JUNE 10th - JULY 10th
10-07-2022
சிறுகதைப் போட்டி
"வா... பெண்ணே!"
**********************
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத மன்னன் விக்ரமனைப் போல் அந்தச் சிறு பெண் மணல் வீடு கட்டும் முயற்சியை இன்னும் கைவிடவில்லை. கைகளால் மணலை இன்னும் கொஞ்சம் ஆழத்தில் இருந்து வெளியே எடுத்தாள். சமாதானம் அடையாமல் இந்த முறை இன்னும் ஆழமாக... இன்னும்... இன்னும்...
சட்டென்று யாரோ மணலுக்கு அடியில் இருந்து தன் கையை பிடித்து இழுத்தாற் போல் உணர்ந்தாள். தன் கையை விடுவிக்கப் போனவள் 'தனக்கு என்ன நேர்கிறது' என்பதை உணர்வதற்குள் பலமாக உள்ளே இழுக்கப்பட்டாள். அவள் உட்கார்ந்திருந்த இடம் அப்படியே விலகி அவளை உள்வாங்கியது. தன்னை இரு கைகள் தாங்கிப் பிடிப்பதை உணர்ந்தாள். அதிர்ச்சியில் நினைவு தப்புவதற்கு முன் அவள் கேட்ட வார்த்தைகள்..... வாழ்க்கையில் அவள் கேட்ட கடைசி வார்த்தைகளும் கூட..
"வா... பெண்ணே!"
*****************
மாயன் தன் தாயிடம் ஆத்திரத்தோடு கத்திக் கொண்டிருந்தான்.
"இந்த உலகை ஆட்டிப் படைக்கும் சக்திகள் வேண்டி, உன்னை நம்பி உன் பேச்சைக் கேட்டு நான் கொடுத்த உயிர்ப் பலிகள் எனக்கு எந்தப் பலனும் இதுவரை தரவில்லை. எனக்கு உன் மந்திர சக்திகள் அனைத்தையும் சொல்லித் தரவும் இல்லை. என்னை முன்னுக்கு வரவிடாமல் தடுக்கிறாயோ? என்றும் சந்தேகப் படுகிறேன். என்னை நீ் நம்புவதும் இல்லை. இவ்வளவு காலம் உன்னுடன் இருந்து எனக்கு என்ன இலாபம்...?"
மாயன் சற்றே நிறுத்தினான். மாயம்மாவுக்கு கோபம் வந்தாலும் அடக்கிக் கொண்டாள். அவன் சொல்வது ஓரளவு உண்மை தான். 'ஆனால் இவனையும் வளர விடக் கூடாது. விட்டால் என்னையே ஆட்டிப் படைக்க ஆரம்பித்து விடுவான். மகனாக இருந்தாலும் என் கட்டுப்பாட்டில் தான் இவன் இருக்க வேண்டும்.. இப்போதைக்கு இவன் எண்ணத்தை கொஞ்சம் மாற்றலாம்...'
மாயம்மா முகத்தில் புன்னகை வரவழைத்துக் கொண்டு மகனின் நிலையை ஆதரவுடன் தடவிக் கொடுத்தாள்.
"இதோ பார் மாயா..! இதுவரை சிறுமிகளைப் பலி கொடுத்தது போதும். இந்த முறை நான் வேறு ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். இந்த திட்டம் தோற்றுப் போனால் இனிமேல் நான் உனக்கு கட்டுப்பட்டு நடப்பேன்..." என்றவள் மாயனின் காதோடு சொன்ன வார்த்தைகள் அவன் கோபத்தை முற்றிலுமாக அகற்றி குதூகலத்தில் வாய் விட்டே சொல்ல வைத்தது..
"ஆஹா..! இந்த முறை பலியாகப் போவது இருபத்தைந்து வயதுள்ள பெண்ணா..." அன்னையை அணைத்து அப்படியே தூக்கி ஒரு சுற்று சுற்றி கீழே விட்டான். "அந்தப் பெண் யாரம்மா..?" என்றான் ஆவலுடன்.
