, எவடியவ என் அக்கா நடத்தை கெட்டவள்னு சொன்னது, பாவிங்களா அந்த குடிகார ஆளுக்கிட்ட அடியும் மிதியும் வாங்கினாளும் என் அக்கா வாயை மூடிக்கிட்டு குடும்பம் நடத்தினா அன்னைக்கு எவளாவது அவளுக்கு துணையா இருந்திருப்பிங்களா? அவள் படுற கஷ்டத்தை வேடிக்கை மட்டும் தானே பார்த்தீங்க?


என் அக்கா சாவ நீங்க தான் காரணம், அநியாயமா அவ மேல வீண்பழி போட்டு கொன்னுட்டிங்களே பாவிங்களா? நீங்க யாருமே நல்லா இருக்க மாட்டிங்கடி இருக்கவே மாட்டிங்க என்று நடுத்தெருவில் நின்று கத்தியவள் மண்ணை வாரி இறைத்தாள். அப்படியும் கூட வாசவியின் தங்கைக்கு கோபம் தீரவில்லை. அம்மா அம்மா என அழும் பிள்ளைகளை நெருங்கியவள், ஏண்டி அம்மாவை தனியா விட்ட என்று கட்டிப்பிடித்து கதறினாள்.


சித்தி அம்மா இப்படி ஒரு முடிவெடுக்கும்னு நான் நினைக்கல எங்களை அனாதையா விட்டுட்டு போய்டுச்சே என கதறிய மகளை அணைத்துக் கொண்டாள். ஆறுதல் சொல்லி தேற்றும் நிலையில் அவளும் இல்லையே,


அய்யோ அய்யோ என் மகள் போய்ட்டாளே, ஒரு வாய் சோறு வாயில வைக்கும் போதே அடிப்பானே, என் பொண்ணை இவனுக்கு கட்டி வச்சு தப்பு பண்ணிட்டேனே, என் கண்ணு முன்னாடியே அடிச்சு உதைப்பானே, ஏண்டா என் மகளை அடிக்கிறேன்னு கேட்க போன என்னையும் தடுத்துடுவாளே, ஏண்டி தடுக்குறன்னு கேட்டா,


அம்மா நீ கேட்டுட்டு போயிடுவ அதுக்கு அப்புறம் அவன் அடிக்கிற அடி இதை விட கொடுமையா இருக்கும் அதுக்கு இதுவே பரவாயில்லன்னு சொல்லி சிரிப்பாளே வாசவி ஏண்டி இந்த முடிவை எடுத்த என கதறியதை கேட்டால் கல்மனமும் கரைந்துவிடும். அடுத்தடுத்த தெருவில் இருந்தவர்களுக்கு இங்கே நடந்த எதுவுமே தெரியாமல் இருந்தவர்களுக்கு வாசவியின் மரணத்தின் மூலம் இத்தனை வருடங்களாக அனுபவித்துக் கொண்டிருந்த வலியும் வேதனையையும் அறிந்து அதிர்ச்சியடைந்தனர். அதுவும் இந்த தெரு மக்களே அவள் மீது வீண்பழியை சுமத்தியதோடு ஒதுக்கி வைத்த விடயத்தையும் கேட்டு அதிர்ந்தனர்.


அதே நேரம் காவல்துறையும் வந்து சேர, வாசவியின் அண்ணன் தம்பி தங்கை என அனைவரும் சூழ்ந்துகொண்டு சத்தியமூர்த்தியின் மீது புகாரளிக்க, ஊர்ஜனங்களோ அவனுக்கு துணைக்கு நின்றனர்.


ம்மா ம்மா கொஞ்சம் அமைதியாகுங்க? என்ன நடந்ததுன்னு சொல்லுங்க என்று அதிகாரி சொன்னதும்,


சார் அந்த பையன் மேல எந்த தப்பும் இல்லை சாதாரணமா நடக்கிற குடும்ப சண்டை தான் ஆனால் அந்த பொண்ணு தான் சார் கொஞ்ச நாளா பைத்தியம் மாதிரி நடத்துக்கிட்டு, தானா பேசும் தானாவே சிரிக்கும் இதே மாதிரி நிறைய தடவ தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கு என்பதை கேட்டு, வாசவியின் குடும்பத்தினர் மறுத்தனர். ஆனால் அவர்களின் பேச்சு எடுபடாமலேயே போய்விட்டது.


மனநிலை சரியில்லாமல் இருந்தவர் என்று ஊராரும் அடித்து சொல்ல, காவல்துறை அதையே பதிவு செய்து கொண்டு தற்கொலை வழக்காக முடிவு செய்துவிட்டு சில எச்சரிக்கைகளை இட்டு விட்டு சென்றது.


