JUNE 10th - JULY 10th
அன்று ஏனோ ஒரே சோம்பலாய் இருந்தது. எழுந்த போது இன்னும் சற்று நேரம் உறங்கினால் நன்றாய் இருக்குமே என்று நினைத்தான் அனந்தன். ஆனால் அன்று பெண் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேறு வழியின்றி எழுந்து குளித்து கிளம்பினான்.படத்தில் வருவதை போன்று பெண் பார்க்க ஊரே கிளம்பி, பல கூடைகளில் பழங்கள், பூ எல்லாம் எடுத்து வைத்து, பின்னணியில் ரஹ்மான் இசையோடு, செல்வதை போலான காட்சி அல்ல. இரு வீட்டாரும் பேசி முதலில் பார்த்து விட்டு, பிறகு எல்லாம் சரியாய் வந்தால், பெரிதாய் சொந்தங்களை அழைத்து முடிவு செய்து கொள்வோம் என்பதை போன்ற ஏற்பாடு. இதுவே மிகவும் நாகரிகம் என்று படுகிறது. இல்லாவிடில், ஊரில் ஓரமாய் உறங்கி கொண்டிருக்கும் பெரியவரெல்லாம், இனிப்பு, காரத்திற்காக வந்து, பெண்ணை கேள்வி கேட்பதும், கேலி செய்வதும் பாரம்பரியமாய் தெரியவில்லை. வெறும் பகட்டாக தான் தெரிகிறது.
முந்தைய நாளின் நினைவுகள் எல்லாம் அனந்தனுக்கு மனதில் விரிந்தன. இந்த பெண்ணிடம் பேசி பார்க்க அனுமதி பெற்று, ஒரு வாரமாய் இருவரும் தொலைபேசி யில் பேசி வந்தனர். அனந்தன் தன்னை பற்றிய அத்தனை நெகடிவ் விஷயங்களையும் மிகவும் சிரத்துடன் சொல்லி இருந்தான். தன்னை பற்றிய நல்ல விஷயங்களை நாமே ஏன் சொல்ல வேண்டும், அவர்களாய் தெரிந்து கொள்ளட்டுமே என்ற நல்லெண்ணம். சிரிக்க கூடியது தான். இது என்ன காதல் திருமணமா அவர்களாய் தெரிந்து கொள்ள. சொன்ன விஷயங்களெல்லாம், நான் ஒரு சோம்பேறி, நான் வீட்டு வேலைகள் எதுவும் செய்வதில்லை, எல்லா முடிவுகளையும் கடைசி நேரத்தில் தான் எடுப்பேன் என்பது போன்ற விஷயங்கள். இவ்வளவு கோமாளித்தனங்களையும் தாண்டி அந்த பெண் பிடித்திருக்கிறது என்று சொல்லி இருந்தாள்.அந்த பெண்ணை பற்றி சொல்ல வேண்டுமானால், அவள் ஒரு IT நிறுவனத்தில் பனி புரிந்து வந்தாள். தன்னம்பிக்கை அதிகம் உள்ள பெண். வாழ்க்கை மேல் ஒரு அலாதியான பாசமும் எதிர்பார்ப்பும் கொண்ட பெண். காலை எழுந்ததும் உடற் பயிற்சி, யோகா, பின் வேலை என்று ஒரு முறையாய் வாழ்வை நடத்தும் பெண். மிகுந்த பொறுமை சாலியும் கூட.
அனந்தன் அப்போது ஒரு அரசு வேலையில் இருந்து விலகி தனியார் வேலையில் சேர வேண்டிய தருணம். அதையும் சொல்லி தனியார் துறை தனக்கு புதிதென்றும், அதில் தனது எதிர்காலம் எப்படி வேண்டுமானாலும் அமையலாம் என்றும், தெரிவித்தான். மீண்டும் மீண்டும் அதையே சொல்லி கொண்டு இருந்ததால், இறுதியாக, அந்த பெண் ஒரே ஒரு முறை எல்லாம் நல்ல படியாக நடக்கும் அல்லவா, என்று ஒரு வார்த்தை ஆறுதலுக்காகவும், நம்பிக்கைக்காகவும் கேட்டாள். நாம் வேண்டுமானால் சில மாதங்கள் நேரம் எடுத்து கொள்ளலாம், நான் இந்த வேலையில் செட் ஆன பிறகு பேசிக் கொள்ளலாம் என்றும் கூறினான். அதையும் வேண்டாம் என்று சொல்லி அனந்தன் வாயிலிருந்து அந்த நம்பிக்கை வார்த்தை வர வேண்டும் என்பதற்காவே அதை கேட்டதாகவும், தனக்கு எந்த பயமும் இல்லை என்றும் தெரிவித்தாள். இப்படி பட்ட பெண்கள் இருக்க தான் செய்கிறார்கள்.