"முதலில் இன்று இரவு பனிரெண்டு மணி பூஜைக்கு ஏற்பாடுகள் செய்.." என்று கோபத்தோடு சொன்ன மாயம்மா அங்கிருந்து அகன்றாள்.
மாயன் உடனே செயலில் இறங்கினான. சதுர வடிவ அக்னிக் குண்டத்தின் நான்கு மூலைகளிலும் மண்டை ஓடுகளை வைத்து, அவைகளுக்கு இடையில் நீளவாக்கில் இரண்டிரண்டு் எலும்புகள் வைத்தான். எதிரே ஆளுயரத்தில், கண்களை அகல விரித்து நாக்கைத் தொங்கப் போட்ட படி ஜெகன்மாதாவின் சிலை...
அக்னிக் குண்டத்தின் உள்ளே சமித்துகள் ஒழுங்காக அடுக்கப்பட்டு.. மற்றவை அனைத்தும் தயாராக இருக்க...சற்று நேரத்தில் கையில் தண்டத்துடனும், கமண்டலத்துடனும் வந்த மாயம்மா தன் நெற்றியை குங்குமத்தால் மறைத்திருந்தாள். புருவங்களுக்குப் பட்டையாக வைக்கப்பட்டிருந்த மையை கண்களின் ஓரங்களுடன் இணைந்திருந்தாள். பெரிதாக வளர்ந்திருந்த காதின் துளைகளில் படமெடுத்த பாம்பு வடிவத்துடனான கனமான தண்டட்டி அவள் நடைக்குத் தக்கபடி ஆடியது.
மாயம்மா தான் கொண்டு வந்திருந்த கமண்டலத்தில் இருந்து நீரை அக்னிக் குண்டத்தில் வேகமாகத் தெளிக்க குப்பென்று நெருப்பு பற்றி எரிந்து உடனே அணைந்தது.
மாயன் அனைத்தையும் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருக்க மாயம்மா பூஜையை ஆரம்பித்தாள்.
"வந்தே ஜெகன்மாதரம்...!! வந்தே ஜெகன்மாதரம்..!!!
ஹே! ஜெகன்மாதா..! அகிலாண்டேஷ்வரி..!! லோகநாயகி..! எண்பத்து நான்கு நூறாயிரம் ஜனனமும் ஜனித்து பண்பட்டுப் போனேன். எண்பத்து நான்கு நூறாயிரம் ஜனனமும் ஜனித்து பண்பட்டுப் போனேன்.. எத்தேச காலமும் இறவாது இருக்கும் வரம் அருள்வாய். எத்தேச காலமும் இறவாதிருக்கும் வரம் அருள்வாய். உன் வரம் பெறவே உருவழிந்தேன்... உன் வரம் பெறவே உருவழிந்தேன். நான் கேட்கும் வரம் எனக்கருள்வாய்..! விஷ்வேஷ்வரி..! லோகேஷ்வரி...! வந்தே ஜெகன்மாதரம்...!!!
அடுத்த ஒரு மணி நேரம் அவள் கண்கள் மூடி இருக்க, வாய் மந்திரங்களை உச்சரித்தபடி இருந்தது. திடீரென்று உடம்பு வேகமாக அதிர்ந்தது. கண்களை அகலத் திறந்து அக்னிக் குண்டத்தையே வெறித்துப் பார்த்த அவள் பார்வை மாயனையே ஸ்தம்பிக்கச் செய்தது. மாயன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள் கண்கள் இரத்தச் சிவப்பாக மாறின. திடீரென்று அக்னிக் குண்டம் கொழுந்து விட்டு எரிந்ததைப் பார்த்து மாயன் அதிர்ந்தான்.
'அட..! கிழவி எனக்கு இதையெல்லாம் சொல்லித் தரவில்லையே.. இன்னும் என்னவெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாளோ...?' மாயன் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான்.