வாழையின் மீது மூடியபடி உயிரற்ற கூடாக கிடந்த தன் அக்காவின் முகத்தையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் சாம்பவி.


மூன்று மாதங்களுக்கு முன்பு:

கண்கள் கலங்கி இருட்டிக்கொண்டு வர, முற்றத்து தூணை பிடித்துக் கொண்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள் அவள். என்ன வார்த்தை சொல்லிவிட்டாய் என்பதாய் தாலி கட்டியவனை கலங்கிய கண்ணீரோடு வெறித்தாள்.


எ என்னடி பெரிய பத்தினியாட்டாம்" மொறைக்கிற? குழறலுடன் தள்ளாடியபடி பேசினான். உள்ளே சென்ற போதை வஸ்து தன் வேலையை செவ்வனே செய்தது.


டேய் பாத்து பேசுடா அபாண்டமா பழியை போட்டா உன் நாக்கு அழுகிடும் என்றாள் குமுறலுடன்.


பதினைந்து வருட கல்யாண வாழ்க்கையில் பெற்றதென்னவோ நடத்தை கெட்டவள் என்ற பழிச்சொல் தான்.


"ஆமாண்டி அப்படி தான் சொல்வேன் இந்த தெருவுல இருக்கிற எல்லாருமே உன்னை நடத்தை கெட்டவள்னு தாண்டி சொல்றாங்க" அவங்கள்ள யாராவது ஒ ஒருத்தர் உன்ன பத்தினின்னு சொல்லட்டும்டி நான் சொன்னதை தப்புன்னு உன் காலுல விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் என்றவன், அப்படி யாருமே இவளுக்காக பரிந்து கொண்டு வரப்போவதில்லை என்ற இறுமாப்பில் மனைவியின் கழுத்தை பிடித்து கீழே தள்ளிவிட்டு கயிற்று கட்டிலில் சென்று விழுந்தான் சத்தியமூர்த்தி.


அவளுக்கோ பூமியே சுழன்று தன்னை கீழே சாய்ப்பது போல இருக்க, தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் அடிப்பட்டு கிடந்தாள் வாசவி.


கட்டிய கணவன் ஏதோ குடிபோதையில் உலறுகிறான் என்று நினைத்து அவன் சொன்னதை அப்படியே விட முடியாமல் ஊண் உறக்கமின்றி எப்பொழுது பொழுது விடியும் என உறங்குபவனையே வெறித்துக் கொண்டு இருந்தாள்.


பதின்ம வயது பெண்பிள்ளைக்கு தாயாகிய தன்னை அவ்வளவு எளிதா நாக்கூசாமல் நடத்தைக் கெட்டவள் என்ற பட்டத்தை சுமத்திய கணவனின் மீது கட்டுக்கடங்காத ஆத்திரம் வந்தது. ஏனென்றால் தான் இருக்கும் போதே மற்ற பெண்களோடு உறவில் இருப்பது ஊரறிந்த உண்மை அப்படியிருக்க, தன் மீது யாரோ எவரோ சேற்றை வாரி இறைப்பதை உண்மையென்று எண்ணிக் கொண்டு வீண்பழி சுமத்துவதை தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.


கட்டிய கணவனின் மீது கோபப்பட்டு என்ன செய்ய முடியும் தனக்காக பேச யார் இருக்கிறார்கள்? இத்தனை காலமும் கட்டியவனின் கொடுமையில் இருந்து தன்னை காத்தது யார்? இன்று வீர ஆவேசம் கொள்ள என ஆழ்மனது கூக்குரலிட, மற்ற கொடுமைகளை போல இதை கடந்து செல்ல முடியாதே, நாளை என் பெண்ணின் வாழ்க்கை கேள்விக் குறியாகி நின்றிடுமே என பலவிதமான மனப்போராட்டங்களில் உழன்று தவித்து துடித்துக் கொண்டிருந்தாள் வாசவி.


நள்ளிரவில் நடந்தவை எதுவும் பெற்ற பிள்ளைகளுக்கு தெரியாமல் போனதால் விடிந்து இவ்வளவு நேரமாகியும் அறையில் இருந்து வெளியே வராமல் இருக்கும் தன் அம்மாவுக்கு உடல்நிலை சுகமில்லையோ என கவலையுற்று "அம்மா…'ஆஆஆ

"அம்மா… 'ஆஆஆ என அழைத்தவாறே கதவை வேகமாக தட்டினாள் பதினாறு வயது நிரம்பிய ராகவி.


என்னாச்சுக்கா என்று கண்ணை கசக்கியவாறே வந்து நின்றான் பதினான்கு வயது நிரம்பிய வாசவியின் மகன் ஹரிஹரன்.