அதை எல்லாம் மனதில் விரித்து பார்த்த படியே கிளம்பிக் கொண்டிருந்தான். அப்போது தான், சட்டையை போட்ட போது அது சரியாக இல்லை என்று தெரிந்தது. அப்பாவும் அதையே சொன்னார். நன்றாக இல்லை என்று. சரி போகும் வழியில் ஒரு கடையில் வாங்கி செல்லலாம் என்று முடிவு எடுக்கப் பட்டது. திருச்சி சென்னை சாலை யில் பயணம் தொடங்கியது.
அப்படி சட்டையில் என்ன தான் இருக்கிறது. ஏதோ ஒரு சட்டையை எடுத்து போட்டுக் கொண்டு செல்ல வேண்டியது தானே என்று தோணலாம். ஆனால், ஆடை என்பது நமக்கு, ஒரு புத்துணர்ச்சியையும், நம்பிக்கையும் கொடுக்க வல்லது என்பதை மறுப்பதற்கில்லை. ஒரு நல்ல பொருத்தமான ஆடை அணிந்தால், வரும் நம்பிக்கை நம் செயலிலும் பிரதி பலிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது தான் அன்று அவனுக்கு தோன்றியது.மேலும் அவனுக்கு, நம்பிக்கை சற்று குறைவாய் இருந்ததும் உண்மை தான். அது தான் அவன் முதலில் பார்க்க செல்லும் பெண். தன்னை பற்றி எப்போதும் சற்று குறைத்து இடை போடுவதும் அவன் பழக்கம் தான். அதனால் கூட, ஓரளவு நல்ல சட்டையாக இருந்தாலும் அது சரி இல்லை என்று தானே முடிவு செய்து கொண்டான்.
பல குழப்பங்கள் மனதில், எல்லாம் சரியாய் வருமா, புது வேலையில் ஜொலித்து விடுவோமா, அந்த பெண் வேறு ஒரு வார்த்தை கேட்டிருக்கிறாரே. போகும் வழியில், சட்டை நல்ல படியாய் அமைந்திடுமா, அவர்கள் பெற்றோர்களுடன் என்ன பேசுவது, என்று பல சிந்தனைகள். இதற்கு நடுவில், காலை உணவை எங்கே உண்ணலாம், பாஸ்டாக் அக்கௌன்ட் ல் பணம் பாக்கி இருக்கிறதா என்றும் கூட. சிந்தனைகளின் சிறு தொகுப்பு இவை. பிறகு, நடந்தது தான் ஆச்சர்யம், செல்லும் வழியில் பல கடைகளில் ஏறி இறங்கியும், மனதுக்கு பிடித்தமான சட்டை கிடைக்கவில்லை, பிறகு விழுப்புரத்தில் ஒரு மால் இல் சென்று ஒரு டீ ஷர்ட் எடுத்து அணிந்து கொண்டு சென்றான். வருவதாய் சொல்லி இருந்த நேரத்தில் இருந்து 1 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமானது. அங்கு அரக்க பறக்க சென்ற போது, பெண்ணும் பெண் வீட்டாரும் முந்தைய நாளே 3 மணி நேரம் பயணப்பட்டு, அந்த இடத்தை பார்க்கலாம், எவ்வளவு நேரம் ஆகும் என்றெல்லாம் தெரிந்து கொண்டு, அன்று காலை மீண்டும் சீக்கிரமாக கிளம்பி வந்து ஏற்பாடுகள் செய்து காத்திருந்தது தெரிய வந்தது.