மாயம்மா கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்த அக்னிக் குண்டத்தின் உள்ளே கைகளை விட்டு சமித்துகளை அள்ளினாள். அடுத்து என்ன நடக்கிறதென்று மாயன் யோசிப்பதற்குள் அள்ளிய சமித்துகளை மாயன் மீது வீசி எறிந்தாள். உடல் தீப்பற்றி எரிய "ஜயோ.." என்று அலறினான் மாயன்.
"உன்னை நம்பி மோசம் போயிட்டேனே..! பாவி..! நம்பிக்கைத் துரோகி..!" என்று பெருங்குரலெடுத்து மாயன் கதறக் கதற... அந்தப் பிராந்தியமே அதிரும் வண்ணம் பயங்கரமாகச் சிரித்தாள் மாயம்மா.
******************
நந்தினிக்கு அந்த இடம் கொஞ்சமும் பிடிக்கவில்லை. சுற்றிலும், புதர் மண்டிக் கிடக்க, புற்கள், களைச் செடிகள், ஆங்காங்கே கற்குவியல்கள் என சகலமும் மண்டிக் கிடந்தன. ஜன நடமாட்டத்தைக் காணோம்.
"ஹேய்.. ! சூர்யா..! கல்யாணம் ஆன கையோடு கூட்டி வர உனக்கு வேற இடம் கிடைக்கவில்லையா..? என்ன மட்டமான ரசனை உனக்கு..? இதற்கு லீவே போடாமல் இருந்திருக்கலாம்" என்றாள் கோபத்துடன்.
சூர்யா சிரித்தான். "எப்பப் பார்த்தாலும் வேலை.. வேலை.. வேலை.. கடைசியா ஒரு அரை மணி் நேரம் நிம்மதியா எப்போ இருந்திருக்கோம்னு நினைச்சுப் பாரு...! லைஃப்ல ஏதாவது ஒரு சேஞ்ச் வேணாமா...?"
"சரி..! அதுக்காக இப்படியா..? இந்த இடத்துக்கா கூட்டிகிட்டு வருவே..?"
சூர்யா சட்டென்று அவள் கண்களைப் பொத்தினான். சற்று தூரம் அப்படியே அழைத்துச் சென்று ஒரு திருப்பத்தில் அவளை நிறுத்தி கைகளை விலக்கினான். கண்களைக் கசக்கி விட்டு சுற்றிலும் பார்த்த நந்தினி தன்னையறியாமல் கத்தினாள்.
"வாவ்..! இது எந்த இடம்..?" என்றாள் ஆர்வத்துடன். சுற்றிலும் கால் உயரத்துக்கு பச்சைப் பசேலென்று புற்கள்... காற்றில் சிலுசிலுவென்று ஆடுவதைப் பார்க்க ரம்மியமாக இருந்தது. சட்டென்று ஓடிப் போய் அதன் மீது விழுந்தாள். பின்னாலேயே ஓடி வந்து தன் மீது விழுந்தவனிடம் அகப்படாமல் உருண்டு விலகினாள். புல் மீது அவன் ஏமாற்றத்துடன் விழுந்ததைப் பார்த்து கை கொட்டிச் சிரித்தாள்...
*************
"மாயா..! இன்று நீ் பலியிடப் போகும் அந்தப் பெண்ணைப் பற்றிய விவரங்களை உனக்குக் காட்டுகிறேன்.. இப்படி உட்கார்" என்றாள் மாயம்மா.
