JUNE 10th - JULY 10th
1990களில் பம்மல் சற்று ஆரவாரம் குறைந்த நகர்ப்புறம். அந்நாட்களில் ஒரு சிலருக்கே தெரிந்த ஊர் இந்த பம்மல். நடுத்தர மற்றும் உயர் நடுத்தர மக்களின் சொர்கம். இங்கிருந்து பலர் சென்னையின் பல பாகங்களில் வேலைக்கு சென்று வந்தனர். எப்பொழுதாவது வரும் பேருந்து என்பதால் அதில் எப்பொழுதும் கூட்டம் இருக்கும். வசதி படைத்தவர்கள் பேருந்தை தவிர்த்து தங்கள் இரு சக்கர வாகனத்தில், பல்லாவரம் சென்று மின்சார ரயிலை பயன்படுத்தி வந்தனர். காலை மற்றும் மாலை வேளைகளில், பல நூறு மிதிஉந்து (சைக்கிள்) மற்றும் இருசக்கர வாகனங்களை பம்மல் மெயின் ரோட்டில் பார்க்கலாம். ஆட்டோக்களும் ஏராளம். அன்றைய கால கட்டத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தின் கனவு வீட்டை பற்றியே இந்த சிறு கதை.
C.K என்னும் சி.கார்த்திக் என்னுடைய பள்ளி காலங்களின் விளையாட்டு நண்பன். வயதில் மூன்று வருடம் சிறியவன். பல்வேறு தர மக்களின் வாழ்வாதாரமான பம்மலின் மத்தியில் முத்தமிழ் நகரில் இருந்தது கார்த்திக்கின் வீடு. அவனது குடும்பம் அன்றைய அளவான குடும்பம்.இவனது தந்தை விமானப்படையில் விருப்ப ஓய்வு (VRS) பெற்று குடும்பத்தை கவனித்து வந்தார். மிகவும் கண்டிப்பான மனிதர். தாயார் அருகில் உள்ள மகளிர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். கார்த்திக்கின் தம்பி இராமநாதன், செல்லப்பிள்ளை. அண்ணனுக்கும் தம்பிக்கும் ஆறு வருட இடைவெளி. தந்தை தினமும் பிள்ளைகளையும், மனைவியையும் தனது ஸ்கூட்டரில் பள்ளிக்கும், கல்லூரிக்கும் கொண்டு விடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். பெண்கள் குடும்பத்தை மட்டும் நிர்வகித்து வந்த அந்த நாட்களில், இந்த குடும்பம் முற்றிலும் வித்யாசமாக பலருக்கு தெரிந்தது. அந்த வீடு சுமார் ஒன்றரை கிரௌண்ட் நிலத்தில், சுற்றிலும் இடம் விட்டு, நடுவில் கட்டப்பட்டு இருந்தது.
வாருங்கள் அந்த வீட்டின் நினைவலைக்கு அழைத்து செல்கிறேன்.
அது புழுதி நிறைந்த சாலை. சிமெண்ட் ரோடு போடுவதாக சொல்லி கொண்டிருந்தார்கள். வீட்டை சாலையை விட மேடாகவே கட்டி இருந்தார்கள். வீட்டையும் சாலையையும் இணைக்க, ஸ்கூட்டரை இறக்க வசதியாக ஒரு சிமெண்ட் ஸ்லாப் பிரிட்ஜ் போட்டிருக்கும். மழைக்காலங்களில் அதன் அடியிலிருந்து தவளைகளின் சத்தம் காதை குடையும். அந்த சிமெண்ட் மேடையை ஏறி, சிறிய கிரில் கேட்டை கடந்தால் வலது புறத்தில் பாலாறு தண்ணி தொட்டி. அன்றைய சென்னை புறநகர் பகுதியில் வாழ்ந்து, வளர்ந்த மக்களுக்கு, இந்த தொட்டியின் தேவை நன்றாக தெரியும்.