தம்பியின் கேள்விக்கு பதிலை சொல்லாமல் கதவை வேகமாக தட்டிய ராகவி, ஹரி நான் போய் பெரியப்பாக்கிட்டே சொல்லிட்டு வரேன்டா என்று நகரப் போகும் நேரம் கதவு படாரென திறந்தது.


சிவந்த விழிகளுடன் வீங்கிய நெற்றியுமாக இருந்த அம்மாவை பார்த்து பதறிய ராகவி,


"ம்மா ஆஆ, என்னாச்சும்மா? என்ன இது? என நெற்றியை சுட்டி காட்டிய மகளின் குரலில் இருந்த பதற்றத்தை கண்டும் காணாமல் கல்லென இறுகி நின்ற வாசவி, மகளின் முகத்தை பார்த்து,


ஒன்றுமில்ல என்றவர், கூந்தலை அள்ளி முடிந்து கொண்டையிட்டுக் கொண்டு புடவையை ஏற்றி சொருகியவர், பின்கட்டுக்கு சென்றாள்.


"அக்கா, அம்மா பொய் சொல்லுது, நிச்சயமா அப்பா தான் அம்மாவை அடிச்சிருக்கனும் என்ற ஹரியின் குரலில் கோபம் இழையோடியது.


டேய் அப்படிலாம் இருக்காது நீ போய் பிரஷ் பண்ணிட்டு குளிச்சிட்டு வா, சீக்கிரமா ஸ்கூலுக்கு போகணும் என்று விரட்ட, "ஹரியோ,


ஆமா இப்போ இது ஒன்னு தான் குறைச்சல், போக்கா எனக்கு வர வர நம்ம வீடே பிடிக்கல, "எப்போப்பாரு சண்ட சண்ட, அதுவும் அப்பா குடிச்சிட்டு வந்து அசிங்க அசிங்கமா அம்மாவை திட்டி அடிக்கும் போது, கல்லை எடுத்து அவரோட மண்டையை பிளந்துடலாமானு தோணுதுக்கா என்ற நொடி ஆஆ ஆவென்ற அலறலுடன் சுருண்டு கீழே விழுந்தான் ஹரி.


ருத்ரமூர்த்தியாய் நின்று கொண்டிருந்த அப்பாவை பார்த்து வெடவெடத்துக் கொண்டு நின்றாள் ராகவி.


அப்பா வேணாம்பா தம்பியை அடிக்காதப்பா என்று பயத்தோடு கெஞ்சிக் கொண்டிருக்க, "அவனோ,


ஏண்டா எடுபட்ட நாயே, என் மண்டைய உடைப்பியா நீயி, உங்காத்தாக்காரி அடிச்சு கொலைப்பண்ண சொல்லி குடுத்துருக்காளா? என்றவாறே கீழே கிடப்பவனை காலால் எட்டி உதைக்க, அவனோ வலியை பொறுத்துக் கொள்ள முடியாமல் கதறினான்.


தம்பியின் கதறலை தாங்க முடியாத ராகவி, வேகமாக வீட்டு தோட்டத்திற்கு சென்று அம்மாவிடம் விசயத்தை சொல்ல, "அவளோ,


அய்யோ கடவுளே, என நெஞ்சில் கையை வைத்தவர், ராகவி இந்தா பிடி என்று கயிறை கையில் திணித்துவிட்டு இந்த கன்னுக்குட்டியை போய் மரத்துல கட்டு என்றவர் வீட்டை நோக்கி ஓடினாள்.


"வீட்டிற்குள் நுழைந்த வாசவி, "தான் கண்ட காட்சியில், யோவ் விடுய்யா அவனை, மிதிச்சே கொன்னுடாத என்றவாறே குறுக்கே வந்த வாசவிக்கும் நான்கைந்து உதைகள் விழுந்தது.


"ஏண்டி நாயே, இவனை எனக்கு தான் பெத்தாயா? இல்லை, என்றவனின் வார்த்தை பாதியில் நின்றது.


வாசவியின் கண்களை பார்த்து, அதில் தெரிந்த உக்கிரத்தை கண்டு வாயை மூடிக் கொள்ள அவளோ வெகுண்டாள்.


ஏய் நீயெல்லாம் மனுசனா? ஏதோ குடிச்சிட்டு உளறுரன்னு நினைச்சா, அபாண்டமா பழியை சுமத்துறியா என்று கேட்டதுமே, அவனுடைய கோபம் அதிகரிக்க, என்னடி சத்தமா பேசினா இல்லன்னு ஆகிடுமா? என்று சேற்றை வாரி இறைத்தவன் ஒரு படி மேலே போய், வாசவியை தெரு மக்கள் அனைவரும் வேடிக்கை பார்க்க, அடித்து உதைத்துவிட்டு வயலுக்கு சென்றுவிட்டான்.