ஏற்கெனவே கொழுந்து விட்டெரிந்துக் கொண்டிருந்த அக்னிக் குண்டத்துக்குத் தலை வணங்கி அதன் முன்னால் மண்டியிட்டு அமர்ந்தான் மாயன். மாயம்மா மந்திரங்களை உச்சரித்தபடி பக்கத்தில் இருந்த பெரிய இலையை எடுத்து கமண்டலத்தின் தண்ணீர் தெளித்து, நான்கு முனைகளிலும், சுண்ணாம்பும், கறுப்பு மையும் தடவி அக்னிக் குண்டத்தில் இட்டாள். அது தகதகவென்று மின்னியது. சற்று நேரத்தில் அதில் உருவம்... அல்ல... அல்ல...இரு உருவங்கள் தெரிந்தன. அதில் தெரிந்த அந்தப் பெண் கருநீல வண்ணத்தில் புடவையும், அதே வண்ணத்தில் ரவிக்கையும் அணிந்திருந்தாள். கூடவே ஆண் உருவமும் தெரிந்தது.
அவர்கள் இருவரும் புல் வெளியில் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருப்பதை இலையில் பார்த்தவாறு மாயன் கேட்டான்.
"அம்மா..! அந்தப் பெண்ணுடன் இருப்பவன் யார்...??"
மாயம்மாவும் அவர்களைக் கவனித்தாள். "அவன் யாராக இருந்தால் நமக்கென்ன..? உன் குறிக்கோள் அந்தப் பெண்... முதலில் அவளை பலியிட்ட பின் மற்றவர்களை கவனிக்கலாம். மாயா.. இப்போது உனக்கு இரண்டு வாய்ப்புகள். உன் விருந்தாளியை நீயே சென்று அழைத்து வரலாம்... அல்லது தானாகவே அவள் இங்கு வருவாள்.. அது வரை காத்திருக்கலாம்..."
மாயன் புன்னகைத்தான். "இவ்வளவு தூரம் வந்தவளை நம் வாசல் வரைக்கும் வரவழைக்க உங்கள் மந்திரச் சக்தியால் முடியுமா..?"
"ஓ..! என் மந்திரச் சக்தி மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா..?" மாயம்மாவும் புன்னகைத்தபடி கேட்டாள். "கவலைப்படாதே மாயா.. அவளே இங்கு வருவாள்.."
"வரட்டும் அம்மா... நான் காத்திருக்கிறேன்..." என்ற மாயன் மகிழ்ச்சியுடன் கூவினான்.
"வா... பெண்ணே!"
**************
"நந்தினி..!! இந்தக் கருநீல வண்ணப் புடவை உனக்கு எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா..!" என்றான் சூர்யா. அதுவரையில் புல்வெளியில் ஓடிப் பிடித்து விளையாடி இருவரும் களைத்திருந்தனர். அவள் நெற்றி வியர்வை கன்னத்தில் இறங்கி வழுக்கிக் கொண்டு ஓடுவதைப் பார்த்து ரசித்தான். அவன் கால்களின் மேல் நந்தினி படுத்துக் கொண்டு அவனையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். பின்னர் மெதுவான குரலில் சொல்ல ஆரம்பித்தாள்.
"எனக்கு வாழ்க்கையின் மேல் இப்போ தான் பிடிப்பு வந்திருக்கு சூர்யா.." என்று ஆழ்ந்த பெருமூச்சு விட்டாள் நந்தினி. அவள் தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தான் சூர்யா. நந்தினி பேச்சைத் தொடர்ந்தாள்.
"எனக்கு இப்பவே செத்துப் போகணும் போல இருக்குன்னு டயலாக் எல்லாம் அடிக்க மாட்டேன் சூர்யா. நான் வாழணும். இந்த வேலையை உதறித் தள்ளிட்டு.... வதவதன்னு பிள்ளை குட்டிகளைப் பெத்துப் போட்டு.... அதுங்க வளர்ச்சியை தள்ளி நின்னு கவனிச்சு... சிறந்த அம்மா, சிறந்த மனைவி, சிறந்த இல்லத்தரசின்னு எல்லோரும் சொல்ற மாதிரி நடந்துக்கணும்.." கண்கள் அவனை விட்டு விலகி இலக்கில்லாமல் வெறித்தன.