அனந்தனுக்கு அது மிகவும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது. தான் ஒரு சட்டை யை கூட தெரிவு செய்து வைக்கவில்லை என்பதும், அந்த பெண்ணும் பெண் வீட்டாரும் இவ்வளவு சிரத்தை எடுத்து அனைத்தையும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்றும் யோசித்தான். அதுவே அவனை சரியாக பேச விடாமல் செய்தது. கடைசியில், தான் அந்த பெண்ணிற்கு சரியானவனாக இல்லை என்று முடிவு செய்து, வேண்டாம் என்றும் சொன்னான். அது குற்ற உணர்ச்சியா, அந்த பெண் மேல் வைத்திருந்த மரியாதையா, இல்லை தன்னுடைய இயலாமையா என்று தெரியாமல் திரும்பினான். அப்போதும் அந்த பெண் பரவாயில்லை என்று சொன்ன பக்குவம் கூட அவனுடைய குற்ற உணர்ச்சியை அதிகம் செய்திருக்கலாம்.ஆனால் அன்று வேண்டாம் என்று முடிவு எடுத்த போது அவனுக்கு தெரிந்திருந்தது அது நழுவ விட்ட வாய்ப்பென்றும், அந்த வாய்ப்பு மறுபடியும் கிடைக்க வாய்ப்பில்லை என்றும்.
இந்த சட்டை முடிவு சிரிப்பை வரவழைக்கலாம். ஆனால் மனிதர்கள் வேடிக்கையானவர்கள் தான். அவர்கள் காரணத்தோடு அனைத்தையும் செய்வதில்லை. உள்ளத்து உணர்வில் பல விஷயங்கள் செய்வது தான் உண்மை.இந்த சட்டை முடிவிலாவது ஒரு காரணம் இருந்தது. "குற்ற உணர்ச்சி". ஆனால், சமூகத்தில் பல நேரம், கட்டங்கள்(ஜோதிடம்) முடிவெடுக்கின்றன என்பதை கண்டு நாம் சிரிப்பதில்லை என்பது தான் சிந்திக்க வேண்டிய ஒரு விஷயமாக எனக்கு படுகிறது!!!
அனந்தனை பொறுத்தவரை, எது எல்லாம் அந்த பெண்ணுக்கு அவன் நிகர் இல்லை என்று முடிவு எடுக்க வைத்ததோ, அதை எல்லாம் சரி செய்திருந்தான், அந்த பெண்ணுக்கு அன்று அவன் நிகரில்லை என்று அந்த பெண்ணை இழந்திருந்தாலும், அந்த பெண் அவனுக்கு பல விஷயங்களில் ஒரு பாடமாக அமைந்தாள். நம்பிக்கை அதிகரித்தது. பொறுமை கை கூடியது. பொறுப்பாய் வேலையில் செயல்பட்டான். சேர்ந்த சில மாதங்களிலேயே நல்ல பாராட்டுக்களை பெற்றான். அதன் பிறகு எங்கு சென்றாலும் முன் கூட்டியே அனைத்தையும் தயார் செய்ய பழகி இருந்தான்.
பின்னர் பார்த்த பெண்களில் அந்த பெண்ணின் சாயலை தேடினான். ஆனால் சாயல்களெல்லாம் இங்கே சாத்தியமா என்ன? தேடல் தொடர்ந்தது. சொர்க்கத்தில் நிச்சயிக்க படும் திருமணங்களெல்லாம் தர்க்கத்தில் நின்று போவது இயல்பாய் இருக்கலாம். ஆனால் சட்டையின் சேட்டையில் ஒரு திருமணம் நிற்கலாம் என்பது நமக்கு சிரிப்பையும் சிந்தனையையும் சேர்த்தே வரவழைக்கிறது. சட்டையை சட்டை செய்யாமல் இருக்கும் அனைவரும் சற்று கவனம்.. !!!
#760
30,100
100
: 30,000
2
5 (2 )
N.A. Srinivasan (NAS)
இந்த சட்டை முடிவிலாவது ஒரு காரணம் இருந்தது. "குற்ற உணர்ச்சி". ஆனால், சமூகத்தில் பல நேரம், கட்டங்கள்(ஜோதிடம்) முடிவெடுக்கின்றன என்பதை கண்டு நாம் சிரிப்பதில்லை என்பது தான் சிந்திக்க வேண்டிய ஒரு விஷயமாக எனக்கு படுகிறது!!! நல்ல கருத்து. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50