கேட்-இல் இருந்து இருபதுஅடியை தாண்டினால் இரு தூண்களுக்கு இடையே அமைய பெற்ற போர்டிகோ. அங்கேயே எங்களின் கோடை மதிய விளையாட்டு மைதானம். வெயில் அதிகமா இருப்பதால் கார்த்திகை வெளியே அனுப்ப மாட்டார்கள். நாங்கள் அந்த போர்டிகோவிலேயே விளையாடுவோம். இரவு நேரங்களில், வண்டிகளை நிறுத்தும் இடம். அந்த நட்பு வட்டாரத்தில், இந்த இடத்தை பெரும்பாலும் என்னை தவிர, எவரும் தாண்டி உள்ளே செல்ல அனுமதியில்லை.
காம்பௌண்ட் கேட்டில் இருந்து வீட்டின் கதவு வரை சிமெண்ட்டால் ஆன பாதை. அதற்கு இருபுறங்களில் பூ செடிகளை நட்டு, அதனை கார்த்திக்கின் அப்பா கருத்தாக பராமரித்து வந்தார். இந்த செடிகளுக்கும், சுற்றுப்புற சுவருக்கும் இடையே நிழல் தரும் மரங்களும், வீட்டை சுற்றி தென்னை மரங்களும் நன்கு வளர்ந்து இருத்தன.
சுமார் 2400 சதுரஅடியில் கட்டப்பட்ட வீடு. வீட்டிற்கு பின்புறம் நிறைய காலி இடம் இருந்தது. வீட்டின் போர்டிகோவை தாண்டினால் ஒரு சிறிய அறை. பெரும்பாலும் அதில் ராமநாதனின் சைக்கிளும், எங்களின் விளையாட்டு சாமான்களுமே இருக்கும். அன்றைய காலகட்டத்தில் அனைத்து வகையான விளையாட்டு பொருட்களும், பல வகையான பந்துகளையும் வாங்கும் வசதி இந்த குடும்பத்தினிடமே இருந்தன.
கதவை தாண்டியவுடன் ஒரு அரண்மனைக்கு வந்த அனுபவம் எப்போதும் எனக்கு ஏற்படும். ஒரு பெரிய ஹால், அதில் ஒரு பெரிய டயனோரா டிவி, கூட வீசீஆர் (vcr).
நடுவில் கார்பெட் (carpet), அதை சுற்றி மரத்தால் ஆன சோபா செட், அதனிடையே டீ டேபிள். பல நாட்கள் அந்த டீ டேபிளை சுற்றியே செஸ் விளையாடிய ஞாபகம். நாங்கள் யாரும் சோபாவில் உட்கார அனுமதி இல்லை. நான் வளர்ந்து, நல்ல வேலைக்கு போன பிறகே அதில் உட்கார சொன்னார்கள்.
அந்த ஹாலின் முடிவில் பெரிய பெரிய அலமாரிகளில் புத்தகங்கள், மது பாட்டில்கள், கண் கவர் வண்ண பொம்மைகள் நிறைந்திருக்கும். அதை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பதில் கார்த்திக்கின் அப்பா மிக கவனமாக இருப்பார். ஹாலின் வலது புறத்தில், பெற்றோர்களின் படுக்கை அறை. டாய்லெட்டுடன் அமைந்த அறையாக இருப்பதாலும், அதில் A/C பொருத்தப்பட்டு இருப்பதாலும், அது எப்போதும் முடியே இருக்கும். பெரிய ஹாலாக இருப்பதால், அதனை சுற்றியே பெரும்பாலான அறைகள். அறை கதவுகளுக்கு முன்னர் இருந்த திரை சீலை, ஹாலின் அழகை மெருகூட்டியது. அடுத்த அறையும் படுக்கை அறையே. கார்த்திக்கும், ராமநாதனும் படிக்க, உறங்க, பிள்ளைகளின் அறை. ஒரு அறையில் குடும்பத்துடன் வாழ்ந்த, என் வீட்டில் இருந்து அந்த வீட்டை பார்த்தால், அது அரண்மனை தானே!!