"அதற்கான ஏற்பாடுகளை இங்கேயே ஆரம்பிப்போமா..?" என்றான் சூர்யா கண் சிமிட்டியபடி. "இங்கே தான் யாரும் இல்லையே..?" அவன் கைகள் அவள் மீது படர்ந்து எல்லைகளை மீற ஆரம்பித்தன. அதை தடுக்காமல் எழுந்து நின்று ஒரு முறை சுற்றிலும் பார்த்தாள் நந்தினி.
"இல்லை சூர்யா..! யாரோ நம்மை கவனிக்கிறார்கள் போல இருக்கிறது. சற்று பொறு.." என்றவள் சட்டென அவனை விட்டு விலகினாள். அவன் இழுக்க, "ஆசைப் பருஷனே..! அவசரம் வேண்டாம்.." என்று சொல்லி அவன் சற்றும் எதிர்பாராத கண நேரத்தில் இதழோடு் இதழ் பதித்து அவனைக் கீழே தள்ளி விட்டு ஓடினாள். சற்று தூரம் ஓடியவள் நின்று திரும்பிப் பார்த்தாள். சூர்யாவைக் காணவில்லை.
திடீரென்று தடதடவென்று யாரோ ஓடும் சத்தம் கேட்க சுற்றிலும் பார்த்தாள். யாரும் தென்படவில்லை. "சூர்யா..! போதும் விளையாட்டு.. " என்றாள். பதில் இல்லை. வந்த வழியே திரும்ப நினைக்கும் போது தான் அந்த கரகரக் குரல் கேட்டது.
"வா.. பெண்ணே.."
அதைத் தொடர்ந்து 'வீல்..' என்று உச்சஸ்தாயியில் பெண்ணின் அலறலும் "அய்யோ.." எனும் ஆணின் கூக்குரலும் கேட்க, சூர்யாவைத் தேடிச் செல்வதா..? அல்லது குரல் வந்த திசையில் செல்வதா..? ' என்று யோசிப்பதற்குள் கால்கள் குரல் வந்த திசையை நோக்கி ஓடின. வலப்புற திருப்பத்தில் அந்தப் பாழடைந்த மண்டபத்தைப் பார்த்தாள்.. கூடவே ஒரு உருவமும் உள்ளே சென்று மறைய.. அனிச்சை செயலாக பாழடைந்த மண்டபத்தை நோக்கிச் சென்றாள்.
*************
தோளில் போட்டிருக்கும் துண்டைப் போல அந்தப் பெண்ணை தன் மீது போட்டுக் கொண்டு உள்ளே நுழைந்த மாயனை வெற்றிக் களிப்புடன் பார்த்தாள் மாயம்மா. கூடவே ஒரு வாலிபனின் கழுத்தைப் பின்புறமாக இறுக்கிப் பிடித்த படி அவனைத் தள்ளிக் கொண்டு வந்தான் மாயன்.
"அம்மா..! நீங்க தெய்வம்மா..! இப்படித் தான் நடக்கும்னு எல்லாத்தையும் எப்படி சரியாச் சொன்னீங்க..?" என்றான் குதூகலத்துடன்.
மாயம்மா சிரித்தாள். "அதிருக்கட்டும்..! இவன் கதையை முடித்து விடாமல்.. நல்ல வேளை.. இங்கே அழைத்து வந்தாய்..." என்றாள் மகிழ்ச்சியுடன்.."உன் குறிக்கோள் இந்தப் பெண்ணின் பலி தான்..! அதை விட்டு நீ விலகக் கூடாது.."
மாயன் கையில் சிறைப்பட்டிருந்தவன் நிற்கவும் தெம்பின்றி் வெளிறிய முகத்துடன், கணகளில் ஏராளமான பயத்துடன் இருந்தான். அவன் கழுத்திலிருந்து மாயன் தன் கையை எடுக்க, கத்தவும் திராணியின்றி கீழே விழுந்தான்.