தெருவில் உள்ள பெண்களின் அறுவருப்பான பார்வையில் உடல் கூசிப்போன வாசவி… வீட்டிற்குள் சென்று முடங்கினாள்.


ம்மா அழாதம்மா என்று விசும்பியபடி தாயை தேற்றிக் கொண்டு நின்றாள் ராகவி.


ஆனால் வாசவியோ தன் ஆதங்கத்தை மகளிடம் கொட்ட ஆரம்பித்தார்.


என்னடி தப்பு பண்ணேன் உன் அப்பனை கட்டிக்கிட்டு இங்கே வந்தப்ப எனக்கு பதினெட்டு வயசு. கல்யாணம்னா என்ன? குடும்ப வாழ்க்கைன்னா என்னன்னு நான் தெரிஞ்சிக்கிறதுக்குள்ளேயே நீயும் உன் தம்பியும் பிறந்துட்டீங்க, சரி இதான் நமக்கு வாய்ச்சதுன்னு உங்களுக்காக தான் இத்தனை அடி உதையை பொறுத்துக்கிட்டு வாழ்ந்தேன். ஆனால் இப்போ என் நடத்தையையே சந்தேகப்படுறானே, என்று கதறிய தாயை கண்டு பிள்ளைகளும் அழுதது.


ஓரளவு விபரம் தெரிய வந்ததாலோ என்னவோ ராகவி, தன் அம்மாவுக்கு தாயாக இருந்து அவரை தாங்கினாள்.


நீ ஏன்மா அழுற, அவரு குடிச்சிட்டு கண்டபடி உளறுனா நீயும் அதை பெருசா எடுத்துக்காதே, இப்படியே ஒரு வாரம் செல்ல, வாசவிக்கு அனைத்து உண்மையும் தெரியவந்தது.


தன் மீது சேற்றை வாரி இறைத்தது யார்? என தெரிந்ததும் துடித்து போய்விட்டாள். ஆனால் அதோடு மட்டும் நில்லாமல் அந்த தெருவில் இருந்த மக்களே வாசவியை ஒதுக்க ஆரம்பித்தனர். முதலில் சாதாரணமாக இருந்தது. நாளடைவில் அது அதிகமானது. வாசவியின் முகத்துக்கு நேராகவே பேச ஆரம்பித்தனர். இதனால் உடலாலும் உள்ளத்தாலும் வேதனையை அனுபவித்தாள்.


அவர்களின் இந்த பேச்சால் தினம் தினம் சத்தியமூர்த்தி குடித்துவிட்டு வந்து அடித்து உதைப்பதும், கேவலமான வார்த்தைகளை கொண்டு திட்டுவதுமாக வாழ்க்கையே நரகமானது.


பிள்ளைகளால் எதுவுமே செய்ய முடியவில்லை. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையில் மாட்டிக் கொண்டு தவித்தனர்.


இவ்வாறாக சென்ற நிலையில் அந்த கோர சம்பவமும் நிகழ்ந்தது. இதற்கு மேலும் தன்னால் இந்த வலியை தாங்க முடியாது என நினைத்த வாசவி, பிள்ளைகள் இருவரையும் பள்ளிக்கு அனுப்பிவைத்துவிட்டு மதிய வேலையில் உடலெங்கும் மண்ணெண்ணெய்யை ஊற்றிக் கொண்டு தீயை வைத்துக் கொண்டாள்.


ஊரும் உறவும் வாசவியின் உடலை சுற்றி நின்றுக் கொண்டு கதற அரூபமாக நின்று கொண்டு அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த வாசவியின் அருகே வந்த காலன், அவளை பார்த்து சொன்னது இவ்வாறாக!


அடியே வாசவி தீயில் குளிக்க நீ சீதையாக இருந்தாலும்,

உனக்கு தாலி கட்டியவன் ராமன் இல்லையே,

பெற்ற பிள்ளைகளின் வாழ்க்கையை இன்று நிராதரவாக விட்டு அக்னியில் குளித்து உன்னை நிரூபிக்க நினைத்தாய்

ஆனால் இந்த பொல்லா உலகம் உன்னை மனபிறழ்ச்சியடைந்தவள் என்ற முத்திரையை குத்திவிட்டதே,

தன்னுயிரை மாய்த்துக் கொண்டு உன் புனிதத்தை மக்களுக்கு உணர்த்த முயன்றதுக்கு பதில்,

நீ உயிரோடு இருந்து உன் புனிதத்தை நிரூபித்து வாழ்ந்து காட்டியிருக்க வேண்டுமடி வாசவி, ஏனென்றால் உனக்கு தாலி கட்டியவன் இராமன் இல்லையே!

যেই গল্পগুলো আপনার ভালো লাগবে

X
Please Wait ...