பிள்ளைகளின் படுக்கை அறையை தொடர்ந்து உள்ள திரை சீலையை தாண்டினால் உணவு அறை. அதன் வலது புறத்தில் சமையல் அறை. உணவு அறையில் உள்ள டேபிளை சுற்றி எட்டு நாற்காலிகள். நடுவில் அழகாக அலங்கரிக்க பட்ட பழக்கூடை. நான் அந்நாட்களில் ஆப்பிளை பார்த்தது அங்கே தான். அவர்கள் சாப்பிடும் நேரத்தில் வீட்டில் யாருக்கும் அனுமதி கிடையாது. கோடை காலத்தில் கார்த்திக்கின் அம்மாவிற்கும் விடுமுறை என்பதால், எங்களுக்கு சில்லென்று ரஸ்னா கிடைக்கும். சில தின்பண்டங்களும் தரப்படும். சமையல் அறையில் அந்த கால கட்டத்தில் உள்ள அனைத்து வசதிகளும் இருந்தன. சமையல் அறையில் ஒரு அலமாரியில் பூஜை மாடம். வெள்ளிக்கிழமைகளில் பூஜை நடக்கும். அன்று, வீட்டை சுற்றி சாம்பிராணி போடுவார்கள். டைனிங் ஹாலை தொடர்ந்து குளியல் மற்றும் கழிப்பறை. கிணற்றில் இருந்து தண்ணீர் இழுத்து குளிக்கும் எனக்கு, அங்கே மழை போல பெய்யும் ஷவரை பார்த்தால், அதில் குளிக்க துடிக்கும் மனசு. வாஷிங் மெஷினும் அங்கேயே இருக்கும். பெரும்பாலும் அதில் கார்த்திக்கின் அப்பாவே துணிகளை தோய்த்து, காய போடுவார். அதனை தாண்டினால் பின்புற கதவு மற்றும் கிணறு. கிணற்றை கம்பிகளால் ஆன மூடி போட்டு இருப்பார்கள்.
வீட்டின் பின்புறம் முருங்கை, கொய்யா, மாதுளை, தென்னை, மாமரம் மற்றும் பல பழ செடிகள். அடர்த்தியாக செடிகள் இருப்பதால், இங்கே பாம்புகள் சுற்றி திரியும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை பெரியவர் ஒருவரை கொண்டு அந்த வீட்டின் சுற்றுப்புறத்தை சுத்தம் செய்வார்கள்; அவருக்கு ஒரு முழுநாள் வேலை என்றால் அந்த வீட்டின் சுற்றுப்புறத்தின் அளவை கற்பனை செய்து கொள்ளுங்கள். பாம்பை கண்டால், அதை சொல்ல இராமநாதன் என் வீட்டிற்கு ஓடி வருவான். பல பாம்புகளுக்கு, சொர்க்கத்திற்கும்/நரகத்திற்கும் வழி அமைத்து கொடுத்த பெருமை எனக்கு. இன்று உணவியல் சக்கரத்தில் பாம்பின் உரிமையையும், முக்கியத்தையும் நினைக்கும் போது கண்கள் கலங்கவே செய்கிறது. அன்றைய கால கட்டத்தில், அனைத்து வசதிகள் கொண்ட வீடாக மட்டும் இல்லாமல், நடுத்தர மக்களின் கனவு இல்லமாக, எனக்கு அரண்மனையாக தோன்றிய அழகிய குடும்பத்தின் கூடு அது.
இன்று, பம்மல் பெரும்பாலும் மாறிவிட்டது. நானும் வேலை நிமித்தமாக பல ஊர்களை பார்த்தாயிற்று, இருந்தும் மனதில் பசுமையாக அந்த வீட்டின் நினைவலைகள். அந்த வீடு முற்றிலும் இடிக்கப்பட்டு, பல அடுக்கு கொண்ட அபார்ட்மெண்டாக கட்டபட்டு கொண்டிருக்கிறது. அந்த வீட்டை கடந்து போகும் போது, அந்த ஒரு நிமிட வலி.. பின்பு மௌனம்... அதுவே அந்த வீட்டின் மேல் உள்ள என் காதலின் நிலை!
யார் சொன்னது முதல் காதல் இரு பாலுக்கும் என்று? தேவையின் அடிப்படையில் அமையும் ஆசை கனவே முதல் காதல் !!!
முதல் காதலை, இழந்த சோகத்தில் ... நான் !!!
#378
30,820
820
: 30,000
17
4.8 (17 )
mahalakshmivr92
swatambu1997
sridhar.pvm
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50