"பாவம்..! இந்தப் பெண் அவனோட ஆசை மனைவி போல..! இவளுடன் கொஞ்சிக் கொண்டிருந்தான். இவளைப் பலி கொடுத்தால் அதைப் பார்த்து இவனே உயிரை விட்டு விடப் போகிறான். நான் இவன் கதையை முடிக்க அவசியமே இல்லை.." என்றான் மாயன்.
"இங்கே பாவ புண்ணியங்களுக்கு இடமில்லை மாயா.." என்றாள் மாயம்மா கடுமையாக. "உன் எண்ணம் நிறைவேற வேண்டும்.. அதில் நீ கவனம் செலுத்தினால் போதும்..."
மாயன் அந்தப் பெண்ணை நிதானமாகப் படுக்க வைத்து விட்டு நிமிர்ந்தவன் வாசலைப் பார்த்து அதிர்ந்தான். திரும்பி மாயம்மாவைப் பார்த்துக் கேட்டான். "இவள் யாரம்மா..? இவளைப் பற்றி நீங்கள் எதுவுமே சொல்லவில்லையே..?"
வாசலில் நின்ற நந்தினியும் உள்ளே பார்த்து அதிர்ந்தாள். 'இந்த வனாந்திரத்தில் யாரும் இல்லை என்று நினைத்தோம்.. இவர்கள் எல்லாம் யார்..? கீழே விழுந்திருந்தவனைப் பார்த்தாள். 'இவன் சூர்யா இல்லை...என்னைப் போலஙே கருநீலப் புடவை கட்டியிருக்கும் இந்தப் பெண் ஏன் மயங்கிக் கிடக்கிறாள்..?' பல கேள்விகள் நொடிப் பொழுதில் வந்தன. 'இங்கே ஒருவேளை சூர்யா இருப்பானோ..?' இன்னும் இரண்டடி வைத்து உள்ளே நுழைந்தாள். உள்ளே எரிந்துக் கொண்டிருந்த அக்னிக் குண்டத்து நெருப்பின் ஒளியில் மாயன் கண்களுக்கு ஒரு தேவதை போல் தெரிந்தாள்.
மாயன் இவ்வளவு அழகான பெண்ணை இதுவரை பார்த்ததில்லை. தாமரை முகத்தில் கூரிய கண்களும், சற்றே கூரான மெல்லிய மூக்கும், சுண்டி இழுக்கும் அதரங்களும், அங்க வளைவுகளும் அவன் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்த... அவை யாவும் மாயன் அதுவரை உணராதது.
"அவளை நான் பார்த்துக் கொள்கிறேன் மாயா.." மாயம்மாவின் குரல் பின்னால் இருந்து கட்டளை இட்டது. "மறந்து விடாதே..! நீ இந்தப் பெண்ணை பலி கொடுப்பதை நிறைவேற்று..."
மாயன் அலட்சியமாக, "அவள் எங்கும் ஓடி விட்மாட்டாள் அம்மா.. முதலில் இவள் எனக்கு வேண்டும்.." என்றான். தன்னை நேருக்கு நேராக பயமின்றிப் பார்க்கும் கண்களை இப்போது தான் பார்க்கிறான்.
"வேண்டாம் மாயா.! இன்று இந்தப் பெண்ணை பலி கொடுப்பதற்கு முன் வேறு பெண்ணை நீ் தொடக் கூடாது.." மாயம்மாவின் குரலில் இன்னும் கடுமை ஏறியது.
அதைக் கேட்கும் நிலையில் மாயன் இல்லை. இவ்வளவுக்கும் அவன் நிதானமாக நந்தினியை நெருங்கிக் கொண்டிருந்தான். நந்தினி அங்கிருந்து நகரவில்லை. 'இவள் இவ்வளவு தைரியசாலியா..?'
சட்டென இருவருக்கும் நடுவில் புகுந்த மாயம்மாவை வெறியுடன் பார்த்தான் மாயன். "அம்மா..! நீ குறுக்கே வராதே..! விலகு.." என்றான் ஆத்திரத்துடன். மாயம்மா தன் இரு கைகளையும் விரித்துக் கொண்டு நிற்பதைப் பார்த்து அவன் ஆத்திரம் இன்னும் அதிகமானது. அவள் கால் கட்டை விரலை மிதித்துக் கொண்டு கையிலிருந்த தண்டத்தால் அவள் உச்சந்தலையில் ஒரே போடாகப் போட்டான். எங்கே, எப்படி அடித்தால் மாயம்மாவுக்கு மரணம் ஏற்படும் என்பதை மாயன் மட்டும் அறிவான். மாயம்மா சுருண்டு விழுந்தாள்.
"மன்னித்து விடுங்கள் அம்மா..! இங்கே பாவ புண்ணியங்களுக்கு இடமில்லை.." என்ற மாயன் மாயம்மாவைத் தாண்டிச் சென்று நந்தினியை நெருங்கினான். "வா... பெண்ணே..!"
நந்தினி சட்டென்று விலகி ஓடி அருகில் இருந்த முறத்தில் அக்னிக் குண்டத்தில் எரிந்துக் கொண்டிருந்த சமித்துகளை அள்ளி மாயன் மீது வீசி எறிந்தாள். மாயன் உடல் தீப்பற்றி எரிய அவன் பயங்கரமாக அலறினான். மாயா அவனைப் பார்த்துக் கொண்டே கமண்டலத்தில் இருந்த தண்ணீரை எடுத்து மயங்கிக் கிடந்த அந்தப் பெண் மீது தெளித்தாள். சட்டென மாயனின் அலறல் நின்றது. அவன் அந்தப் பகுதியே அதிரும் வண்ணம் பயங்கரமாகச் சிரித்தான். அக்னிக் குண்டத்துக்குள் தன் கைகளை செலுத்தி அங்கிருந்த சமித்துகளை எடுத்து தன் மீதே போட்டுக் கொண்டான். அவைகள் எரிந்து சில நொடிகளில் அடங்கின.
"என்னை இந்த நெருப்பு ஒன்றும் செய்யாது பெண்ணே..! என் தாய் எனக்களித்த மந்திர சக்தியின் விளைவு இது.. பார்த்தாயா?" மீண்டும் சிரித்தபடி நந்தனியை இரு கைகளாலும் தூக்கி வெறித்தனமாக அணைத்து அவளை முத்தமிட குனிந்தவன் "அய்யோ.." என்று அலறி தலையைப் பிடித்தபடி விலகினான். அங்கே கையில் இரும்புத் தடியுடன் சூர்யா...!!
"சூர்யா..! அவன் கால் கட்டை விரலை மிதி.. உச்சந்தலையில் அடி.." என்று நந்தினி கத்த, மாயன் தன் காலை மடித்துக் கொண்டு் சிரித்தான். "இன்னும் எத்தனை பேருடா இன்னைக்கு இங்க வந்திருக்கீங்க..?" என்றான். சூர்யா இரும்புத் தடியை மாயனின் விரித்த தொடைகளுக்கு இடையில் வேகமாக அடிக்க..மாயன் அதைப் பற்றிக் கவலைப்படாமல் ஆத்திரத்துடன் அக்னிக் குண்டத்துக்குள் இருந்து நெருப்பை அள்ளி சூர்யா மீது எரிந்தான். தீ உடனே அவனைப் பற்றி பரவ ஆரம்பித்தது. "செத்துப் போ..! அற்பப் பதரே..!" சூர்யா கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில் சட்டென்று உருண்டுச் சென்று மாயன் கால்களைப் பற்றி வேகமாக இழுக்க மாயனும் கீழே விழுந்தான். நந்தினி வேகமாக எழுந்தாள்.
**************
"வெல்டன் சூர்யா..! சூப்பர்ப் நந்தினி..! ட்ரெயினிங் சமயத்திலேயே இருவரும் வாங்கிய தங்கப் பதக்கங்களுக்கு இப்போது பெருமை சேர்த்திருக்கிறீர்கள்..." என்றார் போலீஸ் கமிஷனர். "உங்கள் இருவரின் சமயோசிதத்தால் டிபார்ட்மெண்ட்டுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்திருக்கீங்க... இப்பவே ப்ரெஸ் மீட்டுக்கு ஏற்பாடு பண்ணி உங்க சாதனைகளை உலகுக்கு..."
அவர் முடிப்பதற்கு முன்பே நந்தினி இடைமறித்தான்.
"மன்னிக்க வேண்டும் சார்..! இந்த சம்பவம் வெளி உலகுக்குத் தெரிஞ்சா மக்களின் மூட நம்பிக்கைகள் அதிகமாகி இவ்வளவு காலம் மாயன் யாருன்னே தெரியாத மக்கள் இனிமேல் மாயனை தெய்வமாகக் கும்பிட ஆரம்பிச்சிடுவாங்க.. இப்படி ஒருத்தன் இருந்தான் என்பதே யாருக்கும் தெரிய வேணாம்.." என்றாள் நந்தினி.
"ஆமாம் சார்..! அரசாங்கத்துகிட்ட சொல்லி இந்த மாதிரி பாழடைந்த மண்டபங்களை இடிச்சுத் தள்ளி விஞ்ஞான முறையில் விவசாயம் பக்கம் மக்களைத் திருப்பலாம். கிராமப்புற மக்களுக்கும் புரியும் வகையில் ராக்கெட் சயின்ஸை எளிமையாக்கலாம். விவசாயம், விஞ்ஞானம், தொழில் மூன்றும் உயர்ந்தால் நம் நாடு தன்னிறைவு நாடாகாதா..?" என்றான் சூர்யா.
"அதுவும் சரி தான்.." என்றார் கமிஷனர். "ஆனால் இப்படி மந்திரம், தந்திரம், மந்திரவாதிங்கன்னு இவையெல்லாம் இன்னும் இருக்கான்னு எனக்கு ஆச்சரியமாக இருக்கு..."
**************
"எனக்கும் ஆச்சரியமாகத் தான் இருக்கு.." என்றான் சூர்யா. "அந்த சமயத்துல மாயனை வீழ்த்த உனக்கு எப்படி அந்த ஐடியா தோணுச்சி.."
"கமண்டலத்தில் இருந்த தண்ணீரை அந்தப் பெண் மீது தெளிக்கலாம் என்று எடுத்த போது மாயன் கண்களில் பயத்தைப் பார்த்தேன். அதை கீழே வெச்சதும் அவன் நார்மலுக்கு வந்துட்டான். உன் மீது நெருப்பை அணைக்க உதவிய அதே மந்திரத் தண்ணீர் உன் பக்கத்தில் விழுந்த அவன் மீதும் பட்டது. அவன் நிஜமாகவே அலறினான். அவனுக்கு நெருப்பு நண்பன்.. தண்ணீர் பகை. மொத்த தண்ணீரையும் அவன் மீது கொட்டினேன். நெருப்பு அவனை ஒன்றும் செய்யவில்லை. தண்ணீர் அவனை அணைத்துக் கொண்டது..."
"இப்ப நான் உன்னை அணைக்கப் போறேன்..அங்கே விட்ட இடத்தில் இருந்து தொடருவோமா..?" என்றான் சூர்யா. நந்தினி் சிரித்தபடி சற்றே விலக சூர்யா அவள் கைப்பிடித்து இழுத்தான்....
"வா.... பெண்ணே!"
©©©©©©©©©©©©©©©
- கி இரகுநாதன்
#100
45,343
4,510
: 40,833
92
4.9 (92 )
kumar299123
Nice
vasankeerthi709
Nice
mmangorn872
Nice
Description in detail *
Thank you for taking the time to report this. Our team will review this and contact you if we need more information.
10
20
30
40
50